Home » இதழ் 16 » *கவுரவக் கவசம் – றொமிலா ஜெயன் (சிறுகதை)

 

*கவுரவக் கவசம் – றொமிலா ஜெயன் (சிறுகதை)

 

romila
ட்டிலில் சோம்பல் முறித்தபடி புரண்டு கொண்டிருந்த, தேவகியின் காதுக்குள் “அம்மா…. அவளைக் காணயில்லை” என பதட்டத்துடன் ஓடி வந்து கிசு கிசுக்கிறாள் மகள் தனுஷா.
திடுக்கிட்டுப்போகிறது தேவகியின் மனம் திகைப்புடன் மகளின் முகத்தைப்பார்க்கிறாள்.
“வடிவா வளவு முழுக்க தேடிப்பாத்தனீயே பிள்ளை”
“கிணத்தடி, கக்கூசடி எல்லா இடத்தையும் தேடிப்பாத்திட்டன். கனதரம் கூப்பிட்டும் பாத்திட்டன், அவவின்ர ரூமுக்குள்ள போயும் பாத்தனான், போட்டுக் கொண்டு வந்த சல்வாரும், அவா கொண்டு வந்த சின்ன பாக்கையும் கூட காணயில்லை.”

“என்ன பிள்ளை சொல்லுறாய்” என்றவாறு தனது பெருத்த தேகத்தை புரட்டி, கட்டில் சட்டத்தை பிடித்தவாறு எழும்பிக் குந்தினாள் தேவகி.Matha-01
சுவா் மணிக்கூட்டின் முள்ளு ஆறு மணியைத் தொட்டிருந்தது.

இன்னமும் குறட்டையை இழுத்து விட்டுக் கொண்டு பின்பக்க விறாந்தைக்கட்டிலில் மல்லாந்து கிடக்கும் கணவனைப் பார்க்கிறாள்.
“கொப்பரை எழுப்பு பிள்ளை வெளியாலை போய் எங்கையாவது தேடிப்பாக்கட்டும், கடவுளே இதென்ன கரைச்சல்” புலம்பியபடியே தலைமாட்டில் கிடந்த செல்போனை எடுத்து மகனின் நம்பரை தெரிவு செய்தாள். கோல் பட்டனை அழுத்த முற்பட்ட போது சிந்தனையில் திடீர் மின்னலடித்தது.

“ம்….”தனக்கு தானே தலையசைத்துக் கொண்டவள் போனை கட்டிலில் வைத்துவிட்டு நிமி்ர்ந்தாள்.
மகள் உலுப்பிய உலுப்பில் திடுக்கிட்டெழும்பி அலங்க மலங்க முழித்துக் கொண்டு கட்டிலில் குந்தியிருந்தார் பொன்னம்பலம். இன்னும் அவருக்கு நித்திரை முறியவில்லை. பெரிய சத்தமாக கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார்.

“என்னப்பா இன்னும் உங்களுக்கு விடியேல்லலையே, ஒரு அந்தர அவசரத்திக்கு உங்களையும் எழுப்ப ஏலுமே, போத்தில் போத்திலா கள்ளை விட்டுக் கட்டிப் போட்டு சாத்துவாய் ஊத்துறது தெரியாமல் கிடவுங்கோ”
விடியற்காலமையே தொடங்கி விட்ட மனைவியின் மந்திர ஒலியில் பொன்னம்பலத்தாரின் புலன்கள் நன்றாகவே தெளிந்து விட்டன. கட்டிலை விட்டு எழுந்து நின்றபடி,,
“எ..என்னப்பா… என்ன பிரச்சனை”
என்றவாறு இடுப்பில் நழுவிய சரத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டார்.

கணவரையும் மகளையும் கிட்ட வரும்படி கையைக்காட்டி அழைத்தவள். சுற்று முற்றும் அயலவா்கள் எவராவது நிற்கிறார்களா என ஒரு நோட்டம் பார்த்துக் கொண்டாள். இரகசிய குரலில் அழுத்தமாக பேசத்தொடங்கினாள்.
romila-1“நான் சொல்லுறத அப்பரும் மகளும் வடிவா கேளுங்கோ, அந்தப் பெட்டையை காணயில்லை அது எங்கயெண்டாலும் போயிட்டுப் போகட்டும் அது எங்களுக்கு பிரச்சனையில்லை. இதோட விட்டது சனியன் என்றிருப்பம். எக்காரணம் கொண்டும் நாங்களாக இந்தக் கதையை மாறனுக்கு சொல்லக்கூடாது. அவன் வந்தாப்பிறகு நான் சொல்லிக் கொள்ளுறன். கோல் எடுத்தானென்டால் நான் கதைக்கிறன். நீங்கள் இரண்டு பேரும் மூச்சுக் காட்டக்கூடாது. இஞ்சாருங்கோப்பா…. நீங்கள் கடை தெருவுக்கு போற மாதிரி போய் வெளியால எங்கையும் நிற்கிறாளோ எனப்பாத்து வாருங்கோ, எங்கையும் தூரமா போட்டுது என்டால் பிரச்சனையில்லை, செத்துக்கித்துத் துலைச்சாத்தான் பிரச்சனை. கடவுளே எனக்கெண்டால் இது நல்லதுக்கு போலத்தான் படுகுது” என மேலும் கீழுமாக மூச்சு வாங்க சொல்லி முடித்தவள் அங்கிருந்த பெரிய கதிரையில் அமா்ந்து கொண்டாள்.
மகள் தனுஷா தோள்களை குலுக்கி உதடுகளை பிதுக்கிக் கொண்டு“ ஐயோ எனக்கிருக்கிற பிஸியில இதுகளுக்கெல்லாம் கவலைப்பட நேரமில்லை, நான் ரீ போடப்போறன்” அலட்சியமாக குசினிக்குள் நகா்ந்து விட்டாள்.

பொன்னம்பலம் பேயறைந்தவா் போல அப்படியே நின்றார். மனைவியின் முகத்தை பார்க்கவே வெறுப்பாயிருந்தது. ’சீ என்ன பொம்பிளை இவள், அந்தப்பிள்ளைக்கு உறவுகளே இல்லை, சின்ன வயசு, ஊரும் புதுசு , எங்க போவாள், உயிருக்கு ஏதாவது நடந்திட்டாள் கடவுளே அந்தப்பாவம் இந்தக் குடும்பத்தை சும்மா விடுமா, எல்லாத்தையும் விட மகன் இதை கேள்விப்பட்டால்……’
தனக்குள் சற்று துணிவை வருவித்துக் கொண்டவராக, தொண்டையை செருமிக் கொண்டார், கெஞ்சலான தோரணையில் மனைவியின் முகத்தைப்பார்த்துக் கொண்டே “ தேவகி…இஞ்சேரப்பா…இது சரியில்லை, நாங்களும் பொம்பிளைப் பிள்ளையள பெத்தனாங்கள்……..” என அவா் பேசத் தொடங்கியது தான் தாமதம்,

தேவகியின் முகத்தில் கோபம் தீயைப்போல கொழுந்து விட்டது. கண்களை இறுக்கமாக மூடித்திறந்தவள், பெரிதாக மூச்சு விட்டவாறு கணவனை நோக்கி கை நீட்டிச் சொன்னாள்
“ நிப்பாட்டுங்கோ உங்களிட்டை ஒரு வியாக்கியானமும் நான் கேக்க வரயில்லை, நான் சொல்லுறத மட்டும் செய்யேலுமெண்டா செய்யுங்கோ, இல்லாட்டில் இன்னும் ரெண்டு போத்தில் கள்ளு வாங்கி குடிச்சுப் போட்டு பேசாமல் படுத்து நித்திரையைக் கொள்ளுங்கோ, என்ர புத்தியில நடந்தபடியாலதான் இண்டைக்கு ஊருக்குள்ள இந்தக் குடும்பம் இப்பிடியிருக்குது எனக்கு ஆரைப்பற்றியும் கவலையில்லை என்ர குடும்ப கௌரவம்தான் முக்கியம்”

தளர்ந்து போனவராக பொன்னம்பலம் துாணைப்பிடித்துக் கொண்டார். இனி இவளோடு கதைச்சுப் பிரயோசனம் இல்லை. என நினைவுடன். தலையை தொங்கப் போட்டவராக கிணற்றடியை நோக்கி நடக்கத் தொடங்கினார். கால்களை துாக்கி வைக்கவே முடியாமல் தளர்ந்து போய் இடறுப்பட்டது அவரது நடை, போதையினால் அல்ல, குடும்ப வாழ்வில் பட்ட காயங்களால் நொருங்கிப் போன அவரது மனதும் உடலும் இப்போது அதிகமாகத் தள்ளாடுவது போலிருந்தது.
கள்ளமில்லாத அந்தப்பிள்ளையின் புன்னகை முகம் நினைவுக்கு வந்தது. கசிந்த விழிகளை தண்ணீரினால் அடித்து கழுவத் தொடங்கினார் பொன்னம்பலம்

00000 0000000

குடை பரப்பி நின்ற பெரிய மாமரமொன்றின் நிழலில் அன்றைய கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அது கடல் நடவடிக்கையில் ஈடுபடும் போராளிகளுக்கான சந்திப்பு, பல முக்கிய விடயங்கள் கதைத்து முடிந்தாகிவிட்டது, இறுதியாக..
“இனி உங்கட பிரச்சனைகளை கதையுங்கோ” என கூறினார் பொறுப்பாளர்.
அதற்காகவே காத்திருந்தவன் போல மாறன் சட்டென எழுந்து நின்றான்.

“அண்ணே என்ர படகுக்கு ஒரு மெக்கானிக் வேணும். இவ்வளவு நாளும் நிண்ட பொடியன் காயப்பட்டு போன பிறகு அந்த இடத்திற்கு இன்னும் வேற ஒருத்தரையும் நியமிக்க இல்லை”
“ஓ…அப்பிடியா…” எனக் கேட்ட பொறுப்பாளா் யோசனையுடன், தனது அருகிலே அமர்ந்திருந்த பெண்களின் அணி பொறுப்பாளரை நோக்கினார்.
“தங்கச்சி.. அந்த இடத்தை நிரப்புறதுக்கு உங்கட பக்கத்தால ஒரு பிள்ளையை அனுப்பமுடியுமோ”
“ம்….. ” என சில கணங்கள் அவள் யோசித்துவிட்டு
“ஓமோம் முடியும், காயம் சுகமாகி ஓய்வில நிண்ட பிள்ளைகள் சிலபோ் நேற்று அனுப்பப்பட்டிருக்கினம், அதில ஒரு மெக்கானிக் பிள்ளையும் வந்திருக்கிறாள். நான் ஒழுங்கு படுத்தி அனுப்பி விடுறன்.” என்றாள்.
“ சரிதானே மாறன் வேற என்ன” என்றார் பொறுப்பாளா்.
“வேற எதுவுமில்லையண்ணா”
“அப்பியெண்டால் சரி, கதைச்ச விசயங்கள் ஞாபகமிருக்கட்டும், கூட்டத்தை நிறைவு செய்வம்”
அனைவரும் கலைந்து செல்லத் தொடங்கினா்.
மாறன் பெண்கள் அணிப் பொறுப்பாளரை அணுகினான்.
“எப்ப அவாவ அனுப்புவிங்கள் அக்கா”
“ நீங்கள் எப்ப அறிவிக்கிறிங்களோ அப்ப அனுப்புவன். மற்றும்படி அவவின்ர தொடா்பு என்ர இடத்திலதான் இருக்கும்”
மாறன் தமது நடவடிக்கையின் நேரத்தை குறிப்பிட்டான்
“நல்லது. குறிப்பிட்ட நேரத்தில் அவ அங்கே நிற்பா”
“நன்றியக்கா” புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டான் மாறன்.

சிரிப்பும் பகிடியுமாக மாறனின் அணியினா், தமது இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனா். மாறன் அமைதியாகவே முன்னுக்கு நடந்து கொண்டிருந்தான். சராசரிக்கும் அதிகமான உயரம், கூர்மையான விழிகள், எப்போதாவது சிரிக்கும் போது அழகாக நெளியும் உதடுகள். நடவடிக்கை நேரங்களில் தனது அணியினரிடம் காட்டும் கடுமையைத் தவிர அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாத குணம். மாறன் எல்லோருக்கும் பிடித்தவனாகவே இருந்தான்.
Sea_Tiger_Fast_Attack_boat

மாறனுக்கு கடல் கட்டளைத் தலைமையகத்திலிருந்து வந்திருந்த உத்தரவுக்கமைய, அன்று மாலை அவா்கள் குறிப்பிட்டிருந்த நேரத்தில், மேற்கொள்ளபடவுள்ள அந்த நடவடிக்கைக்கு உதவியாக அவனது படகையும் கடலிலே செலுத்துவதற்கு அவனது அணி தயாராகிக் கொண்டிருந்தது.
அவா்களது அணியில் இணைந்து கொள்ளுவார் எனக் கூறப்பட்ட பெண் போராளி வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. துள்ளிப்பாயும் நடையுடன் உற்சாகமான சிரிப்பை உதிர்த்தவாறு அவள் மாறனுடைய அணியுடன் வந்து சோ்ந்து கொண்டாள்.
“வணக்கம், நான் வானிலா, என்ஜின் மெக்கானிக்.”

ஓ… வணக்கம் வாங்கோ ,உங்களைத்தான் பாத்துக் கொண்டிருக்கிறம், நான் மாறன் இந்த படகின் கட்டளையதிகாரி இவா்கள் இந்த படகுக்குரிய……” என்றவாறு அவரவா்களின் பெயர்களையும் பணிகளையும் கூறினான் மாறன். அவா்களைப்பார்த்து சிரித்தமுகமாக தலையசைத்து அறிமுகமாகிக் கொண்டாள் வானிலா.
படகு கடலுக்குள் இறக்கப்பட்டது. அலைகளுடன் போராடிய படகின் இயந்திரம் சீராக இயங்கத் தொடங்கியது. ஒரே துள்ளலில் தானும் படகினுள் ஏறி நின்றாள் வானிலா. ஒவ்வொருவரும் தத்தமது செயற்பாடுகளுக்குரிய பொருட்களை சரிபார்த்தவாறு, தமது நிலைகளில் பொருந்திக் கொண்டனா்.

அலைகளை கிழித்தவாறு அந்த சண்டைப்படகு விரையத் தொடங்கியது. மாறன் அனைத்து நிலைகளையும் சரிபார்த்துக் கொண்டான். இது ஒரு கடினமான நடவடிக்கை என சொல்லப்பட்டிருந்தது. எந்த நேரமும் எப்படியான நெருக்கடிகளையும் சமாளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். தனது அணியின் செயற்பாடுகளில் அவனுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. அதேவேளை புதிதாக வந்த மெக்கானிக்கை எடைபோடும் விதமாக அவனது பார்வை வானிலாவை நோக்கியும் திரும்பியது.

காற்றின் எதிர் திசையில் படகு சென்று கொண்டிருந்தது. கெல்மெட், ஜக்கெட் சகிதம் கம்பீரமாக அவள் கால்களை ஊன்றி நிலையெடுத்திருந்த விதம் அவளின் கடந்த கால கடல் நடவடிக்கைகளின் அனுபவங்களையும் திறமையையும் சொல்லியது. அவள்மீது படிந்த பார்வையை மீட்டுக் கொண்டவனுடைய மனதில் என்னவோ ஒரு ஆறுதல் பரவியதைப் போல உணர்ந்தான்.
இதற்கு முதலும் பல பெண்கள் அவனது அணியில் இடம் பெற்றிருந்தனா். அவா்களிலிருந்தும் இவள் எதிலோ வித்தியாசப்படுவதாக உள்ளுணா்வு சொல்லியது. அது என்னவென்பது அவனுக்கு புரியவில்லை. அதைப்பற்றி சிந்திப்பதற்கான அவகாசமும் கிடைக்கவில்லை. படகின் பயணப்பாதையையும், கடலின் நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கினான் மாறன். வேலையோடு வேலையாக பகிடிக்கதைகளை பேசியபடி அவனது அணியினா் சிரித்துக் கொண்டிருந்தனா். தனது வட்டக்கண்களைச் சுருங்கி, தெத்துப்பல் தெரிய வானிலாவும் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்..

00000 000000000

போர் முடிவுக்கு வந்திருந்த இறுதி நாட்கள். முல்லைத்தீவு மைதானம். கடல் போன்ற சனப்பிரவாகத்தினுள் திக்கற்றவளாக வானிலா நின்று கொண்டிருந்தாள். அவளை அறிந்தவா்கள் அறியாதவா்கள் என பலா் அவளைக் கடந்து சென்று கொண்டேயிருந்தனா். முதன்முதலாக தனக்கென எவருமில்லையே என்பது நெஞ்சில் உறைத்தபோது உயிரோடு வந்தது தவறு எனதோன்றியது. அப்போதுதான் மிகவும் அறிமுகமான அந்தக் குரல் காதருகில் ஒலித்தது. திரும்பியவள் திகைத்து நின்றாள். மாறன் அவளுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். சாரம் உடுத்தியிருந்தான். தோளுக்கு குறுக்காக பாக் ஒன்றை மாட்டியிருந்தான். ஒருவரையொருவா் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நின்றனா். அறிமுகப் புன்முறுவலொன்றினை கூட, வெளிப்படுத்த வேண்டும் போல இருவருக்குமே தோன்றவில்லை.
“யாரோட போறிங்கள் வானிலா” மாறன் அக்கறையுடன் விசாரித்தான்.

“யாருமில்லை தனியத்தான் போகவேணும்” வெறெங்கோ பார்த்தவாறு விட்டேத்தியாக பதிலளித்தாள் வானிலா, உள்ளத்திலே எரிமலையே குமுறிக் கொண்டிருந்தது. .
மாறனின் மனது நுணுக்கற்றது. “எங்க போகலாமென்டு நினைக்கிறிங்கள்”
“தெரியேல்லை” இப்போது குரல் தளர்ந்து விசும்பல் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. அந்தப்பெரிய கண்களுக்குள் வங்கக் கடலே திரண்டு நிற்பது போல மாறனுக்கு தோன்றியது. எக்ஸ்ரே எடுப்பவன் போல அக் கண்களையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். நெற்றியை சுருக்கியவாறு ஆழமாக யோசி்க்கத் தொடங்கினான், பின்பு தீா்க்கமாக விழிகளால் அவளை ஆழமாகப் பார்த்தபடி கேட்டான்
“என்னோட வாறிங்களா வானிலா”
எதிர்பாராத அவனது கேள்வி அவளை துாக்கி வாரிப் போட்டது. ஆனாலும் அவளின் உள்மனமோ ’இவனை விட இங்கு யாருமே நம்பிக்கையுமில்லை பாதுகாப்பில்லை’ என்பதை தெளிவாக கூறிக் கொண்டிருந்தது.

“வாறன்” என்று அவள் சொல்லிய மாத்திரத்திலேயே, அந்த கூட்ட நெருசலில் தவறிவிடாதிருக்க, அவளின் வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கியிருந்தான் மாறன்.
வவுனியா ஓமந்தை அரச படையினரின், காவலரண் முன்பு இருதரப்புக்குமுரிய எல்லையாக கருதப்பட்ட அந்த இடத்தில்தான், சரணடைந்த போராளிகளை இராணுவத்தினா் பதிவு செய்து கொண்டிருந்தனா்.
வரிசையில் மாறனும் அவனுக்குப்பின்னால் வானிலாவும் நின்றிருந்தனா் மனம் படபடத்துக் கொண்டிருந்தது. அவா்களின் முறை வந்தபோது முன்னால் நகர்ந்தனா்.. ஒருதடவை அவா்களை ஏற இறங்கப்பார்த்துக் கொண்ட இராணுவத்தினன் ஒருவன்.
romila-p2

“ம்….முழுப்பெயா் சொல்லுங்க” என்றவாறு இவர்களின் விபரங்களை எழுதத் தொடங்கினான்
“பொன்னம்பலம் மாறன். மாறன் வானிலா” இருவரின் பெயா்களையும் மாறனே சொல்லி விட்டான்.
சட்டென வானிலாவில் ஒரு அசைவு தென்படுவதை உணா்ந்த மாறன், இன்னமும் தனது பிடியிலேயே இருந்த அவளின் கைகளை மெலிதாக இறுக்கினான். தனது திகைப்பை வெளிக்காட்ட முடியாத நிலைமையில் அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள் வானிலா.
உங்கட மனைவியும் இயக்கமா”
“ஓம் ஒரே பிரிவுதான்”

“சரி எல்லா விபரங்களையும் இங்க கொடுங்க, நீங்கள் வெவ்வேறு புனா்வாழ்வு நிலையங்களுக்குத்தான் அனுப்பப்படுவிங்கள்”
பதிவுகள் முடிந்து வாகனத்தில் ஏற்றப்படும் வரை பேசிக் கொள்ள அவகாசமிருந்தது. மாறனின் திடீா் நடவடிக்கைகள் வானிலாவுக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. அவனது முகத்தை நிமிர்ந்துromila-2செய்த மாதிரி அவனை இவனை பிடிச்சு கடிதம் எடுத்து குடுத்து அந்தப்பிள்ளையை வெளியால எடுத்து விட்டனான். நீ இந்த விசயத்தில அவசரப்படக்கூடாது, உனக்கு ஊரரிய கலியாணம் செய்து பாக்க அம்மாவுக்கு எவ்வளவு ஆசை தெரியுமே, அதுவரை கொஞ்சம் பொறுமையாயிரு மாறன்.

உள்ளுக்கு ஏமாற்றம் வாட்டினாலும் வானிலாவுடன் ஊரறிய திருமணம் என்ற நினைப்பு சந்தோசத்தை ஏற்படுத்தவே மகிழ்வுடன் அமைதியாகிப் போனான் மாறன்.
அவனது அன்புள்ளத்தை மாத்திரமே வானிலா உயிராக காதலித்தாள், அவனது குடும்பத்தின் பணமும் செல்வாக்கும் இங்கு வந்த அன்றிலிருந்தே அவளுக்கு பயத்தை ஊட்டத் தொடங்கியிருந்தது.
சமையலறைக்குள் கூட வானிலாவை மாறனின் தாய் அனுமதிக்க விரும்பவில்லை “பிள்ளை நீ இங்கயெல்லாம் வராதை வேற ஆக்கள் சமைக்கிறது எனக்கு ஒத்துக் கொள்ளாது.”
திறந்த வீட்டுக்குள் நுழைந்த ஒன்று எட்டியுதைக்கப்பட்டுவிட்டதைப் போன்ற அவமானம் அவளைத் தின்றது. தாய் தகப்பனின்றி வளா்ந்தாலும் தலை நிமிர்ந்து வாழ பழக்கப்பட்டிருந்தவள். மனதிற்குள் சுருண்டு போனாள்.

”இது குமா்பிள்ளை இருக்கிற வீடு . நாலு பெரிய மனுசா் வந்து போற இடம், உன்னை ஆரெண்டு கேப்பினம், வெளியால கண்டபடி தலையைக்காட்டாமல் உள்ளுக்கு இரு, மாறனோட அளவுக்கதிகமா கதை வைச்சுக் கொள்ளாத, உனக்கு ஏதேனும் வேணுமென்டால் என்னட்ட கேள், நானும் இப்பிடி இல்லாததுகள் எத்தினையோ பேருக்கு உதவி செய்திருக்கிறன், என்ர குணந்தான் மகனுக்கும் மற்றும்படி வேற மாதிரி கற்பனை பண்ணிக் கொள்ளாத பிள்ளை, எனக்கு குடும்ப கௌரவம்தான் முக்கியம்.

மாறனின் தங்கை தனுஷாவோ தன்னிடம் ஒரு புன்னகை சிந்துவதே கேவலமெனக் கருதி ஒதுங்குவது போலிருந்தது வானிலாவுக்கு, “அம்மா இதை உங்களிட்ட குடுக்கச் சொன்னவா” என்றபடி தான் பாவித்த சில உடுப்புகளை அந்த அறையினுள் வைத்துச் சென்றவளை இடைமறித்த தேவகி “ என்ன பிள்ளை நல்லதுகளைக் கொண்டே குடுத்திட்டாய் போல” என்பதும், “ச்சீ…அதெல்லாம் பாஷன் போட்டுது அம்மா” என்ற தனுஷாவின் பதிலும் வானிலாவின் உள் மனதுக்குள் வரட்சியான சிரிப்பையே வரவழைத்தது.

0000000 00000000

ஒருநாள் மாலையாகி விட்டதன் பின்பு சற்று வெளியே வந்து, வீட்டின் பின் முற்றத்தில் நின்று கொண்டிருந்தாள் வானிலா, பகல் முழுவதும் வீட்டிலேயை காணக்கிடைக்காத மாறனின் தந்தை, நிறைந்த போதை மயக்கத்துடன் அவளைக் கடந்து போய்க் கொண்டிருந்தார் அவளை வெளியே கண்டதும், சட்டென நின்றபடி “பிள்ளை “ என்றழைத்தார். அந்த வீட்டில் தன்னை அன்புடன் அழைத்த அவரது குரல் அவளுக்கு மிகுந்த ஆறுதலளிப்பது போலிருந்தது. “மாறன் சரியான நல்ல பொடியன், நீ அவனோட சந்தோசமா வாழவேணும் பிள்ளை” நிலத்தில் காலுான்றி நிற்க முடியாத தள்ளாட்டத்துடன் அவா் நடந்து சென்று தனது கட்டிலில் படுத்துக் கொள்ளும்வரை பார்த்துக் கொண்டேயிருந்தாள் வானிலா. முகமே தெரியாத தனது தந்தையின் நினைப்பு நெஞ்சைத் தழுவி விழிகளினுாடாக கசிந்து வழியத் தொடங்கியது. .
திடீரென தனது அறையிலிருந்து தனுஷா தாயை கூவி அழைப்பது தெளிவாகக் கேட்டது. “என்ன பிள்ளை இதிலதானே இருக்கிறன் சொல்லன்” என அலுத்துக் கொண்டாள் தேவகி. “அம்மா படம் ஒண்டு என்ர மெயிலுக்கு அக்கா போட்டிருக்கிறாள். மாறன்னாவுக்கு பாத்த அண்ணியின்ர படம். ச்சூ…என்ன வடிவம்மா ஸ்டைலான ஆளாத்தான் அக்கா பாத்திருக்கிறாள், மாறன்னாவுக்கு ஏற்ற சோடி, சூ…ப்பரம்மா சினிமா நடிகை மாதிரி இருக்கிறா”.

இந்த வார்தைகள் வானிலாவின் இதயத்தில் நெருப்புத் தணலை அள்ளிக் கொட்டியது போலிருந்தது. மறுகணமே ஓடிச் சென்று கண்ணாடி முன் நின்றவளாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“செல்லம் உன்ர கண்கள் காந்தக் கண்களடா, இப்பிடி கறுப்புமில்லாத சிவப்புமில்லாத ஒரு கலரை நான் காணவேயில்லைக்குட்டி, என்ர மெழுகுச்சிலையடா…நீ.” மாறனின் குரல் அவளது காதிற்குள் தீராத காதலுடன் கிசுகிசுப்பாக கொஞ்சுவது போலிருந்தது.

அவளுக்கு நன்றாகவே தெரியும் தன்னைத்தவிர இன்னொரு பெண் மாறனின் இதயத்தில் இடம் பிடிப்பது முடியாத காரியம் என்பது, ஆனால் காசு, பணம் இப்படி எதுவுமே இல்லாத என்னிடம் எப்படியான சந்தோசத்தை மாறன் அனுபவிக்க முடியும். இது சரிவராது. என்னைப் பிரிவது என்பது மாறனுக்கு எப்பவுமே இயலாத காரியம் நானாகவே மாறனை விட்ட விலகிச் சென்று விட்டால், ஒ….அதுதான் சரியானது.

துாரத்திலே ஒரு உறவினா் வீட்டிற்கு அவனை தாய் ஏதோ வேலை காரணமாக அனுப்பியிருக்கிறாள். அவன் வரும் போது நானிருக்கக்கூடாது. திடமான இந்த தீா்மானத்தை நெஞ்சிலே எடுத்தவளாக. தன் காதல் மனதை கல்லாக்கிக் கொண்டு எழுந்தாள். அவளின் உயிரானவன் கொடுத்த காதல் நினைவுகளை மாத்திரமே நெஞ்சம் முழுவதும் நிரப்பிக் கொண்டு, எவருமறியாதவாறு அந்த அதிகாலைப் பொழுதில், வானிலா மாறனின் வீட்டை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினாள்.

000000 00000000000000000000

மாலை மயங்கத் தொடங்கியிருந்தது. மாறன் தனது வேலைகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மனமோ வானிலாவைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அவள் தனக்குக் கிடைத்தது பெரிய அதிஸ்டமென்பதே அவனது எண்ணமாக இருந்தது. மாறனால் தாங்கிக் கொள்ளவே முடியாத எத்தனையோ காயங்களை ஆற்றும் அருமருந்தாக அவளிருந்தாள். உயிருக்குயிரான தனது நண்பர்கள் எத்தனையோ போ்கள் இல்லையென்றாகிப்போன பின்பும் தனது வானிலாவை இழந்து போகவே கூடாது என்ற திடசங்கல்ப்பத்துடனேதான் அவளுடனான காதலை தன் நெஞ்சிலே கட்டிவளா்க்கத் தொடங்கியிருந்தான் மாறன்.

ஆனாலும் வீடுவந்த நாளிலிருந்தே அதிகநேரத்தை அவளுடன் கழிக்க முடியாத துயரம் வேதனையளித்தாலும் மிக விரைவில் திருமணம் முடித்து ஒன்றாகி விடலாம் என்ற ஆறுதலுடன் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்தான்.

ஊரின் வீதி வளைவில் பொன்னம்பலத்தார் மாறனுடைய பாதையை மறித்து நின்றபடி, கைகாட்டிக் கொண்டிருந்தார். மாறனுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. ’அப்பா ஏன் இந்த நேரத்தில் இங்க நிண்டு என்னை மறிக்கிறார்.’ மோட்டார் சைக்கிளை அவரருகில் நிறுத்தி விட்டு இறங்கினான். “என்னப்பா… ஏன்… இங்க……”

பொன்னம்பலத்தார் தாமதிக்காமல் மகனது கையைப்பற்றி பேசத் தொடங்கினார். மாறன் மிக அதிசயத்தோடும், கவனமாகவும் அவர் சொல்லப் போவதை கேட்கத்தயாரானான். அதிகம் பேசாத தகப்பன் எப்போதாவதுதான் பேசுவார். அந்தப் பேச்சில் ஏதாவது ஆழ்ந்த அா்த்தங்கள் பொதிந்திருப்பதை மாறன் எப்போதுமே அவதானித்து வந்திருக்கிறான்.
“தம்பி மாறன் அப்பாவுக்கு ஒரு உண்மை சொல்லவேணும்“ போதையின் வாசனையே இல்லாமல், முகத்தில் துயரத்தின் ரேகைகள் பதிந்தவராக அப்பா மிகுந்த நிதானமாக இருந்தார். இது மாறனை குழப்பத்தின் உச்சத்திற்கே கொணடு சென்றது.

“சொல்லுங்கப்பா” என்றவாறு தந்தையின் பாசத்தோடும் பணிவோடும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ மாறன் நீ அந்த பிள்ளையை உண்மையா விரும்புறியோ”
“அப்பா ” என வீரிடலாக தனை மறந்து கதறியே விட்டான் மாறன்.

அவனது முகத்தையே உற்றுப்பாரத்தவாறு தகப்பன் தனது பதிலுக்காக காத்திருப்பது புரிந்தது.
“என்ர அப்பா மேலே ஆணையா சொல்லுறன், என்ர உயிருக்கு மேலாக வானிலாவை விரும்புறன் அப்பா” அவனது குரல் உணா்ச்சியுடன் தழு தழுத்தது.
“ம்… அப்பிடியெண்டா நான் சொல்லுறத கேள்” என அழுத்தமான குரலில் மகனிடம் சொல்லத் தொடங்கினார் தேவகியின் திட்டத்தையும், வானிலாவுக்கு மேற் கொள்ளப்பட்ட புறக்கணிப்பையும் இறுதியில் வானிலா தற்போது வீட்டிலில்லை என்பதையும்கூறி, அவனை விரைவுபடுத்தினார்.“போ….போய் அவளைக் கண்டு பிடிச்சு கூட்டிக் கொண்டு வந்து கொம்மாவுக்கு முன்னால இவள்தான் என்ர பெண்சாதியெண்டு நிப்பாட்டு கெதியா போ… மாறன்.

உன்ர அப்பா ஊருக்குள்ள நல்ல பணக்காரன், ஆனால் மனசுக்குள்ள நிம்மதியில்லாத பிச்சைக்காரன். நீயெண்டாலும் நல்லாயிரு போடா போ… கொப்பா இனித்தான்ர குடிக்கப்போறன்.“ என்றவாறு கள்ளுக்கடை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
மாறனுக்கு உலகமே இருண்டு விட்டது போலிருந்தது.

“வானிலா யார் என்ன சொன்னாலும் செய்தாலும் நீ எனக்கு என்ன செய்து போட்டாய்” மனம் அலறியது.
அவனது சர்வாங்கமும் சோர்ந்து சுருண்டது. சக்தியே இல்லாமல் மோட்டார் சைக்கிளை இயக்கினான் ’ எங்கே போவன் எப்படி தேடுவன், என்னைத் தவிர உனக்கு உலகமில்லையெண்டு சொல்லுவியே நிலா என்னையே விட்டு போனியோ எங்க போனாய், எப்பவும் என்னோட இருப்பன் எண்டுதானே சொன்னாய்.. ஓலமிடும் மனதுடன் வீடு நோக்கி புயல் வேகமெடுத்துப் பாய்ந்தது உந்துருளி.

மோட்டார் சைக்கிள் வந்ததையும், மாறன் வேகமாக அறைக்குள் நுழைந்ததை நோட்டமிட்டுக் கொண்டிருந்த தேவகி, வேகமாக தேனீா் தாயாரித்து எடுத்தவாறு அவனை நெருங்கினாள். சாரமும் பழைய தனது பாக்குமாக மீண்டும் எங்கோ போகும் ஆயத்தத்துடன் வேகமாக அவன் வெளியில் வருவது தெரிந்தது. விரலில் அணிந்திருந்த தங்க மோதிரமும். கழுத்தின் பவுண் சங்கிலியும் கண்ணாடி மேசையின் மீது கழட்டியெறியப்பட்டுக்கிடப்பது தெரிந்தது. தேவகியை மனதில் குழப்பம் சூழத் தொடங்கியது.
“தம்பி தேத்தண்ணீ“ என மெதுவாக குரல் கொடுத்தாள்,

“சரத்தோட எங்கையப்பன் வெளிக்கிடுறாய்” இதமான குரலில் கதை கொடுத்துப் பார்த்தாள்.
“தேத்தண்ணீ குடிச்சுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லையம்மா, நிலா எங்க போனாளோ நான் அங்க போறன்.“

“ஐயோ நீ நான் பெத்த பிள்ளையடா……“ என நீண்ட தாயின் புலம்பலை செவிமடுக்காதவனாக “அம்மா உங்களுக்கு மற்ற பிள்ளைகள் இருக்கினம், நிலாவுக்கு நான் மட்டும் தானம்மா இருக்கிறன், அவளுக்கு இடமளிக்காத இந்த வீட்டில எனக்கென்னம்மா இடம், கவலைப்படாதேங்கோ உங்கட குறிக்கோளுக்கு ஏற்ற விதமா என்னால வாழ முடியாதம்மா, உங்கட ஒரு பிள்ளை யுத்தத்தில செத்துப்போச்சுது எண்டே நினைச்சுக் கொள்ளுங்கோ.

அதற்குப்பிறகு அவன் எதற்காகவும் காத்திருக்கவில்லை, தேவகியின் அழுகையும், புலம்பலும் செவிகளில் உக்கிரமாக ஒலித்துக் கொண்டிருக்க, அவன் முற்றத்தில் நிப்பாட்டி விட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் விலத்திக்கொண்டு வீதியில் இறங்கினான்.

அக்கணத்தில் வானிலாவின் குரல் காதுக்கருகில் ஒலிப்பது போலிருந்தது. “எனக்கு தெரிஞ்ச ஒரேயோரு இடம் முதன்முதலாக நாங்கள் சந்திச்சுக் கொண்ட இடம்தான் மாறன்”
அவனது உள்ளத்தில் பலமான நம்பிக்கை வெளிச்சம் உதயமாகத் தொடங்கியது., ’நிலா…என்ர நிலா…உன்ர மாறனாக மட்டுமே உன்னட்டை வாறன்’ அவனது மனம் வேகப்படகு போல சீறிப்பாயத் தொடங்கியது. . முல்லைத்தீவுக்குப்போகும் கடைசி பேரூந்தை பிடிப்பதற்காக மாறன் ஓடத்தொடங்கினான்.

0000000

(உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment