Home » இதழ் 10 » *நினைவின் சுவை: ‘பொலின்டன்’-திருமாவளவன்

 

*நினைவின் சுவை: ‘பொலின்டன்’-திருமாவளவன்

 


 

அன்று வெள்ளிக்கிழமை

நான் திருமண மண்டபத்தில் நுழைந்தேன்.  பாதி மண்டபம் கூட நிறைந்திருந்திருக்கவில்லை. ஒரு வேலைநாளில் பகலில் திருமணத்தை வைத்தால் யார் வருவார்கள் ?

ஒருவர் அலுத்துக் கொண்டார். எனக்கு மிக நெருங்கிய உறவினரின் திருமணம். நான் வழமையில் மாலை வேலைக்கு புறப்படுபவன்.  இன்று அதனால் காலைத் திருமணத்திற்கு வர வாய்த்திருந்தது.   இப்படியான சடங்குகளில் மட்டுமே உறவினரை ஒருசேர சந்திக்கவும் உரையாடவும் முடிகிறது. திருமணத்தைவிடவும் அந்த வாய்ப்பே முக்கியமானதாகிவிடுகிறது.

சடங்கு அதன்பாட்டில் நடந்தபடி இருந்தது. நடத்துபவர்களும் வீடியோக்காரரும் தவிர வேறுயாரும் திருமணத்தை அவதானிப்பதாக தெரியவில்லை.  வீடியோ கமெராக்காரருக்காகவே சடங்குகள் நடப்பது போன்ற தோற்றப்பாடே தென்பட்டது.  சபையினர் வட்டவட்டமாக அமர்ந்து ஒருவரோடு ஒருவர் குசலம் விசாரித்து கதைத்துக் கொண்டிருந்தனர். அதற்கேற்றபடி இருக்கையிட்டு மண்டப அமைப்பும்இருந்தது.

பிறதேசத்திலிருந்து பலர் வந்திருந்ததால் அவர்களைச் சூழ ஒருகூட்டம் நின்றது. வந்தவர்களுக்கும் ஊரவர்கள் எல்லோரையும் ஒரு சேரச்சந்திக்க இதைவிட்டால் வேறு தருணம் வாய்க்காது, கனடாவில் தமிழரின் திருமணங்கள் இப்படித்தான் நடக்கின்றன.

000000

 

இசைச்சேர்கையாளன் உச்சஸ்தாயியில் தன் கருவியை ஒலிக்க விட்டிருந்தான், நான் அதற்குமேல் கத்திக் கத்திக்  கதைக்கவேண்டியிருந்தது. மிகவும் களைத்துப் போயிருந்தேன்.,திருமணம் முடிந்து வீடு திரும்புவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஒருவர் வந்து நீங்கதானே சிவம். உங்களை ஒருவர் வெளியே தேடுகிறார் என்றார். நான் எழுந்து சென்றேன்.  மண்டபத்தின் நீண்ட விறாந்தையில் ‘பொலின்டன்’ நின்று கொண்டிருந்தான்.

பல கொம்புகள் கொண்ட குத்துச் செடி மேல் சேலையை உலரப் போட்டது போல அவன் தோற்றம் இருந்தது. அந்த அளவுக்கு தோலை ஊடறுத்து எலும்புகள் துருத்திக் காணப்பட்டன. பக்கவாதமும் நோய்களும் சிறிதுசிறிதாக அவனைத் தின்று தீர்த்திருந்தன.

அவன் கண்கள் மிகச் சிறியன, பேசும்போது கண்மடல்களை சுருக்கித்தான் பேசுவான். அதனால் அது மேலும் குறுகி ஒரு கீற்றுக்கோடு போலாகிவிடும். எங்கோ ஒரு குடிசையில்  காற்றிலாடும் கைவிளக்கின் சுடர் போல அதில் துருதுருவென ஆவல் ததும்பி வழிந்தது, அவன் ஆன்மாவிலிருந்து அந்த ஒளி வழிந்துகொண்டிருந்ததாகவே நான் உணர்ந்தேன்.

எப்பிடி இருக்கிறாய். நீ வந்து நிற்கிறாய் என்று சொன்னாங்கள்.  அதுதான் தேடினனான்.

இது அவனுக்கே உரிய உபசரிப்பு வார்த்தைகள், தொடர்ந்து சில நிமிடங்கள் பலதும் பத்தும் பேசினோம். பார்த்துக் கனநாளாச்சு… ஏன் ஊர் ஒன்றுகூடலுக்கு வாறதில்லை என்றான்.  ‘அது ஒரு …………..குடும்ப “கும்பமேளாவாக”   மாறிப்போய்விட்டது என்றேன். ‘சும்மா அவங்களைவிட்டுப் போட்டு நீ வா’என்றான். பார்க்கலாம் என்றபடி விடை பெற்றேன்.

ஒரு உதைபந்தைப் போல ஊரவர் ஒவ்வொருவர் காலுக்குள்ளும் உதைபட்டலைந்தவன் நான். இன்று இங்கு வந்து நிற்பதை அறிந்து அவன் என்னைத் தேடி உரையாடிய சம்பவம் என்பது மனசுக்குள் ஒருவித கிளர்ச்சியை எற்படுத்தியிருந்தது. வீடு திரும்பும்வரை அவன் நினைவுகள் எனக்குள் மீளமீள வந்து போயின. எனக்குள் ஒருகறுப்பு வெள்ளைக் காலத்துப் படம் ஓடிக்கொண்டிருந்தது………………..

00000

என் நினைவுக் கணக்கு சரியாக இருக்குமாயின் அது அறுபத்திநாலு அறுபத்தைந்துக் காலப் பகுதியாக இருக்கலாம்,  நாங்கள் இருந்த வளவின் வடக்குப் புறத்தில் ஒழுங்கை இருந்தது. அதிலிருந்து செல்லும் கிழக்குப்புற எல்லையை இரண்டு வளவுகளின் வேலிகள் பிரிக்கும்.

கிழக்கு மூலை ஒழுங்கையிலிருந்து சரிபாதியை  அம்மாவின்  சிறியதேப்பனின் வீட்டுவேலி குறுக்கறுக்கும்.  அதை அம்மா எப்போதும் ‘சின்னையர் வளவு’ என்றே சொல்லுவார். நாலு புறமும் வேலியிடப்பட்ட மிக அச்சறுக்கையான காணி. அந்த வளவை அவர் தனது இரண்டாவது மகளுக்குச் சீதனமாக கொடுத்திருந்தார்.  அவ எனக்கு உறவில் சின்னம்மா முறை.

அந்த வளவுக்குள் எங்கள் வீட்டு வேலிப்புறமாக சின்னையர் வீடு இருந்தது. சீமெந்துக் காலத்தின் தொடக்கத்தில் எழுந்த கிழக்கு வாசல் வீடு, மிகப் பழமையானது.   பின் ,காலத்துக்கு காலம் செப்பனிடப் பட்டதும் புதிய இணைப்புகள் சேர்ந்ததுமான நீண்ட பாரம்பரியம் அதன்மீது படிந்து கிடந்தது.  வீட்டின் முன் புறமிருந்து அடி வரை மாமரங்கள் நிறைந்த சோலைவளவு. முற்றத்தில் ஒரு அம்பலவி தவிர மீதி எல்லாமே செம்பாட்டான் இன மரங்கள்.

அடுத்த பின்பாதி வேலி ‘நாகலட்சுமி மாமி’ யுடையது. அது எங்கள் வளவு ‘மூலைக் கண்டு மா’ வரை நீண்டிருக்கும்.  என் வீட்டிலிருந்து பார்த்தால் அந்த இரு வளவுகளும் திருக்கலில் பூட்டிய சோடி மாடுகள் கிழக்கு நோக்கி பாய்வது போலத் தோற்றம் தரும்.

எனக்கு நினைவறிஞ்ச காலத்தில் ‘நாகலட்சுமி மாமி’யின் வளவு வெறும் தரிசாகக் கிடந்தது. அந்த வளவுக்கப்பால் பண்ணாவத்தைக் கிணறு இருந்தது. மிகப்பழமையானது. அதன் தொப்பிக்கட்டுகள் கூட அழிந்து போயிருந்தன. அச் சிதைவுகளின் மேல் குத்துச் செடிகள் முளைத்திருந்தன. பார்த்தால் ஒரு பாழ்கிணறு என்றே யாரும் எண்ணுவர். ஆனாலும் ஒரு பத்தாயிரம் கண்டுத் தோட்டத்திற்கு நீர்பாயும் வசதி கொண்டது.

சுற்றிலும் வெங்காயமும் வாழையும் புகையிலையும் பச்சைப்பசேலென விரிந்திருக்கும். கிணற்றிலிருந்து இரண்டு வாளிச்சூத்திர பொறிமுறை மூலம் நீர் பாச்சும் வசதியிருந்தது. காலையில் கந்தையன் மாடு வளைக்க சூத்திரம் இயங்கும். நாகலட்சுமி மாமியின் காணியை ஊடறுத்து செல்ல எங்கள் வேலியில்’ பொட்டு’ இருந்தது.  தினமும் அதில்தான் எங்கள் காலைக் குளிப்பு நடக்கும்.  பயிருக்கு கூடாதென சவுக்காரம் போட அனுமதிக்கமாட்டார்கள். அதனால் காகக் குளிப்பைப் போல இருக்கும்.

அக்காலத்தில்தான் நாகலட்சுமி மாமியின் வளவுக்குள் புதிதாகக் கிணறு வெட்டினார்கள். அதுவும் எங்கள் வளவு வேலிக்கருகாகவே அமைந்தது. அந்த நாட்களில் தான்  நாகலட்சுமி மாமியின் மகன் ‘பொலின்டன்’ எனக்கு அறிமுகமானான். அவன் என்னைவிடப் பத்துவயதாகிலும் மூத்தவன்.

0000000

 

“பொலின்டன்”

இதுவென்ன பெயர்? பெயர் வித்தியாசமாக இருக்கிதே என அம்மாவிடம் கேட்டிருப்பேனோ? அல்லது அம்மா எந்தச் சந்தர்ப்பத்தில் இக்கதையை  சொல்லவேண்டி வந்தது இப்போது நினைவில்லை….  ஆனால் அவ சொன்ன கதை நல்ல ஞாபகம்.

இரண்டாம் உலகச் சண்டை  நடந்த காலத்தில் வெள்ளைக்காரன்டை  பட்டாளம் பாலாலியில் முகாமிட்டிருந்தது, அவர்கள்  இயல்பாகவே ஊர்மனைக்குள் நடமாடுவார்கள். அதில் ஒருவனின் பெயர் ’பொலின்டன்,  துருதுருவென  இருப்பான்.  அப்ப நாங்கள் குமர்ப் பிள்ளையள். அவன் ஒழுங்கையால் போனால் வேலி பொட்டுக் குள்ளாலை பார்ப்போம்.  அவ்வளவு அழகன்.

அப்பதான் நாகலட்சுமி அக்காவுக்கும் அவ புருசன் செல்லத்துரையருக்கும் இவன் பிறந்தான்….  தாய் தேப்பன் வைச்ச பேர் வேறை. இவனும் குழந்தையிலை நல்ல வடிவு.  பால்போலை நிறம். துருதுருவெண்டு இருப்பான். சரியான துடியாவரணம். அதாலை எல்லாரும் ‘பொலின்டன்’ எண்டு கூப்பிடத் தொடங்கியிட்டினம். அந்தப் பேரே  பிறகு நிலைச்சுப் போச்சு.

அம்மா கதை சொல்லும் அழகே அதை சாகும்வரையிலும் நினைவில் வைத்திருக்கப் போதுமானது.

அவர்கள் கிணறு வெட்டிய பிற்பாடு அந்தக் காணிக்குள் தோட்டம் செய்யத் தொடங்கினார்கள். எங்கள் ஊர் கிணறுகள் சதாரணமானவை அல்ல, இருபத்தேழு இருபத்தெட்டுமுழ ஆழம்  துலாச் செய்வதாயின் காற்றிலாடி நுனிவரை வைரம் பாய்ந்த  உயரிப்பனை வேண்டும்.

அந்தக் காலத்தில் நீர் இறைக்கும் எந்திரங்கள் சிறிதுசிறிதாக வரத்தொடங்கிவிட்டன,  இருந்தும் மேலிருந்து அத்தனை ஆழத்திலிருந்து  நீரை உறிஞ்ச அவற்றால் முடியாது. அதனால் கிணற்றுக்குப் பக்கத்தில் சிறிய ‘மெசின் கிடங்கு’ வெட்டுவார்கள்.  அதுவே எங்கள் ஊரில் பத்துமுழம் ஆழம். அவைகூட நீர்வேலிப் பக்கத்து கிணறுகள் போல இருக்கும்.

 

இவர்களும்  மெசின் கிடங்குக்குள்ளை ஒரு  ‘வூசிலி’ மெசினை  இறக்கியிருந்தினம். அதொரு பெரிய உருப்படி.  அதிலிருந்து நீர் சேமிப்பதற்கு அருகில் பெரியதொட்டி கட்டியிருந்தார்கள், பின்நாளில் நாங்கள் குளிப்பதற்கு அதுவே வாய்ப்பாகப் போய்விட்டது.

‘நாகலட்சுமி மாமி’ யின் தம்பியைத்தான் சின்னம்மா திருமணஞ் செய்திருந்தார். இருந்தும் இரண்டு குடும்பத்துக்கிடையில் மனஸ்தாபம். ஒருநாள் சின்னையர் வீட்டு முன் ’போட்டிக்டிக்கோ’ வில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த போது கூரை ஓட்டின்மீது கல் விழுந்தது போலச் சத்தங் கேட்டது. என்ன சத்தமெனப் பதகளித்து பின்புறம் சென்றபோது அடுத்த வளவில் பொலின்டன் மெசின் கிடங்கினுள் இறங்கிக் கொண்டிருந்தான்.

அவ்வளவுதான். ஆடிமாசக் காவோலையில் தீப்பிடித்தது போல பற்றி எரியத் தொடங்கிவிட்டது. வாய்ச் சண்டை பலத்தது, அன்று தொடங்கியதுதான். இடையிடையே கல்லெறிச் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது, சத்தம் கேட்டதும் வெளியே வந்து பார்த்தால் பொலின்டன் தோட்டத்தில் நிற்பான், முடிவில் பொலிஸ் நிலையம் சென்றார்கள்,  ஆனால் கல்லெறிச் சத்தம் நின்றபாடில்லை.

 

ஒரு நாள் காலையில்  கிணத்தடியிலிருந்து எங்கள் வளவுக்கால் பொலின்டன் வந்து கொண்டிருந்தான்.  அவனது நோக்கம் எங்கள் முற்றத்தைத் தாண்டி முன் ஒழுங்கையில் ஏறுவது, நான் அவன் பின்னே நடந்து வந்துகொண்டிருந்தேன் .

திடீரென சின்னம்மா வீட்டுக்காரர் அவர்கள் வளவின் பின்புறமாக ஒடிவந்தார்கள். ’இந்தா போறான். எறிஞ்சு போட்டு நல்லபிள்ளை மாதிரிப் போறான்’ என்றார்கள். எனக்கு கல்விழுந்த சத்தமே கேட்கவில்லை. ஒரு அரை மணி நேரமாக நான் பொலின்டனுடன் தான் நின்றேன்.

’அம்மா! பொலின்டன் அண்ணா என் முன்னால்தான் நடந்துபோனவர், நான் அவருடன் கதைத்துக் கொண்டு நடந்து வந்தேன், எனக்கு நல்லாய்த் தெரியும். அவர் எறியவில்லை.’

’நீ சின்னப் பெடியன். உனக்கென்ன தெரியும். அவன் பொக்கட்டுக்குள்ளை கல்லை ஒழிச்சுவைச்சிருந்து போட்டு  எறிஞ்சிருப்பான்’ என்றார்.

என்னுடைய பேச்சு எடுபடாது  என்றது நல்லாய் விளங்கிப் போச்சு, நான் வாயைப் பொத்திக்கொண்டேன். கார்க்கார மணியருக்கும் கட்டுவன் ‘சின்னப் பொடி’க்கும்தான் நல்ல பிழைப்பு. ஒன்றவிட்ட ஒருநாள் பொலிஸ் நிலையம் போய்வருவதே வழக்காயிற்று.

ஒருநாள் இவர்கள் பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்பிய போது வீட்டின் முன் கூடத்து சன்னல் கண்ணாடிகள் எல்லாம் உடைக்கப்பட்டிருந்தன. நீங்கள் போன கையோடு பொலின்டன் வந்து உடைத்ததாகவும் தான் பயத்தில் அறைக்குள் ஒழிந்திருந்ததாகவும்  அவர்கள் வீட்டில் வேலைக்கிருந்த சிறுமி முறையிட்டாள்.

உடனேயே அதே காரில் திரும்பவும் பொலீஸ் நிலையம் சென்று மறுமுறைப்பாடு வைத்தார்கள்.

ஒரு காலையில் நான் எழுந்த போது அம்மா யாரையே திட்டிக்கொண்டிருந்தார். நான் யாரைத் திட்டுகிறார் எனத் தெரியாது விழித்தேன். நீ நல்ல நித்திரை, எங்கள் வீட்டுக்கு மேலும் ஒரு கல்லெறிச் சத்தம் கேட்டதென்றார். அவரது கையில் ஒரு பெரிய கல்லு இருந்தது. ஒரு ஊமல் கொட்டையை விடப் பெரியது. கிட்டத்தட்ட ஒரு சிறிய தேங்காய் அளவில் இருக்கும். இக்கல்லு வீட்டு தாழ்வாரக் கரையோரம் கிடந்ததென்றார்.

இப்போது கூட அந்தக்கல்லை தூக்கி என்னால் ஒரு பத்தடி உயரம் எறிய  முடியாது. எங்கள் வளவுக்கு வெளியே இருந்து அக்கல்லை ஒருவன் எறிய முடியுமென்று நான் நம்பவில்லை.  அப்படி எறிந்தாலும் கூட வீட்டுக் கூரையை புட்டுக்கொண்டு உள்ளே விழுந்திருக்கும்.

ஆனாலும் அம்மா பொய் சொல்வார் என நான் நம்பவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஒன்றில் அவர் கனாக் கண்டிருக்க வேண்டும்  அல்லது பிரமையாய் இருக்கலாம்.

ஒரு  காலை பத்துமணியிருக்கும் பொலின்டன் தோட்டத்தில் ஏதோ அலுவலில் ஈடுபட்டிருந்தார். எல்லோரும் எப்படி கல்லெறிபவனை கையும் மெய்யுமாகப்  பிடிக்கலாம் என்ற ஆலோசனையில் இருந்தனர். அதே வேளைதான் அந்த சம்பவம் நடந்தது.

அவர்கள் வீட்டின் பின்புறம் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு நீர்த் தொட்டி இருந்தது. ஏதோ எடுப்பதற்குச் சென்ற வேலைக்காரச் சிறுமி பயத்தில் உடல் நடுங்க ஒடிவந்தாள். பொலின்டன் தண்ணீர் தொட்டி அருகே நிற்பதாகச் சொன்னாள். எல்லோரும் சுற்றிவளைத்து ஒடினார்கள்.. அங்கேயிருந்து பொலின்டன் மாயமாக மறைந்து விட்டான். தொட்டியடியில் துணிகள் போடுவதற்காக வைத்திருந்த ‘ஸ்டான்ட்’  வேலிக்கரையோரம் கவிழ்ந்து போய் கிடந்தது.

பொலிசாருக்கு அலுத்துப் போய்விட்டது. இவர்கள் வீட்டுக்கு இரண்டு பொலிசாரை காவல் போடமுடியுமா? பொலிஸ் விதானையாரின் தயவை நாடியது. இந்த நாட்களில் விதானையாருக்கு நல்ல மதிப்பும் பவரும் இருந்தது. எங்கள் பகுதிக்கு நடராஜா என்பவர் விதானையாக இருந்தார்,  அவர் ஏழாலையைச் சேர்ந்தவர்.

இரண்டு மூன்று நாட்களாக இரண்டு இளைஞர்கள் தினமும் காலையில் வந்து மாலைவரை மாமரங்களுக்குள் ஒளித்திருந்து காவல் பார்த்தனர், அவர்கள் இருக்கும் மட்டும் கல்லெறி சத்தம் கேட்காது,போனதும் கேட்கும்.

நல்லவேளை! விடுதலை இயக்கங்கள் தோன்றாத காலம் அது. இயக்ககாலமென்றால் மின்கம்பத்தில் தோரணமாக்கியிருப்பார்கள், பொலின்டனின் இந்தப் பதிவும் இத்தோடு நிறைவு கண்டிருக்கும் .

முடிவில் அறத்தின் மீது நம்பிக்கை வைத்தனர். இரு குடும்பத்தினரும்.., சத்தியம் செய்ய வேண்டும். பொலின்டன் தான் எறியவில்லை என்றால் தாயைக் கடந்து சத்தியம் செய்ய வேண்டும்.  சின்னம்மா  தான் எறிந்ததை கண்டிருந்தால் தன் மகனை கடந்து சத்தியம் செய்ய வேண்டும்.

அன்று கோவிலடியில் நிறையப் பேர் கூடியிருந்தனர். என்னை அம்மா போவதற்கு அனுமதிக்கவில்லை. சின்னப்பொடியனுக்கு அங்கை என்ன வேலை. ’வீட்டிலை நின்று தம்பியவையை பார்’ என சொல்லிவிட்டு கடைக்குட்டி கண்ணனைத் தூக்கி இடுப்பிலை வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். அதனால் அங்கு என்ன நடந்ததென்ற விபரம் எனக்குத்  தெரியாது.

சத்தியம் செய்தார்…. செய்யவில்லை ….. பலவிதமான கதைகள் இருந்தன. ஆனால் கல்லெறி மட்டும் நிற்கவில்லை.

ஒரு காலை வேவிச்சின்னம்மா வந்திருந்தார்.  அவதான் சின்னையரின் மூத்தமகள். வீட்டின் முன் ’போட்டிக்கோ’விலிருந்து எல்லோரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரெனச் சத்தம் கேட்டது. எல்லோரும் வீட்டைச் சுற்றி ஓடினார்கள். வேவிச்சின்னம்மா வீட்டினுள்ளே சென்று கல்லெறி சத்தங் கேட்ட அறையைப் பார்த்தார். மேலே ஓட்டை ஒறுவாய் எதுவும் இல்லை. கீழே ஒரு தும்புத்தடி கிடந்தது. அது அவருக்கு சந்தேகத்தை கொடுத்தது.

அதன்கைப் பிடியில் மாவு ஒட்டிக்கிடந்தது. எடுத்துப் பார்த்தார். அதில் ஈரம் பசை போல ஒட்டியது.. நேராக சமையலறைக்குச் சென்றார். அங்கே வேலைக்காரச் சிறுமி புட்டுக்கு மா குழைத்துக் கொண்டிருந்தார்,  உண்மை பிடிபட்டு விட்டது.

அப்போது அவளுக்கு பதினொரு வயதுதான் இருக்கும்,  மலையகத்தை சேர்ந்தவள். விபரம் தெரியாத ஒரு சின்னப் பெட்டை. ஒருமாதமாக இவர்கள் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டுவது போல் செயல்பட்டிருப்பாள் என யார் நம்புவார்கள். இவர்கள் கோபமும் வன்மமும் பொலின்டன் மேலேயே இருந்தது. பொலின்டனையே துரத்திக் கொண்டிருந்தார்கள்,  ஒருநாள் கூட உள்ளே சென்று பார்க்கவில்லை.

அவள் தன் வீட்டுக்கு போக பல தடவை கேட்டிருக்கிறாள், விடவில்லை. இவர்கள் பேச்சிலிருந்த குடும்ப முரணை வைத்து விளையாட்டாக தொடங்கிய காரியம் சுவாரசியம் மிஞ்ச மிஞ்ச தொடர்ந்திருக்கிறது.

காதும் காதும் வைத்தது போல உடனடியாக அவள் ஊருக்கு அனுப்பப்பட்டாள். பிறகும் விட்டார்களா? அது பொலின்டனும் எறிந்தது – வேலைக்காரச் சிறுமியும் எறிந்தது என  கதைக்கு முடிச்சுப் போட்டார்கள்.

00000

 

நான் பொலின்டனை திருமணத்தில் சந்தித்ததன் பிற்பாடு சில மாதங்கள் தான் கழிந்திருக்கும், அதிகாலையில் ஒருவன் தொலைபேசியில் கூப்பிட்டான். அனேமாக அவன் அழைப்பு வந்தாலே ஊரில் யார் இறந்திருப்பார்கள் என்ற அச்சமே முதலில் மனதில் பதியும்.

’சேதி கேள்விபட்டியா? பொலின்டன் இறந்துவிட்டான்’என்றான். சில நிமிடங்கள் அவன் பற்றி பேசிக் கொண்டோம். தொடர்ந்து மரணச் சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் தெரிவிப்பதாக சொன்னதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. அன்று முழுவதும் என்னை இனம்புரியாத மௌனம் கௌவியது, மனசு கனத்தது.

திருமணத்தின் போது பொலின்டன் என்னை ஏன் தேடிச் சந்தித்தான்? தன் மரண நாட்களை  முன்கூட்டியே அறிந்திருந்தானா? என் தம்பி  கலைச்செல்வன் கூட தன் மரணத்தின் முதல்வாரம் தொலைபேசியில் அழைத்து நீண்டநேரம் என்னோடு கதைத்தான். மறுவாரம் அவனை மரணம் விழுங்கும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.  அவன் அறிந்திருப்பானா?

பொலின்டன் ஊரில் ஒரு முக்கியமான பிரமுகர் அல்ல, ஆனால் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் இல்லாத ஊரை என்னால் வரைய முடியாது. அவன் நிராகரிப்பென்ற களங்கட்டிக் கூட்டுக்குள் அகப்பட்ட மீன்குஞ்சுபோல சுற்றிச்சுற்றி வந்தான்.

அவனிடம் எந்த பொறுப்பையும் கையளிப்பதில்லை. நல்லதோ கெட்டதோ எந்தவொரு நிகழ்ச்சியாகட்டும் சம்பவமாகட்டும் பொலின்டன் தானாகவே வந்து மூக்கை நுழைத்துவிடுவான். முடிவில் மூக்குடைபட்டு போவதும் அவனாகவே இருப்பான்.

குழந்தை குருமானுக்குக் கூட யாரைத் தெரிகிறதோ இல்லையோ பொலின்டனைத் தெரியும்.  பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை எல்லோருக்கும் வெறும் “பொலின்டன்”தான். ஒருவரும் முறைசொல்லி அழைப்பதில்லை.  அவன் மனசளவில் ஒருசிறுவனுக்குரிய மனோபாவத்துடனே இயங்குவான். பள்ளிப்படிப்பின் மீது அவனது அக்கறை திரும்பவில்லை. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பல பாடசாலைகளில் அவன் பாதம்படிந்த பெரும் பேறு பெற்றது. கொழும்பிலிருந்து பொதி கொண்டுவரும்’குட்ஸ் றெயின்’ போல எஸ்.எஸ்.சி. வரை அவன் பயணம் நீண்டது.

எழுபதாம் ஆண்டு காலகட்டத்தில் அவனிடம் ஒரு சைக்கில் இருந்தது. அதற்கு ‘மட்காட்’ ‘செயின்கவர்’ எதுவும் கிடையாது. பெடல் கூட இல்லை. பதிலாக இரண்டு கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கும். மரநாய் பிடித்ததும் அதனிடம் போராடி  தப்பித்து வந்த கோழிச்சாவல் போல அது தோற்றம்தரும்,அதில் அவன் சர்க்கஸ் காட்டுவான்.

வீட்டுக்கு புதியவர்கள் வந்தால் அவர்கள் கவனத்தை திருப்பும் வகையில் வீட்டிலுள்ள பவுடரையோ அல்லது வேறு அலங்காரப் பொருட்களையோ முகத்தில் அப்பிக் கொன்டு வந்து நிற்கும் குழந்தைகளைப் போல அவன் செயல் இருக்கும். சைக்கிலை ஒற்றைச் சக்கரத்தில் ஓடுவான். நின்ற இடத்தில் சைக்கிலில் இருந்தவாறே முன் சக்கரத்தைத் தூக்கி நேர் எதிர்த் திசையில் திரும்பி நிற்பான். அதே இடத்திலே எட்டுப் போடுவான், வட்டம் போடுவான்.

ஊரில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளில் சைக்கிலை மெதுவாக ஓட்டும்  போட்டியில் பொலின்டனுக்குத்தான் எப்போதும் முதலிடம்.  பெரியவர்கள் முரண்படும் போது தங்கள் கோபங்களை பிள்ளைகளில் காட்டுவது போல ஊரில் நடைபெறும் பிரச்சனைகளுக்குள் முதலடி வாங்குபவன் பொலின்டனாகத்தான் இருப்பான்.

00000

 

அறுபத்தெட்டு அல்லது  அறுபத்தொன்பது என நினைவு, எங்கள் ஊரில் சித்திரை விழா நடைபெற்றது. அதில் குரும்பசிட்டி நண்பர்கள் நாடகம் போட்டார்கள். முழுநீள அங்கத நாடகம்… அதிலொரு பாத்திரத்தின் பெயர் பிறைசூடி,  என் மாமனார் பெயரும் அதுவே.  என்னைப் போலவே மிகப் பருத்த சரீரம் அவருடையது. நீண்டகாலத்தின் பின் ஊரில் மீள வந்து குடியேறியிருந்தார். அந்தப் பாத்திரத்தின் அங்க லட்சணங்களை கிண்டல் செய்வதாக அந்த நாடகம் அமைந்தது. அத்தனையும் என் மாமனாரின் தோற்றத்திற்கு அச்சொட்டாய் பொருந்திவிட்டது.

பிறகு சொல்லவும் வேண்டுமா? ஒரு தந்திதான் போனது. வந்து இறங்கினார்கள் மாமனாரின் மைத்துனர் இருவர்.  இருவரும் பொலிஸ் உத்தியோகத்தில் இருப்பவர்கள். எங்கள் கவிஞர் ஜெயபாலனுடையதை ஒத்த கிறுதா மீசை.  கைகளின் தசைநார் திரட்சிகளில் பச்சை குத்தப்பட்ட புலிகளின் தலை இருக்கும். அதிலிருந்த கண்கள் முறாய்த்துப் பார்ப்பதாக தோன்றும்.

கண்ணாடி முன்நின்று உதட்டுக்குமேல் மீசை அரும்புகிறதா எனத் தடவிப் பார்க்கிற பருவம் எனது.  அவர்களது மீசை ஆச்சரியத்தையும் ஒருவித பயத்தையும் தந்தது. மறுநாள் போர்க்கால நிலையில் இருந்தது ஊர்,  அப்போதும் கூட சம்பந்தமே இல்லாமல் அடிவாங்கியது பொலின்டன்தான்.

யாராவது சம்பந்தா சம்பந்தமிலாமல் சிரித்துக் கொண்டிருந்தால் “சும்மா பல்லை காயவிடாதை” என்பான். மொக்குத்தனமான செயல்களில்  ஈடுபடும் போது ” வெள்ளைபிரண்டு கிடக்கப் போறாய்”  என்பான். பள்ளிக்கூடம் விடும் நேரம் அவனைக் காய்வெட்டிக்கொண்டு” வெளிக்கிட்டால் எங்கை வீணைப்பெட்டி வாசிக்காவா போகிறாய் என கிண்டல் செய்வான். ஏதாவது செய்து ஏடாகூடமாய் அகப்பட்டுவிட்டால் “வாழைக்குள்ளை சந்தியாப்பிள்ளை என்று யாருக்கு தெரியும்” என்பான்.     இந்தச்சொற்தொடர்களை நான் பொலின்டன் மூலமாகத்தான் அறிந்திருந்தேன்.

ஒரு நாள் பொலின்டன் இடைக்காடு போய்வர வேண்டியிருந்தது. அவ்வூர் எங்கள் இடத்திலிருந்து ஏழு மைல் கல் தொலைவிருக்கும். அவனிடம் சைக்கில் இல்லை. அப்போதுதான் ஒருவர் வசமாக அகப்பட்டார்

“ஒருக்கா உந்தச் சைக்கிலைத் தா!  உதிலை இடைக்காடு போட்டுவாறன்”என்றான்.  சைக்கில் வைத்திருந்தவருக்கோ  இடைக்காடு தெரியாது. பொலின்டன் கேட்ட தொனியும் அவசரமும்  ஒரு பத்து நிமிடத்தில் வந்துவிடுவார் என்பது போலவே இருந்தது. பொலின்டன் சுப்பனிடம் ‘வாடிக்கைக் கள்ளுக்கு’ போகிறான் என்பதே அவரின் முழு நினைப்பு,  கொடுத்துவிட்டார்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது. அவருக்கு அன்று பல வேலைகள் இருந்தது.  சைக்கில் இல்லாவிட்டால் எதுவுமே ஆகாது. மதியம் வரை காத்திருந்துவிட்டு தன் வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார். நேரம் ஏறஏற கள்ளுப் புளித்தது போல அவருக்கு கோபம் நுரைதள்ளி வேகாரம் கொள்ளத் தொடங்கிவிட்டது. மாலையிலே வந்து சேர்ந்தான் பொலின்டன். பிறகு சொல்லவும் வேண்டுமா?

 

00000000

நான் முதன் முதலில் மது அருந்திய நாள் இன்றும் என் நினைவில் ஈரம். அப்போது எனக்கு இருபது வயது இருக்கலாம். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்னால் ஒரு தேநீர்ச்சாலை இருந்தது.    அன்று இரவு எட்டுமணியிருக்கும்.  நான் ஏதோ வங்குவதற்காக தேநீர்ச் சாலைக்கு சென்றிருந்தேன். கடைசி பெஞ்சில் பொலின்டனும் தேவனும் இருந்தார்கள். முன்னே இரண்டு வெறும் கிளாஸ்  இருந்தன.

தேவனும் எங்கள் ஊரவர்தான். அவர் அப்போது இலங்கை வங்கியில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். நான் வறுமையோடு போராடியவன்.  எனக்குப் பல சமையங்களில் உதவியிருக்கிறார், அதனால் அவர் மீது நல்ல மதிப்பிருந்தது.

இருவரும் பந்தயம் பிடிப்பது போல போக்குக் காட்டினர். மேசைக்கு கீழ் இருந்த போத்தலில் எடுத்து கிளாசிலே சாராயம் ஊற்றப்பட்டது. பொலின்டன் நான் குடிக்கமாட்டேன் என்றான். தேவன் நான்  சொன்னால் சிவம் குடிப்பான் என்றார். என்னை குடிக்கவைப்பதற்காகவே போக்கு காட்டுகிறார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தது.

சில சமயங்களில் மனித மனங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அது எப்போது என்ன முடிவெடுக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. பலாலி இராணுவ முகாம் எல்லையில் குடியிருந்த ஒருவன் தன் உயிரைக் காப்பதற்காக பல தடவை குடும்பத்தை சுமந்து கொண்டு ஓடியோடி அலைந்தவன்,  ஒரு நாளில் மனைவியுடன் எற்பட்ட சிறுவாக்குவாதத்தில் நஞ்சை அருந்தி  உயிரை மாய்த்துக் கொண்டான்.

அதுபோலத்தான் என் மனமும் சடுதியில் முடிவெடுத்தது.  எடுத்து மடமட என குடித்து விட்டு நடந்தேன். புளித்த பேரீச்சம்பழ வாசனையோடு தொண்டையில் எரிவு இருந்தது. பல தடவை தண்ணீரால் வாயை அலம்பினேன். அப்போதும் எங்கிருந்தோ அந்த நெடிவருவதாகவே தோன்றியது. அம்மாவிடம் பிடிபட்டுவிடுவேனோ என்ற பயமிருந்தது.   நேராக சென்று வீட்டில் பாயை விரித்து படுத்துவிட்டேன் .

பிறகென்ன தொட்டகுறை விடுமா? இன்றும் தொண்டையை எரித்துசெல்லும் விஸ்க்கியை சுவைக்கும் போது அந்த முதன்நாள் நினைவு தட்டுப்படத்தான் செய்கிறது, பெண் மீதான முதல் ஸ்பரிசம்போல.

எழுபதுகளின் பிற்பகுதி. எங்கள் ஊரவரான மனோகரன்  பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றினார். அவர் நாடகங்கங்களோடு பரிச்சயம் உள்ளவர். கூட்டுத்தாபன கலைக்குழு மூலம் எனக்கென்றோர் இதயம் என்ற நாடகத்தை எழுதித் தயாரித்திருந்தார். அவரின் உதவியுடன்  எங்கள் வாசிகசாலைக் கட்டட நிதிக்காக அந்த நாடகத்தை போட முடிவுசெய்தோம்.

நாடகவிழா யூனியன் கல்லூரி மண்டபத்தில் நடந்தது. அவர்கள்  கூட்டுத்தாபன லொறியில் வந்திருந்தார்கள்.  விழாமுடிந்ததும் உடனே பரந்தன் திரும்ப வேண்டும். அதற்கு வாய்ப்பாக தெல்லிப்பழையில் உள்ள என் நண்பரின் வீட்டில் வைத்து அன்றைய இரவுணவை வழங்குவதற்கு ஒழுங்கு செய்திருந்தேன். எல்லாம் திட்டமிட்டபடி அழகாக போய்க்கொண்டிருந்தது.

வெளியிலே ஒருவன் படலையை தட்டிக்கொண்டிருந்தான், சென்று பார்த்தேன். பொலின்டன். போதையின் உச்சத்திலிருந்தான். உள்ளே அழைத்துச் சென்றால் என்னையும் அந்த வீட்டைவிட்டே துரத்திவிடுவார்கள். நாடக நடிகர்களுக்காக விருந்து, நீ வரமுடியாதென்றேன். அவனோ அடம் பிடித்தபடியிருந்தான். எனக்கு வேறு வழி தெரியவில்லை முடிவில் அடித்துவிட்டேன்.

மறுநாள் காலை நான் தனியாக நின்றுகொண்டிருக்கும் போது வந்தான். இரவு வெறியோடு இருக்கும் போது அடித்துவிட்டேன். இப்போ எப்படி எதிர் கொள்வது?. மனசுக்குள் பயம் தொற்றிக் கொண்டது.

அவன் அதிகம் பேசவில்லை. ’சிவம்! கடைசியில் நீயும் அடித்துவிட்டாய், என்ன?’ என்றான். அவனின் மனசு அழும் ஒலி எனக்குள்  கூரிய ஆயுதம்போல இறங்கியது. இன்றும் நினைத்து வெட்கப்படுகிற சம்பவங்களில் ஒன்று இது.

 

00000

பிரளயம் தொடங்கிய காலத்தில் ஊர் சிதறிப்போனது. அப்போது பொலின்டன் முல்லைத்தீவில் இருந்தான். அவனைப்பற்றி நினைப்பதற்கு  கூட ஊரவர்களுக்கு அவகாசம் இருக்கவில்லை. அவரவர்கள் தங்கள் தங்கள் பாடுகளைச் சுமப்பதிலேயே குறியாய் இருந்தனர்.

வெள்ளத்தில் வீழ்ந்த முசுறு கூடு போல மிதந்து கலைந்து அகப்பட்டதை பிடித்து எம்மூரவர் பெருவாரியாக  கரை ஒதுங்கிய வெட்டை ரொறன்ரோதான். ஓரளவு கோரம் சேர்ந்த பிற்பாடு ஊர் ஒன்றுகூடலொன்றில் பொலின்டனை சந்தித்தேன். மனைவி பிள்ளைகளென மிக மகிழ்வோடு இருந்தான்.

அவரவர் தேடல்களும் தேவைகளுமாக ஊரின் கட்டமைப்பு சிதைந்து போயிருந்தது. மந்தையிலிருந்து விலகிய ஆட்டைப் போல நான்  பலகாலமாக ஒன்றுகூடல் போவதை தவிர்த்துவிட்டேன்.

அவனது மரணச் சேதியின் பின் பொலின்டன் பற்றிய நினைவுகள்  எனது ஊரின் நினைவுகளாகவே இருந்தது. அதை கவிதையாக பதிவு செய்தேன்.

பொலின்டன்

ஒரு தொலை பேசி அலறலில் வந்து சேர்ந்தது

நீ போய்விட்ட சேதி

அதிர்ந்தே போனேன்.

‘பொலின்டன்’

இந்தப் பெயரை உச்சாடனம் செய்யாத

குஞ்சு குருமான் கூட இருந்ததில்லை

என் ஊரில்.

‘திருவோணத்தில் பிறந்தவன் மூன்று கோணமும்

இவன் ஆட்சிதான் என்றார் – ஆள்கிறான் பார்’

என்றாள் உன் தாய்!

அது அவள் வரையிலான ஆதங்கம்

ஆனாலும் கூற்று வீண்போகவில்லை

எல்லோர் மனதிலும் வாழ்ந்தான் என்பது

ஒருவகையில் ஆட்சியல்லவா!

உனக்கு நினைவிருக்கிறதா!

நீயும் தேவனும் பந்தையம் பிடிப்பது போல்

பாசாங்குகாட்டியல்லவா

என்னை

முதன்முதலில் மதுக்கிண்ணத்தை தூக்கவைத்தீர்கள்

‘எனக்கென்றோர் இதயம்’ நாடகம் முடிந்த இரவில்

போதையில்

என்னுடன் வாக்குவாதம் செய்தாய்

பொறுமையிழந்து உன்னை அடித்துவிட்டேன்.

மறுநாள் காலை

’நீயுமா?’ எனக் கண்கலங்கினாய்.

நீ மன்னித்திருப்பாய்.

அது உன் குணம்

எனக்கு

இன்னும் ஆறாத ரணம்.

ஒரு ‘பெடல்’ அறுந்த சயிக்கில் கட்டையில்

‘சர்கஸ்’ காட்டுவாயே

பனையிலிருந்து சீவும் ராசனுக்கு

‘சிக்னலாக’

ஒரு விசில் கொடுப்பாயே

அந்த நாட்களை எங்ஙனம் மறப்பது

ஊர் : கூத்துத் திடல்

அதில் நீ கட்டிய வேடம் முக்கியமானது

தடைகள் அற இடை நிரப்பி

உற்சாகமூட்டி நீ  நடந்த நாட்கள் ஈரம்.

எங்கள் ஊருக்கு ஒரு சிறப்புண்டு

அறிந்தது, அறியாதது ,செய்தது,செய்யாதது

எல்லாவற்றையுமே

உன் தலையில் கட்டிவிடுவது

உனக்குப்பின்

அது

எனக்கு என்பதால்

எமக்கிடையில் உறவுண்டு

அது அடுத்தவர்க்கில்லாத உறவு.

நீ எங்கே போவிடப் போகிறாய்.!

மரணம் என்ற புள்ளியில்

நாம் மீளச் சேர்ந்துதானே ஆகவேண்டும்

இன்று…. நாளை… அதிகம் போனால்

நாட்சில கழியலாம்.

அவ்வளவுதான்

போய்வா!

 

சடங்குகள் கழிந்துசிலநாட் செல்ல, அவனது உறவு ஒன்று என்னைச் சந்தித்தது. இக்கவிதை பற்றிய அவன் விசனத்தை உணர்ந்துகொண்டேன். ’பனை, ராசன், கள்ளு என்பதெல்லாம் இப்போ தேவைதானா’ என்றார். அவருக்கு அது அகௌரவமாகப்பட்டது.

ஒவ்வொரு விடுமுறை நாளிலும் விஸ்கியும் பியரும் மண்டிக்கிடக்கிறோம். ஒருவன் கள் அருந்தினான் என்பது கேவலமான செயலென நான் கருதவில்லை. அது எங்களூரின் அமுத பானம். இப்போது நான் சுவைக்கும் ஒவ்வொரு துளி விஸ்கியிலும் பொலின்டனின் நினைவுண்டு, அதை பதிவு செய்யும் உரிமையும் எனக்குண்டு.

0000000

 

7 Comments

  1. >அவன் அதிகம் பேசவில்லை. ’சிவம்! கடைசியில் நீயும் அடித்துவிட்டாய், என்ன?’ என்றான்.

    இந்த இடத்தில் நிறுத்தியிருந்தால், இது சிறுகதையாயிருக்கும் :-). என்றாலும் இது உண்மைச் நினைவுகளின் கோர்ப்பு அல்லவா. நன்றி கவிஞரே. நன்றாக ரசித்தேன்.

  2. >அவன் அதிகம் பேசவில்லை. ’சிவம்! கடைசியில் நீயும் அடித்துவிட்டாய், என்ன?’ என்றான்.

    இந்த இடத்தில் நிறுத்தியிருந்தால், இது சிறுகதையாயிருக்கும் . என்றாலும் இது நினைவுகளின் கோர்ப்பு அல்லவா. நன்றி கவிஞரே. நன்றாக ரசித்தேன்.

Post a Comment