Home » இதழ் 01 » பூர்வோத்திரம்

 
 

பூர்வோத்திரம்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

  – சண்முகம் சிவலிங்கம்.

கிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி குரலோடஅவள் பின்னால் சேட்டையும் சிங்காரமாயும் இந்த கோயில் வெளி முழுவதும் ஓடித்திரிந்த காலமெல்லாம் ஓடிப்போயித்து. இப்போ கோயில் வெளி மணலின் காலடிப் பாதையின் ரவுண் ஸ்கூலுக்கு  அவன் விசை விசையாய் போவதையும் போய் வருவதையும் கிடுகு இல்லாத கோயில் வீட்டு வேலியில் சார்த்திய அடிமட்டை இடுவல்களுக்கிடையில்அவள் பார்த்தித்து நிற்பதோடு சரி. வேறென்ன வேலை. மிச்சமான நேரமெல்லாம் மூத்தப்பாவோடதான், கொளுவலும் சண்டையும் தான்..

காகம் குருவியோட மூத்தம்மை எழும்பி, கைவிளக்கை கொளுத்தி குசினி ஒத்தாப்புக்குள்ள போக, மூத்தப்பாவும் எழும்பி போர்த்தின கம்பாயத்தோட கடற்கரைக்கு போய் வந்து கை,கால், முகம் கழுவி அம்மாள்ர கோயிலுக்கு அரச மரத்துக்கு கீழால நடந்து கோயில் மண்டபத்தில திருநீறு சாத்தி கும்பிட்டுத் திரும்பி மூத்தம்மா கொடுக்கிற தேத்தண்ணிய குடிக்கக்குள்ள தான், நான் வாசல் பக்கம் வந்தன். நான் நிமிர்ந்து குனிந்து சாங்கோ பாங்கமாய் பாவாடை சட்டய ஒழுங்கு பண்ணக்குள்ள, உடுத்திருக்கிற நாலு முழ வேட்டிய மாற்றிக் கட்டிக்கொண்டு கடப்பைக் கடந்து கோயில் பக்கம் போகும் மூத்தப்பாவின் தோல் சுருங்கிய பொன்னிறமான முதுகும் நரைத்த மஞ்சள் நிறக் குடுமியும் தெரிந்தது.

மூத்தப்பா திரும்பவும் அரச மரத்தைக் கடந்து கோயில் மண்டபத்தை குறுக்கறுத்து கவடா வீட்டுப் பக்கம் பார்த்து அப்படியே காடேறி கோயில் பக்கம் திரும்பும் வரை அவரையே பார்த்து நின்றேன்.
நான் பல்லைத் தீட்டிக்கொண்டு, கோயில் கிணத்துக்கு போகக்குள்ள மூத்தப்பா தீக்குழிவரை நடந்து வீரபத்திரர் கோயிலை வளைத்து பட்டாணி கோயிலின் பின்புறமாய் நடந்து கோயில் சந்திப் பக்கம் போவது தெரிந்தது.

நான் எங்கட செத்தைக் குடிலுக்குள்ள நின்று தேத்தண்ணி குடிக்கக்குள்ள உள் வேலியில சார்த்தியிருக்கும் அவருடைய கூட்டுக் கம்பை எடுத்தார்.
அந்த கூட்டுக் கம்புதான் அவர்ர செங்கோல். அந்த கூட்டக்கம்பை பிடித்துக் கொண்டதான் அவர் அதிகாரத்தோட கேட்டார்.
‘என்னடி அகிலி நீ, நான் கூட்டுக்கம்பை எடுக்கக்குள்ள ஒரே சிரிக்கிற..?’
‘அதுதானே மூத்தப்பா, உன்ர செங்கோல் !’
‘செங்கோல் எண்டா?’
‘இந்த கோயில் வெளி ராச்சியத்தை நீ ஆட்சி செய்யுற செங்கோல் !’
‘உனக்கு சிரிப்பும் கதையும் மிஞ்சிப் போச்சி. குமராய் போன நீ, எப்படி இன்னமும் சிரிப்பும் நையாண்டியுமாய் திரியுற? . அவன் பார்த்தீயோட கூடித் திரிஞ்சி என்ர சின்னவனைப் போல நீயும் கெட்டுப் போயித்தாய்…’
‘நான் எங்க பார்த்தீயோட கூடித்திரிஞ்ச ?
‘ நீ அவனோட ஓடி விளையாடித் திரிஞ்சென்ன ‘
‘ அது ஒரு காலம்..’
‘இப்போ என்ர சின்னவன் அவனோட கூடித் திரியல்லயா?’
‘எவனோட ?’
‘பார்த்தீயோட ‘
‘கூடித் திரிஞ்சாப்’ல?
‘ பார்த்தீயோட கூடின பொறகுதானே என்ர சின்னவன் கோயில் பக்கம் வராம, திருநீறு சாத்தாம, அம்மாளுக்கு மாலைக்குள்ள விளக்கு வைக்காம எல்லாம் உட்டவன். ஏனக்குப் பொறகு, எனக்க வாரிசா என்ண இடத்த எடுப்பான் எண்டு எவ்வளவு நம்பியிருந்தனான். பார்த்தீக்கென்ன படிச்சுப் பாழாய் போறான். என்ர சின்னவனுக்கேன் இந்த தெய்வ நிந்தன..?
‘மூத்தப்பா நீ இளைய மாமாவுக்கு என்ணெண்டாலும் சொல்லு. பார்த்தீயின் படிப்பை ஏன் பழிக்காய்..?
‘பாத்தியா. பார்த்தீக்கு ஏதும் சொன்னா உனக்கு எப்படி குத்துதெண்டு –‘
கிட்டத்தில நிண்ட மூத்தம்மை சிரிக்க நான் வெட்கித்துப்போனன்.
மூத்தப்பா என்னை வென்று விட்டார் போல செருக்கித்து கூட்டுக்கம்பின் தளர்ந்துபோன வரிச்சை இறுக்குவதில் மும்முரமானார்.

எனக்குள் நான் எண்ணினேன். பார்த்தீயை பழிச்சா அது என்னைக் குத்தாமலிருக்குமா? ……..
பார்த்தீ ஸ்கொலசிப் சோதின பாஸ்பண்ணி பேரா புகழா ஆகக்குள்ள நான் எத்தனையாம் வகுப்பில படிச்சுக் கொண்டிருந்தன் என்றது ஒன்றா, இரண்டா? – நான் ஐந்தாம் தரம் பாஸ் பண்ணியதும் கொன்வெண்டுக்கு போக அடம் பிடிச்சது நினைவிருக்கு. அதில நான் வென்றுத்தன்தான். ஆனால் என்ன பிரயோசனம்? இந்த வருசம் எட்டாம் தரம் படிக்கக்குள்ள நான் பக்குவப்பட, என்ன நிப்பாட்டிப் போட்டாங்களே. இளையமாமா எவ்வளவு சொல்லிப் பார்த்தார். ஆப்பாவும் இணங்கினார்தான். ஆனா அம்மா சறமுறண்டு தடுத்தப்போட்டா. அவ மூத்தப்பாவோட சொல்லக்குத்தான் ஆடின. அந்தக் கோபத்திலதானே அப்பா பாஞ்சியை வாத்தியாரண்ணாச்சிர வீட்டில விட்டதும்.
ஏல்லாம் ஸ்நேக்அன்ட்லடர் எண்டு சொல்ற பாம்பும் ஏணியும் விளையாட்டு போலத்தான். பாம்பு என்னை விழுங்கித்து. பார்த்தீ சுர் என்று ஏணியில ஏறித்தான். வாற வருசம் அவன் மட்டக்களப்பில உயர்கல்விக்குப் போறானாம். இந்த கோயில் வெளியில் அவனை இனி கண்டு கொள்றதும் கஸ்டம்தான்.

நான் இதுகள எண்ணி நிலத்தில காலின் பெருவிரலால் கோலம் போட்டுத்து நிக்கக்குள்ள மூத்தப்பா வரிஞ்ச கூட்டுக்கும்புட ஒரு பல் முறிஞ்சு போச்சு. அதைப் பார்த்து மூத்தப்பா சினமடையக்குள்ளதான் இளைய மாமா வீட்டுக்குள்ளிருந்து வெளிக்கிட்டு வந்தவர் – வேட்டியும் சேட்டும் பிரஸ் தலையுமாய். மூத்தப்பாட எலுமிச்சம் பழநிறந்தான், இளையமாமா என்றாலும் மூத்தம்மையிர தலைமுடிதான் அவருக்கு. நெற்றியே இல்லை என்பது போல புருவத்தடியலிருந்து தொடங்கும் அடர்ந்த சுருட்டை முடி. அந்த சுருட்டையை மறைக்க கொட்டானாய் வெட்டிக்கொள்வார்.
‘என்ன வெளிக்கிட்டுத்தயா? உள்ளுக்குள்ளதான் இவ்வளவு நேரமும் இருந்த? ‘ மூத்தப்பா கூட்டுக்கம்பின் பல்லுகள புடிச்சிப் புடிச்சி பார்த்துக்கொண்டே கேட்டார். இளைய மாமா விறைச்ச முகத்தோட சொன்னார்

‘ஓம், நீங்க சொன்னதயெல்லாம் கேட்டுக்கொண்டுதான் நான் உள்ளுக்க வெளிக்கிட்டுத்திருந்த…’
‘நான் சொன்னதில என்னடா தப்பு?’
‘என்னப் பத்தி சொன்னதில எந்தத் தப்புமில்ல. ஆனா என்ன நீங்க கட்டுப்படுத்துறதான் தப்பு..’
‘நான் உன்னக் கட்டுப்படுத்தாம வேற ஆர்ர உன்னக் கட்டுப்புடுத்துறது?’
‘அப்பா மகனக் கட்டுப்படுத்துறதுதான். ஆனால் நான் அந்தக் கட்டுப்பாட்டச் சொல்லல்ல. வழமை என்கிற கட்டுப்பாடு. அப்பனுக்கு மகனாப்  பிறந்ததினால மகன் அப்பனைப் போல ஆகவேணும், அப்பன் வகித்த பதவியை வகிக்க வேணும் என்ற கட்டுப்பாடு -..’
‘வழமைக்கு எதிராக எப்படிரா போறது? எனக்கு தெரிஞ்ச வழமையெல்லாம் வயித்துவார்தான். வயித்துவார் என்றா விளங்குமா? அதுதான் உனக்கு சம்பந்தமில்லாத, அப்பனுக்கு பொறகு மகன் என்ற தத்துவம். அப்பனுக்குப் பொறகு மகன்தான். கோயில் அகிகராசனாரும் அப்படித்தான், கோயில் வண்ணக்குமாரும் அப்படித்தான். பாண்டவர் கொலுவும் அதுதான் – பாஞ்சாலி கிட்ணரும் அதுதான். மகன் இல்லாட்டித்தான் மற்ற தாய்வழி உரித்து – உரித்துக்காரர்…..’
‘அப்படி ஒன்றை பார்க்கிறதானே. –‘

‘இல்ல என்ர மகன் இருக்கக்குள்ள நான் ஏன் இன்னொரு மகனத் தேட? என்ர மகனுக்கு எனக்குப் பொறகு இந்தக் கோயில் கட்டாடியாக  பணி செய்ய வெட்கமாக இருக்கா? அடே, கோயில் கட்டாடியிர மகத்துவம் உனக்குத் தெரியுமா? கட்டாடி என்றவன் யாரு? சகலதையும் கட்டுப்படுத்துற தலையாரி. அவன் கட்டு என்றால் கட்டுப்படும். அவன் வெட்டு என்றால் வெட்டுப்படும். மந்திரத்தால கட்டவும் வெட்டவும் கூடியவன்தான் கட்டடாடி. மந்திரம் பெரிய சக்தி. நீ மந்திரத்தை வாலாயமாக்க வேணும். மந்திரத்தால தெய்வங்களையும் தேவ தேவதைகளையும் வாலாயமாக்க வேணும். அந்த அமானுச சக்தியைத்தான் நான் உனக்கு தரப்போறன். நீவேணாம் என்டு சொல்லக்கூடாது. இந்த ஆலபத்திர உயிரோட்டமும், உள்ளோட்டமாய் இருக்கிற நம்மட சந்ததி என்னோட முடிஞ்சு போகக்கூடாது.’
‘அப்படிப் பார்த்தாலும் உங்களுக்குப் பிறகு உங்கட மூத்த மகன்தானே முதல்ல உங்கட இடத்துக்கு வர வேணும்’
‘அவன் தான் ஏமாத்திப் போட்டானே..?
‘அதுக்கு நானா பலிக்கிடா ?
;இது பலிக்கிடா ஆகிற விசயம் இல்லடா, அம்மாளுக்கு பணிவிட செய்யுற விசயம் -‘
‘இந்த கோயில சருகுகள கூட்டித்து கிடக்கிற பணிவிடை செய்ய உங்களுக்குத்தான் ஏலும். ஏனக்கேலாது..’
‘ஏலாதா?’
‘ஊரில இருக்கிற மனிசன் மஞ்சாதி மாதிரி நானும் நாலு சல்லி சம்பாதிக்கிறதில்லையா?’
‘மூத்தப்பாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. முகம், கோயில் கிணத்தடி கமுகின் பழப்பாக்கு போல சிந்து போயித்து. காதில கிடக்கிற கடுக்கன் ஆட ஆட ஒரு மாதிரி நடுங்கி நடுங்கி இளைய மாமாவை ‘இந்தா பிடி சாபம்’ என்பது போல பார்த்தார்.

‘சல்லி !…. சல்லிக்கென்னடா குறைச்சல்? உனக்கு தெரியுந்தானடா, வருசாவருசம் இந்த தாயிர சன்னிதானத்தில அந்த தெய்வம் எவ்வளவு சல்லி கொட்டுதென்று – ‘
‘ஓ..! அந்தச் சல்லியெல்லாம் உங்கட வலலுகத்துக்குள்ளதான் வந்தபூருது போல –‘
‘வல்லுகம் என்னடா வல்லுகம். வண்டில் வண்டிலாய் இந்த வாசலில கொணர்ந்து கொட்டுற பூமி விளைஞ்ச பொன்னையும் பொருளையும் நீ காணல்லையாடா? ஆந்தப் பொன்னும் பொருளுமில்லாம இந்தப்பெரிய …… வயிறுகள் எப்படிரா வருசம் முழுவதும் நிறையிர ?

மூத்தப்பா சற்று வளைந்த முதுகை நிமிர்த்தி இடுப்பில கையை வைச்சு நின்ற நிலை இப்பவும் என்ர கண்ணுக்குள்ள. அந்த நிலையில வண்டில் வண்டிலாய் கொண்டு கொட்டிய பொன்னே போன்ற அவணங்களின் அடுக்குகளை அவர் நிதானிப்பது போலத் தோன்றியது. இளைய மாமாவும் அந்த இதமான நாட்களை எண்ணிப் பார்த்து தன்னை மறந்து நின்றாரோ ? என் மனமும் வருசா வருசம் தீப்பள்ளயங்களின் தீரா நினைவுகளில் மூழ்கியது.

கோயில் கதவு திறந்து கொடியும் ஏத்தி, சாமியும் கொண்டு வந்த பிறகு வரும் தினங்களில் விடியச்சாம பூசையில் கட்டுக்கு நிற்கிற ஐவர் கொலுவையும் தேவாதிகள் கொலுவையும் சிறு கோயில்களை வளைத்து மந்திரத்தோடும் மற்றும் வழிகாட்டும் பாடல்களோடும் கொணர்ந்து, வாழிபாடி பூசைகாண வந்த தம்பிரான்களுக்கு வட்டா கொடுத்து  பண்டாரப் பொட்டும் வைச்ச பிறகுமூத்தப்பாவும் உதவிப் பொன்னரும் பெரிய உத்தியோகத்துக்காக புறப்படுவது போல புறப்படுவது நினைவுக்கு வந்தது.
மூத்தப்பா பொன்னிறம். பொன்னரும் பொன்னிறம். பொன்னர் இப்பவும் நிமிர்ந்துதான போவார். மூத்தப்பா எப்பவோ கூனிப்போனார். ரெண்டுபேரும் தலையில், காதடிக்கு மேல, நெற்றியையும் பிடரியையும் சேர்;த்து பெரிய உருத்திராட்ச வடம் பூண்டிருப்பாங்க. வெள்ளி மினுமினுப்பும் சாம்பல் பளபளப்பான உருத்திராட்ச வடம். ரெண்டுபேரும் பலவர்ண வேலைப்பாடு செய்த நீண்ட அங்கவஸ்திரத்தை தோளில் வாரப் போட்டிருப்பாங்க. ரெண்டுபேர்ர புயத்தையும் மஞ்சள் நூல் காப்பு கட்டியிருக்கும். இடதுகை நடுவிரல்ல தர்ப்பைப்புல் முடிந்திருக்கும். தார்பாச்சி கட்டின மாறுகரைவேட்டிக்கு மேல் வெறும் மேலோட தெரிய சந்தணம் பூசிய மார்பில நரைத்துப் படர்ந்த ரோமபுரிகளுக்கிடையில் தகதகக்கிற பூணாரங்களும் உருத்திராட்ச மாலைகளும் புரளும்.  நேற்றியில் குங்குமம் பெரிய சந்தணப்பொட்டு. குங்கும மேல் வைப்புடன் எடுப்பாய் இருக்கும். பண்டாரச் செப்பு ஒன்றுதான். அது மூத்தப்பா மடியிலதான் இருக்கும். அதுதான் அவர்ர அதிகாரத்துக்கும் அந்தஸ்துக்கும் அடையாளம்.

இப்படிப்பட்ட திருக்கோலத்தோடு. எல்லாரும் புதினம் பார்க்க மூத்தப்பாவும் பொன்னரும் புறப்பட்டாங்க என்றால், சூரியன் உச்சியால கிறுகி அடுத்தபாட்டுக்கு முக்கால்வாசி வானத்தை கடந்த பிறகுதான் ஊர்வந்து சேர்வார்கள். உடனே மிச்சம் உசாருடன் சந்தியாவந்தனப் பூசைக்கு ஒழுங்கு செய்வார்கள். அவர்களுடைய உசார்,  பகதி சிரத்தை என்று பலர் எண்ணியிருக்கக் கூடும். சின்னப்பிள்ளை என்றாலும் எனக்குப் புரியும். அன்றய தினம் ஏனைய தினங்கள் போல் கொண்டாட்டம் என்று. அவ்வளவு வசூல் கிடைத்திருக்கும். அவைகள் வசூலா, உபயங்களோ, தெண்டல்களோ எனக்குத் தெரியாது. வரப்போகும் சாமான்களை உருப்படியாய் தெரியும். தீப்பள்ளயம் முடிஞ்சு, எட்டாம் சடங்கும் முடிஞ்சு போன பிறகு, வண்டில் வண்டிலாய் சாமான்கள்  கோயில் வீட்டு வாசலில் வந்து குமியும்.. கோயில் வீட்டு உள்ளுட்டுக்குள்ள, படங்குகளால் பொதிந்த அட்டுவத்துள் கூரைமுட்ட நெல் களஞ்சியமாகும். அதுக்குப் பக்கத்தில அரிசி சாக்குச் சாக்காய். புடவைகள், வேட்டிகள், சாரன்கள், எல்லாம் பையனத்துக்கு  பரிமாறப்பட்டுவிடும்.. அப்போதெல்லாம் மூத்தப்பா அல்ல. சாட்சாத் தாதனே அவர்தான். பொன்னருக்கு ஒரு பங்கு அவ்வளவுதான்.

இதெல்லாம் இளைய மாமாவுக்குத் தெரியாமலா? இதெல்லாம் பையனமாய் திண்டு முடிக்கத்தான் காணும். மிச்சமாய் ரொக்கமாய் எவ்வளவு தேறும் என்றுதான் பார்க்கிறாரா? இல்லாட்டி, இந்த பழைய போக்குகளிலிருந்து விடுபட வேணும்  என்ற பார்தீயின் யோசனைப்படிதான் நடக்கிறாரா? அதனால்தான் பார்த்தீயை மூத்தப்பா அவ்வளவு வெறுக்கிறாரா? அதனால்தான் நான் மூத்தப்பாவுடன் தினமும் கொளுவிக் கொள்கிறேன் !
எனக்கு நினைவு தித்குமுக்காடியது. இளைய மாமாவின் இழுபறி, இளைய மாமாட மூத்தப்பாட சச்சரவாக மட்டுமில்லாது பார்த்தீயையுமல்லவா சம்பந்தப்படுத்துகிறது. மூத்தப்பாவும் தன் பழைய பெருமித கனவிலிருந்து நனவு நிலைக்கு திரும்பியது போல் இருந்தது. இளைய மாமாவும் இந்தக் கிழவினிடமிருந்து விடுபட்டால் போதும் என்று இறங்கினாற் போல தன் விறைப்பைக் குறைத்து விநயமாக நின்றார். மூத்தப்பாவின் குரல் உயர்ந்தது.
‘ சரி, நீ என்ன முடிவாய் சொல்றாய்?’
‘ யோசிச்சு சொல்றனே அப்பா..’
‘எப்ப ?’
‘நாளைக்கி’
‘ நல்லா யோசி, நான் சொன்னதையெல்லாம்  யோசி; சாகப்போற இந்த தகப்பனின் கடைசி ஆசையை காலால மிதியாத’
பதில் பேசாமல் கண் கலங்கியது போல, இளைய மாமா நடந்தார்

௦௦௦௦௦௦௦

இளைய மாமா, கடப்பைக் கடந்து போவதுவரை பார்த்து நின்று விட்டு, மூத்தப்பா கூட்டுக்கம் பின் பற்களுக்குத் திரும்பி, திருப்தி இல்லாதவர் போல கூட்டுக்கம்பின் வரிச்சை இழுத்தசைத்து நேர் பார்த்த பின் அதை கடப்பு வேலியில் சாத்தினார்.
‘உன்ர செங்கோல் இப்போ சரியா மூதடதப்பா ?’
மூத்தப்பா  என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டுப் பக்கம் நடந்தார். நான் என் கில்லாடித்தனத்தில் இன்னும் முழு மூச்சாக மூத்தப்பாவின் நடையை பாவனை பண்ணி அவருக்குப் பின்னாலேயே நடந்தேன். திண்ணைக்குள் புகுந்த அவர், வெட்டுக்கத்தியையும் அருவாக் கத்தியையும் எடுத்தார். நான் பயந்ததுபோல் பரிகசித்து பின்வாங்க அவர் இறப்பில் செருகி இருந்த சணல் கயிற்றையும் கலம்பக் கயிற்றையும் எடுத்திற்று கடப்படிப் பக்கம் நடக்க, நானும் அவருக்குப் பின்னால அவரைப் போலவே திரும்பவும் நடந்தேன்.
கடப்படி மூலையில் மூத்தப்பா முந்தின நாள் வெட்டிப்போட்ட பூவரசங்கம்பை எடுக்கிறதிக்கு ரண்டு கையிலும் வெட்டுக் கத்தி, அருவாக்கத்தி, சணல் கயிறு, கலம்பக்கயிறு சகிதம் பிரயாசைப்பட்டு ததிமிதப்பட, நான் முன்னுக்கு போய், ‘ உடு மூத்தப்பா, ‘ என்று சொல்லிக்கொண்டே பூவரசங்கம்பை அவருக்காக எடுத்தன்
‘வெளியால கொண்டு வா, ‘
இந்தக் கில்லாடியின் உதவியை மூத்தப்பா ஏற்றுக்கொண்டது கில்லடிக்கு சந்தோசமே..பூவரசங’கம்பை தோளில் வைச்சு நான் வீர நடைபோடுறதை பார்க்க வேறு யாருமில்வையே என்ற கவலையுடன் அங்குமிங்கும் பார்த்தபடி அவருக்’குப் பின்னால அரச மரக்கந்துகள் கவியுற ஒதுக்குப்புறமான மேட்டுக்குப் போனன்.

‘என்னத்துக்கு மூத்தப்பா கத்திகள்? ஓல மட்ட புளக்கவா? ‘
‘அது பொறகு. இப்ப நான் புது கூட்டுக்கம்பு கட்டப்போறன். ‘
‘எப்படி மூத்தப்பா ? ‘
;இவ்வளவு நாளும் நான்  கூட்டுக்கம்பு கட்டினத காணாதது போல கேக்கிறியே ‘
‘ நான் காணல்லத்தான மூத்தப்பா. நேத்து நீ வேலிமாமாட வேலியில இந்த பூவரசங்கம்பை வெட்டினதத்தான் கண்ட. ‘
மூத்தப்பா பூவரசங்கம்பை உரிக்கத் தொடங்கினார். மோதடதமான கம்பு. என்ர முன்னங்கையை விடவும் மொத்தமானது.
‘உடு மூத்தப்பா, நான் உரிச்சித்தாறன்’
‘ம்….. நான்தான் என்ர கையால உரிக்க வேணும். இது அம்;மாள்ர கூட்டுக்கம்பு’
‘அம்மாள் உனக்கு தாற செங்கோல் இலுவா மூத்தப்பா’
என் சிரிப்பை அடக்கிக் கொண்டு பக்தி பூர்வமாய் சொல்வது போல சொன்னேன். மூத்தப்பா எப்படியானதென்ற சொல்ல முடியாத ஒரு பார்வையோடு இந்த முறையும் என்னைப் பார்த்தார்.- செங்கோல் என்ற சொல் தனக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ என்பதை தீர்மானிக்க முடியாதவர் போல.

மூத்தப்பா பூவரசங்கம்பை உரிச்’ச பிறகு கூட்டுக்கம்பால கூட்டுறது போல நீட்டி நீட்டி வளம் பார்த்தார்.
‘ என்ன மூத்தப்பா? உயரம் அளசல்ல. நீளத்த கொஞ்சம் குறைப்பம் ‘
‘ வேலி மூலையில் கிடந்த மரக்குற்றியை பூவரசங்கம்பின் நுனியை வைச்சி ஒரு சாண் அளவு துண்டை வெட்டி நீக்கிய பிறகு மீண்டும் கூட்டுவது போல வளம் பார்த்து திருப்திப்பட்டது போல புன்னகை உதிர்த்தார்.
பிறகு என்ன செய்வார் எண்டு அறிய ஆவலாய் நின்றேன். வேட்டுக் கத்தியை ஒரு கையில் எடுத்து மறுகையால் பொல்லை அடி நுனியாக பூமியில் நட்டு நிறுத்தி வெட்டுக் கத்தியை பொல்லின் நுனியில் வச்சி, பொல்லை வெட்டுக் கத்தியால்  கீழே அழுத்தியவாறு, வெட்டுக்கத்தியின் மேல் அருவாக் கத்தியினால் தட்டினார். தட்டத் தட்டபூவரசங்கம்பின் நுனி ஏறக்குறைய சமமாக பிளந்தது. மேலும் மெல்ல மெல்ல வெட்டுக் கத்தியை அருவாக் கத்தியினால் தட்டித் தட்டி பிளவை இரண்டு சாண் ஆழத்துக்கு நீட்டினார். பிறகு அருவாக் கத்தியைப் பிடித்த கையினாலேயே, பொல்லை நிறுதட்டமாய் பிடித்தபடியே. வெட்டுக் கத்தியை பிளவுக்கு குறுக்காக வைத்து அருவாக் கத்தியினால் முன்போலத் தட்டினார். தட்டத் தட்ட முந்தின பிளவுக்கு குறுக்காகவும் பிளவு உண்டானது. அந்தப் பிளவை ஆழப்படுத்த, ………. அட, என்ன ஆச்சரியம். நாலு கீலங்கள் நிமிர்ந்து வாயை திறந்ததுகள். மூத்தப்பா மெலும் கூர்மையானார். வெட்டுக்கத்தியை நாலுகீலங்களினதும் வெட்டுமுகங்களில் வைச்சு மெல்ல மெல்ல தட்டி அவை ஒவ்வொன்றையும்  இரண்டு கீலமாக்கினார். இப்போ எட்டுத் தலைப்பாம்பொன்றை அதன் கழுத்தில கிறுக்கிப் பிடித்த மாயாவிக் குறவனாக மூத்தப்பா தெரிஞ்சார். அவர்ர பெருமைக்கு அளவில்ல. அந்த எட்டுத்தலை நாகத்தை, பெருங்கிணைத்து கொட்டு போன்ற அரசமரத்தடியில் சார்த்தித்து வேலி மூலையில கிடந்த பெருவிரல் தடிப்பான பூவரசம் தடியில் ரெண்டு சாண் நீளமான ரெண்டு துண்டுகள் வெட்டி உரித்துக்கொண்ட வந்தார். எட்டுத்தலை நாகத்துடன் கீழே சம்மாளம் கோலி, எட்டுத் தலைகளையும் மடிக்குள் கிடத்தி இடுப்பில் செருகியிருந்த சணல் கயிறை எடுத்தார். ரெண்டு சாண் நீளமான தடிகளில் ஒன்றை அந்தப் பாம்புத் தலைகளுக்கிடையில் ஒரு கையால் செருகிய மூத்தப்பா, மறுகையால் சணல் நுனியை எடுத்து சட்டென எனனைப் பார்த்துக் கேட்டார்.
‘நீ, முழுகித்தியா?’
நான் குளிச்சித்தனா, என்று கேக்காராக்கும் என நினைத்து இல்லை எனச் சொல்லப்போன நான், ஒரு மின்னல்வாக்கில் அவருடைய கேள்வியை வேறமாதிரி உணர்ந்து வெட்கித்து தலை தாழ்த்தி மெல்ல சொன்னேன்.
‘ நேத்து முழுகினனான் -‘
‘அப்ப கவலை இல்ல. இஞ்ச வா, இதப்புடி’
எட்டுத்தலை நாகத்தை என்னிடம் நீட்டினார் மூத்தப்பா. நான் எட்டி வாங்கியதும், அவர் தடியுடனும் சணலுடனும் எழும்பி மீண்டும் பாம்புத்தலைகளுக்குள் குறுக்குத் தடியை செருகி குறுக்குத்தடிக்கு இரண்டு பக்கமும் நீட்டிய தலைகளை இழுத்து இழுத்து தடியோடு வரிந்தார்.
‘ கெட்டியாய் புடி’
நான் ஊன்றிப் பிடித்தபடி குந்தி மேலே பார்க்க மூத்தப்பா பல்லை இடுக்கிக் கொண்டு சிக்காராய் வரியுறது தெரியுது. மேல் வரிச்சிக்கு கீழ, மற்றொரு தடியையும் வைச்சு வரிந்தார்.
‘உடு..’நான் கம்பை விட்டு எழும்பி வரிச்சைப் பார்தன். நானும் சேர்ந்து மூத்தப்பாவின்  கூட்டுக்கம்பி கட்டியதான ஒரு சந்தோசத்தை என்னால் தவிர்க்க முடியல்ல. தன் திருப்பணிக்குள் மூத்தப்பா என்னை சேர்த்தக் கொண்டது போலிருந்தது.
மூத்தப்பா அவருடைய புது கூட்டுக்கம்பை உயர்த்தி. அப்படியும் இப்படியும் கெழிச்சுப் பார்த்தார். அப்போது அவருடைய முகத்தில் தெரிஞ்ச ஆனந்தம் ! கீழே கிடந்த சருகுகளை இரண்டொரு தரம் கூட்டியும் பார்த்தார். பரம திருப்தி.

அப்போதுதான் எங்கேயோ இருந்து மூத்தம்மை கூடை பற்றிப்போன அவவுடைய நரைத்த கறுப்பும் வெள்ளையுமான கூந்தலுக்குள் கையை வைத்த சொறிந்தபடி வந்தா. மூத்தப்பா புதுக்கூட்டுக்கம்பை மூத்தம்மையிற்ற காட்ட, அது காணாத அதிசயத்தைக் கண்டதுபோல ஆச்சரியத்தோடு  பார்த்தா. ஆந்த ஆச்சரியத்தை ரசித்த மூத்தப்பா தன் காவி படிந்த அரிசிப்பற்கள் தெரிய சிரித்தார். அபூர்வமாகவே அவர் சிரிக்கும் சிரிப்பு அது.
‘மூத்தம்மா, நான்தான், புதுக்கூட்டுக்கம்பு கட்ட மூத்தப்பாவுக்கு ஒத்தாசை பண்ண..’
நான் என் புளுகத்தக் காட்டவேண்டாமா?
மூத்தம்மைக்கு பொறாமை வந்தது போல சொன்னா.
‘ங்….நா… நீ தான் அவடத்த போனாப்ல சுணங்கித்தா –‘
மூத்தப்பா பரிகாசமாகச் சொன்னார்.
‘நீங்க ரெண்டு பேரும் இல்லாட்டியும் ஆரோ ஒரு ஆள் எனக்கு கிடைச்சிருக்கும் ‘
அதைச் சொல்லக்குள்ள சட்டென அவர்ர முகம் இறுக்கமானது. இறுக்கமாகவே அவர் சொல்லிக் கேட்டது.
‘நீ….நீ … நீ இல்லாட்டியும் எவனோ ஒருவன் எனக்கு வருவான்…’
அந்த இறுக்கத்திலிருந்து அவர் விடுபட்டு திரும்பவும் கூட்டுக்கம்பைப் பார்க்க கொஞ்சம் நேரமாச்சு. அவருடைய இறுக்கத்தை என் பழைய பகிடி ஏதும் பண்ணியிருக்குமா ?
‘சரி மூத்தப்பாவுக்கு ஒரு புதுச் செங்கோல் -‘
திரும்பவும் எப்படி என்று சொல்ல முடியாத மூத்தப்பாவின்பார்வை அவருக்கு பிடிக்கவில்லையோ அல்லது பிடிபடவில்லையோ !

மூத்தப்பா புது செங்கோலுடன் கொயில் அரச மரத்தைக் கடந்து கோயில் பிரகாசத்திர எல்லைக்குப் போனார்அந்த எல்லையிலிருந்து அரசம் சருகுகளை அரசமரத்தடிக்கு கோலோச்சிக் கொண்ட வந்தார். அப்படியே கோயில் சந்திப் பக்க கொக்கடியத்தொட்டு, அப்பால் வேலி மாமாவின் அழிஞ்சிபோன வேலி ஓரமாய் சருகுகளைச் சாய்த்துக்கொண்டு அரச மரத்தடியில் விட்ட பிறகு எதிர்புறமாக பட்டாணிக் கோயில் கொக்கட்டி தொட்டு புளியை வரையில் சருகுகளை மேய்த்து எல்லாத்தையும் அரச மரத்துக்கும் கிணத்தடிக்கும் இடையில் முடித்தார். மூத்தம்மையைக் காணல்ல.எங்கேயோ திரும்பவும் போயித்தா. கோயில் கிணற்றடி கெவுளித் தென்னைமர ஓரமாய் நின்ற எனக்கு சட்டென ஒரு பொறி உதயபிரகாசமானது. ஓடிப்போய் எங்கட செத்தைக்குடில் அடுப்பிலிருந்து நெருப்பெடுத்து சிரட்டையில் கொண்ட வந்தன்.
‘மூத்தப்பா குப்பைக்கு நெருப்பு வைக்கட்டா?’
‘உன்ர மூத்தம்மை இல்லையா?’
‘அவவைக் காணல்ல..’
மூத்தப்பா என்னை ஒரு முறை இரக்கமாகப் பார்த்தார். பழைய கோபம் மறைஞ்சு போச்சா. தனக்கு உதவியாக ஒரு பொட்ப்புள்ள எனறூலும் இருக்கிறாளே என்ற தென்பா அந்த முகமலர்ச்சி. ?

நான் குப்பைக்குள் நெருப்பை வைச்சி ஊதிஊதி குப்பையைப் புகையவிட்டன். அதுதான் சரி என்பது போல மூத்தப்பா தலையசைத்தார். மூத்தம்மை என்றால், குப்பையை சுவாலை விட்டு எரியச் செய்திருப்பா. அது மூத்தப்பாவுக்கு விருப்பமில்லை என்று எனக்குத் தெரியும்.

அரசமர ராச்சிய பரிபாலனத்தை விட்டு மூத்தப்பா அடுத்து நாவல்மர ராச்சிய பரிபாலனத்துக்கு போனார். நான் மெல்ல அவருக்குப் பின்னால அந்தப் பக்கம் மைந்தினேன். குமராகிப் போன புள்ள வரவேணாம் என்று கண்டிப்பரோ என்ற பயம். திரும்பிப் பார்த்தார். புளியைவரை போன எனக்கு, தடையாக அவர்ர முகத்தில எந்த சமிக்ஞையும் தெரியல்ல. ‘நேற்றுத்தான் முழுகினேன்’ என்பதும்; அவருடைய காரணமாக இருக்கும். கோயில் வெளியெல்லாம் ஒடித்திரிந்த நான் நாலு வேலிக்குள்ள எத்தனைநாள் முடங்கிக் கிடக்கிறது. எனக்கு சுதந்திரமான ஊடாட்டம் தேவைப்பட்டது. புளியடிவரையம் வந்தால் போதுமா ?
சின்ன நாவல் மரத்தைச் சுற்றி தன் செங்கோலை அசைத்து விட்டு மூத்தப்பா தீககுழிக்குப்பக்கம் போனார்.
‘நாவல் மரக்குப்பையையும் கொளுத்தவா மூத்தப்பா?’
‘ம். ..’ என்று குரல் வந்தது. இல்லாத புளுகம் எனக்கு. கொஞ்சம் கையைக் காலை உசுப்பித் திரியலாம்.
தீக்குழியைக் கடந்து போக மூத்தப்பா விடுவாரா? காடேறி என்றால் எனக்கப் பயம். நாக கன்னி கோயில் என்றாலும் கொஞ்சம் பயம். அரவானை பலி கொடத்த கதையின் அச்சம். இதெல்லாம் சேர்ந்து என் குரலை சற்று மசியத்தான் செய்தது.
‘அங்கவும் பற்ற வைக்கவா மூத்தப்பா ஃ’
‘ங் ஙா.. ; பலவீனமான குரலுக்கு பலவீனமான குரல்.
மூத்தப்பாவுடன் எனக்கு ஒரு புது நெருக்கம் ஏற்பட்டது என்ற தென்பு. அவர்ர செங்கோல் போன இடமெல்லாம் எனக்கும் போகமுடியும் எனடற தைரியம். தெருவழியில் மணம் பிடிபட்டவருக்கப் பின்னால், தத்தித் தத்தி மறுகும் நாய்க்குட்டியின் ஸ்மரணையற்ற மோப்பத்தில் நான்.
‘மூத்தப்பா ‘
‘ என்ன ?’
பெரிய ஆலமரத்தைத் தொட்ட. வம்மிமரத்தின் அடியாக சருகுகளின் சமுத்திர அலைகளை திரட்டி உருட்டி நகரச் செய்த செங்கோல், அந்த சமுத்திர ஓசையை என் பதிலுக்காக சற்றே நிறுத்தியது போலத் தோன்றவும், தவநிலை அர்ச்சுனரை தடுமாறச் செய்யக்கூடிய சாகஸங்களை தொடுத்தேன்.
‘மூத்தப்பா. இளைய மாமா சம்மிதக்காட்டி என்ன செய்வீங்க..?’
‘அவன் சம்மதிப்பான்..’ தபசி அருச்சனரின் தவம் கெட்டாத பதில்.
சருகுச் சமுத்தரம் திரும்பவும் புரளுது. சருகோசை சமுத்திர ஓசையாகிறது. பேரிய ஆலையிலிருந்து, வெள்ளரசுவரை – இடையில நடுவாலையும் முடிவில் சின்னாலையையும் தொட்ட செங்கோல் ஆடும் சிவதாண்டவத்தில, இமயமலைகள் எழுகின்றன. ஓவ்வொன்றையும் எளிமையாக்கி அந்த நாள் கடைசி மலை புகை கக்குகையில் மூத்தப்பாவையும் புகைய விடத் தயார் ஆகிறேன்.
‘ மூத்தப்பா ‘
;என்ன?’
இளைய மாமா உங்கட இஸ்டத்துக்கு சம்மதிப்பார் என்டு நீங்க எப்படி சொல்றீங்க. ?’
‘அப்பம் எண்டா புட்டுக்காட்ட வேணுமா? காலம கதைச்ச கதையில அவன் கண்கலங்கி கொளறித்திலுவா போறான்.! நிச்சயமாய் இது என்ர பிள்ளைக்குரிய பணிவிடையும் ஆட்சியும்………..’
;இந்தச் செங்கோலா….? ‘
எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருவதை தவிர்க்க முடியாமல் மூத்தப்பாவின் சொல்லுக்கு காத்திராமல் நான் ஓடியே வந்தேனே…….

௦௦௦௦௦௦௦௦௦

நான் கோயில் கிணத்தடிக்கு ஓடி வந்து நின்று பார்க்க, மூத்தப்பா ஆலம்சருகு புகைகளுக்கிடையில் காடேறி கோயில், கவடா வீட்டு ஓடைக்குள் போவது தெரிந்தது.
பொழுது நல்லா ஏறிப்போச்சுது. வெயிலும் உரமாகிக் கொண்டிருந்தது.. பசி வயிற்றைக் கிள்ளியது. பல்லைத் தீட்டி கோயில் கிணத்தில் இளகப்போட்ட தென்னோலை மட்டைகளுக்கு மேல் நின்று முகம் கைகால் கழுவினேன். காலைவேளையில் குளித்த கனகாலம். காலையில, மத்தியானத்தில முகத்தைக்கழுவுறதும், ராவில குளிக்கிறதும் இந்த கோயில் வீட்டுக்குமருக்கு வழக்கமாக போயித்து.
மூத்தப்பா கோயில் தென்னைகளின் கீழ் பொறுக்கிய ஒலை மட்டைகளுடன் கிணத்தடிக்கு வாறத்தக்கிடையில நான் எங்கட செத்தை வீட்டுக்குள்ள போயித்தன். அவசர அவசரமாக கூந்தலைச் சீவிஒத்தச் சடையை பின்னிக் கொண்டு, தட்டு வேலியிலிருந்த கண்ணாடிய எடுத்து முகத்தப் பார்க்கிறன்.
என்ர கண்கள் என்னைப் பார்த்து சிரிக்குதுகள். நான் அதுகளப் பார்த்து சிரிக்கன். நிறம் எங்கட குடும்பச் சொத்தாம். என்ர கண்கள் என்ர தனிச் சொத்தாம். பார்தீ ஆரிட்டயோ சொல்லியிருக்கான். என்ர கண்கள் துள்ளும் கண்களாம். கண்கள் எப்படித் துள்ளும் என்று நான் கேட்டு அனுப்பினதுக்கு என்ன சொல்லி அனுப்பினான். ! குளத்துக்குள்ள வெள்ளிப் பொட்டியானும் கருமையான மஞ்சள் பொட்டியானும் மாறி மாறி துள்ளுறாப்போலயாம். பொட்டியானும் துள்ளுமா? வரால்கள் துள்ளும் என்று அவன் கேள்விப்பட வில்லையா என்று கேட்டனுப்பியதுக்கு அவன் என்ன சொல்லி அனுப்பினான். ! எப்படியும் எடுத்துக்கலாமாம் எதற்கும் கற்பனை வேணுமாம். என்ர கறுத்த முழியும் வெள்ளை முழியும் லபக் லபக் என்று கள்ளத்தனமாகவும் வெள்ளத்தனமாகவும் சுட்டிகையாக மாறுகிறதினால்தான் அப்படிச் சொன்னானாம். நான் இப்போ என்ர கறுத்த முழிகளும் வெள்ளை முழிகளும் லபக் லபக் என்று இடம் மாறுவதைத்தான் கவனிக்கிறேன். அதகள் என்னைப் பார்த்துச் சிரிக்குதுகள். நான் அதுகளப் பார்த்து சிரிக்கன்.

திரு நீறு எடுத்து நெத்தியில ஒத்தைக் கோடு கீறித்து அம்பாள் சாமியைக் கும்பிட்டுத்து பாவாடை சட்டை மாத்துறன். நான் போடுற பாவாடை சட்டை பற்றியும் பார்த்தீ கதைச்சிருக்கான். நான் தோப்புளா பாவாடை சட்டைதான் போடுறதாம். இறுக்கிற பாவாடை சட்டைதான் பிடிக்குமா என்று கேட்டனுப்பினன். பதில் இல்லை. பெரிய பாவாடை சட்டைக்குள்ளால காலை வீசி, உடம்பை தளர்வாய் விடுறதுதான் எனக்குப் பிடிக்கும். என்ர கால் எங்கே போகுது, கை எங்கே போகுது. நெஞ்சு எங்கே போகுது என்று எவருக்கும் தெரியக் கூடாது என்றும் சொல்லி அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை.
சாப்பிட்டுத்து வெளியில வந்தா மூத்தப்பா, கச்சைக்கட்டோட கிணத்தடியிலிருந்து இளகின ஓலை மட்டைகளை இழுத்தித்து போறாரு. ‘தண்ணிச் சோறு சலிச்சுப் போகும். திண்டுத்து போவன்.’ எண்டு மூத்தம்மை கடப்புக்குள்ள நிண்டு புறுபுறுக்காவு. ‘மூத்தப்பா சாப்பிடன்’ எண்டு நானும் குரல் கொடுத்துக் கொண்டு கிணத்தடிப் பக்கம் பொறன்.

மூத்தப்பாதான் எண்டாலும் கச்சைக் கட்டோட நிக்கிற ஆம்பிளய பார்க்கிறது இந்தக் காலத்தில வெக்கம் தான். அதுவும் பின்பக்கம் தேய்ஞ்சு சுருங்கிப் போன மூத்தப்பா.! முள்ளந்தண்டெலும்பு ஒரு கோர்வையாய் குத்தித்து நிக்குது. அந்த நலிஞ்ச மெலிஞ்ச தேகத்தில எனக்கு ஒரு இரக்கம் உண்டாகிறது போலவும் இருக்கு. சூம்பிப்போன தொடை. ஓலை மட்டையை பிளக்கிற அவர்ர மல்லாட்டத்தில தொடைகள் நடுங்குது.
நுனியிலிருந்து ஓலை மட்டையை பிளந்து நடு மட்டைக்கு வரக்குள்ள அருவாக்கத்தி தளம்புது. நடு மட்டையைக் கடந்து மேல் மட்டைக்குள் கத்தி வரக்குள்ள மூத்தப்பா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குறார். கைகள் கத்தியை கெட்டியாய் பிடிக்குது. தோல் சுருங்கி நார் போல தெரியும், முன்னங்கை தசைகள் புரிவிட்டு தெரிபட்டு அதிரும். வயது போனாலும் வாலிபத்தில் அவர் எப்படி இருந்திருப்பார் என்றதைக் காட்டும் புயத்தின் சுருங்கிய தோல்பைக்குள் சிறிய திரறையான் பூனைக்குட்டி தசைகள் நடுங்கும்.

‘இஞ்ச உடு மூத்தப்பா, நான் ஓலை மட்டைகளைப் பொளந்து தாறன்.’
‘பொட்டேய் நீ தள்ளப் போ..’
‘நான் பொளந்து தாறனே’
‘இது என்ர பணிவிடை. எவரும் செய்யக்கூடிய வேலை இல்ல..’
‘நான் குப்பை எல்லாம் பற்ற வைச்சேனே ‘
‘அது உன்ர மூத்தம்மையிர வேலை. அதை நீ செய்தாய்’
‘மூத்தப்பா,  இந்த ஓலை மட்டைகளோட ஏன் இவ்வளவு மினக்கெடுறாய்? கோயில் விட்டுக்கு மேய கிடுகு வேணுமெண்டால் கோயில் ஆக்கள் வாங்கித் தருவாங்கதானே.’
‘அடியேய் தொழுப்பறி. நீ சின்னபபுள்ள, தெரியாமக் கதயாத’
‘முன்ன குமர்புள்ள எண்டீங்க. இப்ப சின்னப்புள்ள என்றீங்க..’ நான் செல்லமாய் சிணுங்கிறேன்.
‘நீ குமர்புள்ள எண்டாலும் சின்னப்புள்ளதான விசயமறியாதவள்’
‘அது என்ன விசயம் நான் அறியாதது.?’
‘அடியேய், இது அம்மாள்ர திருப்பணி ‘
‘கிடுகு இழைக்கிறதுமா ?’
‘டியே, அம்மாள்ர அத்தனை தென்னைகள்லிருந்து விழுற ஓலை மட்டைகளை என்ன செய்யுற?’
‘கிடுகுக்கார தம்பானுக்கு விக்கிறதுதானே’
‘விக்கிறது அம்மாளுக்கு செய்யுற துரோகம்டி அம்மாள்ர பாவம் சும்மா உடாது. நான் அம்மாள்ர பணியாளன். அம்மாள்ர ஓலைகளை வீணாக்கக் கூடாது. கிடுகாக இழைச்சுக் குடுக்கன். கோயிலாக்கள் அத செய்யுற மாதிரி செய்வாங்க’
‘அதால நம்மளுக்கு என்ன பிரயோசனம்.? ’
‘அட, இன்னும் கேக்காளே – அடியே கொப்பன் நம்மட முந்திரிக்கு கீழ, ரெண்டு அறையும் விறாந்தையுமாக கட்டியிருக்கானே செத்தைககுடில், அத மேயுறத்துக்கம் வளைச்சுக் கட்டுறத்துக்கும் எந்த கிடுகு கும்பத்திலிருந்து கோயிலாக்கள், என்ர மருமகன் எண்டு போட்டு எடுத்துக் குடுத்த? இப்படி நான் இழைச்ச கிடுகு கும்பத்தில் இருந்துதானடி?
‘அதுதான் கோயில் வெளியைப் பார்த்தா வேலிகளை வெட்டையாய் உட்டிருந்காய் ..’
‘கோயில் வீட்டு வேலி வெட்டையாகத்தான் இருக்க வேணும்.’
‘பொண்-புரசுகள் கோயில் வீட்டில இரக்கிறது மூத்தப்பாவுக்கு தெரியுறதில்லையா ?’

‘முந்திரியும், மரவள்ளிகளும், மல்லிகையும், செவ்வரத்தையும், வாழைகளும் வேற என்னத்துக்கு இருக்கு? வேலி ஓரமாய் நான் அடிமட்டைகளை சார்த்தியிருக்கிறது வேற என்னத்துக்கு? அடிமட்டைகள்ர இடுவல்களுக்குள்ளால உள்ளுக்கு இருந்து வெளியால பார்க்கலாம். வெளியே யிருந்து உள்ளுக்க பார்க்க ஏலாது தெரியுமா? கிடுகால மறைச்சா உள்ளுக்கிருந்து வெளியால ஒண்டையும் பார்க்க ஏலாது.’
‘வெளியில என்னத்த பார்க்கிறது? வெளியில என்ன இருக்கிறதெண்டு தெரியும்தானே ‘
‘அங்கதான் இருக்கு சூக்குமம். அங்க திரும்பிப் பார்டி புதுக்கிணத்தடிய. எல்லாம் தளதளத்து குலை போடடிருக்கிற இளந்தென்னைகள். எத்தனையோ இளந்தாரிகள் கறுவுறானுகள, அதுகள்ல ஒரு குலை வெட்டிக்கொள்ள. உடுவனா நான்? வீட்டுக்குள்ள இருந்தாலும் வேலிக்குள்ளால என்ர கண்….’
‘இஞ்சால பார். கோயிலுக்கு கைமாறின வேலிப்புள்ளயிர பெரிய வெள்ளக் கொளும்பான். எத்தனை கச்சைக்கட்டு வால்கள் கல் எறியப் பார்க்குதுகள். எத்தின கொடுக்குகள் குரங்குகள் போல மேல ஏறி குலையைப் பிய்க்க குதிக்குதுகள். உடுவனா நான். இந்த வேலி மூலைக்கு கிடுகு கட்டியிருந்தா அதுகள எப்படிக் கவனிக்கிற? ‘
‘இந்தா பார் புளியைய. பூவும் பிஞ்சுமாய் இருக்கக்குள்ளயே இந்த பொல்லாத பொடியனுகள் கல்லும் பொல்லும் எறியுறானுகளே’
‘அந்த கோயில் மண்டபத்தைத்தான் என்ன பாடு படுத்துதுகள். தூணுக்கு தூண் கரியால கீறுதுகளே. கோயில் பெருங்கதவுக்கு ரெண்டு பக்கத்திலயும் என்ன வடிவான ரெண்டு ஆளுயர சித்திரம். குந்தி தேவியும் கிட்டினரும். கரியால குந்திதேவிக்கு மீசை வைக்கானுகளே. கிட்டினருக்கு தாடி வைக்கானுகளே. நான் இந்த கோயில் வீட்டு வேலிக்கு கிடுகு கட்டியிருந்தா இதயெல்லாம் கவனிக்க முடியுமா?’
‘நீ எண்டாப்ல குறைஞ்ச ஆளா? கீக்கோ மாக்கோ விளையாட அந்த கவடா ஊட்டு துறப்பை எடுத்துக் கொண்டு போய் அதத்தொறந்து, அவன் பார்த்தீயோட அடைச்சித்து இருந்த நீ இலுவா? – எத்தின நாள் இது நடந்திச்சோ? இந்த வேலிக்குள்ளால அல்லவோ நான் அதக் கண்டு புடிச்ச….’

நான் பொல்லக்குடுத்து அடிவாங்கின மாதிரி. கிழட்டு மனுசன். என்ன மாதிரி பழையத எல்லாம் கிண்டுது. – செவ்வையாய் ஒரு அடி கொடுக்க வேணும்போல இருந்தது. என் எரிச்சலை அடக்க முடியாமல் கத்தினேன்.
‘இதுகளதானா நீ இளைய மாமாவுக்கு ஒப்படைக்கப் போகும் திருப்பணிகள் …..?’
இந்தக் கேள்வி மூத்தப்பாவை சரியாய் சீண்டியிருக்க வேணும்.
‘அடியேய், ..’ கோபத்தோடு கத்திக் கொண்டு பக்கத்தில கிடந்த செங்கோலை தூக்கினார் அடிக்க. அவரை சீண்டிய சந்தோசத்தோடு கெக்கலித்து சிரித்து துள்ளிப் பாய்ந்தேன் கடப்புக்குள்.

௦௦௦௦௦௦௦

பொழுது உச்சியால கிறுகித்து. வெளியே வெயில் கொளுத்துது. மேய்ந்த மாடுகள் கிணத்தடிக்கு தண்ணி கேட்டு வருகுதுகள். கிணத்தில அள்ளிக் கொடுக்கன். குடிச்ச மாடுகள் புளிய மரத்தை கடந்து ஆல மரத்தக்கு கீழ போகுதுகள். பனையோரமாய் போற வழிப்பாட்டில சுடு மணல்ல ஓடி ஓடி வந்த கடைக்குப் போற புள்ள அரச மரத்து நிழலுக்கு ஓடிவந்து காலாறுறாள். ஆரச மரத்தின் இலைகள் சோவென கலகலக்குது. நிழலின் அருமை வெயிலில் தெரியும். வெயிலின் அருமை நிழலில் தெரியும்.

மூத்தப்பாவின் வழமையான அரசமரத்தடி கச்சேரிக் கூட்டம் வரத்தொடங்குது. தோப்பூர் பண்டாரந்தான் முதல்ல தோன்றுறார். தோள் துண்டை பட்டாணிக் கோயில் கொக்கட்டி மரத்தை சேர்ந்தாப்போல விரிச்சித்து கிடக்கார். கொஞ்ச நேரத்தில காடேறி வைரவர் தன் கோணிப்பையோடு வந்து கோயில் கிணத்தைப் பார்த்தபடி குந்தினார். காடேறி கோயில் சந்தியை கடக்க, தங்கள் கொல்லைக் கதவுக்குள்னேயோ, சிறு வேம்பு மரத்துக்கு கீழேயோ காத்து நின்றவ போல அன்னிப்பெத்தா தன் கடைசிப் பேரப்பிள்ளையோட தத்தி தத்தி வந்து சேர்ந்து, புளியடிப்பக்கமாய் கால்மேல காலப்போட்டு தன் பேரனை மடியில் வைச்சு தாலாட்டிக் கொண்டிருந்தா. ஆவ வரக்குள்ளேயே ‘அடியேய் சீரகம்’ என்ற அவட குரல் கேட்டது.

சீரகத்தாத்த வக்குக் கிணத்தடி ஒற்றையடிப்பாதை மணலின் வெயில்சூட்டின் நெருப்புத் தணலின் கால் வைக்க முடியாமல் பதைபதைத்தோடி வந்து அன்னிப் பெத்தாவுக்க அருகில் குந்தினா. எல்லோருக்கும் கடைசியாக முத்தல் கணபதியர் ஊத்தைச்சாரனும் வெறும் மேலுமாய் வெற்றிலை போட்ட வாயோடு வியர்வை வழிய விதிர் விதித்து வந்து கடேறிக்குப் பக்கத்தில் சம்மாளம் கோலி நெட்ட நிமிர்ந்திருந்தார்.    எல்லார்ர பார்வையும் அரச மரத்தடியையே, மூலஸ்தானமாய் கொண்டிருந்தது. ஆரச மரத்தடியே கோயில் அக்கிராசனார் செல்லையா வன்னியனாரின் சபாபதி ஸ்தானம். அந்த சபாபதி ஸ்தானத்திலேயே அரசட்டின் அரட்டைக் கூட்டத்தின் சபாபதியான மூத்தப்பாவும் இருப்பார்.

மூத்தப்பா கிடுகு இழைத்து முடிந்து புது ஓலை மட்டைகளை வெட்டி அதுகள கிணத்தடியில் ஒன்றின் மெல் ஒன்றாய் இளகப்போட்டு அந்த அடுக்குக்கு மேல் ஏறி நின்று கச்சைக்கட்டோடு முழுகித்து, வேலியில் கிடந்த மேல்துண்டை எடுத்துக் கொண்டு போய் வாசலில் நின்று தலையை உணத்தி மேலையும் துடைத்த பின் அந்த வேட்டித்துண்டையே இடுப்பில சுத்தி கச்சையை அவிழ்த்து கூரை ஓரத்தில காயப்போட்டபின் வீட்டுக்குள் நுழைந்தார்.
கடப்படியில நின்ற நான், எங்கட முந்திரிக்கீழ் செத்தைக் குடிலுக்குப் போய், சாப்பிட்டுத்து அம்மையோடயும் மூத்தம்மையோடயும் அரச மரத்தின் அரட்டைக் கச்சேரியைக் கேட்க கோயில் கிணத்தடி தென்னையோர  செண்பக மரத்து நிழலுக்கு வந்தோம். மூத்தப்பா அரச மரத்தடி அரட்டைக் கச்சேரி சபாபதியாக அக்கிராசனார் இடத்தில் ஏற்கனவே வந்திருந்தார்.

முத்தல் கணபதியார் ஆரம்பித்தார்.
;கட்டாடியார், சாப்பிட்டுத்தியா ?’
‘ஓம் கணபதி. ‘
‘ஏன் ஒரு மாதிரி வாட்டமாய் இருக்கிறீங்க? அவ்வளவு ஊழியமா?’
‘ஊழியத்துக்க என்ன குறை, ஊழியம் செய்ய ஆள் இல்லையே என்றதுதான் குறை…’
‘ஏன் உனக்கு என்ன? ரெண்டாம் கட்டாடியாரும் இருக்கார்தானே..’
‘அவனுக்கென்ன அவன் இருக்கான். ஆவன்ட ஊட்டில அவன் செத்தா அவன்ட மகன் ரெண்டாம் கட்டாடியாக வருவான். நான் செத்துப்போனால் என்ட முதலாம் கட்டாடி ஸ்தானத்துக்கு யார் வருவான்?’
‘உன்ட மூத்தமகன் வருவான் ‘
‘அவன்தான் உயரக்கிளம்பி ஊர்க்குருவிக்கு மேல போயித்தானே’
‘அப்ப உன்ட ரெண்டாவது மகன்’
‘அவனும் உயரக் கிளம்ப சிறக விரிச்சித்தான்’
‘இதில சம்பாத்தியம் இல்லையாம்.’
‘ஏன் கோயில் வெள்ளாமக் காணியை எல்லாம் உங்க குடும்பம்தானே குத்தகைக்கு செய்யுற?’
‘அதுவும் இருக்குத்தான். அதைவிட தாதன் எழுதி வைச்ச பட்டப்படி சகல ஊர்களிலிருந்தும் வசூலாக வரும் இறையும் இருக்குத்தான்’
‘அதென்ன கட்டாடியார் இறை?’ – சீரகத்தாத்தை தெரியாதது போல கதைக்க கால் போடக்கேட்டா.
‘இறையென்றால் இறுக்கவேண்டிய கொடை. அதை உபயம் எண்டு சொல்றாங்க. தானம் எண்டு சொல்றாங்க. தெண்டல் எண்டு சொல்றாங்க. எப்படிச் சொன்னாலும் இந்தக் கோயில் கட்டாடியாருக்கு உரிமையாக இந்த ஊரும் இதைச் சுற்றியுள்ள ஊர்களும், கொடுக்க வேண்டிய கொடைதான் அது. புண்டாரக் கொடை என்றதுதான் அந்தக் கொடுப்பனவுகளுக்குப் பெயர்.’
‘அப்போ, உபயம், தானம், தெண்டல் எண்டு சொல்றதெல்லாம் ?’ – அது சொல்லுக்குள் சொல் எடுக்கக் கூடிய முத்தல் கணபதியரின் குரல்.
‘அதெல்லாம் கொச்சை. இது எங்கட உரிமைக் கொடை. தூதன்ர காலமிருந்து  பட்டயத்தினால் கல்வெட்டுகளில் செய்த ஏற்பாடு.’
உடனே காடேறி உசார் ஆகி நிமிர்ந்திருந்து விளாசத் தொடங்கினார்.
‘தாதன்ர காலம் என்றால், வன்னியனார்ர அப்பன்ர காலத்துக்கும் அவர்ர அப்பன்ர காலத்துக்கும் அவர்ர அப்பன்ர அப்பன்ர காலத்துக்கும் முந்தின காலம். குண்டிராசன்ர காலம்….’

இப்படி நீட்டி எடுத்து, காடேறி சொல்லத்தொடங்க, அவர் பெரிய கதை சொல்ல போறார் என்று, எல்லோரும் நினைத்தாங்க போல. முந்தானையை விரிச்சித்துக் கிடந்த சீரகக் கிழவி எழும்பி இருந்தா. மல்லாக்கக் கிடந்து, அரச இலைகள் ‘சோ’ வென்று ஆடுறதையே பார்த்துக் கிடந்த தோப்பர் பண்டாரமும், எழும்பி முதுகில பட்ட மண்ணோட வளைஞ்சித்திருந்தார். அரசம் சுள்ளியால மணல்ல கோடு கீறித்து இருந்த முத்தல் கணபதியாரும் நிமிர்ந்து இருந்தாரு. – எல்லோரும் கவனிக்கிறாங்களா எண்டு காடேறி ஒருக்கா கவனித்தார். கருகருத்த அவர்ர முகத்தில வெள்ளை முழி நல்லா உருளும். கிணத்தடியில கெவுளிக்குக் கீழே இருக்கிற எங்களையும் ஒருக்கா திரும்பிப் பார்த்துக் கொள்வார். – அம்மா இருக்கிறதக் கண்டா எப்போவும் கொஞ்சம் அட்டகாசமாகத்தான் கதைப்பாரு.
‘தாதன் என்றால் ஆர் எண்டு நினைச்சிங்க. என்னைப்போல ஒரு யாசகன் என்றா நினைச்சீங்க. இல்லாட்டி இவரைப்போல ஒரு பூசகன் என்றா நெனைச்சீங்க.? அவர் ஒரு சேனாபதி. கலிங்க தேசமென்று கேள்விப்பட்டிருக்கீங்களா? அங்கதான் அவர் இருந்தார். ஒரு சண்டை வந்திச்சி. சுண்டைக்காக வடக்கே போனார். ஒரு பண்டாரம் வந்தான். அவன் ஒரு விக்கிரகத்தை அவர்ர கையில குடுத்திற்று ஒரே ஓட்டமாய் ஓடிப்போனான்.

தாதன் சேனாபதிக்கு சரியான கோபம் வந்திச்சி. இந்தப் பண்டாரம் கள்ளனாய் இருப்பானோ, இல்லாட்டி பைத்தியகாரனாய் இருப்பானோ எண்டு யோசிச்சாரு. உடனே வாளையும் உருவிக்கொண்டு அவனைத் துரத்தி ஓடினாரு. அந்த பண்டாரம் விஸ்ணு கோயிலுக்குள்ள ஓடினான். தாதன் சேனாபதியும் விடல்ல. அவரும் அந்த விஸ்ணு ஆலயத்துக்குள்ள போனார். பண்டாரம் நேராக கோயில் மண்டபத்துக்குள்ள ஓடினான். தூதன் சேனாபதியும் ஓடினாரு. வெளி மண்டபத்துக்குள்ளிருந்த நடு மண்டபத்துக்குள்ள ஓடினான். நடு மண்டபத்துக்குள்ளிருந்து  உள் மண்டபத்துக்குள்ள ஓடினான். உள் மண்டபத்துக்கும் அங்கால இருக்கிறதென்ன? மூலஸ்தானம்தானே. மூலஸ்தானத்து கதவு மூடிக்கிடந்தது. அகப்பட்டான் பண்டாரம் என்று நெனைச்சித்;து சேனாபதி உள்மண்டபத்துக்குள்ள பாஞ்சார்.
ஆனா மூலஸ்தானத்து கதவு, படீரென்று திறந்தது. உள்ளுக்குள்ள அனந்தசயனமாய் ஒரு பெரிய திருமால் இருந்தது. பண்டாரம் அதில போய் மோதிறமாதிரி ஓடினான். படீரென்று ஒரு வெளிச்சம். பிறகு பண்டாரத்தைக் காணல்ல. அனந்தம் ஒருமுறை நெளிஞ்சாப்போல இருந்தது. திருமால், தாதன் சேனாபதியைப் பார்த்து ஒருக்கா சிரிசச்து போல போலிருந்தது. சேனாபதி அப்படியே விறைச்சு, விக்கித்து, வெலவெலத்து, உருவின வாள் அப்படியே கையை உட்டுக் கழர, நிண்டார். கிணத்துக்குள்ளயிருந்து வாற மாதிரி ஒரு குரல் கேட்டது.
‘தாதனே, துவாரகாயுகத்தில் நீதான் வீட்டுமனாய் பிறந்தாய். வில்லை உடைச்சிற்று விதுரன் வெளியேறினான். நீ என்ன செய்தாய்? துரியனுக்கு துணையாய் இருந்தாய். துச்சாதனன் என் தங்கை ஆதிபராசக்தியை துகில் உரியக்குள்ளயும் நீ பார்த்தித்துதான் இருந்தாய். அதனால உன் பிறவிப்பெருங்கடல் நீண்டு போச்சு. நீ இன்னும் பிறந்து கொண்டே இருக்கிறாய்..
உன்ர பாவத்தைப் போக்க நீ பரிகாரம் செய்யும் காலம் வந்திற்று. நான் தந்தது தேவி திரௌபதையின் சிலை. இதை எடுத்திற்று நீ கடல் கடந்த தேசத்துக்குப் போ. இந்த அம்மன் சிலையை நீ அங்கே ஒரு இடத்தில பிரதிஸ்டை செய்து, உபவாசமிருந்து, தீமூட்டி அதில நீ பாயவேணும். அந்தத் தீயிலதான் உன்ர பாவம் பொசுங்கும். உனக்குப் பொறகு, உலகத்தார்ர பாவங்கள் எல்லாம் பொசுங்க, தேவியும் தீக்குளியும் அந்த ஸ்தலத்தில எப்பவும் இருக்கவும் நீ வழிசெய்யவேணும்’
‘நான் எந்தத் தேசத்துக்கு போகவேணும் சாமி; என்று தாதன் கேட்டான்.
‘நீ நேராக துறைமுகத்துக்குப் போ. அங்கே ஒரு கட்டுமரம் நிற்கும். அதில ஏறிக்கொள். பிறகு எல்லாம் தானா நடக்கும்..’ என்று குரல் வந்தது.
‘அரண்மனைக்கு போயிற்றுப் போகலாமா சாமி’ என்று தாதன் கேட்டார்.
விஸ்ணுபகவான் கலகலன்று சிரிச்சார்.
‘வீடு என்னடா, காடு என்னடா, பொஞ்சாதி என்னடா, புள்ளைகள் என்னடா என்டு தாதன் யோசித்தார். தன்ர தலைப்பாகையைக் கழற்றி அம்மன் சிலையைச் சுத்தித்து, நேராக துறைமுகத்துக்குப் போனார். அங்க இருந்த கட்டுமரத்தில ஏறினார். நடுக்கடல்ல பெரிய புயல். கட்டுமரம் புரண்டு போச்சு. ஆனால் சிலையை மாத்திரம் தாதன் உடல்ல.
தூரத்தில ஒரு பெரிய தோணி தெரிந்தது. அதுக்கு நீந்திப்போய் ஏறினார். ‘எங்க போக?’ எண்டு தோணியில இருந்தவங்க கேட்டாங்க. ஈசன்விட்ட இடத்துக்கு எண்டு பதில் சொன்னாரு. நாங்களும் அங்கதான் போறோம் என்றாங்க. ஒரு மாதப் பயணம். எல்லாரும் இறங்கிங்க. அது என்ன இடம் தெரியுமா? அதுதான் நம்ம திருக்கோயில்.

எல்லோரும் “ஆ” என்றாங்க. எனக்கும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அதைச் சொல்லிப் போட்டு காடேறி ஒவ்வொருவரையும் பார்த்தார். தான் சும்மா சொன்னதுக்கு எல்லாரும் பயந்து போயித்தாங்க என்றதைப் போல ஒரு சிரிப்பு சிரிச்சார். பிறகு சொன்னார்.
‘திருக்கோயிலுக்கு முந்தி அதுதான் பேர். ஈசன்விட்ட இடம். ஈசல்வெட்டை என்று பிறகு மாறிப் போயித்து’
ஈசன்விட்ட இடம். இதுதானே. இதிலதான் அம்மாளை எழுந்தருளப் பண்ண வேணும் எண்டு தாதன் யோசிச்சார். அண்டு ராத்திரி, தாதனுக்கு அம்மாள தோத்திரவானா.
‘இதில்ல இடம். நீ இன்னும் வடக்கே போ. – ‘ எண்டு மட்டும்தான் சொன்னா. வேறொண்டும் சொல்லல்ல.

அடுத்தநாள் காலம இருந்து அம்மன் சிலையையும் எடுத்திற்று நடக்கத் தொடங்கினார். அந்த நாளையில ரோட்டு ஏது? பூதை ஏது? வெள்ளைக்காரனும் வராத காலம் அது. கடல் மார்க்கம் தான் பயணம். தாதன் அம்மன் சிலையை சீலையால சுத்தி தலைக்கு மேல வைச்சிற்று கடற்கரையோரமாக வந்தார். திருக்கோயிலிருந்து கல்முனை எத்தின கட்டை. புன்னிரண்டும் இருபதும் முப்பத்திரெண்டு கட்டை. முப்பத்திரெண்டு கட்டை வெள்ளைக்காரன், குறுக்கால போட்ட இந்த தார் ரோட்டால கடற்கரை ஓரமாக ஒரு ஐம்பது கட்டை இருக்காதா? ஐம்பது கட்டை கடற்கரை மணல்ல நடக்கிறதெண்டா சும்மாவா? ஐம்பது அறுபது கட்டை எண்டு நமக்குத் தெரிஞ்ச பிறகுதானே இப்படி யோசிக்கினம். தாதனுக்கு இந்த இடம் தான் எண்டு தெரியுமா? எந்த இடமோ? ஏவ்வளவு தூரமோ? வடக்குப் பார்த்து நடந்தார். கால் சோர்ந்த இடத்தில இளைப்பாறினார். சாப்பாடும் இல்ல தண்ணியும் இல்ல. சாப்பாட்டுக்கு எங்க போறது ? தண்ணிக்கு எங்க போறது? மூண்டாவது நாளாக தொடர்ந்து நடந்தார்.இனிமேல் நடக்க ஏலாது. ஒரு தாழை மரத்து நிழல்ல விழுந்து படுத்தித்தாரு. அண்டு ராத்திரி அம்மன் அவருக்கு தோத்திரவாயித்து.
‘தாதனே, நாம சேரவேண்டிய இடம் வந்தாயித்து. இங்கே இருந்து மேற்குப்புறமாக நட. ஒரு மூணு கட்டைத்தூரம் போ. ஆலும், அரசம், நாவலும் கொக்கட்டியும் நிறைஞ்ச இடமொன்று வரும். பக்கத்தில ஒரு பூவல் இருக்கும். பட்சிசாலங்கள் எந்நேரமும் சத்தம் போட்டபடி இருக்கும். மந்திகள் துள்ளிப் பாஞ்சு கொண்டிருக்கும். மயில் ஆடிக்கொண்டிருக்கும். அந்த இடம்தான் என்ர இடம்.’ எண்டு சொல்லி அம்மாள் மறைஞ்சிட்டாவு. அதுதான் இந்த இடம்.
எல்லோரும் ஆச்சரியபடுவாங்க எண்டு நெனைச்சமாதிரி காடேறி எல்லாரையும் வளைச்சு வளைச்சு பார்த்தார். ‘இவன் பொய் சொல்றான்’ என்ற மாதிரி அன்னிப்பெத்தா முந்தானை விரிச்சுப் படுத்திற்று கேக்காவு.

‘என்னடா காடேறி, கடற்கரையிலிருந்து இது மூணு கட்டையா?’
காடேறிக்கு பெரிய உசார் வந்தித்து. ‘பின்ன என்ன? கடல் முதல் எங்க இருந்ததெண்டு நெனைக்கிறீங்க? இப்போ வண்ணான்ர தோணா இருக்கில்லையா – அதுக்குப் பக்கத்தில பத்து பதினைந்து தென்னைமரம் நிக்குதில்லையா? அது ஒரு வாடியாய் இருந்திருக்கும் எண்டு சிலபேர் நெனைக்கிறாங்க. அது வாடியில்ல. காசநோய்க்காரர் இளைப்பாறுறத்துக்கு  எண்டு மிசனறிமார் அவடத்த முந்தி ஒரு பங்களாக் கட்டினாங்க. அவடத்த ஒரு பங்களாக் கட்டுறதெண்டால் கடல் முந்தி எங்க இருந்திருக்க வேணும் எண்டு யோசிச்சு பாருங்க ..’
தோப்பூர் பண்டாரத்துக்கு அலுப்பு வந்ததுபோல, ‘சரி சரி, நீ கதையைச் சொல்லன்’ என்று சொல்லிக் கொண்டே பழையபடி மண்ணில் மல்லாக்கப் படுத்தார். காடேறி எங்கட பக்கம் திரும்பி ‘கொஞ்சம் நெருப்புக் கொண்டு வா புள்ள’ என்றார். நான் போய் நெருப்புக் கொள்ளிய எடுத்திற்று ஓட்டம் ஓட்டமாய் வந்தன். அதுக்கிடையில கதையைத் தொடங்கிருவாரோ எண்டு பயம். கொள்ளிக் கட்டையை அம்மை கொண்டுபோய் குடுத்திற்று வந்தாவு. காடேறி சொல்லிக் கொண்டிருந்தார்.

‘அந்நேரம் வெள்ளைக்காரன் இந்த தார் ரோட்டுப் போடல்ல. வெள்ளைக்காரன் இந்தப்பக்கம் தார் ரோட்டுப் போட்டது எப்போ? கண்டி ராசண்ட காலத்துக்குப் பொறகுதான். பெரிய ரோட்டுப்போட்ட பொறகுதான் இந்தப் பக்கங்கள்ல குடியாட்டம் வந்தது. பெரிய ரோட்டுக்கு முந்தி நம்மட கிட்டங்கித்துறையால தான் போக்குவரத்து. படுவான்கரைதான் பெரிய ஊர். கிட்டங்கித் துறைக்கு இங்கிட்டு நாலு ஊர்மனைகள் இருந்திச்சு – எழுவான் கரையில்.
ஓன்று- சேரன்குடியிருப்பு. ரெண்டு – நாயக்கன் புட்டிமுனை. மூன்று- பாண்டியன் இருப்பு. நாலு – நீலவண்ணன் மனை. சேரன் குடியிருப்பில் சேர வம்சத்தாரும் நாயக்கன் புட்டிமுனையில் நாயக்கன் வம்சத்தாரும், பாண்டியன் இருப்பில் பாண்டியவ ம்சத்தாரும், நீலவண்ணன் மனையில் சோழ வம்சத்தாரும் குடியிருந்தாங்க. சேரன் குடியிருப்பு சேனன்குடியிருப்பாகி சேனைக்குடியிருப்பானது, நாயக்கன் புட்டிமுனை, நாய்பட்டிமுனையானது, பாண்டியன் இருப்பு பாண்டிருப்பானது. நீலவண்ணன் மனை, நீலாவணையானது. மனை என்றால், இருப்பு. நீலவண்ணன், விஸ்ணு.

இந்த எழுவான்கரை, படுவானகரை மற்றும் இலங்கைத்தீவு எல்லாம் இராவணன் காலத்துக்கு முன்பே, லமூரியா நிலப்பரப்பு கடலில் மூழ்கியபொழுது பரத கண்டத்திலிருந்து தனித்துப்போன  இந்த நாலு குடியிருப்பிலும் நாயக்கன் புட்டிமுனை மேலோங்கி இருந்தது. நாயக்கர் வம்சமே கண்டியில் ஆண்டது. நாயக்கர்கள்தான் வன்னிமைகளாக இஞ்ச இருந்த. அந்தக்காலத்தில தான் தாதன் சேனாபதி அம்மன் சிலையை பாண்டியன் இருப்புக்கு கொண்டு வந்தார்.

காடேறி இன்னுமொரு சுருட்டைத் தம் பிடித்து இழுத்தார். கிணற்றடியிலையும் கஞ்சா மணத்தது போலிருந்தது. தோப்பூர் பண்டாரம் எழும்பியிருந்து சுருட்டை வாங்கிக் கொண்டார். கடேறி ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு சொல்லத் தொடங்கினார்.
சேரன் குடியிருப்பு என்றாலும் சரி, பாண்டியன் இருப்பு என்றாலும் சரி, நீலவண்ணன் மனை என்றாலும் சரி, நாயக்கன் புட்டியை மீறிப் போனது கிடையாது. போடிமார் எல்லாம் அங்கதான் இருந்தாங்க. குஞ்சிளையாப் போடியார், குட்டிக்கிட்ணன் போடியார், வருக்கிப்  போடியார், மகுடிப்போடியார் – இப்படி பல போடிமார் இருந்தாங்க. எல்லாருக்கும் பெரிசாத்தான் வன்னியநாயக்கர் இருந்தார். அவர்ர கட்டுமானத்துக்குள்ளதான் சகலதும். தாதன் மீறிப்போயிர  முடியுமா? அந்நேரம் விமலசேன மகராசாதான் கண்டியில. அவரும் ஒரு நாயக்கர்தான். கேட்கவா வேணும்? புத்தினித் தெய்வத்தின் அற்புதங்களை அந்த விமலசேன மகாராசாவே வந்து இதே பாண்டியன் இருப்பில் இதே நாவல் மரத்துக்க கீழேயிருந்து நேரில் பார்த்தார். பாண்டியன் இருப்பின் பத்தினத் தெய்வத்தை அவர் தலைமேல் வைத்தார். பல ஊர்களின் இறைவரி இந்த ஆலயத்துக்காக நாயக்கன் புட்டிக்கு உரித்தானது.  நாயக்கன் புட்டிக்கு என்றால்  நாயக்கன் புட்டி வன்னியனாருக்கு எண்டு நெனைச்சீங்களா? வன்னியனார்ர மேற்பார்வையில் அந்த ஆலயத்துக்குத்தான் ,ஆலயத்தக்கு என்றால் யாரு
க்கு? நம்ம தாதனுக்குத்தான். அது மட்டுமா? ஆந்த ஆலயத்துக்கு பணிவிடை செய்ய பதினெட்டுக்குடி வைச்சாங்க. ரெண்டு பண்டாரம் வைச்சாங்க. பண்டாரம் என்றா லேசான ஆளா? அவன் கட்டுறவன். கட்டாடி. அவனுக்கு நாயக்கன் புட்டியைச் சேர்ந்த ஒவ்வொரு ஊரும் கப்பம் கொடுக்க வேணும். ஓவ்வொரு ஊரும் என்றால் ஒவ்வொரு வீடும். ஓவ்வொரு வயலும் தான். ஒவ்வொரு வயல்ல வைக்கிற சூட்டிலயும் அவருக்கு பங்கு கொடுக்க வேணும். குறைஞ்ச பணியா இது ? . என்ன கட்டாடியார்? ‘
எப்படி தன்னுடைய சாமர்த்தியம் என்பதைப்போல காடேறி மூத்தப்பாவைப் பார்த்தார். முத்தல் கணபதியார் கடுங்கோபத்தடன் மணல் சிதற துள்ளி எழும்புவது தெரிந்தது.
‘என்ன கட்டாடியார் நாம தொடங்கின கதை என்ன, இவன் காடேறி சொல்லியிருக்கிற கதை என்ன?’
மூத்தப்பா திடுகிட்டு முழிப்பது போல  தெரிஞ்சுது.
“ ங்ஙா….  என்ன?”
‘நாம என்ன கதையில தொடங்கினம். இவன் காடேறி கொண்டுபோய் என்ன கதையில முடிச்சிருக்கான்.?’
‘அதுதானே….. அவன் கதைச்சு முடிக்கட்டும் எண்டுதான் களைப்பில உட்டுத்தன்’
‘சரி. நாம இப்ப நம்மட கதைக்கு வருவம்…’
முத்தல் கணபதியர் ஊத்தைச் சாரனை ஒதுக்கிக் கொண்டு பழையபடி மணலில் சம்மாளம் கோலி நெட்டையாய் நிமிர்ந்திருந்தார். மூத்தப்பாவும் விலாவிலயும் புயத்திலயும் ஒட்டியிருந்த வேட்டித்துண்டை ஒழுங்காக்கித்து நேராக இருந்து சொன்னார்.

‘ காட்டேறியும்  நம்மட கதையிலதான் கால்குத்தி, அப்படியே பூர்வத்துக்கும் சாய்ஞ்சு போயித்தான். ஒரு கிளைக் கதையும் தேவைதான்………. இந்த ஊர்கள்ல, இந்த கோயில் கட்டாடிக்கு எராளமாகக் கிடைக்கும்  திறைக்கோ, வசூலுக்கோ, தெண்டலுக்கோ பட்டயம் எழுதும் ஆளை தாதனுக்கு எப்படிக் கிடைச்சுது என்ற கதையை தான் காடேறி சொன்னான். ஆனா. ஆந்த ஏராளத்தை என்ர இளையமகன் ஏத்தக்கிறானில்ல. அம்மாளும் நான் செய்யும் பணிவிடையை வெறும் சருகு கூட்டும் வேலையாக நினைக்காள்’
‘ஏன் கட்டாடியார், உன்ர இளைய மகனுக்கு நீ இதையெல்லாம் நல்லா விளங்கப்படுத்தலாமே ‘ – சீரகத்தாத்தை தான் கதைக்கு தீன் போட்டா.
‘காலம விளங்கப் படுத்தினனான். ஆத கேட்ட பொறகு அவன்ட மனம் கொஞ்சம் கசியிறாப்போல தெரியுது.’
‘தெரியுது? ஆனா அவன் மனம் கசியாட்டி?
முத்தல் கணபதியார் அடுத்த கேள்வியை புகைய விட்டார்.
‘என்ர பேத்தி அகிலியும் இதைத்தான் காலம முழுக்க கேட்டு குடைஞ்சிட்டாள். நான் அவளுக்கு சொல்லாத கதய உங்களுக்குச் சொலறன் கேளுங்க…’
‘சொல்லு…….சொல்லு..’

மூத்தப்பா அந்த கிழங்களின் அரட்டை கச்சேரியில் என்ர பெயரை உச்சரித்தது எவ்வளவு குறை. அதைவிடக் குறையாய் இருந்தது, அந்தக் குறையை என்னிட்ட சொல்லாதது. அந்தக் கதையை கூர்ந்து கேட்க நான் எழும்பித்தன்.
மூத்தப்பா சொல்றார்
‘இப்போ ஒரு மாசத்துக்கு முந்தி அங்கை நான் நம்மட விறாந்தைக்குள்ள படுத்துக் கிடந்த நான். நல்ல நிலவு. ஓரு ஆள் வந்து என்னை எழுப்புது. கண்ணை முழிச்சுப் பார்த்தன். ஒரு பொம்பிளை. நல்ல வெள்ளை முகம். நம்மட பழப்பாக்குப் போலத்தான் நல்ல சிவந்த உதடு. மூக்குத்தியும் போட்டிருக்கு. அந்தப் பொம்பிளை கூப்பிட்டதும் ‘என்ன’ என்றன்.
‘இஞ்ச எழும்பித்து வாவன் கட்டாடியார்’ எண்டு ஒரு சிரிப்புச் சிரிச்சா. எனக்கு உச்சியில இருந்த உள்ளங்கால் வரையில முதுகுக்குள்ளால ஒரு விறுவிறுப்பு. அப்படி ஒரு மோகனமாக ஒரு பொம்பிளை சிரிச்சதை நான் காணவே  இல்லை. எழும்பித்து வாசலுக்கு வந்தன். அப்பொம்பிளை கடப்படிப்பக்கமாய் நடக்குது. கையிலையும் கால்லையும் கொலுசுச் சத்தம் கேக்குது. நம்மட மருதமுனைப் பொம்பிளைதான் எண்டு நான் நினைக்க, வெள்ளை உடுத்தும் முக்காடும் போட்டிருக்கா. மருதமுனைப் பொண்டுகள் இந்தக் கோயிலடியால ஆஸ்பத்திரிக்குப் போறதானே. எண்டாலும்  என்னடா இந்த நேரம் கெட்ட நேரத்தில இப்படி ஒர பொம்பிளை எண்டு யோசிச்சன். கடப்பைக் கடந்து அந்தப் பொம்பிளை இந்தக் கிணத்தடிக்கு வருகுது. நானும் வந்தன். கமுகை நிமிர்ந்து பாக்குது அந்தப் பொம்பிளை. நானும் நிமிர்ந்து பார்க்கன். ரத்தக்குண்டு போல சிவந்த பழப்பாக்குகள் குலைகுலையாய் தொங்குது. அடே, வெளவால் அடியாம, இந்தப் பழப்பாக்குகளை விட்டிருக்கே எண்டு யோசிச்சன். அந்தப் பொம்பிள சொல்லுது. ‘ ஏன் கட்டாடியார், எனக்கு ரெண்டு பழப்பாக்கு ஆஞ்சு தந்தா குறைஞ்சு போவியா? ‘ எண்டு நான் வேட்டியைக் களைஞ்சுபோட்டு கச்சையை இழுத்து வாரச்சீராகக் கட்டுறன். கமுகில காலகுத்தி ஏறுறன். பாதித்தூரம் ஏறக்குள்ள என்ர தொடையெல்லாம் வெடவெடக்குது. கையெல்லாம் நடுங்குது. கால் சறுக்குது. அந்நேரம் அந்தப் பொம்பிளை சிரிச்சி சிரிச்சி சொல்றா. ‘உனக்கு ஏலுமா கட்டாடியார்? உனக்கு வயது போயித்து இலுவா. ஊன்ர மகனும் போயித்தான். நீ உன்ர மருமகனக் கூப்பிடன். ஆவன் ஏறி ஆஞ்சு தருவான் .எனக்கு. கால்கட்டி கால்கட்டி அந்தச் சிரிப்புக் கேக்குது. எண்டு சொன்ன பொம்பிளையை பொறகு  காணல்ல. அரசடிப்பக்கம் கொலுசு சத்தம் கேக்குது. சிரிப்பும் கேக்குது. அப்படியே கோயில் படிக்கட்டில் .
நான் திடுக்கிட்டு கண்ணை முழிச்சன். உடம்பில் நடுக்கம் தீரல்ல. விடிஞசுகொண்டு வருகுது. வாசல்ல ஒரு சத்தம் கேக்குது எண்டு பன்னாங்கை கிளப்பி எட்டிப் பார்த்தன் மருமகன்தான் நிக்காரு.
மூத்தப்பா இன்னும் ஏதோ சொல்வார் என்று அரட்டைகளும் ஏன் நாங்களுந்தான் எதிர்பார்த்தோம். அவரோ எதுவும் சொல்லாம இருளத்தொடங்கும் கோயில் மண்டபப் பக்கம் நடக்கிறார். அவர் இனி அம்மாளுக்கு விளக்கு வைக்க வேணும். அது எல்லோருக்கும்
தெரியும். எல்லாரும் எழும்புறாங்க. நாங்களும் எழும்புகிறோம். கொக்கட்டி மறைவிலிருந்து பார்த்தீயும் எழும்புகிறான்.

௦௦௦௦௦௦

சண்முகம் சிவலிங்கம் அவர்களின் மறைவிற்குமுன்,அவரால் எழுதப்பட்டு பிரசுரமாகாது இருந்த பல கதைப்பிரதிகளை எழுத்தாளர் றியாஸ் குரானாவிடம் கையளித்து ,அப்பிரதிகளை வாசிக்கும்படி கொடுத்துள்ளார். அவற்றில்  உள்ள ஒரு கதைப்பிரதியை,நண்பர் றியாஸ் குரானாவிடமிருந்து நாம் பெற்று பதிவேற்றியுள்ளோம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment