Home » இதழ் 09 » * ரிஷானா,சஊதி மன்னராட்சி,அமெரிக்கா !எம்-பௌசர்

 

* ரிஷானா,சஊதி மன்னராட்சி,அமெரிக்கா !எம்-பௌசர்

 


ரிஷானா, எமது அன்புச் சகோதரியே! உனது சிரசை குருட்டு சஊதி அரசு கொய்த போது உலகின் நாலா திசைகளிலிருந்தும் மனித உயிரை நேசித்து மதிக்கும், அராஜகத்திற்கு எதிரான நெஞ்சங்கள் உனது முடிவையிட்டு கண்ணீர் சிந்தின, கடுங்கோபங்கொண்டன. இனம், மதம், தேசம், மொழி, இன்னொரன்ன வேறுபாடுகளைக் கடந்து உனக்கு விதிக்கப்பட்ட அந்த கொடூரமிகு மகாபாதகத்தினை நினைத்து வருந்தின.

ஒருசிலர், ஒரு சில அமைப்புகள் தமது நலன்களுக்காகவும் தாம் புரிந்து வைத்துள்ள தவறான கற்பிதத்திற்காகவும் உனது கொலையை நியாயப்படுத்தினர். எழுதினர், பேசினர் .அவர்களிடம் எஞ்சியிருந்தவை மதம் வலியுறுத்தும் தீர்ப்பு இது என்பதேயாகும். உண்மையில் இந்தக் கொலையை ஷரிஆவின் அடிப்படையில் கூட, ஆராயும் போது, விவாதிக்கும் போது உனக்கு இழைக்கப்பட்டது மிகப்பெரும் அநியாயம் என்பதை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ஏற்றுக் கொள்வர்.

சஊதி அரசின் சட்டங்கள் தொடர்பாகவும், அதற்கும் ஷரிஆ சட்டத்திற்குமுள்ள மிகப்பெரிய தூரத்தையும், இந்த மாயமானையும் அம்பலப்படுத்தவும் தெரிந்து கொள்ளவும் தெளிவுபெறவும், இந்த உலக வெளியில் குறிப்பாக நமது தமிழ் மொழிச் சூழலில் உனது மரணம் வழியொன்றை ஏற்படுத்திவிட்டுள்ளது.

இஸ்லாம், உலக அரசியல் கலாசார,பண்பாட்டு   நெருக்கடிகள் , உலகளவிய அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு  போன்றவற்றினை பார்க்கும் பார்வையில் போலி ஆசாடபூதிகள், சஊதி அரசின் விசுவாசம் மிக்க அதன் நலன் பேணுபவர்களுக்கும் , இது தொடர்பில்  தீர்க்கமான பார்வை கொண்டோருக்குமிடையேயான  கருத்து விவாதத்தினையும் உரையாடலையும் மட்டுமல்ல, வேறுபாட்டையும் உனது மரணமும் அதன் தாக்கமும் கிளர்த்தியுள்ளது.

0000000

 

பதினொழுவயது, வாழ்வை நுகராத வசந்தத்தின் வாசலில் ஒரு “அடிமைய் வேலைக்காரியாய்” நீ இருந்தாய். ஏழ்மையின் காரணமாய் உன் குடும்பத்தின் வயிற்றுப் பசியை போக்குவதற்காகவும், உங்களுக்கானதொரு பாதுகாப்பான குடிமனையை ஆக்கிக் கொள்வதற்காகவும் நீ அடிமையாய் அந்த கொடுங்கோலர்கள் ஆட்சிசெய்யும்; சஊதி மண்ணுக்கு எந்த வழியுமில்லாமல் சென்றாய். உன்னைப் போய் கொன்றனர் அந்தப்பாவிகள்…….

அந்த பாவிகளையும் அவர்களது அரசு அதிகாரத்தின் அனைத்து கேடுகளையும், கொடுமைகளையும், சீர்கேடுகளையும் “ஷரிஆ” என்ற விடயத்தினால் மூடிமறைத்து ,நியாயமற்ற, கொடுங்கோன்மையான ஏன் உலகளவில் இஸ்லாமிய அரசியலுக்கு, அதன் பொருளாதார சமூக இருப்புக்கு மிகப்பெரும் ஊறாகவும் துரோகமாகவும் செயற்பட்டு வரும் சஊதி மன்னராட்சியின் முகத்தை இஸ்லாத்தின் பெயரால் நியாயப்படுத்தும் இவர்களிடம் கேட்பதற்கு எவ்வளவோ கேள்விகள் எம்மிடம் உள்ளன.

உனது மரணம் முடிந்து விட்டது, அதனை தடுக்கமுடியாத கையாலாகாதவர்களாக நாம் நிராயுதபாணியாக இருந்தோம். ஆனாலும் உனது மரணத்தை நியாயப்படுத்துபவர்களை நோக்கி, அவர்களுடன் வாதம் புரியவும், இஸ்லாம் தொடக்கம், சமகால உலகளவிய அரசியல் பொருளாதாரம், பண்பாடு வரைக்குமான நிகழ்வுகளை முன் வைத்து பேச எம்மிடம் நிறையவே விடயங்கள் உள்ளன. இவற்றினை இவர்களை நோக்கி எம்மால் கேட்காமல் “கள்ள மௌனம்” காக்க முடியாது என்பது முக்கியமானதாகும்.

ஷரிஆ சட்டம், இஸ்லாமிய ஆட்சிமுறை பற்றி கதைப்பதற்கும் அதில் தன்னை மறைத்துக் கொள்வதற்கும் உலக முஸ்லிம்களுக்கு போலித்தோற்றம் ஒன்றை காட்டுவதற்கும் சஊதி மன்னராட்சிக்கு எந்த அருகதையும் இல்லை. மிக நீண்ட காலமாகவே இந்த மன்னராட்சி ஆளும்வர்க்கம், உலகளவில் ஒடுக்கப்படுகின்ற இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல,ஒடுக்கப்படுகின்ற அனைத்து மக்களுக்கு எதிராகவும், அவர்களை ஒடுக்குவதற்கும் பக்கபலமாக இருந்து வருகிறது. இஸ்லாத்திற்கு எதிரான சக்தியான அமெரிக்காவுடனும் அதன் நேச நாடுகளுடனும்  சஊதி மன்னராட்சி கூட்டணி அமைத்து குடும்பம் நடாத்தி வருவது இன்று நேற்று நடந்தது அல்ல. அமெரிக்க அரசினதும் சஊதி மன்னராட்சி ஆளும் குடும்பத்தினதும் நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்ணி பினைந்தவை, பிரிக்க முடியாதவை என்பதை சர்வதேச அரசியலைப் புரிந்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை.

சஊதி மன்னராட்சிக்கும் ஒரு எசமான் இருக்கிறது. அது “எல்லாம் வல்ல இறைவன்” அல்ல, அமெரிக்க அரசுதான் என்பது வெள்ளிடைமலை. மதத்தின் பெயராலும் “ஷரிஆ”சட்டவாக்கத்தின் பெயராலும் மக்களுக்கு பூச்சாண்டி காட்டுபவர்கள் இந்த உண்மையை அறியாதவர்கள் அல்ல. அல்குர்ஆனுக்கு பொழிப்புரை சொல்லும் இவர்கள், இன்றைய உலக அரசியல் நிலையையும், இஸ்லாத்திற்கெதிரான, உலகளவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான, ஒடுக்கப்படுகின்ற அனைத்து மக்களுக்கும் எதிரான இந்த உண்மைகளை அறியாமல்  இருக்கிறார்கள் என சொல்வதற்கு நம்மால் முடியவில்லை.

தமது நலன்களுக்கு விசுவாசமாய், எசமான விசுவாசத்தின் காரணமாய் ,சஊதியை மதத்தின் பெயராலும் ,இஸ்லாமிய ஆட்சி என்கிற பெயராலும் அதற்கு கிரீடம் சூட்ட முற்படுகின்றனர். சஊதி அரசு ஒரு ‘கிலாபத்’ அன்று. அங்கு நடைபெறுவது ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு பிற்போக்குவாத, உலக ஆக்கிரமிப்பிற்கும் கபளீகரத்திற்கும் சுரண்டலுக்கும் துணைபோகின்ற மன்னராட்சி. செல்வமும் அதிகாரமும் ஆணவமும் கர்வமும் குடிகொண்ட உலக முஸ்லிம்களின் குருதியை மத்தியகிழக்கு தொடக்கம் ஆபிரிக்கா, ஆசியாவரை ஓட்டவைக்கும் அமெரிக்க அரசின் ஒரு கைப்பாவை கட்டாட்சி அரசு அது.

நடந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு போர்கள், பொருளாதார மேலாதிக்கம், எண்ணெய்க்கான யுத்தம், உலக நெருக்கடி, இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம் என்கிற அனைத்து வகை விளைவுகளுக்கும் அமெரிக்காதான் முன்னணிக் காரணம் – இந்த அமெரிக்காவிற்கும் சஊதி மன்னராட்சி குடும்பத்திற்குமிடையே இருக்கும் உறவை தெரியாது என பாசாங்கு செய்பவர்களும், இஸ்லாத்தினை வெறுமனே ஒரு சடங்கு ஆசாரமான மதமாக நிலைநிறுத்த துடிப்பவர்களால் மட்டுமே, ரிஷானாவின் கொலையுடன் மட்டுமல்ல, உலகளவில் குருதியோட்டப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களின், முஸ்லிம் அல்லாத ஒடுக்கப்படுகிற மக்களின் கொலைகளை கண்டும் காணாமல், சஊதி  அரசை நியாயப்படுத்த முடியும்.

பெற்றோலியம் அந்த அரேபிய மண்ணுக்கு கிடைத்த வற்றாத செல்வம் என சொல்பவர்கள் உண்டு. அந்த செல்வத்தினை முன்வைத்தே அமெரிக்க நேரடி, மறைமுக ஆக்கிரமிப்புகளும் கட்டுப்படுத்தல்களும் தொடங்கி, அமெரிக்காவின் தளம் சஊதியில் காலூண்றி நீண்டகாலமாயிற்று. உலகில், அமெரிக்க ஆளும் குடும்பத்தின் மிக நெருங்கிய கூட்டாளி இஸ்ரேல் என்பது ஒரு வெளிப்படையான உண்மைதான் .அதேபோல் வெளிப்படையாகவும்” மிகமிக இரகசியமாகவும்” இஸ்ரேலுக்கு சமமான ஒரு உறவை அமெரிக்கா ஆளும் குடும்பம் சஊதி மன்னராட்சியுடன் வைத்துள்ளது. இரண்டு ஆளும் குடும்பத்தின் உறவும் நலனும் முரண்படுவதற்கான வாய்ப்பே  இல்லை எனும் அளவிற்கு இறுக்கமான கட்டு அது. இஸ்ரேல் கூட தனது நிகழ்ச்சி நிரலை முன்னிருத்தி சில வேளை (இறைமையுள்ள ஒரு நாடு என்கிற வகையில்) அமெரிக்காவுடன் முரண்படும் தருணங்கள் வந்துள்ளன, ஆனால் இந்த அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான சஊதி மன்னராட்சி, அமெரிக்காவின் கிளிப்பிள்ளையாகவே இருக்கும். ஏனெனில் அந்த அரசிற்கு எந்த தார்மீக நெறிகளும் இல்லை. ஓடுக்கப்படுகின்ற மக்கள் தொடர்பில் எந்த அக்கறையும் இருந்ததில்லை. முழு உலகையும், முழுமத்திய கிழக்கையும் நீ ஆக்கிரமித்து அழித்தொழித்தாலும் சரி, என் மன்னராட்சிக்கு வேட்டு வைக்காது இருந்தால் சரி என்பதுதான் அதன் தாரக மந்திரம்.

கடந்த 60வது வருடங்களுக்கு மேலான பலஸ்தீனம் அடங்கலாக மத்தியகிழக்கு நெருக்கடி தொடக்கம், ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்க தலையீடு, ஆப்கான் யுத்தம், தலிபான் உருவாக்கம் வரை இதனை நாம் காணலாம். அமெரிக்காவின் இந்த அனைத்து ஆக்கிரமிப்பு அழிவுத்திட்டங்களுக்கும் உதவியாகவும் பின் பலமாகவும் செயற்பட்டுக் கொண்டிருப்பது சஊதி மன்னரரசே. அமெரிக்காவின் நீண்டகாலத்திட்டத்தில் எஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே.

உலகிற்கு ஜனநாயகத்தையும் மக்களாட்சியையும் மனித உரிமையையும் வாரி வழங்க அவதாரம் எடுத்திருக்கின்ற அமெரிக்கா, சஊதி மன்னராட்சியின் கொடுங்கோன்மைபற்றி மெலிதாகக் கூட விமர்சித்தது கிடையாது. இஸ்லாம்தான் அமெரிக்க ஆளும் குழுமத்தின் எதிரியே தவிர சஊதி மன்னராட்சி அன்று. அவர்கள் இஸ்லாத்துடன் இல்லை தம்முடன்தான் என்பதை வரலாற்றில் பலமுறை சஊதி ஆளும் குடும்பம் அமெரிக்காவுக்கு நிரூபித்துள்ளது.

பலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான துயரம் நீடிப்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் மட்டும் காரணமல்ல, சஊதிமன்னராட்சியும் பிரதான பங்குதாரராகும். அன்று இஸ்லாத்தைப் பாவித்து ஆப்கானில் “ரஷ்ய செங்கரடிக்கு” எதிராக? போரினை நடாத்திய அமெரிக்கா, அதே இஸ்லாத்தை ஒரு பயங்கரவாத மார்க்கமாக, சகிப்புத் தன்மையற்ற கொடுங்கோன்மை கோட்பாடாக உலகிற்கு சித்தரிக்கும் கருத்தியலையும் பிரச்சாரத்தையும் அமெரிக்காதான் உருவாக்கியது. அதன் நேச நாடுகளை துணைக்கழைத்து உலகின் அனைத்து மட்டங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவரீதியாகவும் இராஜதந்திரவழியிலும் அதனை தொடங்கியது. தொடர்ந்தும் இப்படியான சித்தரிப்பினை நடாத்தியும் வருகிறது. இந்த மிகப் பெரும் எதிரியுடன் அனைத்து வழிகளிலும் கைகோர்த்துக் கொண்டும் ,கட்டி அணைத்துக்கொண்டும், சஊதியில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது,  அங்கு ஷரிஆ சட்டத்தினை அமுல்படுத்துகிறார்கள் என சொல்லிவருவதற்கும், அதனை நியாயப்படுத்தி வருபவர்களுக்கும் ஒரு சவாலான நிலையை இந்த உண்மைகள் ஏற்படுத்தவில்லையா?( அமெரிக்க ஆளும் குழுமத்தினதும் சஊதி மன்னராட்சியினதும் உறவும் நலனும் தொடர்பான ஏராளமான ஆதாரங்கள்  உள்ளன. இவற்றினை உண்மையில் அறிந்து கொள்ளாதவர்கள் இருப்பின் அவற்றினை அறிந்து கொள்ள முடியும்)

0000000

 

நிறவெறியும், மதவெறியும், ஏகாதிபத்திய அமெரிக்க ஆதிக்கத்தின் பண்பாட்டு ஆயுதங்களாகும், இதனை அமெரிக்க ஆதிக்கம் அரசியல், மத, பொருளாதார சூழலில் தேவையான  அளவில்,வடிவில் பாவித்துக் கொள்ளும். மத்திய கிழக்கிலும், ஆப்கானிலும் நேரடியான இராணுவ போரை நடாத்திவரும் அமெரிக்கா, இப்போரை நடாத்த சாத்தியப்படாத பிரதேசங்களில் , உள்நாட்டு யுத்தங்களையும், முரண்பாடுகளையும்,தீர்க்கப்படமுடியாத மோதல்களையும் உருவாக்குகிறது. தென்னாசிய நாடுகளான இந்தியா,பாகிஸ்தான், ,பர்மா, ,இலங்கை போன்ற நாடுகளில் மத முரண்களை அதிகரிப்பதிலும்,நிலமையை சிக்கலாக்குவதிலும் அமெரிக்காவின் பாத்திரம் விசேட கவனிப்புக்குரியது.

அமெரிக்கா எப்படி சஊதி  மன்னராட்சியின் துணையுடன்  பின்லாடனையும்,தலிபான்களையும் உருவாக்கியதோ அதேபோல்தான், சஊதி மன்னராட்சியின் துணையுடன் மேற்கூறப்பட்ட நாடுகளில் மதத்தின் பெயரால் இஸ்லாமிய மத கடுங்கோட்பாட்டு தீவிரவாத முகத்தினை விதைத்து வருகிறது. அமெரிக்காவும் பிரிட்டனும்தான் தலிபான்களை பயிற்றுவிப்பதற்கான அனைத்து நிதி வளங்களையும் வாரி வழங்கியது. அதே போன்றுதான் சஊதி மன்னராட்சியின் ஊடாக மதத்தின் பேரால் மத சகிப்புதன்மையற்ற போக்கினை அகலப்படுத்துவதற்கு  நிதி வழங்கப்படுகிறது.இதன் விளைவாக உலகிற்கு அமெரிக்கா காட்டமுற்படுவதும் ,அது அடைய நினைக்கும் இலக்கும் மிகத் தெளிவானது.

அமெரிக்கா உலகிற்கு காட்ட நினைக்கும் அதே முகத்தினை, இஸ்லாத்தின் பெயரால் ஒரு சில அமைப்புகள்  காட்டவெளிக்கிடுவது அமெரிக்காவின் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கிறது. மிக கிட்டிய உதாரணமாக ரிஷானாவின் மரணத்திலும்  இதுவே நடந்தது .இந்தியா, இலங்கையில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கிளம்பி  வருகின்ற நெருக்கடி நிலையை மோசமாக்குவதற்கு இந்தக் காரணிகள் பின்பலமாக மாறி விடக் கூடாது.

00000

 

 

 

 

45 Comments

  1. அருமையான பதிவு. ஆனால், தூங்கிக் கொண்டு இருப்பதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா என்பது ஐயமே. இன்று வரை, மனசாட்சியையும், இஸ்லாத்தின் அடிப்படை விழுமியமான “நீதிப் பண்பினை”யும் கிடப்பில் போட்டுவிட்டு, சவூதியின் எலும்புத் துண்டுகளுக்காக ரிஸானாவின் மரணத்தை அல்ல, படுகொலையை நியாயப்படுத்தும் ஆலிம்சாக்களும், அதற்கு ஜால்ரா போடும் ஒரு கூட்டமும் இருந்துவருவது மிக வேதனையானது மட்டுமல்ல, வெட்கக்கேடானதும் கூட!

  2. பல அரை லூசுகள் மிம்பர்களை ஆக்கிரமித்திருக்கின்றன அதனால் இதையெல்லாம் தாங்கித்தானாக வேண்டும். ரிசானா உயிாடு இருக்கும் போது எதுவுமே செய்யாதவர்கள் எல்லாம் இப்போது குதியாட்டம் போடுவதை கோபத்துடன் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ரிசானைாவைக் கொன்ற பின்னர் அவளின் குடிசையை நோக்கிப் படையெடுத்த கூட்டம் இப்போது ஓய்வெடுக்கும் என்று நினைக்கிறேன். அறிக்கை விட்டவர்கள் அமைதியடைந்துவிட்டார்கள். ரிசானாவைச் சவுமி கொன்றதோடு பலருக்கு ஒரு பிரச்சினை முடிந்தவிட்டதாய் பெருமூச்சு இதெல்லாம் தான்டி ரிசானாவினை சவுதி கொலை செய்து ஒரு வாரத்தில் அந்தச் சோகம் எல்லோரையும் வதைத்துக் கொண்டிருக்கும் போது அதே ஊரிலிருந்து இன்னும் இரண்டு 19-20 வயது ரிசானாக்கள் சவுதி நோக்கிப் புறப்பட்டதைக் கண்டு வெட்கித்து நின்றேன். கொல்லப்பட்ட ரிசானாவுக்காக வடித்த கண்ணீரின் ஈரம் காய முன்னரே ரிசானாவின் தெருவுக்கு இரண்டு தெருத் தள்ளி இந்தக் கொடுமை ஆக ஒரு ரிசானாவோடு எதுவுமே முடிவுக்கு லரவில்லை. இன்னும் பல்பக்கப் பார்வைகளை நோக்கி நமது சிந்தனையைத் திருப்புவதோடு அடிமை சேவகத்திற்காக நமது தளிர்களை அரபிகளுக்குத் தாரைவார்ப்பதைத் தடுக்க என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்பதையும் கவனத்தில் கொணட்டு காரியமாற்ற வேண்டிய தருனம் இது

    முஸடீன்

Post a Comment