Home » இதழ் 12 » * சம உரிமை – சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தேசங்களுக்கா….? அல்லது சிறிலங்கர்களுக்கா….?

 

* சம உரிமை – சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தேசங்களுக்கா….? அல்லது சிறிலங்கர்களுக்கா….?

 

equal

 

( சம உரிமை இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டு  தமிழ் மொழி அறிக்கையை  நாம் பிரசுரித்து இருந்தோம், ச உரிமை இயக்கம் தொடர்பாகவும், இலங்கை  நிலையில் அதன் இன்றைய  அரசியல் முக்கியம் குறித்து வி.சிவலிங்கம் அவர்கள் ஒரு விரிவான கட்டுரையை  /எதுவரை /இணையதளத்தில் எழுதி இருந்தார்.அதன் தொடர்ச்சியாக மீராபாரதியின் இக்கட்டுரை பதிவு பெறுகிறது, அரசியல் கருத்து பகிர்வையும், ஆரோக்கியமான விவாதங்களையும் ,கேள்விகளையும் ,அதற்கான பதிலுரைப்புகளையும் முன்னெடுத்து செல்வதே எமது எதிர்பார்ப்பாகும். உங்கள்  கருத்துக்கள், அபிப்பிராயங்களை எழுதுங்கள்..)

 ——————————————————————————————————————————————————————————————

சிங்கள மக்களுடனும் சிங்கள கட்சிகளுடனும் கூட்டமைத்து ஐக்கிய முன்னணியை உருவாக்கி செயற்படுவதில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் இது அவசியமான ஒரு செயற்பாட்டு வடிவமே. ஆனால் இவ்வாறு உருவாக்கப்படுகின்ற ஐக்கிய முன்னணிகள் தெளிவான நிலைப்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில்  முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க) அதன் வெகுஜன முன்னணி அமைப்பான சம உரிமை இயக்கமும் (ச.உ.இ) தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி விடுகின்ற அழைப்பு வரவேற்கப்பட வேண்டியேதே. ஆனால் இவர்களிடம் தெளிவான ஒரு நிலைப்பாடு இருக்கின்றதா என்பது ஆய்வுக்குரியது. ஏனெனில் இன மேலாதிக்கம் மற்றும் நடைபெற்ற போர் இன அழிப்பு என்பன தொடர்பான தெளிவான ஒரு நிலைப்பாடு மு.சோ.க க்கும் ச.உ.இ ற்கும் இருக்கின்றதா என்றால் அது சந்தேகமே.  சிலவேளை புதிய திசைகள் தமது அறிக்கையில் குறிப்பிடுவதுபோன்று இவர்களின் இன்றைய நிலைப்பாடுகள் சிங்கள மக்களைக் கவர்ந்து இழுப்பதற்கான தந்திரோபாயமாகவும் இருக்கலாம். இருப்பினும் இவர்களுடன் ஐக்கிய முன்னணியை உருவாக்க விரும்புகின்ற ஈழத் தமிழ், முஸ்லிம், மலையக தேசங்கள் இவர்களின் நிலைப்பாடுகளைக் கருத்தில் எடுத்து செயற்படுவதே எதிர்கால செயற்பாடுகளுக்கு அடித்தளமாகவும் முன்னேற்றகரமாகவும் இருக்கும். இதற்கு மாறாக தேர்தலை நோக்கமாகக் கொண்டு வெற்று ஐக்கிய முன்னணிகளை அவசர அவசரமாக உருவாக்குது என்பது பசித்த வயிறுக்கு சோளப்பொறியாத்தான் இருக்குமே அல்லாது சரியான ஆரோக்கியமான உணவாக இருக்காது. இந்தடிப்படைகளில் மேற்குறிப்பிட்ட கட்சியினதும் அதனது வெகுஜன முன்னணியினதும் கொள்கைகளையும் கருத்துக்களையும் அலசி ஆராய்வது பயன்மிக்கது.

முதலாவதாக மு.சோ.க.வும் ச.உ.இ.மும் வேறு வேறு என்பதே மக்களை மக்குகளாக எண்ணுகின்ற போக்காகும். ஒன்று கட்சி. மற்றது கட்சியினால் உருவாக்கப்பட்ட வெகுஜன அமைப்பு. இது கட்சியைப் போன்று இறுக்கமானதல்ல. பரந்துபட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு கட்சியின் வெளிகளுக்கு அப்பால் இருந்து கட்சி அங்கத்தவர்களின் தலைமையில் அல்லது வழிகாட்டலில் மக்களமைப்புகளை உருவாக்கி போராடுதல் எனலாம். இவ்வாறான செயற்பாடுகளினுடாக கட்சியில் செயற்படுவதற்கான நபர்களை கண்டடைவதும் மற்றும் பொது மக்களிடம் இருக்கின்ற எண்ணங்களை அறிந்து கொள்ளவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்றால் தவறல்ல. ஆனால் இவர்களது அறிக்கைகள் ஒரு இடத்தில் நாம் வேறு வேறு என்பதும் இன்னுமொரு இடத்தில் கட்சியின் வெகுஜன அமைப்பு என்பதும் மக்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். இதில் ஆரம்பிக்கின்ற குழப்பம் இவர்களது அனைத்து கருத்துக்கள் கோட்பாடுகளிலும் தொடர்கின்றது. இவ்வாறான குழப்பம் நிறைந்தவர்களுடன் ஐக்கிய முன்ணி அமைக்கும் பொழுது நமது நிலைப்பாடுகள் தெளிவானவையாக இருக்கவேண்டும். அல்லது போனால் பெரும் நீரோட்டத்துடன் நாம் அடித்துச் செல்லப்படலாம். இறுதியில் அழிக்கப்பட்டும் விடலாம்.

மு.சோ.க. மற்றும் ச.உ.இ. ஆகிய இரு அமைப்புகளின் நிலைப்பாடுகளும் இலங்கையில் காணப்படுகின்ற தேசங்களின் தனித்துவத்தை அவர்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்பதாக இல்லை. மாறாக அனைவரும் சிறிலங்கர்கள். அந்த வகையில் சம உரிமை உடையவர்கள் என்பதே இவர்களின் உறுதியான நிலைப்பாடு. இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இவர்கள் இருக்கும் வரை அடக்கி ஒடுக்கப்படுகின்ற தமிழ் தேசத்தைச் சேர்ந்தவர்களான நாம் இவர்களுடன் ஐக்கிய முன்னணி அமைப்பது என்பது கஸ்டமானது மட்டுமல்ல சாத்தியமில்லாததும் கூட. இங்கு தமிழ் தேசத்தின் விடுதலைக்காக முன்வைக்கப்படுகின்ற தமிழ் தேசியம் என்பது முற்போக்கான நிலைப்பாட்டில் இருந்தே என்பதைக் குறித்துக் கொள்ளவேண்டும். இன மத மொழி அடிப்படையில் ஒடுக்கப்படுகின்ற தேசம் தனது விடுதலைக்காகப் போராடுவது என்பது அடிப்படையில் முற்போக்கான செயற்பாடே. இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான கருத்தியலையும் முன்னேறிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கும் பொழுது அது மேலும் முற்போக்கானதாக அமையும். ஆனால் கடந்த காலங்களில் தமிழ் தேசியமானது முன்னேறிய கோட்பாடுகளின் அடிப்படையில் தன்னை தகவமைத்து கொள்ளாமையாலையே இன்றைய நிலை போராட்டத்திற்கு ஏற்பட்டது என்றால் தவறல்ல. இவ்வாறான கடந்த கால தவறுகளினால் இந்த போராட்டமானது பிற்போக்கானது என கூறுவது அடக்கப்படுகின்ற மக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடே. அவ்வாறான ஒரு போக்கு மு.சோ.க.விடவும் ச.உ.இ.டமும் காணப்படுகின்றன என்பது வெளிப்படையான ஒரு உண்மை.

sama-ayithiya_logoவி.சிவலிங்கம் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுவதுபோல் ஈழத் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் வெறுமனே குறுந்தேசியவாதமோ அல்லது சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு எதிரானதோ அல்ல. மாறாக எப்பொழுது சிங்கள பௌத்த தேசியவாத கருத்தியலும் அதனடிப்படையிலான செயற்பாடுகளும் பேரின மத வாதமாக வளர்ந்து சக தேசங்களையும் மதங்களையும் இனங்களையும் அடக்கி அழிக்க முற்றபடும்போது எதிர்க்கவேண்டி இருக்கின்றது. இதேபோல் ஈழத்தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது எந்தக் கருத்தியலினடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றதோ அதற்கமையவே அது குறுந்தேசியவாதமாக அல்லது முற்போக்கான தேசியவாதமாக செயற்படும். இவர் மேலும் குறிப்பிடும் பொழுது தமிழ் பகுதிகளில் காணப்படும் அரசியல் செயற்பாடுகள் தமிழ் தேசியவாத அலைக்குள் சிக்குண்டு இருப்பதாக குறைப்படுகின்றார். சிறிலங்கா அரசின் இனவாத ஒடுக்குமுறை நிலவுகின்ற சுழலில் தமிழ் தேச அரசியல் தமிழ் தேசியவாத அலைக்குள் சிக்குண்டிருப்பதில் தவறில்லை. தவறு எதுவெனில் தமிழ தேசியவாதம் என்ன என்பதை நிர்ணைக்கும் கருத்தியலே இங்கு பிரச்சனைக்குரியதாக இருக்கின்றது என்பதை இடதுசாரிகளும் தேசியவாதிகளும் புரிந்துகொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. அந்தவகையில் முற்போக்கான (தமிழ்) தேசிய வாத கருத்தியலானது சக தேசங்களின் (முற்போக்கான) தேசியவாதத்தையும் தேச மற்றும் ஐனநாயக உரிமைகளையும் மதித்து செயற்படும். செயற்படவேண்டும். இதைத் தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக தேசியவாதிகள் மற்றும் இடதுசாரி கட்சி செயற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்வார்களா?

சோசலிஸ முன்னணியினது வெகுஜன இயக்கமான சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் யூட் சில்வா நேர்காணல் ஒன்றில் பின்வருமாறு கூறுகின்றார். அதாவது  “…முதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஒருமுறை சிங்கள இனவாதத்தையும், மறுமுறை தமிழ் இனவாதத்தையும் மேலுமொரு முறை முஸ்லிம் இனவாதத்தையும் தமது ஆட்சியின் தேவைக்காக வரலாறு பூராவும் பயன்படுத்தி வந்ததன் விளைவாகத்தான் சிங்கள, தமிழ், முஸ்லிம் உயிர்கள் ஆயிரக்கணக்கில் காவு கொள்ளப்பட்ட மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு வழிவகுக்கப்பட்டது…” என்கின்றனர். முதலாளித்துவ வரக்கம் தனது ஆட்சிக்காகவும் அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவும் இனவாதப் போக்குகளைப் பயன்படுத்துவது உண்மையே. ஆனால் இவ்வாறு தமது தேவைக்காக வெறுமனே வெற்றிடத்திலிருக்கின்ற இனவாதத்தையோ அல்லது இனவாத சிந்தனையை புதிதாக புகுத்தியோ பயன்டுத்தவில்லை. மாறாக ஏற்கனவே  மனித மனங்களில் இன, மத, மொழிப் பற்றுகள் ஆழமாக வேருன்றியிருக்கின்றன. இவை இன மத வாத சிந்தனையாளர்களாலும் ஆட்சியாளர்களாலும் தவறான நம்பிக்கைகளிடிப்படையில் இனவாதமாக காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இவ்வாறான இனவாத  சிந்தனைகளையே ஆட்சியாளர்களும் தமக்குச் சாதகமாகத் தேவையானபோது பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் மூன்று இனங்களிலும் இனவாதம் இருக்கின்றமை யதார்த்தமானதொரு உண்மை. ஆனால் இந்த இனவாதங்களின் அதிகாரம், வெளிப்பாடு மற்றும் செயற்பாட்டுத்தன்மை என்பன ஒரே தளத்திலோ தன்மையிலோ அமைந்தவையல்ல. மாறாக ஒன்று ஒடுக்குமுறையானதாகவும் மற்றது ஒடுக்கப்படுவதாகவும் இருக்கின்றன என்ற உண்மையையை இந்த இரு அமைப்புகளும், . மு.சோ.க.வும் ச.உ.இ.மும் புரிந்துகொள்ளவேண்டும்.

சிங்கள மக்களிடமிருக்கின்ற இனவாதம், சிங்கள பௌத்த பேரினவாதமாக, குறிப்பாக  போர் முடிவுற்றதாக கூறியபின், மாபெரும் விருட்சமாக வளர்ந்திருக்கின்றது. இதற்கு துணையாக சிறிலங்கா அரசும் அதன் இயந்திரங்களான பதவியேற்கின்ற அரசாங்கங்கள், இராணுவம், காவல்துறை மற்றும் மதம் பாடசாலை போன்ற சமூக நிறுவனங்கள் என்பனவும் துணையிருக்கின்றன. ஒருபுறம் இவை தம் தேசத்தை பாதுகாக்கின்றன. இது அவசியமானதே. ஆனால் மறுபுறம் இனவாதத்தின் அடிப்படையில் சக தேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஒடுக்குகின்றன. அதேவேளை முதலாளித்துவ சக்திகளும் இனவாத சக்திகளும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க பெரும்பான்மையான சிங்கள மக்கள் சிங்கள பெளத்த பேரினவாத போக்கினால் கிடைக்கின்ற நன்மைகளில் குளிர் காய்கின்றனர்.  இங்குதான் அடிப்படை முரண்பாடுகள் ஆரம்பமாகின்றன. ஆகவே இனவாத போக்குகளையும் செயற்பாடுகளையும் வெறுமனவே முதலாளித்துவ சக்திகளின் சதி வேலை எனப் புறம் தள்ளியோ அல்லது அவர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கி விட்டோ கடந்து செல்லமுடியாது. ஏனெனில் இவ்வாறன இனவாதபோக்குகள் செயற்பாடுகள் நடைபெறுவது தொடர்பான பொது அல்லது பெரும்பான்மை (சிங்கள) மக்களின் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. அவர்களுக்கு நிறையவே பொறுப்பு இருக்கின்றது. இந்தப் பொறுப்பை சிங்கள பெரும்பான்மை மக்கள் உணர்வதற்கும் அவர்களிடமிருக்கின்ற இனவாதப் போக்குகளை களைவதற்குமான வேலைத்திட்டத்தை மு.சோ. கட்சியும் அதன் முன்னணி அமைப்பான ச.உ.இ.மும் இன்று மேற்கொள்ளவேண்டும். இதுவே ஒடுக்கப்படுகின்ற தேசங்கள் இவர்கள் மீது ஒடுக்கப்படுகின்ற தேசங்கள் நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையாக இருக்கும்.

யூட் சில்வா மேலும் கூறும் பொழுது, “தேசிய தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அரசியல் காரணமாக உண்மையான வர்க்கப் பிரச்சினை அடிபட்டு இன மற்றும் மத தனித்துவங்களை முன்னிலைப்படுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்ளும் போராட்டத்துக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்” எனக் கூறுகின்றனர். எவ்வாறு வர்க்க முரண்பாடுகளுக்குள் மக்கள் குறிப்பாக சுரண்டப்படுகின்ற தொழிலாளர்கள் சிக்கவைக்கப்பட்டுள்ளார்களோ அவ்வாறுதான் இன மத அடையாளங்களின் அடிப்படையிலும் மக்கள் சிக்கவைக்கப்பட்டுள்ளார்கள். வர்க்க முரண்பாட்டில் எவ்வாறு சுரண்டப்படுகின்ற பெரும்பான்மை மக்களின் குறிப்பாக தொழிலாளர்களின் உரிமைகள் முக்கியமோ அதேயளவு ஒடுக்கப்படுகின்ற மக்களின் இன மத அடையாளங்கள் தொடர்பான உரிமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது இவர்களினுள் ஆழமாக வேருண்டியிருப்பதுடன் இவர்கள் அறிந்தும் அறியாமலும் வெளிப்படுகின்றன. ஆகவே இதனை மறுதலித்து வர்க்க பிரச்சனை மட்டுமே உண்மையான பிரச்சனை எனவும் இன மத அடையாளப்பிரச்சனைகள் இரண்டாம் தரமானவை எனவும் நிறுவுவது பொறுத்தமற்ற பொறுப்பற்ற நிலைப்பாடாகும். மேலும் ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் இன மத மொழி உணர்வுகளை ஒடுக்குகின்ற தேசத்தைச் சேர்ந்த மு.சோ. கட்சியும் அதன் வெகுஜன முன்னணியான ச.உ.இ.மும் புரிந்து கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.

ஒருவர் தனது அடையாளத்தை முக்கியத்துவப்படுத்தும் உயர்த்திப் பிடிப்பதும் தவறல்ல. ஆனால் இந்த செயற்பாட்டிற்காக பிற A member of an equal rights movement shouts slogans during a protest against the government in Colomboஅடையாளங்களைக் கொண்டவர்களை அடக்குவதும் அழிப்பதுமே தவறான செயற்பாடு. அதேபோல் ஒருவர் தான் சார்ந்த மத வழிமுறைகளினுடாக தன்னை அறிவதற்கான அல்லது ஆன்மீகத் தேடலுக்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் தவறல்ல. ஆனால் தனது வழியே சரியெனவும் அதுவே உயர்ந்தது எனவும் தனது குழந்தைகளையும் சமூகத்தையும் வலியுறுத்துவதும் பிற மனிதர்கள் சமூகங்கள் மீது தனது நம்பிக்கைகளை திணிப்பதுவுமே தவறாகும். ஆகவே இவ்வாறான அடையாளங்கள் செயற்பாடுகள் தொடர்பாக நாம் மரபார்ந்த சிந்தனை முறைகளிலிருந்து விடுபட்டு புதிய புரிதல்களோடு அணுக  முற்படவேண்டும். ஆனால் இவ்வாறான ஒரு பண்பு புரிதல் இக் கட்சிக்கும் அதன் வெகுஜன இயக்கத்திற்கும் இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறியே.

வர்க்கப் பிரச்சனை எந்தளவு முக்கியமோ அதேயளவு முக்கியமானது இன மத அடையாளப் பிரச்சனைகள். குறிப்பாக ஒரு இனத்தால் மதத்தால் பிற இனங்கள் மதங்கள் ஒடுக்கப்படும் பொழுது அதன் முக்கியதுவமானது மேன்மேலும் அதிகரிக்கின்றது. அதேவேளை ஒடுக்குகின்ற தேசத்தின் இன மத வாத சிந்தனைகள் வளர்வதும் அவர்களின் சக தேசங்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரிப்பதும் ஒடுக்கப்படுகின்ற சக தேசங்களில் இனவாதப் போக்குகள் மேலும் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றன. ஆனால் இது பல காரணங்களில் முக்கியமான ஒரு காரணமாகவே இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவ்வாறான அதிகாரமற்ற ஒடுக்கப்படுகின்ற மக்களிடம் இருக்கின்ற இன மத வாதங்கள் அரச இராணுவ அதிகாரமுள்ள ஒடுக்கின்ற மக்களிடமுள்ள இன மத வாதத்துடன் சமப்படுத்தமுடியாது. ஆகவே இதனை வர்க்க முரண்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்கள் காட்டி புறமொதுக்காது எதிர்கொள்ள வேண்டிய முரண்பாடுகளே. ஏனெனில் இன மத அடையாளங்கள் சமூகத்தால் கட்டமைக்கபட்டதாக இருப்பினும் மக்களுடன் ஆழமான பிணைப்பைக் கொண்டவை. மக்களின் உளவியல் உணர்வுகளுடன் பிண்ணிப் பிணைந்து இணைந்திருக்கின்றன. இவ் உளவியல் சிந்தனை கட்டுமானத்தை எவ்வாறு உடைப்பது அல்லது ஆரோக்கியமாக மாற்றியமைப்பது என்பதற்கான வழிகளைக் காணாதவரை இவையும் மக்களின் மனிதர்களின் முக்கியமான அடிப்படைப் பிரச்சனைகளே. இன மத அடிப்படையிலான புற ஒடுக்குமுறையற்ற ஒரு சமூகத்தில்தான் இன மத அடையாளங்கள் அதன் மீதான பற்றுதல் என்வற்றால் மேற்கொள்ளப்படும் அக எதிர்மறை செயற்பாடுகள் பண்புகள் விமர்சிக்கப்படவும் கட்டுடைக்கப்படவும் முடியும். புற ஒடுக்குமுறை ஒன்று நிலவும் பொழுது இவை தொடர்பாக ஒடுக்கப்படுகின்ற தேசத்திற்குள் அக உரையாடல் நடைபெறலாம். ஆனால் வெளியாருடன் குறிப்பாக ஒடுக்குமுறையாளர்களுடன் ஒடுக்கப்படுகின்ற தேசத்தின் அக ஒடுக்குமுறைகள் தொடர்பாக உரையாட முடியாது. அதற்கான அவசியமுமில்லை.

ஒருபுறம் வர்க்க அடிப்படையில் அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் சாதியைத் சேர்ந்த தொழிலாளர்களும் ஏழைகளும் விளிம்புநிலை மனிதர்களும் பெண்களும் குழந்தைகளும் சுரண்டப்படுகின்றார்கள். பாதிக்கப்படுகின்றார்கள் என்பதில் எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் மறுபுறம் இனவாத மதவாத அடிப்படையில் ஒடுக்குமுறை ஒன்றை மேற்கொள்கின்ற (சிங்கள) தேசத்திலுள்ள முதலாளிகளும் சுரண்டப்படுகின்ற தொழிலாளர்களும் விளிம்புநிலை மக்களும் கூட ஒன்றுபட்டு ஒரணியில் திரள்கின்றனர் என்பது பொய்யல்ல. இதேபோல் இவர்களால் ஒரு தேசம் (தமிழ்) ஒடுக்கப்படும் போது குறிப்பிட்ட இன மதத்திற்குள் உள்ள சகல வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு பாதிக்கப்படும் பொழுது அதிகாரத்திலுள்ள அல்லது சுரண்டும் வர்க்கத்தின் ஒருசாரார் உட்பட அனைவரும் அதற்கு எதிராக கிளர்ந்து எழுகின்றார்கள். இதன் விளைவாக இந்தக் கிளர்ச்சியை குறிப்பிட்ட இன மதத்திற்குள் இருக்கின்ற ஆதிக்க அதிகார வர்க்கங்கள் பிரதிநிதித்துப்படுத்துகின்றன. இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரே காரணத்திற்காக இது ஒரு முதலாளித்துப் பிரச்சனை என்று முடக்கியோ புறம் தள்ளியோ விடமுடியாது. உண்மையிலையே முதலாளித்துவ வர்க்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்தாத முற்போக்கான கட்சிகள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள் என்பது நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு என்பது நாமறிந்ததே. இத் தவறினால் தேசிய விடுதலைப் போராட்டமானது வெறுமனே முதலாளித்துவ சக்திகளின் போராட்டமாக சித்தரிப்பது அறியாமையும் ஆழமற்ற பார்வையுமேயாகும்.

யூட் சில்வா அவர்கள் மேலும் கூறும் பொழுது “இது பௌத்த பிக்குகளின் தனிப்பட்ட நோக்கமல்ல, அரசாங்கத்தின் குறுகிய இனவாத அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாகும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.,…” . இவ்வாறு கூறுவது இலங்கைளில் மத ஒடுக்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கின்ற பௌத்த குருமாரையும் பௌத்தமத நிறுவனங்களையும் மு.சோ.கயும் ச.உ.இமும் பாதுகாக்கின்றன என்றால் மிகையல்ல. பிற தேசங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு பௌத்த குருமாரின் பங்களிப்பானது வெளிப்படையானது. இதை இவர்கள் கூற தயங்குவதன் காரணம் என்ன? அதேவேளை தென்னாசிய பிராந்தியளவில் எதிர்நோக்கும் பொழுது  சிங்கள மக்கள்  தம் இனம் மதம் சார்ந்து உருவாகின்ற பயத்தை அவ்வளவு இலகுவாக புறம் ஒதுக்க முடியாது. இலங்கையின் இன மத முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமாயின் சிங்கள மக்களின் இந்தப் பயமும் தீர்க்கப்படவேண்டும். அல்லது போனால் வர்க்கப்பிரச்சனை தீர்ந்து சோசலிச அரசாங்கம் வந்தாலும் இன்று நிலவுகின்ற இன மத முரண்பாடுகள் தீர்க்கப்படாது எரிந்து கொண்டே இருக்கும் என்பதை மு.சோ. கட்சியும் அதன் வெகுஜன அமைப்பான ச.உ.இ.மும் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் துரதிர்ஸ்டவசமாக இவர்கள் இதைப் புரிந்துகொள்கின்றவர்காளாக இல்லை.

மேற்குறிப்பிட்டவற்றைவிட கடந்த சப்பிரகமுவா மாகாணத்தில் இரு தமிழ் வேட்பாளர்கள் வெல்வதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து மாகாணசபைத் தேர்தலில் ஒன்றைனைந்தது செயற்பாட்டார்கள். ஏனெனில் தங்களின் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டியது அசியமாக இருந்தது மட்டுமல்ல அது ஒரு அடிப்படையான உரிமையும் கூட. ஆனால் இச் செயற்பாடானது மு.சோ. கட்சிக்கும் அதன் வெகுஜன அமைப்பான ச.உ.இ.க்கும் இனவாத செயற்பாடாக இருக்கின்றது. ஆனால் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கு இது இனவாத செயற்பாடல்ல. ஒரு பேச்சுக்கு இனவாதமாக இருந்தால் கூட அவ்வாறான ஒரு நிலை ஏன் உருவாகியது என்பதை மு.சோ. கட்சியும் ச.உ.இ.மும் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை. அதாவது ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை.

மேலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நலனை உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்பது இவர்களின் ஒரு அடிப்படைக் கொள்கை. இதனுடன் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் சுழ்நிலையில் ஒடுக்கப்பட்ட இன மத மொழி என்பவற்றின் நலன்களும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நலன்களிலிருந்து எந்தவகையிலும் குறைந்ததல்ல. ஆகவே இவையும் உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டிய நலன்களே. ஆனால் இவர்கள் இதற்கான முக்கியத்துவத்தை வழங்கவில்லை என்பதாகவே தெரிகின்றது. இவ்வாறான புரிதலின்மையே இவர்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கு தடையாக இருக்கின்றது.

இறுதியாக முதலாவது இன்றைய சிறிலங்கா அரசானது வெறுமனே முதலாளித்து அரசு மட்டுமல்ல சிங்களப் பேரினவாத கருத்தியலையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பேரினவாத அரசாகும் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இரண்டாவது சிங்கள் பெரும்பான்மை மக்களிடமிருக்கின்ற பேரினவாத கருத்தியலாதிக்கத்திற்கு எதிராக செயற்பட்டு தம்மை பேரினவாதத்திற்கு  எதிரான சக்திகள் என்பதை இவர்கள் நிறுபிக்க வேண்டும். மூன்றவாதாக சம உரிமை என்பது தேசங்களுக்கானது என்ற கோரிக்கை முதன்மைப்படுத்தப்படவேண்டும். இதன்பின்பே அனைத்து மக்களுக்குமான உரிமையை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு செயற்படும் பொழுது சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போராடங்களில் முன்னிலை சோசலிசக் கட்சியுடனும் அதன் வெகுஜன அமைப்பான சமவுரிமைக் கட்சியுடனும் இணைந்து செயற்படலாம். இவ்வாறான ஒரு புரிதலின் அடிப்படையில் தான் சோசலிச முன்னணி மற்றும் சம உரிமை இயக்கத்தின் ஐக்கிய முன்னணிக்கான அழைப்பை எதிர்நோக்க வேண்டும். இவர்களிடம் நல்லெண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த நல்லெண்ணங்கள் தவறான அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே நீண்ட காலநோக்கில் பயனற்றவை. இதற்குமாறாக இவர்களின் கோட்பாடுகளும் கருத்துக்களும் சரியான அடிப்படைகளில் மீளக் கட்டமைக்கப்படுவதே எதிர்காலத்திற்கும் உறுதியான ஆரோக்கியமான சமூக தேசிய விடுதலைக்கான பயணத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். சிந்திப்பார்களா? செயற்படுவார்களா?

000000

தொடர்புபட்ட பதிவுகள்……

*சம உரிமை இயக்கம் (Movement for Equal Rights) திறந்த அரசியல் உரையாடலை நோக்கி……

http://eathuvarai.net/?p=2899

*முன்னணி சோசலிஸ்ட் கட்சி , சம உரிமை இயக்கம்-வி.சிவலிங்கம்

http://eathuvarai.net/?p=3420

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment