Home » இதழ் 13 » * ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு- தோழர் வில்பிரட்

 

* ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு- தோழர் வில்பிரட்

 

 கடந்த ஜுலை மாதம் பிரான்சில் நடைபெற்ற நிகழ்வில் தோழர் வில்பரட் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

மிழில் வி.சிவலிங்கம்

vil

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே,
இலங்கைச் சமூகம் தொடர்பான செயற்பாட்டாளன் எனக் கௌரவித்து என்னை அழைத்தமைக்கு இலங்கையர் ஒற்றுமை ஒன்றியத்தினருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1971ம் ஆண்டில் ஜே வி பி இனரால் மேற்கொள்ளப்பட்ட எழுச்சி காரணமாக நாட்டில் அவசரகால விதிகள் கொண்டு வரப்பட்டன. இவற்றிற்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம், புரட்சிகர கம்யூ. கட்சி என்பன போராட்டங்களை நடத்தின. அவ்வேளையில் தான் இப் போராட்டங்களில் நானும் இணைந்தேன்.

இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்குமாறு இலங்கை அரசிற்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம். இப் போராட்டங்களை நாம் நடத்துவது ஜே வி பி இனரின் அல்லது விடுதலைப் புலிகளது அரசியல் திட்டங்கள் அல்லது தந்திரோபாயங்களுக்காக அல்ல. பதிலாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது அரசியல் அல்லது செயல்களுக்கு  அப்பால் அடிப்படை மனித உரிமை உண்டு என உறுதியாக நம்புவதால் செயற்படுகிறோம். துர்அதிர்ஸ்டவசமாக  ஜே வி பி இனரோ அல்லது விடுதலைப் புலிகளோ ஏனையோரின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை. அத்துடன் இவ்வாறான மீறல்களை மேற்கொள்பவர்களும் இவர்களே. இவை அவர்களுக்கான பிரச்சனைகளே தவிரஎமக்குரியதல்ல.

 

மனித உரிமைக்கும், ஜனநாயக உரிமைக்குமான எமது ஈடுபாடு என்பது அவர்களின் செயற்பாடுகளுக்காகவோ ஒழுக்கங்களுக்காகவோ அல்ல, ஒவ்வொரு தனி மனிதனினதும் மனித உரிமைக்காக அவர்களின் நடத்தைகள் எவ்வாறு இருந்த போதும் நாம் எழுந்து குரல் எழுப்பாவிடில் நிலமைகள் எதிர்காலத்தில் படு மோசமாக அமையும் என்பதை உறுதியாக நம்புவதால்செயற்படுகிறோம்.

1975ம் ஆண்டளவில் இடதுசாரித் தோழரான உபாலி குரே அவர்கள் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்திருந்தார். தொழிற்சாலைகளுக்கு அருகே அரசியல் கலந்துரையாடல்களை  நடத்த ஒழுங்குகள் செய்தோம். ஏக்கல தொழில் மையத்திலே முக்கிய கூட்டம் இடம்பெற்றிருந்தது. அங்கே தேசிய இனப் பிரச்சனை குறித்து லெனின் அவர்களின் கோட்பாடுகள் தொடர்பாக  பேசப்பட்டது. அக் கூட்டத்தில் பல அம்சங்களை அவர் குறிப்பிட்டார்.

முதலாவது முதலாளித்துவ ஜனநாயகத்தில் விரும்பினால் பிரிந்து செல்வதுடன் கூடிய சுய நிர்ணய உரிமை ஆகும். இரண்டாவது அவ்வாறான சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை எழும் நிலமையில் அதனை மதிப்பதும், பாதுகாப்பதும் கடமை எனக் குறிப்பிட்டார்.  சோசலிஸ்ட் என்ற வகையில் நாம் பிரிவினைக்காக போராடுபவர்கள் அல்ல ஏனெனில் நாம் உலகம் முழுவதிலும் வாழும் சகல தொழிலாளர்களையும் இணைத்து முதலாளித்துவத்தினையும், அதன் இதர சுரண்டல் வடிவங்களையும் ஒழிப்பதற்காக போராடுபவர்களாகும். மூன்றாவதாக சுய நிர்ணய உரிமை என்பது தேசிய இனப் பிரச்சனை சார்ந்த ஒன்று மட்டும் அல்ல. எமது சமூகத்தில் உயிரியல், கலாச்சாரம், மதம், மொழி போன்ற பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. விசேடமாக இலங்கையில் 50 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் பெண்களாவர். பெண்களுக்கான ஒடுக்கு முறை என்பது மானிட சமூகத்தின் வரலாற்று ரீதியானது என்ற போதிலும் அதுவும் விவசாய சமூக உருவாக்கத்தின் பகுதியாக அவை அமைந்த போதும் இன்று பெண்களுக்கான ஒடுக்கு முறை உலகம் முழுவதிலும் பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. இலங்கையின் மூலை முடுக்கு வரை குடும்ப வன்முறை அதிகரித்துச் செல்கிறது. அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா? சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கு சட்டங்களும், சமூக விதிகளும் பலவிதங்களில்தடையாகஉள்ளன.

ஆரம்ப காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தீவிரவாதம் என்பது 30 இற்கு மேற்பட்ட குழுக்களால் செயற்படுத்தப்பட்டது. அவர்களின் அரசியல் சுய நிர்ணய உரிமை ஒரு குழுவினால் பறிக்கப்பட்டது. 1987ம் 89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதனையே சிங்கள தேசியவாதிகளான ஜே வி பி இனரும் மேற்கொண்டார்கள். இதன் காரணமாக சிங்கள முதலாளித்துவ அரசினால் அவர்களை இலகுவாக அழிக்க முடிந்தது. அவர்களின் ஜனநாயக விரோத செயல்கள், ஒடுக்கு முறைகளால் மக்களிடமிருந்து விலகினார்கள், மக்களும் அவர்களிலிருந்து விலகினார்கள்  இதன் காரணமாகவே 1977 இன் பிற்பகுதியிலிருந்து நாம் ஜே ஆர் மற்றும் பிரேமதாச அரசுகளினதும், மற்றும் தேசியவாத, இனவாத சக்திகளுக்கு எதிராக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.

 

 இன்று யார் அதிகாரத்தில் உள்ளார்  என்பதை விடுத்து மனித உரிமைக்காகபோராடும் நிலையில் உள்ளோம்.. 70பதுகளின் ஆரம்பத்தில் நான் உணவுத் திணைக்களத்தில் வேலை பார்த்தபோது யாரையும் தமிழர் சிங்களவர் எனப் பிரித்துப் பார்த்ததில்லை. அத் திணைக்களத்தின் கணக்காளர் அனைவரும் தமிழர்களே. சிரேஷ்ட எழுதுவினைஞர்களும் அவர்களே. நாம் அனைவரும் நண்பர்கள். காரியாலயத்திலும், தொழிற் சங்கத்திலும் இணைந்தே செயற்பட்டோம். எனது இனிய நண்பர் திரு. ராமசாமி அவர்கள் பருத்தித்துறையைச் சார்ந்தவர். திருமணத்தின் பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றார். 20 வயதினை எட்டிய குழுவினராகிய நாம் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்து ஒரு வாரத்தின் பின் அதாவது 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி ராமசாமி வீட்டிற்குச் சென்று குடாநாடு முழுவதும் சுற்றிப் பார்த்தோம். தேர்தல் முடிந்த பிரச்சாரங்களின் எச்ச சொச்சங்களை நாம் பார்க்க முடிந்தது. அடுத்த 10 நாட்களில் சகலதும் மாறியது. எமது நல்ல நண்பர்களையும் தொடர்புகளையும்இழந்தோம்.

 

ஓவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. சட்டத்தரணி, நீச்சல் ஆசிரியர், சாஸ்திரிய சங்கீத பிரியர், விலங்குகளை நேசிப்பவர், மனித உரிமை செயற்பாட்டாளர், சோசலிஸ்ட் எனப் பல அடையாளங்கள். தேசியவாதி என்பவன் ஓர் அர்த்தமற்ற சிறிய ஒடுங்கிய கண்ணாடி ஊடாகவே ஒவ்வொருவரையும் பார்க்கிறான். அவ்வாறான ஒடுங்கிய பார்வை தவிர்க்க முடியாமல் யதார்த்தினை மறைப்பதால் அடிப்படையில் தவறான அம்சத்தினூடாக மக்களை அளக்கிறான்.

 

நாம் இலங்கையில் நிலைத்து நீடிக்கும் சமாதானத்தை எட்ட வேண்டுமெனில் முதலில் இவ்வாறான தவறான அணுகுமுறையைக் கைவிடவேண்டும். மனிதர்கள் கொண்டிருக்கும் பல்வேறு அடையாளங்களைப் புரிந்து, அதனை அங்கீகரித்து,வெவ்வேறு மக்கள் தமது தேவைக்கு ஏற்றவாறு அடையாளங்களை ஒழுங்கு முறைப்படுத்துகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய மக்களை நாம் எவ்வாறு அடையாளம் காண்கிறோம் என்பது சமாதானத்தினை எட்டுவதற்கு மிக அவசியமாகும்.

 

இன்றைய காலத்தில் தினமும் மனித உரிமை மீறுபவர்களை அறியும்போது அவை அரசினைச் சார்ந்தவர்களாவே உள்ளனர். நாட்கள் வாரமாகி , வாரம் மாதமாகி, மாதம் வருடமாகும் போது இம் மீறல்கள் பலமடங்காகி இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் என்போரின் தொகையும் அதிகரிக்கிறது. இந் நிலையை எட்டும்போது நாம் யாரைக் குற்றம் சாட்டுவது என்ற அடுத்த நிலைக்கு செல்கிறோம். இவ்வாறான செயற்பாடுகள் எவ்வித பலனையும் தரப்போவதில்லை.
இன்றைய யதார்த்தத்தினைப் புரிந்து கொள்வதே அதன் ஆரம்ப புள்ளியாக அமையும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசு தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான நியாயமான தீர்வுகளைத் தரத் தவறியுள்ளது. இதுவே தீவிரவாதத்தை பலப்படுத்துவதற்கான காரணியாக உள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் இக் கூட்டத்தில் நான் கூறக்கூடியது என்னவெனில் மீண்டும் பலமான இடதுசாரி இயக்கத்தை நாம் கட்டி எழுப்புவதே அவசர தேவையாகும். பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்கள் எமது மண்ணையும் அதிகாரத்தையும் சில கல்வியாளர்களிடம் கையளித்துச் சென்றனர். அக் காலகட்டத்தில் செயற்பட்ட இடதுசாரி இயக்கங்கள் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட சில பிரச்சனைகளுக்கான இலக்குகளை எட்டியிருந்த போதும் பல முடிவடையாமல் இன்னமும் உள்ளன.

இடதுசாரி இயக்கத்தினை மீண்டும் கட்டி எழுப்பவேண்டும் என நான் குறிப்பிடுவது என்பது நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜனநாயக விரோத, பேரினவாத எண்ணங்களைக் கொண்டவர்கள், அல்லது நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாசிஸ்ட் இயக்கங்களை ஆதரிப்பவர்கள் இவ் இடதுசாரி இயக்கத்தில் இணைய முடியாது. இதில் ஜே வி பி இனரையும் ஒதுக்கியே கூறுகிறேன். ஏனெனில் அவர்கள் ஜனநாயக விரோத சக்திகள் மட்டுமல்ல பேரினவாதிகளுமாகும். மறுபக்கத்தில் தமிழ்த் தேசிய இயக்கத்தின் முற்போக்குவரையறைக்குள் உள்ளவர்களை இணைப்பது அவசியம் என எண்ணுகிறேன். குறிப்பாக இடதுசாரிக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சனைகளை அணுகுபவர்கள் அல்லது இடதுசாரிச் சிந்தனைகளின் திசைவழிகளில் நீண்ட காலம் பயணித்தவர்கள் அடங்குவர்.

இடதுசாரிப் போக்குடன் வேறு அரசியல் அமைப்புகளில் செயற்படும் தோழர்களே இடதுசாரி இயக்கத்தின் மீளுருவாக்கத்திற்கு பிரதான பங்களிப்பாளர்களாக வேண்டும். இவ்வாறான உருவாக்கத்தின்போது தமிழ்த் தேசியவாதத்திற்குள் இயங்கும் முற்போக்கு கொள்கைகளை நோக்கி நகரும் தோழர்களை அவை ஈர்த்தல் அவசியமானது. அதே போன்றே முஸ்லீம் மற்றும் மலையக தோழர்களையும் அக் கொள்கைகள் சென்றடைய வேண்டும்.

 

இது இலகுவான இலக்கு அல்ல. அதுவும் அவ்வாறான இணைப்பு முயற்சிகளை திணித்துச் செல்லவும் முடியாது. இதற்கு மிக அதிக அளவிலான பிரயத்தனமும், பொறுமையும், காலமும் தேவையாகிறது. இல்லையேல் இவ்வாறான இணைப்பு அலுவல்கள் சிலசமயம் மேலும் பிளவுகளை அதிகரித்து எமது இலக்குகளை அழித்து விடவும் கூடும்.
இத்தகைய எண்ணங்களை நோக்கி அதேவேளை எதிர்நோக்கக்கூடிய சவால்கள் ஸ்தாபனக் கட்டமைப்புகள் தொடர்பான உரையாடல்களை நாம் எதிர்வரும் காலங்களில் நடத்த வேண்டும். இதன் அடிப்படையில்
முதலாவதாக, தற்போதுள்ள நிலமைகள் குறித்து தெளிவான புரிதல்கள் அவசியமானவை. இன்றைய எமது வாழ்வுக் காலப்பகுதி புரட்சிக்கு முன்னதான காலகட்டமல்ல என்பது எனது கருத்தாகும்.
இரண்டாவதாக குழுவாத அரசியலை நாம் உடைத்தாக வேண்டும். இதுவே சுதந்திரமான உரையாடலுக்கும், கூட்டுச் செயற்பாட்டிற்கும் தடையாக உள்ளது.

மூன்றாவதாக ஒடுக்குமுறைக்குள் அகப்பட்டுள்ள மக்களிடையே ஜனநாயத்தையும், ஐக்கியத்தையும் வளர்க்க செயற்பட வேண்டும். சகல மக்கள் அமைப்புகளையும் ஒன்றிணைக்க சளைக்காது உழைக்க வேண்டும்.
நாம் இடதுசாரி இயக்கம் ஒன்றினை இலங்கையில் மீளக் கட்டுவதற்கு இவை பொருத்தமான சில எண்ணங்களாகும்.
000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment