Home » - அன்னலட்சுமி பஞ்சநாதன் - » *கொலம்பஸின் வரைபடம் – சில குறிப்புகள்.- அன்னலட்சுமி பஞ்சநாதன் –

 

*கொலம்பஸின் வரைபடம் – சில குறிப்புகள்.- அன்னலட்சுமி பஞ்சநாதன் –

 

 (விரைவில் வெளிவரவுள்ள  யோ.கர்ணனின் “கொலம்பஸின் வரைபடம் “எனும் நூல் குறித்த பதிவு இது )

கொலம்பஸின் வரைபடம் தந்த கர்ணன் 30 வருட கால  யுத்த சுழிக்குள்ளிருந்து முகிழ்த்தெழுந்த ஒரு எழுத்தாளன்.

கர்ணனுடைய எழுத்து யுத்தத்தின் சாட்சியாக மட்டுமல்லாது யுத்தம் குறித்த எமது  கற்பனைகளை  உடைத்து   நிஜத்தை  வெளிப்படுத்திய  எழுத்துக்கள் என்பதில் முக்கியம் பெறுகிறது.

இன விடுதலைக்கான  யுத்தம் பதின்ம வயது இளைஞரை எப்படி தன்பால் ஈர்த்துக்கொண்டது , அதன் பின்னர் அவர்கள் எவ்வாறான மன உளைச்சல்களுக்கு ஆளாகினர் இந்த நிலைமையில் சமூகம் அவர்களை எப்படி எதிர் கொண்டது – அதேவேளை சமூகத்தினை போராளிகள் எப்படி எதிர்கொண்டார்கள் போன்ற சூட்சுமமான பல விடயங்கள் கர்ணனின் எழுத்துக்களில் விரவி கிடக்கின்றன.

இவரது எழுத்துக்களில் பொய் பிதற்றல்கள் இல்லை பக்க சாய்வு இல்லை திட்டமிட்ட கதை சோடிப்பு இல்லை. மனிதாயூத உணர்வை  மட்டுமே காண முடிகிறது  அந்தவகையில் கர்ணன் ஈழ மண்ணின் நேர்மைமிக்க ஒரு  யுத்த சாட்சி என்பதில் எவ்வித  சந்தேகமும் இல்லை.

மொழியின் பெயராலும்  இனத்தின் பெயராலும் போராளிகளாக – மக்களாக எத்துணை  கொடூரங்களை எமது மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்  என்பதனை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் கர்ணனின் எழுத்துக்கள்  யுத்தம குறித்த  கற்பிதங்களிலிருந்து எம்மை நிஜவாழ்வுக்கு  மீட்டெடுக்க முனைகிறது.அதனால் தான் கர்ணனின் எழுத்து வலிமை மிக்க எழுத்தாகிறது.

 

அவருடைய  எழுத்தில் ஹாஸ்யமும் விமர்சன  பாங்கும் விரவிக்கிடப்பதுடன் ,வடமராட்சி மொழி நடையும்  தான் கண்டதை அனுபவித்ததை எந்த வித சலனமும் இன்றி உள்ளதை உள்ளபடி எளிய நடையில்  வெளிப்படுத்தும் பாணியும்  வியக்கவைக்கிறது.

இவரது எழுத்துக்களில் இழையோடும் துயரமும் ஹாஸ்யமும் வாழ அவாவுற்ற ஒரு இளைஞனின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கிறது.

 

கொலம்பஸின் வரைபடம் குறு நாவல் வடிவத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு இலக்கிய வடிவம் .கொலம்பஸின் வரைபடத்தில் கிறிஸ்தவ மொழி ஆளுகை நிறைய வருகிறது பைபிளில் இருந்து சாலமோனின் பாடல் வரிகளும் ஏனைய பைபிள் குறிப்புக்களும் கச்சிதமாக ஆங்காங்கே எடுத்தாளப்படுகின்றன.துயரங்களுக்கு வடிகாலாக கிறிஸ்தவ  குறிப்புகள் இடம்பெறுவது புதியதொரு உத்தியாக கர்ணனால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பைபிளில் வருகின்ற  சம்பவங்களை யுத்தத்தினை எதிர்கொண்ட மக்களது  பாடுகளோடு பொருத்தி பார்க்கிறார் கர்ணன் கவிஞர் சண்முகம் சிவலிங்கம்,புதுமைப்பித்தன் போன்றோர் தமக்கு பரிச்சியமான பழந்தமிழ் இலக்கியங்களை  எடுத்தாண்டது  போல..

மத இலக்கியங்கள் எழுத்தாளர்களில் பாதிப்பு செலுத்துவது இயற்கையாயினும் யுத்த வேள்வியில் சிக்குண்ட மக்களின் மன அவசத்தை வெளிப்படுத்த கர்ணன் பைபிளிலிருந்து வார்த்தைகளை எடுத்தாளும் விதம் பெறுமதி வாய்ந்ததாக இருக்கிறது.
உதாரணமாக யுத்த சூழலில் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பாக கரைசேர விழையும்  மக்களின் மன உணர்வை பிரதி பலிக்கிறது கீழ் வரும் சலோமொனின் பாடல் வரிகள்.

 

 

//கடற்பயணம் செய்யும் நோக்குடன் 

கொந்தளிக்கும் அலை கடலைக் கடக்கவிருக்கும் ஒருவர் 

தம்மைத் தாங்கிச் செல்லும் மரக்கலத்தைவிட 

எளிதில் உடைபடும் மரக்கட்டையிடம் மன்றாடுகிறார். 

…. 

நோக்கம் அந்த மரக்கலத்தை கட்டத் திட்டமிட்டது. 

ஞானம் கைவினைஞராகச் செயற்பட்டு அதைக் கட்டி முடித்தது. 

ஆனால் தந்தையே உமது பாதுகாப்பு அதை இயக்கி வருகிறது. 

ஏனெனில் கடலில் அதற்கு ஒரு வழி அமைத்தீர். 

அலைகள் நடுவே பாதுகாப்பான பாதை வகுத்தீர். 

இவ்வாறு எல்லா இடர்களிலுமிருந்தும்

நீர் காப்பாற்ற முடியும் எனக் காட்டினீர். 

அதனால் திறமையற்றோர் கூட கடலில் பயணம் செய்ய முடியும்.

உமது ஞானத்தின் செயல்கள் பயனற்றவை ஆகக்கூடா என்பது உமது திருவுளம். எனவே 

மனிதர்கள் மிகச்சிறிய மரக்கட்டையிடம் 

தங்கள் உயிர்களையே ஒப்படைத்து, கொந்தளிக்கும் கடலில்

அதை தெப்பமாகச் செலுத்தி, பாதுகாப்புடன் கரை சேர்கிறார்கள்.

ஏனெனில் தொடக்க காலத்தில்க் கூட, …….. உலகின் நம்பிக்கை 

ஒரு தெப்பத்தில் புகலிடம் கண்டது.  

உமது கை வழிகாட்ட அந்த நம்பிக்கை புதிய தலைமுறைக்கு வித்திட்டது.       

(சாலமோனின் பாடல்கள்) //

 

அடுத்து கொலம்பஸின் வரை படத்தில் கர்ணனின் கவித்துவ வரிகள் சில…..

//தலைப்பிள்ளைகளைத் தத்துக் கொடுக்க விரும்பாதவர்கள் இராச்சியத்திற்கு விரோதமானவர்களாக மாறினார்கள். வாக்களிக்கப்பட்ட பூமி பற்றிய கனவுகள் எல்லோரிடமும் இருந்ததுதான். அந்த நாளின் அண்மிப்புப் பற்றிய ஆரூடங்களுமிருந்தன. ஆனால் தங்கள் கருவின் கனிகளை எரித்துப் பலியிட வேண்டுமென்றதும் எல்லோரும் பதகளித்தனர். இது சாதாரண குடியானவனிலிருந்து பிரதானிகள், அரசவைப்புலவர்கள் வரையிருந்தது//

 

//எல்லையோரங்களில் கடற்கரை மணளளவு எண்ணிக்கையில் எதிரிகள் திரண்டு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்பாட்டகஸ் போருக்குப் புறப்பட்டிருக்கவில்லை.  உடன்கட்டையேறும் முன்னூறு வீரர்களும் எல்லைகளிற்குச் சென்றிருக்கவில்லை. கிராமங்களில் பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம்பிள்ளைகள்தான் படைவரிசைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களது பயிற்சி முகாம்களில்த்தான் முன்னூறு வீரர்கள்திரைப்படம் காண்பிக்கப்பட்டிருந்தது. வெட்டைவெளிகளையும், காடுகளையும் மின்னலென ஊடறுத்து வந்து கொண்டிருந்த எதிரிகளை அவர்களால் எதிர் கொள்ளவே முடியாமலிருந்தது. வீழ்ந்தவர்களின் உடல்களை கிராமங்களிற்குள் கொண்டு சென்ற வாகனங்களின் பின்னாலேயே, பதிலீடுகளைத் தேடிய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. 

வாழ்க்கை பற்றிய எல்லோரது கற்பனைகளும் அர்த்தமற்றிருந்தன. அவற்றிற்குப் பொருளென்றெதுவுமின்றி காடுகளிலும், மேடுகளிலும் அடங்கிக் கொண்டிருந்தன. வாழ்வு பற்றிய கற்பனைகளும் யதார்த்தங்களும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் நின்ற நாட்களவை//

  இந்த தன்மையே கொலம்பஸின் வரை படத்தினை ஒரு நவீன ஆக்க இலக்கியமாகவல்லாது ஒரு  யுத்தகாவியமாக எம்மை  பார்க்க தூண்டுகிறது.

 

கொலம்பஸின் வரைபடம் ஈழத்து யுத்த சூழலினை எதிர்கொண்ட வர்களால் மட்டுமே எளிதில் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும் என்று  எண்ண தோன்றுகிறது.இந்த யுத்தம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது எதனால் போராளிகள்  இத்தகைய தொரு   பரிதாபமான  நிலைமைக்கு ஆளானார்கள் என்ற நுட்பத்தினை மிக துல்லியமாக வெளிப்படுத்துகிறார் கர்ணன்.

யாழ்ப்பாணத்துவாழ்வனுபவங்களின் பின்னணியில்  யுத்தம் குறித்த எம்மவர்களின் கனவு கர்ணனின் எழுத்துக்களினால்  புடமிடப்பட்டுள்ளது.

 

கர்ணனின் எழுத்துக்களை புரிந்துகொண்டவர்கள்  இனியும் யுத்தம் குறித்த கனவுலகிலும் ஈழம் குறித்த லட்சிய வாதங்களிலும் தம்மை ஈடுபடுத்த மாட்டார்கள் என்பதுடன்    இவரது  எழுத்து ஈழத்தவர்கள் இன்று  எந்த புள்ளியில் நிலை கொண்டுளளார்கள்  என்பதனை  தெளிய வைத்துள்ளது. ஈழம்  எதிர் கொண்ட யுத்த நாட்களுக்கும்  யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்திற்கும் தவிர்க்கவியலா பாலமாக திகழும்  கர்ணனின்  எழுத்துக்கள் வெறும் புனைவாக அல்லாது விஞ்ஞான பூர்வமான குறிப்பாக ஈழ மக்களுடைய வரலாறு பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான  ஒரு சான்றாதாரம் என்பதனை வலியுறுத்தி நிற்கிறது .

 

00000

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment