Home » இதழ் 16 » * ரோஷான் ஏ.ஜிப்ரியின் இரண்டு கவிதைகள்

 

* ரோஷான் ஏ.ஜிப்ரியின் இரண்டு கவிதைகள்

 

விறகென எரியும் நிழல்
———————–

புல்வெளி படர்ந்து
முகமுலர்த்தி நகரும் காற்றில்
என் வாசக் கைக்குட்டைகளை
கொடுத்தனுப்பினேன்
உன் வியர்வையில் நறுமணம் விசிற

அருங்கோடையில் இளைப்பாறி
மடியே தஞ்சமென துயின்றும் இருக்கிறாய்
நிழல் பருகி நீ நெகிழ்ந்த காலங்கள் அது

வவ்வால்களின் இராப் போசனங்களில்
தீர்ந்துவிடக் கூடாதென்ற கூர்மையில்
இலைமறைத்து பழுக்க வைத்திருந்தேன்
உனக்கென கனிகளை தூவ

நீ தேடித்,தேடி பழங்கள் புறக்கிய பருவங்கள்
சொர்க்கமாய் இருந்திருக்கும் என் காலடி

பின் வந்த நாட்களில்……,
நெருக்கடிகளின் பேரிரைச்சல்
உன் ஆன்மாவை கொலை செய்யும் அளவு வர
இருப்பை சோதிக்க வந்து விட்டாய்

தவம் என்றதும்,வரம் என்றதும்
உன் பாசாங்குகளின் மாயை ஆயிற்று
அர்த்தமற்ற ஒரு முற்றத்தில்
இருப்பை தக்கவைப்பது
என்றைக்கும் சாத்தியமில்லை என
உணர்கையில் வலி அடர்ந்து
வேர்வரை விகாசிக்கின்றன

என்னை தேடியலைந்து தோற்றுத் திரும்பும்
பறவைகளிடம் சொல்லிவை
வாழ்வின் சூனியங்கள் கொடுமையானதென்று

உன் மார்பில் எறியமர்ந்ததாகவே
எண்ணிப் புகையும் உன் மனதிலிருந்து
சாம்பலென கூட்டித் தள்வதில்தான்
சந்தோஷம் எனில் கொழுத்திவிடு
வீழ்த்திய உன் முன்னால் விறகென எரிகிறேன்.

000000

20150228_163957

வெளிநடப்பு
————–

அன்று..
உன் செவ்வாயால்
என்னை திங்களென்றாய்
நுரைக்க,நுரைக்க விரும்பி
நதிகள் பெருக்கெடுக்க
மனசின் நாற்திசையும்
பிரவாகித்து பீறினாய்

இன்று………………….,
புறக்கணிப்பின் பெயரால்
மனசால் திறக்கவிருந்த
கடைசிப் படலையும்
இறுக்கி சாத்திவிட்டாய்

மூச்சு முட்டுகிறது
என் காத்திருப்பின்
கடைசி தருணங்களும் மூழ்க

வாழ்வு பற்றியதான
கனவுகளை கலைத்து விட்டன
இன்றைய உன்
நெருக்கடிகளின் பேரிரைச்சல்

வலியை மொழிய வழியின்றி
குரலை இறுக்கியபடி நாசிக்குள்
நீ மூட்டிய தீ

கவலைகளால் வெப்பிசார வெப்பம்
கனன்றெரியும் காட்டுத்தீயாய்
உயிரை சிதைக்க ஊளியென..

நம்பவைத்து ஏமாற்றுவதையும்
உலக நீதிக்குள் உட்புகுத்தி
வழக்காக்கத் தக்கதாய் சட்டம் வகுத்து
தண்டனைக்குள்ளாக்கி
புழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும் இனி..

இப்பவும் உன்னை சபிப்பதற்கு
மனசில்லை …..,
இதன் பின்பும் என்னிடம்
சிநேகம் இருக்கின்றன கடல்போல்
இது கனவாய் இருக்கட்டும் என்றே
பிரார்த்திக்கின்றேன்
உன்மேல் இருக்கின்ற காதலால்!

0000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment