Home » இதழ் 16 » *கிரேக்கத்தில் சிறிசாவின் வெற்றி – மாற்றங்களும் கோட்பாட்டு கேள்விகளும்….

 

*கிரேக்கத்தில் சிறிசாவின் வெற்றி – மாற்றங்களும் கோட்பாட்டு கேள்விகளும்….

 

sen

சிறிசாவின் வெற்றி – பின் மார்க்சியத்தின் ஈமச்சடங்கு

01
உலகெங்கும் நிகழும் மாபெரும் மாற்றங்கள் இன்று பல தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது பல தத்துவங்களின் புனிதங்களை உடைத்துள்ளது. இன்று பின்நவீனத்துவ சிந்தனாவாதிகள் அருகி Syriza-Flagsவருகிறார்கள். இருப்பினும் சில பின் மார்க்சியர்கள் ஏதோ தமது காலம் வந்துவிட்டதுபோன்ற பாவனை செய்கிறார்கள். அந்தக் கருத்ததாடலின் செத்தவீட்டையும் தொடங்கி வைத்திருக்கிறது தற்போதைய துரித மாற்றங்கள். இது பற்றிய அறிதல்களும் கற்றலும் தமிழ்ச் சூழலிலும் தொடந்து நிகழ வேண்டும் . இது போன்ற முயற்சிக்கு உடனடியான தேவை நமக்குள் நடைபெற வேண்டிய விரிந்த உரையாடல்கள்.மாதத்திற்கு இரு முறை இதனை தொடர்ந்து நடாத்துவோம் என சந்திப்பினை செய்தோம். முதலாவது உரையாடலில் இசைப்பிரியா, கீர்த்திகன்,பௌசர், மதன், சேனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிரேக்க நாட்டில் இடதுசாரிய கட்சியான சிறிசா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன , இது கோட்பாடு ரீதியாக எத்தகைய கேள்விகளை எழுப்பியுள்ளது என்ற தலைப்பில் இவ்வுரையாடல் நிகழ்ந்தது. அவ்வுரையாடலின் சிறு தொகுப்பு இது.

02

தீவிர இடதுசாரிய அமைப்புக்கள் பலதின் ஒன்றியமாக கிரேக்கத்தில் 2004ல் உருவாக்கப்பட்ட கட்சியான சிறிசா எல்லா இடதுசாரிய கட்சிகளும் சந்தித்த பிரச்சினைகளையே ஆரம்பத்தில் சந்திக்க வேண்டியிருந்தது. பெரும்பான்மை ஆதரவை வென்றெடுக்க முடியும் அல்லது ஆட்சியமைக்க முடியும் என்ற பெருங்கனவும் சிறிசாவுக்கு அன்றிருக்கவில்லை.

01- sen-012001ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக பல்வேறு கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்த கிரேக்க அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த மக்களின் குரலாக இருப்பது எவ்வாறு என்பது அன்று இடதுசாரிகள் பலரதும் முயற்சியாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு பொதுச் சேவைகள் பலதை மாற்றி தனியார் சொத்து நலன்சார் கொள்கைகளை முன்னெடுக்கும்படி பணிக்கப்பட்டது கிரேக்க அரசு.

பெரும் முதலாளித்துவ அரசுகளின் நலன்சார் கொள்கைகளை முன்னெடுக்கும் அரசாக குறிப்பாக ஜேர்மனி போன்ற அரசுகளின் டம்மியாக கிரேக்க அரசு மாறிக்கொண்டிந்த தருணத்தில் உருவாகியதுதான் சிறிசா. ஐரோப்பிய நாணயமான ஈரோவின் அறிமுகம் கிரேக்க மக்களுக்கு மேலும் ஒரு அடி போட்டது. அவர்களின் ஊதிய உயர்வு மட்டுப் படுத்தப்பட்டு பண்டங்களின் சேவைகளின் விலை இந்த நாணய மாற்றத்தினால் நிகழ்ந்தது. இதனால் பணவீக்கம் உயர்ந்து வாழ்க்கைத் தரம் வீழ்ந்தது. இதனால் கிரேக்க மக்கள் வாழ்க்கை நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர்.

2000ம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியின் 40வீதமாக இருந்த கிரேக்க கடன் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி விட்டது. 2007-2008ம் ஆண்டுகளில் உலகைத் தாக்கிய பொருளாதார நெருக்கடி கிரேக்கத்தில் ‘தேசிய கடன்” நெருக்கடியாக ஊதி வெடித்தது. 2009ல் ஜி.டி.பி யின் 95வீதத்தை கிரேக்க கடன் எட்டி நிச்சயமாக நூறு வீதத்தைத் தாண்டும் என்ற நிலை வந்த போது கிரேக்க- ஜரோப்பிய அதிகாரம் , முதலாளித்து பிரதிநிதிகள் அதன் பாதிப்பின் முழுமையை முற்றாக உணர்ந்திருக்கவில்லை.எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியதுபோல் அவர்கள் பொருளாதார நடவடிக்கைகள் இருந்தன.

ஐரோப்பிய வங்கியும் ,ஜ.எம் எப் வங்கியும் மேலதிக கடன்களை கிரேக்கத்தின் மேல் திணித்துப் பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சித்தன. கடனைத் தருவோம் லாபத்தை பிழிந்தெடுத்து கடனை மீளச் செலுத்துங்கள் என்ற அடிப்படையில் கிரேக்க அரசின் பொருளாதார கொள்கைகளை வகுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. / டீரெய்கன்ஸ்/ எனச் சொல்லப்படுகின்ற மூன்று அமைப்புக்களின் முழுக்கட்டுப்பாட்டையும் மீறி கிரேக்கர்கள் அசைய முடியா நிலை உருவாக்கப்பட்டது.

ஐரோப்பிய கமிசன், ஐரோப்பிய வங்கி, ஜ.எம்.எப் ஆகிய மூன்று அமைப்புக்களின் லாபநோக்கு மட்டும்
முதன்மைப்படுத்தப்பட்டது. பொதுச்சேவைகள் துண்டாடப்பட்டு தனியார் மயப்படுத்தப்பட்டு லாபத்தை நோக்கி முடுக்கிவிடப்பட்டன. ஊதியம் குறைக்கப்பட்டது, சமுக நலச் சேவையில் ஈடுபட்ட ஏராளமானோர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டனர், இது போன்ற ‘நியோ லிபரல்’ பொருளாதார நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் வறுமை தலைதூக்கத் தொடங்கியது. தெருத் தெருவாக இலவச உணவு வழங்கும் அமைப்புக்களை மக்கள் இலையான்கள் போல் சுற்றி நின்று கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வரலாறு காணாத அளவு தற்கொலைகள் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து ட்ரொய்கன்களுக்கும் கிரேக்க அரசுக்கும் (பசோக் என்ற சமூக ஜனநாயக கட்சியின் ஆட்சியின் கீழிருந்த அரசு) எதிராக தெருத் தெருவாக போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடாத்தப்பட்டன. அரசு காவல் துறையின் பலத்தைக் கூட்டி மக்கள் போராட்டங்களை முடக்கியது. சோரம்போன தொழிற்சங்கத் தலைவர்களோடு ஒப்பந்தங்களுக்கு வந்து தொழிலாளர் போராட்டங்களை முடக்கியது. இன்றுவரை முப்பதுக்கும் மேற்பட்ட பொது வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள்
முன்னெடுத்தும் குறிப்பிடத்தக்க வெற்றியை அவர்கள் அடைய முடியவில்லை. முன்னெழுந்த எந்த முயற்சியும் வெல்ல முடியாத நிலையில் மக்கள் மதத்தியில் மிகப்பெரும் சோர்வு பற்றிப் படர்ந்தது. கிரேக்கத்து கடன் ஜி.டி.பி யின் 175வீதமாக ஊதிப் பெருத்த நிலையில் , 50 வீதத்துக்கும் அதிகமான இளையோர் வேலையற்று போன நிலையில், மக்கள் அரசியற் செயல், போராட்ட தளத்திற்கு நகர்ந்தனர்.

இச்சந்தர்ப்பத்தை உபயோகித்த /கோல்டன் டோன்/ என்ற துவேசக் கட்சியின் வளர்ச்சி பெரும் ஆபத்தை சுட்டி நின்றது. 1930ம் ஆண்டுகளின் பொருளாதார நெருக்கடியின் பின் ஜேர்மனியில் தோன்றிய பாசசத்தின் வரலாற்றுப் பாடத்தால் முதலாளித்துவ அரசுகளே பாசிச வளர்ச்சியை ஓரளவு கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்த்ததுபோலவே பாசிஸ்டுகளின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் இடதுசாரிகளுக்கு எதிராக பாவிப்பதற்கான நல்ல ஆயுதமாக பாசிஸ்டுகளை அரசு பாவிக்கும் குணாம்சம் முற்றாக முடிந்து விடவில்லை.இதனால் அக்கட்சி பலம் பெற்றிருந்தது.

இத்தருணத்தில் 2012ல் நடந்த தேர்தலில் இடது சாரிகள் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகியது. 2004ல் 3.3வீத ஆதரவும் 2009ல் 4.7வீத ஆதரவும் என்று சிறுபான்மைக் கட்சியாக இருந்த சிறிசா இத்தேர்தலில் 27வீத வாக்குகளை பெற்றது. இது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய மாற்றம். வழமையாக மக்கள் ஆளும்கட்சிக்கெதிராக எதிர்க்கட்சிக்கு வாக்குப்போடுவது போன்ற ‘மாற்றம்’ அல்ல இது. மக்கள் பாராளுமன்ற அரசியலுக்கூடாக திட்டவட்டமான மாற்றத்தினை கோரிநின்ற உணர்வை இது வெளிப்படுத்தியது
என்று கூறுவது மிகையில்லை.

syriza-01சிறிசா என்பது முற்றிலும் புதிய கட்சி, மக்கள் முதற்தடவையாக பெரும்பான்மை வாக்கை இக்கட்சிக்கு வழங்க முன்வந்தது அவர்கள் திட்ட வட்டமான எதிர்ப்பை தெரிவிக்க தயாராகிவிட்டதை அறிவித்தது. இத்தருணத்தில் 8.5வீதமளவில் வாக்குகளைப் பெற்ற கிரேக்க கம்யூனிச கட்சி சிறிசாவுடன் கூட்டுச் சேர்ந்திருக்குமாயின் அவர்கள் இடதுசாரிய அரசை அன்றே அமைத்திருக்க முடியும். மாறாக தனது குறுங்குழுவாத போக்கால் அந்தக்கூட்டுக்கு சம்மதிக்க மறுத்துவிட்டது. தமது கொள்கைகளை அவர்கள் சமரசம் செய்ய வேண்டிய தேவையிருக்கவில்லை. மாறாக வலதுசாரியத்திடம் இருந்து ,வலதுசாரிய கொடுமையை கட்டவிழ்த்துக்கொண்டிருந்த அரசை ஒரு கூட்டுமூலம் கைப்பற்றி அதன்பிறகு தமது கொள்கைகளுக்காக அவர்கள் போராடியிருக்க முடியும். ஆனால் அதற்கு கம்யூனிச கட்சி தயாராக இருக்கவில்லை. மோசமான வலதுசாரிய கட்சிகள் பலதுடன் முன்பு கூட்டுச் சேர்ந்து தொழிலாளர் நலன்களை பழிவாங்கிய இதே கட்சி ‘கூட்டாட்சிக்கு எதிர்ப்பு’ என்ற குருட்டுப் பார்வைக்கு இறுக்கமாக தாவியது இத்தகைய கட்சிகளின் போதாமையைத் தெட்டத் தெளிவாக்கியது.

பல புரட்சிகர சக்திகள் கம்யூனிச கட்சியின் போக்கிரித் தனத்தை இக்காலத்தில் கடுமையாகச் சாடின. அவர்கள் அரசதிகாரத்தை கையில் எடுக்க வாய்ப்பிருந்தும் மறுத்தமை வலதுசாரியத்துக்கு நல்ல சந்தர்ப்பத்தை வாரிக்கொடுத்தது. ஆட்சியைப் பிடித்து வலதுசாரிகள் மக்கள் மேலான மேலதிக சுமைகளையும் தாக்குதல்களையும் ட்ரொய்கன் சார்பாக கட்டவிழ்த்தனர். மக்கள் முற்றாகச் சோர்ந்து போயினர். போராட்டங்கள் மங்கி மறையத் தொடங்கின. சோர்வும் மன அழுத்தமும் தற்கொலைகளும் சமூகத்தை இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில்தான் இந்த ஆண்டு தேர்தல் நிகழ்ந்தது. அதிகாரத்தை எடுக்க மறுத்த கம்யூனிச கட்சியை மக்கள் புறந்தள்ளி சிறிசாவை நோக்கி அவர்கள் வாக்களிப்பு திரும்பியது. சிறிசாவுக்கு தேர்தலில் மிகப்பெரும்பான்மை கிடைத்தது. ஊதியத்தை உயர்த்துவது , வேலையால் நிறுத்தப்பட்டவர்களை மீண்டும் வேலையில் அமர்த்துவது, மூன்று லட்சத்துக்கு மேலானவர்களுக்கு மின்சார வசதிகளை வழங்குவது , தனியார் மயப்படுத்தலை நிறுத்துவது போன்ற அடிப்படைச் செயற்திட்டங்களை முன்வைத்து தேர்தலில் நின்ற சிரிசா வெற்றிக்குப்பின் முக்கிய நெருக்கடிகளை உடனடியாக சந்திக்க நேர்ந்துள்ளது.

ட்ரொய்கன்கள் எதற்கும் மசியத் தயாரில்லை என விடாப்பிடியாக நிற்கும் நிலையில் சிறிசா சமரசத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிசாவுக்குள் இருக்கும் அதி தீவிர இடதுசாரிகள் இந்த சமரசத்துக்கு எதிராக கிளர்ந்தெழும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. ஆட்சியை அமைப்பதற்காக வலதுசாரிகளுடன் கூட்டுக்கு சிறிசா தயாரானது, பொருளாதார கொள்கைளை சமரசம் செய்ய தயாராகுவது , முதலாளித்துவ பொருளாதாரத்தின் வெற்றுத் தர்க்கத்தின் அடிப்படைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளாது ‘உரையாடல்’ மூலம் முன்செல்ல நினைக்கும் மூடத்தனம் என இன்று சிறிசா மேல் வைக்கப்படும் விமர்சனம் அதிகரித்துக்கொண்டு வருகிறது.

03
தற்போது சிறிசா எதிர்கொண்டுள்ள பன்முகச் சிக்கல்களின் நுணுக்கங்களை உரையாடும் அதேவேளை ,சிறிசாவின் வெற்றி கிளப்பியுள்ள கோட்பாடு சார் கேள்விகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது.

1989 சோவியத் யூனியன் சரிந்ததைத் தொடர்ந்து பெரு வெற்றி முழக்கத்தை செய்த நவ லிபரல் சிந்தனையாளர்கள். ‘அதிர்ச்சி கொள்கை;’ என்று சொல்லப்படும் கொடிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி சோவியத் யூனியன் வளங்கள் சூறையாடப்பட்டன. (பார்க்க நோமி கிளைனின் – அதிர்ச்சி வைத்தியம்). முதலாளித்துவத்துக்கு மாற்று இல்லை என்று நிறுவப்பட்டதாக கூக்குரலிடப்பட்டு பின் நவீனத்துவக் கருத்துக்கள் வளர்க்கப்பட்டன. ‘வரலாற்றின் முடிவு- கடைசி மனிதன்’ என பிரான்சிஸ் பூக்கயாமா போன்றவர்கள் புத்தகம் எழுதி மில்லயன் கணக்கிற் சம்பாதித்தனர்.

இத்தருணத்தில் ‘சீர்திருத்தத்தை’ தவிர வேறு வழியில்லை என்ற கருத்திட்டத்தினை பின்புலமாகக் கொண்ட கருத்துக்கள் பலப்படத் தொடங்கின. இடதுசாரிய கொள்கைகள் பலதை உள்வாங்கியிருந்த ஜரோப்பிய சமூக சனநாயக கட்சிகள் பல ‘தேர்ந்தெடுக்கப்படுவதற்காக’ எனச்சொல்லி மிச்ச சொச்சம் இருந்த இடதுசாரிய கொள்கைகளையும் தூக்கி எறிந்து தம்மைக் கழுவித்துடைத்துக்கொண்டன. இங்கிலாந்து லேபர் கட்சி – கிரேக்கத்து பசோக் – பிரான்சு சோசலிசக் கட்சி – ஆகிய கட்சிகள் தமக்கும் வலதுசாரிய கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று கடும் பிராயத்தனம் செய்து நிறுவின.

இந்த சூழ் நிலை சமூக சனநாய கட்சிகள் இதுவரை நிரப்பி நின்ற இடத்தில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கியது. இந்த இடத்தை தீவிர புரட்சிகர கட்சிகள் ஏன்’ பிடிக்கவில்லை என பலர் கேட்பதுண்டு. வலதுசாரிகளின் ஊடகம் மற்றும் பல பிரச்சார நிறுவனங்கள் எதுவும் தீவிர புரட்சிகர கருத்துக்களுக்கு இடமளிக்க மறுத்து வலதுசாரிய வெற்றிப் பெருமையில் ஊறிக்கிடந்த நிலையில் ,புரட்சிகர கருத்துக்களுக்கான மதிப்பு சுமூகத்தில் அடித்து நொருக்கப்பட்டிருந்தது. மார்க்சியர் அல்லது சோசலிஸ்ட் என்று சொல்லுவது வெட்கப்படவேண்டிய ஒன்றாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு ‘புரட்சிகர’ கட்சிகள் குறுங்குழுவாதத்திற்குள் முடங்கின. செகோவாவின் சாட்சிகள் போல் அவர்களிற் பலர் மார்க்சின் சாட்சிகளாக குறுகிப் போயினர். நூறுபோர் அங்கத்துவத்தை தாண்டுவதே சிக்கலாகிப் போன நிலையில், இந்த சமூக சனநாயக கட்சிகளின் பாதிப்பால் நொருங்கிக்கொண்டிருந்தததை நுணுக்கமாக அவதானித்த புரட்சிகர சக்திகள் மட்டும் தமது அங்கத்துவத்தை காப்பாற்றி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது. இந்த ‘பாதுகாப்பு’ நடவடிக்கைகள் வலதுசாரியத்துக்கு பாரிய தாக்க்குதலை செய்யும் பலத்தை இடதுசாரிகளிடம் இருந்து தற்காலிகமாக பறித்திருந்தது.

தற்போதைய முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி இதைத் தலைகீழாக மாற்றத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் எங்கும் புதிய இடதுசாரிக் கட்சிகள் முளைத்து மக்கள் நலன்களைப் பேசத் தொடங்கியருப்பது மட்டுமின்றி பெரும்பான்மை ஆதரவைத் திரட்டும் வல்லமையையும் அவர்கள் காட்டி வருகிறார்கள். கிரேக்கத்து சிறிசா – ஸ்பெயின் பொடிமோஸ் ஆகிய கட்சிகள் இதற்கான senan-02உதாரணங்கள். இக்கட்சிகள் சமூக சனநாயக வாதிகள் விட்ட வெற்றிடத்தை நிரப்பும் வெறும் கூடுகளா என்ற கேள்வி எழுந்துள்ளது. இக்கட்சிகளின் போதாமையையைம் வரலாறு சுட்டத் தொடங்கியுள்ளது. சிறிசாவின் வெற்றியானது இத்தகைய புதிய இடதுசாரிய கட்சிகளின் எல்லைகளை பெரும்பான்மை மக்கள் மத்தியில் உரையாடலாக இறக்கியுள்ளது. பழைய கம்யூனிச கட்சிகள் போதாமை பலமுறை நிறுவப்பட்ட நிலையில் ஒரு புரட்சிகர சக்தி ஆட்சிக்கு வர முடியுமா என்ற கேள்வியை சிறிசா வெற்றி பலப்படுத்தியுள்ளது. 1917 மற்றும் 1949ம் ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய ஒரு நிகழ்வு நடந்தேறவில்லை.

பூக்கயாமாவுக்கு எதிராக ‘வரலாற்றின் மறு தோற்றம்’(அலைன் பொடியூ), ‘வரலாற்றின் பழிவாங்கல்’ (சேமஸ் மில்ஸ்) என்று எழுதித் திரிந்த காலம்கூட இன்று மலைஏறிவிட்டது. தான் சொன்னது பிழையென பூக்கயாமாவா எழுதத் தொடங்கிவிட்டார் ( அவர் புத்தகத்தை அநியாய விலைக்கு வாங்கியவர்கள் அனைவரும் பணத்தை மீளக் கேட்கவேண்டும்). இந்நிலையில் பல புதிய சிந்தனையாளர்கள் எர்னஸ்டோ, லாக்கிலோ போன்றவர்களின் பழைய சிந்தனைகளை மீள்நிர்மாணம் செய்ய முயற்சிக்கின்றனர். தற்போதய கிரேக்கத்து நிதியமைச்சரான யோனிஸ் வாருபாக்கிஸ் உட்பட பலர் மார்க்சை மார்க்சிடம் இருந்து காப்பாற்ற விரும்புவது தெரிகிறது. உள்ளிருந்து உடைக்க வேண்டும் ,முதலாளித்துவத்தைக் காப்பாற்றி அதை உடைக்க தொழிலாளர்களுக்கு நேர அவகாசம் வழங்க வேண்டும் என்று கூடப் பேசப்படுகிறது. ‘ஜனநாயகத்தை அடிப்படைப்படுத்தல்’ லிபரல் சிந்தனையை உள்வாங்கி எழுதல்’ போன்ற கருத்துக்கள் மூலம் பல்வர்க்க இணைப்பின் சாத்தியப்பாடு பற்றி பேசப்படுகிறது. இது மாவோயிஸ்டுகளுக்கு புதிதான ஒன்றல்ல. இருப்பினும் அங்கிருந்து கடன் வாங்கியதைப் பற்றிப் பேச இவர்கள் தயாரில்லை. இந்த புதிய சிந்தனையாளர்களுக்கு மார்க்சைத் தவிர வேறு எந்த புரட்சிகர பெயரையும் உச்சரிக்க கடும் தயக்கம் உண்டு. இவர்களிற் பலர் தங்களை பின் மார்க்சியர் என அழைத்துக்கொண்ட போதும் அந்த சிந்தனை முறையின் புதிய கதாநாயகர்களாக தம்மைக் காட்டிக்கொள்கின்றனர்.

வர்க்கமுரண்நிலை – இயங்கியல் முரண்நிலை விளக்கம் போதமை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. சிறிசாவின் வெற்றி இந்த வாதத்தை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.லிபரலை உள்வாங்கும் வருபாக்கிசின்_80590118_025537909-1 முயற்சி அவர் முகத்தில் ஒரு அறை போட்டுள்ளது. மாறாக லிபரல் அவரை வாங்கி விற்கும் அழுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் முரணை ஏற்றுக்கொண்டு அதிரடிக் கொள்கைகளை முன்னெடுப்பதா அல்லது தொடர் உரையாடல் ஈடாட்டத்தில் ஈடுபடுவதா என்ற கறுபப்பு வெள்ளைக் கேள்வி இந்த ‘அவ்வப்போது மார்க்சியருக்கு’ உருவாகியுள்ளது. வரலாறு முன்னிறுத்தியுள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் பின் மார்க்சிய கருத்துக்கள் நொருங்கத் தொடங்கியுள்ளன. மேற்சொன்ன கறுப்பு வெள்ளைக் கேள்வியின் புறவய விளைவுகளை கிரேக்க மக்கள் எதிர்கொண்டுள்ளனர். லிபரலை உள்வாங்கி முரணை மறுத்தால் – சமரசம் ,அவர்கள் துன்பங்களைத் தொடரும். முரணை ஏற்று முறிக்க நினைத்தால் ஓரளவாவது தப்பிக்க முடியும் என்ற தெளிவு எழுந்துள்ளது. அதே சமயத்தில் இந்த முரண்நிலையைப் பிரதிசெய்யும் புரட்சிகரச் சக்தியின் தேவையும் வேண்டப்படுகிறது.

மேலும் எமக்குள் நடந்த உரையாடல் பல்வேறு அடிப்படைக் கேள்விகளைத் தொட்டுச் சென்றது.

*மக்கள் இயக்கத்தின் பரவும் பண்பு, இயக்கத்தின் பாதுகாப்பு தன்மை ,எதிர் எதிர்தியங்கும் தன்மை மற்றும் அவற்றுக்கான பொருளாதார பின்புலன் -,சிறிசாவின் சமரசம் மீண்டும பாசிச சக்திகளுக்கு பலம் கொடுக்குமா?

* பாசிசத்தின் புதிய வரலாற்றுப் பண்பு என்னவாக இருக்கும் ? தொழிற்சற்க தலைவர்கள் ,ஒழித்தோடித் திரிந்தவர்களின் இயக்கம் எதுவாக இருக்கும் -?

*சிறிசா ஆட்சியில் தொழிலாளர் நடவடிக்கையோ அல்லது மக்கள் இயக்கமோ வெடிக்கும் பொழுது அதன் பண்பில் எத்தகைய மாற்றம் இருக்கும் ?

* சிறிசாவின் தோல்வி எத்தகைய பாதிப்பை உலகளவில் ஏற்படுத்தும்?

* தேசிய எல்லைகளை உடைக்கும் உலகமயமாக்கள் கொள்கைகள், போதாமைகள் – நவ காலனித்துவ உறவுமுறையை காக்கும் அதே வேளை தேசிய எல்லைகள் உடைவது சாத்தியமா? – இந்த முயற்சி ஏன் எவ்வாறு எதிர்நிலை விளைவை ஏற்படுத்துகிறது? அதாவது தேசிய உணர்வைத் தாண்டி விடுகிறது? – உலகின் பிராந்திய பொருளாதரா அமைப்புக்கள் இதை எவ்வாறு பார்க்கின்றன அவற்றுக்கிடையிலான முரண் எவாறு இயங்குகிறது – போன்ற பல கருத்துக்கள் தொட்டுச் செல்லப்பட்டன.

0000000

இவற்றுடன் புரட்சிகர சக்திகளால் மாற்றுப் பொருளாதாரத்தை திட்டவட்டமாக வைத்து பெரும்பான்மை ஆதரவு திரட்ட முடியுமா என்ற கேள்வியும் எமது உரையாடலுக்குள் எழுந்தது. அவ்வாறு செய்துவரும் அயர்லாந்து சோசலிச கட்சி பற்றிய தகவல்களும் அங்கு வேகமாக மாறிவரும் நிலையும் சுட்டி வாதிக்கப்பட்டது. அயர்லாந்து சோசலிச கட்சி ட்ரெய்கன்களுக்கு எதிராக போராடும் புரட்சிகர கட்சியாகவும் , பொருளாதார மாற்றீட்டை திட்டவட்டமாக வைக்கும் கட்சியாகவும் , அதே சமயம் பெரும்பான்மை ஆதரவைத் திரட்டக்கூடிய கட்சியாகவும் இருக்கிறது. அத்தகைய கட்சி அயர்லாந்து ஆட்சியை இடதுசாரியம் நேக்கி திருப்புமானால் அதன் தாக்கம் சிறிசா வெற்றியின் தாக்கத்தை விட பலமானதாக இருக்கும் என்றும் உரையாடப்பட்டது.

உரையாடலில் எழுந்த பல கேள்விகள் தனித்து எடுக்கப்பட்டு உரையாடப்படவேண்டும், இத்தகைய உரையாடல் தொடர்ந்து நிகழவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

01.பாசிசம்,
02. பூகோள அரசியல் மாற்றங்கள்,
03 .உரிமைகளுக்கும் – ஒழுங்குகளுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்,
04.முதலாளித்துவ சனநாயகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி,
05. அரசியல் இஸ்லாம்,
06. இக்கால கட்டத்தில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்வதும் அடையாள அரசியலினதும் நிலை ,
07. மாற்று பொருளாதார கொள்கைகள் என்றால் என்ன,
08. தற்போதய நெருக்கடிக்கு மார்க்சிய விளக்கம் என்ன- முதலாளித்துவ விளக்கம் என்ன ,
09. தற்காலத்தில் தேசிய இனப்பிரச்சினை – மக்களும் அவர்தம் அமைப்புக்களும்

போன்ற பல்வேறு தலைப்புக்களில் உரையாடல் தொடர்ந்து நிகழ்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.அடுத்த உரையாடல் தற்கால கட்டத்தில் தேசிய இனப்பிரச்சினை என்பது பற்றி தொடரும் எனவும் முடிவெடுக்கப்பட்டது .

இவ்வுரையாடலில் கலந்துகொள்வதாயின் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். இந்த உரையாடல் சுற்று திறந்த அழைப்பின் வாயிலாக பகிரங்கமாக நடைபெறுவதல்ல .ஆகவே கலந்துகொள்ள விரும்பும் அரசியல், சமூக ஈடுபாட்டாளர்கள் கீழ்வரும் தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள் 07908050217 (சேனன்,Tamil solidarity )
000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment