Home » இதழ் 13 » *சாதிய சமத்துவம் – ஆதிக்க சாதிகளின் அறியாமையா? தந்திரமா?-மீராபாரதி

 

*சாதிய சமத்துவம் – ஆதிக்க சாதிகளின் அறியாமையா? தந்திரமா?-மீராபாரதி

 

2

சில கேள்விகளும் சந்தேகங்களும்....

எழுநா வெளியீட்டாளர்கள் புதிய பதிப்பக முயற்சி ஒன்றை மிகவும் திட்டமிட்ட முறையில் ஆரம்பித்திருக்கின்றார்கள். இதனுடாக குறிப்பாக இலங்கை தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சனைகளையும் அது தொடர்பாக அத் தேசத்தின் சிந்தனையாளர்களினதும் துறைசார் புலமைத்துவ எழுத்தாளர்களினதும் பன்முக சிந்தனைகளைத் தொகுத்து வெளியீடுகின்றார்கள். அந்தவகையில் சாதியம் தொடர்பாக பரம்சோதி தங்கவேல் எழுதிய “யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்நூல் முக்கியமானது. இந்த நூல் இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக குடாநாட்டிலுள்ள ஒரு பிரதேசத்தின் இன்னும் சுருக்கின் ஒரு கிராமத்தின் சாதிய சமூகங்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். இந்த ஆய்வில் பொதுமைப்படுத்தல்களும் குறைபாடுகளும் போதாமையும் இருக்கலாம். இருப்பினும் இது சாதிய சமூகங்கள் தொடர்பாக தரவுகளுடன் ஆதாரபூர்வமான நல்லதொரு ஆய்வாகும். இதுபோன்ற ஆய்வுகளை வடக்கு கிழக்கு பிரசேதங்களில் பரந்தளவில் மேற்கொள்ளும் பொழுது ஈழத்து தமிழ் சமூகங்கள் குறிப்பாக சாதிய சமூகங்கள் தொடர்பான ஒரு விரிவானதொரு சித்திரம் ஆதாரங்கள் மற்றும் தரவுகளுடன் கிடைக்கலாம். ஆகவே இந்த நூல் ஆழமாகவும் விரிவாகவும் ஆராயப்படவும் விமர்சிக்கப்படவும் பயன்படுத்தப்படவும் வேண்டிய ஒன்று என்றால் மிகையல்ல.

இக் கட்டுரையானது சாதியம் தொடர்பானதாக இருந்தபோதும் மேற்குறிப்பிட்ட நூலை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக எழுநா சஞ்சிகையில் சசீவன் எழுதிய “வெள்ளாளமயமாதல் ஈழத்தில் சாதியம்” என்ற கட்டுரை தொடர்பான ஒரு விமர்சனப் பதிவாகும். சசீவன் உடனான (மீள்) அறிமுகம் உறவு உரையாடல் என்பன சாதியம் தொடர்பாக தேசம் நெட்டில் 2008ம் ஆண்டு வெளிவந்த “சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை நம் அடையாளங்களுக்கு விடைகொடுப்பதே” என்ற எனது கட்டுரை ஒன்றுடனையே ஆரம்பமானது. இப்பொழுது எழுநாவில் வெளிவந்த அவரது கட்டுரையுடன் மேடு பள்ளங்களாகத் தொடர்கின்றது.

சசீவன் மேற்குறிப்பிட்ட தனது கட்டுரையில் எவ்வாறு தலித் அடையாளத்தை மீள நிலைநிறுத்துவதனுடாகவும் அவர்களின் கலாசார, பண்பாட்டு, வரலாற்று அம்சங்களை பாதுகாப்பதனுடாகவும் அவர்களின் விடுதலை சாத்தியமானது எனக் குறிப்பிடுகின்றார். மேலும் தலித் சமூகங்களது தனித்துவத்தை மீட்டெடுப்பதனுடாக தலித் அரசியலை செய்ய முடியும் என்கின்றார். இதற்கு ஆதாரமாக “பின் காலனித்துவம் மற்றும் பெண்ணியப் பிரதிகள் தத்தமது அரசியலில் மேற்கண்ட விதத்தில் இயக்கியிருப்பதைக் காணலாம்” என ஆதாரம் காட்டுகின்றார். மேலும் “எட்வேர்ட் சைட் இன் ஒரியன்டலிசம் கருத்தியலில் இருந்து “சபல்ரன் குழுவின்” பிரதிகள் வரை “காலனிய நீக்கம்” செய்து கொள்வது தொடர்பான ஏராளமான பிரதிகள் உற்பத்தி செய்துள்ளதை நாம் அறிவோம்” என தரவுகளை முன்வைக்கின்றார்.  இதனடிப்படையில் “இதற்கு சமாந்தரமாகவே ஈழத்து தலித் சமூகங்கள் தொடர்பான விடயங்களைப் பார்க்கவேண்டும்” என முன்மொழிகின்றார் சசீவன்.

எட்வேர்ட் சைட் மற்றும் சபல்ரன் குழு போன்றவர்களின் பிரதிகளை நான் ஆழமாகவோ விரிவாகவோ வாசித்ததில்லை. எட்வேர்ட் சைட்டின் எழுத்துக்கள் தொடர்பான மேலோட்டமான அறிதலும் புரிதலுமே என்னுடையது. அதேவேளை இவர்களது கூற்றுகள் அவர்கள் சார்ந்த சமூக, அரசியல், சூழல், பிரசேதங்கள் மற்றும் முரண்பாடுகளையும் அக புற அடக்குமுறைகளையும் கருத்தில் கொண்டே பார்க்கவேண்டும். அதற்குமாறாக அவர்களது கருத்துக்களை அப்படியே நமக்கு இயந்திரத்தனமாகப் பொருத்துவது இன்னொருவகையான காலனித்துவப் பண்பேயாகும். நமது சமூகங்கள் காலனியத்துவத்தின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் உட்பட்டு அவர்களது சிந்தனைகளைப் உள்வாங்கி கடந்த ஐந்நூறு ஆண்டுகளாக வளர்ந்தவர்கள் என்றடிப்படையில் நாம் நம்மை “காலனிய நீக்கம்” செய்யவேண்டும் என்பதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. ஆனால் சசீவன் அதனை சாதிய விடுதலைக்கு தவறான அடிப்படைகளில் பொருத்துகின்றபோதுதான் முரண்பாடு எழுகின்றது. ஏனெனில் ஒருவர் மீதான சாதிய அடையாளம் என்பது ஆதிக்க சாதிகளால் அவர் மீது திணிக்கப்பட்ட ஒருவகையான சாதிய காலனியாதிக்கமே. ஆகவே சாதிய அடையாளத்தைப் பேணுவது என்பது ஆதிக்க சாதிய காலனித்துவத்தைப் பேணுவதேயாகும். இதனால்தான் தலித் அல்லது சாதிய அடையாளத்தையும் சாதிய சமத்துவத்தையும் வலியுறுத்துவது ஆதிக்க சாதிகளின் தந்திரமா அல்லது அறியாமையா என சந்தேகிக்கப்படவேண்டி உள்ளது.

மேற்குறிப்பிட்ட அடிப்படைகளில் அடையாள அரசியலை இயந்திரத்தனமாக அனைத்துக்கும் பொருத்துவதை முதலில் தவிர்க்க வேண்டும். ஆகக் குறைந்தது அவ்வாறு செய்யும் பொழுது அதிக கவனமும் பொறுப்பும் இருக்கவேண்டும். நம் மீதான ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலைக்கான கோட்பாடுகளை உருவாக்கவேண்டும் என்கின்ற சசீவனின் நிலைப்பாட்டுடன் முரண்பாடுகள் இல்லை. ஏனெனில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மனிதர்கள் தாம் அதை அனுபவித்தவர்கள் உணர்ந்தவர்கள். புரிந்தவர்கள். மனிதர்கள் மீதான இவ்வாறான ஒடுக்குமுறைகள் பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது மனிதர்களின் இயற்கையான அடையாளங்கள் மற்றும் அவர்களது செயற்பாடுகள் என்பவற்றிக்கு எதிரானcaste மறுப்புகளையும் அதன் மீதான ஒடுக்குமுறைகளையும் குறிப்பிடலாம். உதாரணமாக பெண்கள் மற்றும் நிற, பால், பாலுறவு அடிப்படையிலான அடக்குமுறைகள். இங்கு பெண்களினதும் கருப்பர்களினதும் மற்றும் மனிதர்களினது ஆண்மைய சமூக கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்ட பல்வேறு பால், பாலுறவு அடையாளங்கள் என்பவை தாழ்ந்தவையாக கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன. இதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட மனித குழுமங்கள் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஒதுக்கலுக்கும் காலம் காலமாக உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கான சமூக அந்தஸ்து, கலாசாரம், பழக்கவழக்கங்கள் என்பன ஆதிக்க சக்திகளால் நிர்ணையிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராகப் பெண்களும் கருப்பர்களும் மற்றும் பல்வேறு பால் பாலுறவு அடையாளங்களைக் கொண்ட மனிதர்களும் காலம் காலமாகப் போராடுகின்றார்கள். அதேவேளை இவர்கள் தமது இயற்கையான அடையாளங்களையும் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். அவற்றுக்காகப் பெருமைப்படுகின்றனர். ஆகவே அதனை மீள நிலைநிறுத்தவும், மற்றும் சமூகத்தில் தாம் சமத்துவத்துடன் நடாத்தப்படுதவதற்காவும் சம வாய்ப்புகளுக்காகவும் போராடுகின்றார்கள்.

இரண்டாவது சமூகம், பிரதேசம், வரலாறு, வாழ்வியல் மற்றும் சிந்தனைகள் போன்றவற்றால் உருவான பண்பாடு, கலாசாரம், மொழி, இனம், மதம் போன்ற அடையாளங்கள். அதிகாரத்திலுள்ளவர்கள் இந்த அடையாளங்களையும் அவற்றுக்கான உரிமைகளையும் மறுப்பது இவர்கள் மீதான அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புகளுமாகும். இதற்கு சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசின் தமிழ் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறைகள், இன, கலாசார பண்பாட்டு அழிப்புகள் கொலைகள் மிகப் பொருத்தமான உதாரணமாகும். இதேபோல் இந்தியாவில் இந்தி, இந்து அடையாளங்கள் இல்லாத பிற அடையாளங்கள் மொழிகள் மற்றும் பண்பாடுகளுக்கு எதிரான அடக்குமுறைகள். யூதர்களுக்கு எதிரான நாசிகளின் இனஅழிப்பு. பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் அழிப்பும். முஸ்லிம்கள் மீதான ஏகாதிபத்தியங்களினதும் கிரிஸ்தவர்களினதும் மற்றும் இந்துக்களினதும் தமிழர்களினதும் வெறுப்பும் ஆதிக்கம். இதேபோல் முஸ்லிம்களின் அக முரண்பாடுகளும் மற்றும் பிற இனங்கள் மதங்கள் என்பவற்றுக்கு எதிரான எதிர்ப்புகள் எனப் பல உதாரணங்களைக் கூறலாம். இவை ஒவ்வொன்றுக்கும் பல ஆதாரங்களை வரலாற்றிலிருந்து காண்பிக்கலாம்.

ஒரு புறம் ஒரு மனிதர் தனது எந்த அடையாளத்தை வெளிப்படுத்துவது என்பது அவரது உரிமை. அது மறுக்கப்படும் பொழுது அதற்கு எதிராக குரல் கொடுப்பதும் போராடுவதும் தவிர்க்கப்பட முடியாதது. மறுபுறம் இவ்வாறான தம் அடையாளங்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் சமூகங்களின் குறிப்பிட்ட அடையாளம் விமர்சனத்திற்கு உரியதாக இருக்கலாம். உதாரணமாக தமிழர்களின் பொட்டு. முஸ்லிம் பெண்களின் பர்தா. சீக்கியர்களின் டேர்பன். மேலும் இந்த சமூகங்களுக்குள் அக அடக்குமுறைகளும் நிலவலாம். இதற்காக இந்த அடையாளங்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளையும் ஒதுக்கல்களையும் நியாயப்படுத்திவிடமுடியாது. ஒரு அடையாளம் தன்னையும் சக மனிதரையும் ஒடுக்காதவரை ஒதுக்காதவரை குறிப்பிட்ட அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு மனிதருக்கு உரிமை உள்ளது. இது அடிப்படை மனித உரிமை. ஆகவே இந்த உரிமைக்காப் போராடுவது நியாயமானதே.

மூன்றாவது அடக்குவதற்காகவும் சுரண்டுவதற்காகவும் மட்டும் உருவாக்கப்பட்டு மனிதர்களுக்கு இடையே தீண்டாமையை வளர்த்த சாதிய அடையாளங்கள். மனிதர்களிடம் குறிப்பாக தென்னாசிய சமூகங்களிடம் திணிக்கப்பட்ட இந்த சாதிய அடையாளங்களுக்கான காரணத்தை அறிவதற்கு முதலில் சாதிய கட்டமைப்பு தொடர்பாக புரிந்துகொள்ளவேண்டிய அடிப்படையான அம்சங்கள் சில உள்ளன. இதற்கு சாதியம்  தொடர்பான புலமைசார் வரலாற்று ஆதரங்களுடன் ஒரு ஆய்வாக முன்வைப்பதே ஆரோக்கியமானதும் பலமானதுமாகும். ஆனாலும் அது உடனடி சாத்தியமில்லாமையால் எனது புரிதல்களின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

குறிப்பிட்ட மனிதர்கள் எந்த சாதி என எந்த அடிப்படைகளில் பிரிக்கப்பட்டார்கள்? யார் பிரித்தார்கள்? என்பதை ஆய்வு செய்வதும் அறிவதும் அவசியமாகும். ஏனெனில் தொழில், அறிவு, வர்க்கம் அல்லது கலாசார பண்பாட்டு என பல்வேறு அம்சங்களின் அடிப்படைகளில் சாதிகள் பிரிக்கப்பட்டிருக்க சாத்தியமுள்ளதா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. ஆகவே இதுவும் ஆய்வுக்குரியது. இருப்பினும் வரலாற்றில் சாதிய சிந்தனை மற்றும் அதன் கட்டமைப்புகள் மற்றும் அதிகாரத்துவப்படிநிலைகள் என்பன தொடர்பாக ஆதிக்க சாதிகளே தீர்மானிப்பவையாக இருந்திருக்கின்றனர். பொதுவாக இந்தியாவில் பிராமண சாதியத்தாலும் அதனுடாக இலங்கையில் வெள்ளாள சாதியலும் தீர்மானிக்கப்பட்டன எனக் கருதலாம். இதற்கு ஆதி காலத்திலிருந்து இன்றுவரை ஆட்சியாளர்கள் மற்றும் மத நிறுவனங்கள் என்பவற்றின் பூரண ஆதரவு மட்டுமல்ல சட்டங்கள் சடங்குகள் மூலம் பங்களிப்பு கிடைத்து வருகின்றன..

இவ்வாறு சாதியடிப்படையில் பிரிக்கப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருவரும் எங்கே? எப்படி? வாழ்வது என அதாவது அவர்களது வாழ்வுமுறை, தொழில், கலாசாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் ஆதிக்க சாதிகளால் தீர்மானிக்கப்பட்டன. இவர்கள் என்ன உடைகளை எப்படி அணிவது என்பதை மட்டும் தீர்மானிப்பது மட்டுமல்ல தமது பெயர்களை தாமே தெரிவு செய்யும் உரிமை கூட இவர்களுக்கு இருக்கவில்லை. மாறாக ஆதிக்க சாதிகளே அதைக் கூடத் தீர்மானித்தன. அதாவது சாதிய அடக்குமுறை மோசமாக நிலவிய அந்தக் காலங்களில் அல்லது இன்று நிலவுகின்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற அடக்கப்பட்ட சாதிகளின் வாழ்நிலை, பண்பாடு, கலாசாரம் என்பன ஆதிக்க சாதிகளால் தீர்மானிக்கப்பட்டவையே. இவ்வாறான அடக்குமுறை அம்சங்களுடனான வாழ்வு பல்லாண்டுகள் தொடர்ந்தமையால் இதுவே அவர்களின் இயல்பான வாழ்வாகிப்போனது. ஆகவே இன்று காணப்படுகின்ற சாதிய சமூகங்களுக்குள் வேருண்றியிருக்கின்ற சாதிய அடையாளங்கள் மட்டுமல்ல குறிப்பிட்ட சமூகங்களின் தனி மனிதர்களின் அடையாளங்கள் கூட அவர்களுடையதா என்பது கேள்விகுறியானதும் விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உரியதுமாகும்.

மேற்குறிப்பிட்டதனடிப்படையில் சக பெண், நிற, பால் மற்றும் பாலுறவு அடக்குமுறைகள் போல அடக்கப்பட்ட சாதிகள் தமது சாதிய அடையாளத்தைப் பேணுவதற்காகப் போராடுவதல்ல அவர்களின் உண்மையான விடுதலைக்கான போராட்டம். ஏனெனில் இவ்வாறான சாதிய அடையாளத்தை வலியுறுத்தியும் உயர்த்தியும் போராடுவது அரசியல் வியாபாரிகளுக்கும் பாராளுமன்ற பதவிகளைப் பெற விரும்புகின்றவர்களுக்கும் மட்டுமல்ல ஆதிக்க சாதிகளுக்கும் சாதகமானதும் பயனுள்ளதாகவும் இருக்கலாம். ஆனால் சாதிய அடையாள அரசியலை வலியுறுத்துவது நிச்சயமாக அடக்கப்பட்டு சுரண்டப்பட்டு தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுகின்ற சாதிகளுக்குப் பயனுள்ளதல்ல. ஆகவே இவர்கள் தம் மீது ஆதிக்க சாதிகளால் திணிக்கப்பட்ட “தாழ்த்தப்பட்ட” சாதிய அடையாளத்தை தீர்மானிக்கின்ற சகல பண்பாடுகள், கலாசாரகள், பழக்கவழக்கங்கள், வாழும் சூழல், மட்டுமல்ல தமது பெயர் போன்ற அனைத்து அம்சங்களையும் கைவிட்டு அதிலிருந்து விடுதலையாகி புதியதை உருவாக்கும் போதே உண்மையான விடுதலை சாத்தியமாகும்.

ஒரு ஆண், பெண், வெள்ளை மற்றும் கருப்பு மனிதர்கள் அல்லது பல்வேறு பால், பாலுறவு அடையாளங்களைக் கொண்டவர்கள் தமது இயற்கையான அடையாளங்களை விட்டு விடுதலையாக முடியாது. ஆகவேதான் இவற்றால் அடக்கப்பட்டவர்கள் அந்த அடையாளத்தை மீள்வும் நிலைநிறுத்துவதற்காகவே போராடுகின்றனர். அதேவேளை தம் மீது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அடையாளங்களை இவர்கள் துறக்கவும் விரும்புகின்றனர். இதேபோல் தமிழர்கள், சிங்களவர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள், கிரிஸ்தவர்கள் போன்ற அடையாளங்களை ஒருவர் இன, மத அடிப்படையில் தன் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம். இவ்வாறு தெரிவு செய்தால்கூட சில பழைய அடையாளங்களைக் கடந்து புதிய அடையாளங்களை உள்வாங்குவதற்குப் பல ஆண்டுகள் என்ன தலைமுறைகள் கூட ஆகலாம்.

ஆனால் சாதிய அடையாளங்கள் மேற்குறிப்பிட்டவாறு தெரிவு செய்வதற்கு உரிய ஒன்றாக ஆதிக்க சாதிகளால் கட்டமைக்கப்படவில்லை. மாறாக நிர்ணையிக்கப்பட்டன. இதன்மூலம் ஆதிக்க சாதிகள் தமது அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைக்கவும் தமது நலன்களைப் பேணவும் உயர்வுச்சிக்கலில் ஊழன்றும் வாழவும் முடிகிறது. ஆனால் அடக்கப்பட்ட சாதிகள் அடிமைகளாக சுரண்டலுக்கும் தீண்டாமைக்கும் உட்பட்டு எந்தவிதமான அடிப்படை மனித நலன்களையும் உரிமைகளையும் அனுபவிக்காமல் இதுவரை வாழ்ந்து வருகின்றனர். சிலர் தாழ்வுச்சிக்கலில் ஊழல்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தும் பேணப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதைப் பார்ப்பதற்கு முதல் சசீவன் முன்வைக்கும் தீர்வு தொடர்பாக பார்ப்போம்.

புலிகளின் காலத்தில் ஏற்கனவே இருந்த அசமத்துவ சமூக அமைப்பு அந்தரத்தில் விடப்பட்டதாக சசீவன் குறிப்பிடுகின்றார். இக்காலத்தில் வெள்ளாளமயமாதல் நிகழ்ந்ததாகவும் கருதுகின்றார். இது ஒரு மேல்நிலையாக்களை நோக்கிய மாற்றம் அல்லது பயணம் என்கின்றார். அதாவது “தலித் சமூகங்களைப் பொறுத்தவரை அவர்கள் தமக்கேயான தனித்துவமான வழிபாட்டு முறைகளையும் வாழ்வுமுறைகளையும் தனித்துவமான கலை வெளிப்பாடுகளையும் கரைத்து வெளியேறி வெள்ளாளமயமாகினர்”(61) என்கின்றார். இங்கு வெள்ளாமயமாதல் என்பதனை “தலித் மக்களைப் பண்பாடற்றவர்களாகவும் தனித்துவமான வாழ்வு முறையற்றவர்களாகவும் நினைக்கும் போக்கே” என்கின்றார். மேலும் “தலித் சமூகங்கள் நிலம் சார்ந்தல்லாமல் தமது பண்பாடு சார்ந்து புலப் பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவே கருதவேண்டும்” எனக் குறிப்பிடும் இவர் அதற்கான தீர்வையும் முன்வைக்கின்றார். அதாவது “தலித் விடுதலை என்பது தலித் அடையாளத் துறப்பை மேற்கொள்வதல்ல. தலித் அடையாளப் பேணுகையுடன் தலித் பண்பாடு, தலித் வரலாறு, தலித்திய வாழ்வுமுறைகளுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதனுடாக சமத்துவமே தலித் விடுதலை” (61) என்கின்றார். அதாவது மற்றமையை ஏற்றுக்கொள்ளுதல் என்கின்றார். மாறாக மற்றமையைக் கரைத்துக் கொள்வது காலனித்துவமாகவே கருத வேண்டும் என்கின்றார். சசீவனின் மேற்குறிப்பிட்ட கருத்துக்களுடன் உடன்படமுடியவில்லை.

மேற்குறிப்பிட்ட அடிப்படைகளில் சசீவன் குறிப்பிடுகின்ற தலீத் பண்பாடு, வாழ்வுமுறை, வரலாறு என்பன ஏற்கனவே குறிப்பிட்டபடி காலகாலமாக ஆதிக்க சாதிகளால் தீர்மானிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டவையே. ஆகவே இவர் குறிப்பிடுகின்ற தலித் பண்பாடு வாழ்வுமுறை வரலாறு என்பன உண்மையிலையே சாதியால் அடக்கப்பட்ட மக்களுடையதல்ல. மாறாக ஆதிக்க சாதிகளால் தீர்மானிக்கப்பட்டவை. அதாவது அவர்களது சாதிய காலனித்துவ சிந்தனைக்கும் ஆதிக்கத்திற்கும் உட்பட்டவையே. ஆகவே முதலில் இது காலவரை பின்பற்றிய தமது சாதிய காலனித்துவ சிந்தனைகள் பழக்கவழக்கங்கள் வாழ்வுமுறை என்பவற்றிலிருந்து சாதியால் அடக்கப்பட்ட மனிதர்கள் மக்கள் விடுதலைபெறவேண்டும். ஆகவே இந்தியாவைப் போன்ற நாடுகளிலுள்ளவர்கள் தமது பிறப்பத்தாட்சிப் பத்திரம் போன்ற சட்டரீதியான பத்திரங்களில் தமது சாதிகளை குறிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சாதியை குறிக்காமல் விடுவது ஒரு இயக்கமாகவே உருவாக வேண்டும். இதுவே இவர்களுக்கு உண்மையான விடுதலையைப் பெற்றுக்கொடுக்கும்.

இதற்கு மாறாக இதுகால வரையான சாதிய அடிப்படையிலான பண்பாடு கலாசாரம் என்பவற்றை வலியுறுத்துவது என்பது சாதிய ஏற்றத்தாழ்வு வாழ்வுமுறைகளை வலியுறுத்துவதே என்றால் மிகையல்ல. இது சக சாதிகளை அடையாளங் காணவும் அதற்கமைய மனிதர்கள் தம்மையறியாமல் சக சாதிகளை உபசகரிக்கவும் திட்டமிட்ட அடிப்படையில் மனித உறவுகளை நிர்ணையிக்கவும் நிர்ப்பந்திக்கும். இங்கு மாற்றமையை ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஆதிக்க சாதிகளால் உருவாக்கப்பட்ட சாதிய படிநிலையை ஆக்க குறைந்தது அதன் அடையாளங்களை ஏற்றுக்கொள்வதேயாகும். இது ஆதிக்க சாதிகளின் சிந்தனைப் போக்குக்கு சாதகமான ஒரு அம்சமாகும். இந்த அடிப்படையில் இவ்வாறனதொரு முன்மொழிவு ஆதிக்க சாதி மனோபாவமாகும். இவ்வாறு குறிப்பிடுவதனால் சசீவன் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவானர் என்பதல்ல. இவரது நோக்கம் சாதிய விடுதலையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் தவறான அடிப்படைகளில் உரையாடும் பொழுது நல்ல நோக்கமும் ஆதிக்க சக்திகளின் கரங்களுக்கு சென்று அவர்களுக்கு நன்மையளிக்கலாம். இன்றைய ஈழப்போராட்டம் போல….

cast-01

இந்து, சைவ மற்றும் சிறு தெய்வ வழிபாடுகள் தென்னிந்திய மற்றும் ஈழத்து தமிழர்களிடம் பரந்து காணப்படுகின்ற சமய வழிபாட்டு முறைகளாகும். இதில் இந்து மதம் என்பது வட இந்திய மதமா அல்லது தென்னிந்தியர்களுக்கு உரியதா அல்லது கலவையா அல்லது முழு தென்னாசியப் பிராந்தியத்திற்கும் உரியதா என்பது ஆய்வுக்குரிய ஒரு விடயம். இதுபோலவே சைவம் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளும் எந்த மக்களுடையது என்பது ஆய்வுக்குரிய விடயம். நாம் பொதுவாக அறிந்த வரலாற்றின்படி தமிழர்களின் மதம் சிறு தெய்வ வழிபாடாக அல்லது சைவமத வழிபாடாக இருந்திருக்கவேண்டும். ஆனால் வட இந்திய இந்து மதத்தின் ஆக்கிரமிப்பால் பெரும்பாலானவர்கள் குறிப்பாக ஆதிக்க சாதி சமூகங்கள் அதனுடன் கலந்துவிட்டார்கள் எனலாம். அதேவேளை சாதியால் அடக்கப்பட்ட சமூகங்கள் இதனுடன் கலந்துவிடாமல் இருந்தன எனக் கொள்ளலாம். இந்தடிப்படையில் தமிழர்களின் பண்பாடு கலாசாரம் மற்றும் மதம் என்பன அடக்கப்பட்ட சாதிய சமூகங்களுக்குள் அமிழ்ந்திருக்கின்றன எனக் கூறலாம். இந்ததடிப்படைகளில் தமிழர்கள் உண்மையிலையே தமது அடையாளத்தை உயர்த்திப்பிடிப்பதற்கு சிறுதெய்வ ஆகக் குறைந்தது வைச மத வழிவாடுகளையே உயர்த்திப்பிடிக்கவேண்டும். அந்தவகையில் தம்மால் அடக்கப்பட்ட சாதிகளின் கடவுள்களையும் மதச் சடங்குகளையும் பின்பற்ற வேண்டிவரும். இதற்கு ஆதிக்க சாதி தமிழ் உணர்வராளர்கள் தயாராக இருப்பார்களா என்பது கேள்விக்குறி?

ஆதிக்க சாதிகளின் சட்டதிட்டங்களாலும் கட்டுப்பாடுகளாலும் அடக்கப்பட்ட சாதிய சமூகங்களிடம் தாழ்வுநிலைக்குரிய பண்பாடுகள் கலாசாரங்கள் உருவாகி அதுவே அவர்கள் வாழ்வாகியது என ஏற்கனவே குறிப்பிட்டேன். இவற்றைத் தொடர்ந்து பேண இவர்களுக்கு ஆதிக்க சாதிகளால் ஒதுக்கப்பட்ட இடங்களும் உதாரணமாக ஊரின் ஒதுக்குப்புறங்கள் மற்றும் பள்ளக் காணிகள் என்பனவும் இந்த சமூகங்களின் குறிப்பட்ட வாழ்வு முறை கட்டமைக்கப்பட காரணமாக இருந்திருக்கின்றன. மேலும் குறிப்பிட்ட சாதிய சமூகங்களின் தொழில்களுக்கு சமூகத்தில் மதிப்பும் உழைப்புக்கு ஏற்ற வருமானமும் ஒருபோதும் இருந்த்தில்லை. இவை அனைத்தும் இவர்களது பண்பாடுகள், கலாசாரங்கள், வாழ்நிலைகள் என்பவற்றில் தாக்கத்தை செலுத்துவனவாகவே இருக்கின்றன.  இவ்வாறானதொரு பண்பாடு கலாசாரம் என்பவற்றை இவர்கள் பேணிக்காக்கவேண்டுமா? ஆதிக்க சாதிகளின் வரலாறு ஆரம்பித்த காலத்திலிருந்து பெற்ற பண்பாட்டையா அல்லது தாம் அறியாத அதற்கு முந்திய பண்பாட்டையா என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். ஆதிக்க சாதிகளின் வரலாறு ஆரம்பித்ததில் இருந்து பேணப்படும் பண்பாடு கலாசாரம் என்பது சாதிய சமத்துவமின்மை மற்றும் அடக்குமுறைப் பண்பாடாகும். அதேவேளை அதற்கு முந்திய பண்பாடுகள் கலாசாரங்கள் காணாமல் போய்விட்டன. அல்லது அமிழ்ந்து கலந்து போயிருக்கின்றன. இருப்பினும் இன்றைய சமூக சூழல்களுக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் தொழிற்நூட்ப வளர்ச்சிகளுக்கும் ஏற்ப சாதிய அடையாளங்களை முன்னிறுத்தாத புதிய பண்பாடுகள், கலாசாரங்கள், அடையாளங்கள் உருவாக்கப்படுவதே ஆரோக்கியமானது. இதைப் பின்வரும் வகைகளில் மேற்கொள்ளப்படலாம்.

சாதியங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவதில் முதலாவது சாதியால் அடக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் மாற்றப்பட வேண்டும். இவர்களுக்கான தனித்துவ இடங்கள் இல்லாது செய்யப்படவேண்டும். இதில் நகரமயமாக்கல் குறிப்பான நேர்மறையான பாத்திரத்தை ஆற்றுகின்றது. அதேவேளை இவ்வாறான நகரமயமாக்கம் வணிக இலாபம் ஈட்டுவதை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படாது மனிதர்களின் மேம்பட்ட வாழ்வை  முன்னிருத்தி மேற்கொள்ளப்படவேண்டும். அல்லது கிராமப் புறங்களில் இவர்கள் வாழ்வதற்கான காணிகள்  வளமான மண்ணைக் கொண்ட பாதுகாப்பான பிரதேசங்களில்  வழங்கப்படவேண்டும். இங்கு இவர்கள் வாழ்வதற்கான நவீன வசதி கொண்ட கல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இவர்கள் செய்கின்ற தொழில்கள் சமூகத்தின் பொதுத் தொழில்களாக மாற்றப்படவேண்டும். அதாவது இத் தொழிற்துறை சார்ந்த கல்வியும் பயிற்சிகளும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழங்களில் கற்பிக்கப்படவேண்டும். இவை அரச தொழிலாக மாற்றப்பட வேண்டும். பிற தொழில்களுக்கு வழங்கப்படுகின்ற அதேயளவு ஊதியம் ஓய்வுதியத்துடன் வழங்கப்படவேண்டும். இவ்வாறு மாற்றப்படும் பொழுது குறிப்பிட்ட துறையில் ஆற்றலும் ஆர்வமும் உள்ள  எவரும் அந்த தொழிலையும் செய்கின்ற நிலை ஏற்படும். அவ்வாறு உருவாக்கப்பட வேண்டும். சமூகத்தில் உயர்வான தொழில்கள் எனக் கூறப்படுகின்றவை எந்தளவு முக்கியமானதோ கலைத்துவமானதோ அதேயளவு மீன் பிடித்தல், மரம் ஏறுதல், கள்ளு உற்பத்தி, சுற்றுச் சூழல் சுத்தம் செய்தல் போன்ற தொழில்கள் முக்கியமானவை மட்டுமல்ல கலைத்துவமானவையுமாகும். ஆனால் இத் தொழில்களுக்கு சமூக அந்தஸ்து இல்லாமையினால் குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் உரிய தொழில்களாக இவை ஒடுங்கிப்போயுள்ளன. ஆகவே இந்த நிலமை மாற்றப்படவேண்டிய ஒன்றாகும்.

ஆதிக்க சாதிகளினால் கொண்டாடப்படுகின்ற பரதநாட்டியம், கர்நாடக இசை, மிருதங்கம், மேளம், நாதஸ்வரம் என்பன தமிழர்களின் கலையாக மாற்றம் கண்டுள்ளன. இவ்வாறு அடக்கப்பட்ட சாதிகள் பின்பற்றுகின்ற கலைகளும் தமிழர்களின் கலையாக மாற்றப்படவேண்டும். ஆனால் பறை போன்ற கலைகள் அடக்கப்பட்ட சாதிகளின் கலையாக மட்டுமே ஒடுக்கப்பட்டுள்ளது. அடக்கப்பட்ட சாதிகளின் தொழில்துறை போன்று கலைச் செயற்பாடுகளினதும் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டியது அவசியமானதாகும். மேலும் இவ்வாறான பல கலைச் செயற்பாடுகள் தமிழர்களின் கலையாக ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். உதாரணமாக பறை என்பது தமிழர்களின் கலையாகவே ஆரம்பத்தில் இருந்திருக்கவேண்டும் எனக் கூறப்படுகின்றது. (இது தொடர்பான வரலாற்றுரீதியான ஆய்வு தேவை. அதேவேளை அண்மையில் பார்த்த பீபீசியின் பறை பற்றிய ஆவணப்படம் நல்லதொரு முயற்சி). ஆகவே இது வெறுமனே அடக்கப்பட்ட சாதிகளின் கலையல்ல மாறாக தமிழர்களின் கலையாகப் பார்க்கப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படவேண்டும். பறை அடிக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்துவேரை கலைத்துவ கல்வித் துறைகளில் கற்பிப்பவர்களாக இணைப்பதற்கு முயற்சிகள் செய்யவேண்டும்.

மூன்றாவது கண் இணைய இதழ் மூலம் ஜெயசங்கர் அவர்களும் அதன் ஆசிரியர் குழுவும் மற்றும் மாற்று இணைய இதழ் மூலம் அதன் ஆசிரியர் குழுவும் கட்சுறாவும் முன்வைத்த பறை தொடர்பான ஒரு கருத்துப் பரிமாற்றத்தை வாசிக்க கிடைத்தது. இந்த விவாதத்தில் மூன்றாவது கண் குழுவினரின் நிலைப்பாடு ஆச்சரியத்தையே தந்தது. இவர்களின் நிலைப்பாடு சசீவனின் நிலைப்பாட்டுடன் பொருந்திப்போவதாகவே தோன்றுகின்றது. இவர்களது நோக்கம் சமூக மாற்றத்தை நோக்கியதே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தவறான பார்வைகளின் அல்லது நிலைப்பாடுகளின் அடிப்படைகளில் வழிநடாத்ததப்படுகின்றதோ என சந்தேகிக்கத் தோன்றுகின்றது. ஏனெனில் வெள்ளாமை செய்ய விரும்புகின்ற சாதியால் அடக்கப்பட்ட ஒருவரை இது உனது துறையல்ல என மறுப்பது அல்லது இது நீ வெள்ளாளமயமாகின்றாய் எனக் குற்றம் சாட்டுவது ஆதிக்க சாதி மனோபாவமாகும். இதேபோல் பறை போன்ற கலையாற்றல்களை ஆதிக்க சாதியிலுள்ளவர்கள் கற்காமல்  இது குறிப்பிட்ட சாதியின் கலை அவர்கள் கைவிடாது தொடர வேண்டும் என நிர்ப்பந்திப்பதும் அல்லது கேட்பதும் கூட ஆதிக்க சாதி மனோபாவமாகும். ஏனெனில் வயிலில் நெல் விதைக்க, தோட்டங்களில் பயிரிட, பறைபோன்ற எந்தக் கலையையும் கற்க விரும்புகின்றவர்கள் யாரும் செய்யலாம். இதைத் தடுப்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல ஆதிக்க சாதி மனோபாவமும் ஆகும்.

caste-01பெண்களை கடந்த காலங்களைப் போல வீட்டுக்குள் இருக்கும் படி கூறுவது எவ்வாறு தவறானதோ, பெண்களை வேலைக்குப் போகவேண்டாம் எனக் கூறுவது எவ்வாறு தவறானதோ, இதேபோல் வெள்ளாள சமூகத்தில் பிறந்த அனைவரைரும் வெள்ளாமை தான் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பது எவ்வாறு தவறானதாகும். அவ்வாறே சக (அடக்கப்பட்ட) சாதிகளின் பிறந்தவர்களை குறிப்பிட்ட சாதி சார்ந்த தொழிலையையோ கலைச் செயற்பாடுகளையோ செய்யும் படி நிர்ப்பந்திக்கவோ கேட்கமுடியாது. இதற்குமாறாக உதாரணமாக வெள்ளாமை என்பது பொதுத் தொழிலாக மாற்றப்பட்டு அவை கற்பிக்கப்படவேண்டும். இதில் விருப்பமும் ஆற்றலமுள்ளோரை ஊக்குவிக்கவேண்டும். இதேபோல் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒவ்வொரு தொழிலும் கலைச் செயற்பாடுகளும் பொதுவான சமூகத் தொழிலாக தமிழர்களின் கலையாக மாற்றப்படவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் இவ்வாறான குறிப்பிட்ட தொழிலை செய்யாது அல்லது கலையைப் பின்பற்றாது சமூகத்திலுள்ள சகலரும் செய்வதற்கு வழிவகுக்கலாம்.

புலிகள் சாதிய பாகுபாடுகளை அடக்குமுறைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனரா? என்ற கேள்வி ஆய்வுக்குரிய விடயம். சட்டங்கள் நன்மையானவைதான். ஆனால் ஒவ்வொரு சட்டமும் என்ன நோக்கத்திற்காக செய்யப்படுகின்றன என்பதற்கமையவே அதன் பயன் இருக்கும். உதாரணமாக சிறிலங்கா அரசின் அரசியல் பெயர் சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு. ஆனால் சிறிலங்காவில் ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் பூதக் கண்ணாடி வைத்து தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது. சவுதியில் கடுமையான சட்டங்கள் நிலவுகின்றன. களவு இல்லை. பொதுவெளியில் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகள் குறைவு. ஆனால் இவை எதற்காக என்பது கேள்வி. ஏனெனில் இங்கு மனித உரிமைகள், பெண் உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா என்றால் கேள்விக்குறி. இதேபோல முதலாளித்துவம் நிலபிரபுத்துவத்தைவிட முற்போக்கான சமுதாயம் தான். இவர்கள் பெண்களை வீட்டுக்கு வெளியே வரசெய்தார்கள். பெண் உரிமைகளை ஏற்றுக்கொண்டார்கள். தொழிலாளர்களின் உரிமைகளை ஏற்றுக் கொண்டார்கள். இதையெல்லாம் இவர்கள் செய்தது பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன்கள் மீதுள்ள அக்கறையினால் என்று நாம் நம்பினால் அது நமது தவறு. நமது அறியாமை. இவற்றை மேற்கொண்டது பெண்கள் தொழிலாளர்கள் பற்றிய முற்போக்கான பார்வையினால் அல்ல. மாறாக இந்த உரிமைகளை வழங்குவது தமது நலன்களுக்கு பயனுள்ளவையாக இருந்தன. ஆகவே தேவைப்பட்டன. இதனால் மேலதிக இலாபம் கிடைக்கின்றது. ஆகவே அவர்கள் மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். இந்தடிப்படையில்தான் புலிகளின் தலைமைத்துவம் உருவாக்கிய சட்டக்கோவைகளைப் பார்க்கவேண்டும். அவை முற்போக்கானவைதான். ஆனால் எந்த நலன்களுக்கான அவை கொண்டுவரப்பட்டன என்பது ஆய்வுக்குரியது.

புலிகளின் காலப்பகுதி சமூகத்தில் சாதியப்படிநிலை ஒரு வலிமைமிக்க சக்தியாக இருப்பதனை இல்லாது செய்தது உண்மையாக இருக்கலாம். மேலும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர்கள் வெள்ளாள சாதியில்லாத பிற சாதிகளிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான இத் தலைவர்கள் ஆதிக்க சாதி அதாவது வெள்ளாள வெள்ளைப் பெண்களையே மணந்து கொண்டார்கள் எனக் கூறப்படுகின்றது. இங்குதான் முரண்பாடு எழுகின்றது. இவர்கள் உருவாக்கிய சட்டங்கள் தொடர்பான கேள்வி எழுகின்றது. இவ்வாறான சட்டங்கள் உருவாக்கியதைப் பாராட்டலாம். ஆனால் இவற்றை முன்வைத்து புலிகளின் தலைமைத்துவத்தை நியாயப்படுத்தினால் நாம் மீண்டும் தவறு விடுவோம். ஏனெனில் தவறான அடிப்படைகளில் செயற்படுகின்றோம்.

முடிவாக நாம் சார்ந்த அரசியல் இயக்கங்கள் கட்சிகள் மற்றும் சாதிகள் சார்ந்து நமது பார்வைகளை விமர்சனங்களை முன்வைப்பது தவறான பார்வைக்கும் பயணத்திற்கும் வழிவகுக்கலாம். நாம் ஒரளவாவது சரியான பாதையில் மீளவும் பயணிக்கவேண்டுமாயின் அடக்கப்பட்ட மக்களின் நலன்களின் அடிப்படையில் இருந்தே நமது பார்வைகளை முன்வைக்கவேண்டும். அவ்வாறு செய்ய முன்வருவோமா?

————————————————————————————————————————————————————————————

 00000

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment