Home » இதழ் 13 » * இந்திய விஸ்தரிப்புவாதத்தின் இலங்கைப் பரிமாணம் – மன்சூர் ஏ. காதிர்

 

* இந்திய விஸ்தரிப்புவாதத்தின் இலங்கைப் பரிமாணம் – மன்சூர் ஏ. காதிர்

 

 mansoor a kathar

கோட்பாட்டு அரசியலில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு புவிசார் அரசியல் (Geo Politics)என்ற பதப் பிரயோகம் அந்நியமான ஒன்றல்ல. அதிலும் தெற்காசிய விவகாரங்களிலும் இலங்கையில் கால் நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட இன ஒடுக்குமுறை அரசியலிலும் அக்கறை உள்ளவர்களுக்கு புவிசார் அரசியலின் பக்க விளைவான இந்திய விஸ்தரிப்பு வாதம் (Indian Expanding Theory) என்ற பதப்பிரயோகமும் மிகவும் பரிச்சயமான ஒன்றேயாகும்.

காந்தியின் அஹிம்சைப் போராட்டங்களுக்கும் மற்றும் ஏனைய சில தீவிரவாதச் செயற்பாடுகளுக்கும் ஈடுகொடுக்க முடியாத பிரித்தானிய ஏகாதிபத்தியம் இறுதியில் இந்திய உப கண்டத்துக்கு சுதந்திரம் வழங்குதல் என்ற தீர்மானத்தை எடுத்துக் கொண்டது. விதேசிய ஏகாதிபத்தியம் சுதந்திர இந்தியாவின் தேசியவாதிகள் என்ற தளத்தில் இருந்த தேசிய முதலாளித்துவத்தின் அல்லது பூர்ஷ_வாக்களின் (national bourgeois)  கரங்களிடம் இந்தியாவின் அரசியல் அதிகாரத்தைக் கையளித்தது.

in-01இந்திய தேசிய முதலாளித்துவம் பாக்கிஸ்தான் என்ற ஒரு நாட்டின் பிறப்பாக்கத்தினால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான பீதியினாலும் சீனா என்ற அயல்நாட்டு வல்லாதிக்கத்தின் இருப்பினால் உருவான புவிசார் உளவியல் தாக்கத்தினாலும் ஐரோப்பிய வல்லரசுகள் புதிது புதிதாக தோற்றுவித்து வரும் ஐக்கிய இந்தியாவின் புவியியல் இருப்புக்கான அச்சுறுத்தலினாலும் மற்றும் தேசியவாத எழுச்சி காரணமாகவும் தெற்காசியாவிலும் அதனைச் சூழ உள்ள நாடுகளிலும் தன் வல்லாதிக்கத்தின் கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டிருத்தல் இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்கு அவசியமானது என்ற அபிப்பிராயத்தை ஆழமாகக் கொண்டிருந்தது.

இது தனது நாட்டில் கட்டுக்கடங்காமல் நிலை கொண்டிருந்த பஞ்சம் மற்றும் வறுமை என்பவற்றின் தாக்கத்துக்கு எதிரான போராட்டத்தை விடவும் அத்தியாவசியமானது என்று அதிகாரத்தில் இருந்த தேசிய முதலாளித்துவம் நம்பிக்கை கொண்டது. பாதுகாப்புசார் கோட்பாட்டு அடிப்படையில் நோக்கப்படும்போது  இது ஓர் ஆச்சரியமே அல்ல. அத்துடன் இத்தகைய நோக்கானது தேசிய முதலாளித்துவத்தின் நீண்டகால உறுதியான இருப்பிற்கும் மிகவும் அத்தியவசியமானதாகும்.

இந்திய மண்ணின் தேசியவாதத் தலைமையாகக் கருதப்பட்ட ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய முதலாளித்துவத்தின் குறியீடு என்பதை அன்றைய இந்திய இடதுசாரிகளில் சிலர் கூட இனங்கண்டு கொள்ளாதவாறு தேசிய முதலாளித்துவம் தேசியவாதத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தது.

இந்த தேசிய முதலாளித்துவமானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் அச்சுறுத்தல் ஏற்படாதவாறு சர்வதேச ஜனநாயகத்தின் கோட்பாட்டுவாத  அறிஞர்;களால் ஹலால் பத்வா வழங்கப்பட்டிருந்த புவிசார் அரசியல் எனும் விதியை தனது பிராந்திய வல்லரசுக் கனவுகளுக்கு இயைவுபடுத்தி தனக்கென ஒரு புதிய கோட்பாட்டை வரைந்து கொண்டது. இதனைத்தான் இன்றைய அரசியல் கோட்பாட்டாளர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்று வரையறை செய்துள்ளனர்.

இலங்கைப் பரிமாணம்:

—————————————

வரலாற்றுக் காலம் தொடக்கம் இந்தியாவானது இலங்கை மீது பல்வேறு வடிவங்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது ஆதிக்கத்தைச் செலுத்தியே வந்துள்ளது. எனினும் நேரு காலத்தில் இருந்தே நவீன இந்திய விஸ்தரிப்பு வாதம் எனும் கோட்பாடு சுதந்திர இலங்கையில் தன்னுடைய நிழல் ஆதிக்கம் பற்றிய தொழிற்பாட்டை நேரடியாக ஆரம்பித்தது. ஆரம்ப காலங்களில் தோட்டத் தொழிலாளர்களில் நலனோம்புதல் என்ற அடிப்படையில் மாத்திரம் இது இலங்கையில் அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அத்துடன்  ஐ.தேக. ஆட்சி புரிந்த ஆரம்ப காலங்களில் மிகவும் வெளிப்படையான ஆதிக்கத்தை செலுத்த இதனால் முடியாமற் போயிற்று.

இதற்கான காரணம் (இடதுசாரிகளின் பதப்பிரயோகங்களில் கூறி;னால்) ஐ.தே.க உலக அரசியலில் முற்போக்கு எதிர் முகாம்களின் கூட்டணியில்neru (Coalition of Anti Progressive Forces) சங்கமித்து இருந்தது. ஆனால் இந்தியாவோ மாஸ்கோவின் தலைமையிலான முற்போக்கு முகாம்களின் கூட்டணியில் (Coalition of Progressive Forces)    ஒன்றித்திருந்தது. இதனால் ஐ.தே.க. ஆட்சியில் இருந்த காலங்களில்; இந்திய விஸ்தரிப்பு வாதம் தன்னை அடக்கி வாசிக்க வேண்டியே இருந்தது. ஆனால் 1970களில் இதன் காவடியாட்டம் சற்று அதிகரிக்கத் தொடங்கிற்று. அதன் இன்னொரு வடிவம்தான் கிழக்குப்பாக்கிஸ்தான் எனப்பட்ட பெரு நிலப்பகுதி பங்களாதேஷ் என பரிநிர்வாணம் அடைந்த கதையாகும்.

தமிழ்த் தேசியவாத எழுச்சியினால் ஏற்பட்ட அனுபவங்களின் மூலம் 1987இல் வேலுப்பிள்ளை பிரபாகரன் இது பற்றிய தன்னுடைய அபிப்பிராயத்தை முன் வைப்பதற்கு முன்பாகவே ரோஹண விஜேவீர 1970களில் அது தொடர்பான தெளிவான அபிப்பிராயங்களை தைரியத்துடன் வெளிப்படுத்தியிருந்தார். எனது அறிவுக்கு எட்டிய வரையில் அரசியல் விஞ்ஞானப் புலமையாளர்களைத் தவிர இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற தொடரை இலங்கையில் உத்தியோக பூர்வமாக முதன் முதலில் கையாண்ட ஓர் அரசியல் நிறுவனமும் ரோஹண விஜேவீரவின் தலைமையில் இயங்கிய அரசியல் நிறுவனம்தான்.

அக்காலங்களில் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கும் தோட்டத் தொழிலாளிகளின்  முதலாளிய அமைப்புக்களுக்கும் எதிரான ரோஹண விஜேவீரவின் தருக்கமானது இனவாதமாக தவறாகவோ அல்லது சரியாகவோ மொழிபெயர்க்கப்பட்டன. விசேடமாக தமிழ் மொழியைப் பிராதான ஊடகமாகக் கொண்டிருந்த சமூகங்களிடையே விஜேவீரவின் இப்போக்கானது சற்று வித்தியாசமாகவே உணரப்பட்டது. இந்திய சமயங்களின் ஊடாக விதேசிய சமயங்களுக்கு எதிராக இந்திய விஸ்தரிப்பு வாதமானது கையாண்ட மேற்கத்தைய எதிர்வினை அரசியலை  ரோஹண விஜேவீர மிகச் சரியாக புரிந்து கொண்டிருந்தமையை சில சிறுபான்மை அமைப்புக்கள் கண்டு கொள்ளத் தவறிவிட்டன.

ஆக,இந்தியாவானது அப்போது சோவியத் ரஷ்யாவின் தலைமையிலான முற்போக்கு முகாம்களின் கூட்டணியில் இருந்ததன் மூலமும் இந்திய சமயங்களையே பெரும்பாலான இலங்கை மக்கள் கடைப்பிடித்தமையின் மூலமும் தோட்டத் தொழிலாளர்கள் மிகப் பிந்திய இந்திய வம்சா வழியினராக இருந்தமையும் இலங்கையில் ஓரளவு கணிசமான மக்கள் தென்னிந்தியாவின் பிரபல்யமான மொழி ஒன்றைப் பேசியமையும் இலங்கையில் இந்தியாவின் கருத்தியல் ரீதியான செல்வாக்கு ஏற்படக் காரணமாயிற்று.

அது மட்டுமன்றி பாரம்பரிய இடதுசாரித் தத்துவார்த்த சிந்தனைகளின் ஊடாகவும்செழுமை மிக்க கலாசாரம்,பாரம்பரியம்,இசை (Eastern Classical jrMusic)நாட்டியம்,கரணங்கள் (rituals)பிரமிப்புடன் கூடியதும் ஆடம்பரமானதும் ஆரவாரம் மிகுந்துமான இந்திய சினிமா என்பவற்றின் ஊடாகவும் இந்தியாவின் உளவியல் மேலாதிக்கம் முழு இலங்கையிலும் ஓங்கத் தொடங்கிற்று. அது இந்திய விஸ்தரிப்புவாத செல்நெறிக்கு மிகுந்த வாய்ப்பான நிலைமைகளை ஏற்படுத்திற்று. அத்துடன் இலங்கை வாழ் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஆரம்ப காலங்களில் கருத்தியல் ரீதியாக இந்தியாவை தாய் நாடென்றும் இலங்கையை சேய் நாடு என்றும் அழைக்கும் வழமைக்கு உட்பட்டிருந்தனர். மட்டுமன்றி திராவிடக் முன்னேற்றக் கழகங்களின் மொழி ரீதியானதும் அரசியல் ரீதியானதுமான ஒரு கவர்ச்சி நிலையும் இங்கு செல்வாக்குச் செலுத்தியது.

மேலும்,சுதந்திர கால அரசியலில் இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தியாவின் உளவியல் வகிபாகம் மிக உன்னதமான நிலையில் இருந்தது. இந்தியாவின் சுதந்திப் போராட்டமானது இலங்கையில் கருத்தியல் ரீதியாக மட்டுமன்றி ஒரு political fashion ஆகவும் தோற்றம் பெற்றிருந்ததை இங்கு அடக்கி வாசித்தல் அவசியமற்றதாகும். இது இலங்கையின் சுதந்திரத்துக்கான ஓர் ஆதர்சமான வழி முறையாக மட்டுமன்றி தலைமைத்துவப் பிரவேசத்துக்கான ஒரு படிமுறையாகவும் அப்போது இருந்தது.

மேற்படி காரணங்களினால் பிரதானமாகவும் மற்றும் ஏனைய சில பொதுவான காரணங்களினாலும் அரசியல் மற்றும் இனத்துவ பேதங்களுக்கு அப்பால் இந்தியா ஒரு முன்னுதாரணமாகவே இலங்கையர்களால் பார்க்கப்பட்டது. அதனால் டி.எஸ். சேனநாயக்கா முதல் பொன்னம்பலம் சகோதரர்கள்; வரையான எல்லோரிடமும் கட்சி அரசியல் பேதமின்றி இந்தப் போக்கு வளர்ந்து வந்தது.

1950 களில் பண்டாரநாக்காவின் அரசியல் அதிகாரக் காலம் இதற்கு மேலும் உரம் சேர்த்தது எனலாம். இதற்கு அவரின் மாற்றுக் கோட்பாடு அரசியலும்,ஊன்றிய தேசிய வாதமும்,அழுத்தமான வெளிநாட்டுக் கொள்கையும் மேலும் மேலும் வசதியாக அமைந்து விட்டது. அவரின் கொலையின் பின்னர் கூட ஸ்ரீமா அம்மையாரின் காலம் இந்தியாவுடனான நட்புதலுக்கு பெரிதும் வழிவிட்டது. இந்தியாவின் நேரடிப் பகையாளியான சீனாவின் அத்தியந்த நட்புதல் இருந்தபோதிலும் கூட இந்திய விஸ்தரிப்பு வாதமானது கருத்தியல் ரீதியான ஓர் ஆச்சரியமான ராஜதந்திர உடன்பாட்டுடன் வளர்ச்சியடைய ஸ்ரீமாவின் சாணக்கியம் மிகுந்த இக்கால கட்டம் பெரிதும் உதவிற்று. அதனால்தான் கச்சதீவானது இலங்கைக்கு மனமுவந்து உரிமையாக்கப்பட்டது.

வலதுசாரி அரசியலின் கடுங்கோட்பாட்டாளராகக் கருதப்பட்ட ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலம் கடந்து போனதாகக் கருதப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைக்கு 1977இன் பின்னர் இலங்கையில் புது இரத்தம் பாய்ச்சினார். தனது காலத்தின் ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் உலகு திறந்த பொருளாதாரக் கோட்பாட்டுடன் பயணிக்க இருப்பதை ஜே.ஆர் தன் விவேகத்தினால் முன் கூட்டியே கணித்துக் கொண்டார். அதனால்,இலங்கையின் திறந்த பொருளாதார முறைமையையும் அமெரிக்க சார்புப் போக்கையும் இவர் மிக வெளிப்படையாகக் கொண்டிருந்தார். அத்துடன் பண்டாரநாக்கா குடுமபத்துக்கான எதிர்வினையாகவோ என்னவோ இந்தியாவுடனான ஒரு வலுக்கட்டாயமான முரண்பாடு ஜே.ஆருக்கு ஏற்பட்டு விட்டது. மட்டுமன்றி,திருகோணமலை தொடர்பில் அமெரிக்காவின் நலன்களுக்கு ஜே.ஆர் உடன்பாடாகத் தொழிற்பட்டமையானது இந்தியாவின் வெந்த புண்ணில் புளிவிட்ட சம்பவமாகவே இருந்தது.

எனினும் சர்வதேச பொருளியல் செல்நெறியை பத்து ஆண்டுகள் முன்னதாகவே தீர்க்க தரிசனத்துடன் கணிப்பீடு செய்ய முடிந்திருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் புவிசர் அரசியல் எனும் கோட்பாட்டின் தெற்காசியப் பரிமாணத்தையும் அது பிரசவித்த இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் புவியில்சார் பாதுகாப்பு வெட்டு முகத்தையும் குறைத்து மதிப்பீடு செய்யும் அளவுக்கே புரிந்துகொள்ள முடிந்திருந்தது. அல்லது அவரின் உலகளாவிய அரசியல் சார்பு நிலை அதற்கு இடந்தரவில்லை.

அவரின் அரசியலமைப்பு சட்டம் சார்ந்ததும் தேர்தல் கட்டமைப்பு சார்ந்ததும் பேரினவாதத்தின் மேலாதிக்கம் சார்ந்ததுமான அரசியல் நகர்வுகள் இந்த நாட்டிலும் மற்றும் பிராந்தியத்திலும் இந்திய விஸ்தரிப்புவாதம் அவர்மீது கோபாவேஷம் கொள்ளுமளவுக்கு இட்டுச் சென்று விட்டது. அந்தக் கோபாவேஷம் 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்துடன் துளிர் விட்டு 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்துடன் விருட்சமாக வளர்ந்துவிட்ட இலங்கையின் இனப்பிரச்சினையானது ஒரு வன்முறை சார்ந்த பரிமாணத்தைப் பெற தூண்டு கோலாயிற்று. இது ஏற்படுத்திய பின் விளைவுகளே இன்றைய நமது சமகால அரசியல் நகர்வின் பாடத்திட்டமாக மாறிவிட்டது.

குறைந்தது அன்று வயதில் இளைஞனாகவும் அரசியலில் அனுபவம் மிகக் குறைந்தவராகவும் காணப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப் புரிந்து கொண்ட அளவுக்குத்தானும் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் இதன் பாரத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.  அஷ்ரஃப் அடிக்கடி கூறுவார் “the organic question of Sri Lanka is anchored in Tamil Nadu politics-  இலங்கையின் உள்ளகப் பிரச்சினையானது தமிழ் நாட்டு அரசியலின் மீது (நங்கூரமிடப்பட்டுப்) பிணைக்கப்பட்டுள்ளதுஎன்று. இந்த அடிப்படை அம்சத்தில்  ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் புரிந்து கொள்ளாமை – அல்லது ஐரோப்பிய மேலாதிக்கமானது கேள்வி பார்வையற்று இந்தியாவின் எதிர்ப்பைத் தகர்த்து எறிந்து விடும் என்ற அவரின் அதீத கற்பனாவாதம் இலங்கையை தீர்க்கப்படாத புற்று நோயாளியாக்கிற்று. 

இத்தியாதி காரணங்களால் இலங்கையில் முளைவிட்ட இனத்துவ அடக்கு முறைக்கான எதிர்க் கலகங்களை நெறிப்படுத்தி ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு தேவை இந்திய உப கண்டத்துக்கு அவசியப்பட்டது. அதனால் இலங்கை அரசுக்கு மீளாத் தலையிடியாக இனப்பிரச்சினை உருவம் கொள்வதற்கு இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவத் தயார் நிலையில் இருந்தது. அதனால் இலங்கை இனப்பிரச்சினையின் மூக்கணாங்கயிறு இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கரங்களிலே வாய்ப்பாக வந்து விழுந்தது.  

1983ஆம் ஆண்டின் பின்னர் தமிழ்த் தேசியவாத உதிரி இராணுவ அமைப்புக்கள் வெளிப்படையாகவே உலாவத் தொடங்கின. ஆரம்ப கால புதிய புலிகள் முதற் கொண்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வரை பல்வேறு உள் முரண்பாடுடைய ஆனால் ஈழத்தை இலக்காகக் கொண்ட அமைப்புக்கள் இருந்தாலும் கூட இவை எல்லா வற்றினதும் ரிஷி மூலமாகவும் சம்பத்துக்களின் பெட்டகமாகவும் இலங்கிய பெருமை ஆரம்பத்தில் இந்தியாவையே சாரும்.

இதனால்தான் வெற்றியின் இலக்கைத் தொட்டுவிட்ட இலங்கைப் படையினரின் 1987இல் முன்னெடுத்த Operation Liberation எனும் தாக்குதலானது கடைசி நேரத்தில் இந்தியா மேற் கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் செல்லாக் காசாகிப் போய் விட்டது. இந்தியா தொடர்பான மேற்கு நாடுகளின் கையாலாகாத் தனத்தையும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் பாரத்தையும் அந்த சந்தர்ப்பத்தில்தான் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால் சம்பூரணமான பிரக்ஞைபூர்வமாக  உணர்ந்துகொள்ள முடிந்தது. அதன் பின்னர் இந்தியாவின் சுண்டு விரலின் பக்கமெல்லாம் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தங்கு தடையின்றி தலைசாய்க்க வேண்டி வந்து விட்டது.

ஆனால் தன்னுடைய தலையில் பலாத்காரமாகக் கொதித்துக் கொண்டிருந்த நெருப்புச் சட்டியை ரஜீவ் காந்தியின் தலை மீது ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் சகுனி மூளை எவ்வித நெருக்கடிகளுக்கும் உள்ளாகாமல் இராஜ தந்திரமாக இறக்கி வைத்து விட்டதுஎன்ற அப்போதைய இந்தியா ருடேயின் விமர்சனம் நான்கே நான்கு ஆண்டுகளின் பின்னர் கைமேல் பலனான உண்மையாகிப் போய் விட்டது என்பது வேறு கதை.

இதனால் தாம் கடாக் குட்டிகள்எனக்கருதி வளர்த்த  தம்முடைய செல்லப் பிராணிகளை நோக்கி தங்களுடைய இலக்கு திரும்ப வேண்டிய ஓர் அரசியல் தலைவிதி 1991 முதல் 2009 முடியவுள்ள பதினெட்டு ஆண்டுகளாக இந்தியாவுக்கு ஏற்பட்டு விட்டது. தீக்சித் போன்ற இந்தியாவின்  பாதுகாப்பு மற்றும் கொள்கை வகுப்பு விற்பன்னர்கள் தங்களுடைய எல்லா வேலைகளையும் ஒத்திப்போட்டு விட்டு இதனுடன் மினக்கெட வேண்டியிருந்தது.

இலங்கை ஐரோப்பியர்களினதும் மற்றும் தனது நேரடி எதிரிகளான பாக்கிஸ்தான் மற்றும் சீனா என்பனவற்றினதும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதும் அது தனது சுண்டு விரலுக்கு கௌரவமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுமே இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் பரிபூரண விருப்பம் ஆகும். இதற்கான ஒரு அரசியல் பொறியமைப்பு இலங்கையில் நீடித்திருக்கவேண்டும் என்பதே இந்தி விஸ்தரிப்புவாதக் கோட்பாட்டாளர்களின் நிரந்தரமான விருப்பமாகும்.

மட்டுமன்றி போராளிக் குழுக்கள் கூட அவர்களின் விடுதலைப் போராட்டம் என்பது அவர்கள் அளவில் மிகவும் ஸீரியஸ் ஆக இருந்தாலும்கூட இந்திய விஸ்தரிப்பு வாதத்தைப் பொறுத்த அளவில் அவர்கள் வெறும் சதுரங்கக் காய்களாகவே பார்க்கப்பட்டனர். அதற்கு நல்ல உதாரணம் குறிப்பாக 2002 முதல் 2009 வரை இலங்கை தொடர்பாக இந்தியா வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கொண்டிருந்த நிலைப்பாடுகளாகும்.

இலங்கை அரசு மற்றும் ஆயுதம் தரித்த ஈழப் போராளிகள் ஆகிய இந்த இரண்டு தரப்பாரின் கொதி நிலையையும் தனது பிராந்திய வல்லாதிக்கத்தின் இருப்புக்கான சாணக்கிய வழி முறையாகவே அவர்கள் பார்த்தனர். இலங்கை அரசை ஒரு தட்டிலும்  போராளிக் குழுக்களை மறு தட்டிலும் போட்டு எந்தத் தட்டும் கதித்து விடாமல் சம நிலையாகப் பார்த்துக் கொள்ளும் இந்த நயவஞ்சகமான அணுகு முறையை நீண்ட நாட்களுக்குக் கடைப்பிடிக்கலாம் என்ற எண்ணம்தான் அப்பிரச்சினை தொடர்பான இந்தியாவின் தப்புக் கணக்காகும். இன்று மனித உரிமை தொடர்பான சர்வதேசக் குற்றச் சாட்டுக்களில் இந்தியா இலங்கைக்கு எதிராக எடுத்த ஜெனீவா மாநாட்டு நிலைப்பாடுகளில் ஈழம் சார்புவாதிகள் அது ராஜதந்திர ரீதியாக மறைமுகமாக இலங்கைக்கு இந்தியா செய்த உபகாரமாகவே விளங்கிக்கொண்டனர். ஆகஇந்தியாவோ கிட்டத்தட்ட இந்த இரு தரப்பாரிடமும் தோல்வி கண்ட காட்சியைத்தான் இன்று திரையிட்டுக் கொண்டிருக்கின்றது.

in-02பிரதான ஈழ விடுதலை ஆயுதக் குழுவான எல்.ரி.ரி. இ முன்னர் குறிப்பிட்டதுபோல 1987 முதலே இந்தியாவிடம்  நான் அவனில்லைஎனும் போக்கையே கடைப்பிடிக்கத் தொடங்கிற்று. மட்டுமன்றி சர்வதேசத்தில் மிகக் காத்திரமாக கொண்டு செல்லப்பட்ட விடுதலை இறையியல்(Liberation Theology) (என்னும் கோட்பாட்டின் ஊடான ஒரு நெடும் பயணத்தில் அது அந்தரங்கமாக தன்னுடைய கால்களைப் பதிக்ககத் தொடங்கிற்று. ஏனெனில் அன்று சர்வதேசம் எங்கிலும் பரந்து விரிந்த ஆயுதம் தரித்த போராளிகள் எல்லோருமே இடதுசாரி அரசியல் போக்கில் சென்று கொண்டிருக்க ஈழத்தின் பிரபலமான இந்த ஆயுதக் குழு மட்டும் வித்தியாமாகச் சிந்தித்து அண்மையிருந்த அடைக்கலத்தை உதறித் தள்ளிவிட்டு சமகால உலகின் புதியதாக முளைவிட்டிருந்த செல்நெறியை நாடி பிடித்து அறிந்து இடதுசாரி அரசியல் பாதையை முதன்மைப்படுத்தாத ஓர்  அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தது.

இதனால் வலதுசாரிச் சிந்தனையாளர்களினதும் ஐரோப்பிய அரசுகளினதும் கடைக் கண் பார்வை இதற்குக் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கிற்று. அது மட்டுமன்றி சர்வதேசம் எங்கும் தெளிவான வலையமைப்புடன் கூடியதாகத் தொழிற்பட்ட விடுதலை இறையியலாளர்களும் கறுப்பு இறையியலாளர்களும் (black theologists)  இவர்கள் மீது கரிசனை காட்டத் தொடங்கினர். அத்தோடு சம காலத்திலேயே அரசு மற்றும் போராளிகள் ஆகிய இரு தரப்பாருக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கி சில நாட்களின் பின்னர் இரு தரப்பாரையுமே கோணங்கிகளாக வருணித்த இன்னுமொரு சர்வதேச சகுனி நாட்டினரும் தங்களின் பாட்டன் நாட்டினூடாக மீண்டும் அவர்களுக்கு உதவத் தொடங்கினர். அந்த சகுனி நாட்டைத் திருப்திப்படுத்துவான் வேண்டி சில உள்ளக சுத்திகரிப்பு நடவடிக்கைளில் ஈடுபடவும் தவிர்க்க முடியாமல் அவர்களால் நேர்ந்தமை இலங்கையின் உள்ளகப் பிரச்சினையில் மற்றுமொரு சோகமாக போய்விட்டது.

பிரதான போராளிக் குழுவின் இந்த தந்திரோபாய வெளிப் பாய்ச்சல்களினால்,இந்திய விஸ்தரிப்பு வாதம் இப்போராளிக் குழுவை கருவறுக்கும் எண்ணத்துடன் பார்க்கத் தொடங்கிற்று என்பது வெளிப்படை. ஆனால் இவர்களும் கூட தங்களின் கை முஷ்டியின் அழிதிறனின் அளவைத் மதிப்பீடு செய்து கொள்ளத் தெரியாமல் சில வேளை சிறுபிள்ளைத் தனமாக அல்லது கேட்பார் புத்தி கேட்டுசெய்த எலி அறுக்கும-; தூக்காதுநடவடிக்கைகளினால் இந்தியாவை மட்டுமன்றி சகல தார்மீகச் சிந்தனையாளர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டி வந்தமையே அவர்களின் அழிவிற்குக் கட்டியம் கூறிற்று என்பதும் மெய்ப்படஅறிய வேண்டியதாகும்.

அதேவேளை,ஆயுத தாரிகளான ஈழ விடுதலை அமைப்புக்கள் பெரும்பாலும் கல்வியறிவற்ற உணர்ச்சிப் பிண்டங்களின் கோட்டையாக இருந்ததாக யாரும் தப்புக் கணக்குப்போடத் தேவையில்லை. சிலகாலங்களில் இந்திய விஸ்தரிப்பு வாதம் அவ்வாறு தப்புக் கணக்குப் போட்டதும் உண்டு. தலைமைப் போராளிகளில் அனேகர் புலமை மிக்க கல்வியாளர்களாகவோ அல்லது மதி நுட்பம் சான்றவர்களால் வழி நடாத்தப் பட்டவர்களாவோதான் இருந்துள்ளனர். தாங்கள் இந்தியாவின் தேசிய நலனுக்குத் துணைபோனாலேயன்றி தங்கள் தலை மீது சுமந்துள்ள போராட்டம் என்னும் நெருப்பை அடுத்த தலைமுறைக்குக் கைமாற்ற முடியாது என்று அவர்களில் உமா மகேஸ்வரன் மற்றும் பத்மநாபா போன்ற பெரும்பாலானவர்கள்; திடமாக நம்பினர்.அதனால் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் மூக்கணாங் கயிறு தத்தம் கழுத்துக்களில் சுருக்கிடப்பட்டுள்ளமையை பத்ம நாபா போன்ற அர்ப்பணிப்பு மிக்க நவீன இளம் தத்துவவாதிகளே கண்டுகொள்ளாமல் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தனர்.

அதே வேளை மேலே குறிப்பிட்டவாறு இலங்கை அரசு அமெரிக்காவின் பண்ணை ஆடுகளாக அல்லாது தனது சுண்டு விரலின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டி ஏற்படும் என்ற கணிப்புடன் எல்லா வகையான ஆயுதக் குழுக்களுக்கும் தேவையான அனைத்து ஆயுத வினியோகம்பயிற்சி மற்றும் அவர்களின் அடிப்படை வசதிகள் முதலியவற்றை இந்திய விஸ்தரிப்பு வாதம் ஆரம்ப காலங்களில் தாராளமாக வழங்கியபோதும் இந்த இரு தரப்பாருமே ஒருவர் தயவில் ஒருவர் தங்கி வாழும் நிலையை உணர்ந்து நிலைமை சிலவேளை கட்டுக்கடங்காமல் சென்று விடாது பெரிதும் அடக்கி வாசித்தனர்.

ஆனால்,பிற்காலங்களில் தங்களில் கட்டுப்பாட்டை விட்டு முழுக்க முழுக்க ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றோரைக் கருவறுப்பதில் இந்திய விஸ்தரிப்புவாதம் பின்னிற்கவே இல்லை. அன்று இந்திய விஸ்தரிப்பு வாதத்துடன் எழுந்த முரண்பாடுதான் தமிழ் பேசும் இனக் குழுமத்தின் ஒட்டுமொத்த சோகமாக இன்று முடிந்துள்ளது.

குறிப்பாக இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலங்கை தொடர்பான மூலோபாயம் பிரதான போராளிக் குழு; 1987 முதல்; முழுக்க முழுக்க ஐயம்in-03 கொள்ள ஆரம்பித்து விட்டனது. திணிக்கப்பட்ட சமாதானம்என வர்ணிக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான நாள் முதல் அவநம்பிக்கை கொள்ளும் இப்போக்கானது விடுதலைப் புலிகளிடம்  மட்டுமல்லாது தமிழ்ப் பொது சனத்திடமும் புத்திஜீவிகளிடமும் ஏற்படத் தொடங்கிற்று. இதனால்தான் அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பேராசிரியர் சிவத்தம்பி இந்தக் கூட்டத்தில் றோ றோவாக ஆட்கள் இருக்கிறார்கள் என்று நையாண்டியாகக் குறிப்பிட்டிருந்தார். இங்கு அவர் பாவித்த றோ என்ற பதம் கேட்போர் கூடத்தில் வரிசை வரிசையாகஎன்பதை மட்டும் குறிக்காது வேறு ஒரு காத்திரமானதும் மறைமுகமானதுமான அர்த்தத்தையும் சேர்த்துக் கொண்டிருந்ததாக அதில் கலந்து கொண்டோர் பேசிக் கொண்டனர்.

இன்றைய இலங்கையின் சமகால அரசு பொது எதிரியை இனங்கண்டு அழிப்பதில் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் பூரண ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தமை வெளிப்படையானதே. குறிப்பாக 2005ஆம் ஆண்டிலிருந்து இந்த முயற்சி வேறொரு, ஆனால் உறுதியானதும் கடுங்கோட்பாடுள்ளதுமான  பாதையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிற்று. மாவிலாற்றில் ஒரு வகையான சோக வரலாற்றுடன் தொடங்கிய பயணம் முள்ளி வாய்க்காலில் பிற பல வரலாற்று சோகங்களுடன் முடிவுக்கு வந்தது.

இவ்விடத்தில் கூட இந்தியத் தரப்பாரும் போராளித் தரப்பாரும் தாங்கள் இருபாலாலாரும் ஒரு தோல்வியின் ஒற்றை முனையை நோக்கி வழி நடாத்தப் படுகின்றோம் என்பதை உணராமல் அல்லது ஓரு வகையான மூர்க்க நிலைமையில் தங்கள் தங்கள் நபழ வின் அடிப்படையில் தத்தம் பக்க காய்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். இதனை அதன் ஆரம்பத்திலிருந்து நோக்குவதே பொருத்தமானதாகும்.

மேற்கத்திய அரசுகள் 2005களில் நிறைவேற்று அதிகாரத்துக்கான தேர்வில் புதியதொரு மாற்றத்தை எதிர்பார்த்து காய்களை நகர்த்திக் கொண்டிருந்தன. உள் நாட்டிலும் பேரின வாதத்தை சகிக்காத சக்திகள் மேலும் இரத்தம் சிந்த தேவையற்ற ஒரு சமாதானத்தை நோக்கி தன்னுடைய வேலைத் திட்டங்களை உறுதியாகவும் காத்திரமாகவும் முன்னெடுத்தன. அக்காலத்தில் மேற்குலகத்தின் ஆசீர்வாதத்துடன் இயங்கிய பிரதான போராளிக் குழுவினர் அதே மேற்குலகின் முடிவுக்கு மறுதலையான ஒரு தீர்மானத்துக்கு வந்தனர். அதனால் பின் வந்த நெருக்கடி நிறைந்த காலக் கட்டங்களில் தங்களின் சகல அனுகூலங்களையும் நிராகரித்து அதே மேற்குலகின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள அத்தனை இழப்புக்களுக்கும் நிபந்தனைகளுக்கும் சம்மதித்தும் அது சாத்தியமற்றுப் போய்விட்டது.

ஆக இரண்டு எதிர்த்தரப்பாரும் ஒரே பதிலைத்தரக் கூடிய இவ்விரு கணக்குகளைப் போடுவதற்கான சந்தர்ப்பத்தை சமாதானத்துக்கு எதிரான தரப்பினர் பக்குவமாகப் பயன்படுத்தி மேற்படி இரு பகுதியினரின் தலைகளிலும் மிளகாய் அரைத்து விட்டனர்.

முடிவுரை:

எதிரியை அழிப்பது என்ற அவலை நினைத்து உரலை இடித்த கதையான ஒரு நிலைமை இந்திய விஸ்திப்பு வாதத்தின் தங்க மூளைகளுக்கு தற்போது ஏற்பட்டுவிட்டது. போராளிக் குழுக்களிடம் நியாயம் இல்லை என்ற எடுகோளுடன் இவ்விடயத்தைப் பார்த்தாலும் கூட இந்தியா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதாக நினைத்து தனது பிடிகளை ஒவ்வொன்றாகக் கை நழுவ விட்டது என்பதே இந்தக் கணக்கின் விடையாகத் தெரிகின்றது.

ஆக இந்திய விஸ்தரிப்பு வாதம் தன்னுடைய ஜன்னல்களை ஒவ்வொன்றாக மூடிக்கொள்வதன் மூலமாகத்தான் அதன் ஐக்கியப்பட்ட ஒற்றை இந்தியா என்ற கோட்பாட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நிலை இன்றைய யதார்த்தமாகி விட்டது. இலங்கை தெற்காசிய மற்றும் கிழக்காசிய மட்டத்தில் தற்போது நகர்த்தும் காய்கள் அவ்வளவு சாமானியமாக நிராகரிக்கத் தக்கதல்ல. சீனாவும் பாக்கிஸ்தானும் இந்திய விஸ்திப்பு வாதத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு பிராந்திய வல்லாதிக்கக் கோட்பாட்டையும் வலையைமைப்பையும்  ஏற்கனவே நோக்கி நகரத் தொடங்கிவிட்டன.

வேறு வழியின்றி இலங்கையின் கடுங்கோட்பாட்டாளர்கள் இந்தியா தொடர்பான கருத்தியல் மயக்க நிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். பொருளாதார வல்லரசு என்ற சீனாவின் கனவு தவிடு பொடியாகிப் போய்விடக் கூடிய நிலையில் இன்று இல்லை என்பதும்  வெளிப்படை. இலங்கை அரசு தன் சர்வதேச முன்னெடுப்புக்களில் இருந்து சில வேளை தோல்வி கண்டாலும் அது கூட இந்தியாவுக்கு சாதமமாக அமையப் போவதில்லை. இன்று அடக்கி வாசிக்கப்படும் அகன்ற தமிழ் வல்லரசு என்ற கனவு நிலை முகிழ்க்க வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம் இந்தியாவில் தலை தூக்காமல் இருக்க இந்தியா நிறைய நேர்த்திக் கடன்களைச் செய்ய வேண்டி வரும். 

இன்று தன்னுடைய ஆதிக்க எல்லைக் கனவின் கைக் குழந்தையான இலங்கையின் 13வது அரசியலமைப்புத் திருத்தம்,விளைவுகளைப் பற்றி எப்போதுமே சிந்தித்திருக்காத இன்றைய இலங்கை அரசிடம் வகையாக மாட்டிக் கொண்டு விடவில்லை என்பதை இந்திய விஸ்தரிப்பு வாதத்தால் எவ்வாறு நிரூபிக்க முடியும்?

சிலவேளை அடுத்த தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியமைக்குமானால் இந்துத்துவ ஞானஸ்தானத்துடன் அது ஐரோப்பிய முகாம்களுடன் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் தாராளமாகக் கரிசனை காட்டத் தொடங்கும். இதனால் பிராந்திய ரீதியாகவும் உள்நாட்டிலும் பாரிய நெருக்கடிகளை இந்தியா சந்திக்க நேரிடும். இந்தக் கட்டத்தில் அகன்ற தமிழ் அரசுக் கனவு வேறு வேறு உள் மற்றும் வெளி நாட்டு நண்பர்களின் ஆதரவைப் பெறும் வாய்ப்புகள் ஏற்படலாம்.ஆக ஒட்டுமொத்தமான ஒரு நெருக்கடி நிலைக்குள் இந்தியா விஸ்தரிப்புவாதம் எதிர்காலத்தில் பிரவேசிக்க இருப்பதை மிகத் தெளிவாக உணர முடிகின்றது..

000000

 

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment