Home » இதழ் 10 » * நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (சிறுகதை)- எஸ்.கே.விக்னேஸ்வரன்

 

* நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (சிறுகதை)- எஸ்.கே.விக்னேஸ்வரன்

 

 

இது ஒரு கதை அல்லது ஒரு கதை பற்றிய கதை என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒரு கதையைவிட மேலான பெறுமதியை கொடுக்கும் எந்த நோக்கத்துடனும் நான் இதை எழுதவில்லை. ஆனாலும் உங்களுக்கு அப்படி ஏதாவது தோன்றினால்,அதை என்னுடைய நட்புறவு காரணமாக ஏற்பட்ட பலவீனம் என்று புரிந்து கொண்டு பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள்  என்று முதலிலேயே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

 

000
கணேஸ் என்று எங்கள் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட கணேசமூர்த்தி தொண்ணூறாமாண்டு மேமாதம் காணாமல் போயிருந்தான். ‘இயக்கம் அவனைப் பிடிச்சுக்கொண்டு போட்டுது’ என்ற தகவலைத்தவிர வேறு யாரிடமிருந்தும் அவன்பற்றிய எந்தத் தகவல்களையும் பெற முடியவில்லை. ஒருநாள் மாலை சாவகச்சேரியில் தனது நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு தனது சைக்கிளில் புறப்பட்டுப் போனவனை அதன் பிறகு யாருமே காணவில்லை. சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவனது வீட்டுக்கு அவனது நண்பர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வந்த யாரோ இரண்டு இளைஞர்கள் மிகுந்த கலவரத்துடனும் அவசரத்துடனும் இந்தத் தகவலை தெரிவித்தவிட்டு சென்றிருந்தார்கள். அவர்களுக்கும் அதைவிட மேலதிக தகவல்கள் தெரிந்திருக்கவில்லை. அவனது வீட்டுக்காரர்களும் சொந்தக்காரர்களும் தமக்குத் தெரிந்த ‘இயக்க’ ஆக்களைப் பிடித்துக்கொண்டு  முக்கிய பொறுப்பாளர்களிடமெல்லாம் விசாரித்துப்பார்த்தார்கள். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ‘நாங்கள் பிடிச்சிருந்தால் உங்களுக்கு கட்டாயம் அறிவிப்பம்’ என்ற சாவகச்சேரி பக்கத்து பொறுப்பாளர் சொன்ன தகவலுக்குப்பிறகு புதிதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ‘அவனைப் போட்டிட்டாங்கள் போலை..அதுதான் உப்பிடிச் சொல்லுறாங்கள்’ என்று ஊர்ச்சனம் கதைக்கத் தொடங்கியிருந்த போதும் இரண்டாயிரத்தி ஒன்பதாமாண்டு மேமாதம் முள்ளிவாய்க்கால்  படுகொலைகளோடு யுத்தம் முடியும் வரை அவன் எங்கோ உயிரோடிருக்கிறான் என்ற நம்பிக்கை தான் எங்கள் எல்லோருக்குமிருந்தது. ஒரு நல்ல எழுத்தாளன், ஓவியன், எலெக்ரிக்கல் றிப்பியர் வேலைகள் செய்யத் தெரிந்தவன் என்ற காரணங்களுக்காக அவன் இயக்கத்தால் பயன்படுத்தப்படுகிறான் என்ற கதையே பொதுவாக நண்பர்கள் மத்தியில் அடிபட்டது. அவன் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை அவனது குடும்பத்தவர்கள் யாரும் நம்பத் தயாராக இருக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்குப் பின்னான இந்த இரண்டாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துள் அந்த நம்பிக்கைகள் முற்றாக ஆட்டங்கண்டுவிட்டிருந்தன. கிட்டத்தட்ட பத்தொன்பது ஆண்டுகளாக அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை எல்லோரும் சுமந்துகொண்டிருந்தோம்;.  தொண்னூற்றி மூன்றில் இறந்துபோன அவனது  தகப்பனும் தொண்ணூற்றி ஆறில் செல்லடியில் இறந்து போன அம்மாவும் அவனது அக்காவும் புருசனும் சாகும் வரை அதே நம்பிக்கையை கொண்டிருந்தார்கள். ஆனால் குடும்பத்தின் கடைக்குட்டித் தங்கை மட்டும் அண்ணாவை அவங்கள் போட்டிடட்டாங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.; திடீரெனறு ஓருநாள் அவளும் கானாமல் போனாள். இது நடந்தது அம்மாவும் அக்காவும் செல்லடியில் செத்த ஓருமாதத்துக்குள்; எல்லாரும் அவளையும் இயக்கம் பிடிச்சக் கொண்டுபோய் விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கையில் ஆச்சரியப்படும்படியாக அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. கணேஸின் சித்தப்பாவும் கணேசைவிட ஐந்துவயசே மூத்தவரும் ஆசிரியருமான தர்மபாலருக்கு எழுதியிருந்த அந்தக் கடிதத்தில் அவள் தான் வன்னியில் இருப்பதாகவும் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகவும் எழுதியிருந்தாள். கூடவே அண்ணாவைப்பற்றிய தகவல்களை தான் எப்பிடியும் அறிந்து சொல்வேன் என்றும் எழுதியிருந்தாள்.

ஆனால் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப்பின் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகியும் கணேஸோ தங்கையோ ஏதாவது முகாமிலோ..மருத்துவ மனையிலோ இருக்கமாட்டார்களா என்று அலை அலை என்று அலைந்தும் ஒரு தகவலும் கிடைக்காததால் தான் இனியும் இப்படியே இருக்கிறது சரியில்லை..இருவருக்கும் இறுதிக்கிரியைகள் செய்ய வேணும் என்று முடிவுசெய்திருப்பதாக திடீரென்று ஒருநாள் எனக்கு தொலைபேசியில் அறிவித்தார் தர்மபாலர். ஒரு முறை அவர் கொழும்புக்கும் வந்து, அங்கோடை அல்லது முல்லேரியா மனநல ஆஸ்பத்திரிகளில் சிலவேளை அவர்கள் இருக்கக் கூடும் என்று யாரோ சொன்னதாகக் கூறியதில்; நாம் இருவருமாக அங்கு சென்று பார்த்து வந்தோம். அன்று கிட்டத்தட்ட முற்றாக நம்பிக்கை இழந்த நிலையிலேயே அவர் வீடு திரும்பியிருந்தார். இதனால் அவரது இந்த அறிவிப்பு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர் சொன்ன இன்னொரு தகவல் என்னுள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தான், கணேசினதும் தங்கையினதும் பழைய பத்தகப் பெட்டிகளை புரட்டிப்பார்த்தபோது  கணேஸ் எழுதி முடிக்காத அல்லது முடித்த கதை ஒன்று அவற்றுள் அகப்பட்டதாகவும் அதை அவர்கள் நினைவாக ஒரு சிறு நூலாக வெளியிட விரும்புவதாகவும், அதற்குமுன் ஒருதடவை நான் அதைப் படிப்பதை தான் விரும்புவதாகவும் கூறி கதையை எனக்கு அனுப்பிவிடுறன் என்று அவர் சொன்னதுதான் என்னைப் பரபரப்புக்குள்ளாக்கியது.. நான் உடனடியாக வேண்டாம் என்று மறுத்தேன்.

‘அனுப்ப வேண்டாம்..நானே வந்து எடுக்கிறன்.. நீங்கள் அனுப்பப்போய் அது துலைஞ்சிட்டுதெண்டால்..’ என்று கிட்டத்தட்ட கத்தினேன் நான்.
இப்படித்தான்  இந்தக்கதை என்னிடம் வந்து சேர்ந்தது.
கணேஸ் என்னுடைய பாடசாலை நண்பன். அவன் எழுத்தை அவனது நேர்த்தியான கையெழுத்தில் படிக்கக் கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம். இந்தக் கதையை ஒரு நாவலை எழுதும் நோக்குடன் அவன் ஆரம்பித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கதைக்கு அவன் போட்டிருந்த பெயர் ‘ஒருநாள் வரும்’
இனி கதையைப் படியுங்கள்:

000
ஒரு மே மாதத்தின் முதல் வாரத்தில் அது நடந்தது. சந்தியிலிருந்து கிளை விட்டுச் செல்லும் நான்கு பிரதான வீதிகளிலும் வழமைக்கு அதிகமான சன நடமாட்டம் நிலவிய ஒரு காலை நேரத்தில், என்ன நடக்கப்பபோகிறது என்ற திகைப்புடனும் எதுவும் நடந்துவிடலாம் என்ற அச்சத்துடனும் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கையில் அது நடந்தது. முன்னெப்போதுமே நடந்திராதவகையில் குரூரமானதாக பின்னால் அடிக்கடி எம்மால் முதல் முதலாக ஒரு பயங்கரத் திரைப்படத்தைப் பார்த்த பள்ளிச் சிறுவனைப்போன்ற கிலேசத்துடன் நினைவு கூரப்படுவதாக, ஆனால் எந்தவித சந்தடியும் அற்றதாக அது நடந்து முடிந்தது.

மூன்று நாட்களுக்குமுன் பிடிக்கப்பட்டவர்களென நாம் கேள்விப்பட்ட அவர்களை சந்தியில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட வாகனத்திலிருந்து இழுத்து இறக்கினார்கள். இறக்கப்பட்டவர்களின் முகங்கள் உணர்ச்சிகளேதுமற்ற கல்லுப்போல விறைத்திருந்தன. அவற்றில் வெளிப்பட்ட வைராக்கியமும் வெறுப்பும் இவர்களை மேலும் எரிச்சலூட்டியிருக்கவேண்டும். வாகனத்திலிருந்து இழுத்து இறக்கியவன் அவர்கள், தான் இழுத்து நிறுத்திய வரிசையில் நிற்காததாலும் தன்னிடம் பணிவைக் காட்டாததாலும் ஆத்திரமுற்றுக் கர்ச்சித்தான். கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையிலிருந்த அவர்களை முரட்டுத்தனமாக இழுத்து வரிசைப்படுத்தினான். வரிசை சரியானதும்; நிறுத்தப்பட்டவர்களை நோக்கி நிதானமாகவும் மிடுக்குடனும் வாகனத்திலிருந்து குதித்து இறங்கி நடந்துவந்த உயரமான ஒருவன் தன் சகாக்களை விலக்கிவிட்டு தனது இயந்திரத் துப்பாக்கியை அவர்களது மார்புப் பகுதியை குறிவைத்தபடி எதையோ கேட்டான்.

நிறுத்தப்பட்டிருந்தவர்களில் ஒருவன் தன்னைக் குறிவைத்தவனைவிட சற்று உயரமாக இருந்தான். இறுகிப்போன தாடையும் கலக்கமற்ற கண்களும் கொண்டிருந்த அவன் ஒரு அற்பப் புழுவைப் பார்பதுபோல இவனைப் பார்த்து உதட்டைச் சுழித்தபடி நின்றிருந்தான். மற்றவனது கண்களில் இப்போது படபடப்புத் தெரிந்தது. தனது கட்டுகளை அறுத்துவிட்டு துப்பாக்கி ஏந்தியவன் மீது பாய்ந்துவிடுகிற தீவிரமும் வெறுப்பும் அவனது முகத்தில் தெளிவாக தெரிந்தன. கறுத்து வீங்கிப்போயிருந்த அவனது முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் தெறித்துக்கொண்டிருந்தன. இயந்திரத் துப்பாக்கியை வைத்திருந்தவனின் பின்னால் பொசிசன் எடுத்து நின்றிருந்த இருவரது கைகளும் தமது இடுப்பிலிருந்த பிஸ்டலை  எந்தநேரமும் உருவுவதற்க தயாராக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன.

இவர்களுக்குப் பின்னால், இன்னும் நால்வர் வாகனத்தின் இருபுறமும் தமது இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்தியபடி எந்தக்கணமும் இயக்கத் தயாரானவர்களாக நின்றிருந்தார்கள். அவர்களது தலைவன்போல தோன்றியவன் அவர்களை நோக்கி திரும்பவும் எதையோ கேட்டுக் கத்தினான். அவனது குரலில் வெறுப்பும் பதட்டமும் நிறைந்திருந்ததாலோ என்னவோ அவனது மொழி தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் இருவரும் அதை விளங்கிக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் எதுவித பதிலையும் அவர்கள் சொல்ல முயலவில்லை. தூரத்தே நின்று அச்சத்துடன் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் எது நடக்கப்போகிறது என்று நினைத்து நினைத்து உறைந்து போயிருந்தார்களோ அது நடக்கப்போவதில்லை என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். அல்லது எது நடக்கப்போகிறது என்று தெரிந்தபின் பேச என்ன இருக்கிறது என்று நினைத்திருக்கக் கூடும்.

திடீரென்று தலைவனின் இயந்திரத் துப்பாக்கி குரைத்தது. நெஞ்சு துணுக்குற்றுச் சில்லிட்டுப் போன அந்தக்கணத்தில் நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன். நான் கண்களைத் திறந்த போது துப்பாக்கியில் இருந்து இன்னமும் புகை வந்துகொண்டிருக்க அவன் போய் வாகனத்தில் ஏறிக்கொண்டிருந்தான். விழுந்து கிடந்த அவர்களின் உடல்களிலிருந்து குருதிவழிந்து தார் வீதியில் ஓடியது. துடிப்பு அடங்கும்வரை காத்திராமல் அவர்களது உடல்களை வீதி ஓரமாக கால்களால் தள்ளி உருட்டினார்கள் அங்கு பொசிசன் எடுத்து நின்றவர்கள். உருட்டிவிட்ட வெடித்த இளநீர்க்குரும்பையை போல அந்த உடல்கள் குருதி ஒழுக உருண்டு புரண்டு ஒதுங்கின. பிறகு அந்த உடல்கள் மீது ரயரையும் மரத்துண்டுகளையும் போட்டுத் தீ வைத்தார்கள். எரிகிற உடலுக்கு தானியங்கி ரைபிள்களை ஏந்திய இருவரை காவலாக வைத்துவிட்டு மற்றவர்கள் வாகனத்தில் ஏறிப் பறந்தனர். சனநடமாட்டமாக இருந்த சந்தி ஒரு ஈ காக்காய் கூட இல்லாமல் வெறிச்சிட்டுப்போய் இருந்தது. கண்ட காட்சியின் அதிர்ச்சி என்னை பெருந்திகைப்பில் ஆழ்த்தி விட்டிருந்ததது. எங்கே என்ற இலக்கின்றி நானும் வேகமாக சைக்கிளை மிதித்தேன். உடனடியாக அவ்விடத்தை விட்டு ஓடுவது என்ற தெரிவினை மட்டுமே வேலை செய்து என்னை  வேகமாக உந்தித் தள்ளியது. மனம் எந்தச் சிந்தனையுமற்ற சூனியத்துள் உறைந்து விட்டிருந்தது.

இப்படித்தான் அது நடந்தது. ஆனால் முதல் சம்பவம் என்ற முக்கியத்தவத்தைத் தவிர வேறு முக்கியத்துவம் எதுவுமற்ற மிகவும்  சாதாரணமான ஒரு சிறிய விசயம் என்பது போல விரைவிலேயே சனங்கள் அதை மறந்துபோனர்கள். நம்மில் ஒருவன் எப்போதாவது வேறேதாவது ஒரு கதையின் தொடர்ச்சியாக அது ஞாபககத்திற்கு வர, அந்த முதல் சம்பவத்தை கண்டபோது தனக்கேற்பட்ட திகில்  உணர்வுகளை ஒரு கவிஞனின் வார்த்தை அழகுடன் உணர்வு பூர்வமாக சொல்லத் தொடங்குவான். திடீரைன்று கனத்துப் போகிற நெஞ்சுடன் கைகளை இறுகப் பொத்தியபடியோ உதட்டைக் கடித்தபடியோ நாம் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருப்போம். சொல்லிக் கொண்டிருப்பவனும் தனது வார்த்தைகளை முடிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு அந்த இறுக்கமான மௌனத்துடன் கலந்துவிடுவான். பிறகு மௌனமும் சலிப்பூட்டுவதாய் உணர்ந்து நெடுமூச்சுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். இதுபோன்ற இறுக்கமான வேளைகளில் கண்ணீர் முட்டுகின்ற எனது பார்வைக்கு அவர்கள் தளதளத்து மிதப்பது போலத் தோன்றும். ம்..பாப்பம்..ஒரு நாள் வரும்..என்ற வாசகத்துடன் இந்த இறுக்கத்தை குலைத்து வைப்பதுபோல எழுந்து நிற்பான் சிவபால், நான் ஒரு சிகரட்டைப் பற்றவைத்துக்கொண்டு அண்ணாந்து புகையை ஊதுவேன்.

000 000 000
றோட்டோரத்தில் குறோட்டன் செடிகள் எட்டிப் பார்க்கிற கிடுகு வேலிக்குப் பின்னால் கண்ணனின் வீடு விறைத்துப்போய்க் கிடக்கும். ஒரு காலத்தில ஒகோ என்று இருந்த வீடு என்பதற்கான அடையாளமாக கிடுகு வேலிக்குச் சற்றும் பொருத்தமில்லாத வேலைப்பாடு கொண்ட கேற்றும் அதைத் திறந்துது உள்ளே போனால் முன்பக்க விறாந்தையில் போடப்பட்டிருக்கும் கதிரைகளும், சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பிரேம் செய்யப்பட்ட பெரிய அளவுப் புகைப்படங்களும் இன்னமும் இருந்தன. விறாந்தைக்கு முன்னாலிருந்த முற்றம் புற்கள் எதுவும் முழைக்காத மெல்லிய வெண்புழுதிபடர்ந்த கடினமான நிலம். முற்றத்திலிருந்து விறாந்தைக்கு ஏறுகின்ற இரண்டே இரண்டு படிகளின் ஓரங்களில் உடைந்து போன இரண்டு படுத்திருக்கும் சிங்கங்கள் என்று ஊகிக்கக் கூடிய உருவங்களின் மீதிகளில்  பாசிபடர்ந்து வெயிலில் கருகிப்போயிருக்கும். விறாந்தைச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும்  புகைப்படத்தில் கண்ணனின் இறந்துபோன அப்பாவின் படம் நடுநாயகமாக இருக்க மற்ற இருபுறமும் அரசியற் தலைவர்களின் மங்கிப் பழுத்துப்போன பெரிய அளவிலான கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். அதிலுள்ள படங்களில் உள்ளவர்களில் சேர் பொன்  அருணாசலத்தையும் மகாத்மா காந்தியையும் தவிர மற்ற அனைவரும் அப்பாவை சந்திக்க இந்த வீட்டிற்கு வந்தவர்களே என்று கூறுவான் கண்ணன். இந்தப் படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை அம்மாவிடம் இருப்பதாக கண்ணன் தன்னைச் சந்திக்க வரும் ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொள்ள மறப்பதில்லை. ஆயினும் அந்தக் கதைகள் என்ன என்று கண்ணனிடமோ அவனது அம்மாவிடமோ யாரும் ஒருபோதும் கேட்டதில்லை. கேட்கும் அளவுக்கு படத்தில் இருப்பவர்கள் எங்களுக்கெல்லாம் முக்கியமற்றவர்களாக போய்விட்டிருந்தார்கள். ‘இவங்கடை படங்களை எல்லாம் ஏன் வெச்சிருக்கிறாய்’; என்று யாராவது புதிதாக வருபவர்கள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கண்ணன் இந்தக் கதையை எல்லோருக்கும் சொல்லிக் கொள்வான். ஒருவகையில் அவனது அப்பா மாட்டிவிட்ட படங்களை அகற்றுவதில் அவனுக்கும் அவ்வளவு விருப்பம் இல்லை என்பதால் யாரும் அதன்பிறகு அவனுடன் அதுபற்றிப் பிறகு பேச்செடுப்பதில்லை.

விறாந்தையில் எப்போதும் திறந்தபடியிருக்கும் கதவை திறந்தபடி உள்ளே சென்றால் பின்விறாந்தைக்குப் பின்னாலுள்ள நாலு மாமரங்களுக்கு நடுவே பருத்த பலாக்காய்களை சுமந்தபடி இரண்டு பலாமரங்கள் நிற்கும். எப்போதாவது அதிலிருந்து ஓரிரு இலைகள் உதிர்கிற கணங்கள் தவிர்ந்த நேரங்களில் ,உயிர்ப்பற்றுப் போய்விட்டதான பாவனையில் அசைவற்று நிற்கிற அந்தமரங்களின் கீழ் அடுக்கப்பட்டிருக்கும் கொங்கிறீற் கற்களின் மீது கண்ணன் ,சிவபால், சுகுமார், விமல் ,ரமேஸ், மற்றும் பாபு என்று எங்களில் குறைந்தது நான்கு பேராவது உட்கார்ந்திருப்போம்;. பின்புற விறாந்தையில் போடப்பட்டிருக்கும் நான்கு கதிரைகளில் ஒன்றில் இடது கையினால் தனது தலையை கோதியபடி கண்ணனின் அம்மா கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பா. குசினியின் புகை போக்கிக்குள்ளால்,அவனது அக்காவின் கண்களைக் கரித்துக் கொண்டு புகை கிளம்பிவரும். அவள் தனது வேதனை தெரியாதபடிக்கு புன்னகை ஒன்றை கடன்வாங்கி தனது முகத்தில் சதா ஒட்டவைத்திருப்பாள். தனியாக இருக்கும் பொழுதுகளின் அவஸ்தையை தவிர்ப்பதற்காகவே செய்வதுபோல் அடுப்படியும் தையல் மெசினுமாக அவள் மூச்சு விடாமல் இயங்கிக்கொண்டிருப்பாள். சலிப்பூட்டுகிற மனதிலிருந்த நிம்மதி வலுக்கட்டாயமாக பிடுங்கி வீசப்பட்டுவிடுகிற இப்படியான பொழுதுகளில் நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்.

ஏதாவதொரு இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கவிதையையோ கதையையோ எடுத்தக் காட்டி தனது பேச்சினைத் தொடங்குவான் கண்ணன்.
‘ உந்தச் சவத்தை அங்காலை போடு.. நான் சொன்ன கட்டுரையை  ரான்ஸ்ஸிலேட் பண்ணுவிச்சுப் போட்டியோ” என்று அதட்டுவான் சிவபால்.
தனது உருண்ட விழிகளை தாழ்த்தி ,அசடு வழிய அதை தான் மறந்துபோய்விட்டதற்கு என்ன சமாளிப்புக் கதை சொல்லலாம் என்று தடுமாறுவான் கண்ணன். அவனது காரணங்களும் சமாளிப்பும் எவ்வளவு பேதமை நிறைந்தவை எனபதை சுட்டிக் காட்டி முறைப்பான் சிவபால். கண்ணன் பிறகு மௌனமாகி விடுவான். அவனது கரிய உருண்டை விழிகள் என்பக்கமாகத் திரும்பிப் பரிதாபமாக கெஞ்சும். நான் புன்னகைத்த படியே இருப்பேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கண்ணன் தானே தொடங்குவான். மிக இரகசியமான தனக்கு மட்டுமே கிடைத்திருக்கும்  தகவல் என்று ஏதாவதொரு தகவலை சொல்வான்.  ஏதிர்பாராத விதமாக மாட்டுப்பட்டுப் போன யாராவது ஒருவனின் துர்ப்பாக்கியமான சாவு பற்றியதாகவோ, சமூக விரோதி என்ற பெயரில் அநியாயமாக மரணதண்டனை வழங்கப்பட்ட ஒருவனின்  கதையாகவோ அது இருக்கும்.

இப்படியான வேளைகளில் சிவபால் மௌனமாகிவிடுவான் என்பது கண்ணனுக்கு நன்றாகவே தெரியும். வேதனை மிகுந்த இத்தகைய கதைகளைக் கேட்கும் போதெல்லாம் முகத்திலே உணர்ச்சி பொங்க அவன் மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பான். அக்கா தேனிர் கொண்டுவந்து தருவாள்.

சந்தியில் அந்தச் சம்பவம் நடந்த அன்று பிற்பகல் கண்ணன் வீட்டு வாசலில் வேகமாக ஒரு வாகனம் வந்து திடீரென நின்றது. வாகனத்தில் இருந்த மூவர் முதலில் பாய்ந்து குதித்தார்கள். இருவர் முன்னும் பின்னுமாக தானியங்கி றைபிள்களை நீட்டிப் பிடித்திருக்க மூன்றாமவன் கேற்றைத் திறந்தான். பிறகு வாகனத்திலிருந்த மேலும் மூன்று பேர் குதித்து இறங்கினார்கள், சப்பாத்துக் கால்கள் ஒலியெழுப்ப வீட்டைச் சுற்றி எதையோ தேடுவது போல வேகமாக ஓடினார்கள்.
திகைத்துப்போய் நின்ற அம்மாவையும்  அக்காவையும் அலட்சியமாகப் பார்த்தபடி ஒருவன் கேட்டான்:
‘எங்கை அவங்கள்?.’ –அவனது குரலில் முரட்டுத்தனமான அலட்சியமும் அதிகாரமும் தெளிவாக வெளிப்பட்டன.
‘ நீங்கதான் பாத்தியளே..பிறகென்ன கேக்கிறியள் என்னட்டை?’; அம்மாவின் குரலும் அதே அலட்சியமும் அதிகாரமம் கொண்டதாய் வெளிப்பட்டது. பிறகு தான் சேகரித்து வைத்திருந்த கடுமையான வார்த்தைகளால் அவர்களைத் திட்டத் தொடங்கினா. ஒருவன் அம்மாவுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி சுட்டுவிடுவேன் என்பது போல மிரட்டினான்.

‘சுடடா, சுடன்ரா பாப்பம்..பொறுக்கி வேசை மக்களே’ அம்மாவின் உரத்த குரல் சுவர்களில் பட்டு எதிரொலித்ததது. அவர்களில் ஒருவன் அறைக்குள் இருந்து ஒரு கட்டாக எதையோ எடுத்துவந்தான். மற்றவன் அதை வாங்கிப்பார்த்துவிட்டு விசிறி எறிந்தான். ஏதேதோ பத்திரிகைகளிலிருந்த வெட்டி ஏடுக்கப்பட்ட துண்டுக் காகிதங்கள் அவை. முன்பக்க முற்றத்தினூடாக பின்பக்க விறாந்தைப்பக்கமாக வீசிக்கொண்டிருந்த காற்றுடன் அள்ளுப்பட்ட அவை சுழன்று சுழன்று முற்றத்தில் எம்பிப் பறந்தன. துப்பாக்கி வைத்திருந்தவனது முகம் இறுகிப்போயிருந்தது. ஆயினும் அவனால் அம்மாவின் கண்களை பார்க்க முடியவில்லை. சுடடா என்று கத்திய அம்மாமுன் ஏதோ காரணத்தால் தான் தோற்றுப் போய்விட்டேனென்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவளை சுடவும் அவனுக்கு முடியவில்லை. ஆயினும் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல்.. ‘அவங்களை கவனமாக இருக்கச் சொல்லு …..இல்லாவிட்டால் உன்ரை சண்டித்தனத்தை விட்டிட்டு ஒப்பாரி தான் சொல்ல வேண்டியிருக்கும்..’ என்று சொல்லிவிட்டு விறுக்கெண்டு வாகனத்தை நோக்கித் திரும்பி நடந்தான். அம்மா என்னவோ பதிலுக்கு சொல்ல வாயெடுத்தவள்..பிறகு ஏனோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மௌனமாக அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றாள். கூடவந்தவர்களும் ஓடிப்போய் அவனுடன் வாகனத்தில் ஏற, வாகனம் புளுதியை கிளப்பிக் கொண்டு பேரிரைச்சலுடன் புறப்பட்டுப் போனது.

‘தூ களிசடை நாயள்!’ என்று உரத்துச் சொல்லிக்கொண்டு அம்மா கதிரையில்உட்கார்ந்துகொண்டாள்.

000
நான் கண்ணனின் வீட்டுக்குப் போனபோது வீடு வழமையை விடவும் அதிகமாக விறைத்துப் போய்க் கிடப்பதாக, ஒவ்வொரு பொருளும் இயக்கத்தை நிறுத்தி உயிர்ப்படங்கிப்போய் இருப்பதாக தோன்றியது. இழுபட்ட கதிரைகளும் மேசையும் சிதறிக்கிடந்த புத்தகங்களுமாக கிடந்த பின் விறாந்தையில் அம்மாவும் அக்காவும் உணர்ச்சியற்றுப் போய் இருந்தார்கள். இருந்தார்கள் என்பதை விட இருந்தன என்று சொல்வதுதான் கூடப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. தாறுமாறாக கிடந்த ஒவ்வொன்றையும் அவதானித்தபடியே நான் அவர்களை நோட்டமிட்டேன். திடீரென்று அம்மாவும் அக்காவும் ஒரே நேரத்தில் அழத்தொடங்கினார்கள். மெல்ல இருள் புகுந்து கொண்டிருந்த அந்த வேளையில் ஒழுங்கு குலைந்திருந்த  விறாந்தையின் மத்தியில் அவர்கள் உடகார்ந்திருந்த மாதிரியில் தெரிந்த இறுக்கம் எனக்கு அச்சமூட்டியது.

என்னவோ நடந்திருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் நான் கேட்கவில்லை. நான் கேட்டாலும் அவர்கள் உடனடியாகப் பதில் சொல்லிவிடப் போவதில்லை என்று தோன்றியது. அம்மாவின் கண்களின் கீழ் வரிவரியாக கிடந்த மடிப்புக்களில் கண்ணீர் தெறித்து வழிந்தொடியது.உதடுகள் பிரிந்தும் மூடியும் துடித்துக்கொண்டிருந்தன. அடங்கிப்போயிருந்த உணர்ச்சி திடீரெனப்பொங்கிப் பிரவகித்து எழுந்ததன் காரணமாகவோ என்னவோ அவவது பருத்த உடல் மெதுவாக குலுங்கிக்கொண்டிருந்து. அக்காதான் முதலில்; கண்ளை துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள். எதுவித உணர்ச்சியையும் காட்டாதவளாக குசினிப்பக்கமாக நடந்து போனாள்.

நான் லைட்டைப் போட்டேன். ரியூப்லைட்டின் பால் வெளிச்சத்தில் அம்மாவின் முகம் வீங்கிக் கிடந்தது தெரிந்தது. அவ இன்னமும் மூக்கை உறிஞ்சியபடி இருந்தா. பிறகு அனுங்குகின்ற குரலில் இழுத்து விசும்பி சற்று பலத்து அழத்தொடங்கினவ சட்டென்று நிறுத்தி ‘இனிமே இஞ்சை ஒருத்தரும் வராதேங்கோடா…ஒருத்தரும் வரவேண்டாம்..’ என்று விம்மிக்கொண்டே சொன்னா. எதையும் கேட்கத் துணிவில்லாமல் அவ அருகாகச்சென்று அவவின் முதுகில் மெதுவாகத் தடவிக் கொடுத்தேன் நான்;.

திடீரென்று அம்மா எழுந்து நின்றா. அவவின் முகத்தில் கலவரம் தெரிந்தது. அக்கா குசினிக்குள்ளிருந்து வெளியே ஓடி வந்தாள். நான் என்ன எதுவென்று தீர்மானிக்கிறதுக்கு முன்பாகவே இருவருமாக என்னை பின்புறமாக தள்ளிவிட்டு ஹோலினூடாக வெளி முன்புற வேலிக்கு அப்பால் எதையோ எட்டிப் பார்த்தார்கள். அசுர வேகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு வாகனங்கள் ஓடி மறைந்தன. ஒன்றை ஒன்று முந்திவிடுவதுபோல அவை ஓடியவிதத்தை ஒருவகை அதிர்ச்சியுடன் நான் பார்த்தக்கொண்டு நிற்கையிலேயே ‘போறாங்கள் அந்த வேசைமக்கள்’ என்று சொல்லியபடி திரும்பி வந்து அமைதியடைந்தவளாக கதிரையில் உட்கார்ந்தாள் அம்மா. அக்கா குசினிக்குள் நுளைந்துகொண்டாள். அந்த, வழமைக்கு மாறான இருவரதும் மௌனம் எனக்கு அசௌகரியமாக இருந்தது.
நான் அம்மாவுக்கு அருகாக இருந்த கதிரையில் இருந்து நெளிந்தேன்.


பின் விறாந்தையில் இருந்து பார்க்கையில் மாமரங்களும் பலாமரங்களும் இருளில மூழ்கியபடி திகைத்துப்போய் நிற்பதாக தோன்றியது.கல்லடுக்கின் ஓரமாக நீளும் நடைபாதைபோய் முடிகின்ற கிணற்றடியில் படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த வாளி மட்டும் மங்கலாகத் தெரிந்தது. இருள் முற்றாக கவிந்து விட்டிருந்த போதும் விறாந்தை ரியூப் லைட் வெளிச்சம் மெல்லிய அளவில் கிணற்றடிப்பக்கம் வரை பரவியிருந்தது. காலையில் நடந்த சம்பவம் என்னில் ஏற்படுத்திய அச்சமும் திகைப்பும் கலந்த எனது மனப்பாரத்தை இறக்கிவைக்க கல்லடுக்கில் யாரும் இல்லை. கண்ணன் இப்போது வருவானா என்று கேட்க நினைத்த நான் அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் கேட்க முடியாமல் மௌனமாக இருந்தன். அவன் இங்கு இன்றைக்கு வரப்போவதில்லை என்று மட்டும் ஏனோ எனது மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

அக்கா தேநீர் கொண்டுவந்தாள். தேனீரை அம்மாவுக்கும் எனக்கும் தந்துவிட்டு, பின்விறாந்தையின் நடுப்பகுதியில் ஹோலுக்காக திறந்து கிடந்த கதவின் நிலையோடு சாய்ந்தபடி மெல்லிய குரலில் அவள் பேசத்தொடங்கினாள். இடது புறமாக தனது பின்னலை முன்னால் எடுத்துவிட்டுப் பின்னியபடி மாலையில் நடந்த விசயங்களை ஒரு நோயாளியின் வாக்கு மூலம் போல அவள் சொல்லிக்கொண்டிருக்கையில் இடைமறித்து அம்மா கேட்டா: ‘எங்கை போட்டாங்கள் இவங்கள்…ஏன் அவங்கள் இஞ்சை தேடி வந்தவங்கள்..?’

நான் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். அக்கா சொன்ன கதை என்னுள் ஒரு படிமமாக திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. இதயம் சற்று வேகமாக அடிப்பது போலவும் ;காதுக்குக் கீழே கழுத்தோரமாக வியர்ப்பது போலவும் தோன்றியது. காலையில் சந்தியில் நடந்த சம்பவமும் அவர்கள் இங்கு வந்து விசாரித்துச் சென்றதுவும் ஒன்றுக்கொன்று தொடர்பானவையாக இருக்கலாமா இல்லையா என்று முடிவு கட்ட முடியாமல் இருந்தபோதும் ஒரு வகை திகில் என்னை சூழ்ந்து கொள்வதை என்னால் உணர முடிந்தது. உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டுவிட்டது போலவும் தொண்டையில் அரிப்பது போலவும் இருந்தது. என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி ஒவ்வொரு கணமும் பெரிதாக பெரிதாக உரத்து ஒலிப்பது போல பிரமை தட்டியது. அக்கா தேனீரை ஞாபகப்படுத்தினாள். அது சில்லிட்டுப் போயிருப்பதாக பட்டது.

அதற்குப்பிறகு ஒருமாதமளவான காலம் கண்ணன் வீட்டிற்கு போகவில்லை. கண்ணன் கூட அங்கு போகாமல் சிவபாலனுடனும் சுகுமாருடனும் நாளுக்கு ஒரு இடத்தில் தங்கிக்கொண்டு திரிவதாக கேள்விப்பட்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் அங்கே சந்திக்கத் தொடங்கினோம். கொங்கிறீற் கல்லில் உட்கார்ந்தபடி கண்ணன் தனது ‘தலைமறைவு’ வாழ்க்கையை நாவலாக  எழுதப் போவதாகச் செல்லிக் கொண்டிருந்தான். வானத்தில் ஹெலிகப்ரர்களோ அல்லது குண்டு வீச்சு விமானங்களோ வட்டமிட்டுப் பறக்கும்போது அவற்ரோடு இணைந்த தனது ‘தலைமறைவுக்கால’ சம்பவம் ஒன்றை அவன் கட்டாயம்சொல்லப்போகிறான் என்பது பழகிப்போகவே எமக்கெல்லாம் சிரிப்பு வரும். சிவபால் இருக்கிற வேளையானால் அவனே முந்திக் கொண்டு அது மாதிரி ஒரு கதையை சொல்லத் தொடங்குவான். எல்லோரும் ஒரு புன்னகையுடன் கண்ணனின் பக்கமாக பார்வையை ஓட்டுவார்கள். ஆனால் அவனோ சிவபாலின் கதையில் ஒன்றிப்போய் அப்பாவியாக கேட்டுக்கொண்டிருப்பான்.

இப்போதெல்லாம் முன்னைப்போலல்லாமல் பொழுது மிகவும் வேகமாக ஓடிவிடுவது போலத் தோன்றியது. அடிக்கடி சந்திக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதும் இல்லை. நான் வேலை முடிந்து வருகிறபோது அனேகமாக அக்காவீட்டு வெற்றிலைத்தட்டம் மட்டும் பின் விறாந்தை மேசைமீது அனாதையாக கிடக்கும். கொஞ்சம் வெறும் பாக்கை எடுத்துக் கொறித்தபடி குசினிப்பக்கமாக நடந்தால், வழமைபோல அக்கா அடுப்பை ஊதிக்கொண்டு நிற்பாள். வழக்கமான அதே செயற்கையாக ஒட்டியிருக்கும் புன்னகையுடன் ‘இப்பான் வேலையாலை வாறீரோ’ என்று கேட்பாள். எனது பதிலை எதிர்பாராமலே அடுப்பை ஊத மீளவும் திரும்பிக் கொள்வாள்.; அடுப்பு பற்றிக் கொண்டால்  ஏதாவது பாத்திரங்களை அடுக்கிய படியோ ,காய்கறி வெட்ட தயாரான படியோ பேசத் தொடங்குவாள். எனக்கு யாரென்றே தெரியாத தனது யாராவது ஒரு சினேகிதியின் ஊரில் நடந்த சண்டை பற்றியோ அல்லது முதல்நாள் நடந்த சுற்றிவளைப்பின்போது பிடிபட்டுப் பூசாவுக்கு ஏற்றப்பட்ட தனக்குத் தெரிந்த யாராவது ஒரு பெடியனைப் பற்றியதாகவோ  அவளது கதை இருக்கும். அவள் மறந்தும் தன்னைப்பற்றியோ தனது ஆசைகள் பற்றியோ கவலைகள் பற்றியோ ஒருபோதும் வாய்திறப்பதை நான் கண்டதில்லை. முகத்தில் முப்பதைத் தாண்டிய மூப்பு அவளிடம் தெரிவதில்லை என்றபோதும் இன்னமும் மணமாகாமல் இருக்கும் அவளுக்கு அடிமனதில் இருக்கும் ஏக்கத்தை வெளியில் காட்டாமல் இருக்கவே அவள் இப்படி இருக்கிறாளோ என்று எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு. ஆனால் மறந்தும் அவளிடமிருந்து அப்படியான எந்தக் கதைகளும் வந்ததில்லை.

அம்மா எங்காவது அயல்வீட்டுக்கு ஏதாவது அலுவலாகப் போயிருப்பா. அவவுக்கு தலை நிறைந்த பொறுப்புக்கள். அப்பா இல்லாத குடும்பம்..வயதேறியும் கரைசேராமல் இருக்கும் குமரான அக்கா..பொறுப்பில்லாமல் திரியும் கண்ணன் என்ற கவலைகள் அவவுக்கும் இருக்கக் கூடும். ஆனால் அவவும் அப்படியெல்லாம் ஒருநாளும் கவலைப்படுவதாக தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. எல்லாமே தானாக சரிவரும் என்ற நம்பிக்கையுடன் நாளாந்த அலுவல்களுடன் இயங்கிக் கொண்டிருப்பா…  கண்ணனை விமலோ சுகுமாரோ வந்து சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போயிருப்பார்கள். அவர்களுக்கு நிதமும் ஏதாவது ஒரு வேலை இருக்கும்..கண்ணன் அம்மாவிடமும் அக்காவிடமும் நல்ல விருப்பம் வைத்திருக்கிறான் என்பது அவர்களைப்பற்றி அவன் பேசும் போது தெரியும்..ஆனால் அவர்களுக்காக அவன் எதையும் செய்ததை நான் கண்டதில்லை..அவனுக்குத்தான் அம்மாவும் அக்காவும் எல்லாம் செய்து கொண்டிருப்பார்கள். அவன் சதா எதாவது வேலையாக எங்காவது ஓடிக் கொண்டிருப்பான்..தான் அப்படி ஓடித்திரிவது தொடர்பாக-அது என்ன என்று ஓரளவுக்கு எனக்கு ஊகிக்கமுடிந்தபோதும், என்னிடம் ஒரு போதும் அவன் பேசிகொண்டதில்லை. ஒரு வேளை நான் பயந்தவன் என்ற காரணத்திற்காக அவர்களது வேலையில் நான் சம்பந்தப்படுவதை அவர்கள் தவிர்த்துக் கொண்டிருக்கக்கூடும். எப்பாவது அவர்கள் நீண்டதூரம் சைக்கிள் ஓடிய களைப்புடன் வந்தபடியே ‘அட நீ நிக்கிறாயா? என்று கேட்டபடி கல்லடுக்கிற்கு நடந்து போவார்கள். நானும் போய் அவர்களுடன் உட்கார்ந்து கொள்வேன். அவர்கள் யாரும் நான் போய் உட்காருவதை ஒருபோதும் தவிர்த்ததில்லை. ஆனாலும் என்முன்னால் அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப்பற்றி கதைப்பதும் இல்லை. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாத காலத்திறகுப் பிறகு அவர்கள் எல்லோரும் தீவிரமாக ஏதோ வேலைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

 

அப்போதுதான் ஒரு வகையில் நான் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போனதாக உணரத் தொடங்கியிருந்தேன். ஆனால் கண்ணன் மட்டும் வழமை போல என்னுடன் உற்சாகமாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பான். அப்படியான ஓரிரு சந்தர்ப்பங்களில் மிகுந்த உற்சாகத்தடன் ஏதாவது பேசத்தொடங்கி  சிவபாலிடம் வாங்கிக் கட்டியும் கொள்வான்; சிவபால் சற்று அதிகமாக கண்ணனை அதிகாரம் பண்ணுகிறான் என்று எனக்குத் தோன்றியதில்லை, எனக்கும் அது ஒரு சிரிப்பூட்டுவதற்காக நடக்கும் விசயமாகவே தெரிந்ததது. ஆனால் நான் அவர்களிடமிருந்து அந்நியமாகப் போய்க் கொண்டிருப்பதாக உணரத் தொடங்கியபின் இதற்கு வேறு அர்த்தங்கள் புரியத் தொடங்கின. நான் இருக்கும்போது பேசக்கூடாத விடயங்கள் என்று அவர்களிடம் நிச்சயமாக ஏதாவது இருக்கிறது, அதை கண்ணன் தனது உற்சாக மிகுதியால் சொல்லிவிடுவானோ என்பதற்காகவே சிவபால் அப்படி அதட்டுகிறான் என்று எனக்குப் பட்டது. இந்த விடயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து என்னுள் பெரும் மன உளைச்சலை எற்படுத்தத்  தொடங்கியிருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு வாரகாலமாக நான் கண்ணன் வீட்டுப்பக்கம் போகாமல் இருந்து பார்த்தேன். அங்கு போகக் கூடாது என்று உறுதிசெய்து கொண்டு என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தேன். ஆனால் அங்கு போக வேண்டும் என்ற தவிப்பு மேலும் மேலும் வளர்ந்ததே ஒழிய குறைந்தபாடாக தெரியவில்லை. நான் போகாமல் விட்ட இந்த இரண்டு வார காலத்துள் என்னைத்தேடி ஒருவர்கூட வந்து பார்க்கவில்லை, ஏன் வரவில்லை என்று கேட்கவில்லை என்பது எனக்குப் பெரிய ஏமாற்றமாகவும் கவலையாகவும் இருந்தது. வேலை முடிந்ததும் சைக்கிளில் ஏறினால் என்னை அறியாமலே அது என்னைக்கொண்டுபோய் கண்ணன் வீட்டுப் படலையில் விட்டுவிடுகிற அளவுக்கு அங்கு போய்வந்து கொண்டிருந்த எனக்கு ,அங்கே போகாமல் இருப்பதை தொடர்வது பைத்தியம் பிடிக்க வைத்தவிடுமளவுக்கு கஷ்டமாக இருந்தது. போகாமல் இருந்த நேரம் எல்லாம் நண்பர்கள், கல்லடுக்கு ,கண்ணன் வீடடின் முன் விறாந்தையில் மாட்டப்பட்டிருக்கும் சேர் பொன் அருணாசலம், மகாத்மா காந்தி, லெஸ்லி குணவர்தன, கொல்வின் ஆர்.டி.சில்வா, என்.எம்.பெரேரா, வி.பொன்னம்பலம் ஆகியோரின் படங்கள் … அந்தப்படங்களுக்கிடையில் இருக்கம் அரசியல் தொடர்பு என்ன என்பது எனக்கு விளங்கா விட்டாலும். .எல்லாக்காலத்திலும் ஒரு வித்தியாசமான போக்கைக் கொண்டதாக அந்த வீடு இருந்திருக்கிறது என்ற மதிப்பு… .உணர்வுகளை வெளிக்காட்டாவிட்டாலும் அக்கறையான அக்கா….அன்பும் கண்டிப்பும் கொண்ட அம்மா.. என்று அந்த வீட்டின் நினைவே எனது மனதுள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை பின்னேரம் மனதின் இழுப்பை தாங்க முடியாமல் எனது விரதத்தை துறந்துவிட்டு வேலை முடிந்ததும் அங்கு போகும் முடிவுடன் சைக்கிளில் எறினேன்.

சைக்கிளில் ஏறியதுதான் தெரியும், கண்ணன் வீட்டுக் கேற்றை திறக்கும் போது தான் நான் வந்துவிட்டேன் என்பது எனக்கு உறைத்தது. எப்படி இவ்வளவு தூரமும் வந்திருக்கிறேன் என்பதுகூட ஞாபகமில்லாத சைக்கிள் ஓட்டம். நான் வீட்டிற்குள் நுளைந்தபோது அவர்கள் எல்லோரும் கல்லடுக்கில் இருந்தபடி எதைப்பற்றியோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஆச்சரியப் படும்படியாக அன்று சிவபால் ரௌசருடன் இருந்தான். வழமையாக அவன் சாரம் தான் அணிந்திருப்பான். என்னையே எதிர்பார்த்திருந்ததுபோல சிவபால் ‘வாடா வா ,இவனுக்கும் காட்டுவம்..என்ன சொல்கிறானெண்டு பாப்பம்..” என்று என்னை வரவேற்றான். கண்ணன் சிரித்தபடி என்னிடம் ஒரு சஞ்சிகையை எடுத்து நீட்டினான்.

முன்பக்கம் அச்சிட்ட அட்டை, உள்ளே எல்லாமே றோணியோ செய்யப்பட்ட பக்கங்கள். புரட்டிப் புரட்டி ஒவ்வொரு தலைப்பாக படிக்கையில் எனக்கு விரல்கள் மெதுவாக நடுங்குவது போல உணர்ந்தேன்; அன்று அவர்கள் தேடி வந்ததற்கான காரணம் ஒரளவுக்கு எனக்குப் புரியத் தொடங்கியது. எல்லா இயக்க அரசியலையும் தீவிரமாக விமர்சிக்கிற சிவபாலும் ஒரு இயக்கத்தில் சேர்ந்திருப்பான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஓரிரு வரிகளைப்படிக்கும் போதே மனதில் ஒரு வகை அச்சம் ஏற்படுவதை உணர்ந்த போதும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கிளம்புவதையும் தடுக்கமுடியவில்லை… என்ன யோசிக்கிறாய்..? நாங்கள் தான் போட்டிருக்கிறம்.. உன்னோடையும் இதைப்பற்றிப் பேசிறதெண்டு நினைச்சனாங்கள்..”  என்று சொன்னான் கண்ணன். ‘பிரச்சினை இல்லையோ..’ என்று கேடகத் தோன்றியது. நான் கண்ணனின் முகத்தைப் பார்த்தேன். அவனது கண்ணும் வாயும் சிவபாலை நோக்கிச் சிரிப்பதாகத் தோன்றியது. நான் என் கேள்வியை என்னுள் அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்தேன்.

‘என்ன… பிரச்சினை வரும் எண்டு யோசிக்கிறியோ..? பிரச்சினையளை நாங்கள் தேடிப்போகாவிட்டாலும் அவை எங்களைத் தேடி வரத்தான் செய்யுது…பயந்து பயந்து நாங்ள் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டிருந்தால் ..அதுக்கு ஒரு முடிவே இருக்காது. போய் முட்டுச் சந்தியில் நின்டு மாட்டுப்பட வேண்டியதுதான்..” சிவபால் சொல்லிவிட்டு மௌனமாக என்னைப்பார்த்தபடி இருந்தான். எனது முகத்தில் ஓடும் ரேகைகளை அவன்  கூர்ந்து படிக்கிறான் என்று எனக்குத் தெரிந்தது. அவனது முகத்தைப் பார்க்க முடியாமல் கையில் இருந்த சஞ்சிகையை திரும்பத் திரும்ப புரட்டியபடி இருந்தேன். அவன் சொன்னதற்குப் பதிலாக எனக்கு எதுவும் பேசமுடியவில்லை. அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது தான். ஆனால் அதற்காக நாம் என்ன செய்யலாம் என்பதுதான் எனக்குப் பிடிபடவில்லை.. இதே காரணங்களுக்காகவே போராட்டம் என்று இறங்கி வீடுகளிலிருந்து காணாமல் போன பல நண்பர்கள் ஆயுதங்கள் ஏந்தியபடி திரியும் விதமும் செயற்படும் விதமும் அவர்களிடத்தில் நம்பிக்கை ஏற்படுவதை விட அச்சத்தையே அதிகம் ஏற்படுத்துகிறது. தனித்தனி குழுக்களாக இயங்கத் தொடங்கிய இயக்கங்கள் இப்ப தங்களுக்குள்ளை சுடுபடத் தொடங்கியிருக்கின்றன. இப்படிச் சுடுபட்டுத் திரிவதை  ஏற்றுக்கொள்ளவோ இதுபோல நடந்துகொள்ளவோ எனக்கு ஒருபோதும் முடியாது…முடியாது என்பது மட்டுமல்ல இது முழுக்கலும் தவறான ஒரு போக்கு என்று எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. இப்பிடிச் சுடுபடுறதுக்கு ஒவ்வொருவருக்கும் சொல்லிக்கொள்ள ஒரு காரணம் இருக்கிறது. அதைச் சரி என்று நியாயம் கூறவும் அவர்களுக்கு ஒரு கூட்டம் ஆட்கள் இருக்கிறார்கள். மறுத்துக் கதைக்க முடியாதளவுக்கு அவர்களது நியாயங்கள் சம்பவங்களால் பொருத்தப்பட்டு தர்க்க ரீதியாக வளர்க்கப்பட்டிருந்தன..

 

ஆனால் நிதானமாக போயிருந்து யோசித்தால் எல்லோரிடமும் எதற்காக எதைச்செய்கிறோம் என்ற தெளிவில்லாத ,ஏதாவது செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற உணர்வினால் உந்தப்பட்ட ஒருவகை வெறியாட்டம் தான் மேலோங்கி இருப்பதுபோல,எல்லோரும் தமது சொந்த பந்தங்களை உதறிவிட்டு பொது நோக்கத்திற்காக செயற்படும் நோக்குடன் வீட்டை விட்டு வெளியேறி வந்த இளைஞர்கள் தானே?  ஏன் இப்படி எல்லாம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது? என்பது ஒரு முடிவு காணப்பட வேண்டிய முக்கியமான    கேள்வி என்று ஏன் யாரும் சிந்திப்பதில்லை…அன்று சந்தியில் நடந்த சம்பவமும் அதன்பின் கண்ணன் வீட்டில் நடந்த சம்பவமும் எனக்கு இன்னமும் மறக்கமுடியாத படிக்கு மனதை உறுத்திக் கொண்டிருக்கின்ற போது இதுபற்றி எப்படி என்னால் முடிவெடுக்கமுடியும்…?. ஓரு வகையில் சிவபால் என்னிடம் பத்திரிகையை காட்டியது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது..அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனதாக நான் நினைத்த போதும்..அவர்கள் என்னிடமிருந்து விலகிப் போய்விடவில்லை….

‘குழப்பமாக இருக்கிறதா?’ என்று கேட்டான் சிவபால், என்னுடைய மனநிலையை சரியாகவே படம்பிடித்துவிட்டவன் போல. நான் மௌனமாக ஆம் என்பது போல தலையாட்டினேன். அவன் அவசரப்படவில்லை..மெல்லிய புன்னகையுடன் ‘நிதானமாக யோசி..உனக்குப் புரியும்..இந்தப் பத்திரிகைய படித்துவிட்டு உனது கருத்தைச் சொல்லு..’ என்று கூறிவிட்டு எழுந்தான். மற்றவர்களும் எங்கோ புறப்படத் தயாராக இருந்தவர்கள் போல எழுந்து நின்றார்கள். நானும் எழுந்துவந்து அவர்களுடன் வீட்டின் கேட்வரைக்கும் நடந்து வந்தேன். அவர்கள் கேட்டைத் திறந்து கொண்டு வெளியேறிப் போவதை எனக்குப்பக்கத்திலே வந்து நின்று அக்காவும் பார்த்துக்கொண்டிருந்தாள். கொஞ்சத்தூரம் போனபின், நாங்கள் இன்னமும் கேற்றருகில் நிற்கிறோமா என்று பார்க்கத் திரும்பியதுபோல திரும்பிய கண்ணன் எங்களைப்பார்த்து கையசைத்தவிட்டுப் போனான்.

நான் அக்காவைத் திரும்பிப் பார்த்தேன். அவளிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது; பிறகு மௌனமக அடுப்படிப்பக்கமாக நடந்து போனாள். எனக்கும் வழமைக்கு மாறாக அவரகள்போன விதம் நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போன்றிருந்தது; விறாந்தைக் கதிரையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். மனம் ஒரு குறிப்பிட்ட திசையிலின்றி அங்குமிங்குமாக அல்லாடிக் கொண்டிருந்தது. கண்ணனாக்களின்  நடவடிக்கைகள் எனக்குப் புரிந்தும் புரியாததாகவும் இருந்தன.சற்றுமுன் சிவபால் சொன்ன வார்த்தைகள் மனதில் திரும்த்திரும்ப வட்டமிட்டுக் கொண்டிருந்தன

‘எங்கையடி உவங்கள்… போட்டாங்களே?…உத்தியோகத்துக்கு’-கேட்டபடி படியேறி உள்ளே வந்தாள் அம்மா. அவளது முகத்திலே கோபமா அல்லது சோகம் கலந்த ஆற்றாமையா என்று சொல்லமுடியாத ஒரு பாவம். ரொம்பக் களைத்துப் போனவள் போல இருந்தாள். எனது கதிரைக்கு அருகாக இருந்த கதிரையில் உட்கார்ந்து ‘அப்பனே முருகா’ என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தனது சேலைத் தலைப்பால் முகத்தை அழுத்தித் துடைத்தக் கொண்டாள். அக்காவிடமிருந்து பதிலேதும் வரவில்லை. அவளது மௌனமே அம்மாவுக்கு, நடந்திருப்பதை ஊகிக்கப் போதுமானதாக இருந்திருக்கும். அவளிடமும் இருந்து அக்கா விட்ட பெருமூச்சு வந்தது. என்னைப் பார்த்துச்  சிரிக்க முயன்றபடி ஏதோ சொல்ல முயன்றா. ஆனால் வார்த்தைகள ‘என்ன சொல்லப் போட்டுப் போறாங்கள்’ என்றுதான் வெளியில் வந்தன. நான் மௌனமாக இருந்தேன் எனக்கு சிவபாலும் கண்ணனும் என்னுடன் கதைத்தவைகளை அவவுக்கு சொல்ல முடியவில்லை. சொல்ல வேண்டாம் என்று உள்ளிருந்து ஏதோ தடுத்தது.

அம்மாவும் என்னுடைய பதிலை எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய சேலையை முழங்கால்வரை தூக்கிவிட்டுக்கொண்டு முழங்கால்களுக்குக் கீழ் கால்களை இரண்டுகைகளாலும் உருவி விட்டுக்கொண்டா. கால்களில் நரம்புகள் புடைத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தன. அவளுக்கு ஒரு அறுபது அறுபததைந்து வயதிருக்குமோ என்று தோன்றியது. செருப்புக் கூடப் போடாமல் நடந்து திரிகிற கால்கள். உளைவு எடுத்திருக்கலாம் என்று பட்டது. எனக்கோ எதுவும் பேச வரவில்லை. மனது ஏனோ கனத்துப் போய்விட்டிருந்தது. ‘இப்ப என்ன ஆட்டத்துக்கு இவங்கள் வெளிக்கிட்டிருக்கிறாங்கள்.. இருக்கிற இயக்கங்கள் போதாதெண்டு.. ஒருத்தனை ஒருத்தன் கொல்லுறதெண்டு துவக்கைத் தூக்கிக் கொண்டு வெளிக்கிட்டிருக்கிற நேரத்தில இவையும் ஒரு புது இயக்கமாம்.. எல்லாம் ஆளுக்காள் குத்துப்பட்டுச் சாகத்தான் இந்த ஆட்டம்;;….கடைசிலை அவன் வந்து எல்லாத்தையும் கொண்டு போகப்போறான்;..’ அம்மா தனது மனதைத் திறந்து கொட்டிக் கொண்டிருந்தாள். இதற்கெல்லாம் நான் ஏதாவது சொல்வேனென்று அவள் எதிர்பார்த்ததாக தெரியவில்லை. அக்கா  அடுப்படிக்குள்ளிருந்து தேனீருடன் வெளியே வந்தாள். தேனீரை என்னிடமும் அம்மாவிடமும் தந்துவிட்டு விறாந்தைத் தூணொன்றில் சாய்ந்துகொண்ட விதத்தில் அவள் அம்மாவின் கதைக்கு ஏதோ சொல்லப்போகிறாள் போலத் தோன்றியது. ஆனால் ஏனோ அவள் வாயைத் திறக்கவில்லை.

நானும் மௌனமாக இருந்தேன் என்னுள் பெரும் புயலொன்று உருக்கொண்டு பலமாக வீசத் தொடங்கியிருந்தது போல உணர்ந்தேன். போராட்டம் போராட்டம் என்று புறப்பட்ட இளைஞர்கள் தம்முள் முரண்பட்டு நிற்கும் இந்த நிலையில் சிவபாலுக்கும் மற்றைய நண்பர்களுக்கும் நம்பிக்கையுடன் தாமும் ஒரு இயக்கமாக இயங்குவோம் என்ற எண்ணம் எப்படித் தோன்றியிருக்கக் கூடும்? நம்பிக்கை மிகவும் ஆழமாக இல்லாமல் இப்படி ஒருவரால் ஒரு முடிவு எடுப்பது சாத்தியமாகுமா?..ஆனால் எனது இன்றைய வாழ்விலுந்தான் என்ன நம்பிக்கை வாழ்கிறது?. எம்மைச் சுற்றியுள்ள சூழலில் நடப்பவை ஒவ்வொன்றையும் ‘தலைவிதி’ என்று சுலபமாக ஏற்றுக்கொண்டு அதற்கத் தகுந்தாற்போல் எம்மை மாற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கையில் தான் என்ன நம்பிக்கை இருக்கிறது?… அம்மாவின் கேள்வியில் நியாயம் இருக்கிறது, அவளின் கவலையில் உண்மை இருக்கிறது. போராட்டம் என்று புறப்பட்டுப் போன இளந் தலைமுறையைப் பார்த்து பெருமையுடன் பேசிக்கொண்டிருந்த அவவுக்குள் இந்தமாதிரி ஒரு கேள்வி கேட்கிற உணர்வு வந்ததெண்டால்; அதற்கு என்ன காரணம்? ஆனால் சிவபாலுக்கும் நண்பர்களுக்கும் இது பற்றி நிறைய ஆழமான கருத்துக்கள இருக்கின்றன. போராட்டம், மக்கள் போராட்டம், அரசியல் வழி…. மக்கள் போராட்டமா..மக்களுக்காக ஒருசிலர் போராடுவதா?; என்று அவர்கள் பேசுகிற விடயங்கள் பல எனக்குப் புரியாவிட்டாலும் அவற்றில் உள்ள நியாயம் தெளிவாகப் புரியும்….. எங்களுக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பவன் போல சிவபால் பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். எப்படித்தான் இவ்வளவு விடயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறான் என்று பிரமிப்பாகவும் இருக்கும்.

ஒரு வகையில் இவனுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறது, அந்த நம்பிக்கையை அடைய வேண்டும் அதற்காக செயற்பட வேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறது. ஆனால் எனக்கோ? .. எனக்கு வாழ்ககையில் நம்பிக்கை இருக்கிறதா? வேலைக்குப் போவதும் வருவதும் என்பதை விட வேறென்ன நோக்கத்தை நான் என்னுள் எனக்கென்று வைத்திருக்கிறேன்?..ஹெலி பறந்தால் சைக்கிளைப் போட்டுவிட்டு படுத்துக் கிடப்பது….குண்டு விழுந்தால் பங்கருக்குள் ஓடிப்போய் பதுங்குவது….சுற்றி வளைப்பு வந்தால் கம்பனி அடையாள அட்டையை காட்டி நான் ஒரு அப்பாவி..எனக்கு எதுவும் தெரியாது என்று நிருபித்து தப்பிக்கொள்ள முயல்வது…. இந்த வாழ்க்கையில் என்ன நோக்கம் இருக்கிறது?.. அப்படித் தப்பிப் பிழைத்து வாழும் வாழ்க்கையில் நான் என்னத்தைத்தான் காணப்போகின்றேன்…எனக்கு ஒருகணம் எதிர்காலமே இருண்டு போய்க் கிடப்பது போலத் தோன்றியது. சிவபாலுக்கும் நண்பர்களுக்கும் ஒவ்வொரு நாளும் பேசுவதற்கும் செய்வதற்கும் நிறைய விடயங்கள் இருந்தன. அம்மா எழுப்புகிற கேள்விக்கும் நிச்சசயம் அவனிடம் எதாவது தெளிவான பதில் இருக்கும். சிலவேளை ‘இந்தக் குத்துப்பாடுகளை நாங்கள் பார்த்துக் கொண்டு எமக்கென்ன என்று ஒதுங்கிக் கொண்டால் மட்டும் இவை நின்று போய்விடுமா?..இதற்கு மாற்றாக  எப்படிச் செயற்பட வேண்டும் என்று தெரிந்துகொள்வதும்.. செய்வதும் எங்கள் கடப்பாடு இல்லையா..’ என்று சிவபால் கேட்கக் கூடும்….யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று அவர்கள் எனக்குத் தந்த சஞ்சிகை ஞாபகத்திற்கு வந்தது. அதிலே இப்படி ஏதோ சொல்லப்பட்டிருந்தது போல நினைவுக்கு வந்தது.. நான் அதை கல்லடுக்கிலேயே விட்டுவிட்டு வந்திருந்தேன் என்பது மனதில் உறைக்க அதை எடுக்கவென்று எழுந்து நின்றேன்.

அக்கா குசினிப்பக்கமாக திரும்பவும் போய்விட்டிருந்தாள். .அம்மா தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவளது தேனீர் பாதி அப்படியே இருந்தது. நான் கல்லடிப்பக்கமாக நடந்து அந்தச் சஞ்சிகையை எனது தோளில் தொங்கும் பையில் போட்டுக்கொண்டு திரும்பி வந்தேன். இப்போது அம்மாவும் சுயநிலைக்கு வந்திருந்தா. இப்போதைக்கு இங்கிருந்து வெளியேற வேண்டும் போலவும் நிறையவே தனியாக யோசிக்க வேண்டும் போலவும் இருந்தது. சிவபால் என்னிடம் கேட்ட கேள்வி திரும்பத் திரும்ப என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘நீ போகப் போறியோ?’  படிக்கட்டால் விறாந்தையில் நான் ஏறிக்கொண்டிருக்கையில் அம்மா கேட்டாள். ‘ஓம்’ என்பது போலத் தலையை ஆட்டினேன்
‘ம்…இவங்களையும் பிழை சொல்ல முடியேல்லை…ஆனா..எனக்குப் பயமாக இருக்குது..இவங்கள் வெளிக்கிட்டிருக்கிற மாதிரியைப் பாத்தால்,என்ன நடக்குமோ எண்டு பயமாக இருக்குது…றோட்டிலை தெருவிலை மற்ற இயக்கப் பெடியளை நாயைப்போலை சுட்டுப் போட்டுட்டுப் போறவனுக்கு கொக்கோக் கோலா வாங்கிக் குடுக்கவும் சனம் இருக்குது.. இவங்களையும் ஆரும் பிடிச்சு மாட்டிவிட்டால் எண்டு பயமா இருக்கு..
எனக்கு இதற்குப் பதில் சொல்ல வார்த்தைகள் இருக்கவில்லை. எனக்கு சிவபாலுக்கம் நண்பர்களுக்கும் ஏதாவது நடந்தவிடுமோ என்பதை விட அவர்களது பாதை வெற்றி பெறுமோ.. வளர்ந்து பெரிதாக வரமுடியுமோ என்ற பயம்தான் அதிகமாக இருந்தது.அவர்களது ஆர்வம், துடிப்பு, உழைப்பு எல்லாவற்றிற்கும் பயனுள்ளவிதத்தில் ஒரு மாற்றம் வருமா..?
யோசித்துக் கொண்டிருக்கும்போதே..அவர்களின் சைக்கிள்கள் வேகமாக திரும்பி வந்தன. கண்ணன்தான் முதலில் சைக்கிளில் இருந்து குதித்து ஓடிவந்து விறாந்தைப் படிகளில் ஏறினான். மற்றவர்கள் கல்லடுக்கின் அருகாகமௌனமாக நின்று கொண்டிருந்தார்கள்….

 

‘என்ன பிரச்சனை’ என்று கேட்டேன் அவனிடம். ‘ஓன்றுமில்லை’ என்றபடி வேகமாக அறைக்குள் நுழைந்தவன் அவன் என்ன செய்யப்போகிறான் என்று யோசிப்பதற்கு முன்பாக கையில் ஒரு பையுடன் வெளியே வந்தான். என்னைப்பார்த்துப் புன்னகைத்தபடி அவர்களை நோக்கிப் படியிறங்கி நடந்தான். அவனைப்பின் தொடர்ந்து நானும் படிக்கட்டுவரை நடந்து போனேன், கண்ணனிடமிருந்து பையை வாங்கிக் கொண்டு அவர்கள் அனைவரும் மீண்டும் புறப்படுவதற்குத் தயாரானார்கள், அவர்களது முகத்தில் தீவிரம் பரவியிருந்தது. சிவபால் சைக்கிளை உருட்டியபடி ‘சந்திப்போம்’ என்று சொல்லிப் புன்னகைத்தான்.மற்ற இருவரும் அவனைப் பின்தொடர்ந்தனர், நான் கண்ணனைத் திரும்பிப் பார்த்தேன், அவன் அவர்கள் போவதையே பார்த்தபடி நின்றான்.
நான் கண்ணனிடம் திரும்பவும் கேட்டேன்.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்ணன் சொன்னான்: ‘கொஞ்ச நாளைக்குத் திரும்பவும் தலைமறைவாக இருக்க வேண்டியிருக்கு..நிலமை ரொம்பவும் மோசமாக இருக்கு.’
‘ஏன்… என்ன நடந்தது..’
கண்ணன் மெல்லிய குரலில் பேசினான்..’இதுவரை எதுவும் நடக்கவில்லை..இனி எப்பவும் எதுவும் நடக்கலாம்..எங்களுக்கு அரசுமட்டும்தான் எதிரி எண்டு நாங்கள் நினைச்சால்..எங்களை தங்கடை எதிரியளாக மற்ற இயக்கங்கள் முடிவெடுத்திருக்கு….இண்டைக்கப் பின்னேரம் கரவெட்டியிலை மூண்டு பேரை தூக்கியிட்டாங்கள்..’

‘ஐயோ..’ எனக்கு அதற்குமேல் பேச வரவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.அன்றைக்கு சந்தியில் நடந்த சம்பவம் திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. கண்ணனை பார்த்தபடியே எதுவும் பேசாமல் திகைத்துப் போய் நின்றேன். அவன் தொடர்ந்து சொன்னான்.
‘இப்போதைக்கு..இதைத்தவிர வேறு வழியில்லை..நாங்கள் செயற்பட வேணும் எண்டால் இது தவிர்க்கமுடியாததுதான்’
சிவபாலின் வார்த்தைகளைப் போல ஒலித்தன அவனது வார்த்தைகள் வந்த விதம்.
‘அப்ப பிடிபட்டவையளின்ரை நிலமை என்ன?’
‘அவங்கள் மூண்டு பேரும் தப்பி ஓடிவந்து சொல்லித்தான் எங்களுக்கே இந்தக் கதை தெரியும்…அதனாலை தான் எல்லாரும் இடத்தை மாத்திறது எண்டு முடிவெடுத்தனாங்கள்..’
‘அப்ப நீ…..உனக்குப் பிரச்சினை இல்லையா?’
‘கனக்க யோசிக்காதை….எனக்கு வேறை வழியிருக்கு..இப்ப நீ போயிட்டுவா..ஒரு கொஞ்ச நாளைக்கு இந்தப்பக்கம் வரவேண்டாம்…நான் உன்னை வந்து சந்திக்கிறன்..”
நான் எனது அறைக்குத் திரும்பினேன். மனம் பயத்தில் உறைந்துபோய் விட்டிருந்தது. அந்த நாற்சந்திச் சம்பவம் ஏனோ என் கண்முன் திரும்பத்திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது.நீண்டநேரம் துக்கம் பிடிக்காமல் உழன்று கொண்டிருந்தேன். நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடக்குமோ என்று நினைக்கவே பயமாக இருந்தது. ஆனாலும் இத்தனை பயங்கரமான நிலமையிலும் சற்றும் எதிர்பார்க்க முடியாத விதத்தில் கண்ணன் உறுதியாக இருந்தது ஆச்சரியமாக  இருந்தது. கூடவே அவன் மீதான மதிப்பும் பெருமை கலந்த உணர்வு என்னுள் பெருகுவதை உணர்ந்தேன். அவனைப்பற்றி யோசித்தபடி படுக்கையில புரண்டு கொண்டிருந்த எனக்கு, அவன் தந்த சஞ்சிகையின் ஞாபகம் வரவே அதனை எடுத்துப் பிரித்தேன். சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கம் முதற் பக்கத்தில் ஆரம்பமாகி மூன்று பக்கங்களுக்கு நீண்டிருந்தது.

தலையங்கம் ‘காஸி நஸ்ருல் இஸ்லாம்’ என்ற ஒரு கவிஞரின் கவிதையொன்றின் நான்குவரி மேற்கோளுடன் ஆரம்பமாகியிருந்தது:
‘புயல் சீறி அடிக்கிறது..
எனினும் படகு சென்றாக வேண்டும்
நாதியற்ற தேசம் நீந்தத் தெரியாததால்
மூழ்கிக் கொண்டிருக்கிறது’
-இந்த நான்கு வரிகளுக்கப்பிறகு எனக்கு எதையும் படிக்கும் உணர்வு எழவில்லை. உடனடியாக கண்ணனை சந்திக்கவேண்டும். அவர்களுடன் சேர்ந்து நானும் நாதியற்ற தேசத்தை மூழ்குவதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே என்னுள் திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தது. இந்த எண்ணம் எழுந்தது முதல் எனது மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. எப்படிக் கண்ணனை சந்திப்பது..எப்படி அவர்களுடன் இணைவது…எத்தகைய வேலைகளில் ஈடுபடுவது..இப்படியே திரும்பத்திரும்ப எண்ணியபடி தூங்கிப்போனது எப்பொதென்றே தெரியாமல் தூங்கிப்போய்விட்டிருந்தேன்

0 0 0

கதை இத்துடன் நின்றுவிட்டிருந்தது.
கதை எழுதப்பட்ட காலம் கிட்டத்தட்ட 1986 ஆக இருக்கலாம் என்று பட்டது. மாஸ்டர் சொன்ன தகவலின்படி கணேஸ் எண்பத்தியாறு நடுப்பகுதியளவில் வேலையை விட்டுவிட்டான். வேலை விடப்பட்ட காலத்தில் எழுதத் தொடங்கிய அல்லது எழுதிய ஒரு கதையாக இது இருக்கலாம். இந்தக் கதையில் வரும் நண்பர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாக தான் நினைப்பதாக மாஸ்டர்; சொன்னார்.; கணேஸ் பிடிபட்ட காலத்தில் அவனுடன் சேர்ந்து கிட்டத்தட்ட அவனுடைய சகாக்கள் முப்பது பேரளவில் பிடிபட்டதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் அவர்களிலும் ஒருவர் மட்டும் எப்படியோ தப்பியோடி இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இதை தான் அறிந்த இயக்கத் தொடர்புகளுக்குள்ளால் அறிந்து கொண்டதாகவும் மாஸ்டர் சொல்லிக் கொண்டிருந்தார்.

1987இல் இந்திய ராணுவம் வந்ததற்குப் பிந்திய ஒருநாள் மாலை தனது வீட்டுக்கு வந்த கணேஸ் ஒருசில பிரசுரங்களையும் சஞ்சிகைகளையும் வைத்திருந்ததாகவும் அவற்றை சில நாட்களுக்கு தனது வீட்டில் தனது அனுமதியுடன் வைத்துவிட்டுச் சென்றதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். அவன் மிகவும் நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் தான் நடந்து கொள்வதாக அவரிடம் சொல்லியிருந்தானாம். ஆனால் அவனிடம் இந்திய இராணுவம் குறித்து மிகவும் தீவிரமான கோபமிருந்ததை தான் உணர்ந்ததாகவும் மாஸ்டர் சொல்லிக் கொண்டிருந்தார். மாஸ்டர் இதை சொல்லுகையில் தற்செயலாக ஒருதடவை ஆஸ்பத்திரிப் பின்வீதியில் கண்டு அவனுடன் உரையாடிய ஒருசில நிமிட உரையாடல் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.. நீல நிற ரௌசரும் வெளியிலே விடப்பட்ட அரைக்கை சேட்டுடனும் சைக்கிளில் என்னைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்த அவன் நடந்து கொண்டிருந்த என்னைக் கண்டுவிட்டு திரும்பி அருகாக வந்து சைக்கிளை நிறுத்தியபோது நான் ஆச்சரியத்தால் திகைத்துப் போனேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலான காலத்தின் பின்னான சந்திப்பு. அவனைப் பற்றி நான் இந்த இடைக்காலத்துள் அதிகமாக எதையும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அவன் வேலையை விட்டுவிட்டு இயக்க வேலையில் இறங்கிவிட்டதாக மட்டும் அறிந்திருந்தேன். எந்த இயக்கம் என்றுகூட நான் அறிந்திருக்கவில்லை.. நிறையவே மாறிப் போய்விட்டிருந்தான். கறுத்தும் சற்று நெடுத்தும் இருப்பதாக தோன்றியது. ‘என்ன இந்தப்பக்கம்’ என்று அவன் சைக்கிளை நிறுத்தியபடி புன்னகையுடன் கேட்டதுடன் தொடங்கிய உரையாடலின் போது அவன் சொன்ன ஒரு வசனம் எனக்கு  திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வந்தகொண்டிருக்கும். ‘நீ எந்த இயக்கமடாப்பா..நான் கொழும்பிலை இருக்கிறதாலை எனக்கு ஒரு மண்ணும தெரியாது’ என்ற எனது கேள்விக்கு சிரித்தபடி அவன் சொன்னான்..’இஞ்சை இப்ப ஒண்டும் இயங்கேல்லை..எல்லாம் இயக்குப் படுகுது.. நாங்கள் மக்களோடை நிக்கிறம்.’.
‘ஓருநாள் வரும்’; என்ற அவனது இந்தக் கதைக்கும் அவன் அன்று சொன்னதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதோ என்னவோ..இந்தக் கதையை வெளியிட்டு வைப்பது நல்லது என்று மாஸ்டரிடம் சொன்னேன் நான்.
மாஸ்டர் மறுப்பேதுமில்லாமல் மௌனமாக தலையை ஆட்டி ஒப்புக்கொண்டார்
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.?  ……………………….
00

 

13 Comments

 1. என்ன சொல்வது பிரசுரிக்கத்தான் வேண்டும்….
  பிரசுரித்தாய்ற்று…
  வாசித்து முடித்தவூடன் உடல் புல்லரிக்கின்றது….
  ஆட்டுவிப்பவர்களும் ஆடுகின்றவர்களும் யாருடைய நல்ன்களுக்காவோ ஆடட்டும்….

  இவ்வளவூ முடிந்த பின்பும் இன்னும் நம்பிக்கையூடன்…
  இப்பொழுதம் மக்களின் பக்கம் நிற்கத்தானே வேண்டும்…
  நாம்…
  மீண்டும் பிரசுரித்த உங்களுக்கு நன்றி சொல்வதா…
  எழுதியவருக்கு நன்றி சொல்வதா….
  நட்புடன்
  மீராபாரதி

Post a Comment