Home » அசரீரி- » *அசரீரி-கவிதைகள்

 

*அசரீரி-கவிதைகள்

 

கடவுளை ஹலாலாக்குதல் (ஆகுமாக்குதல்)

 

உருவமற்ற அறிவிலிருந்து ஓவியம் ஒழுகத்தொடங்கியிருக்கிறது

அல்லது இலச்சினைகளுக்குள் கடவுளின் புனிதம் உயிரோடு

கட்டப்பட்டிருக்கிறது என்பதாக செய்திகளைக் கனவுகளுக்குள்

போட்டுவிட்டுப் போகின்றன காகங்கள்.

 

 

எழுதிவிடுகிற செயலின் சித்திரவதையால்

இறக்கத்தொடங்கிய அறிவு நான்கு நூற்றாண்டுகளுக்கு

முன்னமேயே இலச்சினைகளாக ராஜ மோதிரங்களுக்குள்

கடவுளாகிக் கொண்டது என்பதே செய்தி.

 

இது கடவுளை உண்ணுவதற்கு ஆகுமாக்குவது பற்றிய

அல்லது கடவுள் அடைக்கப்பட்டிருக்கிற மோதிரங்களை அணிந்தவர்

பற்றிய விவரணமேயாகும்.

 

 

பரி நிர்வாணத்துக்கு முன்னம் கொல்லப்பட்ட சிட்டுக்குருவியின்

இறகுகளும், கௌதம புத்தனின் மூடப்பட்ட கண்களும் என்னிடம்

புகைப்படங்களாக இன்னும் இருக்கின்றன.

(பி.கு: நான் தேடிய புத்தனின் சிற்பம் இன்னுமே செய்யப்படாததால்

கணனியில் ஒன்றை வரைந்து வைத்திருக்கிறேன்)

 

 

எழுதிவிடுகிற அறிவின் சித்திரவதையால்

மரித்துப் போன சிற்பங்களிலிருந்து தப்பித்து என் ஓவியங்களுக்குள்

வாழ்கின்றன புத்தமும் சிட்டுக்குருவியும்.

 

இனிக் கொல்லாமல் உயிருடனேயே உண்ணப்

பழகிக்கொள்ளலாம் கடவுளையும் சேர்த்து.

மூடப்பட்ட கண்களையுடைய இலச்சினையை

நான் இனி மோதிரமாக்கி இறைச்சிகளில் குத்துகிறேன்.

 

மன்னிக்கவும் எனக்குக் கடவுளுக்காகக் கோபப்பட வருகுதில்லை.

(என்னுடைய கடவுள் திரவமாகி அன்பாகும்,

வாயுவாகி நிறங்களாகும்)

 

000000000

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment