Home » ஃபஹீமா ஜஹான் » *மொழிபெயர்ப்புக் கவிதை-மூலம் – மஞ்சுள வெடிவர்தன ,தமிழில் – ஃபஹீமா ஜஹான்

 

*மொழிபெயர்ப்புக் கவிதை-மூலம் – மஞ்சுள வெடிவர்தன ,தமிழில் – ஃபஹீமா ஜஹான்

 

மட்டக்களப்பில் வைத்து

 

தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்,

 

களப்பில் எப்போதேனும் அலையெழும்.

வேதனைமிகுந்த மீனொன்று மேலெழுந்து

நெஞ்சில் அடித்தழுது

தடதடவென்று செட்டைகளை அசைத்து

வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி

நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும்

உறுதியான கணமொன்றில் மாத்திரமே.

 

தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்

களப்பு நீரில் நீண்ட தம்  வெளிச்ச ரேகைகளை வரையும்.

 

கல்லடிப்பாலம்

அரண் போல உயர்ந்து எழுந்தாலும்

தன் தலை கவிழ்ந்து விழி புதைத்து

புன்னகைக்க மறந்து துயர் தாங்கும்

ஓர் அப்பாவைப் போல.

 

சிந்தனை மறந்த வாகனங்கள்

பாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்

அர்த்தமற்ற தம் வெளிச்சங்களை

களப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி

 

இந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.

ஆழ்ந்த விழிகளால்  மெளனித்து

அனைத்துத் துயரத்தையும் தாங்கும்

முகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்

எல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்

களப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.

 

புத்தரின் நினைவெழும் நிக்கினி போயாகூட – வெறும்

சுண்ணாம்பாய்க் களத்தினுள் கரைகிறது,

புத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் – கடும்

இருளாயே இங்கு விடிகிறது.

வசந்தம் உதயமானாலும் உதிக்க மறுக்கிறது சூரியன்

இது கிழக்கு!

 

மூலம் மஞ்சுள வெடிவர்தன

தமிழில் ஃபஹீமாஜஹான்

 

 

 

சித்தண்டி கண்ணீர்

 

(மட்டக்களப்பு சித்தண்டியில், திகிலி வெட்டை அரச பாடசாலையில் ஐந்தாம் ஆண்டில் கல்விகற்கும் சிறுமியொருவர், இராணுவத்தினர் மூவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். மறுநாள் ஊர்வாசியொருவரின் உயிரற்ற சடலம் தடாகமொன்றிலிருந்து கிடைத்தது.)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திகிலி வெட்டை குளமதில் பூத்த தாமரையொன்றில்

விரிந்த இதழ்களினிடையே கேசரம் சிக்கிக் கிடந்ததா

கண்ணீர் வற்றியும் வற்றாமலும் திறந்திருந்த விழியிரண்டு

ஆயிரக்கணக்கான விழிகளைத் திறக்கச் செய்தது இருளிலேயே

 

கிழக்கில்  உதயமாகிச்  சூரியனும்  உச்சிக்கு வந்துவிட்டது

ஒளி வழங்காத சூரியனிடமிருந்து இருளே கசிந்தது

வெள்ளை நிற மல்லிகை மொட்டொன்று இருளில் தனித்துப் போனது

மெல்லிய புகைபோன்று சூரியனில் வழிந்து கொண்டிருந்தது

 

சிங்கக்கொடியின் மத்தியில் வீற்றிருக்கும் இராணுவ வீரர்கள்

பாலியல் பசிக்கு இரையாகக் கொண்டனர் குழந்தைகளை

மல்லிகை மொட்டொன்றை நடுவீதியில் சிதைத்தார்கள்

கீதம் பாடும் மீனொன்றை வதைத்துக் கொன்றார்கள்

 

அரசனோ  எமனோ நினைத்த வேலையை முடிப்பதற்கு

பூவோ பிஞ்சோ மகளை சிங்கத்துக்குக் கொடுப்பதற்கு

முட்டைகளையா தங்க முட்டைகளையா இன்னும் தேடுவது

நேர்மையா மிகவும் நேர்மையா எவ்வாறு சொல்வது

உடனே உடனே எவ்வாறு சொல்வது?

 

தாய்ப்பால் வாசனை மறவாத அழகிய பூவொன்றுக்கு

தொலைதூர இடமல்ல விளையாடித் திரியும் ஊர்மனை

செளபாக்கியமல்ல சுவாசிக்கக் கூட முடியவில்லை

தாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் இருக்கும் தெருவிலே

 

புற்பூண்டிழந்து போய்க் கிடக்கின்றது சித்தாண்டி – அங்கே

மனமெங்கும் வியாபித்திருந்த விஷத்தை மட்டுமா  கொட்டினீர்கள்

கருணைத் தடாகத்தில் புத்தர்களின் குணங்களை

மிதந்து போகவிடும் விழியுடையோர்களே

உங்களுக்கு அழகாகத் தெரிகிறதா இந்த நரகக் கிடங்கு

0000000

மூலம்மஞ்சுள வெடிவர்தன

தமிழில்ஃபஹீமாஜஹான்

 

 

0000000

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment