Home » ஆறுமுகம் முருகேசன் » –ஆறுமுகம் முருகேசன் ,ரோஷான் ஏ.ஜிப்ரி.கவிதைகள்

 

–ஆறுமுகம் முருகேசன் ,ரோஷான் ஏ.ஜிப்ரி.கவிதைகள்

 

 

ஒரு பெருங்கணம்
எடுத்துக்கொள் என நீட்டுகிறாய்
மௌனத்திலிருந்து விடுபட்ட
சிறு புன்னகையைரோஜாவின் முட்களிலிருந்து
ஒரு துளி இரத்தம் செய்து
பைத்தியக்காரப் புன்னகையாக்கினேன்
அப்புன்னகையைபழைய மௌனத்தின் குதிகாலிலிருந்து நடுங்கி
புதிய மௌனத்தின் குறுநெஞ்சின் மேல்
சாய்ந்து விழுகிறது
ஒரு பெருங்கணம்..!*** 

 

 

நிறம்
காமத்தைக் கொண்டாடப் பணிக்கிறாய்
எல்லாவுமாய்ச் சிந்திப் போகிறேன்
கண்ணாடிச் சில்லுகளில்
முகம் முகங்களாவதாய் வளர்கிறது
இரவு***
இருண்மையின் முதல் துளியிலிருந்து 
அதன் சமயம்
கூடு அடையும் பறவை
யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை
நீ தொடர்வதைத் தொடர்***

–ஆறுமுகம் முருகேசன்

 

———————————————————————————————————————————————————————

 

 

 

 



நீங்கள் நினைக்கலாம்

வெறும் ஈர்க்குகளும்,சுள்ளிகளும் என்று

ஆனால் பிரித்தெறிந்தது

ஒரு வாழ்க்கைக்கு போதுமான

ஒட்டுமொத்த என் உழைப்பு

உங்களுக்கு தெரிந்த வகையில்

குறுகிய வட்டத்திற்குள் வசித்தாலும்

எனது விருட்சம் மிக விசாலமானது

வேர்களும்,இலைகளும்,கிளைகளும்,

பூக்களும்,காய்களும்,கனிகளும்

பிரபஞ்ச ஜீவிதமும் ஆனதது

வானம் முழுக்க எனக்கு வசப்பட்ட

எனது சுதந்திரத்தை

அறிந்துணர கூட உங்களிடம்

அனுபவமோ,ஆளுமையோ இல்லை

அது எனக்கே உரித்தான இசம்

கனவுளை சிதைப்பதென்பது

உங்களுக்கு சாதாரணம்

எனக்கது சதா ரணம்

சுருக்கமாய் சொல்வதென்றால்

நீங்கள் சந்தர்ப்ப வாதிகள்

சந்தேக சாதிகள்

அடுத்தவரை அழவைத்தே பழகிய

பரம்பரையில் வழித்தோன்றல்களாகவே

இன்னமும் வாழ்கிறீர்கள்

தேன் கூடுகளை கலைப்பதில்

நீங்கள் எடுக்கும் கவனம்

அதன் ஆக்கத்திற்கான

சிரமத்தை  ஆராய ஒருபோதும்

சிரத்தை எடுத்ததில்லை

முரட்டு கோடாரிகள் கொண்டு

நீங்கள் வீழ்த்தியது

வெறும் மரமொ,கூடோ அல்ல…,

இசை கவிழ்ந்து நிழல் விரியும்

ஒரு தோப்பை

புள்ளினங்கள் இனம்பெருக்கும்

பெரும் வீட்டை

அவைகளின் வம்சத்தின் வரலாற்றை

காலத்தை திரும்பிப் பார்த்து

கை சேதங்களை கணக்கிடும்போது

நிராயுத பாணிகளாய் நிற்பீர்கள்

எதுவுமற்று எதிலியாய்

குற்றவாளி கூண்டில்!

அப்போது நான் அலகுகளால்

தயார் செய்து கொண்டிருப்பேன்

இன்னொரு கூட்டை வேறொரு கிளையில்.

௦௦௦௦௦௦

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment