Home » இதழ் 12 » * வன்முறை என்பதும்…. ஒடுக்குமுறை என்பதும்…. – சல்மா

 

* வன்முறை என்பதும்…. ஒடுக்குமுறை என்பதும்…. – சல்மா

 
salma (2)

 

எப்பொழுதும் பெண்உடல்மீதான சமூகம் செலுத்தும் அதிகாரம் பெண்ணை முடக்குகிற வகையில் இயங்குகிறது.அது பொதுவெளியில் புழங்கும் தன்மையை பெண்ணுக்கு அளிப்பதில்லை. மிகநுட்பமான கண்களால் ஒடுக்கு முறைக்குற்படுத்தப்படுகிறது. சமூகம், மொழி, மதம், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம் என நிறுவனமயமாக்கப்பட்ட அனைத்தின்பெயரால்  அவை பெண்ணை மோசமான ஒரு இடத்தில் நிறுவியிருக்கின்றன.மதிப்பீடுகளாலும் , கருத்துகளாலும் இயங்கக்கூடியதானது இந்த உலகத்தில் பெண்உடல் குறித்த மதிப்பீடுகள் கருத்துக்கள் மிக அபாயகரமானவை. ஆணின்சவுகரியத்துக்கானவை.

 

 அவளைஒடுக்க ,கட்டுக்குள் வைக்க அவை பெரும் பங்காற்றுகின்றன. இவற்றிலிருந்துபெண்ணை வெளியேற்றுவது என்பது முதலில் துவங்க வேண்டும். உடல் குறித்த வரையறைஉடல் மீதான மதிப்பீடு மாற்றப்பட வேண்டும். என் உடலே எனக்கு பயம்அருவெறுப்பூட்கிறது. மதிப்பீடுகள் என்னை பலவீனமானவளாக எடை போடுகிறது, என்உடல்  என்னை பாவம் என்கிறது. இந்த வரையறைகளை மீறுதல் அல்லது மறுத்தல்இவற்றிலிருந்து வெளியேறுதல் இதுதான் உடல் குறித்துப் பேசும் என்படைப்புகளுக்கு ஆதாரம்.


நமதுசங்க இலக்கியங்கள் பெண் குறித்து, அவளது உடல் குறித்து பேசியிருக்கின்றன, ஆண்கள் பேசியிருக்கின்றனர். என்றாலும் இன்றும் பெண் தனது உடல் மீதான வரையறைஅடக்குமுறைகளை எதிர்கொள்ளும் நிலைதான் எஞ்சியிருக்கிறது. அவளது உடல்அவளுடையதாகவே இல்லை. பெண் மீது யாரோ அத்துமீறி நுழைவதற்கு எந்த ஒருஅதிகாரம் யாருக்கும் இல்லை .


எனக்கு மறுக்கப்படும் உரிமைகள் அனைத்தும்  எனது பால் அடையாளத்தினால் எனக்கு மறுக்கப்படுகிறது. கிடைப்பது கூட அப்படித்தான். இதெல்லாம் எனக்குவழங்கப்படுகிறது என்கிற நிலை எப்பொழுதும் பெரும் வன்முறையாக என் மீது நிகழ்த்தப்படுகிறது.

 
 என்எழுத்தும் கூட நீ பெண் என்பதனால் கட்டுப்படுத்தப்படுகிறது. பெண் உடல்மற்றும் பாலியல் சார்ந்து ,ஆண் எழுதிய படைப்புகள் கொண்டாடப்படுவதும் பெண்தன் உடல் ,பாலியல் சார்ந்து படைக்கும் படைப்புகள் கடுமையாக விமர்ச்சிக்கப்படுவதற்கும் இடையில் எத்தனை முரண்பாடுகள்.

 

 உனக்கான மொழியை உனக்கான விஷயங்களை நான் பேசுகிறேன், நீ பேச வேண்டாம் என்று சொல்வதன் பின்னணியில் இருந்து இயங்கும் ஆணாதிக்கம் மிக முக்கியமானது.   ஆண்தான் எப்போதும் பெண்ணை காப்பாற்றுபவனாக ,அவளுக்குமான இலக்கியத்தை படைப்பவனாக.   அவளது உடல்பற்றி, உணர்வுகளை வெளிப்படுத்துபவனாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறான்.பெண் தனக்காக போராடுவதும், தனக்காக எழுதுவதும் தன் உடல் குறித்து பேசுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தொன்றில்லைஇதுதான் நீதி.


Picture1என்னளவில் எழுத்து என்பது என்மீதும் எம் சமூகத்துப் பெண்கள் மற்றும் எம் இனத்து பெண்கள்  மீதும் திணிக்கப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிரான ஓர் எதிர்வினை , செயல்பாடு போராட்டத்தின் ஒரு வடிவம்.   பேசாப்பொருளை பேச முடியும்என்பார்கள்.   எனக்கோ அதுவும் பேச முடியாத இடத்திலிருந்து கொண்டு பேசமுனைதல்  ஆரம்பத்தில் என்னளவில் என் கோபத்தை தனிமையை இறக்கி வைப்பதற்கானஒரு கருவியாக எழுத்து இருந்தது.   என்னை நானே ஆசுவாசப்டுத்திக்கொள்வதற்கான ஒரு வடிவமாக.   போராடிவிட்டோம் என்கிற ஒரு ஆசுவாசம் ,நிறைவுசில சமயங்களில் தன்னை தானே ஏமாற்றிக் கொள்வதற்கான ஒரு வழிமுறையோ என்கிறசந்தேகம்.

 

பெண்ணின்  இருப்பு என்பது எப்போதும் கண்காணிப்புக்குள்ளாகக் கூடியதாக மற்றும் புறக்கணிக்கப்படக் கூடியதாக மாறி நெடு நாட்களாகி விட்ட ஒரு சமூகத்தில் பெண்இருத்தல் என்பதை பறைசாற்ற கூடியதாக பகிரங்கமாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளக் கூடியதாக என் எழுத்துக்களை உருவாக்க முயன்றேன்.   பெண்ணுக்கானநியதிகள், பெண் உடல் மீதான அரசியல் வன்முறை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் விதமாக என் படைப்புகள் உருவாகின.

 

 90களில் சுகந்தி சுப்ரமணியம் மற்றும்  எனது எழுத்துக்கள் சமூகத்தினை சற்று அதிர்வுக்குட்படுத்தப் போதுமானவையாக இருந்தன.   பிறகு வந்த பெண்களின் படைப்புகளும் தங்களது அடையாளத்தை முன்னிலைப்படுத்திய போது வந்த  எதிர்வினைகள் நீங்கள் அறிந்த விஷயம் தான்.

 

 இங்கேநான் முன்பு சொன்னது போல பேசாப்பொருளை மட்டும் அல்லாது பேசமுடியாத ,பேசக்கூடாத இடத்திலிருந்தும் பேச முயன்றது தான் என்னுடைய பிரச்சனை .ஒருபடைப்பு உருவாகும்பொழுது அது மிக நேர்மையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும்.   அது உண்மையைப் பேச வேண்டும்.   இது ஒரு படைப்பாளிக்கான ஒருபரீட்சை .பிறருடைய மனம்புண்படும் என்பதற்காக பிறருடைய அதிகாரத்தை காப்பாற்றிக் கொடுப்பதற்காக ஒரு படைப்பை உருவாக்குவது என்பது அபத்தமானதொருநிகழ்வு.

 kiki

 

என்படைப்பின் வழியே நான் முன்வைக்கும் இந்த சமூகத்தில் குறிப்பாக என்சமூகத்துப் பெண்கள் மீது ஆண் சமூகம் நிகழ்த்தும் வன்முறையை பதிவு செய்வதுஅதிலிருந்து அவர்களை விடுவித்தல் என்பது, வன்முறை என்பதும் ஒடுக்குமுறை என்பதும் ஒரு பெண்ணுக்கான நீதி, உரிமைகள் மறுக்கப்படுவதிலிருந்து துவங்குகிறது.  எங்கே நீதி மறுக்கப்படுகிறதோ அங்கே ஒரு படைப்பாளி தனதுகுரலை பதிவு செய்ய வேண்டும். அந்த நீதியை பெற்றுத் தர என் படைப்பு ஏதேனும்ஒரு வகையில் பங்காற்ற வேண்டும்.   எம் மதம் அனுமதித்த கல்வியைக் கூடமதத்தின் பெயரால் பெண்ணுக்கு மறுக்கக் கூடிய இஸ்லாமிய ஆணாதிக்க சமூகத்தின்மீதான கட்டற்ற கோபமும் விமர்சனமும் என் நாவலின் களம். பொதுவாக ஒரு படைப்புஅணுகப்படும் விதத்திலேயே பல தீர்மானங்கள் நம் சமூகத்தில் உண்டு, ஒருபெண்ணின் படைப்பில் அவளது வாழ்க்கையைத் தேடுதல், அவை அவளது அனுபவங்கள்தான் என்று முடிவு செய்தல். ஒரு ஆணின் படைப்பு அப்படி அணுகப்படுவதில்லை.அது ஒரு சமூக செயல்பாடு அதற்கு ஏனோ ஒரு பார்வைதான். இப்படித்தான்இவற்றிலிருந்து துவங்குகிறது எமது பிரச்சனை.

 

 எனதுபடைப்புகள் நிஜமாகவே அக்கறையோடு இந்த சமூகத்தினால் அணுகப்பட்டிருக்கவேண்டும் என்பதே எனது எண்ணம் .மாறாக புறக்கணிக்கப்படுவதும்,   விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவதும் தான் நடந்தது.   இதன் வழியே ஒட்டுமொத்த இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை பிரச்சனைகள் நிராகரிக்கப்படுகிறது.

 

 இது மிகப்பெரும் அநீதி .எம்பெண்களுக்கான அநீதி. உண்மையை பேச பதிவு செய்ய விரும்பும் ஒருபடைப்பாளியை ஏற்றுக்கொள்ள மறுத்தல். நான் பொய்யை எழுதியிருப்பதாகஅறிவித்தல், பிரச்சனையை அறிந்த கொள்வதும் மாற்றுவதற்கும் பதில் அதனை மறுப்பது அல்லது மறைப்பது இது தான் நான் காணும் மனிதர்களின் இயல்பாக இருக்கிறது.

 

 ஒருகவிதை தொகுப்பில் உள்ள 50 கவிதைக்குள்ஒப்பந்தம் என்கிற ஒரு கவிதையில் நான் பயன்படுத்திய ஒரு  வார்த்தைக்கு கிடைத்த விமர்சனம் அறிவு ஜீவிகள் அல்லது சமகாலக் ஆண் கவிஞர்கள் என்கிற இவர்களிடமிருந்து கிடைத்த விமர்சனம் மிகக் கடுமையானது.


அதேசமயத்தில் எனது நாவல் வெளிவந்த பிறகு பல கெட்ட வார்த்தைகளுடன் எனதுசமூகத்து மனிதர்களால் அந்த நாவல் எதிர்கொள்ளப்பட்ட விதம் ஒரு புறம்என்றால், சக அறிவுஜீவி எழுத்தாளர்களால் முற்றாக அது புறக்கணிக்கப்பட்ட நிலைஇருந்தது.   எப்படி ஒரு மதம் சார்ந்த பின்னணியிலிருந்து வந்தவர்களால் இந்த படைப்பின் வீரியத்தை உண்மைத்தன்மையை ஏற்க முடியவில்லையோ,   அதே போலஇந்த அறிவுஜீவிகள் கூட்டத்தினாலும் அந்த நாவல் பேசும் விஷயங்களை சகித்துக்கொள்ள இயலாமல் போகிறது.  

 

salma நான் இதனை இப்படித்தான் விளங்கிக் கொள்ள முயல்கிறேன்.   காரணம் அந்நாவல் பெண்களின் உடல், பாலியல் விருப்பங்கள்என்று அனைத்தையும் பகிரங்கமாக பேசுகிறது.   ஒரு படைப்பு அணுகப்படும்விதத்திலேயே அரசியல் இருக்கிறது.   இது மத அடிப்படைவாதிகளை கோபமூட்டுவது.அவர்கள் தங்களது அறிவுரைகளாலும் செயல்பாடுகளாலும் என்னை அணுகும் பொழுது நட்போடு இருக்கும். அறிவுஜீவிகள் என்று அழைத்துக் கொள்பவர்களால்பேணப்படுகிற மௌனத்திற்கும் இடையே வேறுபாடுகள் குறைவு.   வழிமுறைகள் வேறுபார்வை பயணம் என்பது ஒன்றுதான். ஒரு படைப்பு அணுகப்படுவதன் பின்னனியில் ஒருஅரசியல் இருக்கிறது.   அதன் பின்னனியும் பெண் எழுத்தின் மீது குறுக்கீடு நிகழ்த்துவதுதான்.

 

 பெண் தனது படைப்புகளில் வழியே எதை அடைய ,எதை நோக்கி பயணிக்க முயற்சிக்கிறாள், ஆண்களைப்போல அதிகாரத்தை நோக்கியல்ல .தனது விடுதலையை நோக்கிய பயணம் அது.அதற்கான வேண்டல் வேட்கை தவிப்பு படைப்புகளில் பதிவாகின்றன.   ஆனால் அந்தபடைப்புகள் இந்த ஆணாதிக்க மைய அதிகார நிலைப்பாடு கொண்டவர்களால் எளிதாக புறந்தள்ளப்படுகிறது. தயவுதாட்சண்யமின்றி. மதவாத பிற்போக்கு சக்திகளுக்குப்பின் என்ன மனநிலை இயங்குகிறதோ அதுதான் ஏனைய ஆணாதிக்க படைப்பாளிகளின் மனநிலையுமாக இருக்கிறது.

 

ஒருமத அமைப்பின் தலைவர் நீங்கள் உங்களது படைப்புகளின் மூலமாக எங்களை புண்படுத்தியிருக்கிறீர்கள் என்று அச்சுறுத்தும் வகையில் கூறினார்.  இதெல்லாம் ஒரு விதமான ஓடுக்குதல்.   இதற்கு முகம் கொடுக்க வேண்டியதொருநிலை ஒரு படைப்பாளிக்கு எத்தனை பெரிய அவமானம்.   நான் எழுத வந்து 25 வருடங்கள் எத்தனைஇஸ்லாமியப் பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள்.   திரும்பிப்பார்க்கும் போது மிகப்பெரிய வெற்றிடத்தை உங்களால் பார்க்க முடியும். அந்தவெற்றிடத்தை யார் உருவாக்குகிறார்கள்இந்த கேள்விக்கான பதில் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

 

 பெண்மொழி என்பது அவளுடையதாக மட்டும்தான் இருக்கிறது. அவளுக்கு மட்டுமேயுரியதாக இந்த சமூகம் பிரித்துவைத்துக் பார்க்கிறது.   அவளது உடலை அவள்கொண்டாடுவதற்கு சமூகம் அனுமதிப்பதில்லை.   அவள் தன் உடல் குறித்துப் பதிவுசெய்கிற ஒரு அரசியலை கேட்கத் தயாராக இல்லை.   மாறாக படைப்புகளை அவதூறு செய்வதும்,   அவமானப்படுத்த முயல்வதுமாக இந்த ஆணாதிக்க சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

 

 பெண்ணை கட்டுப்படுத்துதல் என்பது பெண்ணின் இயக்கத்தை கட்டுப்படுத்துதல். இயக்கம்என்பது பெண்ணை பொது வெளியிலிருந்து அப்புறப்படுத்துவது மட்டுமல்ல அவளுக்கானமொழியை அவள் உருவாக்கி விடுவதிலிருந்து அவளைத் தடுப்பது.   இதனை விமர்சனங்களால் அந்நியயப்படுத்தலாம் என்கிற நிலையிலிருந்து உருவாகிறது.ஆண்களின் விமர்சனங்களாலும் தாக்குதல்களாலும்….


இன்று பெண்ணின் மொழி மரபார்த்த மதிப்பீடுகளை தகர்க்கவும், மாற்று அரசியலைவழிநடத்தவும் கூடிய ஒரு நிலைக்கு வந்திருக்கிறது.   முதலில் ஆண்கள்  எங்களுக்காக உருவாக்கியிருக்கும் மொழியிலிருந்து எங்களை விடுவித்தல் முக்கியம்.  எமக்கான மொழியை உருவாக்குதல் இரண்டாவது கட்டம்.   எம்முடைய விடுதலைக்கான படைப்புகளை உருவாக்குதல் அடுத்த கட்டம்.


இதற்கான எதிர்வினை தொடர்ந்து எழுதப்படுகிற எமது படைப்புகள் மட்டுமாக தான் இருக்க வேண்டும் .இடைவிடாமல் எழுதுதல், எழுத்து , எழுத்து, எழுத்து என்கிற ஒருவழிமுறையை கையாள்வது மட்டுமே இதற்கு சரியானதொரு மாற்றாக இருக்க முடியும்.


மதிப்பீடுகளை ,கருத்துக்களை உடைத்தெறியும் தீவிர எழுத்து ஒரு மாபெரும் இயக்கமாக உருமாறுவதன் வழியே பெண்ணின் அழுத்தமான அடையாளம் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகக் கூடும். முற்றிலும் புதியதான ஒரு இருப்பாக அது இருக்கும்.


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

 

லண்டனில் நடைபெற்ற 40வது இலக்கிய சந்திப்பில்  ஆற்றிய உரையின் சுருக்க வடிவம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment