Home » இதழ் 09 » *ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்

 

*ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்

 

 

ஜே வி பி இனர் கடந்த காலத்தில் திட்டமிட்டும், எதிர்பாராமலும் மேற்கொண்ட அரசியல் தவறுகளை ஆராய்வதற்கான தருணம் இதுவாகும். இலங்கையில் சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பான சூழல் அன்று காணப்பட்டிருந்தது. அறுபதுகளில் உள் நாட்டிலும், சர்வதேச அளவிலும் காணப்பட்ட அரசியல் சூழல்களையும், அப் பின்னணியில் ஜே வி பி இன் தோற்றத்தினையும் மேலெழுந்தவாரியாக பார்க்க முடியாது.

 

பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்னியூஸ்ட் கட்சி என்பன சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி _அமைத்தமை பல இடதுசாரிகளின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கூட்டணி அமைத்ததன் காரணமாக இடதுசாரிக் கூட்டணி குலைந்ததும், தொழிற் சங்கங்களின் சார்பில் முன் வைக்கப்பட்ட 21 கோரிக்கைகளும் ஏமாற்றமடைந்ததால் தொழிற்சங்கங்கள் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் சிதறடித்தது. புதிய அணுகுமுறை அந் நேரத்தில் குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையாக இருந்தது.

 

அப்போதிருந்த சர்வதேச அரசியல் நிலமைகள் புதிய இடதுசாரி இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தினை வழங்கியது.கம்யூனிச இயக்கம் ரஷ்ய, சீன முகாம்களாக பிளவுபட்டமையும்,இதனைத் தொடர்ந்து சீன கம்யூனிஷ்ட் கட்சி இவ் இளைஞர்களுக்கான ஆதர்சத்தினையும் வழங்கியது. அப்போதிருந்த பெரும்பாலான இளைஞர்கள் சீன- ரஷ்ய பிளவுகள் குறித்து ஆழமாக பார்வையிடும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் சீன சுலோகங்களும், கலாச்சார புரட்சியும் இந்த இளைஞர்களைக் கவர்ந்திருந்தது.
_இக் காலகட்டத்தில் காணப்பட்ட பிரதான குணாம்சம் என்னவெனில் உள் நாட்டிலும், சர்வதேச அளவிலும் வெளிவந்த தத்துவார்த்த விளக்கங்களில் பல  தேசிய முதலாளித்துவ வர்க்கங்களினதும், அவற்றின் கட்சிகளினதும் ஏகாதிபத்திய சார்புப் போக்குக் குறித்த விளக்கங்களாகவே அமைந்திருந்தன. இதன் காரணமாக அந் நாடுகளிலுள்ள விவசாய மற்றும் தொழில்துறை சார்ந்த பிரச்சனைகளை கைவிட்டிருந்தார்கள். பாரம்பரிய இடதுசாரிகளும் இதே பாதையிலேயே சென்றார்கள்.

 

சீன கம்யூ. கட்சியின் சுலோகங்களின் தாக்கங்கள் சமசமாஜ, கம்யூ. கட்சிகளில் தாக்கங்களை ஏற்படுத்தாததால் அக் கட்சிகளுக்கு ஆதரவு குறையத் தொடங்க அவை ஜே வி பி இனரை நோக்கியே கவர்வதாக அமைந்தது. இவ்வாறான அரசியல் பின்புலம் ஜே வி பி இனரின் அரசியலை பிரபலப்படுத்தவும்,ஏற்கெனவே பாரம்பரிய இடதுசாரிகளால் ஏமாற்றமடைந்தும், மாக்சிசம் குறித்த புரிதல்கள் குறைவாக இருந்தமையாலும் இம் மக்கட் பிரிவினரிடையே ஆதரவைப் பெறவும் புரட்சியை குறுக்கு வழியில் அடையலாம் என்ற போக்கும் காணப்பட்டது.
இதன் காரணமாக தம்மை புரட்சிவாதிகள் எனப் அடையாளப்படுத்திய சிலரை இணைத்து குழு ஒன்றினை உருவாக்க முடிந்தது. இவர்கள் தமது தத்துவங்களை ஐந்து அத்தியாயங்களுக்குள் குறுக்கியதோடு, மாக்சிச விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகப் புரட்சியை நிராகரித்து மாக்சிச சுலோகங்களை மாக்சிசமென கூறத் தொடங்கினார்கள்.

 

முதலாளித்தவ வர்க்கத்திடமுள்ள உற்பத்தி சக்திகளை தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றுவதே மாக்சிச புரட்சியின் அடிப்படையாகும். ஆனால் ஜே வி பி இன் ஐந்து அத்தியாயங்களிலும் இவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.தொழிலாள வர்க்கத்தின் தலைமையில்தான் சமூக நிர்மாணம் உருவாக்கப்பட வேண்டுமென மாக்சிசம் வலியுறுத்துகிறது.ஜே வி பி இனர் இவை குறித்து எந்த ஆய்வினையும் வெளியிடவில்லை. அது மட்டுமல்லாமல் அந்த ஐந்து அத்தியாயங்களிலும் மாக்சிச எதிர்ப்பு பாதைக்குரிய அம்சங்கள் ஆங்காங்கே காணப்பட்டன.

 

வேலை நிறுத்தம் என்பது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஆளுமையை மேலும் அதிகரிக்க உதவும். இவை அவர்களால் முழுமையாக எதிர்க்கப்பட்டன. மலையகத் தொழிலாளர்கள்,இந்திய உளவாளிகள் என அடையாளப்படுத்தினார்கள். அவர்களுடைய அரசியல் பிரச்சாரம் யாவும் பெரும்பான்மை சிங்கள மக்களை தமது கட்சியை நோக்கி திருப்புவதாகவும;, அங்கு  செயற்படும் இனவாதக் குழுக்களின் ஆதரவை மறைமுகமாக கோருவதாகவும் அமைந்திருந்தது. அத்துடன் கூட்டு அரசுக்கு எதிராக கிளம்பும் ஏனைய பகுதியினரை முடிந்த வரை அரசியல் ரீதியாக ஒடுக்கினார்கள்.

 

60பது காலப்பகுதியில் இவர்களில் காணப்பட்ட ஆளுமையும், செயல் திறனும் கிராமப்புற இளைஞர்களின் மனதைக் கவர்ந்தது. குறுகிய காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என நம்பிய இளைஞர்கள் ஜே பி வி யை நோக்கியே வலம் வந்தார்கள். பொலீஸ் நிலையங்களைத் தாக்குவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என நம்பியவர்கள் போருக்கான தயாரிப்பில் இறங்கினார்கள். பொலீஸ் நிலையங்களைத் தாக்குவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமா? என்பது கேள்விக்குரியதாக இருப்பினும், சில குழுவினர் அந்த இலக்குகளை அடைந்தாலும்; சமத்துவமான சமுதாயத்தை நிர்மாணிப்பது என்பது சிக்கலான ஒன்றாகும். இவ்வாறான அணுகுமுறை குட்டி முதலாளித்துவ சக்திகளின் எதிர்ப்பு நடவடிக்கையே தவிர அது சமூகப் புரட்சி அல்ல என்பதை ஜே வி பி இனர் புரிந்து கொள்ளத் தவறினார்கள். இவ்வாறான வகையில் எதிர்த்து அதிகாரத்தினை குட்டி முதலாளித்துவ சக்திகள் கைப்பற்றினாலும் அவர்களால் அவ்வாறான வகையில் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியாது என மாக்சிசம் கூறுகிறது. இவ்வாறான குழுக்கள் முதலாளித்துவ சக்திகள் பக்கம் அல்லது தொழிலாளிகள் பக்கம் நெருங்கிச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குட்டி முதலாளித்துவ சக்திகளால் சுயமாக ஒரு போராட்டத்தை எடுத்துச் செல்ல முடியாது என்பதை வரலாறு ஜே வி பி இற்கு உணர்த்தியிருக்கிறது.

 

திருமதி. பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த போது ,பொலீஸ் நிலையத்தின் மீது ஒரு கல்லையாவது வீசிப் பாருங்கள் என சவால் விட்டிருந்தார். 1971ம் ஆண்டு 94 பொலீஸ் நிலையங்களைத் தாக்கி சிலவற்றை தமது கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார்கள். இத் தாக்குதல்கள் ஆரம்பித்து நடவடிக்கைகள் தொடர்ந்த போது அவற்றை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. மக்களின் ஆதரவு இல்லாமையும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் ஆதரவும் இல்லாமலிருந்தது. மக்கள் என்ற அடித்தளத்திலிருந்து விலகி வெறுமனே அங்கத்தவர்களை நம்பியதால் ஏற்பட்ட விளைவு என்பதை பல ஜே வி பி இனர் பின்னர் அனுபவ ரீதியாக உணர்ந்தார்கள்.

 

ஜே வி பி இன் தலைமைத்துவத்திற்கு வெளியில் ஆதரவாளர்கள் பலர் வட கொரியா, கியூபா, சீனா போன்ற நாடுகள் உதவும் என நம்பினார்கள். அதுவும் கிடைக்கவில்லை. சோசலிச நாடுகள் என அழைக்கப்பட்ட நாடுகள் முதலாளித்துவ தலைவரான சிறீமாவோ பண்டார நாயகா அவர்களைக் காப்பாற்ற முதலாளித்துவ நாடுகளுடன் இணைந்து செயற்பட்டன. சீனா, ரஷ்யா மட்டுமல்ல கியூபாவும் காப்பாற்ற முன்வந்தது. சீன கம்யூ. கட்சியைச் சார்ந்த சண்முகதாசன், சமசமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டமையை அந் நாடுகள் பிரச்சனையாக கண்டுகொள்ளவில்லை.

 

1971ம் ஆண்டின் கிளர்ச்சிகளை ஒடுக்கிய முறை வெல்லச கிளர்ச்சியை நினைவூட்டுகிறது. உடல்கள் நதிகளில் மிதப்பதும், தெருவோரங்களில் காணப்படுவதும் சாதாரண ஒன்றாக இருந்தது. இதற்கான உதாரணங்களில் ஒன்றுதான் கதிர்காம அழகி பிரேமாவதி மனம்பெரி இனது _மரணத்தினை மறைத்தமையாகும். கம்யு  கட்சி, சமசமாஜக் கட்சி என்பன இதன் பின்னணியில் நடந்துகொண்ட முறை தொழிலாள வர்க்கத்தையும், ஒடுக்கப்பட்டவர்களையும் திகைக்க வைத்தது. மக்களின் ஆதரவு இக் கட்சிகளுக்கு குறைந்தமைக்கு இதுவும் ஓர் பிரதான காரணமாகும்.

 

இவ்வாறான சூழலில் ஜே வி பி இனர் இவ் ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளத் தவறி கிட்டத்தட்ட 5 வாரங்கள் தொடர்ந்து தமது கிளர்ச்சிகளை மேற்கொண்டார்கள். மேற்குறிப்பிட்ட நிலமைகள் காரணமாக அவர்கள் சிங்கராஜ காட்டிற்குள் பின்வாங்கியும் சாத்தியப்படவில்லை. சிறை பிடிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஆணையாளர்களால் விசாரணைகள் நடத்தப்பட்டன.


முக்கிய எதிரிகள் தனிமைப்படுத்தப்பட்டு ஏனையோர் குழுக்களாக தனியாக வைக்கப்பட்டனர். இதன் காரணமாக தத்துவார்த்த முரண்பாடுகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கின. விஜேவீர மற்றும் பலர் கிளர்ச்சிக்கான திட்டத்தை லொக்கு அத்துல தீட்டியதாக குற்றம் சாட்டி ஜே வி பி யை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சுமத்தினார்கள். விசாரணையின் முடிவில் சிறீமாவோ பண்டார நாயக்கா அரசைச் சந்திப்பதற்கு வேறு ஒரு மாற்று வழியும் இருக்கவில்லை என பொடி அத்துல தெரிவித்திருந்தார்.

 

1977 இல் ஜே ஆர் பதவிக்கு வந்ததும் ஜே வி பி இன் சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக ஜே வி பி இன் செயற்பாடுகளில் துரிதம் காணப்பட்டது. சுய விமர்சனங்கள் வெளிவந்தன. இவ் விமர்சனங்களோடு தத்துவார்த்த விளக்கங்கள் அதாவது தொழிலாள வர்க்க தலைமை, சர்வதேச ஆதரவுத் தளம், மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகம் என்பவற்றின் தேவை என்பனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. நிர்வாகக் கட்டுமானத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பழைய பாணியிலேயே கருமங்கள் தொடர்ந்தன. 1980 இல் இடம்பெற்ற பொது வேலை நிறுத்தத்திற்கு முழுமையான ஆதரவை அவர்கள் வழங்கவில்லை.

 

இனப் பிரச்சனையில் ஜே வி பி இனர் சிங்கள இனவாதத்தினை உற்சாகப்படுத்தும் நிலைப்பாட்டை எடுத்தனர். கட்சியை சிங்கள _இனவாத அடிப்படையிலேயே கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையில் 1983 இல் இனக் கலவரம் வெடித்தபோது ஜே ஆர், ஜே வி பி இனரையும், நவ சமசமாஜக் கட்சி, கம்யூ. கட்சி என்பனவும் தடை செய்யப்பட்டன. காலப் போக்கில் நவ சமசமாஜக் கட்சி, கம்யூ.கட்சி என்பனவற்றின் தடை நீக்கப்பட்டது. ஜே வி பி மறைமுகமாக செயற்படத் தொடங்கியது. அரச ஒடுக்கு முறைக்கு மாற்று வழி அதுவே எனக் கருதி மீண்டும் ஆயுத தாக்குதலில் ஈடுபட்டார்கள். இம் முறை அவர்களால் சற்று நீண்ட காலத்திற்கு  (1987-1989 )செயற்பட்ட போதிலும் கட்சி அரச ஒடுக்குமுறைக்கு எதிராக செல்ல முடியவில்லை. அரச ஒடுக்குமுறை மிகவும் பயங்கரமானதாக இருந்தமையால் அதன் சகல தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

 

ஒடுக்குமுறை தீவிரமாக இருந்தபோதிலும் ஜே வி பி தொடர்ந்தும் ஒருங்கிணைந்து செயற்பட்டார்கள். இம் முறை இளைஞர்களே தலைமை தாங்கினார்கள். இக் குழுக்கள் முதலாளித்துவ எதிர்ப்பு சக்திகளாக ஓர் அளவிற்கு காணப்பட்ட போதிலும் முதலாளித்துவ வர்க்கத்தினை தூக்கி எறிவதில் தெளிவான போக்கை கொண்டிருக்கவில்லை. விசேடமாக அவர்கள் முற்போக்கற்ற சிங்கள இனவாத குழுக்களை வெற்றி கொள்வதற்காக சிங்கள இனவாதத்தினை பயன்படுத்தினார்களே தவிர தமிழ் இளைஞர்களை வெற்றி கொள்ள முயற்சிக்கவில்லை.1971 இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசின் வன்முறைக்கும், பின்னர் 1988 இல் ஐ தே கட்சியின் வன்முறைக்கும் ஜே வி பி இனர் முகம் கொடுத்த போதிலும் இந்த அனுபவங்களின் மூலம் அவர்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

 

குட்டி முதலாளித்துவ அடித்தளத்தினை ஜே வி பி கொண்டிருந்தமையால் சுயாதீனமாக அதிகாரத்தைக் கைப்பற்றவதற்கான குறிக்கோள்கள் அவர்களிடம் இருக்கவில்லை. 1994 இல் சந்திரிகா பண்டாரநாயகா அவர்களை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர முயன்றார்கள்.அதன் பின்னர் முதலாளித்துவ வர்க்க வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உதவினார்கள்.அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை பதவிக்கு கொண்டுவருவதில் அதிகளவு உழைத்தார்கள்.அதிகார பரவலாக்கத்தின் மூலம் இனப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதை எதிர்த்தார்கள்.அத்துடன் தமிழர்களுக்கு எதிரான போரை ஆதரித்தார்கள்.அதுமட்டுமல்லாமல் தேசாபிமான முன்னணியில் தமது தலைவர்களை முதலாளித்தவ வர்க்கத்துடன் இணைந்து செயற்பட அனுமதித்தார்கள். இச் செயல்கள் விமல் வீரவன்ச போன்றவர்களை இனவாத அடிப்படையில் செயற்படும் முதலாளித்துவ சக்திகளோடு இணைந்து செயற்பட வழி சமைத்தது. மகிந்த ராஜபக்ஸ அவர்களை இவர்கள் தீவிரமாக எதிர்க்கும் நிலை ஏற்பட்டமைக்கு காரணம் ஜே வி பி யை அழிப்பதற்கு அவர் எடுத்த நடவடிக்கைகளாகும். இதன் காரணமாக பொருத்தமில்லாத தொப்பியை அணிந்தமையால் அதுவும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை விட மிகவும் பாரதூரமான தவறினை செய்தார்கள். இனப் போரை தலைமை தாங்கி நடத்திய சரத் பொன்சேகா அவர்களை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டார்கள். இதன் மூலம் ஐ தே கட்சியுடன் பொது முன்னணி அமைப்பதற்கு ஜே வி பியும் துணை போனது.
தற்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க அவர்கள் வர்த்தக சமூகத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்காக ஐரோப்பிய உடையில் செல்லும் நிலை ஏற்பட்டது. இச் சம்பவங்கள் யாவும் தற்செயலான தோற்றப்பாடாக இடம்பெற்றவை அல்ல. ஜே வி பி இற்குள் காணப்பட்ட குட்டி முதலாளித்துவ சிந்தனைப் போக்குள்ள குழுக்களால் சுயமாக சமூகத்தில் இயங்க முடியாது போனமையேயாகும். இவர்கள் ஒன்றில் முதலாளித்துவத்தோடு அல்லது தொழிலாளர்களோடு கலக்க வேண்டும். அவர்கள் ஒடுக்குவோரான முதலாளித்துவ சக்திகளை தேர்வு செய்தார்கள். இப் பின்புலத்திலிருந்தே ஜே வி பி தற்போது எதிர்நோக்கும் நிலமைகளை ஆராய வேண்டும். இத் தவறுகள் ஓரிரு தலைவர்களால் ஏற்பட்டது அல்ல. பதிலாக குட்டி முதலாளித்துவ பின்னணியில் சமூகப் புரட்சியை எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும்? என்பது குறித்து போதுமான அறிவினை இவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதே காரணமாகும்.

 

 

ஜே வி பி இனர் தொடர்ந்தும் இவ்வாறான அரசியல் தவறுகளை மேற்கொள்வார்களாயின் இவர்கள் தம்மை ஏமாற்றிச் செல்வதை இன்னொரு குழுவினர் உணரத் தொடங்குவார்கள். இதில் மாற்றம் காணப்பட வேண்டுமெனில் சந்தர்ப்பவாத குணாம்சங்களுக்கான, தவறான அரசியல் முடிவுகளை நோக்கிச் செல்வதற்கான காரணிகள் ஆராயப்பட வேண்டும். ஓர் புரட்சிகரப் போராளி தனிமையில் விவாதிப்பதை விடுத்து எதிராளியின் விமர்சனத்தினை அச்சமின்றி முகம் கொடுக்க தயாராக வேண்டும். அதுவே பொருத்தமான வழிமுறையாகும்.பின்னோக்கி சென்று நியாயங்களைத் தேடுவது உதவப் போவது இல்லை. மாக்சிசத்தினை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு அல்லது குறிப்பிட்டஇனத்திற்கு பொருத்தமாக வளைத்து, திரித்து விடலாம் என்ற எண்ணப் போக்கே ஜே வி பி இற்குள் காணப்படுகிறது. இம் மாதிரியான போக்கு ஜே வி பி போன்ற பல குழுக்களில் பொதுவாக காணப்படுகிறது. ஜே வி பி இற்குள் இவ்வாறான தவறுகள் ஏற்படுவதற்கான மூலங்களைத் தேடாமல் சில குறிப்பிட்ட தவறுகளுக்கு சில தனி நபர்களை காரணம் காட்டும் முயற்சியில் சில மாற்றுக் குழுக்களின் கவனம் திரும்பியுள்ளது.ஜே வி பி இற்குள் காணப்படும் குழுக்கள் இந் நிலமைகளைத் திருத்துவதற்கான தத்தவார்த்த நெறிகளை நாடுவதே பொருத்தமானது.
ஆரம்பத்தில் பிரிந்து சென்றவர்களும் இவற்றில் அதிக கவனம் செலுத்தவில்லை. இத்தகைய காரணங்களால்தான் இக் குழுக்களிலிருந்த பலர் அரச சார்பற்ற நிறுவனங்களில் பரவியுள்ளனர்.

 

மாக்சிச தத்துவார்த்த அடிப்படையிலான கட்சி ஒன்றின் தோற்றமும் அக் கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தினைக்கொண்டதாகவும், முன்னேற்றகரமான பாட்டாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதாகவும் அமைதல் இன்று தேவையாகிறது.ஜே வி பி இனர் விஜேவீர அவர்களிடமிருந்து தேடுதல்களை விடுத்து அவரின் அர்ப்பணிப்புகளில் கவனத்தை செலுத்த வேண்டும்.

0000

 

நன்றி- SOCIAL FIGHT 2012/2013

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment