Home » இதழ் 13 » கோ.நாதன்// கவிதைகள்

 

கோ.நாதன்// கவிதைகள்

 
குரோதம் பருகும் குருதி. 
—————————————–
முதுகெலும்புகளை  விறகாக எரித்து
உனது முன்னோக்கி நகரும் வாழ்வின் திரை
நச்சு ஆணிகளை மார்பில் அறைந்து
குருதி கசியும் காலத்தில் குரூரம் எழுதுகின்றனர்.
சிறகாய்  உலர்த்திய   விரிப்பில்  தொங்கும்
பிணங்கள் தின்று  பழக்கப்பட்ட சிலந்தி
அவாந்திர வெளியில் அறுத்துக் கொல்லப்பட்டsut
மனிதர்களின் ரத்தம் குடித்து கக்குகிறது
உனது தலை கொய்த நிலத்தோடு
குவிந்து நிறைகின்ற துயர் துழாவி அலைகிறது.
அடுப்பெரிந்த கல்லெல்லாம் கடவுளாக
செதுக்கி நிறைகின்ற போரின் வரலாறு
ரத்தம் கொட்டிய வீர அடையாளங்களும்
வேர்களில் பரவி நெருப்பு வெளிச்சம் இறங்குகிறது.
பதுங்கு குழிகளின் கீழ் புதைந்துள்ள
ஆயிரமாயிரம் மண்டைகளும் மறைந்து
கடவுளின் சிலை பலிபீடத்து கோவிலாகிறது.
யாருமில்லாத தெருவின் முலையில்
உன்னை சுட்டுக் கொல்லப்பட்ட போது எல்லா
இழந்திருந்தது விரிந்திருந்த தெருவை தவிர…
இருள் நிரம்பி துயர் படிந்திருக்கும்
வீட்டின் அறைகளும் கொஞ்சம் காற்றை
உள்வாங்குவதற்கு தயங்கி கொண்டிருக்கிறது.
காட்டு வெள்ளத்தில் அள்ளுண்ட யுத்தத்தின்
மிகுதி நதி நீரில் சிக்குண்டு மரங்களோடு
அடைப்பைகளாக அடைந்து குவிகிறது.
பேய்களின் விரிசல்களை பதித்து
மெல்ல மெல்ல வயற்வெளி கடந்து.
மிகவும் கனதியான திடகாத்திரங்களுடன்
இன்னுமொரு ஊரின் எல்லைக்குள் நகருகிறது.
(சந்திரபோஸ் சுதாகருக்கு.)
0000000000000000000000000000000000000000
வீதி விரித்த பிணம்
———————————
மிக விசாலமான பெரும் வீதி
உந்தி இழுத்துச் செல்கையில்
காற்றை கிழித்த உடைப்பின் ஓசை எனது
காதோரம் ஒரு பறவையின் பாடலாகிறது.
இந்த கறுத்த திண்ணையில் விலங்கு
கழித்த மலம் நவீன சாயலின் ஓவியத்துள்
நீண்டு உறங்கிக் கொண்ட
வீதியில் சித்திர முகங்களை வரைகிறது.
அதிவேகம் மரணம் தின்னும் வாசகம்
கடக்கின்ற கணத்துள்
பல உயிர்களை உறிஞ்சி இருத்தலை
அழித்து இரத்தம் மிதித்து இறப்பைக்
குடிக்கின்ற சாத்தானை மின்கம்பியில்
கண் ஒளிவிட்டு மௌனிக்கும் ஆந்தை.
வீதியின் ஓரமாக பதுங்கிருந்த மிருகங்களும்
வாகனங்கள் உதைப்பில் சிதைந்த பிணங்களை
அச்சமின்றி இழுத்து சுதந்திரமாக தின்னுகின்றன.
காட்டு மரங்கள் யாருமற்ற வெறுமை வீதி
நெடுகிலும் பூக்களையும் பழங்களையும்
கொட்டி தோட்டமாய் படுத்துறங்கிறது
கடலும், நதியும், வாவியும்
ஊடறுத்து தொட்டிலாய் தொங்குகின்ற பாலம்
இரைச்சல் அள்ளி வாகனம் நொறுக்கிய நீரில்
அசைந்து தத்தளித்துக் கொண்டிருந்தது மீன்கள்
சந்திக்கு சந்தி மனம் ஒன்றி வணக்கத்துக்காய் நிறுத்தப்பட்ட
கடவுளின் இடத்தில் காணிக்கை உண்டியலை நிரப்புகிறது.
பல ஆபாயங்களை உள்வாங்கும் வீதி
சில ஈர வலய பிரதேசங்களையும்,
சில வெப்ப வலய பிரதேசங்களையும்,
சில வன வலய பிரதேசங்களையும்,
சில மேட்டு வலய பிரதேசங்களையும் தகர்த்து
விபத்து என்ற மரணச் செய்திகளை காவி செல்கிறது.
000000000000000000000000000000000000000000000000000000
கடவுளின் மிகுதி மரணம்.
————————————————
நிலத்தினை பிய்த்து கடவுளின் கடை
வாய்க்குள் களவில் திணிக்கின்றனர்.
சிதறிக் கொண்ட மண் இனத்தின்
துவேசத்தினை இரத்த நாற்றத்துடன் ஒட்டியிருந்தது.
நான் கடத்தப்பட்ட வாகனத்தில்
முகமிழந்த சில கடவுளின் உருவங்களும்
ஆசனத்தின் கீழ் துணியினால் மூடி மறைக்கப்பட்டko
நிலையில் பரிதாபமாக மிதிப்பட்டிருந்தார்…
எனது முழு நிர்வாணத்தை கயிறு பின்னிப்
பிணைத்து
உணர்விழந்த ஆண்குறியினை அறுத்தெரிந்தனர்.
துன்புறுத்தலில் படுகொலை செய்யப்பட்ட
எனது  அழுகியிருந்த பிணத்துண்டைகளை
நஞ்சூற்றி சந்திக்கு சந்தி வீசிக் கொண்ட போது
ஊரின் தெரு  காவல்பட்ட  நாய்கள்
யாவற்றையும் தோல்விகளை விரித்திருந்தது
 போதிமர நிழலின் கீழ் அகதிக்கொட்டில்
இன்னலின் பெருங் காடாய் முளைக்கிறது
இன்னும் விருட்சத்தின் போதனை யுத்தப்
பலிபீடத்தினை
எச்சம் துயராக எழுதிக் கொண்டிருக்கின்றது.
ஞானத்தின் உச்ச விழுதிலும்,கிளைகளிலும்
எனதான
சலனக்குழந்தைகள் ஏணைக்குள் தாலாட்டு
வலி நிலையில் உறங்குகிறது  .
மண்ணிலிருந்து வேராக எழுகின்றது எலும்பு.
கடவுளின் மிகுதி மரணம் என்னுள் படர்ந்து
சவப் பெட்டிகளில்லாமலும்,
உறவுகளில்லாமலும், ஒப்பாரியில்லாமலும்,
சடங்குகளில்லாமலும்,  எல்லாம் இழந்திருந்தது
என் துர்மரண வாசத்தை மட்டும் காற்றுவெளி
நிலத்தை வருடி  சிறகின் பாடையாக
சில தினங்கள் கரைந்து கொண்டிருந்தது
0000000
கொலையுண்ட கடவுள்.
கல்லேறிய கோவில் சின்ன குத்து
விளக்கு திரி வெளிச்சத்தில்
ஒன்றிய பெருங் கூட்டமொன்று
அச்சம் கொணர்ந்த இரவுகளை கிழிந்திருந்த
போர்வைக்குள் உடல் சாத்தி துயர்
வெப்பக் தகிப்பில்.மண்டியிட்ட  காலவெளி.
எஞ்சியவர்களும் மூண்ட
காட்டின் அரவங்களில் இருள்வெளி
மெழுகு ஒளி கொட்டிய  நிழல்
மரங்களிருந்து பறவை ஒலித்த சின்ன
குரல் அதிர்வை
பெருத்த வெடிப்பின் உடைவை கணித்து
சருகில்  நடந்து செல்லுகின்ற
விலங்குகளில் கால்களிருந்து விழும்
சப்தமும் திடுக்கிற்று தெய்வங்களை கரம்
ஓங்கி கூப்பி வேண்டி  பிரார்த்திக்கின்றன.
இரசாயன எரி நெருப்பிலிருந்து மிக கனத்து
பற்றி எரிகிறது எனது பெருநிலம்
எரிந்த வாகனங்களின்
கறள் சாம்பலாகிப் போன வாழ்வு
எல்லா மீள்தலுக்கான
நம்பிக்கைகளும் இருப்பிடமற்று விரிகிறது
விளைநிலம் துளிர்த்த பயிர்களும்,
துண்டாப்பட்ட கழுத்திலிருந்து
கொப்பளித்த இரத்தக் கழனி
புல்லிதழ் இரகசியமும்,  பரவிய
செய்தி காலம் அழுது வடித்த கண்ணீராற்று…
முள்ளிவாய்க்கால் எங்கும் கவிழ்ந்த
அபல பெருவலி காயங்களாலும்,
பிண வாசங்களாலும் தவிக்கிறது.
கொலையுண்ட கடவுளின் காலடித் தடம் தேடி
சிவனொளி பாத மலை உச்சிக்கு
ஒடுங்கிய ஒற்றைப் பாதை
நெடுந்தூரத்தை நெரிசல்கள் பெண்களின்
வியர்வை நெடி உள்ளாடைகளிடையே
ஆண்குறிகளை  உந்துதுலால்  நெரிக்கின்றனர்..
சோர்விழந்திருக்கும் உள்ளாத்மா
எனது சுயத்தின் மூலத்தை எல்லையற்ற
வானவெளியெங்கும்
அழிவின் இழப்புகளை தேடியலைகிறது  .
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment