Home » இதழ் 11 » *முன்னணி சோசலிஸ்ட் கட்சி , சம உரிமை இயக்கம்-வி.சிவலிங்கம்

 

*முன்னணி சோசலிஸ்ட் கட்சி , சம உரிமை இயக்கம்-வி.சிவலிங்கம்

 

04

இலங்கையின் எதிர்காலம் குறித்து ஆழமான பார்வையைச் செலுத்த வேண்டிய தருணம் இதுவாகும். இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இற்றை வரையான காலப் பகுதியை ஆராயும்போது நாட்டின் ஜனநாயக விழுமியங்களும், இன நல்லிணக்கமும் படிப்படியாக அருகி மிக மோசமான ராணுவ சர்வாதிகார நோக்கிய பாதையில் செல்வதை அவதானிக்க முடிகிறது. சர்வாதிகாரம் என்பது சற்று மாறுபட்ட வகையில் குறிப்பாக லிபரல் ஜனநாயக வழிகளின் மூலமாக தேர்தல் வழிமுறைகள், ஒருவருக்கு ஒரு வாக்கு, பெரும்பான்மை ஆட்சி என்ற முறைகளின் மூலமாகவும் அவ்வாறான ஆட்சியொன்றை நிறுவ முடிகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ராணுவ சதிகள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பினை மேற்கொண்டு அவ் ஆட்சியாளரைப் பயன்படுத்தி நாடுகளின் மூல வளங்களைச் சுரண்டிய நிலமைகள் தற்போது சாத்தியமாகவில்லை. பொருளாதாரத்தினைத் தாராள மயமாக்கும்போது மக்களும் அதிக அளவு விடுவிக்கப்படுகிறார்கள். உழைப்பினை தாராளமாக உறிஞ்சுவதற்கு உழைப்போர் தமது உழைப்பை தாராளமாக விற்கும் அளவுக்கு சுதந்திரமும் அவசியமாகிறது. இதனால் தேச எல்லைகளின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. தாராள மயமாக்கல் என்ற போர்வையில்  முதலாளித்துவம் தனது பிடியை சர்வதேச அளவில் இறுக்கும் போது அதற்கு எதிராக உழைக்கும் வர்க்கமும் தமது பிணைப்பையும் அதிகரித்துக் கொள்கிறது. இம் முரண்பாடுகள் தீர்க்கமான கட்டத்தை எட்டும்போது ராணுவம் நாட்டின் இறைமை என்ற போர்வையில் ஒடுக்குவோரின் பக்கம் சென்றுவிடுகிறது. இவை தற்செயலான செயல்கள் என்பதை விட ராணுவத்திற்கான தீனியை முதலாளித்துவமே அதிகமாக வழங்கி தனது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்கிறது என்றே கொள்ளலாம். மேற்குறித்த கருத்துகள் ஒரு வகையில் கோட்பாடுகள் போல காணப்பட்டாலும் அவற்றினை இலங்கையின் இன்றைய நிலமைகளோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் யதார்த்தம் புலப்படும்.

fஇலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானித்தால் அல்லது ஏற்பட்டு வரும் விளைவுகளை பார்க்கும்போது ஒரு சில சீர்திருத்த நடவடிக்கைகளால் எதுவும் சாத்தியமாகாது என்பது தெளிவாக புலனாகிறது. அடிப்படை மாற்றங்கள் தேவையாகிறது. அவ்வாறான அடிப்படை மாற்றங்களை யாரால் மேற்கொள்ள முடியும்? என்ற கேள்வி எழுகிறது. பிரச்சனைகளின்  தாற்பரியங்களை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல், அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பு, மக்களுக்கும் இவர்களுக்குமிடையேயான இணைப்பு என்பன கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளன.

தற்போதுள்ள பிரதான அரசியல் கட்சிகள் பிரச்சனைகளை மேலெழுந்தவாரியாகவே அணுகுகின்றன. ஏனெனில் இக் கட்சிகளின் ஆதரவுத் தளம் என்பது வெவ்வேறு சமூகப் பிரிவினரின் ஆதிக்கம், நலன் சார்ந்ததாகவே உள்ளது. அடிப்படை மாற்றங்கள் எதுவும் தமது நலனுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற அச்சம் அதிகமாகவே உள்ளது. இதனால் நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பொருளாதாரப் பிரச்சனைகள் ஓர் குறிப்பிட்ட சாராரின் வாழ்வு நிலமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதே தவிர அடிப்படை மக்களின் வாழ்வில் காத்திரமாக எதுவும் நிகழவில்லை. குறிப்பாக தொடர்ந்து நீடித்து வரும் இனப் பிரச்சனையின் தாக்கம் சிறுபான்மைத் தேசிய இனங்களை பொருளாதார ரீதியாகவும், மொழி ரீதியாகவும் மோசமாக பாதித்து வருகிறது. இதனால் மொத்த நாடும் துன்பத்தினை அனுபவிக்கிறது. இப் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்களை சரியாக மதிப்பிடாமல் மாற்றங்களுக்கான பாதைகளையும் தேடமுடியாது. அவ் வகையில் பார்க்கும் போது தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானமும், அதனைச் செயல்படுத்த உருவாக்கிய அரசியல் கட்டுமானமும் பிரதான பங்கினை வகிக்கின்றன.

சுதந்திர காலம் முதல் முதலாவது குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட 1972ம் ஆண்டு வரை நாட்டின் பொருளாதாரம் பிரித்தானிய காலனித்துவ பொருளாதாரத்தோடு அதிக அளவு பிணைக்கப்பட்டிருந்தது. இலங்கை அதன் சந்தையாக அமைந்தது. உள் நாட்டில் வரி வசூலிப்பதற்கான ஓர் அரசுக் கட்டுமானத்தை குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளோடு வழங்கினார்கள். பெயரளவில் சுதந்திர நாடாக கருதப்பட்ட போதிலும் தேசிய பொருளாதாரக் கட்டமைப்பு குடியேற்ற ஆட்சியின் வடிவங்களையே தொடர்ந்தது.

1972ம் ஆண்டில் நாடு குடியரசாக்கப்பட்டு தேசிய வளங்களின் பிரதான ஏற்றுமதித் துறைகளான தேயிலை, ரப்பர் போன்ற பெருந் தோட்டங்கள் தேச உடமைகளாக்கப்பட்டன. பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்களின் நலன்கள் படிப்படியாக பறிக்கப்பட்டபோது வெளிநாட்டு வர்த்தகத்தில் பெரும் தடைகள் போடப்பட்டன. ஏற்றுமதி வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டுச் செலாவணியில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் பல இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை காரணமாக உள்ளுர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. உள் கட்டுமானங்களில் போதிய அபிவிருத்திகள் காணப்படாமையால் உள்ளுர் உற்பத்தியில் பெரும் தடைகளும், கால தாமதமும் ஏற்பட்டது. மக்கள் மணிக் கணக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, விலைகளை அதிகரிக்க உதவியதால் மக்கள் மிகவும் விசனம் அடைந்தார்கள். நாடு குடியரசாக மாற்றப்பட்ட போதிலும், மக்களுக்கு அதன் பலாபலன்கள் கிடைக்காமையால், ஆட்சியை மாற்றும் எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கியது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை நடத்திய போதிலும் மக்கள் ஆட்சியாளர்களின் அடிப்படைப் பொருளாதாரக் கோட்பாடுகளை புரிந்து கொள்ளத் தவறியிருந்தார்கள்.

இக் கூட்டணி அரசு சுமார் 7 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த வேளை நாட்டின் பொருளாதார அடிப்படைகளைப் பலப்படுத்தும் நோக்கில் எடுத்த f-1நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன. இத் தோல்விகள் பலமான வலதுசாரி அரசு ஒன்றின் உருவாக்கத்திற்கு வழி சமைத்தன. 1977 இல் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் தெரிவாகிய ஐ தே கட்சி நாட்டின் பொருளாதார, அரசியல் கட்டுமானங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். சந்தைப் பொருளாதாரத்தினை முதன்மைப்படுத்தினார்கள். தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டன. ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை விருத்தி செய்ய முடியும் என வாதிக்கப்பட்டது. 70 முதல் 77 வரையான ஆட்சிக் காலம் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐ தே கட்சி கூறியது. கட்சித் தாவல்கள், அரசுக்குள் இன்னொரு அரசு, இனப் பிரச்சனையை சரியாக கையாளாததால் அது பயங்கரவாதமாக, ஆயுதப் போராட்டமாக மாறியுள்ளது எனவும், மத்தியில் காணப்பட்ட பலவீனமான ஆட்சி பிரிவினை வாதத்தினைச் சரியாக கையாள தவறியுள்ளதால் மத்தியில் பலமான ஆட்சியின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

பொருளாதாரக் கட்டுமானம் தாராளமயப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டதால் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. அந்நிய முதலீட்டிற்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. ருபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது. வெளிநாட்டு நாணயப் பெறுமதி அதன் சந்தை நிலவரப்படி மாற்றம் அடையும் வகையில் பங்குச் சந்தையில் மிதக்க விடப்பட்டது. ஏழை, வறிய மக்களுக்கு வழங்கப்படும் மானியக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதோடு, கட்டுப்பாட்டு விலைச் சலுகையும் தளர்த்தப்பட்டது. இறக்குமதித் தடை நீக்கப்பட்டதோடு, முக்கிய பொருளாதார மையங்கள் தனியாரிடம் கையளிக்கப்பட்டன. உதாரணமாக அரசுடமையாக்கப்பட்ட பெரும் தோட்டங்கள் மீளவும் தனியாரிடம் கையளிக்கப்பட்டன. கடந்த காலங்களில் மிகவும் பலம் பொருந்திய தொழிற்சங்கமாக கருதப்பட்ட மலையக தொழிற் சங்கங்கள் உடைந்தன. முதலாளிமார் சம்மேளனத்துடன் தனித் தனியாக சம்பள பேரம்பேசலையும், வேலை நிறுத்தம் செய்யும் உரிமைகளையும் விலை பேசினர். இதனால் நாட்டின் பாரிய தொழிற்சங்கமும் பலவீனமாகியது.

நாட்டின் அரசியல் அமைப்பு முற்றாக மாற்றப்பட்டு இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை, விகிதாசார தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டன. இம் மாற்றங்களால் பாராளுமன்ற ஆட்சி முறை பலவீனப்படுத்தப்பட்டு மக்களின் மத்தியிலே நிலவிய ஜனநாயக விழுமியங்களும் படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டன. ஆட்சிக் காலம் முழுவதும் அவசரகாலச் சட்டமும், பயங்கரவாத தடைச் சட்டமும் அமுலில் இருந்தமையால் நாடு படிப்படியாக ராணுவக் கெடுபிடிக்குள் சென்றது. தேர்தல் முறையானது ஆட்சியாளர் தமது அதிகார இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. தேர்தல் முறை மாற்றம் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் அல்லது அதிகார வர்க்கம் அல்லது கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது நண்பர்கள், உறவினர்கள் என்போர் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை அளித்தது. 2010 ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்களின் முடிவுகள் இவ்வாறான ஓர் குழுவினரை ஆட்சி அமைக்க உதவியது. இவ்வாறான மாதிரி வடிவங்களை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் காண முடிகிறது.

தேர்தல் முறைகளும், கட்சி நிர்வாக கட்டுமானங்களும் ஜனநாயகமும், ஏகபோகமும், ராணுவ இணைப்பும்  கலந்த ஒருவகைக் கலவையின் f2வடிவமாக ஆட்சி அமைந்தது. பிரதான கட்சிகள் இரண்டிற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் மறைந்தன. இரு சாராருமே திறந்த பொருளாதாரத் திட்டங்களையே அமுல் படுத்தினர். உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே செயற்பட்டனர். இதனால் தனி நபர் குறித்த அம்சங்களே வேறுபாடுகளின் அடையாளமாக அமைந்தன. கட்சித் தாவல்கள் மாமனார், மாமியார் வீடுகளுக்கு சென்று திரும்புவது போல சாதாரண நிகழ்வுகளாக மாறியுள்ளன. இதன் பெறுபேறாக எதிர்க் கட்சியின் செயற்பாடுகள் பல்வேறு வகைகளில் முடக்கப்படும் அபாயங்கள் தோன்றின.

இம் மாற்றங்களினூடாக ஓர் தத்துவார்த்த நெறி பின்னப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இதற்கான தளங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக வெளியான கருத்துக்களில் புலப்பட்டன. ரணில் அவர்கள் பிரதமராக இருந்தபோது புலிகளுடன் நோர்வேயின் அனுசரணையுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ் ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது அரசு போருக்கான ஆயத்தங்களை மறைமுகமாக மேற்கொண்டது. ஒரு சந்தர்ப்பத்தில் புலிகள் தரப்பு பலமாக இருந்த வேளை காணப்பட்ட நிலமைகள் படிப்படியாக மாறியபோது அதாவது ராணுவச் சமநிலை அரசுக்கு சார்பாக மாறியபோது போர் நிறுத்த ஒப்பந்தத்தினை கௌரவிப்பதா? நிராகரிப்பதா? எனவும், நோர்வே மற்றும் மேற்கு நாடுகள் இப் பிரச்சனையில் தலையிடுவதன் உள் நோக்கங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சிங்களப் பகுதிகளில் எழுந்தன. சிறுபான்மைத் தேசிய இனங்களை ஓர் எதிரி நிலைக்கு எடுத்துச் சென்று அவை தேச விரோத சக்திகள் என அடையாளம் காணும் விதத்தில் பிரச்சாரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. போரை நடத்துவதற்கான ஆட் பலத்தினை சேகரிப்பதற்கு சாதாரண சிங்கள வறிய மக்கள் மத்தியிலே இவ்வாறான தந்திரங்கள் பிரயோகிக்கப்பட்டன. இவ்வாறான பிரச்சாரங்களை சிறிய கட்சிகள் மூலமே நடத்தப்பட்டன. நோர்வே ஓர் கிறிஸ்தவ நாடு எனவும், அமெரிக்காவுடன் இணைந்து நாட்டைப் பிரிக்க உதவுவதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இவ்வாறான பிரச்சாரங்கள் உள்நாட்டு அரசியலில் காத்திரமான பங்கை வகித்தது. சிங்கள பௌத்த தேசியவாதம் இதன் இயக்கு விசையாக செயற்பட்டது. இதன் காரணமாக ஜாதிக கெல உறுமய போன்ற அமைப்புகள் தோற்றம் பெறவும், ஜே வி பி பலமடைவதற்கும் ஏற்ற புறச் சூழல் ஏற்பட்டது. ஜாதிக கெல உறுமய தனது அரசியல் தளத்தினை பௌத்த பிக்குகள் மத்தியில் அமைக்க மறுபக்கத்தில் ஜே வி பி இனர் மாக்சிச கோட்பாடுகளை உள்ளுர் நிலமைகளுக்கு ஏற்றதாக மாற்றி அமைத்துள்ளதாக கூறத் தொடங்கினர். இரு சாராருமே பௌத்த மத பாரம்பரியங்களையும், சிங்கள தேசியவாத சிந்தனைகளையும், நாட்டின் இறைமையையும் இணைத்த பௌத்த சிங்கள தேசியவாத கோட்பாடுளாக முன் வைத்தார்கள். மகிந்த சிந்தனை என்ற பெயரில் அரசாங்கம் இதே கோட்பாடுகளை வெவ்வேறு விளக்கங்களுடன் முன் வைத்தனர். இதனால் பௌத்த சிங்கள தேசியவாதம் நாட்டின் அரசியல் தளத்தின் மையமாக மாறியது. போரின் பின்னர் நிலவும் இக் கட்சிகளிடையேயான உறவுகள் இன்னமும் பலமடைந்து வருகிறது. இன விரோத செயற்பாடுகள் மிகவும் அப்பட்டமாக அதுவும் அரசின் அங்கமாக இருந்துகொண்டே செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இப் பௌத்த சிங்கள தேசியவாதம் தனது எதிரிகளாக கொழும்பையும், அதனை அண்டியுள்ள பகுதிகளையும் சேர்ந்த ஆங்கிலம் கற்ற குடும்பங்களுக்கு எதிரானவர்களாக தம்மைக் காட்டிக் கொள்கிறது. சந்திரிகா பண்டாரநாயகா, ரணில் விக்ரமசிங்கா போன்ற அதிகார வர்க்கத்தினரை தமது எதிரிகளாக பிரகடனம் செய்கிறது. இவர்கள் மேற்குலக நாடுகளுடன் இணைந்து நாட்டைப் பிரிக்க உதவுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் விரிவாக்கமாகவே புலம் பெயர் தமிழர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

போரிற்குப் பிந்திய காலகட்டத்தினை கடந்த கால அரசியல் வழிமுறைகளிலிருந்து மாறுபட்ட விதத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு இவைகளே காரணிகளாக உள்ளன. குறிப்பாக தேசிய இனப் பிரச்சனை என்பது கடந்த காலங்களில் அமைந்த அரசுகளால் தீர்க்க முடியாது விடினும் பிரச்சனை ஒன்று இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவ்வப்போது ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தயாராகினர். ஆனால் தற்போது பெரும் மாற்றங்கள் காணப்படுகின்றன. ராணுவ வெற்றியைத் தொடர்ந்து அரச கட்டுமானங்களில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் ஏற்படவில்லை. பதிலாக அரசியல் அமைப்பின் 18வது திருத்தம், தெவி நெகும சட்டவாக்கம் என்பன அதிகார இருப்பை மேலும் நீடிக்கவும், அதிகாரங்களைக் குவிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் மாற்று அரசு ஒன்றிற்காக புலிகள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவை ராணுவத்தின் நிரந்தர வதிவிடங்களாக மாற்றம் பெற்றுள்ளன. அரசு- சிறுபான்மை இனங்களுக்கிடையேயான உறவு புதிய வரவிலக்கணத்திற்குள் சென்றுள்ளது. சிறுபான்மை என்போர் இல்லை எனவும், சகலரும் இலங்கையரே என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம், சமாதானம் என்ற வார்த்தைகள் கசப்பான விழுமியங்களாக கருதப்படுகிறது. நிலமைகளை அவதானிக்கும்போது எந்த அரசாவது சமாதானத்தை நெருங்குமானால் மிக அதிக அளவிலான விலை கொடுக்க நேரிடும் என்பது தெளிவாக புலப்படுகிறது.

ஐ தே கட்சிக்கும், மேற்குலக நாடுகளுக்குமிடையேயான வரலாற்று ரீதியான உறவுகள் இன்று தேச விரோத செயல்களாக வர்ணிக்கப்படுகிறது. போரிற்கு எதிரான நிலைப்பாடுகள், அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகளின் உதவிகள் பிரிவினையை ஆதரிக்கும் சூழ்ச்சி நோக்கம் கொண்டவை எனப்படுகிறது. தோல்விக்கு மேல் தோல்வியைத் தழுவி வரும் ஐ தே கட்சியால் எதனையும் சாதிக்க முடியாது என சாமான்ய குடிமகன் வரை சிந்திக்கும் அளவிற்கு நிலமைகள் மாறியுள்ளன. தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் உள்ள பலவீனமான அரசியல் தலைமைகளை மாற்றீடு செய்வதற்கான உள்ளக மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை. பேரம் பேசும் அரசியலை இக் கட்சிகள் இழந்ததால் கட்சித் தாவல்கள் சாதாரண நிகழ்வுகளாகியுள்ளன. தேசிய சிறுபான்மை இனங்களின்  அடையாள அரசியல் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. சகலரும் இலங்கையர், நாட்டின் எப் பாகத்திலும் யாரும் சென்று வாழலாம் என்ற வாதங்கள் இன அடையாள அரசியலிற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன.

f3தேசத்தின் அரசியல் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் சக்திகளாக சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் மாறி வருகின்றன. இதற்கு ஏற்றவாறான அரசியல் பின்புலத்தினை இன்றைய அரசு வழங்கி வருகிறது. இன முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவது, தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை நோக்கித் தாக்குதல்களைத் தொடுப்பது போன்றவற்றின் மூலம் இனங்களின் பலத்தைப் பரிசோதிப்பதும் அடையாளம் காண்பதும் போன்ற ராணுவ உத்திகளின் மூலம் சவால்களை முளையிலேயே கிள்ளி எறிய உத்தேசிக்கப்படுகிறது. பொதுபல சேன, சிங்கள ராவய போன்ற பெயர்களில் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு மறைமுகமான ராணுவ பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து பௌத்த மதத்திற்கு ஆபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் சட்டத்தினை கையில் எடுக்க வேண்டுமென இவற்றிற்கு புதிய விளக்கம் அளிக்கப்படுகிறது. இவற்றிற்கு பண உதவிகளை வழங்குவோர், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவோர், பாதுகாப்பு வசதிகளை வழங்குவோர் என பல தரப்பட்டோர் அரசு, ராணுவம் என்பவற்றிற்குள் இயங்குகின்றனர்.

பௌத்த சிங்கள சமூகத்தினை பரிசுத்தமாக வைத்திருக்கப்போவதாக கூறும் இவ் அமைப்புகள் பாரிய அளவிலான பௌத்த சிங்கள தோற்றப்பாட்டை உறுதிப்படுத்த முனைகின்றன. இவ்வாறான திட்டத்தை செயற்படுத்துவதற்கு வலுவுள்ள எதிரிகள் தேவைப்படுகின்றனர். தமிழ், முஸ்லீம், கிறிஸ்தவர் மற்றும் சிங்கள பௌத்தர்  அல்லாதோரே இலக்குகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். தமிழ், முஸ்லீம் இனப் பெருக்கம் சிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்திற்கு பெரும் அச்றுத்தலாக இருப்பதாக நிலமைகளை மேலும் பெரிதுபடுத்தி கருத்தடை என்பது சம்பந்தப்பட்டவரின் சம்மதம் இல்லாமலேயே மேற்கொள்ள முடியும் என சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வர உத்தேசிக்கப்படுகிறது.

இக் கருத்துக்கள் தேசத்தின் கீழ் மட்டம் வரை எடுத்துச் செல்லப்படுகிறது. தேசத்தின் இறைமைக்கும், பௌத்தத்திற்கும் பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளதாகவும், இதில் மேற்குலக நாடுகளுடன்  புலம் பெயர் தமிழர்களும் இணைந்துள்ளதாகவும் கூறி புலம் பெயர் தமிழர்களை தாயகம் திரும்பவிடாமல் தடுத்து நிலங்களை அபகரிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்படுகிறது. இஸ்ரேலிய- பாலஸ்தீனர்களின் பேச்சுவார்த்தைகளின் போது வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனர்களை நாடு திரும்ப அனுமதிப்பதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருகிறது. சனத் தொகைப் பெருக்கத்தால் தாம் சிறுபான்மையினராக மாறலாம் என்ற அச்சம் மற்றும் நிலங்களை அபகரித்தல் என்பவைகளே நோக்கங்களாக இருந்தன. இதுவே இலங்கையிலும் இன்றைய வரலாறாகிறது.

இதுவரை இலங்கைத் தேசத்தின் அரசியல் வரைபடத்தில் படிப்படியாக ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானித்தோம். இப் பின்னணியிலிருந்தே மாற்றங்களை நோக்கி பார்வையைச் செலுத்த வேண்டியுள்ளது. முதலாளித்துவ உற்பத்தியும், விநியோகமும் பெரும் நெருக்கடிக்குள் சென்றுள்ளது. 30களில் காணப்பட்ட நிலமைகளைவிட தற்போது சர்வதேச பொருளாதாரம் சிக்கலாகியுள்ளது. இவை பற்றி ஓர் அரசியல் இயக்கம் அல்லது கட்சி சரியான புரிதலைக் கொண்டிருப்பதும் அவை கட்சியின் கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் பிரதிபலிப்பதும் அவசியமாகிறது. அதுமட்டுமல்லாமல் அவை வெறுமனே கோட்பாட்டு விவாதங்களாக இல்லாமல் யதார்த்த பூர்வமான நிலமைகளை அடுத்த கட்டத்திற்கு மாற்றுவதற்கான போக்குகளைக் கொண்டிருத்தல் தேவையாகிறது. குறிப்பாக நாட்டின் பொருளாதாரக் கட்டுமானத்திற்கும், அரசியல் கட்டுமானத்திற்குமிடையேயான உறவு நிலை அடையாளம் காணப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது அரசியல் நிறுவனங்கள் குறிப்பாக நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், மாகாண நிர்வாகங்கள் போன்றனவும், சிவில், பாதுகாப்பு, உளவுப் பிரிவுகளும் ஜனநாயகப்படுத்தலுக்குட்படுத்தப்பட வேண்டும்.

எனவே இன்று ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்கான போராட்டத் தேவை எழுந்துள்ளது. ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது அரசு என்ற யந்திரத்தினை ஓர் ஓழுங்கு நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சியே. இப் போராட்டம் மனித இனத்தினை ஒடுக்குமுறைகளிலிருந்து விடுவிக்கும் வழி என கனவு காணவில்லை. பதிலாக ஓடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்னை இலகுவாக எடுத்துச் செல்வதற்கான புறச் சூழலை அது எமக்கு அளிக்கிறது. தாராளவாத கொள்கைகளின் பிடியில் சிக்கியுள்ள எமது நாடு நாம் எதிர்பார்க்கும் ஜனநாயக வாழ்வை மட்டுமல்ல ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தையும் நசுக்கி சமூகத்தினை நிர்வாண நிலைக்கு எடுத்துச் செல்லும் உள் இயங்கியலை அது கொண்டிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சமூக விடுதலை என்பதுகூட ஜனநாயகத்திற்கான போராட்டமே என்ற போதிலும் அவை விடுதலைக்கான போராட்டம் என்பதால் தோற்றுவிக்கப்படும் ஜனநாயகத்திற்கு ஒரு சமூகப் பரிமாணம் உண்டு என்றாகிறது.. இதனை தாராளவாத கோட்பாடுகள் தவிர்த்துச் செல்கின்றன. தடுக்கின்றன. இதுவே எமது கவனத்திற்குரிய முக்கிய அம்சமாகும். 60களிற்கும் 70 களிற்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகமான தேசிய அரசுகள் தமது ஜனநாயக கோட்பாடுகளில் சமூக விடுதலையையும் இணைத்தன. இதன் காரணமாக அந்த அரசுகள் அதன் தலைவர்கள் அதிக விலை கொடுத்தார்கள். இதற்கு உதாரணம்தான் கொங்கோ நாட்டின் தலைவர் பற்றிக் லுமும்பா அவர்களின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து மொபுற்று இன் பொம்மை ஆட்சி கொங்கோவின் மூலவளங்களை சூறையாட வழி செய்தது. இதே போன்றே கானா நாட்டின் குவாமி என்குருமா அவர்களும் படுகொலை செய்யப்பட்டார். ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் சமூக விடுதலைக்கான அம்சம் இணைக்கப்படும்போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்ன? என்பதை உணர்த்தவே இதனைக் குறிப்பிட்டேன். இன்று இலங்கையில் செயற்பாட்டிலுள்ள திறந்த பொருளாதாரம் சமூக விடுதலைக்கான அம்சங்களைப் படிப்படியாக அகற்றி வருவதோடு அதற்காக போராடக்கூடிய ஜனநாயக வாய்ப்புகளையும, பண்புகளையும் துவம்சம் செய்து வருகிறது.  இவற்றை வரலாற்றிலிருந்து பார்ப்பது அவசியமாகிறது.

1977 இல் ஐ தே கட்சிக்கு கிடைத்த அபரிமிதமான தேர்தல் வெற்றி, அதனைத் தொடர்ந்து 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 2வது குடியரசு அரசியல் யாப்பின் மூலம் அரசியல் நிர்வாகக் கட்டுமானத்தில் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை மாற்றங்கள், இவற்றைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட தாராளவாத பொருளாதாரம் என்பன சமூகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.

இக்கால இடைவெளியில் 83ம் ஆண்டு இனக் கலவரம், அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் காணப்பட்ட ஆயுத வன்முறை, தெற்கில் ஜே விf4 பி இனரின் வன்முறை அதனை ஒடுக்க ராணுவத்தினை பயன்படுத்தியமை என்பன அரசு மற்றும் பொருளாதார நிர்மாணங்களில் மாற்றங்களைத் தூண்டியது. தொடர்ச்சியாகவும், மிகவும் மூர்க்கமாகவும் எடுத்துச் செல்லப்பட்ட ஆயுத வன்முறை நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை ராணுவச் செலவினங்கள் மூலம் விழுங்கியது. அபிவிருத்திகள் தடைப்பட்டன. இதனால் பொருளாதார நெருக்கடிகள், வேலை நிறுத்தம், விலைவாசி உயர்வு, பண வீக்கம் என அதிகரிக்க இவை ஜே வி பி இன் போராட்டங்களுக்கு வாய்ப்பான சூழலை அளித்தது. அரசுக்கு எதிரான வன்முறைகள் ஜே வி பி இனாலும் பிரயோகிக்கப்பட்டன. வடக்கிலும் தெற்கிலும் எழுந்த ஆயுத வன்முறையை கையாள்வதற்கான வழிமுறையாகவும், தென் பகுதி நிலமைகளை ஒடுக்கவும் இலங்கை- இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இவ் ஒப்பந்தம் ஜே வி பி இன் ஆயுத வன்முறையை மேலும் அதிகரிக்க வாய்ப்பளித்தது. இதனால் அரசியல்வாதிகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆயுதப் போராட்டம், பொருளாதார நெருக்கடிகள் என்பன அதிகார வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக மாறியபோது ராணுவமே அரசியல்வாதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. ஆயுத வன்முறை நீண்டு செல்ல அரச நிர்வாகமும் தொடர்ச்சியாகவே அவசரகாலச் சட்டத்தின் கீழ் சென்றது. அரசியல் அமைப்பின் சில முக்கியமான பகுதிகள் இடைநிறுத்தப்பட்டன. இதனால் ராணுவக் கெடுபிடிகள், அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன நாளாந்த நிகழ்வுகளாகின. ஜனாதிபதியே ஆயுதப் படைகளின் தளபதியாகவும் இருப்பதால் ராணுவ ஒடுக்குமுறை உயர் மட்டங்களில் பாதுகாக்கப்பட்டது.

அரச கட்டுமானம் படிப்படியாக ராணுவச் செல்வாக்கிற்குள் அகப்பட்டுச் சென்றபோது வெளிநாடுகளின் தலையீடும் மேலும் அதிகரித்தது. ஆயுத உதவி, நிபுணத்துவ உதவி, பயிற்சிகள் என பட்டியல் நீண்டது. கூடவே போருக்கான செலவினங்கள், நிர்வாகச் செலவு என செலவினங்கள் அதிகரிக்க தேசத்தின் மூலவளங்கள் தனியார் நிறுவனங்களுக்கும், அந்நிய கம்பனிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இவை யாவும் போர் ஒரு புறம் தொடர, அதற்கான பிரச்சாரங்களும் கவனமும் திரும்பியிருக்க ஆட்சியாளர்கள் இக் கொடுமைகளைப் புரிந்தார்கள். இதனால் நாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை எடுக்கும் சக்தி அரசின் கைகளிலிருந்து படிப்படியாக வழுவி தனியார் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் கைகளுக்கு மாறியது.

இம் மாற்றங்கள் சமூகத்திலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. 30 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த ஆயுத வன்மூறை காரணமாக போர்ப் பொருளாதாரம் எனப்பட்ட கறுப்பு பொருளாதாரம் வளர்ந்தது. அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தோர் குறுகிய காலத்தில் பணம் படைத்தவர்களாகவும், இவர்களே போரை நடத்துவதற்கான உந்துதல்களையும் வழங்கினார்கள். ராணுவத்தில் ஒரு சாராரும் ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டதால் இவர்கள் போரை நீடித்து வைத்திருப்பதற்கான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படைகளுக்கு அப்பால் பாதாளப் படை நிறுவப்பட்டு அது அரச ஆதரவோடு பராமரிக்கப்பட்டது. சாமான்ய சிங்கள மற்றும் தமிழ் மக்கள் பலரின் படுகொலைகளில் மூன்றாம் தரப்பின் தலையீடு இருப்பதாக அரச அமைச்சர்களே குற்றம் சாட்டினர்.

அரச நிர்வாகச் சீர்கேடுகள், பொருளாதார முறைகேடுகள், நீடித்த ஆயுத வன்முறை, சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்கள் என்பன ஒன்றிணைந்து சமூகத்தைப் பாதித்ததால் ஆளும் வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்தது. இந்த இடைவெளியை மூடி மறைக்க இனவாதம், சிங்கள பௌத்த தேசியவாதம் பயன்படுத்தப்படுகிறது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயகக் கோரிக்கைகள், புகலிடத் தமிழர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் மனித உரிமைக் கோரிக்கைகள் என்பன சிங்கள தேசத்தை அழிப்பதற்கான தேச விரோத செயல்கள் என வர்ணிக்கப்படுகின்றன.

இவை யாவும் சமூக விடுதலைக்கான அடித்தளங்களை அழித்தொழிப்பதற்கான முயற்சிகளே. இப் பின்னணியில் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி, சம உரிமை இயக்கம் என்பனவற்றின் வரலாறு நாம் எதிர்நோக்கும் மாறுதல்களுக்கான குறைந்த பட்ச கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அதற்கான மக்கள் பலத்தையும் நிர்வாக கட்டமைப்பையும் கொண்ட பொருத்தமான இயக்கமாக பார்க்க முடியும் என்பது எனது அபிப்பிராயம். மிகக் குறுகிய கால அரசியல் வாழ்வைக் கொண்டிருப்பினும் அதன் இயங்கு தளங்களில் இருப்போர் நீண்ட அனுபவத்தோடு நிலமைகளை ஆழமாக ஆராயவும், மாற்றத்தை ஏற்படத்தக்கூடிய சக்தியையும் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அரசியல் கட்சிக்கான தோற்றம் என்பது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தைக் கொண்டதாக அமைதல் அவசியமாகிறது. அந்த ஆட்சி லிபரல் ஜனநாயக ஆட்சியாக அல்லது இதைவிட அடிப்படை மாற்றங்களைக் கோரும் சமூக விடுதலையை மையமாகக் கொண்ட ஆட்சியை நோக்கியதாக இருப்பினும் இவ் இரு சாராரும் அதிகாரத்தைச் செலுத்தக்கூடிய நிறுவனம், அதனுடனான உறவு என்பது குறித்தே பேசுகின்றனர்.

f5அரசு, அதன் உள்ளடக்கம் என்பவை குறித்த மாதிரியை நாம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களிலிருந்து பெற முடிகிறது. வெனிசூலா நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இம் மாற்றங்கள் மிகவும் குறுகிய காலத்தில் பாரிய மாற்றங்களைத் தோற்றுவித்திருக்கிறது. திறந்த தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த நாடுகள் அதிலிருந்து விலகி பங்குபற்றல் ஜனநாயகம் (Particpatory Democracy) என அழைக்கப்படும் புதிய ஜனநாயக வழிகளை நோக்கிச் செல்கின்றன. இதனால்தான் வெனிசூலா நாட்டின் கியூகோ சாவேஸ் அவர்களை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்தவர்கள் சில நாட்கள் கூட நிலைக்க முடியவில்லை. மக்கள் மீண்டும் அவரை பதவியில் இருத்தினார்கள்.

இப் புதிய ஜனநாயக வழிகள் மக்களின் கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து, வேலைவாய்ப்பு என்பவற்றை மையப்படுத்தியதாக அமைந்தது. உள்நாட்டு மூலவளங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை அரசு ஏற்படத்திக் கொடுத்தது. தேசிய திட்டமிடுதலில் மக்களின் முழுமையான பங்களிப்பு பெறப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் மக்கள் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. தாராளவாத பொருளாதார கட்டமைப்புகள் சந்தையின் செயற்பாடுகளில் அதிகம் தங்கியுள்ளன. இச் சந்தைகள் உற்பத்தி, விநியோகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வை தோற்றுவிக்கின்றன. இதனை செயற்படுத்தும் அரசு யந்திரம் சமூகத்தில் அதிகாரம் எவ்வாறு பரவலாக்கப்பட்டு உள்ளதோ அவற்றின் நலன்களின் பாதுகாவலனாக மாறிவிடுகிறது. சந்தைப் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்க அதிகரிக்க அதிகாரமும் குறிப்பிட்ட பிரிவினரின் கைகளில் குவிந்து விடுகிறது. இப் போக்கினைத் தடுக்க வேண்டுமாயின் அதிகாரம் பரவலாக்கப்பட்டு அதில் பலரும் பங்குபற்ற வேண்டும். இதனால் நலன்களும் பரவலாக்கப்படுகிறது.

இன்றுள்ள அரசியல் நிலமைகளைப் பார்க்கும் போது மாற்றங்கள் நீண்ட கால நோக்கில் அணுக வேண்டியுள்ளது. எனவே அதற்கான அரசியல் சமூக பொருளாதார நோக்கம் கொண்ட சமூக இயக்கத்தினை தோற்றுவிக்க வேண்டியுள்ளது. இந்த இயக்கத்திற்குள்தான் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளும் உள்ளடங்குகின்றன. தற்போது தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் அரசியல் செயற்பாடுகள் தமிழ்த் தேசியவாத அலைகளில் சிக்கியிருப்பதையே காண முடிகிறது. மிக மோசமாக பொருளாதார பின்னடைவுகளை அனுபவிக்கும் இம் மக்கள் பிரிவினர் இன்றைய அரசியல் கட்டுமானத்திற்குள் தீர்வுகளைக் காண எத்தனிக்கின்றனர் அல்லது அதற்கு ஏற்றவாறான அரசியல் தலைமைகளையே தொடர்ந்தும் உற்பத்தி செய்கின்றனர். சமூக பொருளாதார அடிப்படை மாற்றங்களைக் கோரி நிற்கும் சமூக சக்திகளின் உள்ளடக்கம் மிகவும் குறைவாக இருப்பதே இதற்கான பிரதான காரணமாகும். இருப்பினும் போருக்குப் பின்னரான காலம் மாற்றங்களை தந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. சாமான்ய குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியல் கதவுகளை பலமாக தட்டுகிறார்கள். மக்களின் பொருளாதார நிலமைகளை கையிலெடுக்கிறார்கள். ஆனால் தமிழ்க் குறும் தேசியவாத கருத்துகளுக்கு பலம் சேர்க்கவே அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

இங்குதான் முன்னணி சோசலிஸ்ட் கட்சி- சம உரிமை இயக்கம் என்பவற்றின் பாய்ச்சல் தேவைப்படுகிறது. சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு எதிராகவும், இனவாதத்திற்கு எதிராகவும் காத்திரமான குரலோடு அவர்கள் மக்களை அணுகும்போது பொருளாதார வலியால் அவதிப்படுபவர்கள் உண்மையான விடுதலையை நேசிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் இணைய முடிகிறது. தமிழ்க் குறும் தேசியவாதத்தின் இயலாமை தெளிவாக உணர்த்தப்பட்ட பின்னரும் அதன் பின்னால் மக்கள் நிற்பதற்குக் காரணம் நம்பிக்கை தரும் சமூக சக்திகள் இல்லாமையே. இந்த இடைவெளியை இவர்கள் நிரப்புவார்களானால் புதிய பாதை திறக்க நிறைந்த வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்.

 

000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment