Home » இதழ் 16 » * சுட்ட காசு – நெற்கொழுதாசன் (சிறுகதை)

 

* சுட்ட காசு – நெற்கொழுதாசன் (சிறுகதை)

 

net-1

மாலைச் சூரியஒளி பட்டு, வளைந்து நெளியும் பொன் தகடு போல் இரணைமடுக்குளத்தின் நீர் மினுங்கிக்கொண்டிருந்து. குளக்கட்டில் காகங்களும் சில கொக்குகளும் பெயர் தெரியாத பறவைகளும் இரை தேடி நடந்து கொண்டிருந்தன. நீர்ப்பரப்பின் இடையிடையே தெரிந்த பட்ட மரங்களில் உருவத்தால் பெரியதான சாம்பல்நிறப் பறவைகள் அமைதியாக அமர்ந்து இருந்தன. மாலை வெய்யிலுடன் குளிர் காற்று இணைந்து மோதியபோது சிறுசெடிகள் சிலிர்த்து அடங்கியது. அந்த சூழலின் அமைதியை ஆங்காங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் விலைபேசிக் கொண்டிருந்தவர்கள் குரல்கள் ஊடுருவிக் கொண்டிருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டுகிடந்த நீர்வெளியை யதுமினி கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். நீரில் எத்துப்பட்டு அங்கும் இங்கும் அலைந்து ஒதுங்கும் சிறு சிறு தடிகளை பார்த்து பெருமூச்சு விட்டவள் தாயை நிமிர்ந்து பார்த்தாள். இங்கு வந்த நாளில் இருந்து பல தடவைகள் தமிழினியுடன் குளக்கட்டுகளில் நெடுநேரம் நடந்தும் ஓடியும் விளையாடிவளுக்கு இன்று தாயுடன் வந்திருந்தது எதோ ஒருவித வெறுமையையும் தனிமையையும் உருவாக்கியது. வழமையை விட தன் தாயின் முகமும் கொஞ்சம் கவலை தோய்ந்து இருப்பதைப்போல உணர்ந்தாள் யதுமினி.

குளக்கட்டில் இருந்து திரும்பிப்பார்த்தாள். தொலைவில் தமிழினியின் வீட்டுக் கூரை தெரிந்தது. ஒரு பத்துநிமிட நடை தூரம். மரங்கள் சிறு செடிப் பற்றைகள் என வீதியின் இருபக்கமும் அடர்ந்து செழித்து வளர்ந்து மறைத்துக் கொண்டிருந்தது. அதனூடாக அங்கும் இங்கும் என சிலர் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தமிழினியாக மாறி ஓடிவந்துவிடமாட்டாளா என்ற ஏக்கம் அவள் விழிகளில் தெரிந்தது.

மகளின் முகவாட்டத்தை பார்த்து தவித்துப்போன கமலா, மெதுவாக யாமினியின் தலையை தடவிகொண்டே,

“யாமி அங்கை பாருங்கோ என்னமாதிரி அந்த குருவி மீன் பிடிக்குது என்று”

மெல்ல யாமினியின் கவனத்தை திருப்பி, அவளை மகிழ்வாக்கி விடவேண்டும் என்பதில் கவனமெடுத்தாள். தாயின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட யாமினி சிரமப்பட்டு புன்னகையை வரவழைத்துக் கொண்டு தாயின் கரங்களைப் பிடித்தாள்.

” தமிழி ஏன் அம்மா என்னோட முன்ன மாதிரி கதைக்கிறெல்ல? என்ன கோபம் என்னில” யதுமினியின் கேள்வி கமலாவின் நெஞ்சை அதிர்வுடன் ஊடுருவியது.

” இல்லம்மா தமிழி சின்னப்பிள்ளைதானே அவளுக்கு ஏற்கனவே கொஞ்சம் சுகமில்லை. போன மாதமும் ஸ்கூலில மயங்கி விழுந்தவளாம். சண்டையில பட்ட காயம் சன்னம் தலையில இருக்காம் அதுதான் அவள் அப்படி விழுந்தவள்.”

‘என்ன சண்டை அம்மா நடந்தது? சண்டை என்றால் ஏன் எங்களைப்போல சின்னப்பிளையள் காயம் படுகினம். அது சண்டை சனங்கள் இல்லாத இடத்தில தானே நடக்கும்.”

யதுமினியின் கேள்வியால் விக்கித்துப்போன கமலா, யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று சுற்றிவர பார்த்தாள். அருகில் எவரும் இல்லை என்பதனை பார்த்தும், கொஞ்சம் இயல்புக்கு திரும்பி,

“பிள்ளை இங்கினை இப்படி இறுக்கி கதைக்க கூடாது. பிறகு தமிழிக்கு இன்னும் பிரச்சனைகள் வரும். அவள் பாவமல்லோ”
தமிழிக்கு பிரச்சனை வரும் என்றதும் யதுமினி மௌனமானாள். அவள் கண்களில் மெல்லிய கலக்கம் எழுந்தது.

என்னதான் இருந்தாலும், எவ்வளவு பேர் சந்தோசமாக இருந்து ரீவியில் பார்த்துக்கொண்டிருக்க, தமிழி மட்டும் ஏன் மயங்கி விழவேணும்.அதுவும் பக்கத்தில் இருந்து “சாறி நல்லா இருக்கு” “மேக்கப் நல்லா இருக்கு” “நெற்றிச்சுட்டி வடிவாக இருக்கு” என்று கட்டிப்பிடித்து அன்பு கொட்டிக்கொண்டிருந்தவள், காரில ஏறும் போதுகூட “என்ன பெரிய கார். நல்ல வடிவான கார்” என்று சொல்லிக்கொண்டிருந்தவள். ஹெலியில ஏறேக்கை மட்டும் ஏன் கத்திக்கொண்டு மயங்க வேணும். விடைதெரியாத கேள்விகளால் மனம் நிறைந்துபோக, நீண்ட நீர்ப்பரப்பின் முடிவிடத்தில் சிறுபுள்ளியாக ஆரம்பித்த கட்டுமரம் கொஞ்சமாக கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டு வந்தது.

யதுமினி. கமலாவின் செல்ல மகள். இருபது வருடங்களுக்கு முன் புலம்பெயர்ந்து பரிசில் இரண்டாவது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தவளுக்கு எல்லாமுமாகிப் போனவள். தன்னைப்பற்றி கவலைப்படாத கமலா, யதுமினியின் எதிர்காலம் குறித்தே அதிகம் கவலைப்படுவாள். அதுவும் முற்றிலும் வேறானதொரு பண்பாடு கலாசாரத்துக்குள் அவளை ஒரு நல்ல தமிழ் பெண்ணாக வளர்த்துவிடவேண்டும் என்ற பெரும் பிரயத்தனத்துடன் தான் ஒவ்வொரு நாளையும் கழித்தாள்.

Jaffna_Delft_Mulaitivu_Feb_2013_02யதுமினியும் தாயின் வழிகாட்டலையும் பாரிஸின் கலாசாரங்களையும் உள்வாங்கி ஒரு நல்ல மகளாக தாயோடு இயைந்திருந்தாள். மகளுக்கு தன் ஊரில் வசிக்கும் சொந்தங்களை அறிமுகப்படுத்தி விட்டால் தனக்குப் பின்னும் யதுமினி தலைமுறை உறவுகளை கொண்டாடலாம் என்ற நம்பிக்கையில் வாரத்தில் இரண்டு மூன்று தடவைகள் ஊரில் இருக்கும் தன் தாய் மற்றும் சகோதரர்களோடு யதுமினியை பேச வைத்துவிடுவாள். யதுமினிக்கும் அவர்களோடு பேசி பழகியதில் ஒரு ஆத்மார்த்த பிணைப்பு ஏற்பட்டு இருந்தது. அதிலும் தன் வயதினை ஒத்த சிறியதாயின் மகளான தமிழினியுடன் அவளுக்கு ஏற்பட்ட நெருக்கத்தால் யதுமினி எப்போதும் தமிழினி பற்றியே பேசுவாள்.

“யதுமி வீட்ட போவமே” மென்மையாக கேட்டாள் கமலா.

“ம்ம்ம் வாங்கோ” என்றபடி குளக்கட்டில் முளைத்திருந்த எருக்கலை செடியின் பழுத்தஇலைகளை கையால் தொட்டு விழுத்திகொண்டிருந்தாள்.

“யதுமி என்னம்மா யோசிக்கிறீங்க இன்னும் ஒரு கிழமைதானே பிறகு நாங்கள் வீட்ட போடுவம். அப்பா பிள்ளையை சுவிசுக்கு கூட்டிக்கொண்டு போறன் என்று சொன்னவரல்லோ”

“இப்ப வீட்ட போனால் தமிழி என்னோட கதைப்பாவா?” யதுமினியின் கேள்விக்கு என்ன விடை சொல்வது என்று யோசித்துக்கொண்டே

“ஓம் பிள்ளை அவள் நேற்றுத்தான பயந்து போனாள் இண்டைக்கு எல்லாம் மறந்திருப்பாள் நீங்கள் போய் கதையுங்கோ அவ கதைப்பா.”

“சரி வாங்கோ போவம்” என்றபடி தாயின் கையைப் பிடித்த யதுமினி குளக்கட்டின் சரிவில் இறங்கத் தொடங்கினாள்.
கமலாவின் மனதில் தமிழினி நிழலாக வளரத்தொடங்கினாள்.

கட்டுநாயக்கா விமானத்தளத்தின் விருந்தினர் அரங்கில் வரவேற்க காத்திருந்தவர்களில் தமிழினியைக் கண்டதும் ஓடிச்சென்று “தமிழி” என்று கட்டிப்பிடித்துக்கொண்டாள். கூச்சத்தால் சங்கடப்பட்டு மெதுவாக நெளிந்து இடைவெளியினை உருவாக்கிக் கொண்டவளை பார்த்து புன்னகைத்தாள் கமலா.

“நீர் நேரில் நல்லவடிவு” எடுத்த எடுப்பிலேயே யதுமினி இப்படி சொல்வாள் என கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத தமிழினி ஒருகணம் திகைத்து மென்மையாக சிரித்தாள்.

“பாக்கை தாங்கோ நான் கொண்டுவாரன்” என்று கையை நீட்டிய தமிழினியின் கையை பிடித்துக்கொண்ட யதுமினி,

“நான் கொண்டுவாறன் நீர் என்னோட வாரும்” அழைத்துக்கொண்டு நடக்கத்தொடங்கியவளை எல்லோரும் அதிசயமாக பார்த்தார்கள்.

கமலா மட்டும் “அவள் இப்படித்தான் அங்கயும் நெடுக தமிழியை பற்றித்தான் கதைப்பாள். விடுங்கோ இரண்டுபேரும் வரட்டும்” என்று அவர்களின் நட்புக்கு வழி எடுத்துக்கொடுத்தாள்.

தாயும் சகோதரர்களும் என்னவானார்கள் என்ற கவலையே இல்லாமல் யதுமினி தமிழினியுடன் ஒன்றி இருந்தாள். அப்போது பிடித்த கையை நேற்று இரவு மயங்கி விழும் வரை தளர விடாமல் தானே இருந்தார்கள் இருவரும்.

net-02பதினைந்து நாட்கள் எப்படிக் கழிந்தது என்றே தெரியவில்லை. யதுமினிக்கு
புதிய இடம், புதிய மனிதர்கள் என எல்லாமே புதிதாக இருந்தது. குளிப்பது முதல் படுப்பதுவரை புதிய அனுபவமாக இருந்தது. நிறையத்தடவைகள் இந்த வாழ்க்கையை இழந்து அங்கே வாழுகிறோமோ என்றுகூட எண்ணி தாயிடம் குறைபட்டுக் கொள்வாள். எல்லாவற்றையும் விட இயற்கையான நிலப்பரப்பும் குளமும் நீரோடும் வாய்க்கால்களும் ஓடி ஒளியும் மயில்களும் காலை மாலை என கூவும் குயில்களும் வண்ணத்துப்பூச்சிகளும் யதுமினிக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.

தான் எதிர்பார்த்ததை விட யதுமினி சந்தோசமாக இருப்பதை அறிந்து மகிழ்ந்தவர் தான் இல்லாமல் போனதையிட்டு கவலைப்பட்டு இன்னும் பணத்தினை மேலதிகமாக அனுப்பி வைத்ததையும் நினைத்துக்கொண்டவள் ., நடந்து வீட்டடிக்கு வந்துவிட்டதை பார்த்ததும் அவளையறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது.

“யாரோ சொந்தக்காரங்க வந்திருக்கினம் போல கெதியா வாங்கோம்மா ” என்று யதுமினியை அழைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தவள், அங்கு இருந்த இருவரையும், அமைதியாக பதற்றத்துடனும் நிற்கும் சகோதரியையும் பார்த்தாள். மெதுவாக கண்களாலே ‘யார் இவர்கள்” என வினாவினாள்.

“அக்காள் உங்களைப் பாக்கத்தானாம்” என அவர்களையும் கமலாவையும் மாறிமாறிப் பார்த்தவள்.
” யதுமி நீங்கள் உள்ள போங்கோ போய் தொட்டியில தண்ணி நிறைச்சு இருக்கு குளியுங்கோ தமிழி அங்கைதான் நிக்கிறா”

தமிழி அங்கே நிற்பதாக சொன்னதுதான் தாமதம் யதுமினி உள்ளே சென்றுவிட்டாள்.

“வாங்கோ அக்கா உங்களிட்டதான் வந்தனாங்கள்.”

தனது வீட்டுக்குள் வந்து நின்றுகொண்டு தன்னையே வரவேற்கும், அவர்களையும் அவர்களின் குரலின் தொனியையும் அவதானித்த கமலாவுக்கு ஓரளவு நிலவரம் விளங்கியது. ஒன்றும் பேசாமல் நிமிர்ந்து சகோதரியைப் பார்த்தாள். அவளும் மெதுவாக தலையை அசைத்தாள்.

இப்போது கூட வந்த மற்றவன் தனது கையில் இருந்த தினக்குறிப்பு புத்தகத்தை எடுத்து,

“அக்கா நீங்கள் பிரான்சில சார்சல் என்ற இடத்தில தான இருக்கிறிகள்”

“ஓம்”
ஒற்றையாக பதில் விழுந்தாலும் மனம் பிரான்ஸ் போய் சார்சல் வரை ஒருமுறை ஓடி வந்தது.

“என்னண்டா அக்கா அங்கை நீங்கள் ஒரு பலசரக்கு கடை வச்சிருக்கிறீங்கள். பிறகு பாரிஸின் மத்தியில ஒரு தமிழ் சாப்பாட்டுக்கடை வச்சிருக்கிறீங்கள்”

“ஓம் இருக்கு”
கமலாவுக்கு இப்போது முழுதும் விளங்கியது. குரல் தளம்ப தொடங்கியது.

“இங்கை பாருங்கோ நானும் மகளும் பிரான்சு நாசினால்ரீ எங்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் பிரான்சின் அரசாங்கம் சும்மா இராது”

தமக்குள் பார்வையால் பேசிக்கொண்டவர்கள் சிரித்துவிட்டு,

“நீங்கள் உங்கட கடையில் வேலைசெய்கிற தமிழ் பொடியளுக்கு மாதம் ஐநூறு யூரோ சம்பளம் தான் கொடுக்கிறியள். இரண்டு கடையின்ர லாபம் மாதம் இருபதினாயிரம் யூரோ , அது எங்கட காசுக்கு முப்பத்தைந்து லட்சத்துக்கு மேல வரும். கொஞ்சம் இதைப்பாருங்கோ.”
என்றபடி கொஞ்ச போட்டோக்களை எடுத்துக் கொடுத்தார்கள்.

“நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேணும் இப்ப”

கமலா கொஞ்சம் குரலை உயர்த்தினாள். அவர்கள் சிரித்துக்கொண்டே கமாலாவின் சகோதரியை பார்த்துக்கொண்டு போட்டோக்களை நீட்டினார்கள்.

ஐந்து போட்டோக்கள். ஐந்தும் யதுமினியின் சாமத்திய சடங்கு போட்டோக்கள். பல்லக்கு கார், ஹெலி பாக் என ஐந்து இடங்களில் எடுத்த போட்டோக்கள். ஒரேமாதிரி சாறிகள் வேட்டிகள் என உறவினர்கள் சூழ படங்கள்.

“ம்ம்ம் என்னடா அக்கா நீங்கள் பிரான்சுக்கு போயும் எங்கட கலாசாராம் பண்பாடுகளை மறக்காமல் வேட்டி கட்டி மேளம் அடிச்சு கோயில் கட்டி எல்லா சடங்குகளையும் கொண்டாடுறீங்கள் உங்களை நினைக்க பெருமையாக இருக்கு”
“இங்கை இருக்கிற எங்கட சனம் சரியில்லை பழக்க வழக்கம் கூடாது குடிக்குதுகள் சண்டைபிடிக்குதுகள் என்றெலாம் அங்கையிருந்து சொல்லுறீங்கள்”
சரி அதெல்லாம் இப்ப வேண்டாம். நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்யவேணுமக்கா. ஒருஐந்து லட்சம் காசு கொடுத்தீங்கள் என்டால் சரி. வேற சிக்கல் ஒன்டும் இல்லை. நாங்கள் இரண்டு நாள் கழிச்சு வாறம். சரி அக்கா பிறகு சந்திப்பம் காசை எடுத்து வையுங்கோ. ”

முற்றத்து புழுதியை வாரிக்கொட்டிக்கொண்டு அவர்களின் மோட்டார் சைக்கிள் புறப்பட்டது.
கணநேர அமைதியை உடைத்துக்கொண்டு எழுத்து கமலாவின் குரல்
“என்னடி இது யாரடி இவங்கள் இப்படி தமிழில கதைக்கிறாங்கள்”

“அக்காள் எனக்கும் விளங்கவில்லை இந்த நேரம்பாத்து அந்தாளும் கொழும்பு போட்டுத்துதே, வாடி விதானையிடம் போய் “என்றி” போடுவம் அப்படியே போலீசுக்கும் போவம்”

“எதுக்கும் இரு, அவருக்கு ஒருக்கா கதைச்சிட்டு செய்வம்” என்றாள் கமலா.

“எனக்கெண்டா உதுகள் இப்ப இடம் மாறி நிக்கிற நாயள் போலத்தான் கிடக்கு எதுக்கும் விதானையிட்ட போட்டு பொலிஸ்க்காரன் “ரட்ணநாயக்க” நிண்டால் அவனிட்ட ஒருக்கா சொல்லிவிட்டால் காணும் கெதியா வா”
தமிழினியை அழைத்து சொல்லிவிட்டு, இருவரும் புறப்பட்டனர்.

“தமிழி ஏன் நேற்று முழுக்க என்னோட கதைக்கயில்லை” வாசலில் நின்ற தமிழினி திரும்பி பார்த்துவிட்டுnet-03

“ஒன்றும் இல்லை அக்கா எனக்கு ஹெலி என்றால் பயம் என்னையறியாமல் மயங்கி விடுவேன்”

“ஏன் உமக்கு பயம். ஒன்றுக்கும் பயமில்லாமல்தான என்னோட வாறனீர். பிறகு எதுக்கு பயப்பட வேணடும்

“அக்கா இங்கை சண்டை நடந்ததல்லோ அப்பேக்கை நாங்கள் இருக்கேலாமல் எல்லோரும் இடம்பெயர்ந்து இரனைப்பாலைக்கு போனனாங்கள். எல்லா இடமும் செல்லும் கிபிரும் ஒரே அடிதான்”

“அதென்ன செல்லும் கிபிரும்”

கேட்ட யதுமினியை, சலனமற்ற முகத்தோடு ஆழ்ந்து பார்த்தாள் தமிழினி.
உண்மையிலேயே யதுமினிக்கு எதுவும் புரியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட தமிழினி மெல்ல பெருமூச்செறிந்தாள். யதுமினி மீது இருந்த ஒருவித தயக்கம் அந்தப் பெருமூச்சோடு போய்விட யதுமினியின் கையைப் பற்றிக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லத்தொடங்கினாள்.

0000000

“சாள்ஸ் து கோல்” விமான நிலையம். பளிங்கு தரையில் நடகிறார்களா அல்லது வழுக்கிக்கொண்டு போகிறார்களா என்று புரியாத அளவுக்கு ஒவ்வொருவரும் வேகமாக விலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். சில சமயங்களில் எழும் சப்பாத்தின் ஓசை கவனத்தை சிதைத்தாலும் மீண்டும் ஆழந்த சிந்தனையில் மூழ்கினான் கமலாவின் கணவர் சேகர்.

இன்னும் பத்துநிமிடங்களில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் இறங்கிவிடும் என இலத்திரனியல் திரையில் எழுத்துக்கள் ஓடிகொண்டிருந்து. நேரத்தை பார்த்தான். மெதுவாக எழுந்து அங்கும் இங்கும் உலாவியபடி விமான நிலையத்தை நோட்டமிட்டான்.

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதும், உதடுகளில் முத்தமிடுவதும், சிலர் பதற்றத்துடன் பயணப் பத்திரங்களை சரிபார்ப்பதுமாக இருந்தனர். அநேகர் ஒரு வித எதிர்பார்ப்புடன் இருக்கைகளில் அமரமுடியாமல் அங்குமிங்கும் உலாவிகொண்டிருந்தனர். மனத்தின் அழுத்தத்துக்கு ஒரு பிரெஞ்சுக் கபே குடிக்கவேண்டும் போல தோன்றியது. சுற்றிவரப் பார்த்தான். ஒரு சில நிமிட நடைதூரத்தில் இருந்த ரேஸ்ரோரண்டை நோக்கி நடந்தான். பிரெஞ்சுக் கபேயினை வேண்டிக்கொண்டு அருகில் இருந்த இருக்கையில் இருந்தவன் காதுகளில் கமலாவின் அழுகையோடு சொன்ன விடயம்தான் திருப்ப திருப்ப கேட்டது.

விதானையார் வீட்டில் விதானையாரிடம் அவங்கள் பேசிக்கொண்டு இருந்தாங்களாம். கமலாவையும் சகோதரியையும் கண்டதும் சிரித்துக்கொண்டே அவர்கள் இருவரும் போக .விதானையார்,.

“பிள்ளை இவங்கள் எல்லாம் சொல்லிட்டுதான் போறாங்கள். நீங்கள் போலிசுக்கு போறதென்றால் போங்கோ. என்றும் அதால பலன் இல்லை. கேட்ட காசில அரைவாசி என்டாலும் குடுத்துத்தான் ஆகவேணுமென்றும். அப்படி இல்ல என்டா நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கிலும் எடுங்கோ நான் சாட்சிக்கு வாறன். என்றும் சொன்னதாக சொல்லி அழுத குரல்தான் கேட்டுக்கொண்டிருந்தது.

நேரத்தைப்பார்த்தான் சேகர். விமானம் இறங்கி விட்டதாக இலத்திரனியல் திரையில் எழுத்துக்கள் ஓடத்தொடங்கியது. பயணிகள் வரும் வழியை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான். மனைவியையும் மகளையும் கண்டதும் ஓடிசென்று மகளை கட்டிப்பிடித்தான் சேகர். இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டவன், நிமிர்ந்து மனைவியிடம்

“பாக்கை தாங்கோ” என்று கையை நீட்டி வேண்டிவிட்டு,
“என்னப்பா நடந்தது அங்கை” என்று கேட்டான்.

“என்னவோ உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு வாறன். உங்களுக்கு என்ன”

‘நான் சொன்னான் தான சரி சரி விடும்”என்று சேகர் பணிந்ததும்,

“அப்பா அவங்கள் காசை வேண்டி அங்கை ஊரில இருந்த மூன்று குடும்பத்துக்கு குடுத்திருக்கிறாங்கள். சண்டையில கணவனை இழந்த குடும்பங்களாம். அதுகள் நாங்கள் வெளிக்கிடேக்கை தான் வந்து அழுது அழுது நன்றி சொல்லிப்போட்டு போகுதுகள் அதுகளுக்கு தெரியாது எங்களை வெருட்டி வேண்டின காசு என்று, நாங்களா கொடுத்த உதவி என்டெல்லோ அதுகள் நினைக்குதுகள்”

“உண்மையாவோ” சரி சரி காசுதான உழைச்சுப்போட்டு போகலாம். என்ன குட்டி ஒன்றும் பேசாமல் வருது.” என யதுமினியை முதுகில் தடவினான்.

“அப்பா என்னோட கதைக்கவேண்டாம்”

ஏனம்மா?

“அங்கை தமிழியும் தம்பியும் ஹெலி சுட்டு காயப்பட்டு இருக்க நீங்கள் இங்கை ஹெலிபிடிச்சு எனக்கு சாமத்திய வீடு செய்தனியள் என்ன? எப்படி அப்பா உங்களுக்கு மனது வந்தது”
திகைத்து திரும்பியவனின் கையில் இருந்து நழுவி விழுந்த பயணப்பையை எடுக்க குனிந்தவனின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் பளிங்கு நிலத்தில் விழுந்து தெறித்தன.

சேகரின் கையை ஆதரவாக பற்றிப் பிடித்திருந்தாள் கமலா. யதுமினி முன்னே நடந்துகொண்டிருந்தாள்……
00000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment