Home » இதழ் 09 » சமிக்ஞை- கணேஷ் வெங்கட்ராமன்- சிறுகதை

 

சமிக்ஞை- கணேஷ் வெங்கட்ராமன்- சிறுகதை

 


ரொம்ப நேரமாக காரை ஓட்டி சென்று கொண்டிருக்கிறோம். கோவையில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியை கேட்டுக் கொண்டு கிளம்பினோம். சொல்லப்பட்ட வழியில் தவறாமல் சென்று கொண்டிருந்தாலும், மனதில் லேசாக சந்தேகம். வெகு நேரமாகிவிட்டது. சென்றடைய வேண்டிய இலக்கு இன்னும் வரவில்லையே! வழி மாறி வந்துவிட்டோமா? என்ற கேள்வி நெஞ்சில் எழுகின்றது. பாதசாரிகள் யாரையாவது கேட்கலாமென்று பார்த்தால் ஒருவர் கூட தென்படவில்லை. சுத்தமாக துடைத்துவிட்டது போன்றிருந்தது சாலை. அப்போது தான் கண்ணில் ஒரு மைல்கல் பட்டது. அதனருகில் காரை நிறுத்தி கவனமாக நோக்கிய போது சென்றடையவேண்டிய இடம் இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்றும் நேர் திசையில் தான் செல்ல வேண்டும் என்றும் தெரியவருகிறது. மனம் நிம்மதியுற்று, மேலும் காரை செலுத்திக்கொண்டு போய் இலக்கை அடைகிறோம்.

ஆத்தூர் சென்று சேரும் போது இரவு பத்து மணியாகிவிட்டது. முருகன் லாட்ஜில் அறை போடப்பட்டிருந்தது. இரண்டு மூன்று அறைகள் மாற்ற வேண்டியதாகிவிட்டது. ஒரு ரூம் மிகவும் அசுத்தமாய் இருந்தது. இன்னொரு அறையில் ஒரே சிகரெட் நெடி. மூன்றாவது அறையில் படுக்கை விரிப்பில் ஒரே கறை. நான்காம் அறையை விட்டால் வேறு அறை காலியாக இல்லை. வேறு வழியில்லாமல் அந்த அறையிலேயே தங்கும் படியாக ஆனது. என்னுடன் கூட வந்திருந்த சக ஊழியன் கோபாலும் நானும் ஒரே அறையில் தங்கினோம். நான் கவனித்துக் கொள்ளும் வாடிக்கையாளர்களை கோபாலுக்கும் அறிமுகம் செய்யும் பணியின் முகமாக ஆத்தூர் வந்திருந்தோம். எங்கள் நிறுவனத்தின் முக்கியமான வாடிக்கையாளர் ஒருவர் தன் தொழிற்சாலையை சென்னையிலிருந்து ஆத்தூருக்கு மாற்றியிருந்தார். பத்தோடு பதினொன்றாக சென்னையிலேயே முடிந்திருக்க வேண்டிய சந்திப்பிற்காக ஆத்தூர் வரை வரும் படி ஆகிவிட்டது. தென்னகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிராண்டின் பிஸ்கட் தயாரிக்கும் ஆலை அது. மறக்காமல் மாதாமாதம் கொள்முதல் ஆணையை தவறாமல் எங்களுக்கு அனுப்பி வைக்கும் நிறுவனம். இவ்வாடிக்கையாளரை அரும்பாடு பட்டு கடந்த ஒரு வருடமாக வளர்த்திருக்கிறேன். என் உயர் அதிகாரிக்கு என்ன பயம் என்று எனக்கு விளங்கவில்லை. என்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களையெல்லாம் என்னுடன் சேர்ந்து இன்னொரு மேலாளரும் பார்த்துக் கொள்வார் என்ற புது யோசனையைக் கிளப்பிவிட்டு  கோபாலையும் இம்முறை என்னுடன் அனுப்பி வைத்திருக்கிறார். அவர் மனதில் உள்ள எண்ணம் நான் அறியாமல் இல்லை. ரிவ்யூ மீட்டிங்குகளில் வேண்டாத பெண்டாட்டியாக அவரிடமிருந்து நான் கேட்கும் கேலிப் பேச்சுகளும் கடும் விமர்சனங்களும் கடந்த சில வாரங்களில் மிகவும் அதிகமாகிவிட்டிருந்தன. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் காலுக்கு கீழ் என் கம்பள விரிப்பை தூக்கிவிடும் எண்ணம் அவருக்கு இருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது. கோபாலை வானளாவப் புகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது. அந்தப் புகழ்ச்சியில் குண்டூசி அளவுக்கு கூட சிரத்தை இல்லாமல் இருப்பதை கோபால் கவனித்தானா என்று எனக்கு தெரியவில்லை.

ஊர் தூங்கிக் கிடந்தது. நடுவில் மின்சாரம் வேறு போய்விட்டது. கொசுக்களின் ரீங்காரம் எரிச்சலை தந்தது. கோபால் சிகரெட் பிடிப்பதற்காக லாட்ஜின் வாசலுக்கு சென்றிருந்தான். நானும் சட்டையை மாட்டிக்கொண்டு வாசலுக்கு வந்தேன். தெரு அடங்கியிருந்தது.

கோபால் “பார்…எவ்வளவு அமைதி! இந்த அமைதி மும்பையில் எங்கே கிடைக்கிறது? என்றான்.

“ஆம் அதுசரி…நான் போன வருடம் துபாயிலிருந்து திரும்பி வந்த பிறகு ஆத்தூர் மாதிரி எதாவது சின்ன ஊரில் செட்டிலாகி விடலாம் என்று தான் பார்த்தேன்” – என்றேன்.

“ஏன் அதைச் செய்யவில்லை? இன்னும் நிறைய சம்பாதிப்பதற்காக மும்பையில் வந்து செட்டிலாகிவிட்டாயா?” – அவன் சிறிது ஏளனப் புன்னகையுடன் கேட்டது மாதிரி இருந்தது.

“இருக்கலாம். ஆனால் அது மட்டுமல்ல காரணம். என் மனைவி மும்பையில் பிறந்து வளர்ந்தவள்….எனக்கும் இத்தனை வருடங்கள் கழித்து….கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தமிழ் நாட்டில் வந்து திரும்ப செட்டிலாக முடியுமா என்ற வினா…”

எனக்கு கோபாலை இந்நிறுவனத்தில் வந்து சேர்ந்த பிறகு தான் தெரியும். நெருங்கிய நண்பனில்லை. உயர் அதிகாரியின் அரசியல் லீலைகளின் தாக்கத்துக்கு அவ்வளவாக அலட்டிக் கொள்ளாதவன். அதே சமயம் தன் உள்ளத்தை யாரிடமும் அதிகம் திறக்காதவன். மதியம் நான், அதிகாரி, கோபால் – மூவரும் சேர்ந்து தான் உணவு அருந்துவது வழக்கம். எதற்கெடுத்தாலும் சேல்ஸ், கஸ்டமர் என்று லஞ்ச் டயத்திலும் என்னைக் கேள்வி கேட்டு அரித்துக் கொண்டிருப்பவர் கோபாலிடம் மட்டும் நாட்டு நிலைமை, பங்குச் சந்தை நிலவரம் என்று லைட்டாக மட்டும் பேசுவார்.

நானும் அவனும் சேர்ந்து பயணம் செய்வது இதுதான் முதல் முறை. இப்பயணத்தில் என்னைப் போல அவனும் அதிக ஆர்வம் கொண்டிராதவன் போல் பட்டது.

“மும்பை ஒன்றும் நிரந்தரமில்லை என்று நினைக்கிறேன்…போகிற போக்கில் அதிகாரி என்னை வீட்டுக்குப் போகச் சொல்லி விடுவார் போல் தெரிகிறது. அவர் என்னை எப்படி நடத்துகிறார் என்பதைத்தான் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாயே….”

“இல்லை….நான் அப்படி நினைக்கவில்லை. உலகமையம் நீயில்லை.” என்றான் கோபால். புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை கீழே போட்டு கால் செருப்பால் அதனை மிதித்து உருவிழக்கச் செய்தான். ஏதோ சொல்ல வந்தவன் எதுவும் சொல்லாமல் நிறுத்திக்கொண்டான். அரசியல் ரீதியாக சரியாக இருக்க விழைபவர்கள் அடிக்கடி அர்த்தம் பொதிந்த மௌனம் காப்பார்கள்.

சுவர்க்கோழி கூவும் ஒலி கேட்டது. இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்த பத்தாவது நாள் இன்று. கோபாலுடன் சேர்ந்து மீண்டும் பயணம் செய்யும் சந்தர்ப்பம் அமையாது என்றே எனக்கு தோன்றுகிறது. இன்றொரு நாளாவது தடங்கலில்லாமல் அரசியல் சரி-தவறு பார்க்காமல் இவனால் பேச முடியாதோ?

“நான் வேலையை விட்டு விடலாமா என்று யோசிக்கிறேன். மும்பை திரும்பியவுடன் அதிகாரியிடம் பேசலாம் என்றிருக்கிறேன்” என்று கோபாலிடம் சொல்லத் துவங்கினேன். அச்சமயத்தில் அதை அவனிடம் சொல்ல என்ன அவசியம் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் என் மனக்கஷ்டத்துக்கு இவன் ஆறுதல் தரும் வார்த்தைகளை பேசுகிறானா என்று பார்க்க அவா. அதன் வாயிலாக இவனின் உள்ளத்தில் என்ன ஓடுகிறது என்று அறிந்து கொள்ளவும் ஆசை. மேற்சொன்னவாறு பேசிய பிறகு நேராக உள்ளத்தை திறந்து பேசுவது கூட ஒரு வித கையாளல் அல்லது மென்மையான அரசியல் என்ற எண்ணம் ஓடியது.

கோபால் “நீயே வேலையை விட்டு நீங்கிவிட வேண்டும் என்று ஏன் எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டான்.

”அதிகாரிக்கு என்னைப் பிடிக்கவில்லை. நான் வேலைக்கு வந்தவுடன் என் பொறுப்பில் இருந்த இரண்டு பெரிய வாடிக்கையாளரை நிறுவனம் இழந்து விட்டது……அதனால் அவருக்கு கடுப்பு….55 வயதிற்குப் பிறகு சாதிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று சலிப்புடன் உதட்டை சுழித்தேன்.

 

அவன் மீண்டும் டாபிக்கை மாற்றினான். ”ஆத்தூர் வருவதற்கு முன்னால் ஒரு மைல் கல் அருகே காரை நிறுத்தினாயே..ஞாபகம் இருக்கிறதா?” என்றான். “அந்த மைல்கல்லை கண்டதும் எவ்வளவு ரிலீஃப் கிடைத்தது ! அதைக் கண்டவுடன் சென்றடையும் இடம் தூரமில்லையென்று நீ மகிழ்ச்சியுடன் விசிலடித்துக் கொண்டே வண்டி ஓட்டினாய்….நாமெல்லாரும் நம் வாழ்வின் பயணத்திலும் மைல்கல்லைப் போன்று ஒரு சமிக்ஞையைத் தேடுகிறோம்…என் சகோதரன் தன் வாழ்நாள் முழுவதையும் ஜோசியத்தின் பின்னர் செலவழித்தான். கொடும் நோய் வந்த போது மருத்துவத்துக்கு செய்த செலவை விட ஜோசியத்துக்கும் வேண்டுதல்களுக்கும் பூஜைகளுக்கும் அவன் செய்த செலவு மிக அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை சமிக்ஞையைத் தேடி ஒடுவதை விட நம் பயணம் நம்மை அழைத்துச் செல்லும் இடத்துக்கு நாமே விருப்பப்பட்டு செல்லுதல் கூடுதல் நிம்மதியைத் தரும் என்றே எனக்கு தோன்றுகிறது. அதிகாரியின் அரசியல், சொன்ன பேச்சைக் கேட்காமல் இருக்கும் கீழ் மட்ட ஊழியர்கள், விலகிப் போய்க் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள்…..இவர்களெல்லாம் உங்களைக் கஷ்டப்படுத்துவது மட்டுமே குறி என்றா இயங்குகிறார்கள். அவர்கள் அப்படி நடப்பது அவர்களின் இயல்பு. வடிகாலையோ எதிர்காலம் என்ன என்ற சமிக்ஞையையோ தேடுவதினால் இவைகளெல்லாம் மாறி விடப் போகின்றனவா? வேண்டுமானால் அலுத்து, களைத்து நீ வேறு இடம் தேடிப் போய் விடுவாய். போகின்ற இடத்திலும் இது போன்றவர்களை, இதே சலிப்பூட்டும் நடத்தைகளை சந்திக்க மாட்டாயென்று என்ன உத்தரவாதம்?”

எவ்வளவு ஆழம் இருக்கும் என்ற யோசித்தவாறே நின்று பார்த்துக் கொண்டிருந்த தரையிலிருந்து எதிர் பாராது ஊற்றுப்பெருக்கெடுத்து முகத்தை நனைத்தது போலிருந்தது. தலை மட்டும் ஆட்டினேன்.

“என்னுள் சில நாட்களாகவே சில கேள்விகள்…..எத்தனை நாட்கள் ஓடிக் கொண்டிருப்பது?….என் அண்ணன் சில மாதங்கள் முன்னர் இறந்து போனான். அவன் நடத்தி வந்த சிறு வியாபாரம் மூடும் நிலைக்கு வந்து விட்டது. என் அண்ணியின் சகோதரர்கள் கழுகுகளாக மாறி லாபங்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு கழண்டு விட்டார்கள். அண்ணியின் குழந்தைகளின் கல்விக்கான முழுச்செலவையும் நான் ஏற்று நடத்தி வருகிறேன். எனக்கு குழந்தைகள் இல்லை. மனைவி நடத்தும் பெற்றோரிலா குழந்தைகளுக்கான பள்ளிக்கூடத்திற்கான செலவையும் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். சம்பளம், இன்செண்டிவ் – இவைகளெல்லாம் போதவில்லை.”

அறியா ஊரில், இரவு ஒரு மணிக்கு மேல், சுவர்க்கோழிகளின் சத்தத்துக்கு நடுவே நின்று அதிகம் பேசிக் கொள்ளாத, அலுவலகத்தில் அதிகாரப்பகிர்வுக்கான அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற இரு சக ஊழியர்கள் உரையாடினால் இந்த மாதிரி தான் அதிசயங்கள் நிகழும் போலிருக்கிறது.

சில நிமிடங்கள் திறந்த மடை மூடிக் கொள்வது மாதிரி அவனுடைய பேச்சு மேம்போக்கான தளத்துக்கே திரும்பச் சென்று விட்டது.

அடுத்த நாள் வாடிக்கையாளர் சந்திப்புக்குப் பிறகு கோவை திரும்பிக் கொண்டிருந்தோம். கோபால் நன்றாகக் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டே வந்தான். சங்ககிரி தாண்டியதும் காரின் பின் புற டயர்களில் ஒன்று பஞ்சராகி விட்டது. எங்களுடைய கோவை வினியோகஸ்தரின் காரை இரவல் வாங்கிக் கொண்டு வந்திருந்தோம். காருக்குள் டயரை கழற்றி மாட்டும் உபகரணங்கள் இருந்தன. ஆனால் ஸ்டெப்னி இல்லை. கோபால் நெடுஞ்சாலையில் டூ-வீலரில் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி “டயர் பஞ்சர்” பார்க்கும் கடை எங்கிருக்கிறது என்று கேட்டான். ஒரு கிலோமீட்டர் தள்ளி வலப்புறம் திரும்பி மேலும் ஒரு கிலோ மீட்டர் தாண்டியவுடன் வரும் கிராமத்தில் இருக்கிறது என்று மோட்டார் பைக் காரன் சொன்னான். டயரைக் கழற்றி பைக்காரனின் பின்னால் உட்கார்ந்து கொண்டு டயரை சரி செய்ய கோபால் எடுத்துப் போனான். நான் காத்திருந்தேன்.

ஒரு கிராமத்து இளைஞன் பத்து பதினைந்து ஆடுகளை மேய்த்துக் கொண்டு வந்தான். நான் நின்றிருப்பதைப் பார்த்து என்னிடம் பேச்சு கொடுக்கலானான். அவனிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஆட்டுக்கூட்டத்துக்கு நடுவில் ஒரு நாயும் காணப்பட்டது. அது லொள்லொள் என்று குரைத்துக் கொண்டே வந்தது. “சூ…. மணி..சூ..மணி” என்று இளைஞன் கத்தினாலும் அது குரைப்பதை நிறுத்துவதாக இல்லை. மணியை பாசத்துடன் கையில் தூக்கி அதனை தடவிக் கொடுத்தான்.

“பசிக்குது போலிருக்கு” என்றான்.

அருகிருந்த வேலியில்லா தோட்டத்துக்குள் ஒரு அனாமதேயப் பசு புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதனுடைய கன்று பசுவின் மடியை உறிஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்தான் ஆட்டுக்கார இளைஞன் ”சூசூ” வென்று இறைந்தபடி கன்றை பசுவின் மடியிலிருந்து விலக்கினான். கையில் வைத்திருந்த தூக்கு பாத்திரத்தில் பாலைக் கறந்து கொண்டான். நாய் திருப்தியுடன் பாதி பாத்திரம் பாலைக் குடித்து மீதியை குடிக்க போராடியதில் மிச்ச பால் மண்ணில் கொட்டியது. நாயின் குரைப்பு நின்றவுடன், இளைஞன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு போனான்.

திடீரென்று வானம் பொத்துக் கொண்டது போல் மழை கொட்ட ஆரம்பித்தது. நான் காரின் ஜன்னல் கண்ணாடிகளை மேலே ஏற்றி உள்ளே உட்கார்ந்திருந்தேன்.  கோபால் எப்படி திரும்புவான்? டூ-வீலர்க்காரனே அவனை வந்து திரும்ப விடுவானா? அல்லது புளி மூட்டையென பயணிகளை ஏற்றிக் கொண்டு கண்ணை எரிக்கும் புகையைக் கக்கிக் கொண்டு ஓடும் ஆட்டோவில் வந்து இற்ங்குவானா? ஆட்டோவில் வந்தால் டயரை எப்படி தூக்கிக் கொண்டுவருவான்? கண்கள் அசந்து கொண்டு வந்தன. கண்ணயர்ந்தேன்.

கோபால் காரின் ஜன்னலைத் தட்டும் போது விழித்தேன். மழை நின்றுவிட்டிருந்தது. “சாரி..மழை நிற்பதற்காக காத்திருந்தேன். நேரமாகிவிட்டது” பஞ்சர் பார்க்கப்பட்ட டயரை பொருத்தியவுடன் வண்டியைக் கிளப்பினேன். கோபால் எதில் வந்தான்? அவனிடம் கேட்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கேட்கவில்லை.

கோவையில் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு அன்றிரவு எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் வினியோகஸ்தர் – பாஷா – வந்தார். ஓட்டலுக்குள்ளிருந்த பார்-கம்-ரெஸ்டாரண்டில் உணவருந்தினோம். பாஷாவும் கோபாலும் சந்திப்பது அன்றுதான் முதல் முறை. என்றாலும் நெடுநாளைய நண்பர்கள் போல் கலகலவென பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அதிகம் பேசவில்லை. கடந்த ஒரு வருடத்தில் நான் ஐந்து முறையாவது கோவை வந்திருப்பேன். ஓட்டல் வாசல் வரை வந்து என்னைத் தன் காரில் விடும் பாஷா ஒரு முறை கூட என்னுடன் சேர்ந்து உணவருந்தியதில்லை.

கோபாலும் பாஷாவும் மதுவருந்தினார்கள். எனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. அவர்களுக்கிடையே நான் தனியனாகிப் போனேன். கோபால் எப்போதும் குடிப்பதை விட அன்று அதிகம் குடித்தான்.

“நான் ஒரு சின்ன வேலையாக ஒண்டிப்புதூர் போயிருந்தேன், அந்நேரம் மும்பையில் இருந்து அதிகாரி என் ஆஃபீஸ் நம்பருக்கு போன் செய்தார் என்று கேள்விப்பட்டேன். எதற்கு என்று தெரியவில்லை? அவர் எப்பவும் ராத்திரி என் வீட்டு நம்பருக்கு தான் போன் செய்வது வழக்கம்….வீட்டுக்குப் போய் அவருக்கு போன் செய்ய வேண்டும்….”

”போன வாரம் ஸ்பெஷலாக எனக்கு போன் பண்ணி நீங்க வரப் போவதைப் பற்றி எனக்கு சொன்னார். உங்களை சிறப்பாக கவனிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்”

பாஷா இனிப்பாக கோபாலுடன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு ஐம்பத்தி ஐந்து வயசுக்காரனான எனக்கு பொறாமை வந்தது என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள்.

“நாளைக்கு விடிகாலை ஃப்ளைட். நேத்து இரவே சரியா தூங்கலை. நான் தூங்கப் போறேன்…நீங்க கண்டினியு பண்ணுங்க” என்று வெடுக்கென சொல்லி விட்டு என் அறைக்கு திரும்பினேன்.

நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்குண்டு. குறிப்பிட்ட நாளின் “மூட்” சரியாகப் பதிவு செய்யப்பட அன்றன்றைக்கான பதிவை முடிந்தவரை அந்த நாள் முடிவதற்குள்ளேயே எழுதுதல் அவசியம் என்று நினைப்பேன். ஆத்தூரில் கோபாலுடன் ஒரே அறையில் தங்கியிருந்ததாலோ என்னவோ, டயரி எழுதவில்லை. முந்தைய நாளுக்கான பதிவை தூங்குவதற்கு முன்னால் இவ்வாறு எழுதினேன் “மைல்கல்லின் பணி என்ன? நமக்கு இலக்கு என்ன என்று தெரியும்? அதன் வழியையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் தெரியும். சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருந்ததை அறிவு பூர்வமாக நாம் அறிந்திருந்தாலும், இலக்கை அடையும் வரை அனுபவ பூர்வ அறிதலை நாம் பெறப்போவதில்லை. சந்தேகமும், நம்பிக்கையின்மையும் அப்போது தலை தூக்குகிறது. இலக்கை வந்தடைவதில் ஏற்படும் கால தாமதம் வேறு ! மைல் கல் நம் ஐயத்தைப் போக்கி நம்பிக்கையை பலப்படுத்துகிறது. மன நிம்மதி படர்ந்து உற்சாகத்துடன் பயணத்தை தொடர நமக்கு ஊக்கம் நல்குகிறது.” இன்றைய பதிவாக எதுவும் எழுதத் தோன்றவில்லை.  டயரியின் பக்கத்தை நிரப்பாமல் காலியாக விட்டேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு ஓட்டல் ரிசப்ஷனில் கோபாலை சந்தித்த போது சரியாக தூங்காததன் அடையாளமாக அவன் கண்கள் சிவந்திருந்தன. “ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டேன். “இல்லையில்லை..நீ போன ஐந்தாவது நிமிஷம் நானும் அறைக்கு திரும்பிவிட்டேன்” என்றான். ஆத்தூரில் தத்துவ மழை பொழிந்து ஆழமாக பேசினவன் இவன் தானா என்ற ஆச்சரியம் இருபத்தி நான்கு மணி நேரம் கழிந்த பின்னும் விலகவில்லை.

மும்பை அடைந்ததும் நேராக அலுவலகம் சென்றோம். அன்று சேல்ஸ் ரிவ்யூ இருந்தது. விற்பனைத் துறையின் முக்கியமான ஆட்கள் எல்லோரும் இருந்தார்கள். கோபாலைக் காணவில்லை. தலைவலியென்று பர்மிஷன் போட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பிப்போனான் என்று கேள்விப்பட்டேன். அதிகாரி என்னைக் குறி வைத்துப் பேசுவார் என்பது நான் அறிந்திருந்தது தான். ஆனால் எல்லைகளை மீறி, கடுமையின் உச்சத்தில் எரிமலைக் குழம்பாக எல்லோர் முன்னாலும் அவர் நான் அவமானப்படும் வகையில் அன்று அவர் பேசிய போது என் பொறுமைச் சரக்கு தீர்ந்துவிட்டிருந்தது. இரண்டு வரி ராஜினாமா கடிதத்தை அங்கேயே அவர் கையில் கொடுத்து விட்டு அலுவலகத்தை நீங்கினேன்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு மதியம் நானும் என் மனைவியும் ஸ்க்ரேபிள் விளையாடிக்கொண்டிருந்தோம். ஒரு வாரமாகவே அவளிடம் தோற்றுக் கொண்டிருக்கிறேன். WRITING என்ற சொல்லை வைத்து எல்லா எழுத்துகளையும் காலி செய்து விட்டு பெருமிதத்துடன் ஒரு புன்னகை வீசினேன். அவளிடம் இரண்டு O எஞ்சியிருந்தன. என்றும் இல்லாத விசேஷமாக எங்கள் வீட்டு போன் அப்போது ஒலித்தது. வீட்டில் எங்களுடன் தங்கியிருந்த என் அக்கா பேரன் போனை எடுத்து பேசினான். நான் வேலை விட்டு வந்த நிறுவனத்தில் இருந்து மேனேஜிங் டைரக்டருடைய காரியதரிசியின் அழைப்பு.

“என்ன விஷயம்? எதுக்கு கூப்பிடறாங்க?” என்று என் மனைவி கேட்டாள்.

“எல்லாம் நல்ல செய்தியாகத் தான் இருக்கும்”

”எப்படி சொல்கிறீர்கள்? யூகமா?”

“சமிக்ஞைகள்” என்று சொல்லி கண் சிமிட்டினேன். போன் ரிசீவரை எடுத்த போது, மதியம் இரண்டு மணியாகி பெண்டுல கடிகாரம் “டங்டங்”கென இருமுறை அடித்தது.

 

௦௦௦௦

 

 

3 Comments

  1. Munna says:

    One word. Wow!.

    I thought Tamil short stories were dead.
    This one changed my thoughts. Thanks.

  2. G.Balaji says:

    Nice…

Post a Comment