Home » இதழ் 11 » * ஸ்ரீரஞ்சனி (சிறுகதை)

 

* ஸ்ரீரஞ்சனி (சிறுகதை)

 

ranjani

பல்வேறுபட்ட உணர்வுகள் போராடிக்கொண்டிருந்த மனதில் திடீரென ஒரு சிறு வைராக்கியம் துளிர்க்கவே, காரை மூடியிருந்த பனியைத் துப்பரவாக்கிய போது, காற்றின் திசையில் பறந்துவந்து – அவள் ஜக்கெற்றின் மேல் படிந்திருந்த அந்தப் பனித்துகள்களைக் கையால் தட்டிவிட்டு, தன் பொக்கற்றுக்குள் இருந்த போனை எடுத்து அவனுக்கு டயல் பண்ணிணாள், அவள்.

ஆனால் அவனின் பதில் கிடைக்கவில்லை. மீண்டும் அழைக்க நினைத்தவளுக்கு அப்படி அவள் ஒன்றுக்கு மேற்பட்ட தரம் அழைப்பது அவனுக்குப் பிடிக்காது என்பது நினைவுக்கு வர, ‘இருக்கிற மனவேதனையை ஏன் இன்னும் கூட்டுவான்’ எனத் தனக்குத் தானே சொல்லியபடி காரை ஸ்ராட் செய்தாள்.

காலையில் நிகழ்ந்தவை மீண்டும் மீண்டும் அவள் மனதைச் சுற்றி வட்டமிட்டன.

சோபாவில் அவளின் மடியில் படுத்திருந்த அவனின் தலையை அன்பாகக் கோதியபடியும், முகத்தை ஆதரவாக வருடியபடியும் அவள் அவனுடன் அளவளாவிக் கொண்டிருந்த போது — அவள் பக்கத்திலிருந்த அவளின் போன் மெல்லச் சிணுங்கியது.

அதை எடுத்தவள்,  ‘இப்ப வர முடியுமா எனக் கேட்கிறீர்களா’ என ஆங்கிலத்தில் சொன்ன போது, அவள் மடியிலிருந்த அவனது தலை மெதுவாக வலமும் இடமும் ஆடியது.  ‘ஓ சொறி, என்னாலை வர ஏலேமாலிருக்குது’ – பதிலுக்கு ஆங்கிலத்தில் சொல்லிப்போட்டு போனை வைத்தவள், அவனைப் பார்த்துக் காதலுடன் சிரித்தாள்.

“அது ஓஃவிஸ், 2 மணித்தியாலம் முந்திவர ஏலுமோ எண்டு கேட்டவை, என்ரை குட்டி தலையை ஆட்டிச்சுது, அதாலை வரேலாது எண்டு சொல்லிப்போட்டன். ஆனா குட்டி … நீங்கள் 10 மணிக்குப் போகோணும் எண்டெல்லோ சொன்னனியள், அப்படியெண்டால் நான் போகலாம்தானே, என்ன?”

“சீ .. 12 மணிக்குப் பிறகு போனால் போதும், ஆனால் நீ போறதெண்டால் போ. நான் இப்பவே போறன்,” சொன்னவன், திரும்பி மீண்டும் அவள் மடியில் குப்புறப் படுத்துக் கொண்டான்.

“ம், அப்ப சரி .. குட், இனி இரண்டு கிழமைக்குச் சந்திக்கேலாது, வீ கான் என்ஜோய். ஆனால் இண்டைக்கு சண்டை பிடிக்கக் கூடாது, என்ன… !  பிறகு நான் வேலைக்கு போயிருக்கலாமே எண்டு கவலைப்படுவன்… ஏதாவது குடிப்பமா, ரீ போடட்டா“

”இல்லை, எனக்கு இப்ப வேண்டாம்,” என்றவன் அவளுடன் சல்லாபிக்க ஆரம்பித்தான். ஆனால் அவளுக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. எனவே சற்று நேரத்தில், எனக்குப் பசிக்குது, ரீ குடிச்சுப்போட்டு இருப்பம், என்ன? எனக் கேட்டபடி அவனிடமிருந்து தன்னை மெல்ல விடுவித்துக் கொண்டாள்.

ரீ குடித்துக் கொண்டிருக்கும் போது அவனின் அக்காவின் மகள் அவனை அழைத்தாள். ஏன் அழைப்பு வந்தது என்பதை விளங்கிக்கொண்டவள், போனில் இருந்தவனுக்கு, தன் கையில் 12 ஐக் காட்டியபடி,  ‘12 மணிக்குப் பிறகு வாறன் எண்டு சொல்லுங்கோ’ எண்டு வாயாலும் முணுமுணுத்தாள். ஆனால் அவனோ,  ‘11 மணிக்கு வருவன், ரெடியாக இருங்கோ’,  என்று சொல்லிபோட்டு போனை வைத்தான்.

“12 மணி வரைக்கும் நீங்கள் நிற்பியள் எண்டு சொன்னதாலை தானே, நான் வேலைக்குப் போகேல்லை. 12 மணி எண்டு சொல்லச்சொல்லி … நான் கைகாட்டக், காட்ட நீங்கள்… ”

”இல்லை, நான் போகோணும்”

“ஏன், என்ன அவசரம் … அப்பவேன் எனக்கு அப்படிச் சொன்னனியள்?”

”நான் அப்படிச் சொல்லேல்லை”

” வட்,… நான் கேட்கேக்கை அப்படிச் சொன்னது உங்களுக்கு நினைவில்லை?

கேட்க முதல் வழமை போல் அவளுக்கு கண் கலங்கியது. குரல் உயர்ந்தது.

“சரி, நான் அப்படிச் சொல்லியிருந்தால் சொறி,” சொன்னவன் எழுந்து வாஸ்ரூமுக்குப் போனான்.

பிறகு வந்து சோபாவில் இருந்து கொண்டு, “சரி, இப்ப உமக்கு என்ன வேணும்?” எண்டபடி அவளைக் கொஞ்ச வந்தான்.

அவளுக்கு மேலும் கண்ணீர் வந்தது.

“உங்களுக்கு என்னைப்பற்றி அக்கறையில்லை. நான் உங்களுக்கு முன்னுரிமை குடுக்கிற மாதிரி நீங்கள் எனக்குத் தாறேல்லை. உங்கடை அக்காவுக்கு நீங்கள் ஒழுங்கான ஆள் எண்டு காட்டுறது தான் உங்களுக்கு முக்கியம்… நான் வேலைக்குப் போகாமலிருக்கிறன் …நீங்கள்…”

அவளின் குரல் உடைந்து, கண்ணீர் ஓடியது.

“ஓம், நீங்கள் சொல்லுறது, சரி. அது தான் எனக்கு முக்கியம் …. நான் ஒரு மடையன், எத்தனை வேலையிருக்கேக்கை, நான் இங்கை வந்திருக்கக் கூடாது…”

“ஓ, எனக்கு மட்டும் வேலையில்லையே, நானும் அப்படித் திரும்பச் சொல்லலாம் தானே? 2 கிழமைக்குச் சந்திக்க மாட்டம் எண்டு சண்டை பிடிக்காமலிருக்க வேணும் எண்டு நினைச்சன், ஆனால் … எப்பவும் இப்படித்தான்”.

“ஓம், நான் தான் இப்ப சண்டைபிடிக்கிறன்… நீங்கள், வேலைக்குப் போகாததைப் பற்றித் திரும்பத் திரும்ப பிறகும் சொல்லுவியள், அந்தக் காசை நான் உங்களுக்குத் தாறன்.”

“நான் இப்ப காசைப் பற்றிக் கதைக்கேல்லை…..”

அவள் சொல்லி முடிக்கமுன், முன்னுக்கு இருந்த மேசையின் கண்ணாடியில் ஓங்கிக் கையால் குத்தினான் அவன்.sri

அந்தக் குத்திலிருந்து அந்தக் கண்ணாடி எப்படியோ தப்பிவிட்டது. ஆனால்… அது அவளைப் பலமாக அதிர வைத்தது. அத்துடன் அவளின் தகப்பனை அவளுக்கு நினைவூட்டவும் அது தவறவில்லை.

சில நிமிடங்களில் ஆசுவாசப்பட்டவன்,  “சரி, இப்ப என்னைக் கொஞ்சு” எனக் கேட்டபடி அவளைக் கொஞ்சினான்.

வழமையில், பொதுவாக வாய்ச் சண்டை வரும் போது,  “என்னைத் தொடாதே” என்பவன்,  “நான் இப்ப போகவேணும்” என உடனே வெளிக்கிடுபவன்… இன்றைக்கு ஏனோ கொஞ்சம் மாறாக இருந்தான்.

அது அவளுக்கு கொஞ்சம் ஒத்தடமாக இருந்தது.

“அம்மாட்டைப் போறதுக்கு முதல், உங்களை …இந்த நிலையிலை பிரிய எனக்கு விரும்பமில்லை. பிறகு அங்கை, எனக்கு இது தான் ஒரே நினைவாயிருக்கும்… அதாலை உங்களை ஒண்டு கேட்கலாமோ?…இரவைக்கு வேலையாலை வரேக்கை கோல் பண்ணுறன். ஒருக்கா வந்திட்டுப் போறியளே?”

“நெடுக வெளிக்கிட, என்ரை வீட்டிலை என்ன நினைப்பினம்…”

“அப்ப, உங்களுக்கு விருப்பமில்லை”

“சரி, கோல் பண்ணு”

அப்படிக் கதைத்ததன் முடிவாகத்தான் அவள் அழைத்திருந்தாள். ஆனால் அவன் அங்கு வரத் தேவையில்லை என்று சொல்லத்தான் அழைத்தாள்.

வேலை முடிய நேரம் எடுத்து விட்டதால் அவன் வந்தாலும் பின்னர் நேரம் போட்டுது என ஒரு மணித்தியாலம் கூட நிற்க மாட்டான் என்பதை விட கண்ணாடியை உடைக்கத் தவறினாலும் அவனின் கைமுட்டி அவளின் மனதைப் பலமாகவே உடைத்திருந்தது. அன்று ஒரு நாள், கோவத்தோடை போகாதேயுங்கோ என அவள் கெஞ்சிய போது, முன்நின்ற அவளைக் கோபத்துடன் தள்ளினான், இன்று இப்படி…

அன்பிருக்கிற இடத்திலை எதையும் எப்படியும் சொல்லலாம் என்கிறார்களே. அப்படியென்றால் எங்களிடையே அன்பில்லையா? ஏன் இப்படி எடுத்ததெற்கெல்லாம் நாங்கள் சண்டை பிடிக்கிறம்? என அவள் மனசு கதறியது.

ஒரு பிரச்சனை நடந்தால் அதை அவன் கன நாளைக்கு வைத்துப் பிசைவான், கதைக்க மாட்டான், போதாதற்கு இந்த உறவை விட்டுவிடுவோம் என்பான், கெஞ்சினால், செருப்பாலை அடித்துப் போட்டு குடை பிடிப்பதாகக் குற்றம் சாட்டுவான், அப்படி எல்லாம் அதீதமாகவே கதைப்பான்.

இது தான் இப்ப கனநாளாக நடக்குது. நினைத்த போது அவளுக்கு சோகம் இன்னும் அதிகமானது.

இப்படியான ஒரு சம்பவத்தை நண்பன் ஒருவனிடம் சொல்லி, அதை ஆணின் பார்வையில் புரிவதற்கு அவள் ஒரு முறை முயன்றபோது,  ‘உனக்கும் உன் உணர்வுகளுக்கும் மரியாதை தராத ஒரு உறவை நீ ஏன் நாடுகிறாய்? அன்பு இருந்தால் தேடல் இருக்கும், இப்படிக் கோவம் சாதிக்க முடியாது,’ என அந்த நண்பன் அவளுக்குச் சொன்ன அந்த அறிவுரை அவளுக்குப் புரிதலுக்குப் பதில் மிகுந்த குழப்பத்தையே கொடுத்திருக்கிறது.

வீட்டுக்குப் போவதற்கு எடுத்த அந்த அரை மணி நேரத்திலும் அவனின் அழைப்பு வராததால் வீடு இருந்த வீதியில் காரைத் திருப்பிய போது, ஏற்கனவே வந்து எனக்கு ஆச்சரியம் தரக் காத்துக்கொண்டிருப்பானோ? என மனதில் வழமை போல ஒரு நப்பாசை எட்டிப்பார்த்தது.

அந்த நொடியில், மனதில் அதுவரை இருந்த வைராக்கியம் எங்கோ போய் மறைய, அவளின் உடலின் ஒவ்வொரு நாடி, நரம்பும் அவனுக்காகத் துடித்தது. ஒவ்வொரு  மூலையாக அவளது கண்கள் அவனது அந்த சில்வர் கொண்டாவைத் தேடின.

ஆனால் வீட்டுக்குள் போய், 15 நிமிடங்களான பின்பும் எந்தத் தகவலும் வரவில்லை.  ‘சம்பவம் நடந்த விதம் மனதைப் பாதிச்சிட்டுதாக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு வரப் போறானோ’- அவளின் மனசு காரணம் தேடி,… இப்படிப் பலவிதமாகக் கற்பனை செய்தது.

அந்தக் கற்பனைகளும் அவன் மேல் அவள் கொண்ட பாசமும் அவள் மனசை மீண்டும் அவனுக்காக உருக வைத்தன.

அவன் வந்ததும், அவனை இறுகக் கட்டிப்பிடித்து,  “ஐ லவ் யூ டார்லிங்!” எண்டு சொல்லவேண்டும் என வாசல் மணி எப்ப ஒலிக்கும் எனக் காத்திருந்தாள். அத்துடன் அடிக்கடி தனது போனையும் பார்த்துக் கொண்டாள்.

முடிவில் அரை மணி நேரத்தின் பின் ஒரு ஈமெயில் வந்தது, “ சொறி, அதிகம் எக்ஸ்ச்சைஸ் செய்து உடம்பைக் காயப்படுத்திப் போட்டன்.  அதனால் வர முடியவில்லை.”

மனசில் கட்டிய கோட்டைகள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்து அவள் மனதில் அவை இரத்தக் காயத்தை ஏற்படுத்தின.

‘சரி, அதைக் கோல் பண்ணிச் சொல்லியிருக்கக் கூடாதா?…. அப்படியெண்டால் – வேணுமெண்டு தான் கோலை அவன் எடுக்கவில்லை’ என்பது அவள் மனதில் உறைத்த போது … கோபத்துக்கு மேலாக மேலும் தான் வலிய வலிய இனியும் போய்க் காயப்படப் போவதில்லை என்ற ஆக்கிரோஷமே இப்போது அவள் மனதில் துளிர்விட்டது.

 

00000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment