Home » இதழ் 15 » * ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – முஸ்லிம் கொங்கிரஸ் அரசியல் கூட்டணி- மொகமட் சலீம்

 

* ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – முஸ்லிம் கொங்கிரஸ் அரசியல் கூட்டணி- மொகமட் சலீம்

 

Muslim Congras

‘நீங்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்லது எங்கள் எதிரிகள்’ எனவும் இன்னும் இது போன்ற பல கர்வமான கூற்றுக்களும் செப்டெம்பர் 11 பாரிய நிகழ்விற்குப் பின்னர் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ர்ஜ் புஸ் இனால் எச்சரிக்கையாக விடப்பட்டன. மற்றய நாடுகளை தனக்கு நண்பர்களாக அல்லது எதிரிகளாக இருக்குமாறு நிர்ப்பந்திப்பதாக இவ் எச்சரிக்கை அமைந்தது. சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் (UPA) கொண்டுள்ள அணிச்சேர்க்கையானது இன்னொரு வகையில், ‘உங்களுடன் இருப்போம், எதிராகவும் இருப்போம்’ என்ற தொணியில் அமைகின்றது. இந்த உறவு உடனடியாக கிடைக்கப்பெறுகின்ற தனிப்பட்ட நன்மையின் அளவினால் தீர்மானிக்கப்படுகின்றது அல்லது எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கின்ற ஒரு பேரம் பேசலுக்கான அழைப்பாக அமைகின்றது. பாராளுமன்றில் 18ம் அரசியல் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு அவசியமான எண்ணிக்கையை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கும், இதற்குப் பகரமாக ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நீதி அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்குமே, சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் தற்போது UPA உடன் அணிசேர்க்கை செய்து கொண்டுள்ளது. இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், இவ்விரு தரப்புமே ஒன்று மற்றொன்றிற்கு கடுமையான எதிராளிகளாகும்.

kk

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் சரத் பொன்சேகாவிற்குப் பின்னால் நின்றது. பாராளுமன்றத் தேர்தலின் போது யுஎன்பி யுடன் கூட்டணி அமைத்தது. இவ்வாறாக கட்சிக் கொள்கைகளை அடிக்கடி மாற்றுவது யார், எந்த அடிப்படையில் வகுக்கின்றார்கள் என்பதற்கான நியாயமான விளக்கத்தை அக் கட்சியின் முன்னணித் தீவிர ஆதரவாளர்களால் கூட தர முடியாத நிலையில் இன்று கட்சி தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

அண்மையில், மூலோபாய அபிவிருத்திச் சட்ட மூலமொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, முஸ்லிம் கொங்கிரஸ் இதற்கு வாக்களிக்காது ஒதுங்கியிருக்கத் தீர்மானித்தது. உண்மையில் இச் சட்டமூலமானது, இது குறித்த இஸ்லாமிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தவும், தார்மீக அடிப்படையிலும் அதனால் ஏற்படப் போகும் சமூக பாதிப்பின் அடிப்படையிலும் இச் சட்ட மூலத்தை எதிர்த்த தரப்புகளுடன் உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயற்பட்டிருப்பதற்கும் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும். இந்த வாய்ப்பினை முஸ்லிம் கொங்கிரஸ் நழுவ விட்டது. முஸ்லிம் கொங்கிரசுக்கு முன்னால் இருந்த இரு தெரிவுகளின் ஒன்று இச் சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களித்து UPA இன் எதிர்ப்பினைச் சம்பாதிப்பதும் அதனிடமிருந்து கிடைக்கின்ற வசதி, வாய்ப்புகளை இழப்பதும். அடுத்த தெரிவு இச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்து இஸ்லாமிய விழுமியங்களை தமது சொந்த நலன்களுக்காக சமரசம் செய்து கொண்டது என்ற கடுமையான விமர்சனத்தை மக்கள் மத்தியில் எதிர்கொள்வது.

மேற்படி சட்ட மூலத்திற்கான வாக்களிப்பின் போது கலந்து கொள்ளாமல் விட்டதன் மூலமாக முஸ்லிம் கொங்கிரஸ் தான் UPA உடன் அணிசேர்ந்தும் இருப்பேன், எதிராகவும் இருப்பேன் என்ற நிலைப்பாட்டினை மீள் உறுதி செய்வதாக அமைந்தது.இவ்வாறாக மக்களை முட்டாளாக்குவதில் முஸ்லிம் கொங்கிரஸ் தலைமையானது இதுவரையும் வெற்றி பெற்று வருவதாகவே தோன்றுகின்றது. இவ் அணிச்சேர்க்கை இதற்கு மேலும் இவைகளுக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தரப்போவதில்லை.

ha-01 நடைமுறையில் எப்படிப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் பார்த்தாலும், UPA இன் பங்காளர் கட்சி என்ற வகையில், இன்று நாட்டிற்குக் கொள்கை வழிகாட்டியாக இருந்து நாட்டின் செல்திசையைத் தீர்மானித்து வருகின்ற மகிந்த சிந்தனைக்கு முஸ்லிம் கொங்கிரஸ் கட்சியும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மகிந்த சிந்தனையானது முஸ்லிம் கொங்கிரசினால் கடுமையான முறையில் பரிகசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரச்சார மேடையிலும் மகிந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிரானதாகத் தரம் தாழ்த்திப் பேசப்பட்டது. இத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் நகைப்பிற்கிடமான நிகழ்வு நடைபெற்றது. முஸ்லிம் கொங்கிரஸ் தலைமை இந்திய வெளிவிவகார செயலர் நிரூபமா ராவ் அவர்களைச் சந்தித்தபோது, ‘ஜனாதிபதி மகிந்தராஜபக்ச மிகப் பெரும்பாலான சிங்கள மக்களிடமிருந்து பலமான ஆணையைத் தெளிவாகவே பெற்றிருக்கின்றார். இதன் காரணமாக, அவரால் முன்வைக்கப்படக் கூடிய சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்று பெரும்பாலான சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கும். சிங்கள பெரும்பான்மை ஆதரவு என்பது ஒரு அரசியல் தீர்வினை வடிவமைப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் மிகவும் பிரதானமானதாகும்’ (ஐலண்ட் 2010 மார்ச் 11) என முஸ்லிம் கொங்கிரஸ் தலைமை ஒப்புக் கொண்டிருந்தது.

ஏற்கனவே குறிப்பிட்டது போலவே, தேர்தலுக்குப் பின்னர் UPA குறித்ததொரு நோக்கத்திற்காக முஸ்லிம் கொங்கிரசினை ஆசைகாட்டி வசீகரித்துத் தன்னுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டது. உண்மையில், UPA இற்கு இன்று பாராளுமன்றில் போதுமான பெரும்பான்மை ஆசனங்கள் உள்ளது. மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்துவதற்கு மு.கொங்கிரசின் ஆதரவு அவசியமில்லை. மேலும், UPA கூட்டணியிலுள்ள முஸ்லிம் எம்பிக்கள் எவருமே முஸ்லிம் சமூகத்தின் நலனில் நின்று அரசுடன் பேரம் பேசுவதற்கான சக்தி அற்றவர்களாகவே உள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல்களில், மு. கொங்கிரஸ் சில மாகாணங்களில் UPA உடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட அதேசமயம், வேறு சில மாகாணங்களில் ( கணிசமான முஸ்லிம் வாக்குகள் உள்ள மாகாணங்களில்) தனது மரச்சின்னத்தில் தனியாகவும் போட்டியிட்டது. ஜோர்ஜ் புஷ் கொடுத்த அதே தெரிவுகளை UPA முஸ்லிம் கொங்கிரசுக்குக் கொடுத்திருக்க முடியும். அதாவது, நீங்கள் ஒன்று எம் பக்கம் அல்லது எமது எதிராளிகள் என்று. ஆனால், தற்போது நிலவுகின்ற அரசியல் சூழலில், மேற்படி தேர்தல் ஏற்பாட்டிற்கு UPA உடன்பாட்டிற்கு இணங்கியது. இதற்குக் காரணம், மு. கொங்கிரஸ் பட்டியலில் எவரேனும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, அவர்களால் தனித்துநின்று செயற்பட முடியாது. மாறாக, மத்திய அரசாங்கத்தில் முஸ்லிம் கொங்கிரஸ் கூட்டணி சேர்ந்து இருக்கும் வரைக்கும், UPA இன் ஆணைக்கு முஸ்லிம் கொங்கிரஸ் உறுப்பினர்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.( அல்லது மு. கொங்கிரஸ் பிரதிநிதிகள் UPA இனால் இலகுவில் தன் பக்கம் கவர்ந்திழுக்கப்பட்டு விடுவார்கள்).

மு. கொங்கிரஸ் அதிகாரத்துவமானது, இவ்வாறான சந்தர்ப்பவாதப் போக்கினை தனது திறமையான அரசியல் நகர்வாக, அரசியல் காய் நகர்த்தலாக பெருமை பீற்றிக் கொள்கின்றது. ஆனால் இப்போக்கானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே நம்பத்தகுதியற்ற சமூகமாக, கொள்கை கோட்பாடுகள் அற்ற சமூகமாக மற்ற சமூகங்களின் மத்தியில் தரக்குறைப்புச் செய்கின்றது.; இன்று அதிகரித்து வரும் முஸ்லிம் விரோதப் போக்கிற்று வலுச் சேர்ப்பதில் ஒரு வகையில் இது பங்களிப்புச் செய்வதாகவும் அமைகின்றது.

பிரதான நீரோட்டத்திற்குத் திரும்புதல்

யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதுடன், முஸ்லிம்களின் குரலுக்கு அதுவரை எல்டிடிஈ தரப்பில் இருந்து வந்த அச்சுறுத்தல் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் சமூகமும் கூட பல்வேறு அதிகாரத் தரப்புகளில் இருந்தும் காட்டப்பட்ட பாகுபாடுகளுக்குப் பலியான சமூகமாகவே இருந்து வந்தது. ஆனால் தமது துன்ப துயரங்களை வெளிப்படுத்துவதில் அவர்கள் ஒரு தொடர்ச்சியான தன்மையை hak-02வெளிக்காட்டுவதில் இயலாமை கொண்டிருந்தனர். எம்.எச். எம் அஷ்ரப் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து மு. கொங்கிரஸ் கட்சியானது கட்டமைப்பு ரீதியில் ஒரு சிதறுண்ட நிலைக்குச் சென்றது இதற்கு தொடர்ச்சியாகவே சான்று பகன்றது. தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கூட தன்னுடன் ஓரணியில் வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு முஸ்லிம் கொங்கிரஸ் தள்ளப்பட்டது. ரவூப் ஹக்கீமின் தலைமையின் கீழ், மு. கொங்கிரஸ் UPA, uNP ஆகிய அரசாங்கங்களுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. பாராளுமன்றத்திற்குத் தெரிவான மு. கொங்கிரஸ் அங்கத்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகாரத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுடன் இணைய விரும்புபவர்களாகவே காணப்பட்டனர். இதன் விளைவாக, முஸ்லிம் கொங்கிரஸ் கட்சியானது, எதார்த்தத்தில், வெவ்வேறு துண்டுகளாக உடைந்து, மற்ற சமூகங்கள் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும் நிலைக்கு தகுதியிழந்து போய்க் கிடக்கின்றது. முஸ்லிம்கள் தாமும் இந்த நாட்டின் சம உரிமையுள்ள பிரஜைகளாக கருதி மதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதனை வெளிப்படுத்துவதற்கு முஸ்லிம்களின் குரல்களை ஒன்றுபடுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் நிலை இப்படியானது.

இலங்கை பல்லின, பல் சமூக, பல மொழிகளைப் பேசுகின்ற மக்களைக் கொண்ட ஒரு நாடாகும். இங்குள்ள அனைத்துப் பிரஜைகளும் சமத்துவமான உரிமைகளை அனுபவிப்பதுடன், எந்தவித அச்சமும் பீதியும் இன்றி தமது வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான வாயப்புகளையும் சமமாகப் பெற்றிருக்க வேண்டும். இதுவரை எந்தவொரு அரசாங்கமும் இக் கோட்பாட்டினை இதயசுத்தியதாக நடைமுறைப்படுத்தவில்லை. 80 களின் பிற்பகுதியில் இன உணர்வினை அடிப்படையாகக் கொண்டு, சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் உருவாக்கப்பட்டமையானது, பிரதான நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களை மேலும் தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளியது. பொதுவான பிரச்சனைகளை மையப்படுத்தி மற்றய சமூகங்களுடன் மேற்கொள்ளக் கூடிய கலந்துரையாடல்களுக்கான கதவுகளையும் இன்றைய இக்கட்சியின் நிலையை பார்க்கும் போது , இத் தனிக்கட்சிப் பிரவேசம் மூடிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போது, இலங்கையின் தேசிய அபிவிருத்திக்கான உபாயங்களை வகுக்கும் வாதப் பிரதிவாதங்களில் கலந்து கொள்ளவோ, அல்லது இவ்வாறான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கோ ஆர்வமற்ற கட்சியாக முஸ்லிம் கொங்கிரஸ் உள்ளது. இதற்கு அவசியமான நிபுணர்களை ஒன்று திரட்ட முடியாத ஒரு கட்சியாகவும் முஸ்லிம் கொங்கிரஸ் மாறிவிட்டது. மேலும், முஸ்லிம்களையும் உள்ளடக்கி அனைத்து சமூகங்களையும் பாதிக்கின்ற பாரதூரமான பல்வேறு பொதுப் பிரச்சனைகளை அனைவருடனும் இணைந்து அரசாங்கத்துடன் பேரம் பேசித் தீர்வுகளைக் காண்கின்ற வேலைமுறைகளை முன்னெடுக்க முடியாத கட்சியாகவும் முஸ்லிம் கொங்கிரஸ் உள்ளது. துரதிஷ்டவசமாக, முஸ்லிம் கொங்கிரஸ் தான் எதிர்கொள்கின்ற சகல பிரச்சனைகளுக்கும் ஒரு முஸ்லிம் சாயத்தைப் பூசிக்கொள்ளும் போக்கினை வெளிப்படுத்தி வருகின்றது. முஸ்லிம் கொங்கிரஸ் என்ற தொப்பியை அணிந்திருந்தமையின் காரணமாக, ஒவ்வொரு விசயத்திற்குமே இனவாதச் சாயம் கொண்டு பார்க்கும் போக்கின் ஆபத்தான தன்மையினை காலங்சென்ற எம்எச்எம்.அஷ்ரப் அவர்கள் உணர்ந்து கொண்டதுடன், பிரதான தேசிய நீரோட்டத்திற்கு முஸ்லிம்கள் திரும்ப வேண்டியதையும் உணர்ந்து கொண்டதனால்தான், அவர் தேசிய ஐக்கிய முன்னணி (NUA) என்ற கட்சியினை உருவாக்குவதற்கான அடித்தளத்தை இட்டார். ஆனாலும், இத் தீர்க்கதரிசனத்தைப் புரிந்து கொள்ளாமல், தேர்தல் சுவரொட்டிகளில் அச்சிட்டு மறுவாழ்வு கொடுப்பதற்கு மாத்திரமே மர்ஹும் அஷ்ரப் அவர்கள் பயனுள்ளவர் என்ற ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியினரின் அறிவுக் கூர்மை பரிதாபகரமானதே.

சமூகத்தைப் பிளவுபடுத்துதற்கு முடிவு கட்டுதல்

பயங்கரவாத அச்சுறுத்தல்களை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு இலங்கை நிறையவே விலைகளைக் கொடுத்துள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சுலோகங்களைப் பயன்படுத்தி சமூகங்களுக்கிடையில் குரோதத்தையும் காழ்ப்புகளையும் ஏற்படுத்துவது இன்று தீவிரமாக நடைபெறுகின்ற வரைக்கும், இந்நாட்டில் சமாதானத்தை அடையவே முடியாது. இந்த வெளிச்சத்தின் உண்மையில்தான் ரவூப் ஹக்கீமும் அவரது கட்சியும் எதிர்காலம் குறித்த ஒரு மீள்பார்வையினைச் செய்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இந்நாட்டின் பிரஜைகளாகும். அரசியல் சாசன அடிப்படையில் மற்றய சமூகங்கள் அனுபவிக்கின்ற உரிமைகளும்; வாய்ப்புக்களும் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகின்ற போது, சிவிலிய உணர்வும், மனசாட்சியும் உள்ள ஒவ்வொருவருமே (அவர் மற்ற சமூகமாகங்களில் இருந்தும்) இவ்வாறான அரசியல் சாசன மீறல்களுக்கும் பாகுபாடுகளுக்கும் எதிராக குரல் எழுப்புவதற்கு அணிதிரட்டப்படல் வேண்டும். அரசியல்வாதிகள் தமது கட்சி நலன்களையும், அதிகாரத்தையும், சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கு கூக்குரலிகின்றனர். இதன் காரணமாக, தள்ளி வீழ்த்தப்பட்ட பொதுமக்கள் களைப்படைந்து, விரக்தியடைந்து சோர்ந்து போய்க் கிடக்கின்றனர்.

ha-03 நாட்டில் தற்போது மேலோங்கிக் கிடக்கின்ற விரக்தி நிலைக்காக மக்கள் அரசியல்வாதிகளைத் திட்டித் தீர்க்கின்றனர். அரசியல் தலையீடுகளோ, பிளவுபடுத்தல்களோ இல்லாத ஒரு சூழலில் சமூகங்கள் வைக்கப்படுவதாக கற்பிதம் செய்து கொள்வோம். இவ்வாறான சூழலில், முன்பின் தெரியான ஒரு அந்நிய அயலவரைக் கூட மக்கள் ஆரத்தழுவிக் கொள்ளவே செய்வர். அடிப்படையில் இப்படிப்பட்ட பண்பினைக் கொண்ட மக்களோ, இன்று அரசியல் இலாபம் பெறுவதற்காக இனத்துவ அடிப்படையில்; பிளவுபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சுவாரஸ்யம் என்னவென்றால், தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒரு புதிய ஆரோக்கியமான சூழல் ஏற்படல் வேண்டும் என்ற குரல்களை நம்மால் கேட்க முடிகின்றது: “சமத்துவம், நீதி என்பவற்றை உறுதி செய்யக் கூடியதும், சிந்தனை மற்றும் கருத்துச் வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கு வழிவகுக்கக் கூடியதும், தனிமனித மற்றும் சமூக உரிமைகளையும் கௌரவத்தையும் பாதுகாத்து மேம்படுத்தக் கூடியதும், அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்வின் இலக்குகளை அனைவரும் அடையக் கூடியதும் தேசிய அபிவிருத்தி முயற்சிகளுக்குப் பங்களிக்கக் கூடியதுமான ஒரு புதிய சூழல்” என்பதே அக்குரல்களாகும். இவ்வாறானதொரு உன்னதமான சூழல் இனவாத அரசியலின் மூலமாக நிச்சயமாக உருவாக்கப்பட முடியாது என்பதே உண்மையாகும்.

மரங்களின் வாழ்வுக்காலம்:

எப்படியாவது மரச் சின்னத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது முஸ்லிம் கொங்கிரசின் என்றென்றைக்குமான முனைவாகத் காணப்படுகின்றது. இக் கட்சி தான் பின்பற்றி வருகின்ற கொள்கைளை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் போக்கினாலும், முஸ்லிம் கொங்கிரசில் சீட்டைப் பெற்றுக் கொண்டு, பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கட்சி விட்டுக் கட்சி தாவும் போக்கு அதிகரித்தனாலும், எதிர்காலத்தில் வரும் என எதிர்பார்க்கின்ற அரசியல் சூறாவளிக்கு இப்புனித மரமானது நிச்சயம் தாக்குப் பிடிக்க மாட்டாது. உலகமயமாக்கப்பட்டு விட்ட இன்றைய சந்தையில், மரங்கள் மதிக்கப்படுவதும் பரிவுடன் வளர்க்கப்படுவதும் அவை நன்கு செழித்து வளர்ந்து பழங்களைத் தரும் வரைக்குமே. மரங்களின் வாழ்வுக் காலம் முடிவடையத் தொடங்கி, பழங்களைத் தருவதும் நின்று போய், புதிதாக செழித்து வளர்வதற்கான சான்றுகள் அவற்றிற்கு இனி இல்லை என்ற அறிகுறி தெரியத் தொடங்கியதுமே அவை வெட்டி வீழ்தப்பட வேண்டிய மரங்களாகின்றன. இவ்வாறு வெட்டி வீழ்த்தப்படுகின்ற மரங்கள் அலங்காரத் தளவாடங்களாக மாற்றப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அல்லது சுடுகாட்டுத் தேவைக்காக அவை அனுப்பப்படுகின்றன. ஆரோக்கியமாக உயிர் வாழும் மரத்துடன் ஒப்பிடுகையில், கிழடு தட்டிப் போய்விட்ட மரங்களுக்குப் பெறுமானம் என்பதே கிடையாது. மலிவு விற்பனைக்குப் போட்டால் கூட, அவற்றை விலைபேசி எடுக்க எவருமே இருக்க மாட்டார்கள். மரத்துடன் தம்மை இன்று பிணைத்துக் கொண்டுள்ளவர்கள், தாம் மேற்படி அரசியல் கூட்டணியினுள் இருக்கப் போகின்றோமா அல்லது அதற்கு வெளியில் இருக்கப் போகின்றோமா என்பதை உறுதியாகத் தீர்மானிக்க வேண்டிய கட்டம் வந்துள்ளது. தெரிவு எவ்வாறானதாக இருந்தாலும், மரம் பழுதடைந்து கொண்டிருக்கின்றது என்பதை நிச்சயம் காணக் கூடியதாக இருக்கின்றது.

000000000000
(மூலக் கட்டுரை கலாநிதி மொகமட் சலீம் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சிலோன் டுடே 2014 மே 5ம் திகதி இதழில் பிரசுரிக்கப்பட்டது. இதன் தமிழாக்கம் தாஸ்மீன் சலீம் )

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment