Home » இதழ் 15 » * ‘A Gun and a ring’ திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள் – தவ சஜிதரன்

 

* ‘A Gun and a ring’ திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள் – தவ சஜிதரன்

 

Sajeetharan Gun

சுவாரசியம் அற்ற பகுதிகளைக் களைந்து விட்டு வாழ்க்கையைச் சொல்வது தான் சினிமா என்பார் ஹொலிவூடின் புகழ்மிகு இயக்குனரான அல்ஃப்ரெட் ஹிட்ச்கொக் (What is drama but life with the dull bits cut out – Alfred Hitchcock).

நாம் அறிந்த தமிழ் சினிமாவில் இது அபூர்வமாகவே நிகழ்வதுண்டு. பார்த்துச் சலித்த, ஒரேவிதமான கதைகளை மீள்சுழற்றித் தருவதையே தலையாய கடனாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கனவுத் தொழிற்சாலை. நாயகனை மையப்படுத்தி வகுக்கப்பட்ட ஒரு பொதுச்சூத்திரத்துக்குள் அங்கும் இங்குமாகச் சில சம்பவங்களைக் கோத்து திரைக்கதை அமைப்பதே இங்கு வழக்கமாக இருந்து வருகிறது. விதிவிலக்குகள் உள்ளன. கடந்த ஒரு தசாப்தத்தில் தமிழக சினிமாவில் இந்த விதிமீறல் முயற்சி கொஞ்சம் வேகம் கண்டிருப்பது உண்மை தான் என்றாலும், அது இன்னமும் புறநடையாகவே இருக்கிறது.

gதமிழகம் தாண்டி, தமிழ்மொழி புழங்கும் வேறு இடங்களைப் பார்க்கப்போனால் நிலைமை இன்னும் பரிதாபகரமானதாகத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் ஈழத் தமிழர்களின் எத்தனங்களைச் சொல்லலாம். பெரும்பாலானவை பயில்நிலைக் கலைஞர்களின் முதிர்ச்சியற்ற முயற்சிகளாக எஞ்சி விடுகின்றன. தமிழகத்தில் உள்ளதைப் போல பெருந்திரளான பார்வையாளர் பரப்பு இந்த இடங்களில் கிடையாது என்பது பிரதானமான சிக்கல். பாடுபட்டு உருவாக்கும் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதற்குரிய சந்தை நம்மிடம் கிடையாது. சினிமா பலரது கூட்டு உழைப்பைக் கோருகின்ற ஒரு கலை வடிவம். வலிமையான வணிகப் பின்புலம் இல்லாமல் கலையாக மாத்திரமே உயிர் வாழ்கிற திராணி பெரும்பாலும் அதனிடம் இருப்பதில்லை. ஈழத்துத் திரைப்பட முயற்சிகள் மேலெழுந்து வர முடியாமல் இருப்பதற்கு இது முக்கியமானதொரு காரணம்.

ஆனால், இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் வெளியுலகம் வியந்து பார்க்கக் கூடிய அற்புதமான ஒரு படைப்பை உருவாக்குவது சாத்தியம் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது கனடாவில் கடந்த ஆண்டு வெளியான A Gun and A Ring. ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் கோல்டன் க்ளொபெட் விருதுக்காக 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் போட்டியிட்டு, இறுதி செய்யப்பட்ட 12 படங்களில் ஒன்றாக இது வந்திருந்தது. வேறும் பல சர்வதேச அரங்குகளிலும் விமர்சகர்களால் விதந்தோதப்பட்ட ஒரு படைப்பாக இது இனங்காணப்பட்டுள்ளது.படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் மேலே சொன்ன தமிழ்மொழித் திரைப்படங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குனர் லெனின் எம். சிவம். A Gun and A Ring நாம் பெருமையுடன் உச்சி மோர்ந்து பாராட்ட வேண்டிய ஒரு படைப்பு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
***

படம் பார்த்து விட்டு அப்பால் நகர்ந்த பிற்பாடும், நெஞ்சுக்குள் நிழலாடியபடி பார்வையாளர்களைத் தொந்தரவு செய்கிற பண்பு நல்ல சினிமாக்களுக்கு உண்டு. ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் அதைச் செய்கிறது. ஒன்றுடன் ஒன்று அறவே தொடர்பற்றதாகத் தோன்றும் சில நிகழ்வுகளை, ‘அட, இப்படி இருக்கும் என்று நாம் நினைத்தே பார்க்கவில்லையே’ என்று ஆச்சரியப்படும் விதமாகத் தொடுத்து விடுகிறார் லெனின் எம். சிவம். இத்தனை நுட்பமும் சுவாரசியமும் மிகுந்த கதைப்பின்னலை கடைசியாக எந்தத் திரைப்படத்தில் பார்த்தேன் என்று தேடினால் உடனடியாக எனக்கு நினைவுக்கு வரும் படம் ரோமன் பொலான்ஸ்கியின் The Ghost Writer. அதிலும் A Gun and A Ring போலவே உட்கிடையாக ஓர் அரசியல் விமர்சனம் இருக்கிறது என்றாலும் A Gun and A Ring அளவுக்குப் பல்வேறு அடுக்குகளோடு non-linear ஆக அமைக்கப்பட்ட கதை அதில் கிடையாது.

படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதுவது சிக்கலான காரியம். அத்தனை இழைகள் அதனுள் இருக்கின்றன. பிரதான பாத்திரங்களை வேண்டுமானால் பின்வருமாறு விபரிக்கலாம்: கடந்த காலத்தின் இருண்ட நினைவுகளால் பிறழ்வுற்றிருக்கும் முன்னாள் போராளி ஞானம்; தவிர்த்திருக்க வேண்டிய தனது தீர்மானத்தால் நிகழ்ந்த அனர்த்தத்தை எண்ணிக் குற்ற உணர்வால் தவிக்கும் புலனாய்வு அதிகாரி ஜோன்; தனது காதலனின் தற்கொலைக்குத் தந்தையின் பாசாங்குத்தனமான கயமையே காரணம் என்று எண்ணும் சமபால் நாட்டமுள்ள இளைஞனான ஆதி, மனைவியை இழந்த பிற்பாடு மகளைப் பேணி வளர்ப்பதையும் மக்கள் சேவையையும் மாத்திரமே தனது பணியாகக் கொண்டு வாழும் சமூகத் தலைவர் சொர்ணம்; தனது ஒரே மகனைப் பறிகொடுத்த சோகத்தில் விரக்தியுற்றிருக்கும் அரியம்; போரிலிருந்து தப்பிக் கனடா வந்த பிற்பாடு தனக்கு நிச்சயிக்கப்பட்டவனால் கைவிடப்பட்டு நிர்க்கதி நிலைக்கான போதிலும் துணிச்சலைத் துறக்காத பெண்ணான அபி – இவர்களைச் சூழ நடக்கும் சம்பவங்கள் எப்படி ஒரு துப்பாக்கியாலும் மோதிரத்தாலும் இணைக்கப்படுகின்றன என்பது தான் படத்தின் கதை.
***
g-01

நம்மால் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் நடக்கின்ற நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மாத்திரமே பொதுவாக நமது வாழ்வின் நிகழ்வுகளாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் வாழ்க்கை அப்படி இருப்பதில்லை. நான் இந்த வரிகளைத் தட்டச்சிக் கொண்டிருக்கும் இதே கணத்தில் எனது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தக் கூடிய வெவ்வேறு நிகழ்வுகள் நான் அறியாமலே வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை. எதிர்காலத்தை மாத்திரமன்றி நிகழ்காலத்தையும் கூட முழுமையாக அறிந்து கொள்ள முடியாத இந்தத் தன்மை தான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. இதைக் கவனத்தில் கொண்டு ஒருவர் தன்னுடைய கதையையும் கதாமாந்தர்களையும் சம்பவங்களையும் உருவாக்கும்போது அதில் சுவாரசியத்தன்மை இயல்பாகவே வந்து சேர்ந்து விடுகிறது. A Gun and A Ring கதை இப்படித்தான் உருவாகிறது. ஞானத்தை விட்டு விலகிச் சென்று இன்னொருவனோடு வாழும் அவனது மனைவி ஆத்திர மிகுதியில் அவன் முகத்தில் வீசி எறியும் அவர்களது திருமண மோதிரம், முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலில் தனது காதலைச் சொல்லும் தருணத்தின் சாட்சியாக இருக்கும் என்று அபி அந்தப் பொழுதில் அறியப் போவதில்லை.

தனது துப்பாக்கி முனையில் உயிர் துறக்கப் போகும் பாலியல் வக்கிரம் கொண்ட ஒரு குற்றவாளியின் கையிலிருந்து நழுவி விழும் அவனது துப்பாக்கி, இன்னும் பலபேரின் உயிர் காவு கொள்ளப்படுவதற்குக் காரணமாக இருக்கப் போகிறது என்று புலனாய்வு அதிகாரியான ஜோன் குறித்த கணத்தில் அறியப் போவதில்லை. வானில் பறந்து கொண்டு பூமியைப் பார்க்கும் ஒரு பறவையைப் போல, மனித வாழ்வின் நிகழ்வுகளை அவற்றிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்து கொண்டு ஒருவர் பார்க்கும்போதே இப்படியான சம்பவக் கோவைகளை உருவாக்குவது சாத்தியமாகும். அதை வெகு நேர்த்தியுடன் செய்திருக்கிறார் லெனின்.
***

g2A Gun and A Ring ஓர் ஆழமான சமூக, அரசியல் நோக்கை முன்வைக்கிறது. ஆனால் அதில் பரப்புரைத் தன்மையோ வெற்றுக் கொட்டொலிகளோ கிடையாது என்பது முக்கியமானது. ஒரு சமூகமாக நாம் என்ன விதமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பட்டவர்த்தனமாகச் சித்தரிப்பதன் மூலம் நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்தத் திரைப்படம் ஏற்படுத்துகிறது.

இதுவரை காலமும் நாம் வெளிப்படையாகப் பேசத் தயங்கிய விடயங்களைப் பேச வருமாறு அது கோருகிறது – சமபாலுறவாக இருக்கலாம், ஈழ விடுதலை இயக்கங்கள் நடத்திய குரூரமானஉட்படுகொலைகளாக இருக்கலாம், அல்லது புலம்பெயர் வாழ்விலே நம்மவர்கள் மத்தியில் நிலவுகின்ற அபத்தமான பாசாங்குத் தன்மையாக இருக்கலாம், இவை அனைத்திலும் பேசாப் பொருளைப் பேச விழைகிற முனைப்புத் தென்படுகிறது.

வன்னியிலிருந்து வரும் அபி போரில் தனது முழுக் குடும்பத்தையும் பலிகொடுத்தவர். உங்களில் எவராலும் என்னுடைய வலியைப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கிற அவரது வார்த்தைகள் ஒட்டு மொத்தப் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் நோக்கிச் சொல்லப்பட்டவையாகக் கருதத் தக்கவை. இறுதியில் தான் சந்திக்க நேர்ந்த சூடான் நாட்டுக் கறுப்பரை தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்து கொள்கிறார். சூடான் போன்றது தான் இலங்கையும் என்று அவர் சொல்கிற வசனத்தில் ஈழத்தில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்ற செய்தி உட்பொதிந்து வெளிப்படுகிறது.
***

ஈழத் தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு துறை இல்லாததால் எதிர்நோக்கும் பெரும் சவால்களை என்னுடனான நேர்காணலில் இயக்குனர் லெனின் கவனப்படுத்தியிருந்தார். அப்படியிருந்தும், இந்தப் படத்தில் அனைவரது நடிப்பும் எந்த வித நேர்த்திக் குறைவும் இல்லாமல் கனகச்சிதமாக வெளிப்பட்டிருப்பதை ஒரு சாதனை என்று தான் சொல்ல வேண்டும். தேனுகா, மதிவாசன் முதலானோரின் வெளிப்பாடுகள் அபாரம். ஞானம் பாத்திரத்துக்கு மன்மதன் பாஸ்கி அருமையாகப் பொருந்தி வருகிறார்.

எழுத்துத் தமிழை இழுத்துப் பேசி விட்டால் ஈழத் தமிழ் ஆகிவிடும் என்ற தப்பான புரிதலோடு ஈழப் பிரச்சனை பற்றிப் படம் எடுக்கும் தமிழக இயக்குனர்கள் நிச்சயம் இந்தப் படத்தின் உரையாடல்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சார்ந்து ஒரு செப்பமான திரைமொழி இதிலே உருவாக்கப்பட்டிருக்கிறது.பிரவீன் மணியின் இசை படத்துக்குப் பக்க பலமாக நிற்கிறது.வணிக ரீதியாக வெற்றி பெற முடியுமா என்ற பெருங்கேள்வி இருந்தும் இதனைத் தயாரிக்க முன்வந்த விஷ்ணு முரளி பாராட்டுக்குரியவர். இயக்குனர் லெனினின் அடுத்த படைப்பு, தற்போதையதை விஞ்சும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே நமது அவா.

——————————————————————————————————————————————————————————————————————–

Cinima Lenin M Sivam (1)

திரைப்படத்தின் இயக்குனர் லெனின் எம் சிவத்துடனான இந்த நேர்காணல் லண்டனில் வைத்துப் பெறப்பட்ட்து. லண்டனில் சனக்கூட்டம் நிறைந்த இரண்டு அரங்குகளில் A Gun and A Ring படம் திரையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.


கேள்வி:

தமிழ் சினிமா என்றில்லை.. பொதுவாகத் தமிழ்ப் படைப்பு வெளி என்று எடுத்துக் கொண்டாலே, பலரும் பேசத் தயங்குகின்ற பல விடயங்களை இந்தத் திரைப்படத்தில்தொட்டிருக்கிறீர்கள்.. படத்தின் lenin-01கதைக்களங்கள் அனைத்திலும் பேசாப் பொருளைப் பேசத் துணிகிற ஒரு பண்பு வெளிப்படுகிறது (பட விமர்சனம் பார்க்க). இது பிரக்ஞாபூர்வமாக நடந்தஒன்றா? அல்லது கதையை எழுதிச் செல்லும்போது தானாக அமைந்த ஒன்றா? இந்தக் கதை இத்தனை அடுக்குகளோடு எப்படி உருவானது?

லெனின் எம். சிவம்:

இது கதை எழுதிச் செல்லும்போது தானாக அமைந்த ஒன்றுதான்.

(சனல் 4 இன்) ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தைப் பார்த்த வேளை, அது என்னை வெகுவாகப் பாதித்தது. யுத்தத்தின் போது ஏகப்பட்ட அட்டூழியங்கள் நிகழ்ந்தன என்பதை அறிந்திருந்தேன். ஆனால் அதைக் காட்சிகளாகப் பார்த்தபோது சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்தேன் – யுத்தம் இவ்வளவு மிலேச்சத்தனமானதா என்று எண்ண வைத்தன அந்தக் காட்சிகள். இந்த யுத்தத்தோடு வளர்ந்த ஒருவனாக இருந்து கொண்டு, கடந்த முப்பது ஆண்டுகளாக இதை நான் உணராததையிட்டு வெட்கப்பட்டேன். ஏதோவொரு வகையில் இதற்கு நானும் பொறுப்புக் கூற வேண்டியவன் என்பதாக உணர்ந்தேன்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்த கொடுமைகளை நினைத்துப் பார்த்தேன். வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பெண்கள்.. தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே செல்லடி வாங்கிய குழந்தை.. தாய் இறந்தது தெரியாமல் தாயின் மார்பில் பால் தேடும் பிள்ளை என்று என்னவிதமான வாழ்க்கையை இந்த யுத்தம் எங்களிடம் முடிவாகத் தந்துவிட்டுப் போயிருக்கிறது என்ற கேள்வி என்னை வெகுவாகப் பாதித்தது.

இந்த யுத்தத்தின் கொடூரத்தையும் எம்மீது அது ஏற்படுத்திய பாதிப்பையும் செல்லவேண்டும் என்று உணர்ந்தேன். அதை உண்மையாகச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.

இவ்வாறு பேசப்படவேண்டிய விடயங்கள் என் மனதில் தோன்றத் தோன்ற உண்டான மனச்சீற்றத்திலிருந்தே இந்தக் கதைக்கரு உருவாக ஆரம்பித்தது.

கேள்வி:

lenin-02கேள்வி: ஒருவகையில், நான், நீங்கள் உள்ளடங்கலான ஒட்டு மொத்தச் சமூகத்தின் மீதும் முன்வைக்கப்பட்ட ஒரு விமர்சனமாக இந்தப் படத்தைக் கருதலாம் என்று தோன்றுகிறது. இந்தத்திரைப்படம் புலம்பெயர் தமிழர் வாழும் தேசங்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களின் எதிர்வினை என்ன விதமாக இருக்கிறது? திரைப்படத்தினூடாக நீங்கள்முன்வைத்திருக்கும் விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

இதை நான் ஒட்டு மொத்தச் சமூகத்தின் மீதும் முன்வைக்கப்பட்ட ஒரு விமர்சனமாக பார்க்கவில்லை. உண்மையை அப்படியே பேசவேண்டும் என்றதன் விளைவு அவ்வாறாகத் தோன்றலாம்.

உண்மையில் நான் சற்றுப் பதற்றத்துடன் இருந்தேன்.. டொரொன்டோவில் தான் முதன்முறையாக இதைத் திரையிட்டுக் காட்டினோம்.. பேசப்படப்படாத பல விடயங்களை இந்தப் படம் பேசியபடியால் எம்மக்கள் மத்தியில் எவ்வாறான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்று சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் படத்துக்குக் கிடைத்த எதிர்வினை அற்புதமானது. என்னைப் பாதித்திருந்த உணர்ச்சிகள் பார்வையாளர்களையும் பாதித்திருந்தன என்பதைக் கண்டேன். நான் நினைக்காத அளவுக்கு வரவேற்புக் கிட்டியிருந்தது.

கேள்வி:

கேள்வி: கதையின் நுட்பமான இழைகளை பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்களோ என்ற ஐயத்தாலும் அவநம்பிக்கையாலும் அட்சரம் அட்சரமாகக் கதையை விரித்துச் சொல்கிற ஒருபண்பையே நாம் அறிந்த தமிழ் சினிமாவில் கண்டிருக்கிறோம். இந்தப் படத்தில் அப்படி இல்லை. இதிலுள்ள ஆறு விதமான கதைக்களங்களிலும் பார்வையாளர்கள் தாமாக மீதிக்கதையை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. படத்தைப் பார்ப்பவர்கள் கதையை முழுதுமாகப் புரிந்து கொள்வார்களா என்ற தயக்கம் உங்களுக்கு இருந்ததா?

லெ.சி:

மிக நல்ல கேள்வி. உண்மையாகவே எனக்கு ஒருவித தயக்கம் இருந்தது. திரும்பத் திரும்பத் தென்னிந்திய சினிமாவுக்குள் மூழ்குபவர்கள் நாங்கள். வாழைப்பழத்தை உரித்துத் தொண்டைக்குள் திணிப்பதைப் போல கதை சொல்லும் வழக்கம்தான் பெரும்பாலான தென்னிந்திய படங்களில் இருக்கிறது. அப்படி கதைசொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கதையை வேண்டுமென்று சிக்கலானதாக ஆக்கவில்லை. இதன் தேவை அப்படி. ஓரிரு விடயங்கள் பார்வையாளர்களின் கவனத்திலிருந்து தப்பினாலும், ஒட்டுமொத்தக் கதையை உள்வாங்குவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது சிலவேளை சிக்கலானதாக இருக்கலாம். நமது மக்களுக்கு இது அந்நியமான ஒன்றாக இருக்காது. எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அது நமது புறங்கையைப் பார்ப்பது போலவே இருக்கும். இது நமது கதை நமது களம். அத்தோடு எப்போதும் பார்வையாளர்களை மதிப்பவன் நான். நான் ஒருவன் தான் புத்திசாதுர்யமானவன் என்று நினைப்பதில்லை.

கேள்வி:

துவக்கு, மோதிரம் என்ற இரண்டு பொருள்களை மையச் சரடாக வைத்துக் கொண்டு ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகத் தோன்றும் நிகழ்வுகளை இணைத்துக் கதைசொல்லியிருக்கிறீர்கள். ‘சுவாரசியம்’ என்ற அம்சம் தான் இதில் பிரதானமானதாகப் படுகிறது. இந்த ஸ்கிரிப்டை உருவாக்கிய பின்னணியைச் சொல்லுங்கள்..?

லெ.சி: கதையின் ‘தீம்’ எனக்குத் தெரிந்திருந்தது. அதைச் சார்ந்த கதாப்பாத்திரங்கள் உருவாகத் தொடங்கின. அவர்களின் கதைகளைச் சொல்லிக் கொண்டு போகும் போது அதற்குள் ஒரு மோதிரம் வரத் தொடங்கியது. பிறகு ஒரு துவக்கு. இரண்டும் தனித்தனியாக உருவானவை. இவற்றை முதலில் தொடுத்து இணைக்கத் தொடங்கினேன். பிறகு கதாப்பாத்திரங்களை ஒன்றோடு ஒன்று தொடுத்தேன்.

கேள்வி:

திரைக்கதை அமைக்கும்போது அதனது சுவாரசியத்தன்மை எவ்வளவு தூரம் இயல்பாக, organic ஆக வருகிறது? அல்லது அதைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு தூரம் பாடுபடவேண்டியிருக்கிறது?

g3லெ.சி: என்னைப் பொறுத்தவரை கதையில் சுவாரசியம் என்பது முக்கியமானது. எனது முதல் திரைப்படமான 1999 ஐப் பார்த்தீர்கள் என்றாலும் அந்த அம்சம் அதில் இருக்கும். திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தை நீங்கள் நன்றாக அறிந்து கொண்டீர்கள் என்றால் பிறகு சுவாரசியத்தன்மை organic ஆக உருவாகும். இந்தப் படத்தில் “இரும்பன்” பாத்திரத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அவர் இனியில்லையென்ற ஒரு பிறவிக் கொலைகாரர். அப்படி இருந்து விட்டு பிறகு புலம்பெயர் தேசத்தில் தனது இயல்புக்கு ஒத்து வராத ஒரு வாழ்க்கையை 20 ஆண்டுகளாக நடத்திக் கொண்டு போவார். அப்படி இருக்கும்போது அவரது மகன் இறந்து விடுகிறான். மனைவி மனம் குழம்பிப் போகிறார். இப்படியான ஒரு புள்ளியில், அவருக்கு விடுதலை கொடுப்பது போல அவரது கடந்த காலத்திலிருந்து ஒரு மனிதன் வருகிறான். எனவே அந்த தீம், அந்தப் பாத்திரத்தின் களம் தெரிந்ததும், பிறகு கதையின் நிகழ்வுகளை இணைக்கலாம். சில பகுதிகள் தொய்வாகத் தென்பட்டால், அவற்றை சுவாரசியமாக்குவதற்கு சில சம்பவங்களை உருவாக்க வேண்டி வரலாம்.

கேள்வி:

இந்தப் படத்தின் உரையாடல்கள் (Dialogues) பற்றிக் கொஞ்சம் பேசலாம். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு சார்ந்த இயல்பான ஒரு திரைமொழி இதில் இருக்கிறது. இதேவேளை, தற்போது திரைப்பட முயற்சிகளில் ஈடுபடும் ஈழத்தவர்களில் ஒரு சாரார், தமிழகப் பார்வையாளர்களுக்குப் புரியக் கூடிய வகையில் வசனங்கள் அமைக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார்கள். இது குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன?

லெ.சி: இந்த மொழிப் பிரச்சினையை தேவையற்ற ஒரு குழப்பமாகத்தான் நான் பார்க்கிறேன். ஏனோ தெரியாது இது மிகப்பெரிய குழப்பமாக ஈழத்துத் திரைப்படக் கலைஞர்களிடம் இருக்கின்றது. என்னைப்பொறுத்தவரை எனது கதாபாத்திரம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தால் அவர் யாழ்ப்பாண தமிழில் பேசினாலே அது சரியாக இருக்கும். இதற்க்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது. சிலர் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு எமது தமிழ் புரியாது என்றும் அதற்காக கதாபாத்திரங்களை தாம் தென்னிந்திய திரைப்படத் தமிழில் பேசவைக்கிறோம் என்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை இதற்காக எனது கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மையை நான் இழக்கத் தயாரில்லை.

கேள்வி: ஈழத் தமிழர்களின் திரைப்பட உருவாக்க முயற்சிகள் என்று வருகிறபோது, அதில் உள்ள மிக முக்கியமான சவால் என்ன?

லெ.சி:
எமக்கென்று ஒரு துறை – இண்டஸ்ட்ரி இல்லாதது தான் பிரதானமான பிரச்சனை. ஒரு திரைப்படம் பலரது கூட்டு உழைப்பின் மூலம் உருவாகிறது. இயக்குனராக எனது வகிபாகம் பிரதானமானதாக இருக்கலாம். ஆனால் எழுத்துப் பிரதியை எழுதுவதோடு எனது தனிப்பட்ட வேலை முடிந்து விடுகிறது. மீதி வேலைகள் அனைத்திலும் ஏனையவர்களை இணைத்துக் கொண்டே செய்ய வேண்டியிருக்கும். எனவே என்னுடைய எண்ணங்கள், அனுபவம் எல்லாவற்றுக்கும் பொருந்தி வருகிற ஐந்தாறு பேர் கூட வேலை செய்கிறபோதே அதை முன்னகர்த்திக் கொண்டு போக முடியும். திரைப்படத் துறை என்று ஒன்றிருந்தால் அப்படியானவர்களை இலகுவாகக் கண்டெடுக்க முடியும் – நடிகர்களாயிருந்தால் என்ன, தொழினுட்பவியலாளர்களாயிருந்தால் என்ன.. என்னுடைய வேலை இலகுவாகி விடும். நமக்குத் தற்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், இப்படியான ஒரு செயல்திட்டத்தில் பங்கெடுப்பவர்களுக்கு நீங்கள் அதிகப்படியான தூண்டுதலை வழங்க வேண்டியிருக்கிறது. இது தான் கடினமான பகுதி. இண்டஸ்ட்ரி என்றிருந்தால் அவரவர் தத்தமது வேலைகளைக் கவனித்துக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். அப்படியில்லாமல் திரைப்படம் ஒன்றை உருவாக்கும்போது, நீங்கள் அதிகப்படியான பிரயத்தனத்துடன் இயங்க வேண்டியிருக்கிறது – நடிகர் தேர்வு, பிறகு அவர்களுக்கான பயிற்சி, வழிகாட்டுதல் முதலான விடயங்களில்.

0000000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment