Home » இதழ் 13 » *(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…06

 

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…06

 

 என்னுடைய கட்டுரைத் தொடரை இடையில் சில இதழ்களில் எழுத முடியவில்லை. இதற்காக வாசகர்களிடமும் எதுவரையின் ஆசிரியரிடமும் மன்னிப்பைக் கேட்கிறேன். உரிய முறையில் திட்டமிடப்பட்டிருந்தும் அந்தத் தொடரை எழுதுவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுவிட்டன. வரலாற்றை திரிவுபடுத்தி எழுதுவது அல்லது சரியான தகவல்கள் இல்லாமல் எழுதுவது போதிய ஆதாரங்கள் இல்லாமல் எழுதுவது போன்றன தவறு. வரலாற்றுச் சம்பவங்களாக நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவது ஒரு முக்கியமான கடப்பாடுடைய பணி என்பதால்- சரியாக அதை எழுதவேண்டும் என்ற தீர்மானத்துடன் இயங்கும்போது; தாமதம் ஏற்பட்டது. போதாக்குறைக்கு போரில் நானும் சிக்கியிருந்தமையினால் பல பதிவுகளும் ஆதாரமான விசயங்களும் தொலைந்து விட்டன. அவற்றைத் தேடியெடுப்பதில் பல சிக்கல்கள். தவிர- பல சம்பவங்களோடு சம்மந்தப்பட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை. மிஞ்சியவர்களும் வேறு இடங்களில் அமைதியாக அல்லது தலைமறைவாக இருக்கிறார்கள். சிலர் இந்த விசயங்களை இனிப் பேசி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்ற சலிப்புடன் உள்ளனர். சிலர் இப்போதைக்கு இவை தேவையில்லை என்கின்றனர். சிலர் இதையெல்லாம் பேசவே விரும்பவில்லை. இந்த மாதிரியான சூழலில்தான் இந்தத் தொடரை எழுதவேண்டியுள்ளது……………
…..

வரலாற்றின் படிப்பினைகள் நிகழ்காலத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அவசியமானது என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால், வரலாற்றை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் உள்ளது உள்ளபடி சொல்லும்போது ஏற்படும் நெருக்கடிகள் சாதாரணமானதல்ல. உண்மையில் மையமிடும் வரலாறு என்பது அதிகார மையங்களுக்கு எதிரானது. என்பதால், அதிகார மையங்களின் எதிர்ப்பையும் நெருக்கடிகளையும் சந்தித்தே ஆகவேண்டும். இந்த வரலாற்றுப் பதிவில் அரசு மற்றும் புலிகள் சார்பானவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தே ஆகவேண்டியுள்ளது. ஆயினும் இதுவும் ஒரு போராட்டமே. ஒரு காலப்பணியே. நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டதுதானே மனித வாழ்க்கை. ஆகவே எழுதுகிறேன்.

இந்தத் தொடரைப் புத்தகமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கும் இதில் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பான அபிப்பிராயங்கள், கருத்துகள், தவறுகள், மாற்றுக்கருத்துகள், மேலதிக விளக்கங்கள் மற்றும் தகவல்கள் இருந்தால், அவற்றை எழுதுங்கள். வரலாற்றை உண்மையாக எழுதுவோம்.

00

karuna-headi1-1024x292

 

மு. திருநாவுக்கரசுவின் உரையை அடுத்து, புலிகளின் முக்கியஸ்தர்களில் பலரும் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தனர். இதன் அர்த்தம் தலைமைப்பீடத்துக்கு அந்த உரை கசப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே. தலைமைப்பீடம் விரும்பாத எதையும் செய்வதற்கு புலிகள் இயக்கத்தில் யாரும் துணியமாட்டார்கள். அதிலும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இந்த விசயத்தில் பிரபாகரனுடைய விருப்பங்களுக்கு மாறாகச் சிந்திக்கும் மரபில்லை.   எனவே மு. தியுடன் நெருக்கமாக இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள், மு. தியை மதிக்கின்ற பிரமுகர்கள் கூட அவரைச் சந்திக்கவும் முடியாமல், விலகியிருக்கவும் முடியாமல் திண்டாடினார்கள். வேறு சிலர் “திரு மாஸ்ரர் இயக்கத்துக்கு படிப்பிக்க முனைகிறார்“ என்று ஒரு மாதிரிக் கதைத்தார்கள்.

மு. தியின் உரை நிகழ்த்தப்பட்ட மறுநாள் புலிகளின் குரல் வானொலியில் செய்தித்துறைக்குப் பொறுப்பாக இருந்த தி. தவபாலன் தன்னுடைய செய்தி வீச்சு நிகழ்ச்சியில் மு. திக்கு மறுப்பளிக்கும் விதமாக கருத்துப் பரிமாற்றம் செய்தார். அதில் மு.தி ஏறக்குறைய கடுந்தொனியில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் மறைமுகமாக. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் புலிகளின் குரல் வானொலிக்குப் பொறுப்பாக இருந்த தமிழன்பன் (ஜவான்). முதல்நாளே மு.தியின் உரை தமிழன்பனைக் கடுப்பாக்கியிருந்தது. உரை நிகழ்ந்து கொண்டிருந்தபோது இடையில் தி. தவபாலன் வெளியேறிச்சென்றார்.

மறுநாள் நுண்கலைக்கல்லூரிக்குப் பொறுப்பாக இருந்த கண்ணதாசனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற ஏனையவர்களும் தமிழ்ச்செல்வனால் கடிந்து voiceகொள்ளப்பட்டதை அறிந்த தமிழன்பனும் தி. தவபாலனும் தமது வானொலியில் மு. திக்கு மறுப்பைத் தெரிவித்து, இயக்கத்தின் தலைமைப்பீடத்திடம் பாராட்டைப்பெற்றுக்கொண்டனர். மட்டுமல்ல மேலும் சில நாட்கள், அவ்வப்பொழுது மு.தியின் உரைக்கான மறுப்பும் பதிலும் அந்த வானொலியில் மறைமுகமாகச் சொல்லப்பட்டன.

இதேவேளை அந்த உரை ஏற்படுத்திய உணர்வலைகளின் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதைக் கணிப்பிட்ட மு.தி, நிலைமைகளைக் கூர்ந்து அவதானித்தார். அவருக்கு நெருக்கமாக இருந்த அவருடைய மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் அவர் இது தொடர்பான அவதானிப்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் தொடர்ந்து இருந்தார். குறிப்பாக இது தொடர்பாக யாருடனாவது ஏதாவது பேசவேண்டி வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது, யார் மூலமாக அதை அணுகுவது என்று முன்யோசனைகள் செய்து கொண்டிருந்தார்.

இப்பொழுது வெள்ளம் தலையைக் கடந்து கொண்டிருக்கிறது என்று அவர் நினைத்தார். ஆனாலும் இதற்குள் தாக்குப்பிடிக்க வேணும். அதுவே முக்கியமானது. இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில்,  விடுதலைப் புலிகளைப் போன்ற கடும்போக்குடைய ஒரு அமைப்புடன் மோதுவது – அல்லது அந்த அமைப்புக்கு வெளியிலிருந்து கொண்டு அதை வழிப்படுத்த முனைவது, மிகச் சவாலானதும் ஆபத்துகள் நிறைந்ததுமாகும். அதேவேளை துணிவுடன் காலடியை வைக்க முற்பட்டால், அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. ஆகவே, முடிந்த அளவுக்கு மிகக் கவனமாக – உச்சநிலை அவதானத்துடன் நிலைமைகளை அறிந்து அதற்கேற்றமாதிரி விடயங்கள் கையாளப்பட்டன.

மு.தி மட்டுமல்ல, நாமும் நிலைமைகளை அவதானித்துக்கொண்டேயிருந்தோம். ஒரு கட்டத்தில் என்னுடைய ஒரு நண்பர் – அவர் மு. திக்கும் மிக நெருக்கமானவர் – சொன்னார், “சிலவேளை மு. தியை அவர்கள் (புலிகள்) வேறு விதங்களில் பழிதீர்க்கக் கூடும்” என்று. நண்பர் சொன்னதை என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. என்னுடைய குழப்பத்தை – விளங்காத்தனத்தை – அவதானித்த நண்பர் சொன்னார், “ஏதாவது விபத்தில் மு.தியை அவர்கள் சிக்க வைக்கக் கூடும்“ என்றார். நான் அதிர்ந்தேன்.

“அப்படியும் நடக்குமா?“ என்ற கேள்வியும் அச்சமும் என்னைப் பலமாகத் தாக்கியது. மு.தியைப் பற்றி கவலை அதிகரித்தது. இந்த அபிப்பிராயம் அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால், அதை யாராலும் மறுக்க முடியாத ஒரு உணர்வு பலருக்கும் அன்றிருந்தது.பி்ன்னர் அறிந்தேன், அந்த நாட்களில் மு. தி வேறு இடங்களில் சில நாட்கள் தங்கியதாக. குறிப்பாக இடம்மாறி இரவுப்படுக்கையை அவர் வைத்துக்கொண்டதாக.

இந்த மாதிரியான சம்பவங்கள் ஒரு விசயத்தைத் தெளிவாக்கின. போராட்டம் எதிர்நோக்கியிருக்கும் பிராந்திய, சர்வதேச, உள்ளுர் நெருக்கடிகளையும் அரசியற் போக்குகளையும் புலிகளின் தலைமை கவனத்திற் கொள்ளத் தயாராக இல்லை. ஆகவே நிலைமை மேலும் மேலும் இறுக்கமடையப்போகிறது என்பது புரிந்தது.

ஆகவே நிலைமை நிச்சயமாக நன்றாக அமையப்போவதில்லை. ஆனாலும் விமர்சனங்கள் ஆங்காங்கே சிறிய அளவில் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த விமர்சனங்களை முன்வைத்தவர்கள், தங்களுடன் தொடர்புடைய புலிகளின் உறுப்பினர்களிடம் அல்லது பொறுப்பாளர்களிடம் பக்குவமாகவோ, காட்டமாகவே ஆளுக்குத் தக்கமாதிரி அல்லது நிலைமைக்கு ஏற்றவாறு சொல்லி வந்தனர்.

இதை விட வேறு மார்க்கங்கள் இல்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனையோ ,பொட்டம்மான் போன்ற முக்கியஸ்தர்களையோ எல்லோருக்கும் சந்திக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு எழுதும் கடிதங்களும் உரியவாறு சென்று சேருமோ என்ற ஐயம் பலருக்கு. அப்படித்தான் கடிதம் போய்ச் சேர்ந்தாலும் அந்தக் கடிதம் எப்படியான புரிதலை ஏற்படுத்தும் என்ற அச்சம் இன்னொரு பக்கம். ஆகவே தங்களுடைய தொடர்பின் வழியாக தெரிந்த போராளிகள், பொறுப்பாளர்களிடம் சொல்வதைத் தவிர, வேறு வழியிருக்கவில்லை. அந்தச் செய்திகள் எப்படியாவது இயக்கத்துக்குப் போய்ச்சேரட்டும். அப்படிப் போகாது வி்ட்டாலும் பரவாயில்லை. தங்களின் கடமையை ஏதோ ஒரு வழியில் செய்திருக்கிறோம். தங்களின் அபிப்பிராயங்களை தங்களுக்குக் கிடைத்த வழியினூடாக தெரிவித்திருக்கிறோம். இதைத் தவிர, வேறு வழியில்லாதபோது என்னதான் செய்ய முடியும்?

இதில் இரண்டு முக்கியமான விசயங்கள் உண்டு. ஒன்று, இப்படி தங்களின் அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து மனக்கொதிப்பை, ஆற்றுப்படுத்திக் கொள்வது. மற்றது, எப்படியாவது உரிய இடத்துக்கு இந்தச் செய்திகள் சேர்ந்து, அவை ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தினால் நல்லது என்பது. இதற்காக அவர்கள் தங்களுக்கான எல்லைகளையே கடந்தார்கள். நெருக்கடி அதிகமாக உணரப்படும் நேரத்தில் ஒரு தீவிர நிலைப்பாடுடைய அமைப்பின் சிந்தனையும் புரிந்து கொள்ளும் முறையும் நிச்சயமாக எதிர்மறையாகவே இருக்கும். இந்த மாதிரியான நிலைமைகளில் இப்படி அபிப்பிராயங்களைச் சொல்லும்போது புலிகள் எப்படியான முடிவுகளை எடுப்பார்கள், அளவுக்கதிகமான விமர்சனங்கள் அவர்களுக்கு பிடிக்காது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும் ஒரு எல்லைக்கு அப்பால் வாயை மூடி வைத்திருக்க முடியாது. வருகின்ற பாதிப்பு தங்களையும் தாக்கப்போகிறது எனும்போது, எது வந்தாலும் பரவாயில்லை. முடிந்த அளவுக்கு அதைத் தடுக்க முயல்வோம் என்ற எண்ணம் பலரிடமும் ஏற்பட்டிருந்தது.

Silavatturai-Graphicஇதற்கிடையில் மு. தி தன்னுடைய உரைக்கான நியாயத்தையும் தாற்பரியத்தையும் வேறு வழிகளுக்கூடாக புலிகளின் பல்வேறு மட்டத் தலைவர்களுக்கு மெல்லப் புரிய வைத்தார். அவர்களிற் சிலர் மு. தி சொன்னதைப்போல நிலைமைகள் நெருக்கடியாக மாறி வருவதை உணர்ந்தனர். எனவே பிறகு, இரகசியமாக மு. தியிடம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என ஆலோசனைகளைக் கேட்கத் தொடங்கினர். ஆனால், புலிகளின் தலைமைப்பீடம் குறிப்பாக பிரபாகரன் இவை தொடர்பாக வெளிப்படையாக எந்தச் சமிக்ஞையையும் பிறகு வெளிப்படுத்தவில்லை. தான் இதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை என்பதைப்போல நடந்து கொண்டார். அதேவேளை அவர் தன்னுடைய வழமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்பொழுது மன்னாரில் இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையில் பெரும்போர் நடந்து கொண்டிருந்தது. இலங்கை அரசு தந்திரோபாய ரீதியில் மன்னாரில் போர்க்களத்தைத் திறந்துள்ளது. தனக்குச் சாதகமான ஒரு வழியினால் அது போரை நடத்த முயற்சிக்கிறது என வே. பாலகுமாரனும் புலிகளின் முக்கிய தளபதியுமான பால்ராஜ் போன்றோரும் சொன்னார்கள். மன்னார்க்களமுனை வெட்டவெளிப் பிரதேசங்களை அதிகமாகக் கொண்டது. மட்டுமல்ல, புலிகளுக்கான வழங்கல்களைப் பெறக்கூடிய ஒரு வழியாகவும் மன்னார்க்கடல் இருந்தது. அத்துடன், இந்தியாவுக்கு அகதிகளோ, புலிகளின் உறுப்பினர்களோ போய்வரக்கூடிய கடற்பிராந்தியத்தையும் கொண்டிருந்தது. இதையெல்லாம் அடைப்பதே படைத்தரப்பின் முதல் நோக்கமாக இருந்தது. தமக்குச் சாதகமான ஒரு நிலப்பரப்பின் வழியாக களத்தைத் திறத்து, அதில் புலிகளை வீழ்த்தி, முடக்குவதற்கு படைத்தரப்பு மேற்கொண்ட முயற்சியை பால்ராஜ் விளங்கிக் கொண்டார்.

பால்ராஜ், பாலகுமாரன் போன்றோரின் கருத்து, கிழக்கே, முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட மையத்தில் நடவடிக்கையை ஆரம்பிப்பதாகும். இதன்மூலம் கிழக்குக்கும் வடக்கிற்குமிடையிலான தொடர்ச்சியைப் பேணுவதும் பெருமளவு படையினரை இந்தப் பகுதியில் அரசு செலவிடவேண்டிய நிலையை உருவாக்குவதுமாகும். கூடவே, இந்தப் பகுதிகளில் புலிகளின் தாக்குதல்கள் அல்லது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்போது எல்லைப் புறக்கிராமங்களில் ஏற்படும் பதற்றத்தைத் தடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஒன்றும் அரசுக்கு உருவாகும். இந்தப் பகுதியில் உள்ள காடும் பெருங்கடலும் புலிகளுக்குச் சாதகமானவை. எனவே இந்த மையத்தில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதே மிகப் பொருத்தமானது என பால்ராஜ் தொடர்ந்து வாதிட்டார். இந்திய இராணுவக்காலத்து நெருக்கடியை மணலாற்றுக் காட்டுப்பகுதியே காப்பாற்றியது என்பதையும் அவர்  சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் பால்ராஜின் கருத்து எடுபடவில்லை. பதிலாக அவரைச் சிலர் கேலிப்படுத்தினர். “உங்கட ஊருக்குப் போறதுக்கு வழி தேடுறியளா?“ என்று இன்னொரு தளபதி பகடியாக பால்ராஜிடம் கேட்டு அவரைச் சங்கடப்படுத்தினார். பால்ராஜ் கொக்குத்தொடுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர். கொக்குத்தெடுவாய் பகுதி முல்லைத்தீவுக்குக் கிழக்கே, திருகோணமலைக்கிடையில் உள்ளது. ஆனால், பால்ராஜ் ஒரு போதும் தன்னுடைய ஊரை முதன்மைப்படுத்திப் பார்க்கவும் இல்லை. அப்படிப் பார்ப்பவரும் இல்லை.

பால்ராஜ் போர் செய்வதில் கொண்டிருந்த ஆளுமையும் திறமையும் அவரைப் புகழடைய வைத்திருந்தன. 1990 ஆம் ஆண்டு மாங்குளத்தில் நடந்த போரில் பால்ராஜ் பெரும் வெற்றியைப் பெற்றார். அந்த வெற்றி அவருக்குப் பெரும் புகழையும் அடையாளத்தையும் தந்தது. புலிகளின் இராணுவ வரலாற்றில் ஒரு காலம் கேணல் கிட்டு பரபரப்புட்டினார் என்றால், அடுத்த காலகட்டத்தில் அதையும் விடச் சிறப்பான இடத்தை பால்ராஜ் பிடித்திருந்தார். முக்கியமாக முல்லைத்தீவை வெற்றிகொண்ட இராணுவத் தளத்தாக்குதல், குடாரப்புத் தரையிறக்கம் போன்ற சமர்கள் பால்ராஜின் இராணுவ சாதனைகளாக மாறியிருந்தன.

பால்ராஜின் பெயரைக் கேட்டால், அல்லது தொடர்பு சாதனங்களின் வழியாக அவருடைய குரலை கேட்டால் போதும் படையினரிடையே சோர்வும் அச்சமும் தலைதூக்கிவிடும். அந்த அளவுக்குப் படையினருக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருந்தார். அதைப்போல போராளிகளுக்கு அவர் ஒரு பெரும் ஊக்கமருந்து. வெற்றிநாயகன். பால்ராஜ் சண்டையை நெறிப்படுத்துகிறார் என்றால், அந்தச் சண்டையில் பங்கெடுப்பதற்காகப் போராளிகள் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவார்கள். இதனால், போராளிகளிடத்தில் அவருக்குப் பெரும் செல்வாக்கிருந்தது. போராளிகள் சொல்கின்ற கதைகளி்ன் வழியாக சனங்களும் பால்ராஜ் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் வைத்திருந்தார்கள்.

ஆனால், பால்ராஜின் துரதிருஷ்டம் அவருடைய மனைவிக்கும் அவருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதே. (அவருடைய மனைவியும் ஒரு balrajபோராளியே. மட்டக்களப்புப் பகுதியில் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் பாம்பு தீண்டி இறந்தார்). பால்ராஜின் இந்த குடும்ப முரண்பாடு அவரை இயக்கத்தில் சற்று மதிப்பிறக்கம் செய்ய வைத்தது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட பிற தளபதிகளில் சிலர் பால்ராஜின் கருத்தைப் புறக்கணிப்பதற்கு முயன்றனர். கிழக்கை விடவும் மேற்குப் பகுதியான மன்னார்ப்பகுதியே முக்கியமானது என அவர்கள் வலியுறுத்தினார்கள். சில தளபதிகளுக்கு பால்ராஜ் மீதிருந்த உட்காய்ச்சலைப் பயன்படுத்திக் கொள்ள அதுவொரு சந்தர்ப்பமாக அமைந்தது. அவர்கள் பால்ராஜை எந்த இடத்தில் வைத்து மடக்கலாம், வீழ்த்தலாம் என்ற தவிப்புடன் இருந்தனர்.

“மேற்கிலிருந்து தாக்குதல் மையத்தை கிழக்கே நகர்த்தினால், அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு படைகள் மேற்கு வன்னியை முழுமையாகக் கைப்பற்றி விடுவர்“ என அவர்கள் தலைமைப்பீடத்திற்கு அறிவுறுத்தினர்.

மேற்குப் பகுதி – மன்னார் நடவடிக்கை தளபதி பானுவின் தலைமையில் தொடர்ந்தது. அங்கே புலிகளின் படையணிகள் நிறுத்தப்பட்டன.ஆனால், “மன்னார்க்களமுனையினால் இலங்கை அரசு படையை நடத்துமாக இருந்தால், அது புலிகளுக்குப் பாதகமாக அமையும்“ என 1990 களின் முற்பகுதியிலேயே தராகியும் நிலாந்தனும் எழுதியிருந்தனர்.  அந்த நாட்களில் இப்படி எழுதியதற்காக இருவரும் புலிகளின் தலைமைப்பீடத்தினுடைய கோபத்தைச் சம்பாதித்திருந்தனர். தராகியின் கட்டுரை “ஐலண்ட்“ பத்திரிகையில் வெளியாகியிருந்தது.  நிலாந்தனின் கட்டுரை ஈழநாதத்தில் வராமலே புலிகளின் தலைமைப்பீடத்துக்குப் போய் அங்கே தணிக்கை செய்யப்பட்டது. பிறகு, ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் வரையில் அவர் அந்தப் பத்திரிகையில் எழுதுவதைத் தவிர்க்கும்படி அமைந்தது.

மன்னார்க்களமுனை புலிகளுக்குச் சேதங்களை அதிகமாக ஏற்படுத்தி அவர்களைக் களைப்படைய வைத்தது. மிக நிதானமாக இலங்கைப் படைகள் நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனால் இழப்புகள் படைத்தரப்புக்கும் அதிகம். என்றாலும் அவர்கள் ஆளணியைக் குறைத்து, வழமைக்கு மாறான உத்திகளைப் பயன்படுத்தினர். இது புலிகளுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது. குறிப்பாக இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணிகள் புலிகளை நெருக்கடிக்குள்ளாக்கின. அத்துடன் மெல்ல மெல்ல படைத்தரப்பு முன்னகர்ந்தது. புலிகளின் ஊடுருவித்தாக்கும் நடவடிக்கைகளும் பெரிய அளவில் வெற்றிகளைக் கொடுக்கவில்லை. ஒப்பீட்டளவில் கால நீடிப்பே தொடர்ந்தது. அந்த அளவுக்கு புலிகளுக்கான வெற்றிச் சமிக்ஞைகள் அமையவில்லை.

வழமையாக இந்த மாதிரியான சண்டை நிலவரங்களில் புலிகள் வேறு மாதிரியான உத்திகளைப் பயன்படுத்திப் படைத்தரப்பைச் சேதப்படுத்துவார்கள். அப்படியே படையினரைக் களைப்படையவும் வைப்பார்கள். குறிப்பாக ஜெயசிக்குறு என்ற நடவடிக்கையின் போது இத்தகைய உத்தியே பயன்படுத்தப்பட்டது. ஆனால், மன்னார் நடவடிக்கையில் படைத்தரப்பே புலிகளைச் சேதப்படுத்திக் களைப்படைய வைத்தது.

இதனால், புலிகளின் முன்னணிப்படையணிகளான மாலதி படையணியும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியும் முன்னரங்கில் பெரும் சேதங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன. இந்த இழப்பை ஈடு செய்வது பெரும் சிரமமாக இருந்தது, போர் வேறு ஒரு திசையின் இன்னொரு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்த புலிகள் ஆட்சேர்ப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இதற்கு முன்னரும் புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக 1990 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நல்லூர்த்திருவிழாவில்கூட ஆட்சேர்ப்புப் பரப்புரைகள் நடந்ததுண்டு. பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், வீதிகள், சந்திகள் என எங்கும் போராளிகள் இளைய தலைமுறையினருக்கு பரப்புரை செய்து ஆட்சேர்ப்பை மேற்கொண்டு வந்தனர். இது பின்னர் வன்னியிலும் தொடர்ந்தது.

ஜெயசிக்குறு நடவடிக்கையின்போது ஏற்பட்ட ஆட்பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக கிழக்கிலிருந்து புலிகளின் படையணிகள் வரவழைக்கப்பட்டன. அப்பொழுது கிழக்கே மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக கருணா இருந்தார். அதேவேளை ஜெயசிக்குறு படைநடவடிக்கையை முறியடிக்கும் நடவடிக்கையில் கருணா முக்கியமான பாத்திரத்தையும் வகித்தார். ஜெயசிக்குறு முறியடிப்பு நடவடிக்கைக்கு கிழக்கிலிருந்து வருவிக்கப்பட்ட போராளிகளின் தொகை போதாமற் போகவே, மேலும் புதிய போராளிகளை உருவாக்கவேண்டியிருந்தது. இதற்காக எங்கும் தீவிர பரப்புரைகள் முடுக்கி விடப்பட்டன. எனினும் எதிர்ப்பார்த்த அளவுக்கு ஆளணியில் முன்னேற்றம் கிட்டவில்லை. இதனால், கட்டாய ஆட்சேர்ப்பைச் செய்யலாம் என்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய கிழக்கில் கட்டாய ஆட்சேர்ப்பு ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் வீடுகளில் புகுந்த புலிகள் அங்கே இருந்த இள வயதினரைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று பயிற்சி அளித்தனர். இதனால், இளைய வயதினர் காடுகளில் பாய்ந்தனர். புலிகள் அங்கும் விடவில்லை. காடுகளில் பாய்ந்து அவர்களைப் பிடித்தனர். இதனால், மிகக் குறைந்த வயதிலே அங்கே திருமணங்கள் நடக்கத் தொடங்கின. 13, 14 வயதிலேயே தங்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். திருமணம் செய்திருந்தால் அந்தப் பிள்ளைகளை விலக்கி ஏனையோரைப் பிடித்த புலிகள் பின்னர், அப்படித் திருமணம் செய்தோரையும் பிடித்தனர்.

ஏறக்குறைய இத்தகைய ஒரு நிலை முதற்தடவையாக வன்னியிலும் ஆரம்பிக்கப்பட்டது. புலிகளின் இந்தக் கட்டாய ஆட்சேர்ப்பு வன்னியில் பேரதிர்ச்சியையும் பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்தியது. புலிகளுக்கும் சனங்களுக்குமிடையில் முரண்பாடுகளும் இடைவெளியும் அதிகரிக்கத் தொடங்கியது.

00

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment