Home » இதழ் 01 » தமிழகத்தில் ஓடாத ரத்த ஆற்றின் கதை!

 

தமிழகத்தில் ஓடாத ரத்த ஆற்றின் கதை!

 

-கண்ணன்

 ‘ஈழத் தமிழர்’ என் விழிப்புணர்வில் தடம் பதித்த காலம், இடம், சூழல் சார்ந்த நினைவுகளிலிருந்து என் உரையைத் துவங்கலாம் என்று நினைக்கிறேன். என் நினைவுகள் துல்லியமாக இல்லாமலிருக்கலாம். அவ்வாறு காலமுரண்கள் ஏதேனும் இவ்வுரையில் ஏற்பட்டால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சு.ரா.வின் படைப்புகளுடன் பரிச்சயம் கொண்டவர்களுக்கு அதில் அடிக்கடி அவரது அக்காவாக இடம்பெறும் ரமணி என்ற கதாபாத்திரம் நினைவிருக்கும். அவரது இயற்பெயர் மீனா. இன்றும் எங்கள் குடும்பத்திலும் ஊரிலும் மிகுந்த அன்போடும் மதிப்போடும் நினைவுகூரப்படும் என் அத்தை 1975இல் புற்றுநோயால் மரணமடைந்தார். இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகள் ஒரு யாழ்ப்பாணத் தமிழரைத் திருமணம் செய்ய விரும்பியபோதுதான் ‘யாழ்ப்பாணம்’, ‘இலங்கைத் தமிழர்’ போன்ற சொற்கள் எனக்குத் தெரியவந்தன. ஆண்டு 1977ஆக இருக்கலாம். அப்போது எனக்கு வயது 12. அக்காவின் திருமணத்தை ஏற்க அவரது தந்தையார் மறுத்துவிட்டார். யாழ்பாணக் குடும்பத்தினரும் முதலில் ஏற்கவில்லை. சென்னையில் அவரது திருமணம் திடீரென்று ஏற்பாடாகி ஒரு கோவிலில் நடக்கையில் சென்னையிலிருந்த அம்மா திருமணத்தில் கலந்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு என் சகோதரி யாழ்ப்பாணம் சென்றுவிட்டார். அவர்கள் சமாதானமடைந்த பிறகு கணவருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். உடன் அவரது மாமியாரும் சில உறவினர்களும் வந்து பல நாட்கள் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்கள். அப்போதுதான் நான் நினைவறிந்து ஈழத்தமிழர்களை முதல் முதலாகப் பார்க்கிறேன்.

அவர்கள் வருகையை எனக்கு ஏற்பட்ட முதல் பண்பாட்டு அதிர்ச்சி என்றுதான் வருணிக்க வேண்டும். ஒரு தமிழ் மூதாட்டி கௌண் அணிந்திருந்தது, உடன் வந்திருந்த சிறுவனை ‘நீங்கள்’, ‘வாங்கோ’ என்றெல்லாம் மரியாதையுடன் பேசியது எல்லாம் முதலில் திகைப்பை ஏற்படுத்தின. யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த சிறுவனுக்கோ இங்கே குழாயைத் திறந்தால் தண்ணீர் வரும் அதிசயத்திலிருந்து மீளவே முடியவில்லை. அவர்கள் கொண்டுவந்திருந்த நுகர்பொருட்கள் எல்லாம் எனக்குப் பெரிய அதிசயமாக இருந்தன. எல்லா வெளிநாட்டுப் பொருட்களும் நிரம்பக் கிடைக்கும் இலங்கை சொர்க்க பூமியாகவே தோன்றியது.

1982இல் இலங்கையிலிருந்து பத்மனாப ஐயர், யேசுராஜா, குலசிங்கம், புஷ்பராஜன் ஆகியோர் வந்து சில நாட்கள் எங்களுடன் தங்கியிருந்தனர். பின்னர் 1983இல் வ.ஐ.ச. ஜெயபாலன் தனது ஜப்பானியத் தோழி ஆரி மாச்சுமூட்டோவுடன் வந்து பல நாட்கள் தங்கியிருந்தார்.

இத்தகைய எழுத்தாளர்களின் வருகையோடு ஈழத் தமிழர் பிரச்சனை பற்றிய விவாதங்கள் வீட்டில் நடந்தன. 1983 கலவரம் ஒரு கொந்தளிப்பான நிலையைச் சூழலிலும் வீட்டிலும் ஏற்படுத்தியது. இதற்குக் குறுகிய காலத்திற்குப் பின்னர் இயக்கத்தோடு தொடர்புடைய ஒருவர் வீட்டில் பல நாட்கள் தங்கியிருந்து ரகசியத் தன்மையுடன் இயங்கிக்கொண்டிருந்தார். அவர் பெயர் இப்போது தெளிவாக நினைவில் இல்லை. ஆனால் ஈழ என்ற முன்னொட்டுடன் கூடிய பெயர் அது. மதுரையில் ஈழப் பிரச்சனை பற்றி நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் சு.ரா. பேசிவிட்டு வந்தார். சென்னையில் க்ரியா ராமகிருஷ்ணன் வீட்டில் நித்தியானந்தன், நிர்மலா ஆகியோரைச் சந்தித்துவிட்டு வந்து பல செய்திகளை அப்பா பகிர்ந்துகொண்டதும் நினைவுக்கு வருகிறது.

நான் கல்லூரியில் படிக்க பங்களூர் சென்றேன். இரண்டாம் ஆண்டு என் விடுதி அறையில் பிரபாகரனின் புகைப்படத்தை ஒட்டினேன். காந்தியைப் பழித்து, பகத்சிங்கை உயர்த்திப் பேசும் வன்முறையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட வடஇந்திய மாணவர் குழாமிடமிருந்து இந்தப் புகைப்படம் மரியாதையைப் பெற்றுத் தந்தது. புலிகளின் சாகசங்கள் அவர்கள் மீது கவனத்தையும் பாராட்டுணர்வையும் ஏற்படுத்தியிருந்தன.

இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் புலிகளுக்கு நெருக்கமாகச் செயல்பட்டு வந்த ஒரு இதழ் அலுவலகத்தில் சில மாதங்கள் கழித்தேன். இயக்கத்து இளைஞர்களை முதலில் இங்குதான் சந்தித்தேன். ஆண்டு 1986-87ஆக இருக்கலாம். இக்காலகட்டத்தில் புலிகளுக்கு மும்பை தமிழ் மாபியாத் தலைவர் வரதராஜ முதலியாருடன் உறவு ஏற்பட்டிருந்தது என நினைக்கிறேன். அவருடைய முயற்சியில் பால் தாக்கரேயின் ஆதரவுடன் மும்பையில் ஒரு மாபெரும் தமிழர் பேரணி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்தது. வரதராஜ முதலியார் சிவசேனை முன்னெடுத்த விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்தை அங்குள்ள தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பரப்பி அதன்வழி சிவசேனைக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஒரு சமாதான உறவை ஏற்படுத்தியிருந்தார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேயைப் புலிகள் சந்தித்து உதவி கோரியதாகவும் தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இவை எல்லாம் எனக்குக் கொஞ்சம் புதிராக இருந்தன. பின்னர் சென்னையில் இயக்கத்தவர்களைப் பார்த்தபோது எனக்குக் கூறப்பட்ட ஒரு விஷயம் அவர்களுடைய முஸ்லிம் எதிர் மனோபாவம். இது எனக்கு ஏமாற்றமளித்தது. இதற்கு அன்றும் இன்றும் கூறப்படும் காரணங்கள் எனக்குச் சமாதானம் அளிப்பதாக இல்லை. இஸ்லாமிய சமூகம் பற்றியோ வேறு சமூகங்கள் பற்றியோ, வானத்தின் மேலும் கீழுமிருக்கும் எந்தப் பொருள் பற்றியோ விமர்சனத்திற்கு அப்பாலான உறவை ஏற்படுத்திக்கொள்வது எனக்குச் சாத்தியமில்லை. இருப்பினும் இந்தியாவில் இந்து இஸ்லாமிய உறவு பற்றிய காந்தியின் கூற்று ஒரு முத்திரை வாக்கியமாக மனதில் பதிந்து கிடக்கிறது. “இந்து இஸ்லாமிய நல்லுறவு எனக்கு ஒரு நம்பிக்கை அல்ல, விசுவாசம்.” ‘Not a belief but a faith.’

இக்காலகட்டத்தில் நடைபெற்ற அநுராதபுரம் பஸ் நிலைய குண்டு வெடிப்பு எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அநுராதபுரத்திற்கு முன்னரும் போராளிகள் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டிருந்திருக்கலாம். ஆனால் அவை எனக்குத் தெரியவில்லை. பின்னர் ஒரு இலங்கை எழுத்தாளர் என்னிடம் பேசும்போது அநுராதபுரம் குண்டு வெடிப்பு தனக்கு முதலில் பேரதிர்ச்சியாக இருந்ததாகவும் பின்னர் அதன் சாதகமான பலன்களைக் கண்டதும் அதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டாதாகவும் கூறினார். எனது ஊர், எனது தெரு, என் வீடு, என் குடும்பம் அச்சுறுத்தலுக்கும் ஆபத்துக்கும் ஆளாகும்போது எத்தகைய மனமாற்றங்கள் ஏற்படும் என்பதை நான் இன்று அனுமானிக்க முடியாது. ஆனால் பிற மக்களை அறமின்றி அழித்துத்தான் நாம் உரிமைகளைப் பெற்று வாழ வேண்டுமா என்ற கேள்வி எனக்கு முக்கியமானது. தன் உயிரைக் கொடுத்து நாம் நம்பும் காரணங்களுக்காக போராடுபவர்களை நான் எப்போதும் மதிக்கிறேன். ஆனால் அதே நம்பிக்கையுடன் பிறர் உயிரையும் அவர்கள் பறிப்பதை ஏற்க முடிவதில்லை.

அறையில் ஒட்டியிருந்த பிரபாகரனின் புகைப்படம் காற்றில் பிய்ந்து தொங்கியபோது, அதை மீண்டும் எடுத்து நான் ஒட்டவில்லை. சகமாணவர்களுடன் அதற்கான காரணங்கள் எதையும் நான் பகிர்ந்துகொள்ளவில்லை.

பங்களூரில் நான் பயின்று வந்த கல்லூரியில் இந்தியாவெங்கும் இருந்து மாணவர்கள் படிப்பதற்காக வந்தனர். போபர்ஸ் ஊழல் வெடித்து ராஜீவ் காந்தியின் புகழ் வேகமாக அழிந்துகொண்டிருந்தது. இந்திய அமைதிப் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டதில் எனக்கு அன்றே  சிறிதும் உடன்பாடு இருக்கவில்லை. இதில் வியப்புக்குரிய விடயம் என்னுடன் பயின்ற பல வடஇந்திய மாணவர்களுக்குக்கூட இதில் உடன்பாடு இருக்கவில்லை. அபத்தமானதாகவும் ஆபத்தானதாகவும் எங்களுக்குப் புரிந்த இந்த நடவடிக்கைகளை இந்தியத் தலைவர்களுக்கு ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது இன்றும் வியப்பாகவே இருக்கிறது.

ஒரு நாள் விடுதியில் இலங்கையில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதாக செய்தி பரவியது. மெஸ்சிலிருந்த ஒரே தொலைக்காட்சியைக் காண விரைந்தேன். ஏற்கனவே சுமார் 500 மாணவர்கள் அதற்குள் கூடிவிட்டனர். சிங்கள ராணுவச் சிப்பாய் அவரை அடிக்கும் காட்சியைத் தூர்தர்ஷன் மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டியது. ராஜீவ் காந்தி ராணுவ மரியாதையை ஏற்று அணிவகுப்பைப் பார்வையிட்டு நடைபோடத் துவங்கியதும், வடஇந்திய மாணவர்கள் ‘மாரோ மாரோ’ (அடி, அடி) என்று கத்தினார்கள். அடித்ததும் ‘மார்தியா’ (அடித்துவிட்டான்) என்று உற்சாகித்தார்கள். காட்சிகள் மீண்டும் வர கோஷங்கள் மீண்டும் தொடர்ந்தன. இந்திய சமூகத்தின் அன்றைய பரவலான உணர்வுகளை பிரதிபலிப்பதாகவே இந்தச் சம்பவத்தைப் புரிந்துகொள்கிறேன். இலங்கையில் இந்திய ராணுவத்தினர் பெருமளவிற்குக் கொல்லப்பட்டது, இந்தியாவில் பெரிய அனுதாப எழுச்சி எதையும் ஏற்படுத்தவில்லை. கார்கிலுடன் ஒப்பிட்டால் இது தெளிவாக விளங்கும். அடுத்த தேர்தலில் ராஜீவும் காங்கிரசும் தோல்வி கண்டிருப்பார்கள் என்பது உறுதி. இந்தியாவின் அரசியல் எந்தத் திசையில் சென்றிருக்கும் என்பதை ஊகிப்பது கடினம். ஆனால் முதலில் இந்திரா காந்தியையும் பின்னர் ராஜீவ் காந்தியையும் கொலை செய்த பயங்கரவாத நடவடிக்கைகள்தான் காந்தி குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தைக் காலாகாலத்திற்கு உறுதிசெய்துள்ளன என்று கருதுவதில் பிழையில்லை.

பிரபாகரன் சென்னையில் இருந்த காலகட்டங்களில் சு.ராவுக்கு நெருக்கமான சில நண்பர்கள் பிரபாகரனுடன் சேர்ந்து இயங்கக்கூடியவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் போகுமிடத்தைச் சொல்லாமல் தன்னுடன் சு.ராவை அழைத்துச் சென்றார். போய்ச் சேர்ந்த பின்னர்தான் அது பிரபாகரனின் வசிப்பிடம் என்பது சு.ராவுக்குத் தெரியும். அவர் அழைத்துச் செல்லப்பட்ட காரணம் தமிழகத்தில் புலிகள் பண முதலீடு செய்வது தொடர்பானது. சு.ரா. உடனடியாக மறுத்துவிட்டார். பிரபாகரனைச் சந்திக்கவில்லை.

இந்த நண்பர்கள் நடத்திய ஒரு இதழுடனும் சு.ராவுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இந்த நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்தபோது இதழ் தொடர்பான பல கோப்புகளும் சி.பி.ஐ.யால் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் ஒன்று அவ்விதழுக்கு சு.ரா. எழுதிய கடிதங்கள் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது. காலச்சுவடில் வெளிவந்த ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’ என்ற கட்டுரையை மலையாளத்தில் வெளியிட்ட இதழைப் போலீசார் ரெய்டு செய்ததாகத் தகவல் வந்தது. இந்தப் பின்னணியில் சு.ரா. விசாரணைக்கு உள்ளாகலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்ற சிறு பதற்றம் வீட்டில் நிலவியது. ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. சமீபத்தில் அக்கடிதங்களின் நகல்கள் எனக்கு சு.ராவின் கோப்புகளிலிருந்து பார்க்கக் கிடைத்தன. அக்கடிதங்கள் அனைத்துமே ஒரு மாற்று இதழ் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்ற அவர் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதாகவே இருந்தன. விசாரணை நடத்தப்படாமைக்கு இக்கடிதங்களே காரணி என்று நினைக்கிறேன்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றம், கிழக்கில் நடைபெற்ற முஸ்லிம்கள் படுகொலைகளை நான் சமகாலத்தில் அறிந்திருக்கவில்லை. ஆனால் அப்போது இந்திய சமூகத்திலும் ஊடகங்களிலும் நிலவிய புலி ஆதரவு நிலைபாடு காரணமாக இவை பதிவு பெறவே இல்லையோ என்றே எண்ணுகிறேன். ஏனெனில் எல்லா காலகட்டங்களிலும் ஊடகங்களை ஓரளவு உன்னிப்பாகவே கவனித்து வந்திருக்கிறேன்.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உமா வரதராஜன் நாகர்கோவில் வந்து சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்தார். அப்போது நான் கல்லூரி முடித்துவிட்டு வந்து வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். நானும் வரதனும் மட்டுமே வீட்டில் இருந்தோம். அப்பாவும் அம்மாவும் தங்கையும் பல நாட்கள் வெளியூரில் தங்கியிருக்க நேர்ந்திருந்தது. இரவு நான் வீடு திரும்பியதும் நீண்டநேரம் வரதனுடன் பேசுவதுண்டு. செய்திகளில் படிக்க முடியாத விஷயங்களை அவ்வுரையாடல்கள் வழி அறிந்துகொண்டேன். காலச்சுவடை நான் மீண்டும் துவங்குவதற்கு முந்தைய காலகட்டம் இது. முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு மற்றும் வன்முறைகளை இவ்வுரையாடல்கள் வழி அறிந்துகொண்டேன். யாழ்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றம் அப்போது நடந்திருக்கவில்லை. இடையில் சென்னை சென்று திரும்பிய வரதன் ஒரு சுவாரசியமான சம்பவத்தைக் கூறினார். சென்னையில் அவர் சந்தித்த பல எழுத்தாளர்கள் பற்றிப் பேசுகையில் மு. மேத்தாவைச் சந்தித்ததைக் கூறினார். அப்போது குமுதத்தில் வி.ஐ.பி.கள் ஒவ்வொரு இதழை எடிட் செய்யும் வரிசை நடந்துகொண்டிருந்தது. வரதனிடம் மு. மேத்தா தான் எடிட் செய்த குமுதம் இதழின் முன் அட்டையில் பிரபாகரன் அல்லது எல்.டி.டி. போராளிகளின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோரியதாகவும் அவர்கள் மறுத்துவிட்டதால் அதற்குப் பதிலாக அசல் புலியின் புகைப்படத்தை வெளியிட்டு ஈழத் தமிழர்கள் பற்றிய தன் அக்கறையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் பெருமையுடன் கூறினாராம். கிழக்கில் முஸ்லிம்கள் மீதான புலிகளின் வன்முறை பற்றி அவரிடம் விளக்கியபோது அவர் முகம் மாறியதாக வரதன் குறிப்பிட்டார். இச்சம்பவங்கள் தமிழகத்தில் எல்லோர் கவனத்திற்கும் வரவில்லை என்பதற்கு இது இன்னுமொரு சான்று.

புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நகரங்களில் 1993இல் சு.ரா. சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பற்பல சிற்றிதழ்களைச் சேகரித்து வந்தார். இவை அனைத்தையும் பெரும் ஆர்வத்தோடு படித்தேன். லண்டனிலிருந்து வெளிவந்த ஒரு மார்க்சிய சிற்றிதழில் – உயிர்ப்பு என்று நினைக்கிறேன் – வெளிவந்த நீண்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தபோதுதான் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றம், கிழக்கில் நடைபெற்ற வன்முறையின் தீவிரம் ஆகியன ஆழமாக என் மனதில் பதிந்தன. மேற்படி கட்டுரைகள் புலிகள் இயக்கத்துடன எனக்கு எஞ்சியிருந்த மானசீக உறவை ஆழமாகப் பாதித்தன.

நான் புலிகளின்மீது நம்பிக்கை இழந்தாலும் அன்று முதல் இன்றுவரை புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை ஒருபோதும் மேற்கொண்டதில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்துகள் தமிழ்த் தேசியப் பார்வை காலச்சுவடில் பதிவாவதற்கு ஒருபோதும் தடையாக இருந்ததும் இல்லை.

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக காலச்சுவடு ஆரம்பத்திலிருந்தே சில விஷயங்களில் தெளிவாக இருந்துவந்திருக்கிறது:

1. தமிழகத்தின் மோஸ்தர் போக்குகள் எங்களைப் பெருமளவுக்குப் பாதித்ததில்லை. இருப்பினும் இப்போக்குகளை உதாசீனம் செய்யாமல் இவற்றுக்கு அப்பாற்பட்ட பார்வைகளுக்கு இடமளிப்பது, உருவாக்கப்பட்டிருக்கும் தெளிவான முரண்பாடுகளைப் பிரச்சனைப்படுத்துவது, இனவாதத்தை மறுப்பது – இந்நடவடிக்கைகள் ஏற்படுத்தும் எதிர்வினைகளையும் பிரசுரித்து விவாதத்திற்கு உட்படுத்துவது.

2. தமிழகத் தமிழர்கள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியாது. அவர்களுக்கான முடிவுகளை நாங்கள் எடுக்க முடியாது. நாங்கள் ஆதரவாளர்களாக மட்டுமே செயல்பட முடியும்.

3.புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் காலச்சுவடு ஈடுபடுவதில்லை. அதேநேரம் இப்பிரச்சனை தொடர்பான பன்முகக் குரல்களுக்கு காலச்சுவடில் இடமளிப்பது.

4.இலங்கை அரசின் இனவாதத்தைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவது. இந்தியாவின் நிலைபாட்டையும் தமிழகத் தலைவர்களின் செயல்பாடுகளையும் விமர்சனப் பார்வைக்கு உள்ளாக்குவது.

5. இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் முஸ்லிம்கள் மலையகத் தமிழர்கள் ஆகியோரின் குரல்களுக்குக் காலச்சுவடில் தீவிரமான கவனம் அளிப்பது.

6. சிங்கள சமூகத்தில் இருந்து எழும் மனிதாபிமான குரல்களுக்கு இடம் அளிப்பது.

00000

இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசியல் சமூகப் போக்குகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

1983இல் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்ட எழுச்சியைப் போல நான் வேறொரு எழுச்சியைப் பார்த்ததில்லை. அன்று நடந்ததுபோல் தமிழகமெங்கும் யாருடைய வற்புறுத்தலும் இன்றி நடந்த முழுமையான பந்தையும் நான் பார்த்ததில்லை. அந்த உணர்ச்சிமயமான நிலை தமிழகத்தில் நடந்த சில இயக்கத்தவர்களின் அத்துமீறலான நடவடிக்கைகளால் சிதையத் துவங்கியது. ராஜீவ் காந்தி மற்றும் அவருடனிருந்த சுமார் 15 நபர்களின் படுகொலையுடன் முடிவுக்கு வருகிறது. இக்காலகட்டத்தில் ஈழத் தமிழர் ஆதரவு என்பது தமிழ்த் தேசியம் சார்ந்ததாக அல்ல, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆன்மாவின் குரலாக இருந்தது.

ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு வெகுஜனத் தளத்தில் சுமார் 10 ஆண்டுகள் இலங்கைப் போராட்டங்களில் தாக்கம் இல்லை. 1996இல் யாழ்ப்பாணத்தின் மீது ராணுவம் நடத்திய தாக்குதல், மக்கள் வெளியேற்றம் போன்ற பேரழிவுகள்கூட இங்கு ஊடகங்களில் கவனம் பெறவில்லை. காலச்சுவடில் இரண்டாம் சூரியக் கதிர் தாக்குதல் பற்றி ‘சூரியக் கதிரின் நிழலும் நிழலும்’ என்ற புலிகள் சார்புப் பார்வையிலிருந்து எழுதப்பட்ட ஓர் இளைஞருடைய நீண்ட கடிதத்தை வெளியிட்டோம். இந்நிலை கடந்த திமுக ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) முன்னெடுத்த போராட்டத்தாலும் முத்துக்குமாரின் தீக்குளிப்பாலும் ஓரளவுக்கு மாற்றம் கண்டது. போரும் அழிவும் தமிழக மக்களிடையே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தின. இருப்பினும் முந்தைய ஒன்றுபட்ட ஆதரவுநிலை இன்று இல்லை. இன்றைய ஆதரவிலும் நிலைப்பாடு சார்ந்து பல பிளவுகள் உள்ளன.

தமிழக அறிவுலகிலும் இப்பிரச்சனை ஏற்கனவே இருந்துவந்த நிலைபாடுகளையும் அணிகளையும் கலைத்துப்போட்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட முடிவு பலருக்கும் மனதில் இன்றும் ஆறாத காயமாகவே உள்ளது. பலரது சமூகப் பார்வையையே மாற்றி அமைத்திருக்கிறது.

ஆனால் பொதுவாக என் பார்வையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது தமிழகத்தில் அரசியலிலும் அறிவுலகிலும் அணுகப்படும் விதம் இலங்கைத் தமிழர்களின் நலன் மீதான அசலான அக்கறை என்ற தளத்திலிருந்து விலகி, தமது நலன்களுக்காக, தமது அரசியலுக்காக, தமது அடையாளத்திற்காக ஈழத்தமிழரின் துயரத்தைக் கையாளுதல், சுரண்டுதல் என்ற நிலைக்கு நகர்ந்துவிட்டது. அசலான ஆர்வத்துடன் இயங்குபவர்களின் நோக்கத்தைக் கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. அதே நேரம் சுரண்டல்போக்கே பெரும்பான்மைப் போக்காக இன்று உள்ளது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 2005இல் ரவிக்குமார் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தமிழகத்திலிருக்கும் இலங்கைத் தமிழர் முகாம்கள் பலவற்றை ஆய்வு செய்து காலச்சுவடில் அறிக்கை வெளியிட்டார். அதுவரை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அகதி முகாம்களில் இருக்கும் தமிழரின் நலனில் எந்த அரசியல் தலைவரும் அறிவுஜீவியும் போதிய கவனம் காட்டியதில்லை. இலங்கையில் தமிழர் இழிவுபடுத்தப்படும்போது அலறுபவர்கள் தமிழக மண்ணில் அவர்கள் இழிவுபடுத்தப்படும்போது ஏன் கரிசனம் கொள்வதில்லை? ஏனெனில் தமிழக அகதி முகாம்களில் ஈழத் தமிழரின் நிலையைப் பேசுவது இனவாத அரசியலுக்குப் பயன்படாது.

தமிழக மண்ணில் நின்று வீரச் சவடால் விடுபவர்கள், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுபவர்கள், சோனியா காந்தியை மிரட்டுபவர்கள், ராகுல் காந்தியும் சாக வேண்டுமா என்று கோஷம் எழுப்புபவர்கள் எவரேனும் தமது வீரப் பேச்சுகள் எத்தகைய எதிர்மறையான பாதிப்புகளை ஈழத்தில் ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு கணமேனும் சிந்தித்ததுண்டா? தமிழகத்திற்கு வரும் சிங்களவர்களைத் தாக்குபவர்கள் அத்தகைய செயல்கள் இலங்கைவாழ் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என ஒரு கணம் தயங்கியதுண்டா? தேசியத் தலைவரின் தலையிலிருக்கும் ஒரு மயிர் உதிர்ந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என வீரவசனம் பேசிய தலைவர்கள் பலர். முள்ளிவாய்க்காலில் உண்மையிலேயே ரத்த ஆறு ஓடியபோது இவர்கள் எவர் தலையிலிருந்தும் ஒரு மயிர்கூட உதிரவில்லை. அதைப்பற்றி எந்தக் குற்ற உணர்வும் மறுபரிசீலனையும் இன்றி இலங்கையில் அடுத்த ரத்த ஆறு ஓடும் காலத்தைக் கனவுகாணத் துவங்கியிருக்கிறார்கள்.

தமிழக ஊடகங்கள் பிரபாகரனின் புகைப்படத்தைத் தமது விற்பனைக்காகச் சுரண்டியதைப் போல ஒரு ஊடகச் சுரண்டல் அரிதாகவே நடந்திருக்கும். இலங்கைத் தமிழர்களின் அசலான அவல நிலையைச் சுட்டிக்காட்டுவதைவிட தமிழக வாசகருக்கு உவப்பான ஒரு வீர வரலாற்றை உருவாக்குவதிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்குவதிலும் அவை முனைப்பாக உள்ளன. இன்னும் சில ஊடகங்கள் புலி எதிர்ப்பு என்ற பெயரில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வருகின்றன.

தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியை, மைய அரசு எதிர்ப்பை, தனித் தமிழ்நாட்டை வேண்டுபவர்கள் தமது வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி அதற்காகப் போராடட்டும். ஈழப்போராட்டம்வழி தமிழகத்தில் proxy war நடத்தும்போது அதன் பயன்பாடுகள் தமிழகத் தலைவர்களுக்கும் பாதிப்புகள் ஈழத்தமிழருக்கும் ஏற்படுகின்றன. எந்த இழப்புகளையும் சந்திக்காமல் புரட்சிகர பிம்பத்தை ஏற்படுத்திக்கொள்ள சந்தர்ப்பவாதிகளுக்கு ஈழப்பிரச்சனை ஒரு கிடைப்பதற்கரிய வாய்ப்பாக இருக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக மேடையில் அனல் கக்குவோர்கள் பலர் நிரந்தரமாக தமது வாயை மூடிக்கொள்ள ஐ.பி.யிலிருந்தோ சி.ஐ.டி.யிலிருந்தோ இரண்டு போலீசார் வீடு தேடிச் சென்றால் போதுமானது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உயர்நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து, குடும்பத்தைச் சிறப்பாகப் பராமரித்து, பதவி உயர்வுகளைக் குறிவைத்துச் செயல்பட்டு, மாலை வீடு திரும்பியதும் எதிர்கொள்ளும் வெறுமையைப் போக்க முகநூலில் புரட்சிகர கீதம் பாடுவதைக் குறை சொல்ல எனக்கு எதுவுமில்லை. வாழ்வின் வெறுமைக்கு மாற்று சிலருக்கு வாசிப்பு, சிலருக்கு எழுத்து, சிலருக்கு இசை, சிலருக்குப் பக்தி, சிலருக்குப் புரட்சி. ஆனால் புலம்பெயர்ந்த சமூகத்தினர் இந்தத் தமிழகப் ‘புரட்சியாளர்கள்’ மீது கொண்டிருக்கும் தீராத மோகம் கவலையளிக்கிறது. தமக்கான விடிவுகாலம் தமிழகத்திலிருந்து உருப்பெற்றுவரும் என்ற ஈழத்தமிழர்களின் பரவலான நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையாகவே எனக்குத் தோன்றுகிறது.

இலங்கைத் தமிழர்களின் வருங்காலம் மேம்பட தமது பிரச்சனைக்கான பிரதிநிதிகள் தாம் மட்டுமே என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்திலிருப்பவர்களுக்குப் பிரதிநிதிகளாக மாறும் உரிமை மறுக்கப்பட வேண்டும். தமது வாழ்வு மேம்பெற இலங்கைத் தமிழர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாளர்களாக இருக்கும் உரிமை மட்டுமே தமிழக, மலேசிய, பிற தேசத் தமிழர்களுக்கு இருக்க முடியும்.

00000

கடந்த 2009 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு பேராசிரியர் மாணவர்களுடன் அத்தேர்தலில் மக்கள் முன்னிருக்கும் முக்கியமான பிரச்சனைகள் என்ன என்பதைப் பற்றி ஆய்வு செய்தார். முதல் மூன்று பிரச்சனைகளாக வெளிப்பட்டவை: ஒன்று, விலைவாசி. இரண்டாவது, ஊழல். மூன்றாவதாக ஈழத் தமிழர் பிரச்சனை. இருப்பினும் அத்தேர்தலில் இதன் அடிப்படையில் வாக்குகள் அமையவில்லை. ஏனெனில் அதற்குத் தெளிவான மாற்று சக்தியை மக்களால் இனங்காண முடியவில்லை.

இத்தனை ஆண்டுகள் இத்தனைத் தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்காகத் தமிழகத்தில் போராடியும் ஒரு மாற்றாக மக்களுக்கு ஏன் தென்படவில்லை என்ற கேள்வி முக்கியமானது. தமிழகச் சமூகத்தின் ஆழமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து சமூகச் செயல்பாடுகளின் வழி வேர் பரப்பி அதன் வலுவில் நின்றுதான் இலங்கைத் தமிழருக்காகக் குரலெழுப்பித் தமிழக மக்களின் ஆதரவைப் பெற முடியும். தமிழகத்திலும் மத்தியிலும் இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன? அவர்கள் தனி ஈழத்தை ஆதரிப்பதே முக்கியம் என்ற நிலைபாடு ஒருநாளும் எடுபடாது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகங்கள் எனப் பல ஜனநாயக நிறுவனங்களைச் சீரழித்தவர் இந்திரா காந்தி. 1975இல் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனநாயகத்தையே ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தவர். அவரை ஒரு புனிதச் சுடராக்கும் வரலாறு இன்று தமிழ்த் தேசியவாதிகளால் உருவாக்கப்படுகிறது. 1980களில் ஈழப் போராளிக் குழுக்களுக்கு அவர் ஆதரவு அளித்தமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். தமிழர் மீதான அவரது அக்கறை ஒரு காரணி என்று எடுத்துரைப்பது விவேகமானதா? இந்திய மற்றும் தமிழக மக்களின் வாழ்வில் அவர் ஏற்படுத்திய பல தீய பாதிப்புகளை மறைத்து, அவரது அன்றைய அரசியல் காய் நகர்த்தல்களில் ஈழத் தமிழர்களும் சிப்பாய்களாக இருந்ததை நினைத்து நினைத்து இன்றும் புல்லரித்துக்கொண்டிருப்பது விடுதலைக்கான பாதையை நிர்மாணிக்க உதவாது. இந்திய யானையைத் தடவிக்கொண்டிருக்கும் இத்தகையக் குருடர்களின் சொல்லாலும் செயலாலும் இலங்கைத் தமிழர்களுக்கு அதிக பயன் இல்லை.

00000

இலங்கையில் தமிழர்களின் வருங்காலம் தொடர்பான கேள்விகள் தமிழ்ச் சமூகத்தின் முன் இருக்கும் ஆக முக்கியமான பிரச்சனை. இத்தனை அழிவுகளுக்கும் படுகொலைகளுக்கும் பிறகு இனியும் இலங்கையில் எல்லா இன மக்களும் இணைந்து வாழ முடியுமா என்பது முக்கியமான கேள்வி. இந்தியாவின் பிரிவினையின்போது இந்து – சீக்கியர்கள் மற்றும் இஸ்லாமியர் இடையே ஓராண்டு காலம் தொடர்ந்த வன்முறையில் சுமார் பத்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் அவ்வப்போது மதக் கலவரங்கள் வெடித்தாலும் இஸ்லாமியருக்குச் சம உரிமை பல தளங்களில் மறுக்கப்பட்டாலும் இந்தியாவின் பல பகுதிகளில் பெருமளவுக்கு இணைந்து அவர்களால் இந்தியாவில் வாழ முடிகிறது. நாடு பெரியது. பிரிவினையின் வன்முறையில் நேரடியாகப் பாதிக்கப்பட்டது சில மாநிலங்கள்தான். இந்திய அரசு அமைப்பு இஸ்லாமியர்களை அழிப்பதை ஒரு கடமையாகக் கருதிச் செயல்படும் அமைப்பு அல்ல. அன்று காந்தி, நேரு, மௌலானா அப்துல் கலாம், கான் அப்துல் கபார் கான் போன்ற மத உணர்வுகளைக் கடந்து செயல்படும் ஆற்றல்கொண்ட உயரியத் தலைவர்கள் இருந்தார்கள். இறுதியில் 1948இல் காந்தியின் இறுதி உண்ணாவிரதமும் உயிர்த் தியாகமும் மதவாதத்தின் நெருப்பை அணைத்தன. இத்தகைய நிலை இன்று இலங்கையில் இல்லை.

இலங்கையில் மிதமிஞ்சிய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான வருங்காலத்தை எதிர்பார்ப்பதில் பிழை இல்லை. இலங்கையில் பல இனங்களும் இனியும் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படும் நண்பர்களிடம் சில பார்வைகள் உள்ளன. ஒன்று, இலங்கையில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்ற பார்வை. இரண்டாவது, இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் சிங்களச் சமூகத்தில் இனவாதத்தின் வெறி தணிந்து சில ஆண்டுகளில் ஒரு இணக்கமான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை.

ஜெர்மனியில் யூதர்களைக் கொன்றது போன்ற ஒரு இன அழிப்பு இன்றைய தகவல் யுகத்தில் சாத்தியமல்ல. இலங்கை உலக நாடுகளை முழுவதுமாகப் புறக்கணித்துச் செயல்பட ஒரு வல்லரசும் அல்ல. ஆக, ஏக காலத்தில் நாடெங்கும் வாழும் தமிழர்களைச் சிங்கள அரசு அழிக்கவில்லை என்பதைச் சான்றாகக்கொண்டு நடப்பது இன அழிப்பு அல்ல என்று வாதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சிங்கள அரசின், ஆளும் வர்க்கத்தின் நோக்கம் இன அழிப்புத்தான். அது நூற்றாண்டு காலமாகச் சிறுகச் சிறுக நிறைவேற்றப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

அதேபோல கடந்த முப்பதாண்டுகளில் இன முரண்பாடு தீவிரம் அடைந்தது. சிங்களச் சமூகத்தில் மாற்றுக் குரல்களுக்கான இடம் பெருமளவுக்கு அழிக்கப்பட்டது. இனி வருங்காலத்தில் அத்தகைய குரல்கள் மீண்டும் உயிர்ப்புப் பெறக்கூடும். ஆனாலும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பார்வையில் எந்த மாற்றமும் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. அதே நேரம் யாராலும் தீர்வு சொல்ல முடியாத பிரச்சனையாக இருக்கும் இப்பிரச்சனைக்கு தீர்வே இல்லை என்ற அவநம்பிக்கையும் என்னிடம் இல்லை.

இன்று செய்யக்கூடியதாக எனக்குத் தோன்றுவது ஆழமான மறுபரிசீலனையும் தீவிரமான உரையாடலும். அத்தோடு ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் இலங்கை அரசின் மீது அழுத்தம் தரவும் உலகின் கவனத்தைத் தமிழர் பிரச்சனையின் மீது குவிக்கவும் மிக முக்கியமானவை. இலங்கைக்கு அப்பாற்பட்ட களங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அங்கு வாழும் மக்களின் உணர்வுகளைக் கணக்கில்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும். தீர்வுக்கான தேவையை இலங்கையின் எல்லாத் தரப்பு மக்களும் உணர்ந்தால் அத்தேடலிலிருந்து புதிய தீர்வு உருப்பெறும் என்று நம்புகிறேன். அதன் தன்மையை இப்போதே முன் ஊகிப்பது கடினம். இங்கிலாந்தில் 18ஆம் 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக நெருக்கடிகளுக்கு ஒரு படைப்பூக்கம் கொண்ட தீர்வாகவே தொழில் புரட்சி ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். (Decolonizing History: Technology and Culture in India, China and the west, 1492 to Present day, 1991.) அத்தகைய ஒன்று ஏற்படுவதற்கு முன்னர் தொழில் புரட்சியை யாரும் முன் ஊகித்திருக்க முடியாது. ஒரு நெருக்கடியை ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொண்டபோது ஏற்பட்ட தீர்வு அது. இலங்கையிலும் போராட்டக் காலத்தில் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட பல நெருக்கடிகளுக்கு, புற உலகுடன் தொடர்புகள் துண்டாடப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு, படைப்பூக்கம் கொண்ட தீர்வுகளைக் கண்டடைந்ததற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

எனவே ஒரு தீர்வுக்கான அவசியத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுவது இன்று மிக முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. அனைத்துத் தரப்பினரும் சகிப்பின்மையை நீக்கி, திறந்த மனதோடு விவாதிப்பதும் அற உணர்வோடு போராட்டங்களை முன்னெடுப்பதும் விழிப்புணர்வு பரவுவதற்குத் தூண்டுதலாக அமையக்கூடும்.

அத்தகைய விழிப்புணர்விலிருந்து ஒரு படைப்பூக்கம் கொண்ட தீர்வு இலங்கையில் ஏற்படும் என்று நம்ப ஆசைப்படுகிறேன்.

000000

உங்களுடன் உரையாடுவதன்வழி பல புதிய செய்திகளையும் புரிதல்களையும் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பார்க்கிறேன். அத்தகைய ஒரு உரையாடலுக்கான முன்னோட்டமாகவே இந்த உரையை முன்வைத்திருக்கிறேன். இந்த வாய்ப்புக்காக பௌசருக்கும் அவருடன் இணைந்து செயல்பட்ட நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

௦௦௦௦

(லண்டனில் ‘தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்’ 25 மார்ச், 2012 அன்று ஒழுங்கு செய்திருந்த சந்திப்பில் ‘இலங்கைத் தமிழர் விவகாரத்தினையொட்டிய தமிழகத்தின் சமகால அரசியல் சமூகப் போக்குகள்’ என்ற தலைப்பில் வாசித்த உரை. சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சில பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.)

 

28 Comments

  1. Sharmila Seyyid says:

    கண்ணன் முன்வைத்துள்ள கருத்துகள் நிதர்சனங்கள். இந்த உரையில் வெளிப்படும் நடுநிலைப் போக்குகளையும், கணத்தில் கொள்ள வேண்டும்.
    தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்காக கொடி பிடிக்கும் வெளிநாட்டவர்கள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இயக்கம் மேற்கொண்ட அக்கிரமங்களைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை வாழ் முஸ்லிம்களிடத்தே பொதுவாகக் காணப்படுகின்றது. மேலும், இலங்கைக்கு வெளியெ செயற்படும் ஊடகங்கள் அனைத்துமே தமிழர் பிரச்சினைகளை மட்டுமே முன்னுரிமைபடுத்திச் செயற்பட்டு வந்துள்ள. இலங்கையில் உள்ள ஊடகங்கள் கூட விதிவிலக்கல்ல.

Post a Comment