Home » இதழ் 10 » *பயணியின் பார்வையில் — 03 -முருகபூபதி

 

*பயணியின் பார்வையில் — 03 -முருகபூபதி

 

 

 

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!

இலங்கையில் நீண்டகாலம் மல்லிகை இதழை வெளியிடும் எழுத்தாளர் டொமினிக்ஜீவாவிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்ததை அவதானித்திருக்கின்றேன்.

இலக்கிய நண்பர்களைப்பற்றிய ஏதும் நற்செய்தி அறிந்தால் உடனே “ வாழ்க” எனச்சொல்வார். அவரிடமிருந்து எனக்கும் அந்தப்பழக்கம் தொற்றிக்கொண்டுவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்பும் தொடருகிறது. இதனை அருகிருந்து அவதானித்த  எனது மகனும் சின்ன வயதில், அவனுக்கு ஏதும் விசேடமாக வாங்கிக்கொடுத்தால் உடனே “வாழ்க” என்பான்.

அந்தவகையில் ‘வாழ்க’ என்ற சொல் மகத்தானதுதான். நானறிந்தவரையில் ‘வாழ்க தமிழ்’ ‘தமிழ் வாழ்க’ எனச்சொல்பவர்கள் தமிழர்கள்தான்.

தற்போது பல்தேசிய கலாசார நாட்டில் வாழ்வதனால்தான் அப்படி நினைக்கின்றேன். நான் வாழும் அவுஸ்திரேலியாவில்; பல்லின மக்கள் வாழ்கிறார்கள். இங்கு பாடசாலயில் பயிலும் ஒரு மாணவர் தனது இரண்டாவது மொழியாக எதனையும் தேர்வுசெய்து படிக்கலாம். இங்கு எமது தமிழ்ப்பிள்ளைகள் தாய்மொழி தமிழையும் பல்கலைக்கழக பிரவேசப்பரிட்சைக்காக படிக்கின்றார்கள். அதுபோன்று இங்கு வாழும் சிங்களப்பிள்ளைகள் சிங்களம் படிக்கிறார்கள்.

 

பல்லின பிள்ளைகள் இத்தாலி, சீன, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய மொழிகளையும் இரண்டாம் மொழியாக கற்கிறார்கள். எமது தமிழ்ப்பிள்ளைகளும் சீன. இத்தாலி, ஜப்பான் மொழிகளை பயிலுகின்றனர். அதேவேளை நமது தமிழ்சமூகத்தினர் மாத்திரம் தமிழ்வாழ்க கோஷம் எழுப்புகின்றனர்.

 

யாராவது ஆங்கிலேயர் எங்காவது பொதுநிகழ்வில் ஆங்கிலம் வாழ்க என்று சொல்கிறார்களா?

சீனர்கள் சீனமொழி வாழ்க என்கின்றனரா?

ஜப்பானியர் ஜப்பான்மொழி வாழ்க எனச்சொல்கிறார்களா?

இவ்வாறு தமிழ் தவிர்ந்த ஏனையமொழிபேசுபவர்களிடம் இந்த ‘வாழ்க’  கோஷம் இருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள்.

 

அண்மையில் தமிழ்நாட்டுக்குச்சென்றிருந்தேன். சென்னை, வேலூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் முதலான நகரங்களுக்கு பயணித்தேன். இந்த நகரங்களுக்கூடாக பயணித்தபோது பல ஊர்கள், கிராமங்கள் வந்தன. பஸ்ஸிலும் காரிலும் யன்னலோரத்தில் அமர்ந்திருந்தமையால் சுவரொட்டிகளை தரிசிக்கமுடிந்தது. தமிழகத்தின் அனைத்துக்கட்சித்தலைவர்கள், மற்றும் மாவட்டத்தலைவர்கள், வட்டத்தலைவர்கள், தொண்டர்கள் உட்பட ஏராளமானவர்கள் வண்ணமயமாக சுவரொட்டிகளில் காட்சி அளிக்கிறார்கள். காகிதத்தில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள், பெரிய பெரிய கட்அவுட்கள், பெனர்கள் மட்டுமன்றி சுவரிலேயே வண்ண நிறங்களில் வரையப்பட்ட தலைவர்களின் படங்கள் கோஷங்கள், வாழ்த்துரைகள்… ஆகா… என்னே கண்கொள்ளாக்காட்சி.

இங்கு வாழ்க அல்லது வாழ்த்து வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கிறது.

அம்மா வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம். என்ற சுலோகத்துடன் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பலதரப்பட்ட போஸ்களுடன் காட்சி தருகிறார். முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முன்பு நடித்த சில திரைப்பட போஸ்களுடன் தோன்றுகிறார்.

நாளைய முதல்வர் கேப்டன் என்ற சுவரொட்டியில் விஜயகாந்த்.

நாளைய பிரதமர் என்ற சுவரொட்டியில் ராகுல்காந்தி.

கலைஞர் கருணாநிதி, அவர் மகன் ஸ்டாலின், சமத்துவக்கட்சித்தலைவர் நடிகர் சரத்குமார், நாம் தமிழர் சீமான், ம.தி.மு.க. தலைவர் வை.கோபாலசாமி, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ், மற்றும் திருமாவளவன், நெடுமாறன், பாண்டியன், எல்லோரும் தமிழக தெருவோர சுவர்களை வண்ணமாக அலங்கரிக்கிறார்கள்.

 

தவிர சூப்பர் ஸ்டார், உலகநாயகன். இளைய தளபதி, சிவகுமாரின் புத்திரர்கள் சூரியா, கார்த்திக், தல என வர்ணிக்கப்படும் அஜித்…. எல்லோரும் சுவர்களில் நீக்கமற நிறைந்தே இருக்கிறார்கள்.

ஆண்மைக்குறைவா..? இன்றே நாடுங்கள்…. சுவரொட்டிகளுக்கும் குறைவில்லை. மரண அறிவித்தல்களுக்கும் பெரிய கட்அவுட்கள்.

நடிகர் விஜய்யின் கட்அவுட்டுக்கு முன்பு பாலாபிஷேகம் செய்தார்கள். உலகநாயகன் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் கட்அவுட்டுக்கும் பாலாபிஷேகம்.

தலைவர்களின் சிலைகளுக்கும் பஞ்சமில்லை.

 

எல்லாம் தமிழின்பெயரால் அங்கே நடக்கிறது. நீண்டகாலமாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அங்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி செனல்களில்தான் தமிழ் பற்றாக்குறை. நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும் சரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களும் சரி வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். சின்னஞ்சிறுசுகளும்தான்.

இந்த இலட்சணத்தில் வாழ்க தமிழ்.

இலங்கையில் சிங்கள திரைப்பட நடிகர்களுக்கு இதுவரையில் ரசிகர்மன்றம் அங்கு தோன்றவில்லை. அதனால் அங்கே பசுப்பால் வீணடிக்கப்படவில்லை. ஆனால் இலங்கை ஜனாதிபதியும் அவரது பரம்பரையினரின் பெனர்களுக்கும் அமைச்சர்களின் உருவம்தாங்கிய சுவரொட்டிகளுக்கும் இலங்கையிலும் குறைவில்லை.

 

வேலூரில் நடந்த கண்காட்சிக்குப்போயிருந்தேன். தமிழக அரசினல் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி என்பதனால் ‘அம்மா’ அங்கும் எங்கு திரும்பினாலும் நீக்கமற நிறைந்திருந்தார்.

இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் ஊர்சுற்றிவிட்டு திரும்பி வந்து படுக்கையில் வீழ்ந்தால் நித்திரையில் வரும் கனவுகளில் அரசியல் தலைவர்கள்தான் வருகிறார்கள். கனவுக்கன்னிகள் வருவதில்லை. இந்த நாடுகளில் விமான நிலையங்களிலும் ஜனாதிபதி அல்லது பிரதமர், அல்லது முதல்வர் படங்கள்தான் காணப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவில் சில மாநில விமானநிலையங்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் சில விமான நிலையங்களுக்கும் சென்றிருக்கின்றேன். அங்கு அந்தந்த நாடுகளின் பிரதமர்களின் படங்கள் இல்லை.

 

இச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

1977 இல் இலங்கையில் ஐக்கிய தேசியக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருகிறது. பிரதமராக அக்கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தனா பதவியில் அமருகிறார். ஒருநாள் பாராளுமன்றத்தில் அவரைக்குளிர்விப்பதற்காக ஒரு அமைச்சர், “ தற்போது எமது ஆட்சி பதவியில். ஆனால் இப்பொழுதும் அரச திணைக்களங்களில் எங்கள் பிரதமரின் படத்துடன் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் படமும் இருக்கிறது. எனவே முன்னாள் பிரதமரின் படத்தை உடனடியாக அகற்றவேண்டும். என்ற பிரேரணையை கொண்டு வருகிறேன்.” என்றார்.

உடனே ஜே.ஆர், இப்படிச்சொன்னார்,- “ வேண்டாம். அது அழகான படம் அங்கேயே இருக்கட்டும்”

அப்பொழுது பாராளுமன்ற பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த திருமதி ஜெயவர்த்தனா சிரித்துக்கொண்டிருந்தார்.

அந்தச்சம்பவத்தை ஜே.ஆரின். பெருந்தன்மை எனச்சொன்னவர்களை அறிவேன். அதே ஜே.ஆர் தான் சில மாதங்களில் ஸ்ரீமாவோவின் குடியியல் உரிமையையும் பறித்தார்.

தமிழ்நாட்டு சுவரொட்டிகளை பார்த்தபோது தமிழ்மக்களின் ஞாபகமறதியும் கூடவே நினைவுக்கு வருகிறது. கடந்த தமிழக தேர்தலில் கலைஞரின் தி.மு.க. வுக்கு எதிராக களத்தில் நின்று ஜெயலலிதாவின் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து எதிர்கட்சி வரிசையை தனதாக்கிக்கொண்ட கப்டன் விஜயகாந்த் அடுத்துவரவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் கலைஞர் மற்றும் ராகுல் காந்தியுடன் இணையப்போகிறார் என்ற சமிக்ஞை வெளியாகியிருக்கிறது.

 

ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயலலிதாவை எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சி பின்னர் அவருடன் இணைந்தது. கலைஞரை ஆதரித்த ராமதாஸ் பின்பு ஜெயலலிதாவிடம் சென்றார்.

“ அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா… நிரந்த எதிரிகளும்  இல்லை. நிரந்தர பகைவர்களும் இல்லை.” என்ற பொன்மொழி (?) தோன்றிய தேசத்தில் தமிழ்வாழ்க கோஷத்திற்கு குறைவில்லை. தமிழுக்காக தீக்குளித்தவர்களின் ஆத்மா அங்குள்ள தொலைக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

 

—0—

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment