Home » இதழ் 09 » *(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04

 

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04

 


 
ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.

  இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் பரவலாக எழுதப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. விக்கி லீக்ஸ், சனல் – 4 காட்சிகள் தொடக்கம், ஐ.நா அறிக்கை, கோடன் வைஸின்  The Gaje(கூண்டு), பிரான்ஸிஸ் ஹரிசனின்     (Frances Harrison) Still Counting the Dead  போன்ற நூல்கள், வன்னிப்போர் நாட்கள் பற்றி அந்தப் போரிலே சிக்கியிருந்த பலரும் பத்திரிகைகளில் எழுதிய தொடர் கட்டுரைகள், காத் நோபிளின் கட்டுரை, கே.பி என்ற குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்,  அமைதிப்பேச்சுகளின் நாயகமாக இருந்த எரிக் சொல்கெய்ம் தெரிவித்த கருத்துகள், அண்மையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. செயற்பட்ட விதம் தொடர்பாக சார்லஸ் பெட்றி தலைமையிலான குழு தயாரித்துள்ள அறிக்கை, இறுதி நாட்களில் என்ன நடந்தது என விறுவிறுப்பில் ரிஷி எழுதிவரும் தொடர் வரை ஏராளம் தரப்புப் பதிவுகளும் சாட்சியங்களும் வெளிப்படுத்தல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும் அர்ச்சுனன் எழுதிவரும் விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள், சாத்திரி எழுதிவரும்பங்கு பிரிப்புகளும் படுகொலையும்போன்ற தொடர்களும்.

இவற்றை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும்போது பல உண்மைகள் நிரூபணமாகின்றன. ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது, அவையெல்லாம் எப்படி நடந்தன என்ற உண்மைகள். இத்தகைய பல தரப்பு வெளிப்பாடுகள்தான் வரலாற்றின் சிறப்பாகவும் வடிவமாகவும் அமைகின்றன. மட்டுமல்ல நிகழ்காலத்தை நெறிப்படுத்தி, எதிகாலத்தை வளமூட்டவும் உதவுகின்றன.

 

இறுதிப்போர்க் கால நிகழ்ச்சிகள், அவற்றின் பின்னணிகள் பற்றிச் சுருக்கமாக நானும் ஏற்கனவே காலச்சுவடு உள்ளிட்ட சில இதழ்களில் எழுதியிருக்கிறேன். நான் சம்மந்தப்பட்டவற்றையும் என்னால் அறியப்பட்டதையும் நாம் அனுபவித்ததையும் அந்தப் பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இங்கும் அத்தகைய ஒரு வெளிப்படுத்தலே எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றனஎன்ற இச் சிறு தொடரும். இது வரலாற்றுக்கு என் தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு சாட்சியமளித்தலே. 

 

இத்தகைய அனுபவங்களும் அறிதல்களும் பலருக்கும் பலவிதமாக உண்டு. அவர்களுடைய சாட்சியங்கள் இன்னொரு விதமாக அமையலாம். அவர்களுடைய அறிதல்கள், அனுபவங்கள், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வழியாக. ஆனால், எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும் சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதே சரியான வரலாறாகும். பொய்களின் வரலாறு மீளவும் குருதி சிந்த வைப்பதிலும் இருண்ட யுகமொன்றை அந்த வரலாற்றைக் கொண்ட சமூகங்களுடைய மடியில் கொண்டு வந்து இறக்குவதாகவுமே அமையும்.

 

வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு அவசியமான பணி. அவற்றை வெளிப்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான சங்கடங்கள் இருக்கலாம். காலநேரப் பொருத்தப்பாடுகள் குறித்த அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், உரிய காலத்தில் சிகிச்சை செய்யப்படாத நோய் பேராபத்தையே விளைவிக்கும் என்பது பொது அனுபவம். அதைப்போல உரிய காலத்தில் உரிய விசயங்களைச் சொல்ல வேண்டியது காலக்கடமை. அதைச் சரியாகச் செய்யவேண்டியது அவசியப் பணி.

 

பலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள் சென்றடைகின்ற புள்ளி வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும் பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி உண்மைகளை மறைத்துப் பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது அந்தச் சமூகம் தவறான வழிகளிலே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச் சென்றடையும்.

நமது அதீத கற்பிதங்களே நமது தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவம். எனவேதான் சுயவிமர்சனங்கள் அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும் பங்களிப்புள்ளது.

 

வரலாறு ஒரு போதும் தட்டையானதோ ஒற்றைப்படையானதோ அல்ல. யாருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தும் இருப்பதில்லை. அது உள்ளபடி, உண்மையின் அடிப்படையில் இருக்கும். புனைவதும் மறைப்பதும் வரலாற்றுக்கு இழைக்கும் துரோகமாகும். அது வரலாற்றுக்கு மட்டுமல்ல அந்த வரலாற்றைப் புனைந்திருக்கும் சமூகத்துக்கும்தான்.

என்னுடைய இந்தப் பதிவில் யாரையும் குற்றம்சாட்டுவதோ அல்லது எந்தத் தரப்பையும் தவறாக விமர்சிப்பதோ, கீழிறக்குவதோ நோக்கமல்ல. மிகப் பெரும் சேதங்களைத் தரும் இயற்கை அனர்த்தமாயினும் சரி, செயற்கையான போர் போன்ற நிகழ்ச்சிகளாயினும் சரி, அவற்றின் காரண காரியங்களை ஆராய்வது சமூக இயல்பும் தவிர்க்கவே முடியாத ஒரு பொறிமுறையும்கூட. அந்த வகையில் என்னுடைய பதிவும் ஒன்று. இது போல எதிர்காலத்தில் ஏராளம் பதிவுகள் வெளிவரப்போகின்றன.

இது தவிர்க்கவே முடியாதது. ஏனென்றால், இது விக்கி லீக்ஸ் யுகம்.

 00


(04)


ஈழநாதத்தில் வெளிவந்த நிலாந்தனின் அரசியல் பத்தி இடைநிறுத்தப்பட்டது மட்டுமல்ல, அதற்குப் பின்னர் தமிழீழத் தொலைக் காட்சியில் அவர் அரசியல் விவாத நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவும் அழைக்கப்படவில்லை. பதிலாக அவர் தெரிவித்த கருத்துகளை மறுதலிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன.

இதேகாலப்பகுதியில் அமரதாஸின் ஒளிப்படங்களின் தொகுதி ஒன்று ‘வாழும்கணங்கள்’ என்ற பெயரில் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்தப் தொகுதியை வெளியிட்டது தமிழீழ நுண்கலைப் பிரிவு. இந்த நிகழ்வில் நிலாந்தன் விமர்சன உரையாற்றினார். ஒளிப்படங்களைப் பற்றித் தன்னுடைய கண்ணோட்டத்தை அவர் முன்வைக்கும்போது ‘கருவி முக்கியமல்ல. கலைஞனின் திறனே முக்கியமானது. நல்ல ஒளிப்படங்களுக்கு அதைப்பற்றிய அழகியல் உணர்வும் சமூக அக்கறையும் முக்கியமானது. படங்களின் செய்தியும் அதைச் சொல்லும் விதமும் ஒருங்கிணையும்போதே படங்கள் சிறக்கின்றன. அவையே கலையாகின்றன…..’ என்று தெரிவித்தார்.

இது நடந்து இரண்டு நாட்களில் நிலாந்தனுக்கு ஒரு கடிதம் வந்தது. தமிழீழப் புகைப்படப் பிரிவுக்குரிய கடிதத் தலைப்பில், அதனுடைய பொறுப்பாளர் செந்தோழன் கையொப்பமிட்டு அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். அதுவொரு கண்டனக் கடிதம். ஆனால், உண்மையான அர்த்தத்தில் அது அச்சுறுத்தற் கடிதமே. ‘புகைப்படத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டுக்கார்கள் தொடக்கம் புலம்பெயர் மக்கள் வரையில் புகைப்படப்பிரிவின் படங்களைப் பார்த்துப் பாராட்டுகிறார்கள். தலைவரும் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதையெல்லாம் பொருட்படுத்தாமல், புகைப்படங்களைப் பற்றி வியாக்கியானம் செய்திருக்கிறீர்கள். போராளிகள் எடுத்த புகைப்படங்கள் உங்களுடைய கண்ணுக்கும் கவனத்திற்கும் தெரியாமல்போனது கண்டிக்கத்தக்கது…..’ என்றெல்லாம் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

சந்தேகமில்லை, அதுவொரு எச்சரிக்கைக்கடிதம்தான். மட்டுமல்ல, புகைப்படத்தைப் பற்றிக் கதைப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றும் அதில் கேட்கப்பட்டிருந்தது. ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக வைக்கப்பட்ட ஒரு கருத்துக்கு இப்படி அளிக்கப்பட்ட எதிர்வினையை நிலாந்தன் நண்பர்களிடம் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தைப் பிரதியெடுத்துப் புலிகளின் முக்கியதஸ்தர்களாக இருந்த அனைவருக்கும் நிலாந்தன் அனுப்பினார். எல்லா இடங்களிலும் மௌனம் வேர்விட்டது.

 

நிலாந்தனின் அபிப்பிராயங்கள் தொடர்பாக புலிகள் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு மேலும் சில பின்னணிகள் இருந்தன. அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தை அடுத்து அவரை முன்வைத்து ஈழநாதத்தில் நிலாந்தன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு பிதாமகன். அதில் பாலசிங்கம், அவருடைய அணுமுறைகள் தொடர்பாக ஒரு மென்னிலையான மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இன்னொன்று, சதாம் ஹுசைன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் எழுதப்பட்ட கட்டுரையில் சதாமை முன்னிறுத்தி, புலிகளின், பிரபாகரனின் அரசியலை நிலாந்தன் எழுதியிருந்தார். கதவுகளை இறுக மூட மூட அதைத் திறக்கும் முயற்சிகளே நடக்கும். அப்படியான ஒரு நிலையில், ஜனநாய வெளியற்ற நிலையிற்தான் சதாமின் வீழ்ச்சி ஏற்பட்டது. எதிரிகளுக்கான வாசலை இலகுவாக தானே திறந்து வைத்தார் சதாம் என்று அந்தக் கட்டுரை கூறியது.

இதெல்லாம் புலிகளுக்கு உவப்பான விசயங்களாக இருக்கவில்லை. ஆனால், தான் உணரும் விசயங்களையும் கண்ணுக்கு முன்னே நிகழ்கின்ற நிகழ்ச்சிப்போக்கினையும் வெளிப்படுத்துவது அவசியம் என்பது நிலாந்தனின் நிலைப்பாடு.

 

அவருடைய இத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக முன்னரும் ஒரு தடவை அவர் எழுதும் பத்தி இடைநிறுத்தப்பட்டது. அது 1993 இல்.  அப்பொழுது ஈழநாதத்தில் வாரப்பத்தி எழுதி வந்தார் நிலாந்தன். அந்த நாட்களில் யாழ்ப்பாண முற்றுகையைப்பற்றி கொழும்பில் தீவிரமாக யோசிக்கப்பட்டது. கொழும்பின் சிந்தனை எப்படியாக உள்ளதென தன்னுடைய ஆய்வை முன்வைத்திருந்தார் நிலாந்தன். விளைவு, அவர் எழுதுவதற்கான வெளி இழுத்து மூடப்பட்டது.

பிடிக்காத அபிப்பிராயங்களை அடக்குவதற்கு குரல்வளையை நெரிக்கும் வழிமுறை இலங்கையில் பிரசித்தம். அதற்கொரு பாரம்பரியமே உண்டு. குரல்வளையை நெரித்ததில் எல்லாக் கைகளுக்கும் பங்குண்டு. இப்பொழுதும் இதுதான் நிலை.

மாற்றுச் சிந்தனை, மாற்று அபிப்பிராயம் போன்றவற்றை ஏற்கும் பண்பும் பக்குவமும் பலரிடமும் கிடையாது. ஆகவே அடிப்படையில் இவர்கள் எல்லாரும் ஒன்றே. ஆளாளுக்கு, தரப்புகளுக்கிடையில் விகித வேறுபாடுகள் இருக்கலாம். மற்றபடி வித்தியாசங்கள், வேறுபாடுகள் எல்லாம் பெரிய அளவில் கிடையாது. துப்பாக்கியுடன் நின்றால் மட்டும்தான் ஜனநாயக விரோதம். துப்பாக்கியைக் கைவிட்டு விட்டால் ஜனநாயகம் தளைத்தோங்கி விடும், புதிதாக அது செழித்துப் பூக்கும் என்று சிலர் நம்பலாம். அவர்களுடைய புரிதல் அந்தளவுக்கு இருந்தால் அதற்கான தண்டனையை நாம்தான் பெற வேண்டும். இப்பொழுது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

பிறருடைய கருத்துகளைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக அவர்களைப்பற்றிப் பழிசொல்வது, அவர்களுடைய பின்னணி, முன்னணியைப்பற்றிப் பேசி,  முன்வைக்கப்பட்ட கருத்தை, நியாயத்தை, நிலைப்பாட்டைத் திசை திருப்புவது அல்லது அதை மூடித்திரையை விரித்து விடுவது. இது முழு  அயோக்கியத்தனமே.

மாற்று அபிப்பிராயத்தை அங்கீகரிக்காத சூழலும் மனமும் ஏதேச்சாதிகாரத்தின் அசல் வடிவமே. இதைப் பற்றிப் பல கோடி வார்த்தைகளைப் பலரும் எழுதியும் பேசியும் விட்டார்கள். இதைச் சொல்லிச் சொல்லியே வரலாறும் களைத்துச் சலிப்படைந்து விட்டதது. தமிழ்ச் சூழலிலும் அரிச்சுவடி தொடக்கம் பல வகுப்புகள் இதைப் பற்றி போதித்து விட்டாயிற்று. ஆனாலும் நிலைமையில் ஒரு படிகூட முன்னேற்றமில்லை.

 

வெறியோடு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்து ஆணைகளை மற்றவர் மீது பிரயோகிக்கவே, ஏற்றிவிடவே முயற்சிக்கின்றனர். தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர வேறொன்று இல்லை, இருக்கக் கூடாது என்பதே பலருடைய விருப்பமும். அந்த விருப்பத்தை நடைமுறைப்படுத்தவே மற்றவர்களுடைய குரல்வளையை நெரிக்கிறார்கள். அது முடியாதபோது எதிராளியை விலக்குவது, குற்றம்சாட்டுவது, வசைபாடுவது, தூற்றுவது எல்லாம் நடக்கின்றன. இதெல்லாம் அதிகாரத்தின் பாற்பட்ட விசயங்கள்.

 

அரசொன்றிடம்தான் அதிகாரம் இருக்கும் என்றில்லை. அரசுக்கு அப்பால் சாதாரண தரப்புகளிடமும் அதிகாரம் குவிந்துள்ளது.  அரசிடம் இருக்கும் அதிகாரத்தையும் விட இந்த மாதிரியான போக்கை வைத்திருக்கும் உளவியலில், கருத்தியலில் இருக்கும் அதிகாரம் பெரிது. இதைக் கடைப்பிடிக்கும் தரப்பினரிடம் உள்ள அதிகாரம், இத்தகைய போக்கினை நடைமுறைப்படுத்துகின்ற ஊடகங்களிடம் – ஊடகவியலாளர்களிடம் இருக்கும் அதிகாரம் போன்றன இன்னும் வலியன. அரசின் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கால எல்லையைக் கொண்டது. அது ஆட்சி மாற்றமொன்றின் போது அல்லது ஆட்சிக் கவிழ்ப்பொன்றின் மூலம் மாற்றி விடக்கூடியது. அல்லது தலைமைத்துவ மாற்றங்களில் நெகிழ்ந்து கரைந்து விடக்கூடியது. அதற்கப்பால் நீடித்தாலும் அதை மக்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோற்கடிக்க முடியும். ஆனால், வெளியே ஒரு சமூக நோயாகப் பரவியிருக்கும் இந்த நிலை எளிதில் மாறிவிடக் கூடியதல்ல. இதனுடைய வேர்கள் பல முனைகளில் நீண்டு ஓடிவிடக்கூடியன. பல தளங்களில் ஊடுரூவிப் பின்னிப் பிணைந்து விடக்கூடியன.

 

இத்தகைய பாரம்பரியத்தை உடைய தமிழ் அரசியல் தளத்தில், இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றும் புலிகள், நெருக்கடிக் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களையிட்டு எச்சரிக்கையடைந்தனர். இடைக்காலத்தில் அவர்களிடமிருந்த நெகிழ்ச்சி, நெருக்கடிக் காலத்தில் சுருங்கி இறுகியது.

 

ஆரம்ப காலப் புலிகளிடத்தில்  கடும்போக்கும் தீவிரத்தன்மையும் நிறைந்திருந்தது. ஆனால், 1990 களுக்குப் பின்னர் மாற்று அபிப்பிராயங்களை உடனடியாக எதிர்க்காமல், அவற்றுக்கு உடனடித் தண்டனை, பகிரங்க நடவடிக்கை என்ற வகையில் காரியமாற்றாமல், விட்டுப்பிடித்தல், ஓரளவுக்கு அபிப்பிராயங்களுக்குச் செவிமடுத்தல் என்றவகையில் அவர்களுடைய அணுகுமுறைகள் இருந்தன.

புலிகளிடம் ஏற்பட்டிருந்த மெல்லிய நெகிழ்ச்சியான போக்கு அல்லது தந்திரோபாயம் இது எனலாம். இதனால்,  முன்னரைப்போலன்றி, பின்னர் பல வகையான அபிப்பிராயமுடையவர்கள் புலிகளுக்கிசைவாக ஆதரவு நிலையெடுக்கவும் இணைந்து பங்காற்றவும் முயன்றனர்.

இது சற்று விரிவடைந்து பல்வேறு தரப்பினரும் மாற்றுக் கருத்து நிலையோடும் புலிகளில் இணையவும் தொடங்கினர். இடதுசாரிகள், முற்போக்காளர்கள், ஆன்மீகவாதிகள், தேசியவாதிகள், கடும் தேசியவாதிகள், ஜனநாயகவிரும்பிகள், மனிதநேயிகள், பெண்விடுதலையாளர்கள், ஆணாதிக்கர்கள், சாதிவெறியர்கள், சாதியத்துக்கெதிரானோர், பிரதேசவாதிகள், இயக்கப்பற்றாளர்கள், தலைமை விசுவாசிகள் எனப்பல தரப்பினர். இவ்வாறு பல வகையான அபிப்பிராயங்களைக்கொண்டிருந்தோரின் ஒருகூட்டமைப்பாக பிந்திய புலிகள் அமைப்பு இருந்தது. குறிப்பாக 1990 களுக்கு பிந்திய புலிகள். 2000 க்குப் பின்னர் இந்த நிலைமையில் மேலும் நெகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனையிறவு வெற்றிக்குப் பின்னர் இது இன்னும் விரிவடைந்தது. 2002இல் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் இந்த நெகிழ்ச்சி மேலும் அதிகரித்து, பரஸ்பரம் எதையும் பேசலாம் என்ற அளவுக்கு ‘தோற்றம்’ காட்டியது.இதற்கெல்லாம் காரணம், அவர்கள் ஒரு அரசாக வளர்ச்சியடைந்து வந்தமையே. அரசொன்றாக வளர்ச்சியடையும்பொழுது, அதனுடைய கட்டமைப்புகள், பரிபாலனங்கள் என்றெல்லாம் ஏராளம் விவகாரங்கள் முன்னே நிற்கும். இவை கடும்போக்கிற்கு அல்லது தீவிரத்தன்மைக்கு முற்று முழுதாக இடமளிக்காது. எனவே விட்டுக்கொடுப்பும் சமரசமும் தவிர்க்க முடியாதாக இருந்தன. விருப்பமில்லாது விட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், நிலை, கட்டம்.

எனவே விருப்பமில்லாத விசயங்களாக இருந்தாலும் அவற்றைக் கேட்பது, சிலவற்றைப் பொருட்படுத்தாததைப்போல விடுதல், எதையும் மறுக்காமல் கேட்டல்(காதுகொடுத்தல்), ஆனால் அதைப் பற்றிக் கவனத்தில் எடுக்காது விடுதல் (இது ஒரு வகையில் அவமானப்படுத்தல்தான்) என்ற வகையில் இதனைக் கையாண்டனர்.

ஆனால், இந்தக்காலத்தில் பல வகையான கருத்துக்களையும் ஓரளவு விவாதிக்கக்கூடிய, பேசக்கூடிய நிலை உருவானது. அப்பொழுது தடைசெய்யப்பட்டிருந்த பல விசயங்கள் தளர்வுக்குள்ளாகின. புலிகளைக்கடுமையாக விமர்சிக்கின்ற பத்திரிகைகள், புத்தகங்கள் கூட புலிகளால் நடத்தப்பட்ட அறிவு அமுது போன்ற புத்தகக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. வன்னிக்கு வரவே அஞ்சியவர்கள் புலிகளின் முகாமில் படுத்துறங்கினார்கள். அவர்களுடைய வண்டிகள், வாகனங்களில் ஏறித்திரிந்தனர்.

2002 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப்பின்னர் கிளிநொச்சிக்கு வந்திருந்த தராகி டி.சிவராம் அறிவு அமுது புத்தகக்கடையில் இருந்த புத்தகங்களைப்பார்த்துவிட்டு ஆச்சரியம் தாளமுடியாமல் சொன்னார், ‘நாங்கள் நினைத்த புலிகள் வேறு, இங்கே (வன்னியில்) இப்போதுள்ள புலிகள் வேறு’ என்று. அறிவு அமுதுவில் கால் மாக்ஸில் இருந்து பெரியார் வரையில், அல்தூசர், கிராம்சி, ழான் போல் சாத்தர், காம்யு எனச் சகலருடைய புத்தகங்களும் இருந்தன. அசோகமித்தினும் இருந்தார். சுந்தர ராமசாமியும் இருந்தார். ஷோபா சக்தியும் சக்கரவர்த்தியும் ஜெயமோகனும் இன்குலாப்பும் அறிவுமதியும் காசி. ஆனந்தனும் பா.செயப்பிரகாசமும் இருந்தனர்.

அந்தளவுக்கு தாராளவாதம் நிலவியது. இந்த தாராளவாதத்தின் எல்லை எந்தளவு? அதனுடைய வகை எப்படியானது? என்பதெல்லாவற்றுக்கும் சரியான பதிலோ முறையான விளக்கமோ இல்லை. ஆனால், நீளக்கயிற்றில் உலாத்தக் கூடிய அளவுக்கு உலாத்தலாம். இதனால்தான் சிவராம் போன்றோர் காந்த விசையால் கவரப்பட்டவர்கள் போல பிறகெல்லாம் வன்னிக்குத் தொடர்ச்சியாகப் படையெடுத்தனர். பின்னாட்களில் கொழும்பிலிருந்ததை விட வடக்கிலும் கிழக்கிலும் சிவராம் நின்ற நாட்களே அதிகம். அதிலும் கிளிநொச்சியிலும் படுவான்கரையிலும் சிவராம் சைக்கிளில் அல்லது மோட்டார் சைக்கிளில் தனிக்காட்டு ராஜா போல் உலாத்தித்திரிந்தார். சிவராம் மட்டுமல்ல, அவரைப் போலப் பலருக்கும் வன்னி இனித்தது. ஆனால், வன்னியிலிருந்தவர்களுக்கு….. இதையெல்லாம் பார்க்கச் சிரிப்புத்தான் வந்தது.

 

சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தன், ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம் போன்றோர் கிளிநொச்சிக்கு துணிந்துவரக்கூடிய தெம்பு வந்ததற்கும் காரணம் சிவராம் போன்றோர் வன்னிவாசிகளைப்போல் கிளிநொச்சியில் சுற்றித்திரியக்கூடியதாக இருந்ததே.புலிகளின் இந்த நெகிழ்ச்சி அல்லது இந்தத் தந்திரோபாயம் பலரையும் வளைத்துப்போட வாய்த்தது. அதேவேளை புலிகளிடம் ஏற்பட்டுள்ள குணமாற்றம் அல்லது பண்பு மாற்றம் இது என்று பலராலும் கருதப்பட்டது. புலிகள் ஜனநாயகத்தளத்தை நோக்கி மெல்ல மெல்ல விரிவடைந்து வருகின்றார்கள் என்ற அபிப்பிராயங்கள் உருவாகின. சரித்திரத்திலேயே எதிர்பாராத பல சம்பவங்கள் இந்தக்காலத்தில் நடந்தன. ஒருபோதுமே பிரபாகரன் தான் சந்திக்க விரும்பாத மனிதர்களையெல்லாம் சந்தித்தார். அதைப்போல தாங்கள் ஒருபோதுமே பிரபாகரனைச் சந்திக்கமாட்டோம் என்றிருந்தோர் பிரபாகரனுடன் கைகுலுக்கினார்கள்@ விருந்துண்டார்கள். பலதையும் பத்தையும் பேசினார்கள். சிலர் பிரபாகரனுக்கு ஆலோசனைகளைக்(?) கூட வழங்கினார்கள். இதெல்லாம் உள்ளேயும் வெளியேயும் பல அதிர்வலைகளை – புரியாத புதிர்களை உருவாக்கின.

இத்தகையதொரு நிலையில் இயக்கம் பற்றி –  அதனுடைய போராட்ட நடைமுறை பற்றி – போராளிகள் பற்றி – கட்டமைப்புக்கள் பற்றி – இயக்கத்தின் அரசியல் பற்றி – தலைமையைப் பற்றி – பொறுப்பாளர்கள், தளபதிகளைப் பற்றி சர்வதேச அரசியற்ச+ழல் பற்றியெல்லாம் பல மட்டங்களிலும் விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் பகிரப்பட்டன. கடுந்தொனியில் இல்லையென்றபோதும் பரவலாக இந்த விமர்சனங்கள் இருந்தன. அபிப்பிராயங்களைப் பகிரும் போக்கு மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து வந்தது.

இது அடுத்த கட்ட வளர்ச்சியடைந்து, பொது மேடைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கூட மெல்லிய அளவில் மாற்று அபிப்பிராயங்களைப் பகிரக்கூடிய நிலைக்குச் சென்றது. ஆனால், இந்த நிலையை இயக்க விசுவாசிகளாக இருந்தோராலும் தலைமைப்பீடத்துக்கு நெருக்கமாக தங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்போராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இயக்கத்தின் இந்த மாதிரியான நெகழ்ச்சியை எதிர்த்தார்கள். பதிலாக பேசப்படும் விசயங்களைத் திரிப்பதிலும் அதற்கெதிராகத் தலைமைப்பீடம் நிலைப்பாடு எடுக்கும் விதமாகவும் நடந்து கொண்டார்கள். புலிகள் இயக்கத்தின் மரபார்ந்த நிலைப்பாடான கடும்பிடியைத் தளர விடுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அது இயக்கத்தையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும் என்று நம்பினார்கள். கண்ட விசயங்களையும் கண்டநிண்ட தரப்பினரையும் சேர்த்தால் அது எல்லாவற்றையும் பாழடிக்கும் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

இதேவேளை, முந்திய காலம் வேறு. அதனுடைய நிலைமைகளும் தேவைகளும் வேறு. இன்றைய நிலைமையும் தேவைகளும் பிரச்சினைகளும் வேறு. ஆகவே கால நிலவரங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம் என்ற அபிப்பிராயங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டன.

எல்லாத் தரப்பையும் சமாளித்து, ஒரு சமனிலையைப் பேண விரும்பினார் பிரபாகரன். தனித்தமிழ் பேணப்பட வேண்டும் என்று சொல்லும் தமிழேந்தியையும் அவர் அங்கீகரித்தார். தனித்தமிழில் எல்லாவற்றையும் எழுத முடியாது என்று சொன்ன புதுவை இரத்தினதுரையையும் ஏற்றுக்கொண்டார். புதிய விருந்தாளிகளாக வந்திருக்கும் அரசியல்வாதிகளையும் ஊடகவியலாளர்களையும் நம்ப முடியாது என்று ஒரு தரப்புச் சொல்ல, அவர்களை அரவணைத்து, அரசியல், ஊடகப் பலத்தைப் பெருக்க வேண்டும் என்று இன்னொரு தரப்புச் சொன்னது. இரண்டின் அபிப்பிராயங்களையும் ஏற்று, இரண்டு தரப்புக்கும் சமாதானம் சொல்லி புதிய விருந்தாளிகளைக் கைளாள்வோம் என்று வைத்திருந்தார். இப்படியே எல்லாவற்றையும் அனுசரித்துச் செல்லவேண்டிய ஒரு நிலையை மெல்ல மெல்ல புலிகள் ஏற்றுக்கொண்டிருந்தபோதே நான்காம் கட்ட யுத்தம் கருக்கொண்டது.

ரணிலுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர முடியாத ஒரு கட்டத்துக்குச் சென்றன. ரணில் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியிருந்தபோது அவருடைய அரசாங்கத்தைக் கலைத்தார் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க.

தன்னுடைய அதிகாரத்தைப் பிரயோகித்து, ரணில் அரசாங்கத்தில் இருந்து சில முக்கிய அமைச்சுகளைப் பறித்து, அந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளினார்சந்திரிகா குமாரதுங்க.  பிறகு புலிகளுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை செல்லுபடியற்றது என்றார். இதையெல்லாம் எதிர்த்து தன்னை நிறுவ முடியாத நிலையில் அன்று பலவீனமான நிலையில் இருந்தார் ரணில்.

எனவே அவரை இலகுவாகத் தள்ளிவிழுத்தி விட்டு, ஆட்சியைப் பறித்தார் சந்திரிகா. அந்தநேரம் ரணிலைக் காப்பாற்றுவதற்கு புலிகள் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கொழும்பிலும் யாரும் இருக்கவில்லை. இந்தியாவோ, அமெரிக்கா உள்ளடங்கிய மேற்குலகோ முயற்சிக்கவில்லை. திரைமறைவில் சில முயற்சிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், பகிரங்கத்தளத்தில் ரணில் தனித்து விடப்பட்டார். தனித்து விடப்பட்ட ரணில் தோற்றுப்போனார்.  இதனால், நிலைமைகள் மேலும் சிக்கலடைந்தன.

 

இதேவேளை, இந்த நிலைமையானது, பெரும் நெருக்கடியை எதிர்காலத்தில் உருவாக்கப்போகிறது என அடித்துக்கூறினார் மு. திருநாவுக்கரசு. கொழும்பில் பலவீனமான ஒரு தலைமை இருக்கும்போதே தமிழர்கள் தமக்குச் சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது அவருடைய அபிப்பிராயம்.  இதை அவர் பலரிடமும் விளக்கினார். எந்தத்தரப்பில் இருந்தாவது, எந்த வழியின் ஊடாகவும் உரிய தரப்பிடம் சேதி போகட்டும் என்பதே அவருடைய நோக்கம்.

 

மாறியுள்ள உலக ஒழுங்கில் ஜனநாயகத்தை உள்ளடக்கமாகக் கொள்ளாத எத்தகைய அரசியற் போராட்டங்களும் நல்விளைவைத் தராது என்பது அவருடைய கருத்து. முறையான ராசதந்திரமும் வெளியுறவுக் கொள்கையும் அவசியம் என்றார். உள்நாட்டில் ஜனநாயக ரீதியில் மக்களையும் சமூகங்களையும் வளர்த்தெடுக்கும்போதே மக்கள் போராடும் திறனையும் துணிவையும் நியாயத்தையும் தார்மீக பலத்தையும் பெறுவர் என்று சொன்னார். இந்தக் கருத்துகளை மையப்படுத்தி அவர் பலருடனும் உரையாடல்களைச் செய்தார். எழுதினார். சமஷ்டியா தனிநாடா, ஒற்றை மைய உலகில் போரும் சமாதானமும் போன்ற புத்தகங்கள் இந்த அடிப்படைகளை வலியுறுத்தி அல்லது மையப்படுத்தி அவரால் எழுதப்பட்டன. கருத்தரங்கங்களையும் ஏற்பாடு செய்து அதிலே பேசினார்.

 

000000

(தொடரும்………..)

 

37 Comments

  1. aathirai aathi says:

    திரு.கருணாகரன் உங்களை சந்திக்க வேண்டும் கட்டாயம் சந்திப்பேன் வெகு விரைவில் 

  2. வாழ்த்துக்கள் கருணாகரன். புலிகள் தரப்பின் உள்வீட்டுச் சமாச்சாரங்கள் பெரிதாக எனக்குத் தெரியாது ஆனால் சாடைமாடையாக வந்தடைந்தவைகளைத் தொகுத்து வைத்திருக்கிறேன்.உங்கள் எழுத்து மிகத் தெளிவாக பலதையும் அலசிச் செல்சதையும் யதார்த்தத்தின் மீதே புனைவுகளற்றுப் பயணிக்கவும் முயற்சிக்கும் தன்மைக்காகப் பாராட்டுக்கள். முக்கியமான சிலவிடயங்கள் குறித்து தங்கள் நியாயமான கருத்துக்களை அறிய ஆவல். 01. கிழக்கில்முஸ்லிம்களுக்கெதிரான யுத்தகாலத்துப் புலிகளின் நிலைப்பாடு 02.வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் பின்னரானவையும், 03.ஹகீம்- பிரபா ஒப்பந்தம், 04.யுத்த நிறுத்த காலத்தில் முஸ்லிம்கள் பற்றியதான புலிகளின் நிலைப்பாடுகள் 05. பிராப-கருணா பிளவு 06.வெருகல்படுகொலை 07.கருணா அணி மீதான தாக்குதல்கள்(சரணடைந்தவர்களைக் கையாண்ட விதம்-கொல்லப்பட்டது எரிக்கப்பட்டது உட்பட) 08.முதூர்2006 கைப்பற்றப்பட்டமை 09.புலிகள் 2005 ஜனாபதித் தேர்தலைப் பிகஷ்கரித்தமை 10.கிழக்கு மாகாணத்தை இழந்தது 11. கிழக்கு மாகாண சபைத் தேரிதல் 12.கட்டம் கட்டமாகப் புலிகள் பின்வாங்கியது, 13. இடையே நடந்த கருத்து மோதல்கள் 14.மக்கள் நிலைப்பாடு 15.கடைசி யுத்தம் நிறைவு வரை 16.கே.பி மற்றும் அவரது மகன் 17.முரண்பட்டுத் தளர்வடைந்த புலிகளின் சர்தேசக் கட்டமைப்பு
    இங்கு அதிக தாகவல்களையும் தரவுகளையும் நிகழ்வுகளையும் பதிவுகளையும் இருபக்க இராணுவச் செயற்பாடுகளையும் திரட்டி விட்டேன். பல நேரடி அனுபவங்கள், இப்போதுள்ள பிரச்சினை அவற்றை எழுத்த தொடங்கும் போது சில முரண்பட்டு இடித்துக் கொண்டு இருக்கின்றன. பொய்யையும் போலியையும் சுவாரஷ்யமாக எழுதிவிட்டுப் புதினம் பார்க்க நான் தயாரில்லை. வரலாறு பற்றிய அதைச் சரியாகச் செய்ய வேண்டுமெனறு நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்களில் நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது, நீங்கள் அளிக்கும் சில விடயங்களில்அடிப்படையில் எனது நிலைப்பாடுகளைச் சரி செய்து கொள்ளலாம் என்று கருதுகின்றேன். கட்டாயம் மின்னஞ்சலில் தொடர்புகளைப் பேணவும் என அன்பாய் வேண்டுகிறேன்.

    முஸ்டீன்

Post a Comment