Home » இதழ் 12 » * வாழ்வை எழுதுதல் — –முருகபூபதி

 

* வாழ்வை எழுதுதல் — –முருகபூபதி

 

 yasakam

 

அவுஸ்திரேலியாவில் 90களில் நாம்தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியபோது,இங்கு புலம்பெயர்ந்துவந்த தமிழ்க்குழந்தைகளுக்காக மனனப்போட்டிகளையும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம். இந்த நாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஒளவையாரின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதனை மனப்பாடம் செய்து கருத்தும் சொல்லுமாறு கேட்டிருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.

 

அப்பொழுது எனது மகனுக்கு நான்கு வயது.

அவன் ஆத்திசூடியை மனப்பாடம் செய்யும் பயற்சியில் பலநாட்கள் ஈடுபட்டான். கருத்தும் சொல்லிக்கொடுத்தபோதுஒளவையார் முரண்படுகிறார் என்றான்.

அவனது வாதம் இதுதான்.

அறம்செய விரும்பு,ஐயம் இட்டு உண். இவை இரண்டும் தானதருமங்களை சொல்பவை. அதாவது இல்லை என்று கேட்டுவருபவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது பொருள்.

ஆனால் ஏற்பது இகழ்ச்சி என்றும் ஒளவையார் சொல்லிவிட்டாரே. எப்படி இது சரியாகும்.?

அதாவது பிச்சை எடுக்காதே என்பதுதானே பொருள்.

ஒன்றுக்கொன்று முரணாகத்தெரியவில்லையாஎன்று மழலையில் கேட்டான் எனது பாலகன். அதனை நானும் குடும்பமும் ரசித்தோம். இப்படியும் மறுவாசிப்பு இருக்கிறது என்றுதான் அச்சமயம் என்னால் ஆறுதலடையமுடிந்தது.

 

உலகெங்கும் யாசகம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தருமம் செய்து பசிபோக்குபவர்களும் இருக்கிறார்கள். பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு எது? வளர்முக நாடுகளும் வறுமைநாடுகளும் வல்லரசுகளிடம் பிச்சை எடுக்கின்றன. வல்லரசுநாடுகளிலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். வங்கிகள்  இயங்கும் நகரங்களிலெல்லாம் கடன்காரர்களும் இருப்பார்கள். வங்கிகள் தரும் பிச்சை மாதாந்தம் வட்டியோடு அறவிடப்பட்டுவிடும். கடன் அட்டைகளும் பல்வேறு பெயர்களில் வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனைகளுடன் தரப்படுகிறது. கடன் அட்டை மோசடிகளும் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டன.

 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற  Mr.Been   பிரித்தானியா தொலைக்காட்சித் தொடரின் நாயகன் Rowan  Sebastian Atkinson  இடமிருந்த  கடன் அட்டையின் இலக்கத்தையும் யாரோ திருடி இலட்சக்கணக்கான டொலர்களை அபகரித்துக்கொண்டதாக செய்தி வெளியானது. எங்கள் தமிழ்க்கொழுந்துகளும் புகலிடத்தில் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

பணத்தேவைக்காக திருடுபவர்கள்,கடன் அட்டை மோசடி செய்பவர்கள்,சீட்டுப்பிடித்து பணம்கையாடல் செய்து தலைமறைவாகின்றவர்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்துவிட்டு சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிவிடும் அரசியல்வாதிகள்…..இப்படி எத்தனையோபேரை தினம் தினம் அறிந்துகொண்டுதானிருக்கிறோம்.

 

கடந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நின்றபோது ஒரு அதிசயமான செய்தியை பத்திரிகையில் படித்தேன். நீண்ட காலமாக ரயில்களில் பிச்சை எடுத்துவந்த ஒருவரின் வங்கிக்கணக்கில் இருபது இலட்சம் ரூபா சேமிப்பிலிருந்திருக்கிறது. அத்துடன் அவருக்குச்சொந்தமான இரண்டு முச்சக்கர வண்டிகளும் (ஓட்டோ) ஒரு வேனும் வெளியில் வாடகைக்கு ஓடிக்கொண்டிருக்கின்றன. தினமும் இரண்டு மணி நேரத்தில் சராசரி நான்காயிரம் ரூபா வரையில் பிச்சை எடுத்து சம்பாதித்திருக்கிறார். அங்கவீனரான அவர் தினமும் அழுக்கடைந்த ஆடைகளுடன் தனது வாகனத்தில் றாகம ரயில் நிலையத்திற்கு வந்து தனது பிச்சை எடுக்கும் தொழிலை ஆரம்பித்துவந்திருக்கிறார்.

 

பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்பார்கள். அந்த வாக்கு அவரிலும் விளையாடிவிட்டது. ரயில் சேவை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை காத்திருந்து பிடித்தபின்புதான் மேற்படி தகவல்கள் வெளியாகி பத்திரிகைக்கும் செய்தியானார்.

 

இது இப்படி இருக்க…. ஒரு செய்தியாளரே பிச்சைக்காரன் வேடம் போட்டு மும்பாயில் அசத்திய  கதையையும் சொல்லிவிடுகின்றேன்.

இது பல வருடங்களுக்கு முன்னர்  நடந்தது.

 

ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பணியிலிருந்த நிருபருக்கு வழங்கப்பட்ட ஊதியம் செலவுக்கு போதவில்லை. தனது குறையை பலதடவை நிருவாகபீடத்திடமும் பிரதம ஆசிரியரிடமும் சொல்லிப்பார்த்தார். பலன் இல்லை. ஒரு நாள் கோபித்துக்கொண்டு வெளியே போய்விட்டார். இனிமேல் அவர் கடமைக்கு வரமாட்டார்,வேறு எங்காவது வேலை தேடிச்சென்றிருப்பார் என்றுதான் பிரதம ஆசிரியரும் நிருவாகத்தினரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.

 

மறுநாள் மாலை வேளை  அந்த பத்திரிகை நிறுவனத்தின் வாசலில் ஒரு பிச்சைக்காரன் தோன்றினான். அழுக்கடைந்த ஆடைகள். கால்,கைகளில் இரத்தம் கசிந்த கட்டுப்போட்ட பண்டேஜ்கள். அவலட்சணமான தோற்றம்.

 

தன்னை உள்ளே அனுமதிக்கவேண்டும்,அங்கும் பிச்சை எடுக்கவேண்டும் என்று வாயில் பாதுகாவலர்களிடம் கேட்டிருக்கிறான். பிச்சைக்காரர்களை உள்ளே அனுமதிக்கமுடியாது என்று காவலர்கள் தடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களையெல்லாம் தள்ளிவிட்டு வேகமாக ஆசிரியபீடத்துக்குள் நுழைந்துவிட்டான் அந்த பிச்சைக்காரன். அலுவலகம் பரபரப்படைந்துவிட்டது.

அதற்குள் அங்கிருந்த ஒரு படப்பிடிப்பாளர் அவனைப்படம் எடுத்துவிட்டார். அவரது மனதிற்குள் செய்திக்கான தலைப்பும் உருவாகிவிட்டது.

   பத்திரிகை காரியாலயத்தில் பரபரப்பு,பிச்சைக்காரனின் அட்டகாசம்.

 

உள்ளே வந்த அந்தப்பிச்சைக்காரன், நேரே பிரதம ஆசிரியரின் அறைக்குள் பிரவேசித்தான். அலுவலகம் ஸ்தம்பிதமாகிவிட்டது. பிரதம ஆசிரியர் பொலிஸை வரவழைக்க தொலைபேசி எடுத்தார்.

 

உடனே அந்த பிச்சைக்காரன்சேர் முதலில் எனக்கு பிச்சை போடுங்கள். அதன் பிறகு போய்விடுகிறேன்என்றான். அவர் தனது பேர்ஸை எடுக்கும்போது அவனது குரல் எங்கோ ஏற்கனவே கேட்டதுபோல் உறைத்தது. அவரிடம் பிச்சை வாங்கிவிட்டு தனது வேடத்தை அவன் அவர் முன்னிலையில் களைந்துவிட்டு தன்னிடமிருந்த சிறிய பொட்டலத்தை அவர் முன்னால் பிரித்தான். அங்கே நாணயத்தாள்களும் நாணயக்குற்றிகளும் இருந்தன.

 

பிச்சைக்காரன் வேடமிட்டு வந்தவன் அங்கு பணியிலிருந்த  சம்பள உயர்வு கேட்ட அந்த நிருபர்தான். அந்த அலுவலகமே வியப்பில் ஆழ்ந்தது.

 

அவனது அன்றைய ஒருநாள் உழைப்பு மூன்னூறு ரூபாவுக்கு மேல். வீதிகள்,ரயில்,பஸ்நிலையங்கள் மக்கள் கூடும் சந்தைகள்,மருத்துவமனை,மசூதிகள்,தேவாலயங்களின் வாயில்கள்தான் அந்த வருமானத்தை தனக்குத் தந்ததாகச்சொன்னான்.

 

உங்கள் பத்திரிகையில் வேலை செய்வதிலும் பார்க்க இந்த பிச்சைக்கார உத்தியோகம் மேல். கூடுதல் வருமானம் கிடைக்கிறது எனச்சொல்லிவிட்டு பம்பாய் நகரத்தில் ஒரு பிச்சைக்காரனின் ஒரு நாள் சராசரி வருமானம் இப்படி இருக்கிறது. ஆனால் அழகான சூட் அணிந்து காரியாலயங்களில் உத்தியோகம் பார்ப்பவர்களின் நாளாந்த சம்பளம் அதற்கும் கீழே இருக்கிறது. இந்த இலட்சணத்தில் நாங்கள் வைட்கொலர் ஜொப்பில் இருப்பதாகவேறு பீற்றிக்கொள்கிறோம்எனச்சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றானாம்.

 

1970களில் நான் தினமும் வேலைக்காக கொழும்பு செல்வதற்கு எங்கள் நீர்கொழும்பு பஸ்நிலையத்திற்கு வருவேன். பிறப்பிலேயே  ஒரு காலை இழந்து ஊனமுற்ற ஒருவர் ஊன்றுகோல்களுடன் அங்கே பிச்சை எடுப்பார். வேறு பிச்சைக்காரர்களை அவ்விடத்தில் அனுமதிக்கவும் மாட்டார். அந்த பஸ்நிலையத்தின் ஆஸ்தான பிச்சைக்காரன் அவர். தனக்கு வேறு எங்கும் நடந்து சென்று பிச்சை எடுக்கமுடியாது. அதனால் பஸ்நிலையமே தனக்குரியது என்பது அவது வாதம்.

அங்கு கடமையிலிருந்த பஸ் ஓட்டுனர்களுக்கும் நடத்துனர்களுக்கும் அவர்வட்டிக்கு பணம்கொடுத்து வருவதாகவும் அறிந்தேன். அதனால் அங்கு அவர்தான் நாயகன். இரவானதும் அரைப்போத்தல் சாராயத்துடன் தனது இருப்பிடத்திற்குப்போய்விடுவார். அவரைதனியே சந்தித்து படம் எடுத்து பேட்டி  எழுத விரும்பினேன். ஆனால் அவர்அதற்கு சம்மதிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின்பு 1997இல் இலங்கை சென்றபோதும் அவரைஅதே கோலத்தில் நீர்கொழும்பு பஸ்நிலையத்தில் கண்டேன். உடலில் முதுமைக்கான தளர்ச்சியிருந்தது. தாடி வளர்த்திருந்தார்.2012  இல் சென்றிருந்தபோது அவரைக்காணவில்லை. என்னவானார் என்பதும்  தெரியவில்லை.

ராகம ரயில் நிலையத்தில் கைதான தனவந்த பிச்சைக்காரனைப்போன்று நீர்கொழும்பைச்சேர்ந்த அந்த கால் ஊனமுற்ற வட்டிக்குப் பணம் கொடுக்கும் பிச்சைக்காரனும் கைதாகியிருந்தால் பல தகவல்கள் வெளியாகியிருக்கும்.

தற்காலத்தில் இலங்கையில் பிச்சைக்காரர்கள் செல்போண் வைத்திருக்கிறார்கள். வங்கியில் பணம் வைப்பிலிட்டு யுவுஆ அட்டைகளும் வைத்திருக்கிறார்கள்.

 

வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை கவருவதற்காக தற்பொழுது கொழும்பு மாநகர அபிவிருத்திக்குப்பொறுப்பான பாதுகாப்புச்செயலாளர் கோதாபாய புதிய உத்தரவொன்றை பிறப்பித்திருக்கிறார். அதாவது கொழும்பில் பஸ், ரயில்களில் பிச்சைக்கார்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் தொழில் செய்ய அனுமதி இல்லை. ஆனால் தேசம் வெளிநாடுகளில் பிச்சை எடுப்பதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

 

சமீபத்தில் ஒரு தமிழக திரைப்படத்தில் ஒரு காட்சியை வெகுவாக ரசித்தேன். ஒரு பிச்சைக்காரன் மடிக்கணினியில் ஏதோ பார்க்கிறான்.

இலங்கையில் இயக்க அரசியல் கட்சி அரசியல் பற்றிப் பேசும்பொழுது பிச்சைக்காரன் புண்ணைக்காட்டிக்காட்டி பிச்சை எடுப்பதுபோல்….என்று உவமானம் வரும். மீள் குடியேற்றத்திற்கு நிலக்கண்ணிவெடியைக்காட்டிக்காட்டி தாமதித்ததுபோன்று, அரசியல் தீர்வுக்கு புலியைக்காட்டிக்காட்டி தாமதிப்பது போன்று…. பிச்சைக்காரர்களும் உடலில் வந்த காயங்களை மருத்துவரிடம் காண்பித்து சுகப்படுத்தாமல் அவற்றைக்காண்பித்துக்காண்பித்தே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

 

மொத்தத்தில் யாசகம்  வ்வேறு வடிவங்களில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

காயங்கள் சுகப்படுத்தப்படல் வேண்டும்.

காயங்களைக்காட்டிக்காட்டிக்கொண்டு சிகிச்சை பெறாமல் அதுதான் பலம் என்று நினைப்பவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். தெருவோர பிச்சைக்காரர்களிலும் இருக்கிறார்கள்.

 

                     —0—

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment