Home » இதழ் 09 » பா. தேவேந்திரபூபதி , எ.எ.பைசால்- கவிதைகள்

 

பா. தேவேந்திரபூபதி , எ.எ.பைசால்- கவிதைகள்

 

என் நிழற் குடையில் யாரும் அமரலாம்

————————————————————-

 

 


சங்கீதம் வரும் வழியில்
நிழற் குடையில் கண்ணயர்ந்திருக்கிறேன்
அதனுடன் மேற்றிசை
இடியும் சேர்ந்திருக்க வேண்டும்
யாவும் நனைவது மழையிலா நாதத்திலா
போதமா அது
காலமும் இடமும் என்னைக்
கடந்து போயிருந்தது
பசுவின் கன்றுகள்
கிழக்குத் திசையை அழைக்கின்றன
அவர்தான் புல்வெளியை
பார்த்திருக்கச் சொன்னார்
காத்திருப்புத்தான்
ஒளியின் எண்ணெய் நடனமிடுகிறது
ஒரு ஆறு வரையும் ஓவியத்தில்
நீலத் திரையில் உயிர் அலைகிறது
சிறுதானியம் தேடும் புட்களின்
சிறுதுடிப்பில் என் பசியின் திரவம்
அதன் துரிதம்
காற்றைக் கிழித்துக் கடிந்தேகினேன்
உடலே ஒரு இசைக்கருவி
அது இரைச்சலிடுகிறது
என் நிழற் குடையில் யாரும் அமரலாம்
அந்த சங்கீதத்தையும்
அங்தேதான் விட்டிருக்கிறேன்
என் பசிக்கு மிகையாக
இந்தப் பெருநிலம் வேகமாகச் சுழல
ஒரு விண்மீன் பெருவெளியில் சுழல்கிறது
அதன் வால் பிடித்த குழந்தைகள்
நியமத்தில் உறங்கிக் கிடக்கின்றன
என் நிழற்குடையில் இன்னும்
அவர்தான் பாடிக் கொண்டிருக்கிறார்……
00

பா. தேவேந்திரபூபதி

 

0000

ஆண் காற்று

————————-

 

இன்று அதிகாலை என் மேனியில் படவேண்டிய குளிர் காற்று
மற்றொரு ஆண் காற்றுடன்
ஓடிப்பிடித்து விளையாடியது.

மனதுக்கு நிறைவாகயில்லை.

வழமைக்கு மாறாக
குளிர் காற்று பல ஓடைகளைக் கடந்து
ஆண் காற்றுடன் அலைந்து திரிகிறது
பலூன்களை ஊதி மேலே மேலே உயர்த்துகிறது

அடுத்த கட்டம்
நான் காற்றாக  மாறும்
நிபந்தனைகளை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.
வாசித்து முடிந்ததும்
நான் காற்றாக மாறியிருப்பேன்.
ஏதேனும் ஒரு நிபந்தனை மறந்துவிடுமாயின்
மீண்டும் மனிதனாக  மாறமுடியும்.

அடர்ந்து வளர்ந்த மரங்கள் நிற்கும் இடத்தை
காடு என்று சொல்லும் போது மரங்கள் கரைந்துவிடும்.
இலைகளில் இருக்கும் ஒவ்வொரு காற்றும்
நிபந்தனைகளை மறக்க முடியாததால்
தொடர்ந்து காற்றாக இருக்கும்.
ஆயிரம் வருடங்களுக்குப் பின் ஒரு நிபந்தனையேனும் மறந்தால் பறவையாகும், புலியாகிப் பாயும்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்
நிபந்தனைகளை மறந்த காற்றுத்தான்
இன்று பறவைகளாக ஆகாயத்தில் திரிகின்றன.

வீட்டுக் கூரையை உடைத்து
வாசலில் நின்ற மரங்களை தள்ளிவிட்டுப் போகும் காற்று
ஆயிரம் வருடங்களுக்கு முன் கொடிய மிருகமாக  இருந்திருக்கிறது.

காலநிலை சீராக இல்லாத காரணத்தால்
இன்றைய அதிகாலை மனதுக்கு நிறைவாகயில்லை.
நான் காற்றாக மாறும் நிபந்தனைகளை வாசிக்காமல் மூடிவைத்துவிடுகிறேன்.

 

00000

-எ.எ.பைசால்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment