Home » இதழ் 12 » * சினுவா ஆச்பே ( Chinua Achebe )

 

* சினுவா ஆச்பே ( Chinua Achebe )

 

sinuva aach

“சினுவா ஆச்பே அவர்களின் எழுத்துக்களால் கவரப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் அவரின் நூல்களின் முன்னால்

சிறைச்சாலைச் சுவர்கள் இடிந்து நொருங்கின எனக் குறிப்பிட்டிருந்தார்.”

——————————————————————————————————————————————————————-

ஆபிரிக்க நாவல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் சினூவா ஆச்பே தனது 82வது வயதில் காலமானார். ‘ Things fall apart ’ என்ற இவரது நாவல் 1958 இல் வெளியிடப்பட்ட போது ஆபிரிக்க மக்களின் வாழ்வு குறித்த கதைகளில் அதன் அமைப்பு வடிவம், கதை சொல்லும்முறை குறித்து ஐரோப்பிய எழுத்தாளர்களால் விமர்ச்சிக்கப்பட்டது. இதற்கான காரணம் ஆபிரிக்க வாய்மொழி, இலக்கிய வகை என்பவற்றை இணைத்து தமக்கு கிடைத்த ஆங்கில Chinua Achebe and Nelson Mandelaமொழி அறிவு மூலம் ஒலி, கோட்பாடு என்பன இணைந்த புதிய மாதிரி வடிவில் அவரது எழுத்துக்கள் அமைந்தன. இவை ஆபிரிக்காக் கண்டத்தின் பின் வந்த ஏனைய நாவலாசிரியர்களுக்கு ஆதர்சமாக இருந்தது.

1958 இலிருந்து 1987 வரையிலான காலப்பகுதியில் அவர் ஐந்து நாவல்கள் மற்றும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவை நைஜீரியாவின் பிரித்தானிய குடியேற்ற ஆட்சிக் காலத்தின் ஆரம்ப பிரச்சனைக்குரிய வரலாற்றின் தொகுப்பாக அமைந்திருந்தன. அவற்றில் வடிக்கப்பட்ட பாத்திரங்கள் வரலாற்று நிகழ்வினை பல்வேறு விதங்களில் கட்டுப்படுத்துவதாக அமைந்திருந்தன.‘Heinemann African writers series’ என்ற வெளியீட்டுத் தொகுப்பின் ஆரம்ப ஆசிரியராக இருந்து சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட வெளியீடுகளை மேற்கொண்டு ஆபிரிக்க எழுத்தாளர்களை உலகம் முழுவதும் சினூவா ஆச்பே அடையாளம் காட்டினார்.

கிழக்கு நைஜீரியாவின் பாரம்பரிய ஒஃடி ( Ogidi ) மாநிலத்தில் இஃபோ( Igbo )பிரதேசத்தில் 1930ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி பிறந்தார். இவர் பிறப்பதற்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் இப் பிரதேசத்திற்கு கிறிஸ்தவ மிஷனரியினர் முதன்முதலில் காலடி வைத்தார்கள். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய இவரது பெற்றோர் ஞானஸ்தானம் செய்தனர்.

குடியேற்ற ஆட்சியாளரால் உள்ளுர் மிஷனரி பாடசாலைகளில் சிறுவர்கள் தமது தாய் மொழியில் பேசுவது தடுக்கப்பட்டது. சகல பாரம்பரிய வழக்கங்களையும் கைவிடுமாறு வற்புறுத்தப்பட்டது. ஆனால் ஆச்பே அவர்கள் தனது தாயாரினாலும், மூத்த சகோதரியினாலும் ஊட்டிவிடப்பட்ட கிராமப்புற மரபுகளை நன்கு உள்வாங்கியிருந்தார். இவரது கதைகளில் வரும் நீல வானத்தின் அழகினை வியந்துரைத்தல், நதி, வனம் என்பவற்றின் ஒப்பற்ற தரத்தினை உரைத்தல் என்பனவும் அவற்றின் வெளிப்படாகவே அமைந்தன.

n-1தனது பதின்னான்காவது வயதில் குடியேற்ற ஆட்சியாளர்களின் புகம்பெற்ற கல்லூரியான ‘ உமுவாகிய’( Umvahia) இல் இணைந்தார். இங்குதான் அவரது நண்பரும், புகழ்பெற்ற கவிஞருமாகிய ஒலிக்போ அவர்களை முதன் முதலில் சந்தித்தார். 1948 ம் ஆண்டு இபடான் ( ஐடியனயn ) பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பிற்காக புலமைப் பரிசில் கிடைத்தது. ஓராண்டு வரை அப் படிப்பினை தொடர்ந்த அவர் தனக்குள் எழுந்த எழுத்தார்வம் காரணமாக ஆங்கில இலக்கியம், மதக் கல்வி, வரலாறு என்ற துறையைத் தேர்வு செய்தார்.

ஆங்கிலக் கல்வித் திட்டத்தையே அங்குள்ள ஆசிரியர்கள் பின்பற்றியபோதும், நைஜீரிய மாணவர்களுக்கு அந் நாடு சார்ந்த கல்வியும் தேவை என்பதால் n-2ஜொய்ஸ் காரி( Joice Cary ) இனது ஆபிரிக்க நாவல்களும், ஜோசப் கொன்றாட்( Joseph Contrad ) இன் Heart of Darkness என்ற நூலும் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் இரண்டாவது மகாயுத்தத்தினைத் தொடர்ந்து ஆபிரிக்க நாடுகளில் காணப்பட்ட குடியேற்ற ஆட்சிக்கு எதிரான இயக்கங்கள் இந் நூல்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தன.

ஆச்பே போன்று 1948- 1952 காலப்பகுதியில் சிறுகதைகள், கட்டுரைகளை எழுதிய வோல் சொயின்கா(Wole Soyinka ) போன்ற முன்னணி இலக்கிய கர்த்தாக்கள் மாணவர் வெளியீடுகளிலும்,மற்றும் பலவற்றில் தேசிய உணர்வை மையமாகக் கொண்டே ஆக்கங்களைத் தந்தார்கள். ஆச்பே இன் ஆரம்ப கால எழுத்துக்கள் அவரது குணாம்சங்களை நன்கு பிரித்தறியும் வகையிலேயே காணப்பட்டன. கல்விமான் என்ற வகையில் எழுத்துக்களின் வித்தியாசங்களை தெளிவுபடுத்தும் சமநிலை அணுகுமுறைகள், நகைச்சுவை கலந்த அல்லது வெவ்வேறு முகங்களில் பேசுவது, கிராமப்புற நைஜீரியாவின் மீது காட்டும் அக்கறை என்பன குறிப்பிடத்தக்கன. அத்துடன் மேற்குலக மற்றும் உள்ளுர் கலாச்சாரம் என்பவற்றிற்கிடையே எழும் அமைதியற்ற முரண்பாடுகள் என்பவற்றை காணும் அதேவேளை இவ்வாறான முரண்பாடுகளின்போது தனது பாரம்பரிய இஃபோ கலாச்சார விழுமியங்கள் அதனை எவ்வாறு தாங்கிக் கொள்கிறது? என்பதையும் தருகிறது. அவரது சிறுகதை ஒன்றில் ‘Let the hawk perch and let the eagle perch’ என்ற பழமொழியினை தலைப்பாக்கியிருந்தார். இவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களையும், கழுகுகளையும் ஒரே கிளையில் தங்க அனுமதிக்கும் கருத்தாக அது அமைந்திருந்தது.

1952 இல் தனது பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய அவர் ஆபிரிக்கர்கள் பற்றியும், அவர்கள் குடியேற்ற ஆட்சியாளர்களை எவ்வாறு எதிர்நோக்கினார்கள் என்பது குறித்து ஆபிரிக்கர்களின் பார்வையிலிருந்து கதைகளை, நாவல்களை எழுத தீர்மானித்தார். இம் முடிவுக்கு பிரதான தூண்டுகோலாக இருந்தது.ஜொய்ஸ் காரி ( Joice Cary) என்பவரால் எழுதப்பட்ட நைஜீரிய மண்ணை மையமாக்கிய Mr. Johnson என்ற நூலாகும். இந்த நாவல் ஆங்கில விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட போதிலும் இவரைப் பொறுத்த மட்டில் நைஜீரியா, நைஜீரியர்களின் பாத்திரம் என்பன மேலெழுந்தவாரியாக காட்டப்பட்டுள்ளது எனக் கருதினார். இந் நூல் பிரபலமானது எனில் யாராவது ஒருவர் இன்னும் ஆழமாக உள்ளே சென்று பார்ப்பதே முறையானது என்ற முடிவுக்கு வந்தார்.

ஆரம்பத்தில் ஓரு முழு நீள நாவலை அதாவது கிழக்கு நைஜீரியாவின் குடியேற்ற ஆட்சியின் ஆரம்பத்திலிருந்து சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பதான காலத்தை ஒட்டியதாக எழுத திட்டமிட்டார். ஆனால் ஈற்றில் அவை இரண்டு குறும் நாவலாக வெளிவந்தன.‘Things fell apart’ என்ற நாவல் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியையும்,‘No longer at ease’ என்ற நாவல் நைஜீரியாவின் சுதந்திரத்திற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பதாக முடிவடைவதாக உள்ளது. இரண்டாவது நாவல் Mr. Johnsonஎன்ற நாவலை மீள உரைப்பது .நைஜீரிய நாட்டின் எழுதுவினைஞர் ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்பதற்காக குடியேற்ற ஆட்சியாளர்கள் சிறைக்கு அனுப்புகிறார்கள். நாவலின் ஆரம்பம் மிஸ்ரர் ஜோன்சனின் மூதாதையர் எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதில் ஆரம்பமாகிறது.

n-3இவரது முதலாவது நாவலான Things fall apart என்பது ஆபிரிக்க மக்களின் பொதுவான கலாச்சாரம், உணர்வுகள் என்பன அவர்களது விவசாய வாழ்க்கை முறையில் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்த்துகிறது. ஆபிரிக்கர்கள் நாகரீகம் என்பதை ஐரோப்பியர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டார்கள் என்ற கருத்தோட்டத்தை நிராகரிக்கும் அதே வேளை குடியேற்ற ஆட்சிக்கு முன் ஆபிரிக்கர்கள் இடையர்களாக இருந்தனர் எனக் கூறும் கதையோட்டங்களையும் தவிர்த்தார். அவரது நாவலின் கதாநாயகன் ‘ஒகென்வோ’ ( Okonkwo) இறுக்கமான ஒருவனாகவும், தனது பலவீனங்களை மறைப்பவனாகவும்அமைந்திருந்தது. கிராமப்புற சுற்றுச் சூழலை பின் தளமாக கொண்டுதான் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கதைகளை தோமஸ் ஹார்டி (Thomas Hardy) இனால் எழுதப்பட்ட‘The mayor of caster Bridge’என்ற நாவலோடு ஒப்பிட்டுக் கூறுவார்கள். ஆச்பே அவர்களுக்கு மிகவும் பிடித்த ஓரு நாவலாசிரியராகவே தோமஸ் கார்டி காணப்பட்டார். ‘‘Things fall apart’ நாவல் பல லட்சம் பிரதிகள் விற்கப்பட்டன. ஐம்பதிற்கு மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டன.

‘No longer at ease’ என்ற நாவலின் கதை 1950களில் ஆரம்பமாகிறது. 1960 இல் வெளியிடப்பட்ட இந்த நாவல் ஒகொன்வோ ( Okonkwo) இன் பேரனின் கதையாக ஆரம்பமாகிறது. இளம் அரசாங்க அதிகாரியாகிய ஒகொன்வோ இங்கிலாந்தில் படித்த பின் நைஜீரியா வருகிறான். நைஜீரியாவில் அவனுக்குக் கிடைத்த வருமானம் அவன் எதிர்பார்க்கும் ஆடம்பர வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால் அவன் லஞ்சம் வாங்குகிறான். இவ்வாறு அக் கதை ஆரம்பமாகிறது. இக் காலகட்டத்தில் ஆச்பே பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றார். நைஜீரிய ஒலிபரப்புச் சேவையின் பிரிவு ஒன்றின் தலைமைப் பதவியை வகித்த அவர் 1956ம் ஆண்டு பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பயிற்சி பெற்றார். அப் பயிற்சியின் பெறுபேறாக நைஜீரிய வானொலியில் கலந்துரையாடல், கதை சொல்லல் போன்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்தார். அதனால் ஏற்பட்ட தாக்கங்களையும் புரிந்து கொண்டார். ஓலிபரப்புத் துறையில் இருந்தபோது இபடான் (Ibadan) பல்கலைக்கழகத்தின் மாணவியான கிறிஸ்ரி சின்வி ஒகோலி(Christie Chinwe Okoli) என்ற பெண்ணைக் காதலித்து 1961 இல் திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு.

Chinua Achebe 2002நைஜீரிய மக்கள் ஆரம்ப காலத்தில் குடியேற்ற ஆட்சியாளர்களுக்கு எவ்வாறு முகம் கொடுத்தார்கள் என்பது குறித்து அவர் ஆய்வு செய்த வேளை அவரது தாய்மொழி இஃபோ பேசும் பாதிரியார் ஒருவர் பிரித்தானியர்களுடன் ஒத்துழைக்க மறுத்தமைக்காக சிறைக்கு அனுப்பப்பட்ட செய்தியை அறிகிறார். இதனால் கவரப்பட்ட அவர் அப் பாதிரியாரின் செயல்களால் பெருமைப்பட்டு தனது மூன்றாவது நாவலை எழுத திட்டமிட்டார்.‘Arrow of God’ என்ற நாவலை 1964 இல் எழுதினார். இந் நாவலில் காணப்பட்ட கதை சொல்லும் முறை, பாத்திரப் படைப்புகள், பாத்திரங்களின் உரையாடல், அதில் காணப்படும் விறுவிறுப்பு என்பன ஓர் வரலாற்று வடிவமாக அமைந்தன.‘Arrow of God’ என்ற நாவல் எழுப்பிய கவலைகள், அப்போதிருந்த பொறுப்பற்ற தலைவர்களின் போக்குகள் என்பவற்றை அவதானித்த ஆச்பே அவர்கள் இவற்றை மையமாகக் கொண்டு நகைச்சுவை கலந்த வடிவில் மிக வெளிப்படையாகவே பிரச்சனைகளைப் பேசும் வகையில் ‘ A man of the people’ என்ற தனது நான்காவது நாவலை 1966 இல் வெளியிட்டார். இந்த நாவலில் பொறுப்பற்ற அரசியல்வாதிகள், அவர்களது வாக்காளர்கள், ஊழலின் கொடுமை என்பவற்றைக் கூறி அதன் இறுதியில் ராணுவச் சதி ஏற்படுவதாக முடிகிறது. அவரது நாவலின் முடிவின் கூற்றுப் போலவே 1966 இல் நைஜிரியாவில் ராணுவச் சதி ஏற்பட்டது.

நைஜீரியாவின் ஒரு பிரிவினரான பயாப்ரா (Biafra) மக்கள் பிரிவினை கோரிப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். ராணுவ ஆட்சியாளர்களின் கொடுமை நிறைந்த ஆட்சி அந்த மக்களில் பத்து லட்சத்திற்கு மேற்பட்டோரை பட்டினிபோட்டுக் கொன்றொழித்தது.ராணுவ ஆட்சியைத் தொடர்ந்து இவரது பிரதேசமான இஃபோ இல் படுகொலைகள் இடம்பெற்றபோது இவர் நைஜீரிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்தார். அவரின் உயிரிற்கு ஆபத்து என எச்சரிக்கப்பட்டிருந்தது. நைஜீரிய ராணுவத்திலிருந்த அவரது மைத்துனர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக தனது குடும்பத்தினரை கிழக்கு நைஜீரியாவிற்கு அழைத்துச் சென்ற அவர் பயாப்ரா மக்களின் சுதந்திரக் கோரிக்கையின் பலமான குரலாக உலகெங்கும் சென்று ஆதரவு திரட்டினார். பயாப்ரா (Biafra) என்பது ஒரு பிரதேசம் மட்டுமல்ல இஃபோ மக்களின் பொருத்தமான வாழ்விடம் என்றார்.

ஆபிரிக்கா கண்டத்தில் பயாப்ரா உண்மையான சுதந்திரத்தைக் கோரி நிற்கிறது. 400 ஆண்டுகளுக்கு மேலான வெட்கக்கேடான, அவமானமுள்ள வாழ்வை நாம் ஐரோப்பியர்களோடு இணைந்தமையால் பெற்றோம். எங்களது நிலைப்பாடு சரியானது. நியாயமானது என நான் நம்புகிறேன். இதுவே எமது சரிக்கும், நியாயத்திற்குமான இலக்கியம் ஆகும்’ என்றார்.

பயாப்ரா மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் தோல்வியில் முடிந்திருக்கலாம். ஆனால் நைஜீரியா என்ற தேசத்திற்குள் இஃபோ மக்களின் பிரசன்னமும், எண்ணங்களும் தொடர்ந்து காணப்பட வேண்டும் எனபதில் அவர் உறுதியாக இருந்தார். அவரது கவிதைகள், சிறு கதைகள் என்பன போரின் அனுபவங்களைத் தந்தன. நைஜீரிய பல்கலைக் கழகத்தின் ஆய்வுத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் ஆபிரிக்க மக்களிடையே எழுத்தாற்றலையும், விவாதங்களையும் தூண்டும் சஞ்சிகைகளை சக கல்விமான்களின் துணையோடு வெளியிட்டார்.

1972ம் ஆண்டு அமெரிக்காவின் மசாசுசெற் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டு ஆபிரிக்க இலக்கியங்களை வளர்க்கும் பணிகளை மேற்கொண்டார். அவர் எப்போதும் பிரச்சனைக்குரிய எழுத்தாளராகவே காணப்பட்டார். அதிலிருந்து அவர் பின்வாங்கியதேயில்லை. தனது உரைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்பவற்றில் ஆபிரிக்கத் தன்மைகொண்ட எழுத்துக்களின் அவசியத்தை வலியுறுத்தினார். எழுத்தாளர்கள், விமரசகர்கள் சிலரின் போக்குகள் ஆபிரிக்கர்களை நோக்கிய இனவாத தன்மை கொண்டிருப்பதை அவர் அவதானித்தார்.

இவர் புதிய வகை நாவல்களை உருவாக்கியது மட்டுமல்ல ஒரே வரையறைக்குள் தொடர்ந்து எழுதுவதையும் தவிர்த்தார். ஓவ்வொரு நாவலும் அதன் முன்னைய நாவல்களின் பாத்திரங்களோடு சமூக மற்றும் கால மாற்றத்தோடு பேசுவதாகவே அவை அமைந்திருக்கும். இதுவே அவரது ஐந்தாவது நாவலுக்கு அடிகோலாக இருந்தது. ‘Anthills of the savannah’ (1987) என்ற நாவலின் கட்டமைப்பு, சாராம்சம் என்பன அவரதும், ஏனைய எழுத்தாளர்களினதும் எழுத்தாளர்களின் பிரதிபலிப்பாக அமைந்திருந்தது. அந்த நாவல் ஒரு தேசத்திற்கு ஒரு கதை மட்டும் இருப்பதில்லை எனவும், அது பன்முக அடையாளங்களோடு கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒன்றோடொன்று பின்னி இணைத்துச் செல்கிறது. இதனுள் பல கலாச்சார வடிவங்களும், வழக்கங்களும் உள்வாங்கப்படுகின்றன.

ஐந்தாவது நாவலில்(Anthills of the savannah) வெளிப்படும் கட்டமைப்பு, தத்துவார்த்தம், கலை வடிவம் என்பன அவரது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. ‘புனைவின் உண்மை’(Truth of fiction) என்ற அவரது கட்டுரையில் புனைவு இலக்கியம் என்பது மனிதனை அடிமைப்படுத்துவதோ, கட்டுப்படுத்துவதோ அல்ல. அது மனித மனங்களை விடுவிக்கிறது. அதன் உண்மைத் தன்மை பழமையிலிருந்து வெளிப்படும் முறைமைகளிலிருந்து அல்லது நெறியற்ற முன் நம்பிக்கைளிலிருந்து வெளிப்படுவது அல்ல. அது மனிதன் தன்னைக் கண்டுபிடிப்பதிலிருந்து ஆரம்பித்து அறிவு, மனித பண்பு என்பவற்றில் முடிவடைகிறது.’ என்றார்.

ஆபிரிக்க இலக்கியத்தின் ஆளுமை என அழைக்கப்பட்டு புகழ்பெற்ற இவர் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி புகழுடம்பு எய்தினார்.

00000000

Lyn Innes

Friday 22 March 2013

The Guardian

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment