Home » அ.ராமசாமி » பன்முக ஆளுமை எம்.ஏ .நுஃமான்-

 

பன்முக ஆளுமை எம்.ஏ .நுஃமான்-

 

 

nuhman

 

nuhman-I-150x150

 

 

 

 

 

 

தமிழ் எழுத்துகளுக்கான விருதுகள் எப்போதும் தமிழக எல்லைப் பரப்பை மட்டுமே கவனம் கொள்கிறது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் நண்பர்களால் அளிக்கப்படும் விளக்கு விருதும் அவ்வாறே தமிழகப் படைப்பாளுமைகளையே விருதுக்குரியவர்களாகத் தேர்வு செய்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. கடந்து மூன்றாண்டுகளாக விளக்கு விருதுக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த எனக்கு இதில் மாற்றம் வேண்டும் என்று தோன்றியது. இந்த மாற்றுக் கருத்தின் அடிப்படையில் விருதுக் குழுவில் விவாதத்தைத் தொடங்கிய போது மூவரில் இருவரிடம் ஏற்பு உருவானது. மூன்றாமவர் உடன்படவில்லை. இதுவரை ஒருபடித்தான உடன்பாடு கொண்டு விருதுக்குரியவரைத் தேர்வு செய்த முறை இம்முறை சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேன். தமிழக எல்லைப் பரப்பிற்கு வெளியே – குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்து ஆளுமைகளில் ஒருவர் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இலங்கைப் படைப்பாளிகள் என்றவுடன் முதலில் கவிகளின் பட்டியலே நீண்டு கொண்டிருந்தது. இதுவரை விளக்கு விருது பெற்றவர்களின் பட்டியலைத் திருப்பிப் பார்த்த போது கவிகளே அந்த விருதினை அதிகம் பெற்றுள்ளனர் என்பது புரிந்தது. அதனால் கவி என்ற ஆளுமையைத் தாண்டி ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நினைத்த போது முதலில் நினைவுக்கு வந்த பெயர் நுஃமான் அவர்களின் பெயர் தான். அவருக்கு இந்த ஆண்டு விளக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்று விவாதங்களில் இறங்கி உறுதி செய்தது விருதுக்குழு.

எம்..ஏ நுஃமான், 1970 களில் ஒரு கவியாகவே இலக்கியப் புலத்திற்குள் நுழைந்தவர். அதே நேரத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணியேற்புச் செய்தவர். கல்விப்புலம் சார்ந்து ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு படைப்பாளியாகச் செயல்படும் ஆளுமைகளுக்குச் சில நெருக்கடிகள் ஏற்படும். தாங்கள் விரும்பும் படைப்புத் துறையில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தாமல், அதனோடு தொடர்புடைய பல தளங்களிலும் பங்களிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும். நுஃமானின் எழுத்தாக்கங்களைக் கவனிக்கும் ஒருவர் இந்த நெருக்கடிகளையும், கட்டாயத்தையும் நுஃமான் தாண்டி வந்துள்ளவர் என்பதை முடியும்.

numan-02படைப்பு முயற்சிகளோடு, இலக்கியத் திறனாய்வு சார்ந்த கற்றல், கற்பித்தல் தவிர்க்க முடியாத ஒன்றாக முன் நிற்கும். அதனால் தமது காலத்தில் உலக அளவில் விவாதத்துக்குள்ளாகும் கருத்தியல் மற்றும் சிந்தனைப் போக்குகளை முகம் கொள்ள வேண்டி வரும். படைப்பாளியாகவும் கல்வியாளராகவும் ஒரே நேரத்தில் செயல்படுத்தத் தொடங்கிய நுஃமான் தன் காலத்தில் அதிகம் விவாதிக்கப் பெற்ற மார்க்சிய இலக்கியத் திறனாய்வின் புதிய போக்குகளோடு விவாதங்களை நடத்தியவர். அவருக்கு முன்பு தமிழில் மார்க்சியத் திறனாய்வில் பங்களிப்புச் செய்த ஆளுமைகளான தொ.மு,சி.ரகுநாதன், க.கைலாசபதி கோ.கேசவன் ஆகியோரது திறனாய்வு முறையில் இருந்த பயன்பாட்டு வாதம் மற்றும் வரலாற்றுவாதத்தை முழுமையாகக் கைக்கொள்வதிலிருந்து விலகிப் படைப்பின் சூழலையும், படைப்பாளியின் அகநிலையையும் இணைத்துப் பார்க்கும் மார்க்சியத் திறனாய்வு முறையை முன் வைத்தவர். இதன் தொடர்ச்சியாக அமைப்பியல், தொடர்பாடல், பெண்ணியம் போன்றவற்றின் வரவை மனமுவந்து வரவேற்றவர். இதனால் கீழைத் தேயவியல்x மேலைத்தேயவியல், சிறுபான்மைx பெரும்பான்மை முரண்பாடுகளின் பின்னணியில் இலக்கிய உருவாக்கம், இலக்கியத் திறனாய்வு, இலக்கியவரலாறு ஆகியனவற்றைக் கவனித்து தனது எழுத்துப் பணியினைக் கவனப்படுத்தி விவாதக் கட்டுரைகளையும் நூல்களையும் தந்தவர்.

கல்வித்துறை சார்ந்து மொழியியல் மற்றும் திறனாய்வுப் புலங்களில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ள நுஃமான் தனது தொடக்ககால ஆர்வமான கவிதை எழுதுவதைக் கைவிடாமல் தக்க வைத்த படைப்பாளியும்கூட. அவரது கவிதைகளை மட்டுமல்லாமல், ஈழத்துக் கவி ஆளுமைகளைத் தமிழ்ப் பரப்பிற்குள் கொண்டு வந்து சேர்த்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. மஹாகவியின் பெரும்பாலான படைப்புகளைப் பதிப்பித்தவர் அவரே. பின்னாளில் பெருங்கவிகளாக அறியப்பட்டுள்ள ஈழத்துக் கவிகள் பலரும் அவர் தொகுத்த 11 ஈழத்துக்கவிஞர்கள் என்ற தொகுப்பில் கவிகளாக அறிமுகமானவர்கள் என்பதை இலக்கிய வரலாறு பதிவு செய்யும். தமிழ்க் கவியாக மட்டுமல்லாமல் பல்வேறு மொழிக் கவிதைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்பாளர் என்ற அடையாளமும் நுஃமானுக்கு உண்டு. 30 –க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள நுஃமானின் முக்கியமான நூல்களின் விவரங்கள்:

விமரிசன நூல்கள்:

• மொழியும் இலக்கியமும் (காலச்சுவடு,2006)
• மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் ( 2001)
• மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (அன்னம்,சிவகங்கை,1987)
• திறனாய்வுக் கட்டுரைகள் (அன்னம்,சிவகங்கை 1986)
• பாரதியின் மொழிச்சிந்தனைகள்: செளத் விஷன்,சென்னை,1999
• இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், இணைப்பதிப்பாசிரியர், 1979
• அடிப்படைத் தமிழ் இலக்கணம், (அடையாளம்,2007)

கவிதை நூல்கள்:

• மழைநாட்கள் வரும், (அன்னம்,சிவகங்கை 1983)
• அழியா நிழல்கள், நர்மதா, 1982
• தாத்தாமாரும் பேரர்களும் -நெடுங்கவிதைகள், கல்முனை,1977
• பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், க்ரியா, 1984

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

• பாலஸ்தீனக்கவிதைகள், முப்பது கவிஞர்களின் 109 கவிதைகள், அடையாளம், 2008,
• மொகமூத் தர்விஸ் கவிதைகள், அடையாளம், 2008
• பாலஸ்தீனக்கவிதைகள், 15 கவிஞர்களின் 71 கவிதைகள், மூன்றாவது மனிதன் வெளியீடு,2000,
• காற்றில் மிதக்கும் சொற்கள் ( மலாய் மொழி கவிதைகள்)
• .இரவின் குரல் ( இந்தோனேசிய மொழி கவிதைகள் )

மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்கள்

• கடப்பாடு அல்லது சுயாதீனம், இசுலாமியப் பெண்கள் பற்றிய சட்டப் பிரச்சினைகள், கொழும்பு, 2004
• இனமுரண்பாடு வரலாற்றியலும் கொழும்பு, 2000
• முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும், முஸ்லிம் பெண்கள் ஆய்வு மற்றும் செயல்பாட்டு அமைப்பு, கொழும்பு, 1999

தொகுப்பாசிரியர்

• மஹாகவி கவிதைகள், (தொகுப்பாசிரியர்,அன்னம், 1984 )
• மஹாகவியின் வீடும் வெளியும், கல்முனை வாசகர் வட்டம், 1973
• மஹாகவியின் கோடை, கல்முனை வாசகர் வட்டம், 1970.

தங்களின் காத்திரமான எழுத்துகள் மூலம் தமிழ் இலக்கியப் பரப்பை விரிவு படுத்தியும் புதிய தளங்களில் இலக்கியம் சார்ந்த தமிழ்ச் சிந்தனையைத் திசைதிருப்பியும் வரும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் வகையில் தொடங்கப் பெற்றது விளக்கு விருது, 1995 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தகுதி வாய்ந்த ஆளுமைகளைக் கண்டறிந்து அடையாளப்படுத்திக் காட்டுவதன் மூலம் விளக்கு விருது அதன் நம்பகத்தன்மையையும் தரம் பேணுவதையும் விட்டுக் கொடுக்காமல் காத்து வந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் கவிதை, புனைகதை சார்ந்த எழுத்தாளுமைகளே அதிகமாக விளக்கு விருதினைப் பெற்றுள்ளனர் என்பதோடு பெரும்பாலும் தமிழக எல்லைக்குள் இருக்கும் படைப்பாளிகளே கவனத்திற்குள்ளாகி வந்துள்ளனர். இந்த ஆண்டு அந்தப் போக்கிலிருந்து ஒரு விலகல். தமிழுக்குத் தனது திறனாய்வு, மொழியியற் சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் எனச் செயல்பட்ட நுஃமான் அவர்களுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது வழங்கப்பட வேண்டும். வழங்கப்பெற்றது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
0000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment