Home » இதழ் 16 » * தேவ அபிரா கவிதைகள்

 

* தேவ அபிரா கவிதைகள்

 

theva-1
theva

படுதல்-1
——————————–

நான் முதன்முதலிலதனைக் கண்ட போதது வெறுமையாகவிருந்தது.
உதிர்ந்தவற்றை அள்ளிச் செல்லும் உலர் காற்று வீசியது.

மனமாற மனிதர் நடக்கும் சவக்காலைத்தெருவில்
முறுகியிருந்த நினைவுகளைக் கிளைகளாக விரித்து
வெப்பத்தால் நிரம்பிய பூமியில்லது துவண்டிருந்தது.

பின்னொரு நாட் பெரு மழை பொழிந்து
கல்லறைகளிற் படிந்த புழுதி கரைந்து
பெயரும் துலங்கி
வெடிப்பிற் படர்ந்த புல்லும் பொலியவாரம்பித்த போதுமது
தளிரின்றித் தனித்தேயிருந்தது.

அஞ்சத்தொடங்கினேன்.

000000
ஆடி 1997

————————————————————————————————————————————-

api

படுதல் II

தேவாலைய மணி ஒலிக்கிறது.

பண்டிகை நாட்களின் வாழ்த்தொலிகள்
வீடுகளையும் வாசல்களையும் அருட்டிச் செல்கின்றன.

தூசு படிந்த சாளரச் சீலைகளை விலக்கும் வலுவை
என்றிழந்தேனென்று நினைவில்லை.

இறக்கவும் பிறக்கவும் முடியாக்காலத்திற்கு
வருடமென்று பெயர் வைத்தோம்.
கடந்து செல்கிறது.
பிறக்கவும் இறக்கவும் மட்டுமே முடிகிற
வாழ்வுள்ளவள் நிறைந்திருந்தாள்.

ஒட்டி உலர்ந்த அவள் விட்டுசென்ற வாசம்
வெளியேறாதிருக்கச் சன்னல்களை அடைத்தது
மட்டும் நினைவில் இருக்கிறது.

“உனது மெல்லிய இதயம் இவ்வுலகத்தைத் தாங்காது
என் மடியிற் கண்களை மூடிக்கொள்”
சொற்கேட்டவள் மூச்சென் நெஞ்சக்குழியில்
தேநீர்க் கோப்பையில் எஞ்சிக் காய்ந்து
படிந்த வண்ணம் போற் தங்கிவிட்டது.

நடுக்கம் நிறுத்த முடியாத தாளத்தோடு அவயவங்களை ஆட்டுகிறது.
பறவைகள் கொத்திச் சென்றதும்
கனிகளின் வாசமும் அகன்றுவிட்டது.

தனித்தலைப்புறும் மரத்தில்
பழைய கடிதங்களும் படங்களும் தொங்குகின்றன.

தலையிடித்தைலத்தின் வாசமும்
சாளரங்களை தட்டும் மழையும்
இலையுதிர்காலத்தின் ஓலமும்
சிறு சாடிக்குள்ளிருந்து வரும் பூதம் போலப் பெருக்கின்றன.

காற்றும் கூடிப்பெருக்காத முற்றத்தை
மூடிக்கிடக்கின்றன மிதிபடாத இலைகள்.

000000000
மார்கழி 2014

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment