Home » இதழ் 15 » * தொன்மமும் வரலாறும் – ச.தில்லைநடேசன்

 

* தொன்மமும் வரலாறும் – ச.தில்லைநடேசன்

 

test

யாழ்ப்பாண இராச்சிய உருவாக்கம் பற்றிய தொன்மங்களும் பழங்கதைகளும் எங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது .வரலாற்று நூல்களாக கொள்ளப்படும் வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் , கோணேசர் கல்வெட்டு போன்ற நூல்களின் புதிர்கள் இன்னும் அவிழ்க்கபடவேண்டியுள்ளன. செவ்வியல் நாட்டார் இலக்கிய பண்புகள் கலந்த இந்நூல்கள் காலவழுக்களுடன் பல்வேறுகால நிகழ்வுகளை குழப்பியும் ஒரே இடத்தில் குவித்தும் புனையப்பட்டுள்ளன.

இவைகளை பற்றிய புலைமைத்துவ ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இருந்தாலும் பன்முக அளவிலும் ஆழமாகவும் நிகழ்த்தபடவில்லை என்பதை ஆய்வாளர்கள் ஒப்புகொள்வர். இவ்வரலாற்று நூல்களுடன் கண்ணகிவழக்குரை ,கைலாசபுராணம், செகராசசேகரமாலை போன்ற நூல்களும் காய்த்தல் உவத்தலற்ற ஆய்வுக்கு உட்படுத்தபடவேண்டும் . இந்நூல்களில் கண்ணகிவழக்குரையில் பெருமளவு பேசப்படுவதும் வையாபாடல், யாழ்ப்பாணவைபவமாலை போன்றவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடப்படும் வெடியரசன் மிகாமன் தொன்மத்தை ஆய்வுக்கு உட்படுத்தவதே இக்கட்டுரையின் நோக்கம். கண்ணகி வழக்குரை 14-15 நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இலக்கிய வரலாறாய்வாளர்கள் ஒப்புக்கொள்வர்.1 இந்நூல் சிறிய பாட பேதங்களுடன் யாழ்ப்பாணத்தில் கோவலனார் கதை என்றும் வன்னியில் சிலம்புகூறல் என்ற பெயரில் வழங்கி வருகின்றது.

சிலப்பதிகார கதையை சமகால தேவைக்கு ஏற்ப சிலமாற்றங்களுடன் பாடப்பட்டு கண்ணகி அம்மன்கோயில்களில் பாடப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் இடம் பெறாது கண்ணகி வழக்குரையில் இடம்பெறும் கப்பல் வைத்த காதை எனும் இரு காதைகளில் வெடியரசன் மீகாமன் கதை இடம் பெற்றுள்ளது அதனை சுருக்கமாககுறித்துகொள்வோம்.

thi-01கோவலன் கண்ணகி திருமணத்திற்க்கு கண்ணகிக்கு விலைமதிப்பற்ற காற்சிலம்பு அணிவிக்க பெரு வணிகனான மாநாய்கன் விரும்புகின்றார். நாகமணி எடுத்துவர நாகதீவுக்கு செல்ல ஏற்றவன் மிகாமனே என முடிவெடுக்கின்றார். இவ்விடத்தில் மிகாமன் பாரம்பரியம் ,பரம்பரை கதை சொல்லப்படுகின்றது. பாரதம் திருவிளையாடல்புராணம், பெரியபுராணம் போன்றவற்றிலிருந்த பரராசன் அதியரசன் அதிபத்தன் தொன்மங்கள் இணைக்கப்பட்டு மீகாமன் அவர்கள் வழி வந்தவன் என குறிக்கபடுகின்றான். மீகாமனை அழைத்து நாகமணி கொண்டுவரும்படி கேட்க மீகாமனும் அதற்கு நாகமணி எடுத்துவர அதியரசன் எதிர்ப்பான் , அவனை வெற்றி கொள்ள நல்லமரக்கலங்கள் தேவை என்கிறான். நல்ல மரக்கலங்கள் செய்ய தென்னிலங்கை மன்னனிடம் சென்று மரங்கள் பெற்று கொள்கின்றனர். பட்டினவர் (துறைமுக பரதவர்) அம்மரங்களை கொண்டுவர அதனை கொண்டு மரக்கலங்கள் செய்து மீகாமனும் படைவீரர்களும் நாகமணி எடுக்க செல்கின்றார்கள். வெடியரசன் கடல் எல்லையில் மீகாமன் மரக்கலங்கள் தெரிகின்றன என்றசெய்தி கிடைத்ததும் தனது படைகளோடு மிகாமனை வழிமறிக்கிறான் வெடியரசன். மீகாமன் தன்னை அறிமுகம் செய்து நாகமணி வாங்குவதற்கு வழிவிட கேட்டுகொள்கின்றான். அதற்கு வெடியரசன் மறுத்து மீகாமனை போருக்கழைகின்றான். போரில் வெடியரசனை மீகாமன் கைது செய்து தனது கப்பல் பாய் மரத்தில் கட்டிவைகின்றான். நாகதீவு சென்று நாகத்திடம் மணிவாங்கி திரும்பும் வேளையில் வெடியரசன் தம்பிமார்கள் மீகாமனை எதிர்க்கிறார்கள். வீரநாரணன் என்ற தம்பி கொல்லப்பட விளங்குதேவன் என்பவன் போரிட்டு பின்பு சாமாதானத்தை விரும்ப மீகாமன் வெடியரசனை விடுவித்து நாகம்ணியோடு காவிரிபூம்பட்டனம் அடைகின்றான்.

வையாபாடல் இக்கதையை 3 பாடல்களில் குறிக்கமுனைகின்றது. தனது நூலிந்தேவை ஏற்ப வையாபாடல் ஆசிரியர் இக்கதையை பயன்படுத்துகின்றார். அந்நூலின் நோக்கம் அரசர்களும் குடிகளும் குடியேறிய முறையை தெரிவிப்பதே. மட்டகளப்பில் முக்குவர் சமூகம் குடியேறியதையும், மன்னார் விடத்தல்தீவில் முஸ்லீம்கள்(துலுக்கர்) குடியேற்றத்தையும் இக்கதையினூடு குறித்துசெல்கின்றார். இக்கதைமாற்றத்தை வையாபாடலில் பெற்ற யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் மகாவம்சத்தில் கிடைத்த குறிப்பையையும் கோணேசர் கல்வெட்டு குறிப்பையும் இணைத்து சேந்தான்குளம் உசுமான்துறை பெயரையும் சேர்த்து புதியகதையை புனைந்துவிட்டார். கண்ணகி வழக்குரை ஜதிகத்தை ஆய்வு செய்யமுன்பு இவ் ஜதிகம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் கருத்துகளை பார்ப்போம். ஆரம்பகால ஆ.முத்துதம்பிபிள்ளை க.வேலுப்பிள்ளை சுவாமி ஞானபிரகாசர் டான்யல் ஜோன் போன்றவர்கள் இவ்ஜதிகத்தை ஆராய முற்பட்டுள்ளார்கள்.

ஆ.முத்துதம்பிபிள்ளை யாழ்ப்பாண சரித்திரநூலில் இக்கதையினை மார்த்தாண்ட சிங்கையாரியன் எனும் யாழ்ப்பாண மன்னன் காலத்தில் வைக்கின்றார் .வெடியரசன் மார்தாண்டசிங்கனின் கடற்தளபதி என்றும் வெடியரசன் பரதவர் தலைவன் என்றும் பரதவரில் முக்கியராயிருந்தமையால் முக்கியர் என்றும் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண அரசர்களின் கடற்படையில் முக்கியரும் திமிலரும் வலைஞரில் கடலோட்ட வல்லவர்களுமே கடற்கலங்களை செலுத்துவராயிருந்தார்கள். என்கிறார் இவர் ஆரியசக்கரவர்த்திகளின் ஆரம்ப காலத்தை கி.மு எடுத்து செல்கின்றார் .

சுவாமி ஞானபிரகாசர் வையாபாடலில் குறிப்பிடப்படும் வெடியரசன் மீகாமன் கதைபற்றி தனது யாழ்ப்பாண வைபவ விமர்சனம் எனும் நூலில் thi-02தமிழரசர் காலத்தையும் பறங்கியர் காலத்தையும் அடிதலைமாறி்புரட்டி ஒதுமிக்கதையினூடே[வன்னியர்கள் வரவு] வெடியரசன் மீரா என்னும் இரு கடற்கொள்ளைகாரரின் கதையும் சொருகப்பட்டுள்ளது. மதுரையரசன் கண்ணகிக்கு காற்சிலம்பு செய்ய[!] மீகமனென்னும் கரையாரத்தலைவனை இலங்கைக்கு அணுப்பினான் .இவன் வெடியரசனையும் மீராவையும் வெம்போரில் முதுகிடச்செய்தான் ஜந்துதலை நாகத்திடம் நாகரத்தினம் கவர்ந்து சென்றபின் வெடியரசன் மட்டக்களப்பிலும் மீரா விடத்தல்தீவிலும் முந்திய இடத்தில் முக்குவகுறிச்சியும் பிந்திய இடத்தில் மகமதியகுறிச்சியையும் உண்டாக்கினார்கள். க.வேலுப்பிள்ளை தனது நூலில் வெடியரசன் மீகாமன் கதைபற்றி விடயங்களை ஏற்றுகொண்டாலும் அதுமார்தாண்ட ஆரியச்சக்கரவர்த்தி காலத்துக்கு உரியதல்ல என்றும் அதற்கு முந்தியது என்றும் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண சரித்திர ஆசிரியர் டானியல் ஜோன் கடலோட்டு காதையை அப்படியே ஏற்று கொண்டு விரிவாக எழுதியுள்ளார்.

விஸ்னுபுத்திரன் வெடியரசன் வரலாறு எழுதிய மு.க.சிவப்பிரகாசம் கடலோட்டுகாதையை ஏற்று கொண்டு முக்குவர் சமுகத்தவரிடம் நிலவும்வாய்மொழி கதைகளையும் சேகரித்து வெடியரசன் கூத்து ஏடுகளில் பேணப்பட்டசெய்யுள்களில் இருக்கும்செய்திகளையும் இனைத்து நூலை ஆக்கியுள்ளார். பல்வேறு தகவல்களை ஒருங்கினைத்த அளவில் இந்நூல் விளங்கினாலும் நவீன ஆய்வியல் முறைப்படி இந்நூல் எழுதபடவுல்லை என்றகுறையும் உண்டு.

நவீன வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான சி.க.சிற்றம்பலம் யாழ்ப்பாண தொன்மை வரலாறு எனும் நூலில் இ்வ் தொன்மம்பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்.இவர் மிகாமன் வெடியரசன் கதை, கடல்வழி வர்த்தகத்தில் இறுக்கமாக இணைந்திருந்த தமிழகத்துக்கும் ஈழத்துக்குமிடையே வாணிப பொருட்களைப் பெறுவதற்காக நடைபெற்ற போரையோ வாணிபபோட்டியின் விளைவாக நடைபெற்ற போரையோ தான் உருவகப்டுத்துகின்றது என்கிறார்.இக்கதை கண்ணகிகாலமாகிய கி.பி 2ம் நூற்றாண்டுச்சம்பவத்தை கருப்பொருளாக கொண்டு இருந்தாலும்கூட இதில் விரித்துக்கூறப்பட்ட செய்திகள் தமிழகம் ஈழம் ஆகிய பிராந்தியங்களின் வரலாற்று காலத்தின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளோடு இணைத்துபார்க்கலாம் என்கிறார் .

கண்ணகி வழக்குரை கதை சிலப்பதிகாரத்திலிருந்து சில மாறுபாடுகளை கொண்டுள்ளது. இக்கதை ஏன் எழுதப்பட்டது? இக்கதைஉருவானசமுக சூழல் என்ன ?இக்கதைக்குள் வெடியரசன் மீகாமன் கதை புகுத்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இக்கதை எதனை குறிக்க முனைகின்றது குறியீட்டு வடிவில் இக்கதை குறிப்பிடவிரும்பும் சமுகபின்புலம் என்ன?

இலங்கையில் கண்ணகிவழிபாடு தொன்மையானது. இதுபற்றிய வாய்மொழி இலக்கியவரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்ணகி வழிபாடாக தமிழர்கள் மத்தியிலும் பத்தினிதெய்யோ வழிபாடாக சிங்கள மக்கள் மத்தியிலும் நிலவும் இவ்வழிபாடு எப்படி இரு இனமக்கள் மத்தியிலும் வந்துசேர்ந்தது. இவ்வழிபாடு ஆரம்பமான நிலத்தில் இன்று பெரிதும் வழக்கில் இல்லை கேரளாவில் உருமாறியும் சிறிதளவு நிலவுவதாக தெரிகின்றது.

பாரம்பரிய வழக்காற்றின் படியும் சிலப்பதிகாரத்திலும் கஜபாகு மன்னன் இவ்வழிபாட்டை ஈழத்துக்கு கொண்டுவந்தான் என்றும் கண்ணகிசிலை கொண்டு வரபட்டபோது எந்த ஊர்கள் வழியாக வந்ததோ அந்த இடங்களில் கோயில்கள் அமைக்கபட்டதாக சொல்லப்படுகின்றது2

இலங்கையில் கண்ணகிவழிபாடுபற்றி ஆய்வு செய்த சமுகவியலாளரான கணநாத ஒபயசேகரா கண்ணகி வழிபாடு மகாஜன பெளத்தத்தினால் உள்வாங்கப்பட்டே ஈழத்தை அடைந்தது என்றும் இதனாலேயே இது தமிழர்கள் சிங்களவர்கள் மத்தியில் வழிபடப்படும் தெய்வமாக இன்றும் தொடர்கின்றது என்று நிறுவுகின்றார்.

கண்ணகியை காவியநாயகி ஆக்கிய சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் பற்றிய ஆராய்ச்சி் இன்னும் தெளிவுறவில்லை. பொதுவாக அந்நூல் கி.பி 4-5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வர் .சிலப்பதிகாரம் சமண சமய காப்பியம். கண்ணகியை சமணசமய பெண்ணாக சிலப்பதிகாரம் கூறும். இலங்கையில் கண்ணகி மகாஜனபெளத்த தெய்வமாக அறிமுகபடுத்தபட்டுள்ளது. சமுகவரலாற்றில் இது விசித்திரம் இல்லை ஒரு தொன்மத்தை பலமதபுனைவுகள் உள் வாங்கி கொள்வது நாம் அறிந்ததே. இராமனை காவிய நாயகனாக கொண்ட சமண பெளத்த வைணவ காவியங்கள் உண்டு.

கண்ணகி பற்றிய தொன்மம் சங்ககாலத்திலிருந்து வளர்ந்து வந்த ஒன்று. இத்தொன்மத்தை பல சமயங்கள் தனக்காக்க முயன்றுள்ளன. இலங்கையில் எழுந்த கண்ணகி வழக்குரை கண்ணகி இந்துசமயம் சார்ந்தவள். சிலப்பதிகார சமண கண்ணகியை, மகாஜன பெளத்தகண்ணகியை, இந்துசமய கண்ணகியாக எழுந்த புராணமே கண்ணகிவழக்குரை காவியம்.மகாஜன கண்ணகி எப்போது இந்துகண்ணகியானால் என்பதற்கும் விடைதேடியாகவேண்டும். இது கலிங்கமகான் காலத்தில் நடந்தது என்பதே வரலாறுதரும் விடையாகும். கேரள தமிழ் வீரர்களோடு கி பி 1215யில் படை எடுத்து வந்த கலிங்கமகான் வீரசைவத்தை சேர்ந்தவன் அதுவரை பெளத்தத்தை தழுவியிருந்த தமிழர்கள் பலர் சைவர்களானது இம்மன்னன் காலத்திலே .இக்காலத்தில் மகாஜன பெளத்தவிகாரை பல கண்ணகி கோயில்களாகவோ பிள்ளையார் கோயில்களாகவோ மாறியதாக தெரிகின்றது.

இப்படி எழுந்த கண்ணகி வழக்குரையில் ஏன் மீகாமன் வெடியரசன் கதைசேர்க்கப்பட்டது என்பதற்கு இ்ந்த இடத்தில் விடைதேடுவோம்

1 . சிலப்பதிகார கதையின் கதைக்களம் சேர சோழ பாண்டியநாடுகள். ஈழநாட்டுக்கும் அக்கதைக்கும் தொடர்பு இல்லை. இந்நிலையில் ஈழநாட்டு தமிழரை ஒன்றவைக்க ஈழநாடு கதைஒன்று இணைக்கப்பட்டு ஈழநாட்டு இடங்கள் குறிக்கப்பட்டு ஈழநாடும் கதைகளத்துக்குள் கொண்டுவரப்படுகின்றது.

2. கண்ணகிவழக்குரை காவியம் ஏனெழுதப்பட்டது என்பதை அடைகலங்காதை செய்யுள் 3 இல் நூலாசிரியர் குறித்துள்ளார்.
திருவிருக்கும் மணிமார்பன் சிறந்ததமிழ் ஆரியர் கோன்
மருவிருக்கும் மார்பணிந்த மண்டலத்தில் வணிகர் மைந்தன்
தருவிருக்கும் கைதலத்தான் தந்தி வண்ண பெருமாள்கான்
குருகுலத்தோர் கொண்டாட இக்கதையை பாடிவைத்தான்
குருகுலத்தோர் கொண்டாடவே கண்ணகிவழக்குரை பாடப்பட்டது என்கிறது இச்செய்யுள். கண்ணகி வழக்குரையை பாடியவர் செயவீரன் எனப்படும் சிங்கை செகராசசேகரன் என்று சொல்லப்படுகின்றது.

3. எழுதியவர் யார் என்ற குழப்பம் நீடித்தாலும் எழுதுவதற்கு ஆதரவாக யாழ்ப்பாண அரசின் ஆதரவு இருந்தது என்பதில் எந்தகுழப்பமும் இல்லை.thi-03 யாழ்ப்பாண அரசர்கள் ஏன் குருகுலத்தார் கொண்டாட காவியம் பாடவேண்டும் என்றகேள்வி முக்கியமானது. கப்பல் வைத்த காதை கடலோட்டு காதையில் குறிப்பிடப்படும் மீகாமன் வெடியரசன் இருவருமே கடல்சார் சமுகத்தை சேர்ந்தவர்கள். மிகாமன் குருகுலத்தவன் எனவும் வெடியரசன் குகன் குலத்தவன் எனவும் குறிக்கப்படுகின்றனர். மீகாமன் பரதவனாகவும் கரையானகவும் குறிக்கப்பட வெடியரசன் முக்கியனாக குறிக்கப்படுகின்றான். மீகாமனுக்கு கப்பல் கட்டமரம் வாங்க சென்றவர்கள் பட்டனவர்கள் என்றும் ஆரியர் ஆரியநாட்டார் என்று குறிக்கப்படுகின்றார்கள்.

மீகமனை அறிமுகப்படுத்தும் போது நெய்தல் நில தெய்வமான வருணன் தொன்மம் பாரதம் திருவிளையாடல் புராணம் பெரியபுராணத்தில் வரும் பரராசர் மச்சகந்தி அதியரசன் திரை மடந்தை தொன்மங்கள் இணைக்கபடுகின்றது. வெடியரசன் அறிமுகபடுத்தும்போது விஸ்னுபுத்திரன் இராமயணத்தில் வரும் குகன் தொன்மம் சொல்லப்படுகின்றது. மிகாமன் வெடியரசன் முலம் சமகால கடல் சார் மக்களின் தொன்மங்கள் சில தெரியவருகின்றது. இது இந்நூல் எழுந்த 14-15ம் நூற்றாண்டுக்குரியது என்பது வெள்ளிடைமலை இத்தொன்ம குறிப்புகளைபற்றி பார்ப்போம்.

மிகாமன் : வருனகுலத்தான் குருகுலத்தான் பட்டினவர் பரதவர் கரையார் ஆரியநாட்டார் ஆரியன் ஆரியர்கோன்
வெடியரசன் : விஸ்னுபுத்திரன் குகன் குலத்தான் முக்கியர் முக்கியர்கோன்
இவ் தொன்மங்கள் பரதவர் என்னும் நெய்தல் நிலமக்கள் தொழில் வாழ்விட அடிப்படையில் உட்பிரிவுகளாக பிரிந்தபோது எழுந்தவையே

4 .கலிங்கமகானின் (1215-1245) இலங்கை படை எடுப்புடன் முக்கிய சமுக அரசியல் மாற்றங்கள் நடந்தன. பொலநறுவையில் மையம் கொண்டிருந்த இராச்சியம் வடக்கு தெற்காக இரு பலம் வாய்ந்த அரசுகள் தோன்ற கால்கோளிடப்படுகின்றது.

5. தமிழக கேரள படை வீரரர்களுடன் வந்த கலிங்க மகான் வீரசைவ நெறியை சார்ந்தவன். சோழர் காலத்தில் உருவாகியிருந்த சமூக அமைப்பு வடிவங்களையே பின்வந்த விஜயபாகுவும் பராகிரமபாகுவும் சிறிய மாற்றக்களுடன் கடைப்பிடித்தனர்.

6. இதனையே கலிங்கமகானும் கைகொண்டான். வீர சைவத்துக்கு முன்னுரிமை கொடுத்த கலிங்கமகான் பிரதேச வன்னிபங்களுக்கு தனது படைதலைவர்களை வன்னிப தலைவராக்கினான்.

7. மகானின் ஆளுமையை ஏற்ற முன்பிருந்ததலைவர்களை வன்னிப தலைவர்களாக சில இடங்களில் அங்கிகரித்ததாகவும் தெரியவருகின்றது.

கலிங்கமகான் படை வீரர்களாக முக்குவர் பணிக்கர் தீயர் நாயர் நம்பிகள் கோவியர் மழவர் பறையர் வேடர் வில்லவர் படையாட்சி வன்னியர் சாணார் போன்றவர்கள் இருந்தார்கள்
கலிங்க மகான் படைதலைவர்களான முக்குவர் மட்டக்களப்பு அம்பாறை புத்தளம் பகுதிகளில் வன்னிபதலைவர்களாக ஆனார்கள்

8. யாழ்ப்பாணத்தில் முக்குவர்கள் இனுவில் தெல்லிப்பளை தொல்புரம் கீரிமலை ஆணைக்கோட்டை மயிலிட்டி தீவுபகுதிகள் ஊர்தலைவர்களாகவும் கடற்பிதேசத்தில் கடற்படைதலைவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள் .கலிங்கமகான் பின் அரசர்களான சாவகன் சந்திரபானு 1247- 1256 சந்திரபானுவின் மகன் 1256-1284 ஆகியோர் பாண்டியர் மேலாட்சியை ஏற்றுகொண்டவர்கள்.

9 .இவர்கள் காலத்தில் நிர்வாக மாற்றங்கள் நிகழ்ந்ததாக சான்றுகள் இல்லை. இந்நிலை ஆரியசக்கரவர்த்தி காலத்தில் மாறியது. கிபி1284 இல் பாண்டியர் சார்பாக படை எடுத்து வந்த ஆரியசக்கரவர்த்தி யாழ்ப்பாண இராச்சிய தொடர்ச்சியை பேணினான். வன்னிபதலைவர் பதவிக்கு தனது படைத்தலைவர்களை நியமித்தான். இவர்கள் மழவர் பாணர் தேவர் வன்னியர் பட்டினவர் கடற்படை தளபதி பதவி கரையாருக்கு கை மாறியது. பாண்டியர் சமாந்தராக இருந்து அவர்கள் வலி குன்றியபோது ஆரியசக்கரவர்த்திகள் யாழ்ப்பாண் அரசர்கள் ஆனார்கள்

10 .மீகாமன் பாண்டிய தளபதியான ஆரியசக்கரவர்த்தியின் குறியீடு. ஆரியசக்கரவர்த்தியில் வரும் ஆரியன் என்ற ஒட்டு சோழநாட்டு பட்டனவரை(துறைமுகபரதவர்) குறிப்பது. சக்கரவர்த்தி என்பது பாண்டியர்கள் இவர்களுக்கு கொடுத்த பட்டபெயர்.

11 .வெடியரசன் முக்குவ கடல் படைதலைவனின் குறியீடு. இவர்கள்குகன் குலத்தவர்கள் . இவர்களுக்கிடையில் நடந்த போரே கண்ணகிவழக்குரையில் குறிபிடப்படுவது. கடல் சார் சமுகபிரிவினர்கள் வேறு வேறு அரசர்களுக்காக போராடினார்கள். ஆரியசக்கரவர்த்தி இவர்கள் குருகுலத்தவர்கள் ஆகையால் தான் தம் குலத்தவர் கொண்டாட கண்ணகிவழக்குரையை பாடினார்கள் அல்லது பாடகாரணம் ஆனார்கள். ஆரியன் என்றபெயரை வைத்துகொண்டு யாழ்ப்பாண் அரசர்களை பிராமணர் ஆக்கியது பின்புநடந்த புனைவு. விஜயநகர அரசர் காலத்திலேயே வருணாச்சிர தர்மம் தமிழக, ஈழ சூழலில் பெரிதும் கோலோச்ச தொடங்கியது என்பது நாம் அறிந்ததே. வெடியரசன் மீகாமன் என்பவர் முழுக்க முழுக்க கற்பனை பாத்திரம் இல்லை. வரலாற்று மாந்தரின் குறியீடுகளே.
——————————————————————————

அடிகுறிப்புகள்

1. ஈழத்து தமிழ் நூல் வரலாறு f x c நடராசா

2.யாழ்ப்பாணவைபவவிமர்சனம் சுவாமி ஞான்ப்பிரகாசர்

3. ஈழத்து தமிழ் நூல் வரலாறு

4. இலங்கையில் பரதவசமுகமும் மாற்றங்களும் ச.தில்லைநடேசன் ஆக்காட்டிசஞ்சிகை

5. மகோன் வரலாறு – க .தங்கேஸ்வரி
6. யாழ்ப்பாண தொன்மை வரலாறு சி.க சிற்றம்பலம்
7 . மகோன் வரலாறு
8. மகோன் வரலாறு
9. தொல்லியல் நோக்கில் தமிழ் பண்பாடு – ப புஸ்பரட்னம்
10. யாழ்ப்பாண் இராச்சியம்
11 .பாண்டியர் வரலாறு – இராசசேகர தங்கமணி

பயன் பெறு நூல்கள்————–

கண்ணகி வழக்குரை
வையாபாடல்
யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பாண்வைபவ விமர்சனம்
மகோன் வரலாறு
யாழ்ப்பாண இராச்சியம்
பாண்டியர் வரலாறு
ஈழத்து தமிழ்இலக்கிய வரலாறு

00000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment