Home » இதழ் 13 » *பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது. – பி. ஏ. காதர்

 

*பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது. – பி. ஏ. காதர்

 

ba kathar

பலஸ்தீனியர்கள் அன்று  1948 ல்- தாம் விட்ட தவறுக்காக – தமது மண்ணை விட்டு ஓடியதற்காக  65 வருடங்களாக இன்றுவரை போராடுகிறார்கள். இன்னும் அந்த மண்ணுக்கான போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை. இன்று அவர்களது போராட்டம் சாராம்சத்தில் தாம் வாழ்ந்த 94 சதவீதமான பலஸ்தீன மண்ணை பறிகொடுத்து விட்டு அதில் 22 சத வீதத்தை மீளப் பெற்று நிம்மதியாக வாழ நினைப்பதற்கான போராட்டமாகவும் – அந்த 22 சத வீத சிறு நிலபரப்பிலிருந்து மீண்டும் விரட்டப்படாமல் நின்றுபிடிப்பதற்கான போராட்டமாகவுமே மாறியிருக்கிறது. பல நாடுகளில் இன்னும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலஸ்தீனர்கள் தமது தாயகத்திற்கு திரும்புவதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது ,தமது மண்ணிலேயே -காசாவி லும் மேற்கு கரையிலும் அகதிகளாக ஒவ்வொரு நிமிடமும் இஸ்ரேலிய விமானம் குண்டு மழை பொழியுமா இஸ்ரேலிய டாங்கிகள் ஊடுருவி தாக்குமா என அஞ்சியபடி தமது எதிரியான இஸ்ரேலினூடாக அல்லது அதன் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும் நிவாரண – சகாய – உதவிகளுக்காக கையேந்தி வாழ வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எமது மண்ணில் இன்று நடப்பதுதான் அன்று  பலஸ்தீனத்தில் நடந்தது.
பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய நில அபகரிப்பு அனுபவத்தை ,குடியேற்றங்களை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் சகல நாடுகளும் கற்கின்றன. – ஸ்ரீ லங்கா உட்பட பல நாடுகள் அதன் நிபுணத்துவ ஆலோசனையைப் பெறுகின்றன. எனவே இஸ்ரேலின் அனுபவத்தை நாம் அறிந்து கொள்வது அவசியம். இவ்வகையில் அயர்லாந்து அனுபவத்திலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்நாடுகளில் நடந்தது – நடந்து கொண்டிருப்பது தான் எமக்கும் இனி நடக்கும்.

இருவகை குடியேற்றங்கள்:

குடியேற்றங்கள் இரண்டு வகைப்படும். ஓன்று இயல்பான மக்கள் குடியேற்றம். (natural or spontaneous settlement or colonies மற்றது அரசியல்-இராணுவ pl-02நோக்கத்திற்காக செயற்கையான முறையில் அமைக்கப்படும் குடியேற்றங்கள்(artificial settlements or colonies created for politico-military reasons)

மனித குலம் உருவானதிலிருந்து மக்கள் குழுக்களில் இடப்பெயர்வும் புதிய குடியேற்றங்களும் நடைபெற்ற வண்ணமே உள்ளது. இத்தகைய இயல்பான மக்கள் குடியேற்றங்கள் மனித குலங்களுக்கிடையில் பரஸ்பர நல்லெண்ணத்தையும நல்லுறவையும் ஏன் சுயமான இரண்டறக்கலத்தலையும் ஊக்குவித்து மனிதகுல நாகரிகத்தை மேம்படுத்தியுள்ளன. ஒரு மக்கள் கூட்டம் திரட்டிவைத்துள்ள பாரம்பரிய அனுபவங்களையும் திறன்களையும் அறிவையும் கலாச்சாரத்தையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு அவற்றை புதிய பரிணாமத்திற்கு எடுத்து செல்வதற்கு அவை உந்துசக்தியாக அமைந்திருக்கிறன.

ஆனால் அரசியல்- இராணுவ நோக்கங்களுக்காக வெளியிலிருந்து ஒரு அரசு இரண்டாவது வகையான திட்டமிட்ட குடியேற்றங்களை மற்றொரு மக்கள் கூட்டத்தின் மீது திணிக்கும் போது ,அத்தகைய குடியேற்றங்கள் இன நல்லுறவைப் பாதிக்கின்றன. இத்தகைய நவீன அரசியல் நோக்கங் கொண்ட குடியேற்றங்களை புராதன ரோமர் காலத்திலும் பின்னர் அலெக்சாந்தர் காலத்திலும் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் ஏற்படுத்திய குடியேற்றங்களிலிருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

அயர்லாந்து அனுபவம்:

இதற்கான நல்ல உதாரணமாக அயர்லாந்து அமைகிறது. 1550 – 1576 காலப்பகுதியில் இங்கு பெருந்தோட்டங்களும் குடியேற்றங்களும் முதன் முதன்முதலாக பிரித்தானிய அரசினால் உருவாக்கப்பட்டது. முதலில் சிறுசிறு முன்னுதாரண பெருந்தோட்டங்கள் “exemplary plantation“இங்கு நிருவப்பட்டன. இதற்கு உதாரணமாக கோர்க் நகரத்தின் அருகில் அமைக்கப்பட்ட கெரிகுறிஹி (Kerrycurrihy) குடியேற்றத்தைக் குறிப்பிடலாம். இதன் நோக்கம் சிறியளவிலான பிரித்தானியர் குடியேற்றப்பட்டு அவர்களால் அமைக்கப்படும் சிறு அளவிலான முன்னேற்றகரமான பயிர்த்தோட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு -அவற்றிலிருந்து கற்ற அனுபவத்தைக் கொண்டு – தமது சொந்த பயிர்தோட்டங்களை சுதேசிகளான அயர்லாந்துகாரரை அமைக்கச் செய்வதாகும். இத்தகைய முன்னுதாரண குடியேற்றங்கள் இருதரப்பினருக்கும் நற்பயனைத் தந்தது. ஆனால் இத்தகைய குடியேற்றங்கள் விரைவிலேயே அரசியல் நோக்கம் கொண்ட குடியேற்றங்களால் மூழ்கடிக்கப் பட்டுவிட்டன.

1556 ல் இரண்டாவது வகையிலான குடியேற்றம் ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து அயர்லாந்தின் வரலாறு குடியேற்றவாசிகளுக்கும் அயர்லாந்து மக்களுக்கு மிடையிலான இரத்தந்தோய்ந்த வரலாறாக மாறிவிட்டது. இன்றும் கூட அதன் தாக்கத்தை வட அயர்லாந்து அனுபவித்து வருகிறது. 1956ல் மன்னனினதும் மகாராணியினதும்; மாநில பெருந்தோட்டம் (Plantation of King’s County and Queen’s County)   என்ற பெயரில் – பிரித்தானிய அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக – அவர்களது நிலங்களை அபகரித்து பிரித்தானிய பெருந்தோட்ட குடியேற்றங்களை நிருவினர். இக்குடியேற்றத்தின் மீதான அயர்லாந்து மக்களின் தாக்குதல்கள் அடுத்த 40 வருடங்கள் நீடித்தது.

இரு தரப்பிலும் குரூரமான படுகொலைகள் இடைவிடாது நடைபெற்றன. ஸ்கொத்லாந்திலிருந்து கூலிப்படைகள் வரவழைக்கப்பட்டு மிலேச்சத்தனமாக சுதேசிகள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதும் சுதேச கோத்திரங்களின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. மலைகளுக்கு பின்வாங்கிய அவர்கள் திடீர் திடீர் தாக்குதல்களை நடத்தினர். அவர்களை போரிட்டு வெற்றி கொள்ள இயலாத பிரித்தானியர் நயவஞ்சகமான முறையில் அவர்களை நசுக்க திட்டமிட்டனர். 1574ல் எசெக்ஸ் பிரபுவைக்கொண்டு ஒரு விருந்தை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்ட தோத்திர தலைவனான(Brian MacPhelim O’Neill பிரைனையும் அவனது மனைவியையும் அவர்களுடன் வருகை தந்திருந்து 200 உறவினர்களையும் படுகொலை செய்தனர். 1578 ல் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து எஞ்சியிருந்த பெரும்பாலானோரை மிருகத்தனமாக வேட்டையாடினர். அவர்களின் தலைவனான றோரி ஓக் ஓ மூர் (Rory Óg Ó Moore)  என்பவரும் அதே ஆண்டு கொல்லப்பட்டார். ஆயினும் கூட அக்குடியேற்றம் எதிர்பார்த்த பயனைத்தரவில்லை.

அதனை அடுத்து  1586ன் பின்னர் உருவாக்கப்பட்ட முன்ஸ்டர் பெருந்தோட்ட குடியேற்றத்திற்கும் (Munster Plantation)  இதே கதிதான் நேர்ந்தது. டெஸ்மன்ட பிரபு என்பவரின் தலைமையில் வெடித்த கிளர்ச்சியை நசுக்கிய பிரித்தானியர் அக்கிளர்ச்சியாளர்களை தண்டிப்பதற்காக அவர்களது நிலத்தைப் பறித்தெடுத்து டெஸ்மன்ட வம்சத்தை அழித்தொழித்து இக்குடியேற்றத்தை நிருவினர். ஆயினும் 1590 களில் மீண்டும் வெடித்த ஒன்பது வருட அயர்லாந்து கிளர்ச்சி 1598ல் இந்த பெருந்தோட்ட பகுதிக்கும் பரவியது. பெரும்பாலான குடியேற்றவாசிகள் விரட்டியடிக்கப்பட்டனர். அக்கிளர்ச்சி குரூரமான முறையில் நசுக்கப்பட்ட பின்னர் மீண்டும் அக்குடியேற்றம் புதுப்பிக்கப்பட்டது. 1606 களின் பின்னர் உருவாக்கப்பட்ட அல்டார் பெருந்தோட்ட குடியேற்றமும் (Ulster Plantation)  இதேவிதமாக இரத்தகரை தோய்ந்தது தான். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட குடியேற்றவாசிகளுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

அயர்லாந்து புரட்சியாளர்களான டான் பரீன்(Daniel “Dan” Breen 1894 –1969)  போன்றவர்கள் குடியேற்றவாசிகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி அவர்கள் குடியேறுவதை அதைரியப்படுத்துவதற்காக அவர்களைப் பிடித்து அவர்களது காதை அல்லது மூக்கை அறுத்து விடுவதை ஒரு வேலைத்திட்டமாக செய்துவந்தனர். இவ்வாறு அங்கம் அறுக்கப்பட்டவர்களைப் பார்த்து சக குடியேற்றவாசிகளும் நடுங்கினர்.

1169 மே முதலாந் திகதி அயர்லாந்து மீதான பிரித்தானியரின் ஆக்கிரமிப்பு தொடங்கியது. ஆனால் பிரித்தானியாருக்கு எதிரான விடுதலை போராட்டம் அங்கு பிரித்தானிய குடியேற்றம் நிருவப்பட்ட 1550களில் இருந்துதான் உருவானது.  அயர்லாந்து மக்கள் சுமார் 500 வருடங்கள் பிரித்தானிய குடியேற்றத்திற்கு எதிராக இடைவிடாது நடத்திவந்த நீண்ட போராட்டத்தின் விளைவாகத்தான் வட அயர்லாந்து தவிர்ந்த ஏனைய 26 மாவட்டங்களைக் கொண்ட பெரும் பகுதி – இறுதியாக அயர்லாந்து குடியரசு சேனை (Irish Republican Army (IRA) நடத்திய மூன்று வருட கொரில்லா தாக்குதலினதும் சின்பேனின் Sinn Féinபுரட்சிகர ஜனநாயக போராட்டமும் இணைந்ததன் விளைவாக – 1922ல் சுதந்திரம் பெற்றது.

மண்ணுக்கான போராட்டமே அயர்லாந்து மக்களின் விடுதலையாக பரிணமித்து அவர்களின் விடுதலைக்கான அடிதளமானது. ஆயினும் வட அயர்லாந்தை அவர்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். அது ஐக்கிய இராச்சியத்தின் கீழ் ஒரு தனிமாநிலமாக சமரசம் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. அன்று ஏற்படுத்தப்பட்ட வெளியார் குடியேற்றங்கள் அயர்லாந்தை இரண்டாக கூறுபோடுவதற்கு காரணமாயமைந்தது.

 

பலஸ்தீனியர்களின் அனுபவம்:

ஐ.நா. ஜூன் 1946 முதல் மே 1948 வரையிலான காலப்பகுதியில்  பலஸ்தீனத்தில் வாழ்ந்து அதன் பின்னர் வெளியேற்றப்பட்டவர்களை பலஸ்தீன அகதிகள் என அழைக்கிறது.

1947ல் பலஸ்தீன பிரிவினையை ஐ.நா. அங்கீகரித்த பின்னர் தொடங்கிய பலஸ்தீன படுகொலைகளை அடுத்து குறிப்பாக 1948 இஸ்ரேல் – அரபு யுத்தத்தை தொடர்ந்து 85 வீதமான பலஸ்தீனயர்கள் தமது நாட்டை விட்டு வெளியேறினர்.

ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான புள்ளிவிபரப்படி பலஸ்தீனர்களின் மொத்த சனத் தொகையில் 30 சத வீதமான மக்கள் – அதாவது 4,966,700 பேர் – தற்போது ஜோர்தானிலும் (1979580 பேர்) லெபனானிலும் (436154 பேர்) சிரியாவிலும் (486946) காசாவிலும்(1167572) மேற்கு கரையிலும் (1167572 பேர்) உள்ள 58 அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் அகதிகளாக இருக்கின்றனர்.

இன்று பலஸ்தீனியர்கள் நடத்தும் போராட்டம் கூட தங்கள் தாய்மண்ணில் அரசியல் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய குடியேற்றத்தை அப்புறப்படுத்துவதற்கான – அக் குடியேற்றங்களுக்கு எதிரான தாய் மண்ணுக்கான போராட்டமாகும்.

அன்று அவர்கள் தமது மண்ணைவிட்டு ஓடியதற்காக இன்று கூட அவர்கள் போராட வேண்டியுள்ளது.

கீழே தரப்பட்டுள்ள தேசப்படம் பலஸ்தீன நில அபகரிப்பின் குரூர முகத்தை நன்குபுலப்படுத்துகிறது.

 

pp-1

 http://whatreallyhappened.com/WRHARTICLES/mapstellstory.html

 

பலஸ்தீனத்தினத்தில்  காலகாலமாக யூதர்கள் வாழ்ந்த போது அராபியர்களுக்கும் அவர்களுக்கு மிடையில் மோதல் நிலைமை இஸ்லாமியர்களின் ஆட்சிகாலத்தில் பெரும்பாலும் இருக்கவில்லை – இருசாராரும் சமாதான சக ஜீவனம் நடத்திவந்தனர். ‘சியோன் அழைக்கிறது’ என்ற வாசகம் அவர்களது மதத்தோடு இணைந்த கோஷமாக இருந்த போதும் அது ஒரு ஆன்மீக எண்ணமாகவே இருந்தது – அரசியல் கோஷமாக இருக்கவில்லை. யூத அரசுபற்றிய எண்ணம் அராபியர் மத்தியில் வாழ்ந்த யூதர்கள் மத்தியிலிருந்து உருவாகவில்லை.

துருக்கியின் ஒட்டோமன் சாம்ராச்சியத்தின் கீழ் இருந்த பலஸ்தீனம்  நிலபிரபுத்துவ தன்மை மிகுந்ததாகவும் பின் தங்கியதாகவும் இருந்தது. நவீன முதலாளித்துவத்தின் தாக்கம் மந்தமாகவே இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தமான தேசியவாதத்தின் பாதிப்பு இங்கு குறைவாகவே இருந்தது. இதனாற்றான் மத்திய கிழக்கிற்கு வெளியே முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து தேசியவாத சித்தாந்தத்தில் பழக்கப்பட்ட யூதர்களின் மத்தியிலிருந்து அரசியல் சியோனிசம் உருவானது. மேற்கு ஐரோப்பாவில் யூதவிரோத சித்தாந்தம் (anti- Semitism) தீவிரமடைந்து யுதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி யூத படுகொலைகள் நடைபெறத்தொடங்கிய போதே தமக்கென தனியான நாடு வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாக் கொண்ட அரசியல் சியோனிசம் (Political Zionism) மேற்கு ஐரோப்பாவில் உருவானது.

19ம் நூற்றாண்டின் முடிவிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ரஷ்யாவில் அடிக்கடி இடம் பெற்ற இனப்படுகொலைகளும் யூதர்கள் மீது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் விதித்த குடியேற்ற கட்டுப்பாடுகளும் அதிகரித்து வந்த யூதவிரோத போக்கும் யூத வெளியேற்றத்தை ஊக்குவித்தது. 1882 முதல் 1903 வரையிலான இக்காலப்பகுதியில்  சுயமான பலஸ்தீனத்திற்கு பாதுகாப்பு தேடி சென்ற யூதகுடிப் பெயர்வு முதலாவது அலியாஹ் (First Aliyah) எனப்படுகிறது. இவ்வாறு பாலஸ்தீனம் சென்றவர்களின் தொகை 25000 முதல் 35000 வரை இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணிப்பிட்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் சிறு சிறு கூட்டங்களாக அங்கு சென்றதாலும் அவர்களிடம் அரசியல் நோக்கு இல்லாததாலும் – யூதர்களின் எண்ணிக்கை சில பகுதிகளில் அதிகரிப்பது அங்கு வாழ்ந்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டு வந்த போதும் கூட- அவர்களுக்கு அங்கு பெரிய எதிர்ப்பு இருக்கவில்லை.

இனமோதல்கள் மிக அரிதாகவே அக்காலப்பகுதியில் ஏற்பட்டது. பென்னி மொரிஸ்Benny Morris   என்பவர் மேற்கொண்ட ஆய்வின்படி 1882 டிசெம்பரில் தான் அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான ஒரு சிறு இனமோதல் முதற்தடவையாக பதிவாகியிருக்கிறது. அதுகூட தற்செயலாக ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவமே. Safed என்ற இடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பதிய யூத குடியேற்றத்தை காவல் செய்து கொண்டிருந்த யூதன் ஒருவன் ஒரு அராபியனை தற்செயலாக சுட்டு கொன்றுவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 200 அராபியர்கள் அந்த யூத குடியேற்றத்தைத்  தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தினர். ஆனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தொடர்ந்தும் அந்த யூத குடியேற்றம் அங்கு இருந்தது. இதனை விட சற்று மேசமான – ஆனால் சிறிய -இன்னொரு சம்பவம் 1886 மார்ச் மாதம் பெட்டா டிக்வாக் Petach Tikvag  பகுதியில் இடம்பெற்றது. அதில் ஐந்து யூதர்கள் காயமடைந்தனர் அவர்களில் ஒரு வயோதிப மாது நான்கு நாட்கள் கழித்து மாரடைப்பால் மரணமடைந்தார்.

யூதர்களுக்கென ஒரு தனியான அரசு ஜெருசலத்தை மையமாகக் கொண்டு பலஸ்தீனத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக முன் வைத்தவர் வியன்னாவில் வாழ்ந்த ஒரு யூத பத்திரிகையாளர். அவரது பெயர் தியோடர் ஹேர்சல் (Theodor Herzl). இவர் 1896 ல் எழுதிய ‘யூத அரசு’(Der Judenstaat)   என்ற நூலில் முன்வைக்கப்பட்ட யூதர்கள் தம்மைப்பாது காத்துக் கொள்வதற்கு தமக்கென தனியான ஒரு அரசு தேவை என்ற கருத்தை ஆராய்வதற்காக முதலாவது சியோனிச மாநாடு 1897 ல் சுவிட்சலாந்திலுள்ள பாசல் நகரில் கூடியது. இம்மாநாடு பலஸ்தீனத்தில் இஸ்ரேலை உருவாக்குவதற்கான திட்டத்தை பாசல் வேலைத்திட்டம் என்ற பெயரில் தீட்டியது. இது வகுத்த திட்டமிட்ட குடியேற்ற திட்டமே படிப்படியாக யூத- பலஸ்தீன உறவை மோசமடையச் செய்தது.

இத்தகை திட்டமிட்ட குடியேற்றங்கள் Second Aliyah  –  இரண்டாவது அலியாஹ் என்றழைக்கப்படுகிறது.

ஆயினும் ஒரு வித்தியாசம் இக்குடியேற்றங்கள் இஸ்ரேல் என்ற நாட்டை மே 14 ந் திகதி 1948 – தனது மென்டேட் முடிவுக்கு வருவதாக பிரித்தானியா அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பதாக – டேவிட் பென் குறியன் David Ben-Gurion    பிரகடனப்படுத்தும் வரை எந்த அரசாலும் மேற் கொள்ளப்படவில்லை. அவை யாவும் மிகவும் திறமையான முறையில் தமது நவீன அறிவாற்றலைப்  பயன்படுத்தி நுட்பமான முறையில் வெளிநாடுகளில் வசித்த யூதர்களால் அமைக்கப்பட்ட , JNFஎன சுருக்கமாக அழைக்கப்படும் –Jewish National Fund  யூத தேசிய நிதியம் என்ற சியோனிச தொண்டர் நிருவனத்தினூடாவும் யூத கலனியல் டிரஸ் Jewish Colonial Trust  என்ற வங்கியினூடாகவுமே மேற்கொள்ளப்பட்டது. யூத தேசிய நிதியத்தைப் போன்ற மற்றொரு அமைப்பை உலக வரலாற்றில் வேறெங்கும் காணமுடியாது. இதன் மறுபக்கம் குரூரம்  கபடத்தனம் சூழச்சிகள் வன்மம் அனைத்தையும் கொண்டது.

திட்டமிட்ட அரசியல்ரீதியான குடியேற்றங்கள் அமைக்கப்படத் தொடங்கிய பின்னர் இன உறவு அங்கு படிப்படியாக மோசமடைந்து தீவிரவடித்தை எடுக்கத் தொடங்கியது. 1908 ல் ஏற்பட்ட தேசியவாத தன்மைவாய்ந்த மோதலில் 13 யூதர்களும் 4 அராபியர்களும் கொல்லப்பட்டனர். இது யூத அராபிய இன உறவு மோசமடைவதன் தொடக்கத்தைக் குறித்தது. யூத குடியேற்றத்திற்கு எதிராகவே அராபு தேசியவாதம் உருவானது.

1908ல்; ஹய்பாவில் பிரசுரமான முதலாவது அரபு பத்திரிகையான அல் கார்மில் (al-Karmil)  யூதர்களுக்கு நிலத்தை விற்பனை செய்யவேண்டாம் என்ற கருத்தை வெகுவாக பிரச்சாரம் செய்தது.

1918 நவம்பர் மாதம் ஜபாவிலுள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லீம் களும் ஒரு கூட்டமைப்பை யூதர்களின் தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக ஆரம்பித்தனர்.

1920 பெப்ரவரி 27 ந்திகதி கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெருமளவில் வரத்தொடங்கிய யூதர்களின் வருகையைக் கட்டுப்படுத்தக் கோரி ‘எமது நாடு எமக்கே’ என்ற கோஷத்தின் கீழ் ஆயிரத்துக்கும் அதிகமாக அராபியர்கள் ஜெருசலேத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இதற்கு பிரித்தானிய உரியமுறையில் செவி சாய்க்காததால் மார்ச் முதலாம் திகதி டெல் ஹாஜ் என்ற யூத குடியேற்றத்தின் மீது அராபிய இராணுவத்தினர் தாக்குதல் தொடுத்தனர். இதில் எட்டு யூதர்கள் கொல்லப்பட்டனர். மீண்டும் மார்ச் மாதம் 8ல் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் ஒன்று யூத குடியேற்றத்திற்கு எதிராக ஜெருசலத்தில் நடைபெற்றது.

இச்சமயத்தில் அகண்ட அராப். மத-தேசியவாதியான (PanArabIslamic Nationalist) முகம்மது அமின் அல்ஹ+_சைனி Muhammad Amin Al-Husayniயின் ஆதரவாளர்கள் அதே ஆண்டு ஏப்ரல் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் யூதர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 46 யூதர்கள் கொல்லப்பட்டனர். இது நிபி மூசா அரபு கலவரம் Nebi Musa” Arab riots”என்றழைக்கப்படுகிறது. இதுவே யூதர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதரீதியில் தயாராக வேண்டும் என்ற சிந்தனையை தோற்றுவித்து. தம்மைப்பாதுகாத்துக் கொள்வதற்கான ஹெகானாHaganah என்ற  ஆயுத குழு தோன்றுவதற்கு இக்கலவரம் காரணமாயமைந்தது.

1921 மே 1முதல் 7 வரை  ஜபாவில் துயககய)  நடைபெற்ற இனகலவரத்தின் போது 47 யூதர்களும் 48 அராபியர்களும் கொல்லப்பட்டனர். ஹெகானா ஆயுதக குழு அராபியர்களைத் திருப்பி தாக்கியது. ஆயினும் அதனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எனவே ஆயிரக்கணக்கான யூதர்கள் எண்ணிக்கையில் கணிசமான சக யூதர்கள் வாழ்ந்த  டெல் அவிவுக்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தனர்.

Jewish National Fund –  யூத தேசிய நிதியமும் -யூத குடியேற்றமும்

இந்த  யூத தேசிய நிதியம் யூத கலனியல் டிரஸ்டுடன் கை கோர்த்தவாறு எவ்வாறு யூத குடியேற்றங்களை நிருவியது – அது கடைபிடித்த யுக்திகள் என்ன -என்பதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

Jewish National Fund –  யூத தேசிய நிதியம்

1884 போலந்திலுள்ள கட்டேவைஸ் Katowice என்ற நகரில் நடைபெற்ற சியோனிச மாநாட்டில் பேராசிரியர் சிவி ஹேர்மன் சபீறா Prof. Zvi Herman Shapira  என்பரே இப்படியான ஒரு அமைப்பின் அவசியத்தை முதன் முதலாக முன் வைத்தவராவர்.1901ல் சுவிட்சாலாந்திலுள்ள பாசல் நகரில் நடைபெற்ற ஐந்தாவது சியோனிச மாநாட்டில் இவரது இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டு பரிட்சாத்திகமாக இயங்கியது. 1907 ஏப்ரல் மாதம்;World Zionist Organization (WZO)     உலக சியனிச அமைப்பின் கீழ் இயங்கும் “Jewish National Fund”” யூத தேசிய நிதியம்  ஒரு பிரித்தானிய கூட்டுத்தாபனமாக பலஸ்தீனிர்களின்  நிலங்களை வாங்கி யூத குடியேற்றங்களை அமைத்து  படிப்படியாக இஸ்ரேல் நாட்டை தோற்றுவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இதற்கான நிதியை பல நாடுகளில் பரந்து வாழ்ந்த  யூதர்களிடமிருந்து நன்கொடையாகத் திரட்டினர். இதற்கு பெரும் தனவந்த யூதர்கள் முதல் சாதாரண யூத தொழிலாளர்கள் வரை சகல மட்டத்தவரும் நன்கொடை வழங்கினர்.

Jewish Colonial Trust  யூத காலனியல் டிரஸ்ட்:

யூத காலனியல் டிரஸ்ட் 1899 மார்ச் மாதம் லண்டனில் பதிவு செய்யப்பட்டது. அது 27 பெப்ரவரி 1902 ல் Anglo-Palestine Company அங்கலோ- பலஸ்டைன் கம்பெனியை உருவாக்கியது. இவ்விரு நிருவனங்கயையும் ஓரே இயங்குனர் சபையே நிர்வகித்தது. அதனால் நாளடைவில் டிரஸ்ட் கலைக்கப்பட்டு அதன் பணியையும் கம்பெனியே மேற்கொண்டது. 1931 ல்  அது   அங்கலோ- பலஸ்டைன் வங்கி  Anglo-Palestine Bank   என பெயர் மாற்றம் பெற்றது. 1951ல் Bank Leumi Le-Israel (National Bank of Israel) இஸ்ரேல் தேசிய வங்கி என மீண்டும் அதன் பெயர் மாற்றம் பெற்று இஸ்ரேலின் மிகப்பெரிய வங்கியாக தற்போது திகழ்ந்து வருகிறது.

யூத தேசிய நிதியம்; பிரதான கடமை பலஸ்தீனத்திலுள்ள நீர்வளமுள்ள செழிப்பான நிலங்களை தெரிவுசெய்து மலிவான விலைக்கு வாங்கி யூதர்களை குடியேற்றி அவர்களது நலன்களை கவனிப்பதாகும். இதன் ஒரே குறிக்கோள் நாளடைவில் தனியான யூத அரசு ஒன்றை அமைப்பதற்கான அடிதளத்தை அமைப்பதாகும். எனவே பாதை வசதியுள்ள யூத குடியேற்றங்களை தொடராக அடுத்தடுத்து அல்லது அருகருகே அமைப்பதில் அது கவனம் செலுத்தியது.

தம்மை வரவேற்று தமக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையையும் ஜீவாதாரத்தையும் வழங்குவதற்கு ஒரு அமைப்பு அங்கிருக்கும் போது அங்கு சென்று குடியேற -பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்த – ஐரோப்பிய யூதர்கள் – குறிப்பாக ரஷ்யாவிலிருந்தும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் செல்லத் தொடங்கினர். இவர்களை அங்கு அனுப்பிவைப்பதற்கு சகல சாத்தியமான வழிவகைளையும் உலக சியனிச அமைப்பு கடைபிடித்தது. சட்டவிரோதமாக யூதர்களை சிறிய படகுகளில் கடத்தி பலஸ்தீனத்தில் குடியேற்றினர். இவ்வாறு யூதர்களைக் கடத்தும் படகுகள் கடலில் பிடிபடும் போது அவை சைப்ரஸ் தீவுக்கு திருப்பியனுப்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டன.

பிற்காலத்தில் சட்டவிரோதமாக யூதர்களை கடத்துவதற்காக அது சொந்தமான கப்பல்களையும் பயன்படுத்தியது. உதாரணமாக அதன் பட்றியா Patria  என்ற கப்பல் ஐரோப்பாவிலிருந்து சட்டவிரோதமாக யூதர்களை ஏற்றிக்கொண்டு பலஸ்தீனம் வந்தபோது அதனை ஹய்பா துறைமுகத்தில் பிரித்தானியா – அராபியர்களின் எதிர்ப்பு காரணமாக -தடுப்பு காவலில் வைத்தது. அவர்களை மொரிசியஸ் நாட்டுக்கு நாடுகடத்த முயன்ற போது யூத துணைப்படையான Haganah  ஹெகானாஅக்கப்பலுக்கு  வெடி குண்டு வைத்து சிறு சேதத்தை ஏற்படுத்த முயன்றது. அவ்வாறு சேதமுற்ற கப்பலால் பயணத்தை தொடர முடியாது அதிலுள்ள யூதர்கள் கரையிறக்கப்படுவார்கள் என அது நம்பியது. ஆனால் அது பெரும் விபத்தை ஏற்படுத்தி அதனால் 1940 நவம்பர் 25ந் திகதி கப்பலில் இருந்த 252 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

யூத தேசிய நிதியம் மிகக்கவனமாக பலஸ்தீன நிலங்களை தெரிவு செய்தது. அதுமாத்திரமல்ல மலைப் பாங்கான இடங்களிலும் விளைச்சலற்ற தரைகளையும் அது வாங்க வில்லை. வளமாக நிலங்களை மாத்திரமே வாங்கியது. (இன்று இலங்கையில் தமிழ் பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமும் இவ்வாறே தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வை சீரழிக்கும் நோக்குடனேயே செய்யப்படுகிறது)

அதற்கு காணிகளை வாங்கும் உரிமை இருந்ததே தவிர விற்பதற்கான உரிமை இருக்கவில்லை. எனவே அது யூதர்களுக்கு தாம் வாங்கும் காணிகளை குத்தகைக்கு கொடுத்தது அல்லது பண்ணைகளை அமைத்து அதில் யூதர்களை குடியேற்றியது. காணிகள் வாங்கும் போது அராபியர்களை ஆத்திரப்படுத்தாமல் இருப்பதில் மிகக் கவனமாக இருந்தது. இடைத்தரகர்களாக அராபியர்களை ஏஜெண்டுகளை நியமித்து அவர்களினூடாகவே காணிக்கு பேரம் பேசுதல் ,அளத்தல், சட்ட ஆவணங்கள் தயார் செய்தல் போன்ற வெளிப்படையான காரியங்களைச் செய்வித்தது.

யூத தேசிய நிதியம் பலஸ்தீனியர்களிடமிருந்து வாங்கும் நிலத்தில் அவர்கள் குடியிருப்பதையும் அவற்றில் யூதர்கள் அல்லாதோரை வேலைக்கு அமர்த்துவதையும் அனுமதிப்பதில்லை. எனவே யூதர்களால் யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் இனவாத செயற்பாட்டை economic racisim  ‘பொருளாதார இனவாதம்’ என ஆய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள்.

அது தனது முதலாவது நிலக்கொள்முதலை 1903 ல் ஹெடேரர் (Hadera)   என்ற இடத்தில் தொடங்கியது.  ஐசக் என்ற வள்ளல் வழங்கிய 50 ஏக்கர் காணியில் அதன் முதலாவது குடியேற்றத்தைத் தொடங்கியது.1909 ல் முதலாவது கிபுட்ஸ் (Kibbutz) பண்ணை குடியேற்றத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது.

பலஸ்தீனம் ஒட்டோமன் சாமராச்சியத்தின் கீழ் (1516 ம் ஆண்டு முதல் 1917 வரை) 500 வருடங்களுக்கு மேலாக இருந்துவந்தது.  1923 செப்தம்பர் 29 முதல் 1948 மே 15 வரை பிரித்தானிய மென்டேட் அரசாக இருந்துவந்தது. ஒட்மோமன் சாம்ராச்சியத்தின் கடைசிகாலத்தில் அது ஏனைய சாம்ராச்சியங்களை விட மிகவும் பின்தங்கி இருந்தது. நவீன இயந்திர கைத்தொழிலையும் விஞ்ஞானத்தையும் ஏற்று வளர்ச்சிபெறக்கூடிய கட்டமைப்பையும் சமூக நிலைமைகளையும் அது கொண்டிருக்கவில்லை.

பலஸ்தீன நில உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய சட்ட ஆவணங்கள் நிலத்தின் அளவு அவற்றின் எல்லைகள் போன்ற அடிப்படை விடயங்களைக் கூட pl-01முறையாக செய்யப்பட்டிருக்கவில்லை. தனியாருக்கு சொந்தமான நிலம்/ முல்க்/ என்றழைக்கப்பட்டது. அரசுக்குரிய நிலம்miri எனப்பட்டது. இவை பெரும்பாலும் குத்தகைக்கு விடப்பட்டன.  மத நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகளும் இருந்தன. காணிவிவகாரங்களை tapu  டப்பூ என்ற அலுவலகம் கவனித்து வந்தது. பெரும் பகுதி நிலம் பதிவு செய்யப்படாமல் இருந்தது. அதன் நில அளவு முறையான dunums    டும்னம்ஸ் இடத்திற்கு இடம் மாறுபட்டது. அத்துடன் மத்தியப்படுத்தப்படாத பலஸ்தீனத்தின் நிலங்கள் பெரும்பாலும் அராபிய கோத்திரங்கறுகளுக்கே சொந்தமாக இருந்தது. ஒரு சில பெரும் நிலபிரபுகளே அங்கிருந்தனர். அவர்களில் பெரும்பாலான வெளியார்- நிலபிரபுக்கள் absentee landlords  பலஸ்தீனத்திற்கு வெளியில் வாழ்ந்தனர்.

பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலநிர்வாக சீர்திருத்தங்களைப் புரிந்து கொள்ளும் அறிவும் அனுபவமும் பலஸ்தீனயர்களிடம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் மேற்குலகத்திலிருந்து வந்து குடியேறிய யூதர்களால் ஆன – பலஸ்தீன நிலங்களை காசுக்கு வாங்குவதையே குறிக்கோளக் கொண்டிருந்த- யூத தேசிய நிதியம் -நிலத்தைக் கொள்முதல் செய்வது அளப்பது சட்டரீதியாக ஆவணங்களை தயாரிப்பது போன்ற விடயங்களில் அனுபவம் பெற்ற நிபுணர்களையும் சட்டத்தரணிகளையும் கொண்டிருந்தது. அவர்கள் பிரித்தானிய அதிகாரிகளுடன் ஆங்கிலத்திலும் பலஸ்தீனிய நிலஉடமையாளர்களுடன் அரபு மொழியிலும் பேசக்கூடிய ஆற்றலை வளர்த்துக்கொண்டனர்.

அத்துடன் பலஸ்தீனத்தில் நடைமுறையிலிருந்து நில பரிமாற்றம் தொடர்பான விவகாரங்களிலுள்ள ஓட்டைகள் அனைத்தையும் அறிந்து அதனைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றனர். உதாரணமாக 1929 ல் யூத தேசிய நிதியம் 30 ஆயிரம் டும்னம்ஸ் நிலத்தைEmek Hepher     ஹெப்பர் என்ற கிராமத்தில் வாங்கியது. அதனை அரசாங்கத்துக்குரிய நில வரியை குறைத்து செலுத்துவதற்காக 5000 டும்னம்ஸ் என அளவை குறைத்து நிலப்பதிவு இலாகாவில் பதிவு செய்தது.

1924 ஆண்டாகும் போது பலஸ்தீன நிலம் பற்றியும் அவற்றின் பயன்பாடு தொடர்பாகவும் தகவல் திரட்டுவதற்குரிய தனியான ஆவண காப்பகம் ஒன்று யூத தேசிய நிதியத்தில் உருவாகிவிட்டது. அவர்கள் காரியங்களை விஞ்ஞானபூர்வமாக செய்தனர்.

பலஸ்தீனர்களுக்கு விவசாயம் அப்போது அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கவில்லை. அவர்கள் வறுமை நிலையில் இருந்தனர். இந்நிலையில் அங்கலோ- பலஸ்டைன் வங்கிஅவர்களின் காணிகளை மிக கவர்ச்சிகரமான நிபந்தனைகளை வழங்கி அடமானம் பிடித்து காசு கொடுத்தது. பலஸ்தீன விவசாயிகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் தமது நிலத்தை மீட்க முடியமாற் போய் காணியை இழக்க நேர்ந்தது. இவ்வாறு அங்கலோ- பலஸ்டைன் வங்கி கபளிகரம் செய்த காணிகள் யூத தேசிய நிதியத்திடம் கைமாறின. 1930 ஜூன் மாதம்; வரை யூத தேசிய நிதியம் கொள்முதல் செய்த 90 வீதமான காணிகள் தாம் பட்ட கடனுக்காக விற்கப்பட்ட காணிகளாகும்.

யூதரின் டிரஸ்ட என்ற அடையாளத்தை துறந்து -யூத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு Anglo-Palestine Company  அங்கலோ பலஸ்டைன் கம்பெனி – (பின்னர் அங்கலோ பலஸ்டை வங்கி) என 1902 லேயே பெயர் மாற்றம் செய்துவிட்டமையானது பெரிதும் சாதகமாக இருந்தது. ஆங்கில கம்பெனி ஒன்று தமக்கு கடன் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு பலஸ்தீன அராபியர்கள் அதனிடம் தமது காணிகளை அடமானம் வைத்து அதன் பொறிக்குள் வீழந்தனர். இதன் கிளைகள் முக்கிய நகரங்கள் எங்கும் திறக்கப்பட்டன. (இன்று தமிழ் பகுதிகளில் கிராமந்தோறும் அமைக்கப்பட்டு வரும் வங்கிகளின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்)

யூத தேசிய நிதியம் பலஸ்தீன நிலத்தை வாங்கி குடியேற்றங்களை நிருவி அதனூடாக ஒரு யூத அரசை உருவாக்குவதை ஒரே நோக்கமாகக் கொண்டு செயற்படுவதில் சிறப்பான வெற்றியை ஈட்டியதற்கான ஐந்து பிரதான காரணங்களை பின்வருமாறு கூறலாம்:

1.    ஒட்டோமன் காலத்து நில பங்கீடு நில அளவை நிலப் பதிவு ஆகிய விடங்கள் தொடர்பாக அவர்கள் வளர்த்துக் கொண்ட அறிவு.

2.    பலஸ்தீன அராபிய சமூகத்தின் பலம் பலவீனம் ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டமை.

3.    அராபு மொழியில அராபியர்களுடன் பரிவர்ததனை செய்யவும்; பேசவும் அதேசமயம் ஆங்கிலேயருடன் ஆங்கிலத்தில் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வதற்கும் கற்றுக் கொண்டமை.

4.    பிரித்தானிய உயர்அதிகாரிகளுடன் உறவை வளர்த்துக்கொண்டு பிரித்தானியாவில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் அவற்றினால் தமக்கு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளையும் முன்கூட்டியே அறிந்து கொண்டமை.

5.    பிரித்தானியரின் மென்டேட் 29 செப்தம்பர் 1923 ல் ஆரம்பிக்க முன்னரே பலஸ்தீன நிலம் சம்பந்தமான அறிவைவை கொண்டிருந்தமையும் பிரித்தானிய அதிகாரிகளுக்கு தமக்குப் பாதகமான தகவல்களை வழங்காமல் மறைத்தமையும்.

Haganahஹெகானா  துணைப்படை.

இஸ்ரேலின் உருவாக்கம் பலர் கருதுவதைப்போல ஏகாதிபத்தியம் செயற்கையான முறையில் ஏற்படுத்தப்பட்டதல்ல. சிலர் நினைப்பதைப் போல ஒரு சில நாட்களுக்குள் உருவாக்கப்பட்ட ஒன்றும் அல்ல. சுமார் அறை நூற்றாண்டு காலமாக சியோனிஸ்டுகள் ஒவ்வொரு விடயத்தையும் திட்டமிட்டு செய்து வந்ததன் விளைவாகவே அது உருவானது.

அவர்களது தரப்பிலிருந்து கூறுவதாக இருந்தால் அவர்கள் தமது சுயமுயற்சியால் இஸ்ரேலை உருவாக்க படிப்படியான இடைவிடாத திட்டமிட்ட செயற்பாடுகளை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் வல்லரசுகள் உதவிக்கு வந்தன. அந்த சந்தர்ப்பத்தை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டு தமது தேவைக்கேற்ற படியான பலம் பொருந்திய அரசை ஒன்றை உருவாக்கிக் கொண்டனர் என்று கூறலாம். மறுபுறத்தில் பொது நிலையிலிருந்து கூறுவதனால் யூதர்கள் தமது சுயமுயற்சியால் உருவாக்கிக் கொண்டிருந்த இஸ்ரேலை ஏகாதிபத்தியங்கள் தமது தேவைக்காக துரிதப்படுத்தி – தமது தேவைக்காக -தம்மில் தங்கியிருக்கும் ஒரு நாடாக மாற்றியமைத்துக் கொண்டனர்.

எனினும் ஒரு விடயத்தை மறந்து விடலாகாது. இரண்டாம் உலக மாகா யுத்த முடிவில் அரும்பு நிலையில் ஒரு இஸ்ரேலை சியோனிஸ்டுகள் உருவாக்கியிருந்தார்கள் யூத தேசிய நிதியம் ஹெகானா  துணைப்படை. ஆகிய இரண்டும் இல்லாமல் அவற்றின் பங்களிப்பு இல்லாமல் இஸ்ரேல் உருவாகியிருக்க முடியாது.

1900 ஆண்டின் போது பலஸ்தீனத்தின் சனத்தொகையில் 96 சத வீதத்தினர் பலஸ்தீன அராபியர்கள், 4சத வீதத்தினரே பலஸ்தீன யூதர்கள். 1948 ம் ஆண்டாகும் பலஸ்தீனியர்களின் இத்தொகை – யூத தேசிய நிதியத்தின் செயற்பாடு காரணமாக- 30 சதவீதமாக அதிகரித்திருந்தது. 1900 ஆண்டில் 1 சத வீத நிலத்தை மாத்திரமே கொண்டிருந்த பலஸ்தீன யூதர்கள்- யூத தேசிய நிதியத்தின் செயற்பாடு காரணமாக- 1948 ல் 6 சதவீதமான நிலத்தை கொண்டிருந்ததனர். இது வெளிப்பார்வைக்கு சிறிய வீதமாக இருப்பினும் அவர்கள் விரிவுபடுத்திய நிலபரப்பு மிகவும் வளமானது கேந்திர முக்கித்துவம் வாய்ந்தது.

இஸ்ரேலியர்களின் ஆயுத குழுக்களும்   கூட சுயமாகவே வெளிநாட்டுகளிலிருந்து வரத்தொடங்கிய யூதர்களால் உருவாக்கப்படன. சுதேச யூதர்களுக்கு அவற்றை அமைப்பதற்கான தேவை இருக்கவில்லை.  வெறுமனே காவல்புரியும் சிறு குழுக்களாக ஆரம்பித்து முறையான பயிற்சிபெற்ற 30 ஆயிரம் பேரைக்கொண்ட வலிமை மிக்க இராணுவமாக யூத ஆயுத குழுக்கள் வளர்ச்சி பெற்றிருக்காவிட்டால் – யூத தேசிய நிதியத்தின் செயற்பாடு காரணமாக ஒரு நில அடிதளம் உருவாகியிருக்கா விட்டால் – இஸ்ரேல் என்ற நாடு 1948ல் உருவாகியிருக்க முடியாது.

1907 ல் Bar-Giora  பார் கிஓரா என்ற பெயரில் சிறு ஆயுத குழுக்களை தமது புதிய குடியேற்றங்களை காவல்புரிவதற்காக பலஸ்தீன யூதர்கள் உருவாக்கினர். அது காவல்புரியும் பணியிலேயே பெரும்பாலும் ஈடுபட்டது. வெளியார் தாக்க வரும்போது குடியேற்றவாசிகளை எச்சரித்து அவர்கள் ஓடி ஒளிவதற்கு இவை உதவி செய்தன. பாதுகாப்பு பிரச்சினை அதிகரித்த போது 1909 ல் Hashomer  ஹசாமர் என்ற ஆயுதந்தரித்த காவற்படை உருவாக்கப்பட்டது.

1921ல் முதலாவது பாரிய ஜப்பா இனக்கலவரம்