Home » இதழ் 10 » *(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…05

 

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…05

 

 

ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.

இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் பரவலாக எழுதப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. விக்கி லீக்ஸ், சனல் – 4 காட்சிகள் தொடக்கம், ஐ.நா அறிக்கை, கோடன் வைஸின்  The Gaje(கூண்டு), பிரான்ஸிஸ் ஹரிசனின்     (Frances Harrison) Still Counting the Dead  போன்ற நூல்கள், வன்னிப்போர் நாட்கள் பற்றி அந்தப் போரிலே சிக்கியிருந்த பலரும் பத்திரிகைகளில் எழுதிய தொடர் கட்டுரைகள், காத் நோபிளின் கட்டுரை, கே.பி என்ற குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்,  அமைதிப்பேச்சுகளின் நாயகமாக இருந்த எரிக் சொல்கெய்ம் தெரிவித்த கருத்துகள், அண்மையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. செயற்பட்ட விதம் தொடர்பாக சார்லஸ் பெட்றி தலைமையிலான குழு தயாரித்துள்ள அறிக்கை, இறுதி நாட்களில் என்ன நடந்தது என விறுவிறுப்பில் ரிஷி எழுதிவரும் தொடர் வரை ஏராளம் தரப்புப் பதிவுகளும் சாட்சியங்களும் வெளிப்படுத்தல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும் அர்ச்சுனன் எழுதிவரும் ‘விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள், சாத்திரி எழுதிவரும் ‘பங்கு பிரிப்புகளும் படுகொலையும்’ போன்ற தொடர்களும்.

இவற்றை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும்போது பல உண்மைகள் நிரூபணமாகின்றன. ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது, அவையெல்லாம் எப்படி நடந்தன என்ற உண்மைகள். இத்தகைய பல தரப்பு வெளிப்பாடுகள்தான் வரலாற்றின் சிறப்பாகவும் வடிவமாகவும் அமைகின்றன. மட்டுமல்ல நிகழ்காலத்தை நெறிப்படுத்தி, எதிகாலத்தை வளமூட்டவும் உதவுகின்றன.

இறுதிப்போர்க் கால நிகழ்ச்சிகள், அவற்றின் பின்னணிகள் பற்றிச் சுருக்கமாக நானும் ஏற்கனவே காலச்சுவடு உள்ளிட்ட சில இதழ்களில் எழுதியிருக்கிறேன். நான் சம்மந்தப்பட்டவற்றையும் என்னால் அறியப்பட்டதையும் நாம் அனுபவித்ததையும் அந்தப் பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இங்கும் அத்தகைய ஒரு வெளிப்படுத்தலே ‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன’ என்ற இச் சிறு தொடரும். இது வரலாற்றுக்கு என் தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு சாட்சியமளித்தலே.

இத்தகைய அனுபவங்களும் அறிதல்களும் பலருக்கும் பலவிதமாக உண்டு. அவர்களுடைய சாட்சியங்கள் இன்னொரு விதமாக அமையலாம். அவர்களுடைய அறிதல்கள், அனுபவங்கள், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வழியாக. ஆனால், எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும் சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதே சரியான வரலாறாகும். பொய்களின் வரலாறு மீளவும் குருதி சிந்த வைப்பதிலும் இருண்ட யுகமொன்றை அந்த வரலாற்றைக் கொண்ட சமூகங்களுடைய மடியில் கொண்டு வந்து இறக்குவதாகவுமே அமையும்.

வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு அவசியமான பணி. அவற்றை வெளிப்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான சங்கடங்கள் இருக்கலாம். காலநேரப் பொருத்தப்பாடுகள் குறித்த அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், உரிய காலத்தில் சிகிச்சை செய்யப்படாத நோய் பேராபத்தையே விளைவிக்கும் என்பது பொது அனுபவம். அதைப்போல உரிய காலத்தில் உரிய விசயங்களைச் சொல்ல வேண்டியது காலக்கடமை. அதைச் சரியாகச் செய்யவேண்டியது அவசியப் பணி.

பலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள் சென்றடைகின்ற புள்ளி வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும் பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி உண்மைகளை மறைத்துப் பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது அந்தச் சமூகம் தவறான வழிகளிலே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச் சென்றடையும்.

நமது அதீத கற்பிதங்களே நமது தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவம். எனவேதான் சுயவிமர்சனங்கள் அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும் பங்களிப்புள்ளது.

வரலாறு ஒரு போதும் தட்டையானதோ ஒற்றைப்படையானதோ அல்ல. யாருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தும் இருப்பதில்லை. அது உள்ளபடி, உண்மையின் அடிப்படையில் இருக்கும். புனைவதும் மறைப்பதும் வரலாற்றுக்கு இழைக்கும் துரோகமாகும். அது வரலாற்றுக்கு மட்டுமல்ல அந்த வரலாற்றைப் புனைந்திருக்கும் சமூகத்துக்கும்தான்.

என்னுடைய இந்தப் பதிவில் யாரையும் குற்றம்சாட்டுவதோ அல்லது எந்தத் தரப்பையும் தவறாக விமர்சிப்பதோ, கீழிறக்குவதோ நோக்கமல்ல. மிகப் பெரும் சேதங்களைத் தரும் இயற்கை அனர்த்தமாயினும் சரி, செயற்கையான போர் போன்ற நிகழ்ச்சிகளாயினும் சரி, அவற்றின் காரண காரியங்களை ஆராய்வது சமூக இயல்பும் தவிர்க்கவே முடியாத ஒரு பொறிமுறையும்கூட. அந்த வகையில் என்னுடைய பதிவும் ஒன்று. இது போல எதிர்காலத்தில் ஏராளம் பதிவுகள் வெளிவரப்போகின்றன.

இது தவிர்க்கவே முடியாதது. ஏனென்றால், இது விக்கி லீக்ஸ் யுகம்.

-0000————————————————————————————————00 00

(05)

 

2007 யூன் 01 மாலை கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழீழ நுண்கலைக் கல்லூரி மண்டபத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது.மு. திருநாவுக்கரசுவின் உரை. தலைப்பு – “தமிழீழ விடுதலைப் போராட்டமும் சமகால அரசியலும்“.

 

கருத்தரங்கிற்கு கிளிநொச்சியில் அப்போதிருந்த அரசியல் விசயங்களில் ஆர்வம் காட்டுகின்ற பலரும் வந்திருந்தனர். போராளிகளின் தரப்பில் அல்லது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தரப்பில் மகளிர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழினி, பரப்புரைப் பொறுப்பாளர் ரமேஸ், நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பரா, முக்கிய உறுப்பினர் பாலகுமாரன், யோகரட்ணம் யோகி, தயா மாஸ்டர், இளம்பரிதி, புலிகளி்ன் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், நிதித்துறை, அரசியல்துறை, புலனாய்வுத்துறை போன்றவற்றின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 100 க்கு மேற்பட்டவர்கள்.

 

அங்கே மு.தி விரிவாக தன்னுடைய உரையை ஆற்றினார். சமகால (2007) அரசியல் நிலவரம் என்பது கொழும்புக்கு எத்தகைய சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்றும், பிராந்திய, சர்வதேச சக்திகள் கொழும்புடன் கொண்டுள்ள உறவைப் பற்றியும் அவர் தன்னுடைய உரையில் தெளிவாகக் குறிப்பிட்டார்.மேற்கு முன்னெடுத்து வரும் சமாதான முயற்சிகளின் நோக்கத்தை தமிழர்கள் விளங்கிச் செயற்படுவது அவசியமானது? சரியான விளக்கத்துடன் செயற்படவில்லை என்றால் எதிர்காலத்தில் எப்படியான விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் விளக்கினார்.

 

குறிப்பாக இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் கொண்ட அரசியல் அணுகுமுறை இந்தியாவுக்கும் தமிழீழப்போராட்டத்துக்கும் இடையில் ஏற்படுத்திய கதவடைப்பையும் அதன் பாதிப்பையும் திருநாவுக்கரசு எடுத்துரைத்தார்.அதில் ராஜீவ் காந்தியின் படுகொலை மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என்றார். இந்தத் தவறின் விளைவை 15 ஆண்டுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் அனுபவிக்க வேண்டிருக்கிறது. இன்னும் இந்தத் தவறே பாரிய நெருக்கடிகளைத் தரும் விடயமாக கையாளப்படுகிறது எனச் சொன்னார்.

 

செப்ரெம்பர் 11 க்குப் பிந்திய உலக அரசியல் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் செலுத்தப்போகும் தாக்கங்கள் எப்படியாக அமையலாம் என்பதையும்  அவர் எடுத்துரைத்தார்.பிராந்திய சக்தியான இந்தியாவின் நிலைப்பாடுகளும் தந்திரோபயமும், சீனா செயற்பட்டு வரும் முறை, அதனுடைய விரிவாக்கம், அதனால் இலங்கை மற்றும் தென்னாசிய அரசியலில் ஏற்பட்டு வரும் அதிர்வுகள், மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரல் போன்றவற்றின் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைப் பற்றி அவர் பேசினார்.

 

முக்கியமாக இந்த அசைவியக்கத்தை மதிநுட்பத்துடன் அணுகி, அதற்கேற்ப அரசியற் பொறிமுறைகளையும் ராசதந்திரச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவது அவசியம் என்பது அவருடைய உரையின் சாராம்சத்தில் ஒரு பகுதியாக இருந்தது.அதேவேளை உள்நாட்டு அரசியலைக் கையாள்வதிலும் அதை முன்னெடுப்பதிலும் உள்ள முக்கியத்துவத்துவத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.சமாந்திரமாக இவற்றை முன்னெடுக்காதவிடத்து, பாதிப்புகளும் பின்னடைவுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதை அவர் மறைபொருளில் வலியுறுத்தினார்.

 

ஒரு போராட்டத்தில் அரசியலின் முக்கியத்துவமே எதையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்பது அந்த உரையின் அழுத்தமாக இருந்தது.இதற்கு அவர் பல வரலாற்று ஆதாரங்களை உதாரணப்படுத்தினார். ஜனநாயகத்தின் உள்ளடக்கம் பலவீனமடைந்திருக்கும் சூழலில் எத்தகைய வலிமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பயனற்றுப் போகும். எந்தப் பெரிய ராஜ்ஜியமும் எளிதில் தோற்கடிக்கப்பட்டு விடும் என்றும் உரைத்தார்.

 

அவர் தனது உரையில் ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹசைனின் நகர்வுகள் எவ்வாறு அவருக்கு பாதகமான சூழலையும் ஈற்றில் அவருக்கும் நாட்டுக்கும் அழிவையும் கொண்டுபோய்ச்சேர்த்தது என்பதை செப்ரெம்பர் 11க்கு பின்னரான நிலைமையில் வைத்து எடுத்து விளக்கினார். அவரது உரையில், இப்போதுள்ள அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வராவிட்டால் புலிகளின் தலைமைக்கும் அத்தகைய நிலையையே ஏற்படலாம் என்பது சூசகமாக எடுத்துரைக்கப்பட்டது.

அவரின் உரையில் அவர் கோடிகாட்டிய இன்னொரு விடயம் இலங்கையின் ஆட்சி பீடத்திலிருந்து உடனடியாக மகிந்த ராஜபக்சவை அகற்றினாலன்றி இந்த விடுதலைப்போராட்டத்தை முன்னகர்த்த முடியாது. மாறாக அது பின்நோக்கி அழிவையே எதிர்கொள்ளும் என்பதாகும். போராட்டத்தைப் பாதுகாக்க வேணும் – அதை முன்னோக்கி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பரிந்துரையாகவே, அவர் தன்னுடைய உரையை ஆற்றினார்.

 

ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக மகிந்த ராஜபக்ஷ அரசியல் தலைமைக்கு வந்திருப்பது பெரும் நெருக்கடியையே ஏற்படுத்தும். ஒப்பீட்டளவில் ரணில் பலவீனமான தலைமைத்துவத்தைக் கொண்டவர். மேலும் சுயமாக முடிவுகளை எடுக்க முடியாத சூழலைக் கொண்டுள்ளவர். மேற்கின் நிகழ்ச்சி நிரலைத் தாண்டிச் சிந்திக்க முடியாதவர். அப்படியான ஒருவரைத் தேர்வு செய்திருந்தால் நெருக்கடிகளில் பலதும் அவரின் கழுத்தையே சுற்றியிருக்கும்.பதிலாக மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்திருப்பது கடுமையான நிலைமையை உருவாக்கும். தீவிர நிலைப்பாட்டைத் தன்னுடைய அரசியற் பாராம்பரியமாகக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷவை கொழும்பு அந்த வழியிலேயே மேலும் பலப்படுத்தும். அதற்கமைவாக தமிழர்களின் வாக்குகளும் மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்திருக்கிறது.இந்த மாதிரியான ஒரு சூழலுக்கு – நிலைமைக்கு, இடமளித்த – வாய்ப்பளித்த முறையை மு. தி தவறு என்றார்.

 

புலிகளின் தலைமைப்பீடம், குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரன் எடுத்திருந்த வரலாற்று ரீதியான இந்த முடிவுகள் தவறென்று பகிரங்க மேடையில் சொல்லப்பட்டது வன்னியில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அதுவே முதற்தடவை என எண்ணுகிறேன்.அந்த முடிவுகளின் விளைவுகள் வரலாற்று ரீதியில் எவ்வளவு பாதகமான நிலைமையை உருவாக்கியுள்ளன என்பதை விளக்கி, அந்த முடிவுகளின் பாதகங்களில் இருந்து எப்படி மீள வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

 

அப்பொழுது மகிந்த ராஜபக்ஷ முதல்தடவையாக ஜனதிபதித்தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றியடைந்திருந்தார். மகிந்த ராஜபக்ஷவின் அந்த வெற்றிக்கு தமிழர்களின் வாக்குகள் கணிசமான அளவில் பங்களித்திருந்தன.புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்து நடத்திய பேச்சுவார்த்தையில் ரணில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. தம்மைப் பலவீனப்படுத்தும் உள்நோக்கத்துடன் ரணில் விக்கரமசிங்க செயற்பட்டிருக்கிறார். அதன் அடிப்படையிலேயே அவர் உடன்படிக்கையில் எட்டப்பட்ட விடயங்களை நிறைவேற்றாமல் விட்டதுடன், கிழக்கில் தமது தளபதியாக இருந்த கருணாவைப் பிரித்தெடுத்து அரசுடன் இணைத்துக் கொண்டார். இதெல்லாம் திட்டமிட்ட முறையில் ரணில் தமக்கு ஏற்படுத்திய நெருக்கடிகள் என புலிகள் கருதினர். இதன் விளைவாக ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாட்டை அவர்கள் அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தினர்.

 

இந்தச் சந்தர்ப்பத்தை  மகிந்த ராஜபக்ஷ தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கு மேலும் வாய்ப்பாக புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் தமது உத்தியாகவும் உபாயமாகவும் கையாண்ட வழிமுறையையும் மகிந்த ராஜபக்ஷவுக்கு உதவியது.நான்காம் கட்ட ஈழப்போருக்கு முந்திய சமாதானக் காலத்தில் புலிகளிடம் ஒரு போக்கு துரிதமாக வளர்ச்சியடைந்திருந்தது. அது எவரையும் கையாள்வது என்பது. ஏற்கனவே ஆயுத விநியோகம், மற்றும் பொருட்கொள்வனவு, பொருட்களை உள்ளே எடுத்து வருவது போன்றவற்றுக்கு இந்த உத்தி கையாளப்பட்ட ஒன்றுதான். ஆனால், சமாதான காலத்தில் இது இன்னும் விரிவடைந்து பல மட்டங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு முறைமையாகியது.

 

இதன்படி ஜனாதிபதித் தேர்தலின்போது அதையொட்டி ஒரு கையாளும் முறை (டீல்) கடைப்பிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் உண்டு. அது பகிரங்கமான தகவலும் கூட. மகிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது என்ற உறுதியளிப்புடன்  சிங்கப்புரி்ல் வைத்து புலிகள் ஒரு தொகுதி பணத்தைப் பெற்றனர் என்று வந்த தகவல்களை இங்கே நினைவு கூரலாம்.அப்படி நிதிப் பரிமாற்றம் நடந்ததோ இல்லையோ, புலிகள் ரணிலுக்கு எதிராக எடுத்த தீர்மானமும் அதனையொட்டி அவர்கள் கோரிய தேர்தல் பகிஸ்கரிப்பும் மகிந்த ராஜபக்ஷவை இலகுவாக ஆட்சியில் அமர்த்தியது.

 

ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ அரசு உடனடியாகவே களத்தில் – காரியத்தில் இறங்கியது. மகிந்த ராஜபக்ஷ ஒரு பக்கத்தில் சந்திரிகா குமாரதுங்கவை ஓரங்கட்டினார். தொலைவுக்குத் தள்ளினார். அதேவேளை ரணிலை மேலும் பலவீனப்படுத்தினார். புலிகளின் அணுகுமுறைகளைப் பின்பற்றி மிக வேகமாக நடவடிக்கைகளில் இறங்கினார்.

 

பேச்சுவார்த்தையின் முறிவை அடுத்து அவர் உடனடியாகவே யுத்தத்தில் இறங்கினார். புலிகள் அளித்த வாய்ப்புகளை இழப்பதற்கு அவர் விரும்பவி்ல்லை. எப்படி ஆட்சியில் அமர்வதற்கு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு புலிகள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தனரோ அப்படியே யுத்தத்திற்கும் அவர்கள் வாய்ப்பொன்றை உருவாக்கித் தந்துள்ளனர் என அவர் நினைத்திருக்கலாம். (இறுதியில் புலிகளைத் தோற்கடித்து வெற்றியடைந்தபோதும் அவர் அப்படி யோசித்திருக்கக் கூடும்).எப்படியோ சமாதானப் பேச்சுகளை அடுத்து உருவாகியிருந்த நெருக்கடி நிலை போராக உருவாகியபோது அதை முழு அளவில் விஸ்தரிப்பதில் அரசாங்கம் கருத்தாக இருந்தது.

 

இதற்குக் காரணம், சர்வதேச, பிராந்திய நிலைப்பாடுகளும் நிலைவரங்களும் கொழும்புக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் இருந்தமையே. பிராந்திய, சர்வதேச நிலைப்பாட்டை நன்றாக அறிந்திருந்த கொழும்பு அதற்கேற்ற வகையில் தன்னைத் தயார்ப்படுத்தி, புலிகளுக்கு எதிரான வியுகத்தை வகுத்தது.மு.திருநாவுக்கரசு இதனையே தன்னுடைய உரையில் விளக்கிக் குறிப்பிட்டார்.

 

ஏறக்குறைய ஒரு வலிமையான தீர்மானத்துடன் அவர் கடுந்தொனியில் இந்த உரையை ஆற்றினார் எனலாம். இந்த உரை அங்கே இருந்த பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எப்படி இவ்வாறு வெளிப்படையாக மு. தி இந்த விசயங்களையெல்லாம் பேசுகிறார்? இது ஏற்படுத்தப் போகும் எதிர்விளைவுகள் என்ன? சாதகமான விளைவுகள் என்ன? என அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதை அறியும் ஆவலும் அவர்களிடம் இருந்தது.

 

சிலருக்கு அந்த உரை மகிழ்ச்சியை அளித்தது. அவர்களும் ஏறக்குறைய அத்தகைய புரிதலுடன் இருந்தவர்கள். அரசியல் ரீதியான முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கங்களையும் விளைவுகளையும் அவர்கள் வரலாற்றறிவுடன் உணர்ந்து கொண்டவர்கள். இந்த நிலையில் இப்படி மு.தி வெளிப்படையாகத் துணிச்சலுடன் பொது அரங்கில் இந்த விசயங்களைப் பேசியது ஒரு முக்கியமான தொடக்கம். ஒரு காலப்பணி. அவசியமான விசயம். அந்தக் கட்டத்திலாவது எடுத்துரைக்கப்பட வேணும் என அவர்கள் கருதினர்.

 

சிலருக்கு அந்தப் பேச்சு அதிக சங்கடத்தை அளித்தது. இப்படிச் சங்கடப்பட்டவர்களில் அநேகர் புலிகளி்ன் உறுப்பினர்கள் மற்றும் அதி தீவிர நிலைப்பாட்டையுடையோர். இந்தத் தரப்பினரைப்  பொறுத்தவரையில் மு.திருநாவுக்கரசு முன்வைத்த கருத்துகளை மறுக்கவும் முடியாது, ஆனால் அதைப் பகிரங்க நிலையில் ஏற்கவும் இயலாது. காரணம், இயக்கத்தை, தலைமையை, அதன் முடிவுகளை இப்படிப் பகிரங்க அரங்கில் விமர்ச்சிக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு இருந்ததாக இயக்கம் கருதும் என்ற அச்சம். அது அவர்களுக்கு பல நெருக்கடிகளைக் கொடுக்கும் என அவர்கள் பயந்தனர். அதேவேளை அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவும் அவர்களால் முடியவில்லை. இந்த நிலையில் மெல்லச் சிலர் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினர்.

 

சிலருக்கு கடுமையான முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. சிலரை அது கடுப்பாக்கியது. இவர்கள் இயக்கத்தின் அதிதீவிர விசுவாசிகள். தலைமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காதர்கள். இவர்களிலும் சிலர் சட்டென அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றனர். அந்த உரைக்கும் அந்தக் கருத்தரங்குக்கும் எதிர்ப்புக் காட்டும் விதமாக அப்படி அவர்கள் நடந்து கொண்டனர். ஏனையோர் இறுதிவரையில் என்ன நடக்கிறது என்று அறிவதற்காகக் காத்திருந்தனர். தகவலறியும் துறையைச் சேர்ந்தவர்கள் எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தனர். சிலர் ஒலிப்பதிவுச் சாதனங்களில் மு.தியின் உரையைப் பதிவு செய்தனர். சிலர் அதை ரகசியமாகச் செய்தனர்.ஆனால், மு.தி. தன்னுடைய உரையைத் தொடர்ந்து கேள்விகளுக்கு இடமளித்தார். பலர் கேள்விகளை எழுப்பினர். அப்போதிருந்த நெருக்கடி நிலையின் வளர்ச்சியைப் பற்றிய கேள்விகளே அதிகமாக இருந்தன. மாலை இருண்டு இரவாகும்போது கூட்டம் முடிவடைந்தது. இருளோடு கரைந்தவாறு பலரும் வெளியேறினர்.

 

பலருக்கு மு.தியின் உரை வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும். சிலருக்கு அது எரிச்சலை ஊட்டியிருக்கும். சிலருக்கு அது மேலும் இருளாகவே இருந்திருக்கும்.ஆனால், அந்த உரை ஆற்றப்பட்ட காலத்தினாலும் ஆற்றப்பட்ட முறையினாலும் உரை நிகழ்ந்த சூழலினாலும் மிகுந்த முக்கியத்துவமாக இருந்தது. இயக்கத்தையும் தலைமையையும் பகிரங்கமாக விமர்சித்து, எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்கும் பொறுப்பு சகலருடையதும் என்று அது வலியுறுத்தியது.

 

ஆனால், இந்த உரையை அடுத்து நடந்த நிகழ்ச்சிகள் அவ்வளவு மகிழ்ச்சியளிக்கும் படியாக அமையவில்லை. ஓரளவுக்கு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப்போல அந்த உரை பலவிதமாக வியாக்கியானம் செய்யப்பட்டது. அவரவர் தத்தமது நிலைப்பாட்டுக்கும் புரிதலுக்கும் ஏற்றமாதிரி அதை கூட்டிக் குறைத்து எடுத்துக் கொண்டனர். காவிச்சென்றனர். மற்றவர்களுக்கும் அதைத் தமக்கேற்றவாறு பகிர்ந்தனர்.

 

இதேவேளை இயக்கத்தின் முக்கியஸ்தர்களாக இருந்த தளபதி கேணல் தீபன், ஜெயம், பானு, சசிகுமார், போன்றவர்களும் புலனாய்வுத்துறையின் முக்கியஸ்தர்களாக இருந்த மாதவன் மாஸ்ரர், கபிலம்மான், பொட்டம்மான், கபில், தூயமணி போன்றவர்களும் அரசியல்துறைப் பொறுப்பாளராக அப்போதிருந்த சு.ப.தமிழ்ச் செல்வன் மற்றும் அவருடைய அணியைச் சேர்ந்தவர்களும் அந்த உரையை  ஒலிப்பதிவு செய்யப்பட்ட சீடிக்களில் கேட்டனர். இதற்காக பல சீடிக்கள் பரிமாறப்பட்டன.

 

ஒரு கட்டத்தில் அந்த உரை தொடர்பாக பல வகையான அபிப்பிராயங்கள் பரவின. சிலர் அந்த உரை இயக்கத்தைச் சீற்றமடைய வைத்துவிட்டது என்றார்கள். சிலர் அந்த உரை இயக்கத்தின் கவனத்திற்குப் போய் விட்டது என்றார்கள். இரண்டிலும் ஓரளவுக்கு உண்மையிருந்தது.ஆனால், அந்த உரை நடந்த அன்றிரவே தமிழீழ நுண்கலைக் கல்லூரிக்குப் பொறுப்பாக இருந்தவர் ,தமிழ்ச்செல்வனால் அழைக்கப்பட்டு விவரம் கேட்கப்பட்டார். பாலகுமாரன், பரா, ரமேஸ், ரவி, தமிழினி போன்ற அரசியல்துறையைச் சேர்ந்தவர்கள் மறுநாள் நடந்த தமிழ்ச் செல்வனுடனான சந்திப்பில் இது குறித்து பதிலளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

இந்த நிலைமையானது மு. தியிடத்திலும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களிடத்திலும் ஒரு வித கேள்வியை – அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்க்கையையும் அளித்தது. ஏறக்குறைய ஒரு விதமான உட்பதற்ற நிலை பொதுவாகவே உருவாகியிருந்தது.

00000000

(தொடரும்……………..)

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment