Home » இதழ் 11 » * பாசி – (சிறுகதை)எஸ் நஸீறுதீன்

 

* பாசி – (சிறுகதை)எஸ் நஸீறுதீன்

 

s.nasi

‘உனக்கும்,  எழுத்துக்கும் காததூரம், எவ்வளவு முட்டி மோதினாலும் உனக்கு வராது. அரைச்ச மாவையே, இன்னும் எப்படித்தான், சூடு சொரணையில்லாம  அரைக்கிங்க்கண்டு தெரியாப்பா,’

‘அதென்ன, பாடம் படிக்கிற மாதிரியா?, நவீனமும் போய், பின், பின்,,,( நாலுதரம் சொன்னாள்) நவீனமும் வந்தாச்சி! இவரொருத்தர் மட்டும், நிலைப்பது என்றால், எந்த இசம்வந்தாலும் வாழ்றதுடிண்டா, இது, உலைக்காகுற காரியமா?, இது ஒண்ட வெச்சே ஊரெல்லாம் சண்டை…’ அவருக்கு அவர் மனைவி இத்தனை சொல்லியும், தூக்கம் வராமல் இருந்ததில்லை. ஆனால்,

எழுத்தாளர், மாபெரும் சிந்தனையாளர், கொஞ்சம் கர்வி, பெரிசு என்றெல்லாம் பெயரெடுத்த அவரால், அன்றிரவு உண்மையாகவே தூங்க முடியவில்லை.  கண் கொஞ்சம் செருகினாலே, அவன் வந்து, ‘ தூங்கினது போதும்டா, எழும்புடா, எழுதுடா’ . என அருகில் நின்று எழுப்பிக் கொண்டே இருந்தான். கண் முழித்துப் பார்த்தால் அருகில் இல்லாது ஒளிந்து போனான். மீளக் கண்களை  இறுக்க மூடிக்கொஞ்சம் கண் செருகினாலே வந்துவிடுகிறான்.

‘ டேய், தூங்காதடா…’

‘என்னத்த எழுதுறது?’ எனத் திருப்பிக் கேட்டார். அவன்,
‘ தெரியாத மாதிரிக் கேட்கியே. நான் சொன்னத  எழுதுடா’ என்றான்.

அவரின் மனைவி பின்னிரவில், கட்டிலில்  எதேச்சையாய்க் கைவீச (எதேச்சையென்றுதான் பெண்களில், அதுவும் எழுதுகிறவர்களில்  அநேகர் எழுதுகிறார்கள் ) ஆளைக்காணோம்.   அவளுக்கு, அவர் நடுச்சாமத்துல எழும்பி, ‘வா,  பால்வடியும் நிலா பார்க்கலாம்’ எனக் கூப்பிடுகின்ற கேஸ் என்று தெரியும்.   தூக்கக்கலக்கத்துடன் எழுந்து பார்த்தவள், காரியாலய அறையில் விளக்கெரிவதைக் கண்டாள்.  முதலில் பாத்ரூம் போனாள். கண்களில் தூக்கம் சுமந்தவளாக அவனை அண்மித்தாள்.. எழுதிக்கொண்டிருந்தான். அவளிடம் துடிக்க, மீசையில்லை. வாய் துடித்தது. அந்த வாயைத், தன் உதடுகளால் பற்றி,  தன்னருகான அடுத்த கதிரையில் உட்கார்த்திவைத்து, சொல்லத்  துவங்கினான்.

‘யார்,  நம்பாட்டியும், நீயாச்சும் நம்புடி.. அவன் என்ன உர்றானில்லடி, இதை எழுதாட்டித் தூங்கவே விட மாட்டன் ங்கான்டி’
‘அதுக்கு, இந்த நேரத்திலயா?’
‘ம்ஹும், அவனாச்சும், நானும் எழுதுறன் என ஒப்புக் கொண்டானே. அந்த சந்தோசத்திலேயே, எழுதிட்டு வாரண்டி.’
சிணிங்கிக் கொண்டே, போனாள். அவன்,  எழுதத் துவங்கினான்.

ஒருகாலத்தில், இலங்கையில், நீ சிங்களவண்டா, உவன் முஸ்லிம்டா, அவன் தமிழனடா என சத்தியமாக நினைவிற்கே வராதபடி துடிப்பாய், சிரிப்பாய்  திரிந்த இடங்கள், பொழுதுகள் நிறையஇருந்தன. இப்போதும், இடங்கள் இருந்தாலும், நாட்கள் குறைந்து  போய்விட்டன. ஆனாலும், வருசத்துக்கு  என்ன வழி ப்பட்டாவது இரண்டு தடவையாவது (போறதுக்குப் பிரியாவிடையும், உள்ளே வாறத்துக்கு, வாரவக்கட்டுல துவங்கி, கடைசியாப் பூமழை  தூவி வரவேற்கிற விழாவும்) வளாகத்துள்  நடந்திடும். அன்றைக்கு, தலையால ஊத்தினது, ஊத்தாதது வேறுபாடின்றி (சீயர்ஸ்ண்டு பியர் சீறினாத்தான், ஒழுங்கும் மரியாதயுமா முழுமனித உணர்ச்சியோட கொண்டாடினதா ஆகும்)  ஆண்கள் எல்லோரும் மச்சான்தான். வைஸ் சென்சலராயிருந்தாலும் சரியே.

‘டே மச்சான், என்னக் கொஞ்சம் புடிடா?’

பெண்கள் தனியாக அம்புட்டால், மாட்டிட்டு இண்டைக்கு, என நினைக்க  வேண்டியதுதான்.

‘போதையில கேக்கண்டு நினையாத, விரும்புவாயா?’ எனக் கேட்டு, மலர்ந்தால் தொடரும்: முகம் சுண்டினால், கை பிசைந்து நிற்பவளிடம்,
‘இந்த நள்ளிரவில, நீங்களும் நிண்டு, போதையாடி ஏத்துறிங்க’ என விரட்டும் பொறுப்பு வாய்ந்த தருணம்.
அனேகம் ஓடிடுங்கள். சிலது ஒளிஞ்சிடுங்கள்.

அடுத்த நாள், இழிப்புடன்,

‘அது மப்புல, என்ன பேசுறம்’ண்டு தெரியுமா?’.
தகப்பன்மாரெல்லாம் அவர்கள்  வழங்கும் உபதேச கானத்த்தைக் காதுகொண்டு கேட்டால், இன்னும் நாலைந்து பெத்துப் போடலாம் என நினைக்குமளவு   மதி மயங்கிப் போய்விடுவார்கள். ஆசீர்வாதமோ, ஆ,,சீர் வாதம். பெரிய தோரணையும், எங்கிருந்தாலும் வாழ்கவும் கரைபுரண்டு ஓடும்.

இன்றைக்கு, பிரியா விடை  நிகழ்ச்சி  நடந்து கொண்டிருந்தது. என் அறைத்தோழன், சுந்தரலிங்கம்,நல்ல மேடைப் பேச்சாளன். அவனுக்கு  நிகழ்ச்சி இருந்தது. ஆனால் அவன், விழா மண்டப  பின் வராண்டாவில் சரிந்து கிடந்தான். இனி இவனை  மேடையில் ஏத்தினால், உள்ளதுவும் போய்விடும். என் தோளில்  வாந்திவேறு எடுத்திருந்தான். நேற்றுவரை யாராவது அவனிடம், ‘ குடி, குடியைக் கெடுக்கும்’ என்ற தலைப்பில்  பேசச் சொன்னால், பேப்பரில் பொயின்ற் எழுதி வைத்துக்கொண்டு பேசாமல், அனாவிலிருந்து, அஹ்ஹன்னா வரை பேசக்கூடியவன். அப்படியே ஒழுகி வருபவன்.  ‘அட மண்டுவே,  அனைத்துமே இந்தப் பிரியாவிடையுடன் அழிந்து பட்டதுவா?’

‘ஏன்ரா  குடிச்ச?’ எனக் கேட்க முடியாது. அத்தனை நாகரீகம் குறைந்து பழகுற, படித்துப், பண்படாத ஆக்களல்ல, நாங்கள். சுந்தரின் இந்தத் திடீர் மாறுகைக்கு உள்ளே ஆழ ரணமிருக்க வேண்டும்.  கடந்த மூன்று கிழமையாக முகத்தில் செழிப்பற்றுத்தான் திரிந்தான். அப்படியும் சொல்ல முடியாது, சிலவேளை அடம்பிடித்து அழகாக உடுத்தும் பவனிவந்தான்.இரண்டும் ஒன்றுக்காகத்தாண்டா என்றால் கொடூரமானவன் என நினைப்பான் என்று வாய் மூடி இருந்தேன். படிப்பைப் பிரிவதிலும், சந்தோசம் வராது போகுமா? அவனுக்கு வராமைக்கு, அவளா காரணம்?

கண்டி மழையும், எல்லாவளாகத்தின் காதலும் ஒன்று என்பார்கள். இரெண்டும் ஆர்ப்பாட்டமேதும் இல்லாமல்  சட்டென்று  வரும்.  சொல்லிக் கொள்ளாமலேயே, மலர்ந்து, மேகக் கறுப்பையே, இல்லாது காட்டி, ‘ ‘என்னது, எங்கட்ட இருந்தயா ‘ எனக் கேட்டு,  வானக் கீற்றுக் குழிவிழ ஒளி  சிந்தும்.  எப்போதாவது, அத்தி பூத்தாற்போல சிலதுகள், கல்யாணமும் கட்டப்போவதாகச் சொல்லியபடி பிரிந்து போகும். சுந்தரின் காதலும் இரெண்டரை  வருடங்களுக்கு மேல், வெற்றி விழாவாக ஓடிக்கொண்டிருந்ததால், ‘மூத்துச் சாகும்வரையான, சோடிச் சத்தியமாக்கும்’ என நினைத்திருந்தேன்.  கவிழ்ந்தாள், என்று பார்த்தால் சுந்தர் கவிழ்ந்து  போயிருந்தான். இன்று, அவளும், வழமைபோல சுந்தருடன் இணைந்து சபையில் உட்காரவில்லை. அந்த அழகிய அலங்காரவள்ளி, தோழிகளுடன் உட்கார்ந்து, ஆர்ப்பாட்டமாக நிகழ்ச்சியில் ஐக்கியமாகி இருந்தாள். சுந்தரைத் தோளில் தாங்கிப் புல் தரைக்குக் கொண்டு வந்தேன். அவனிடம் குரலை உயர்த்தியே சொன்னேன்:

‘என்னால் இன்னும் நம்ப முடியவில்லை’ அவன் என்கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. பெண்கள், அரிவாள் மனையில் உட்காரும் தினுசில் உட்கார்ந்திருந்தான். இரு கைகளையும் நிலத்தில் இடைவெளிவிட்டு வைத்திருந்தான்., சட்டென்று, வலதுகையை வானத்துக்கு உயர்த்தியபடி:

‘அவள் அப்படிச் சொல்லியிருக்கப்போடா மச்சான்’ என்றான்.

இப்போது  உடம்பின்  சூடும், மனசின் வெப்பத்துடன் சேரக் கொட்டிவிடப் போகிறான் என நினைத்தேன். மௌனமாக  அவனைக் குனிந்தபடி, ‘எங்க மேல சொல்லு’ என்பதாகப் பார்த்தேன். என்  முகத்தைப் பார்த்து ஒரு இளிப்பு இளித்தான். பின் சொன்னான்:

‘என்ன பார்க்கிற, நம்முட சுந்தராடா இதுண்டுதானே. மவனே, நீ லவ் பண்ணியிருக்கியா? உன்னையே எப்பயாச்சும் நீ விரும்பினாத்தாணடா, இன்னொன்டுக்குக் கொடுக்கிறதுட அருமை தெரியும்’

நான் முன்பே கேள்விப்பட்டிருந்தேன். இந்த நிலையில் வரும் தத்துவங்களுக்குப்  பொருள்தேடி அலையக் கூடாதென்று. ஆனால் அவன், உடுத்திருந்த கறுப்புநிற கோட்டுக்குள்ளிருந்த, வெள்ளைச் சட்டையின் பொக்கற்றிலிருந்த பொருளை- ஒரு மடிக்கப்பட்டிருந்த கடிதத்தை எடுத்து என்புறம்  நீட்டினான். கை நீட்டி வாங்கினேன். அவனின் கை, மைதானத்தின் ஓரமாயிருந்த,  தெரு விளக்கைச் சுட்டியிருந்தது. தாளைப் பிரித்தபடி, விளக்கின் கீழானேன். அப்பப்பா,,எத்தனை உருகிய காதல் அது.

s.nasrஅவனைத் துயிலுக்கனுப்புவது அவள்.
கனவிலும், தேவதையாயிருந்தாளவள்.
அவள் விரும்பும், பல்துலக்கி துவங்கி, ஆடை அணிதலாகி, அளவளாவும் முறை மாறி, சூ மாறி,  நடைமாறி,,,அவளின் வருங்காலப் பெருந்தகை நயினார் பூவுக்கேற்ற நாக வண்டாகவே மாறிப் போயிருந்தான்.
நேற்றுதான் படிப்பை இறக்கிவைத்து நிமிர்ந்த பிள்ளையைக் கவிழ்த்திட்டாளே  மீளவும் மடித்தபடி அவனின் அருகானேன். என்னிடம் நியாயம் கேட்டான்:
‘அவள், அப்பிடிச் சொல்லியிருக்கப்போடா மச்சான்’

கடந்த மூன்று வருடங்களிலும் இதைப்போல எத்தனையைப் பார்த்திருந்த கண்கள் என்னுடையது. பெண்களுக்கும் தன் வாழ்வு என்பதைவிட,  முன்னாகவுள்ள சந்தோஷ வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டமிடுதல் தெரிந்திருக்கிறது.  சென்ற வருடம், எங்களின் சீனியர்களின் பிரிவில் இதே போன்ற ஒரு சண்டைக் கட்டம், நான் சாட்சியாளராக இருக்கவே நடந்து முடிந்தது. அன்றும் நண்பனுக்காக அவளிடம் தூது போனேன். அவள் சொன்னாள்: அதுவும் எவ்வித பதட்டமுமின்றி என்ன அழகாக,

‘நான் எதுவானாலும், காதலானாலும் யோசித்து முடிவெடுத்துப் பேசுவதில் பெரியவளாக்கும்,  தெரியுமா?’- பேசினாள்:

‘கடந்த இரு வருடங்களில் ஒருமுறைகூட நான் அவரை அப்படிப் பார்க்கவில்லை. எனது நல்ல நண்பர் அவர். எனக்கும் மற்றைய மாணவர் தொல்லையிலிருந்து விடுபட அது தேவைதான் போலிருந்தது. வெளியே மற்றயவர்கள் எங்களைக் கதைக்கிறார்கள் என்றுசொல்லி, நாங்களே சிரித்துப் பேசியிருக்கிறோம். பேச்சுவாக்கில் ஒருமுறை, காதல் என்பது பேசிப் பழகிய பின்னர் வருவது நல்லது எனச் சொன்னதுவே சம்மதத்திற்கு அறிகுறியா? என்னால், ஒரு கணவருக்குரிய நிலையில் அவரை வைத்துப் பார்க்கவே முடியவில்லை’

அந்த வருடத்தின் அழகு ராணி மட்டுமல்ல அறிவின் ராணியும் அவள்தான். அதை அப்படியே கொஞ்சம் கைகால் வைத்துச் சொல்ல,சீனியருக்கு, குத முனைப்பக்கம் சூடுகிளம்பி  ரோசம் பொத்துக் கொண்டு  வந்து விட்டது. சுந்தரைப்போல, ‘அவள் அப்படிச் சொல்லியிருக்கப்போடா மச்சான்’ என சீனியர் அரற்றவில்லை. ‘ அப்படியா சொன்னாள் அந்தச் சிறுக்கி’ என ஆர்ப்பரித்து நின்றான். அவள் கேள்விப்பட எப்படி வாழ்ந்து காட்டுகிறேன் பார்’. நான்,’ நிச்சயமாகக் கேட்காது. அவர்,இப்போது மாஹோச் சந்தியில் நின்று கொண்டிருப்பார்’ என்றேன். இந்த வருடம் சுந்தர், எந்தவித ஆர்ப்பரிப்புமின்றி, வாழ்வையே சூறையாடிட்டாள் மச்சான்’ என அரற்றிக்கொண்டிருந்தான்.

நான், நகைச்சுவை வடிவேலு  கணக்காக,
‘எப்பூடி சொல்லியிருக்கப்போடா ‘ என்றேன். சுந்தர் என் பதிலில் ரோசம் கொண்டான்: சந்தேகம் கொண்டான். தலை சரித்து,  உயர்த்தியபடி என்னைப் பார்த்துக் கேட்டான்.
‘என்ன, நக்கலா?’
‘இல்லாமல்? இது  தேவைதானா உனக்கு?’ என்றேன். அவன் மௌனமாக  என்னை வெறித்தான். கண்ணில் நீர் தளும்புவது தெரிந்தது. குடித்தால் கண் சிவக்க, சூடு கிளம்ப, அதை நிவர்த்திக்க உடலின் கண்ணீர்ச் சுரப்பி தானாகவே சுரந்து,,, அப்போதும் விஞ்ஞானிதானா?   திடீரென வலது கையைத் தரையில் அடித்தபடி, மீண்டும் சொன்னான்.
‘அவள்,  அப்படிச் சொல்லியிருக்கப் போடா மச்சான்.’

எனக்கு தலையும் புரியவில்லை: வாலும் தென்படவில்லை. அவனை முறைத்தபடி  இருந்தேன். அவனும், அமைதியாகி விட்டான். அவனருகே, உட்கார்ந்து  கொண்டேன். திடீரென என் தோளில் கைபோட்டபடி கேட்டான்:
‘என்ன நடந்ததுண்டே கேட்க மாட்டியா?’
‘இவ்வளவு காட்டின உனக்கு, அதையும் சொல்றதுக்கென்ன?’
‘அடடடா,,உங்கட ஈகோ தடுக்குதாக்கும்?’
‘அப்பிடி ஒண்டுமில்ல. வழமையப்போல,’ இது எங்கட பெர்சனல்’ண்டா நாங்க எங்க எங்கட மூஞ்சிய  வைக்கிறயாம் ‘
அவன்  சிரிக்கவில்லை. நானே கேட்டேன்:
‘அது சரி, வழமையப்போல இல்லாம, இந்த ஊடலுக்கு நாட்கள் கூடிண்டே போகுதே. அதுக்குத்தானா இது?’கொஞ்சநேரம் பேசாதிருந்துவிட்டுச் சொன்னான்.

‘சும்மா குடிகாரன் புலம்புறாண்டு, நினைக்காயாக்குமா? எல்லாமே ‘குளோஸ்டா’ மச்சான். அவள் என்னப்போய், அப்பிடிக் கேக்கேலுமா மச்சான்? அவள், அப்பிடிச் சொல்லியிருக்கப்போடா மச்சான்.’

எனக்கு, ஓங்குவாரத்துக்கு ஒரு அறை கன்னத்தில விட்டால் என்ன என நினைப்பெடுத்தது. கூடவே, அந்த அறுவாள், அப்படிப் பெரிய என்னத்தக் கேட்டுப் போட்டாள் என அறியவும் அவா இருந்தது.. சொன்னான்.
‘இதே வருஷம், போன மாசம் பெப்ரவரி எட்டு, மாலை ஆறு நாப்பத்தைஞ்சு, அப்ப நேரம்’
‘ அடப்பாவி’ என்றேன் நான். அதைப் பொருட்படுத்தாதபடி தொடர்ந்தான்.  மழையும்,தூறலை  ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில் மழை நீர் தலையில் இறங்குவது  நல்லதுதான். நான், கதை கேட்க ஆயத்தமானேன்.

‘அவ சொல்றா, இன்னும் சரியா இரண்டு வருசத்துக்குள்ள,  தொழிலெடுத்து, நல்ல புள்ளையா அவளப் பொண் கேட்டு வரணுமாம்’
‘நல்லதத்தானெடா சொல்லிருக்கா’
‘எப்பிடிக் கேட்கலாம் என் நிலைமை தெரிஞ்சிருந்தும்? அண்ணரையும், அக்காளையும்  வீட்ட வைச்சிட்டு, வா காதல் செய்வோம்ன்றாளா?’
‘அதுவும் சரிதான். இதெல்லாம்  அவக்குத் தெரியாதா?’
‘தெரியாம? நான்,  அதுக்கு அவட்டக் கேட்டன், சரி, என்னால அப்படி வரமுடியல்லண்டு வை, நீ என்ன செய்றதா உத்தேசம்.’
சுந்தரம்   கடைசியாக, நுனியிலும் ஒருமுறை பட்டை தீட்டிப் பார்க்க முயன்றிருக்கிறான். அப்போது, ‘ உங்களுக்காகவே, வாழ்நாள் பூராகக் காத்திருப்பேன், என் கண்மணி அத்தான்’ எனக் கேட்கக் காதைத் தீட்டி வைத்திருக்க  வேண்டும்.
‘அதுக்கு, அது என்னடா சொல்லிச்சு? ‘
‘மேக்சிமம் மூணு  வருசங்களாம் . இல்லாட்டி வீட்ட சொல்றாளுக்கு ஓம்பட்டுடுவாவாம்’
காதலைக்  கொண்டுவரும்போதே, காலத்தையும் கூட இழுத்தலைய இவர் மட்டும்  அடம்பிடித்தால், படையலுக்காகுற காரியமா, இது?. சுந்தரம் கொஞ்சநேரம்  அமைதியாயிருந்தான். பின்னர்,

‘கடும் கோபமாயிட்டன் மச்சான். கண், முகமெல்லாம் சிவந்து சத்தமாக் கத்திச் சொன்னன்,

‘தயவு செஞ்சி இனி என் கண்ணு முன்னாலேயே வராதடி, தொலைஞ்சு போ’ண்டு’ எனச் சொன்னவன், ச்சே,சே  என இருமுறை தலை குலுக்கினான்.

‘ அதுதானே உனது தெய்வீகக் காதலை அறிந்தும், அவள் எப்படி, அப்படிச் சொல்லலாம்?’ என்றேன் நான்.

சுந்தரத்துக்கு  வாயால் வாந்தி, வாந்தியாக வந்து கொண்டிருந்தது.  அவள்  அவனை விட்டும் போய் விட்டிருந்தாள். தூறல்  வேறு என்னைக் குளிரில் பிடித்தாட்டியது. பித்தம் கூடினாக்களுக்கு வாந்தி வரும் என்பார்கள். அடிக்கடி கோபம் கொள்பவரைக் கண்டால், உடம்பு சூடு அதிகம் என்று பெயர். மீளவும் துவங்கினான்,

‘அவள், அப்படிச் சொல்லியிருக்கப்போடா, மச்,,வாஹ்,,’ வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தது. கூடவே  இருந்தேன். என்னைப் பொறுத்தவரை சற்றே உடம்பு பூசிய குழந்தை அவன். கோபப்படுவதிலும், சேர்ந்து கொள்வதிலும் கூட.  சென்ற சனி என்னையே ஹொஸ்ரலில் எல்லா அறை  மாணவர்களும்  பார்த்திருக்க,  ஒருகையில் சாரனின் நுனியைப் பிடித்துக்கொண்டு விரட்டிக் கொண்டிருந்தவன். அது,  அவனைக் கேட்காமல் நானாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒன்று. அதைவிட  சுந்தரின் உடலை மிகைக்கும் தள்ளுகையும் என்னிடமில்லை. யானையிடமிருந்து  தப்புவதற்கு ஓடுவதுபோல வளைந்து வளைந்து ஓடிக்கொண்டிருந்தேன். அந்தச் சம்பவத்தையும்,  உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.

சுந்தர், நான்,இன்னும் இருவராக, ஒரு இரவில்  வளாகத்தின் வளவிலிருந்த தென்னையில் இளநீர் பறித்துக் கொண்டிருந்தோம். அன்று, சுந்தர் மரத்தில் ஏற வேண்டியமுறை. இளநீர்,தரையில் விழுந்தால் சிதறிவிடும் என்பதற்காக யாராவது ஒருத்தரின் சாரனை, அத்தாங்காக்கிப் பிடித்திருக்க (இரவுதானே), அதனுள் குரும்பை வந்து விழும். திடீரென்,சாரனுள் பாரிய பொருளொன்று விழ,,ஏதென்று பார்த்தால் சுந்தர் மரத்திலிருந்து  விழுந்திருந்தான். நாலு பேருடன் போக வேண்டிய சங்கதி. சரிநிகருக்கு நான் அதைக் கதை செய்து அனுப்ப, நால்வரில் ஒருவன் பேப்பரையே வளாகம் கொண்டுவந்து சுந்தரிடம் காட்ட, அறையைத்தேடியே வந்துவிட்டான்.

‘உனக்கு நான்தான் கிடைச்சனா’ என்றபடி கட்டிலில் இருந்த என்மேல் பாய,  ஹோஸ்ரலைச் சுற்றி மூன்றுமுறை ஓடவேண்டியிருந்தது.மூச்சுத் தள்ள, ‘ நீ, அம்புடுவாய்டி,’ சவாலுடன் போச்சு,சுந்தரின் அத்தனை கோபமும். சுந்தரும் நானும் தலை முழுகி மீளவும் மூன்று நாட்களுள் சேர்ந்து கொண்டோம். இதிலிருந்தும், முழுகியவன் வெளிவர வேண்டுமே என்ற அவாவுடன் அந்த இடத்தைவிட்டு வந்து விட்டேன்

காலங்கள் அவரவர் பாட்டில் எங்களிடம் இரு வருடங்களைக் களவாடிய பின்னர், சுந்தரை மீளவும் காணும் சந்தர்ப்பம்,  கல்முனை மஹ்மூத் பாளிகா  பஸ் தரிப்பிடத்தில் கிடைத்தது.

சிங்கம், புலி, கரடியெல்லாம், யாரையாவது தாக்குறப்ப, இவர்  ஒரு நல்ல மனுஷன் விட்டிடுவம் என்றெல்லாம் பார்க்குமென்று யாராவது சொல்ல முடியுமா? எப்ப நம்ம சாவு என எவனுக்கும் தெரியாதுதான், ஆனால், முன்னிற்பவன் நினைச்சாலே, நாம் சாக வேண்டியதுதானென்று வாழ்வது, அச்சம் தவிர  எதையும் காணாமப் பண்ணிடுமா?  மூன்று இனத்திலுமாகிய மனிதர்கள்கூட, மாற்றின ஊருக்குள் எட்டெடுத்து  வைக்கவே, அஞ்சிக்கிடந்த காலமது.

அந்தக் காலத்தவரைச் சந்திக்கும்போதே,  அந்தக்கால ஏக்கம்தான் எப்போதும் பீறிட்டெழுகிறது..  நல்ல தசைப்பிடிப்பான, திடகாத்திரமான சுந்தர்,  ஏகப்பட்ட சந்தோசத்திலிருந்தான். கல்முனை, மஹ்மூத் பாளிகாவில்,  கற்பிப்பதாகக் கூறினான்.  அனைத்தும் சுபமாய் முடிந்து,  அதே அலங்கார வள்ளியுடன் நிச்சயார்த்தம் முடிந்த கதை சொல்லி வெட்கச் சிரிப்புச் சிரித்தான். வாலிபத்துக்காய,  அதி உச்ச பருவம். முகமெங்கும் மாப்பிள்ளைக் களை வந்துவிட்டிருந்தது..

நீண்ட நேரம் சந்தோசமாகப் பேசிக்கொண்டிருந்தோம். இனிமேல், அடிக்கடி சந்திக்கலாம் எனும் ஆறுதலுடன் விடைபெறும்போது, சுந்தர்,
‘எங்க போறாய் மச்சான்?’   எனக் கேட்டான்.

‘கடைக்குத் தேயிலை ம்கொண்டுவந்தவண்ட  கணக்கொன்று முடிக்கணும். அவனப்பார்த்துட்டு வருவம்ண்டுதான்,..’..

” சரி,,சரி,,,  பஸ் வருது, நான் வாறன். என் கல்யாணத்துக்கு மறந்திடாம வந்திடு’

அவனிடமிருந்து விடைபெற்று, தேயிலைக்காறனைக் கண்டு மீள  வீடு வந்து சேரும்  பொழுதிலும் சிறு பொழுதில்லை அது. மூன்று சம்பவங்கள், நடந்து போய்விட்டிருந்தது.

1.  அள்ளிக் கொண்டுபோன பொலிஸ் அத்தனைபேரும், கொல்லப்பட்ட செய்தி.
2. சுந்தரலிங்கம் வீடு போவதற்கிடையில் சுடப்பட்டு மரணித்திருந்தான்
3. இங்கு கதை சொல்லுகிற, நானாகிய,  காத்தான்குடியில் பிரதேச செயலாளராயிருந்த, நற்பிட்டிமுனை  பளீலைப் புலிகள் கொன்றார்கள்..

நான்,  ஓரின மானிடவயிறு, செத்துப் போனால்தான், அடுத்த இனவயிறு உப்பிவரும் என்று,  யாரிடமும் சொன்னதில்லை. நீங்கள் சொன்னாலும்,   நம்பப் போவதில்லை.அதையும் ( ஆம், மிருகம்) தாண்டிப்  புனிதமானது, தானனிந்த மானிடம்.

அவர், கதையை எழுதி முடித்ததும், கண்மூடிக் காத்திருந்தார். நித்திரைதான் வரமாட்டேனென்றது.
‘அஞ்சலி, அஞ்சலி,,,
வந்துரு,,வந்துரு,,’  அருகே படுத்திருந்த மனைவி, மனிசனுகளத் தூங்கவிடாமல்   தொல்லைப்படுத்துவதாக குற்றம் சாட்டினாள்..அவள்,

‘இது, பெரிய மனப்பூதம்’ என்றாள். அவரும் இருக்குமோ எனச் சந்தேகப்பட்ட  நாட்களின் ஒன்றில், திடீரென,  கட்டிலின் அருகே, தரையில்  உட்கார்ந்தபடி,  அவரைத் தட்டியெழுப்பினான்.

‘என்ன, முடிந்ததா?’, எனக்கேட்டான்.. அவர் , தலையணையின் கீழிருந்த ஆவணத்தையெடுத்து,  ஒரு பூத்தட்டை சாமிக்கு வழங்கும் பயபக்திபோல கையிரண்டையும் மேலுயர்த்தி வழங்கினார்.   நம்புங்கள், வந்தவன், ஒருதரம் அப்பிடியே மேஞ்சிட்டு, அங்கால தூக்கி  வைத்தான். அவர், அவனைக் கேட்டார்:

‘என்ன, நல்லால்லியா?’  அவன்,  அவரைக் கொஞ்ச நிமிடம் முறைத்துப் பார்த்தான். பின் குரலைக் காட்டமாக்கிக் கொண்டு,
‘நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்களா? கதை என்பது ஒன்றைப் பிரதி பண்ணுதல்ண்டு சொல்றாங்களே, அதக் காதுகொண்டு கேக்கவே மாட்டிங்களா?’
அவருக்கு  அத்தனையும் தொங்கிப் போயிற்று. எப்படியாகப்பட்ட நம்மளையே குறை சொல்றானே எனும்  கோபம்  எழுந்தும், மௌனமாயிருந்தார்.
‘இஞ்சப்பாரு, என்ன கதை,  கேட்டியோ, பார்த்தியோ அதைச் சொல்லு. இனிமே மவனே, கதைக்கிடையில பூந்து, ‘ என்று நினைத்தான்’’, என அவனுக்குப் பட்டது’ என உனக்குத் தெரியாதத எல்லாம்,  உள்ள செருகிற வேலையெல்லாம் விட்டுடு, என்ன?  அதை, வாசிக்கிறவன் பார்த்துக்கட்டும். என்னா மேதாவித்தனம்? ‘ என்று சொன்னான்.,

கதையின் நாயகன்,.  உறுமியது மட்டுமன்றி, கைநீட்டி எச்சரிக்கை  செய்ததாகவும் அவர் எழுத்துவாழ் நண்பர்களிடம் சொன்னார்.

0000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment