Home » இதழ் 16 » *கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல்’ -கோகுலரூபன்

 

*கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல்’ -கோகுலரூபன்

 

k-012000ற்கு பின்னரான ஈழத்து கவிதை இலக்கியத்தின் முனைப்பான அம்சங்களை இனங்காட்டி நிற்பவை யசோதரவின் கவிதைகள். ‘நீத்தார் பாடல் ‘ அவரது முதல் கவிதைத்தொகுப்பு. அவருடைய கவிதைகளில் பல ஏற்கனவே அற்றம் பெண்கள் சஞ்சிகை, மூன்றாவது மனிதன், சத்தியக் கடதாசி, ஊடறு, போன்ற சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்களில் வெளி வந்துள்ளது.

 
காலம் மட்டுமே கடந்து போகிறது ஆனால் நடப்பவை வரலாற்றை ஞாபகம் ஊட்டிக் கொண்டே இருக்கிறது. வரலாற்றின் மீது மீள் பயணம் செய்வதும், நடந்து வந்த பாதைகளை மீள் நினைவு கொள்ளலும், இழைக்கப் பட்ட அநீதிகளை, மறுக்கப்பட்ட உரிமைகளை சுய விமர்சனத்தோடு ஏற்றுக் கொள்ளலும் புதிய திசை நோக்கிச் செல்லலும் நமது விடுதலைக்கு மிக அவசியமானவையாகும். பிழைகளை மீளவும் நியாயப்படுத்துவதும், சுய இருப்புக்காக வரலாற்றைத் திரித்துக் கூறலும் மக்கள் விடுதலையை கீழ் நோக்கியே இழுத்துச் செல்லும்.ஒடுக்கப்படுவோரது விடுதலைக்கான போராட்டம் என்பது குறுகலானது அல்ல அது பரந்து விரிந்த உலகத்து மக்களின் அனுபவத்தை வேண்டி நிற்பது. ஒடுக்கப்படும் மக்களது அனுபவங்கள் ஒத்த தன்மை உடையவையே அதே போல ஒடுக்குபவர்களது சித்தாந்தமும் ஒன்றே.

 

 

 

 

 

 

 
‘நான் ஒன்றைப் பேசும் போது
இன்னொன்றைப்
பற்றி பேசுவது போல இருக்கிறது
என்கிறாய்
மெய்தான்
இந்த நாளில் ஒன்றை விலக்கி இன்னொன்றைக்
காணுவது இயலாத காரியந் தான்
மன்னாரிலிருந்து வெளிக்கிட்ட தற்கொலைப்
போராளியின் உடல்
ஜெருசேலம் நகரில் வெடித்துச் சிதறுகிறது…’
என தொடரும் கவிஞர் சிவ சேகரத்தின் கவிதை போலவே அடக்கு முறையாளர்கள் உலக மக்களுக்கு ஒரே விதமான அனுபவத்தையே பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். உலகெல்லாம் நடந்து வருகின்ற அத்தனை அநீதிகளும் உரிமை மீறல்களும் ஈழத்துச் சிறுபான்மைத் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், மலையக தமிழர்களுக்கும், அடித்தட்டு சிங்கள மக்களுக்கும் எதிராக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதே போலவே எங்களது அனுபவங்கள் ஒடுக்கப்படும் எல்லா மக்களின் அனுபவங்களே.

 

 

இத்தகைய புரிதல்களில் இருந்தே கற்பகம் யசோதர அவர்களுடைய கவிதைகள் உயிர்த்தெழுகின்றன. இயக்கங்களின், கட்சிகளின், கோட்பாடுகளின் சார்பு நிலைக்கு அப்பால் இவரது கவிதைகள் அத்தனையும் மானிட நேசிப்பில் இருந்தே கருக் கொண்டு பிறக்கின்றன. ஒரு மனிதாபியாக மட்டும் நின்று கொண்டு அத்தனை அநியாயங்களையும் மிகத் துணிச்சலாகச் சாடுகிறார். தன்னைச் சுற்றியுள்ள உலகின் நடத்தையில், சிந்தனையில் மாற்றத்தைக் கோருவன இவரது கவிதைகள். மிகத் தீவிரமான எழுது முறைமை இவரது.

 
அழகிய வாழ்வொன்றின், உயர் இலட்சியத்துக்காக போராடவென முன் வந்த இயக்கங்களின், கோட்பாடுகளின், நம்பிக்கைகளின் , நீதியின், சிந்தனைகளின்…… இவைகள் எல்லாவற்றினதும் பிறழ்வில் இருந்தே இந்த கவிதைகள் பிறந்தெழுகின்றன. இவைகள் கட்டித்த அரசியல் கவிதைகள் அல்ல, மிக இளகிய மனிதத்தின் அத்தனை அவலங்களையும் உணர்த்துகின்ற கனதி மிக்க கவிதைகள். போரின் முகங்களையே யசோதரவின் அநேக கவிதைகள் பேசுகின்றது. யுத்தம் குலைத்துப் போட்ட மனிதர்களின் வாழ்வை ஒப்பாத வெஞ்சினம் இவரது கவிதைகள் எங்கணும் வெளிப்பட்டு நிற்கிறது. யுத்தத்தின் கொடூரத்தைத் தாங்கிய வலி இவரது கவிதைகள் எங்கனும் மௌன நிழலாக படர்ந்து கிடக்கிறது.

 

000000
1980 களில் இருந்து வடகிழக்கு மக்கள் மீது நிர்பந்திக்கப்பட்ட மரணத்துள்ளான வாழ்வு 2000 ற்கு பின்னர் அதீத நெருக்கடிகளை காணத் துவங்கியது. யுத்தமும்; சமாதானமும் ,பின் யுத்தமும் என மக்கள் அலைக்கழிக்கப்பட்டு கடைசியில் மிகப்பெரிய இனப்படுகொலையோடு மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இன்னமும் முடிவடையாது தொடரும் அன்றாட அவலங்கள் பற்றிய யசோதரயின் பல கவிதைகள் இக்காலப் பரப்பில் மக்கள் சுமந்த அவலங்களின் சாட்சிகளாகவும் உள்ளன.

 
யுத்தத்தின் நெருக்குதல்களில் இருந்து தப்பி ஓடும் மனிதர்கள்- நாம் மறந்து கடந்த போராளிகளின், நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின், தடம் அழிந்து போன துயரங்களின், முகவரி யற்று தொலைந்து போன மனிதர்களின் வரலாற்றுச் சாட்சியங்களாக இவரது கவிதைகள் முகம் கொள்கின்றன.
‘அவன் என்னுடையவன்’ என்ற கவிதை மார்ச் 2007 சாவற்காட்டுப் பகுதியில் சம்பவித்த ஒரு கரும்புலிப் போராளியின் சாவு குறித்த பல்வேறுபட்ட கதையாடல்களை மற்றும் அப்போராளியின் பெற்றோர் மட்டுமே சுமக்கும் அம் மரணத்தின் பின்னுள்ள வலியைப் பேசுகிறது.
‘—————————
நெஞ்சின் கதகதப்புள்
பாலருந்திச் சுருண்டிருந்த சிறு பூனை
எனது சிருஸ்டி.
சோட்டியை பிடித்தபடி திரிந்த பிள்ளையைக்
கொண்டு போனீர்கள்
குண்டு தாரியென வீரரென வந்து சொன்னீர்கள்
ஓ.. ஓர் பிணத்திடம் சொன்னீர்கள்!’
சுயாதீன ஊடகவியலாளர் எஸ்.போஸ் அவர்களின் படுகொலை பற்றி ‘அநாமதேயக் குறிப்பு’ ‘பிறகு’ ஆகிய கவிதைகள் பேசுகின்றது. அந்தக் கொலை வவுனியாவில் உள்ள வீட்டில் வைத்து அவரது எட்டு வயது மகன் முன்னால் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. அக் கொலையின் பின்னரான மகனின் மன அதிர்வுகளாக, அங்கலாய்ப்பாக இக்கவிதைகள் பதிவு பெற்றிருகின்றன.
பிறகு
…………………………..
‘வீட்டுள்
அடைபட்டுக் கிடந்த மான் குட்டிகளென
தப்பித்து ஓட
இந்தச் சுவர்கள் இடிந்து விழாதோ என்று
இந்தக் கதவை உடைத்து
அவரைக் காப்பற்ற
யாரும் ஓடி வருவாரோ என்று,
அப்பா சொன்ன கதைகளில் வராத
பேரச்சத்துள்
சுழன்றாடினேன்
…………………………….
ஓராயிரம் பாடல்கள் அழிந்த இரவிலே
நீங்கள் நம்பினீர்கள்
அந்த ஒரு இரவில் மரணம் நிகழ்ந்தது
ஒரே ஒரு முறை என்பதாய்!
ஆனால் நீங்கள்
மீண்டும் மீண்டும்
என் கண் முன்
எனது தகப்பனைக் கொன்றீர்கள்’

kk
சிங்கள பேரினவாத அரசுகளால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை, விடுதலைக்காகவென போராட வந்த இயக்கங்களுக்குக்கிடையிலான சகோதர படுகொலைகளை,கருத்துக்கள் துப்பாக்கிகளால் எதிர்கொள்ளப்பட்ட பிறழ் நிலையை, மகோன்னத கனவில் புனித மற்றவை எனக் கருதப்பட்டவை கொலைகளால் மட்டுமே துடைத்தழிக்க முடியும் என நம்பிய முரண் நிலையை,  அதற்கான குருட்டு நியாயங்கள் இவைகள் எல்லாவற்றினதும் நடுவில் மதிப்பிழந்து போன மனிதத்துவத்தை இவை எல்லாம் பற்றி ‘தீக்கோழி’, ‘நீத்தார் பாடல்’, ‘எங்களின் எசமானர்கள்’, ‘கலாசார இயக்கத்துக்கு பாராட்டு’ ஆகிய கவிதைகள் பேசுகின்றன.

 

சமத்துவக் கனவுடன் புரட்சிக்கான போராட்டத்தில் ஆண்களும் பெண்களுமாய் அணி சேர்ந்தவர்கள் பின்னொரு நாளில் துரோகிகளாக்கப்பட்டு வரலாற்று நெடிய வெளிகளில் பெயரற்றுப் போன துயரை, படுகொலையின் பின் புதைக்கபட்ட தியாகங்களை, புத்தகங்களில் பதியப்படாத தாயின் தகப்பனின் இல்லாது போன வரலாற்றை அடுத்த தலை முறைக்குச் சொல்கிறது நீத்தார் பாடல் எனும் கவிதை.
‘…………………………..
வரலாற்றின் நெடிய வெளிகளில்
ஒரு பெயரற்று நான் கிடக்கிறேன்
கவிஞன்கள் தலைவன்கள்
யாருமாய் இல்லாமல்
அணிவகுப்பில் சீருடையின் கீழ் இணைகின்ற
‘வீரனின் ‘; தனித்துவமின்மையாய்
வெற்றுக் கடதாசிகளது ஆயுளாய்
காக்கி உடைகளுக்குள்
போராளிகளுள் போராளியாய்… நகருகின்ற முகங்களில் ஒரு முகம்
ஓ.. வரலாற்று மாணவியே நீ என்னை அறிவாயா?
ஓ.. எனது இனிய மகள்களே நீங்கள் என்னை அறிவீர்களா?
………………………………….’
யசோதரவின் கவிதை வெளி மிக அகன்றது. இனமுரண்பாட்டின் தொடர் விளைவுகளாக இலங்கையில் நடந்த படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கைதுகள், பாலியல் பலாத்காரங்கள் என தான் கண்டு உணர்ந்த அத்தனை நெருக்குதல்களின் வலிகளையும் அகில உலகு தழுவிய மனித பாடுகளிலும் அவர்களுக்கு இழைக்கப் படுகின்ற கொடுமைகளின் கோர முகத்திலும் இவரது கவிதைகள் கண்டு சொல்கின்றன. ஆப்கானிஸ்தான் சிறுவன் ஓமர் காடர் பற்றியும், நாசிகளின் யூத வதை முகாம் இருந்த ஜெர்மனியின் டஹ்கவ் பற்றியும், இந்திய அரச படைகளால் கொல்லப்பட்டநக்சல் பாரி இயக்கப் போராளியின் மரணத்தின் துயர் குறித்தும் இவரது கவிதைகள் மிக அனுக்கமான உணர்வலைகளை, புரிதல்களை ஏற்படுத்துகிறது.

 

yasootharaa
அமெரிக்காவின் குவான்ரனமொ சிறையில் 10 வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப் பட்டிருந்த 16 வயதுச் சிறுவன் ஓமர் கடார் குறித்து ‘குற்றங்களை காணாதிருத்தல் ‘, ‘ஓமர் கடார் கூறியவை’ ஆகிய கவிதைகள் பேசுகின்றது. சிறுவர்களைப் போராளிகளாகச் சேர்த்தல் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கும், தங்களை சனநாயகத்தின் பாது காவலர்களாகப் பறை சாற்றும் அமெரிக்காவினதும், மேற்குலகினதும் போலி முகத்தை அம்பலப் படுத்துகின்றன இக்கவிதைகள். ஓமர் காடர் சித்திரவதைக் கூடத்தில் அனுபவித்த கொடுமைகள், இலங்கையின் ரகசிய தடுப்பு முகாங்களுள்ளும், சித்திர வதைக் கூடங்களிலும் கொடுமைப் படுத்தபட்ட ,கொல்லப்பட்ட இன்றும் தடுப்புகளில் வதைக்கப் படுகின்ற எமது பிள்ளைகளை கண் முன் கொண்டு வருகிறது.
ஓமர் காடர் கூறியவை:
‘……………………………………..
ஒவ்வொருவராக
நேரம் எடுத்து
எனது சதையைக் குதறினீர்கள்
இனியும் என்ன?
இச் சிறைக் கூடத்தைப் நான் பழகி விடுகிறேனே…
……………………………………….
வரண்ட முகத்தினுள் கிண்டப்பட்ட குழிகளுள்
விழுந்து புதைந்த புன்னகையுடன்
அதிகாரங்களால் ஆக்கிரமிக்கப்படும்
சனங்களின் நிலங்களாய் – எனை
நெருக்குண்ட சுவர்களுக்குள்
எனது பதின்மம் தூக்குப் போட்டுக் கொண்டது
……………………………’
ஒன்றை ஒன்று ஞாபகப்படுத்தும் அவலங்கள் உலகின் எங்கெங்கோ முடிவற்றுத் தொடர்ந்தாலும்;;;;;; இவற்றின் வலியை உணர்தலும்; ஏதும் பேசுதலும் இன்றி பஞ்சடைந்த காதினராய் கடந்து செல்லலும் இயல்பாய் மாறி விட்ட பிறகு ‘சனங்களின் மௌனத்தை சம்மதமாய் பெற்று தலைவர்களால் மனிதத் தசைகளை அரிந்து கொல்லலை’ நடத்திடும் அவலம் டஹ்கவ் நகரிலும்; ஈழத்திலும்; பாலஸ்தீனத்திலும் மேலும் பல தேசங்களிலும் தொடரவே செய்கிறது. இத்தகு அவலங்களைப் பேசுகின்றது. டஹ்கவை அறிதல் எனும் கவிதை.
‘………………………..
யுத்தம் நிறுத்தப் பட்டிருந்த ஒரு கோடையில்
எறிக்கின்ற வெய்யிலில் மட்டு நகரத்தின் தெருவினில்
அவனது தோள்களைப் பற்ற
ஸ்கூட்டர் நகருகையில்
இங்கே எங்கேனும்
தன் புதை குழி கிண்டி சகோதரன் அழுவானா
இங்கே எங்கேனும்
‘என்னவர்’ முகாம்களது கதறல் மறைக்கப்படுகிறதா
என் கண் எதிர்க்க
எவரோ சுடப்பட்டு விழுந்து
இரத்தம் பார்த்தல் மட்டுமே
வலியை என்னால் உணர்தல் முடியுமா?

எதையும் கேட்கப் பயந்தவளாய்
காதுகளுக்குப் பஞ்சடைந்து விட்டு,
பிள்ளைகளைக் கொல்லும் கருணையை
ஏற்றுக் கொண்டு செல்கையில்
……………………………
ஸ்கூட்டர் டஹ்கவ் நகரில் திசையற்று மோதிற்று
இப்படியாக
நான் எதையும் பேசாமல் இறந்தேன்
சுவடின்றி
சலனமின்றி
வரலாற்றின்
எண்ணற்ற மனிதர்கள் போலவே.

 

நக்சல் பாரி இயக்கப் போராளியின் தாய் சுமந்தலையும் துயரத்தைப் பேசுகின்றது தலைப்பற்ற ஓர் கவிதை. இலக்கம் 1084 இன் அம்மா என்கின்ற மஹாஸ்வேதா தேவியின் நாவலின் அதிர்வால் எழுதப் பட்ட இக்கவிதை ,ஈழத்திலும் உலகெங்கிலும் அடக்குமுறையாளர்களிடம் பிள்ளைகளைப் பறிகொடுத்த எல்லா அம்மாக்களினதும் துயராய் விரிகின்றது.
‘…………………….
பிரசவ நாளில்
எப்படிப் புரண்டளோ, அதுக்குக்
கிட்டவான தவிப்பு
அவனது நிலை கொள்ளா மனதில்.
…………….
பறிகொடுத்தவர்கள் தொடர்பில்
உம் வீடுகளில் கவிகிற மௌனத்தை
பிடிதுலுக்குகிறது அம்மாவின் விசும்பல்
தான் வாழும் ஒவ்வொரு புதிய நாளிடமும்
வாழாத தன் மகவின் இளமையை
சொல்லிச் சொல்லி அழுகிறாள்
நிலம் கிடந்து அதிர.
………………….’
நமது மூன்று தசாப்த கால வரலாற்றைப் பேசுதல் என்பது ஏறக்குறைய மரணங்களை பற்றிப் பேசுதல் என்றே ஆகிப் போயுள்ளது. ஜீரணிக்க முடியாத மரணங்கள் ,மீண்டும் மீண்டும் முடிவற்று தொடர்ந்தெம்மை உலுக்கியபடிதான் இருக்கிறது. ரஜனி திரணகமவின் படுகொலை ஏற்படுத்திய அதிர்வுகளை அநேகமான படைப்புக்கள் பதிவு செய்திருகின்றன .குறிப்பாக பெண் கவிஞர்கள் இதனை அழுத்தமாக பதிவு செய்திருகிறார்கள்.

 
‘தோழி
சின்னச் சிட்டைப் போல
பறந்து திரிந்தாய்
நாம் பாடித் திரிந்த வீதியிலே
தன்னந் தனியளாய்
அநாதையைப் போல
மரணித் தாயா?
உன்னிடம் என்ன குற்றம் கண்டனர்?
மனதில் இரும்பும்
மூளையில் துவக்கும்
கொண்ட மனிதர்கள் – இவர்கள்
வேறு என்னதான் நடக்க முடியும்.’
எனத் தொடருகிறது ஒளவையின் கவிதை. இதே போலவே ‘முற்றுப் பெறாத கொலைக் குறிப்பு’ எனும் யசோதரவின் கவிதை ரஜனி திரணகமவின் மரணம் குறித்துப் பேசுகிறது.
‘……………………………………….
தெருவெங்கும் அந்த ஓலங்கள் தீராத இன்றும்
– அவளைப் ‘போட்டது’ நீங்களில்லை என்றே
ஒவ்வொருவரும் மறுத்துத் தலைகள் ஆட்டலாம்
மௌனமாய் இருக்கும் எங்களைப் பொறுப்பாக்கும்
பழியானால் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் கிடக்கிறது
நீ…ண்டு
இந்தத் துவக்குளைப் போல,
அழிக்கின்ற விசையை
ஒரு போதும் மறவாமல்.
……………………………………’
போராடவென சென்றவர்கள், பயங்கரவாதிகள் என ராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டவர்கள், கடத்தப் பட்டவர்கள், காணாமல் போகச் செய்யபட்டவர்கள், அநாமதேயமாகக் கொல்லப் பட்டவர்கள், விடுதலை வீரர்களாக வீழ்ந்தவர்கள் என ‘மீசை முளைத்திரா பிஞ்சு முகத்தோரை’ பெற்றவர்களது அவல ஓலம் முடிவிலியாகவே தொடர்கிறது, பிள்ளைகள் தேவை, பிள்ளைகள் அற்ற நிலம், இரணைமடு, மரங்கள், என் புத்தனே போன்ற கவிதைகள் யுத்தம் கொன்றொழித்துப்போட்ட இளந் சந்ததியை அவர்களின் இழப்புகளை தாங்கவொண்ணாது ‘பிள்ளையிழந்த விசரியாய்’ அலையும் தாயை, மண்டியிட்டழும் தந்தையரை என மிச்சமாய் அவர்கள் அவலத்தை மட்டுமே சுமக்க நிர்பந்திக்கபட்ட துயர் நிலையை பாடுகின்றன.

 

 

k1

 

 

 

 

 

 

 

பிள்ளைகள் தேவை
‘கொடியில் ஈரம் உலராச் சேர்ட்டுகள்
காற்றில் உதறி உதறி விசும்பின
சலுகையுடன் அவன் நின்ற தூணும்
சாய்ந்திருந்த சமையற் கட்டும் அவனைத் தேடின
ஊளையுடன் அவர்களை நாய் தொடர்ந்தோடிய முற்றத்தில்
தம் உயிர்த் தோழனின் பிரிவை
மாமரங்கள் குளறித் தீர்த்தன
நீ அவனது நினைவுடன் இறந்தாய்.’
யுத்தத்தின் நெருக்குதல்களும் இழப்பின் துயரும் அறியா போர் நிலத்துக்கு அப்பால் இருப்பவர்கள் கற்பிக்கும் குருட்டு நியாயங்களையும் வரட்டு வாதங்களையும், பிறன் பிள்ளையின் இறப்பில் தமது இருப்புகளை உறுதி செய்யும் வக்கிர புத்தியுள்ள மனிதர்களையும் பற்றி பேசுகிறது பிள்ளைகளற்ற நிலம் எனும் தலைப்பிலுள்ள கவிதையின் சில வரிகள்.

 
‘- தம் காதுக்குள் பஞ்சடைந்து கொண்ட
அவர்களது குரலோ
கடலின் இரைச்சலை ஒத்து
போர் நிலத்துக்கு அப்பாலிருந்து கூறும்,
எவ்வுணர்ச்சியும் கசியா
மாறவே மாறாத)
கற்கள் கோர்த்த சுலோகங்களாய்
‘யுத்தத்தில் இதெல்லாம் சகஜம்’
‘எல்லோருக்கும் நடக்கிறது தானே’
‘எல்லோரையும் தானே பிடிக்கினம்’
‘பிள்ளைகளைப் பிடிக்காட்டி
எப்படிப் போர் நடக்கிறது?’
‘எங்கட வெற்றிக்காண்டி ‘யாரோ’
சாகத்தானே வேணும்?;’
வலிகளுக்குத்
தொலைவில் இருக்கும்
அவர்களுக்காக, அவர்களுக்காக மாத்திரம்
காலம் பிள்ளைகளற்ற ஒரு நிலத்தைக்
– கொண்டு வரலாம்.’

 
மனிதாபிமானத்தின் பெயரால், அடக்குமுறையாளர்களால் கட்டவிழ்த்து விடப்படும் யுத்தம் மிகக் குரூரமான ஒடுக்குமுறை வடிவங்களையே கையில் எடுக்கிறது. ஆண் மைய அதிகார பீடங்களின் படைகளது பெண்கள் மீதான வன்முறை வெறியாட்டம், யுத்தம் நடைபெறும் எல்லா நிலங்களிலும் திட்டமிட்ட வகையில் நடந்தேறி வருகிறது காஸ்மீரில், ஆப்கானிஸ்தானில், ஈழத்தில் என பாரமுகமாகிப் போன பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள், படு கொலைகள், இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக மறுக்கப்படும் சட்டம் இவைகள் எல்லாம் பற்றி இறுதி வார்த்தைகள், இதைக் ‘கற்பளிக்கபட்டவள்‘; எழுதியிருக்கலாம், பெண்களானால் ஆகிய கவிதைகள் பேசுகின்றன.
இறுதி வார்த்தைகள் எனும் கவிதை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்ணின் நிர்க்கதியை, அவள் மீதான ஆண்களின் வெறித்தனமான அத்து மீறலை, சாவு அருகிருந்தும் வாழ்தலுக்கான அவளது முனைப்பை, சாவின் பின்னர் பாழ் கிணறொன்றில் இருந்து கண்டெடுக்க படுவதாக தன் உடல் ஆகக் கூடாது என்கிற அங்கலாய்ப்பை பேசுகின்றது. உயிர் வாழ்தலின் முழு அர்த்தத்தையும் இக்கவிதை உரைக்கிறது.

 
‘என்னை விட்டு வையுங்கள்
என்னிடம் உயிரை விட்டு வையுங்கள்
நான் வாழ வேண்டும்
எவனு(ளு)டனோ
இந்த வாழ்வை
‘இருத்தலின்’ பெரும் வலிமையுடன்
தயவு செய்து
…………………
ஒரு அருமையான அறுவடைக்காலம்
நான் வாழ்ந்த தெருக்களிடம்
என்னிருப்பு மீண்டிட
தயவு கூர்ந்து கூர்ந்து கருணை காட்டுங்கள்’

 
‘பெண்களானால்’ என்கிற கவிதை இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஜேவிபி இன் இளைஞர் எழுச்சிகள் இலங்கை அரசால் மிகக் காட்டுமிராண்டிதனமாக ஒடுக்கப்பட்ட வேளை ,சிங்களப் பெண்கள் பாலியல் வன்முறைக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளான உண்மைக் கதைகளைப் பேசுகின்றது. இவர்கள் நீதி மன்றத்தினால் மேலும் அவமானப் படுத்தபடுவதாக இக்கவிதை உரைக்கிறது.

 
‘எனக்கு நடந்ததை வரி வரியாய்
உன்னிடம்
நிரூபித்தாக வேண்டுமென்றால்
நீதி வழங்கும் உன் மேடையில்
தொடையை அகட்டிக் கிடக்க,
என் காயங்களைப் பூந்து பாத்து
பதிலை அங்கே தேடி
நீ ‘விரும்பிற’ உண்மையை வந்தடை’

 
அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதியபத்திய நாடுகளதும் அவற்றின் கைக்கூலியாக இருக்கும் ஐநா மன்றத்தினதும் ஆதிக்க அரசியலின் போலி மனிதாபிமான முழக்கங்களும் சந்தர்ப்ப வாத சனநாயக கோஷமிடல்களும் எவ்வாறு அப்பாவி சனங்களை ஏமாற்றுகின்றது என்பதையும் அமெரிக்கா மற்றும் ஏனைய அடக்குமுறை அரசுகளின் மக்கள் அழிப்பை அங்கீகரித்து, அறிக்கைகளில் எல்லாவற்றையும் சமன்படுத்தி மக்கள் மீதான ஒடுக்குதலை தொடரும் ஐ.நா வின் பயங்கரவாதங்களைப் பற்றியும் ஐக்கிய அமெரிக்க ராணுவம்10 ஐ.நா அறிக்கை, புதைகுழி ஆகிய கவிதைகள் பேசுகின்றது.
‘ஏ… அமெரிக்க இராணுவமே, நீ படையெடுத்த நாட்டின்
பெண்களை என்ன செய்வாய் என்றெமக்கு
சீ.என்.என் சொல்லத் தேவையில்லை’
( இந்திய ராணுவம் சொல்லித் தந்தது )
…………………………………..
சகலத்தையும் கணக்கெடுக்கும் ஐ.நா கண்டிக்க
செய்ய வேண்டியதெல்லாம்:
அழிப்பு… அழிப்பு
அறிக்கை அளிப்பு அளிப்பு’

 
‘துப்பாக்கிக் காதலனுக்கு காதலி’ மற்றும் ‘தோழர் அசிங்கம் 02’ ஆகிய கவிதைகள் யுத்தமும் அதன் அழிவுகளும் குறித்ததான பிற்போக்குத்தனமான ஆண்மைய சிந்தனையை, எழுத்துகளை மிகக் காட்டமாக கண்டிக்கின்றன, மரணத்தின் வாசனை அறியா அவர்களின் கற்பனைகளையும் சுய இருத்தலுக்கும் புகழ் ஏந்தலுக்குமாக சங்க காலத்து காவிய மயக்கத்துடன் கவிதைகள் எழுதிக் குவிக்கும் கவிப் பேரரசுகளையும், லாபம் தேடும் எழுத்து வியாபாரிகளையும் விமர்சனம் செய்கின்றன. பலராலும் அறியபட்ட வைரமுத்துவின் ‘துப்பாக்கி எப்போது பூப்பூப்பது’ எனும் கவிதை சித்திரிக்க முயல்கின்ற ஈழத்துப் பெண்,அவளது காதல் எத்தகு போலிப் புனைவு என்பதை யசோதரவின் துப்பாக்கிக் காதலனுக்கு காதலி எனும் கவிதை போர் விழுங்கிய பூமி ஒன்றின் வாழ்வும்- காதலும்- பெண்ணும்- ஆணும் பற்றிய யதார்த்தமான புரிதலை முன் வைக்கிறது.

 
‘நண்பனே,
வீரத்தின் தேவை கூறு மைய்யங்கள்
விடுதலையின் நிறங்கள், மாறி விட்டன.
எனது நண்பனே
உயிருடன் திரும்பி வா.
எந்த இராணுவம் ‘கற்பழித்தாலும்’
நான் உன்னுடன் ‘இருந்து’, ‘வாழ்ந்து’
செத்துப் போகவே விரும்புவேன்.
அவன்களால் தொடப்பட முடியா
என்தான்மா- நான் வதையுறுகையில் அழிபடும்
கற்பைப் போல் இழிந்ததுமாகாது. ..’
உம் கதிரைகளிற் சாய்ந்து ‘கவிதை’ எழுதும்
நாய்களே! போரிடப் போங்கள்!

 

தோழர் அசிங்கம் 02
‘அவலத்தில் லாபம் தேடும் ஒரு கவிஞன்
ஆதிக்க வடிவத்தில்
இன்னுமொரு ஆண் வியாபாரன் மட்டுமே.
உம்மைக் கண்டால்
மீண்டும் எமது நரம்புகள் அறும்
உமது கவிதைகள் அதில் மிதந்து சென்று
‘மீண்டும் கடலலை’ அடையட்டும்
அப்போதாவது எம்மை நெருங்காதிருக்கட்டும்
கபடங்கள் நிரம்பி வழியும்
உம் மனிதமும் மென்னிதயமும் மயிரும்’

 
இன்னுமொரு கொலை நாள், ஓர் இனிய முத்தம் ஆகிய கவிதைகள் கொலைகள் மலிந்த பூமியில் மரண அச்சுறுத்தல்களுக்கு நடுவில் வாழ்விழந்து போகும் இளம் சந்ததி பற்றிப் பேசுகிறது;;. தொலைவிலிருந்து எனும் கவிதை பிரிவுத் துயர் ஆற்றாது தவிக்கும் குடும்பத் தலைவிகளின் குரலாய் ஒலிக்கிறது. என்றென்றைக்குமாக என்ற கவிதை ‘நதலி கார்டோன் எனும் பிரஞ்சு பாடகியின் சேகுவேரா பற்றிய பாடலொன்றின் அருட்டுணர்வில் எழுதபட்டதாக யசோதர சொல்கிறார்;. ஆர் பெற்ற பிள்ளையோ என்ற கவிதை திலீபனின் உயிர்த் தியாகம் குறித்த கரிசனையை வெளிப்படுத்துகிறது.யுத்த நிலத்தில் இருந்து தப்புவதற்காய் அபாயமான கடல்வழிப் பயணத்தை மேற் கொள்ளும் மக்களின் அவலம் குறித்து பேசுகிறது கள்ளத் தோணிகள் என்னும் கவிதை.

 
இந்த தொகுப்பின் இறுதியாக உள்ள இருத்தலை நிறுத்தி விட்டார்கள் எனும் கவிதை 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான புலத்து மற்றும் புலம்பெயர் காட்சிகளை விரிக்கிறது. காணாமல் போனவர்களைத் தேடியலையும் தாய்மார்கள் – தமிழ் தலைவர்களின் தேர்தல் முன்னகர்வுகள் – கதியற்று அலையும் மக்கள்- போராட்டத்தின் பேரால் மக்களை ஏமாற்றும் புலம் பெயர் பிழைப்பு வாதிகள் என யுத்தத்தின் பின்னரான பிறழ்வுகள் குறித்துப் பேசுகின்றது.

 

00000
யசோதரவின் கவிதைகள் மிக நுணுக்கமான கலையுணர்வை வெளிப்படுத்துவன. மிகச் சாதரணமான அசைவுகள் மிக அழுத்தமான உணர்த்துதலைச் செய்கிறது. தேக்கமில்லாத, அசைவியக்கம் உள்ள உயிர்ப்புள்ள மொழி இவர் கவிதைகளின் உட்பொருளை மேலும் ஒரு தளத்துக்கு கொண்டு செல்கின்றன.
தொலைவிலிருந்து
‘ஐபிள்க் கோபுர உச்சிக்கு சற்றே கீழவாய்
பராசூட்டிலிருந்து தரை நோக்கி இறங்கும்
அம் மனிதனென
இத் துயர் நீக்க வருமாறு
அனா அகமத்தோவாய்
பாலை வெளிகளில் நின்று கத்துகிறேன்’;
பிள்ளைகள் தேவை
‘கொடியில் ஈரம் உலராச் சேர்ட்டுகள்
காற்றில் உதறி உதறி விசும்பின…’
போன்ற பல சொற்றொடர்களை இவர் கவிதைகளில் இருந்து எடுத்துக் காட்ட முடியும்.

0000000000
முடிவுரையாக சில குறிப்புகள்:
ஈழத்து கவிதை இலக்கியச் செல் நெறியின் ஒரு படி வளர்ச்சியினை யசோதரவின் கவிதைகள் காட்டுகின்றன. பெண்ணுலகு சார்ந்து மட்டும் தன்னைக் குறுக்காது பொதுத்தளத்தில் நின்று கூர்மையான பார்வையை தன்னைச் சுற்றிய உலகின் மீது செலுத்துகிறார். மிக அகலித்த அரசியல் பட்டறிவு இவருடைய கவிதைகளின் பலமாகும். எழுத்தின் சமூகப் பயன் குறித்த இவரது பிரக்ஞை முக்கியமானது நேரடித்தன்மை வாய்ந்த கவிதை எழுத்து முறைமை இவரது.சொற்கள் சோர்ந்து போய் புறம் ஒதுங்கி நிற்காது வீறார்ந்த நிமிர்வு கொள்கின்றன. புதிய மீள் துவக்கமாகவும் இவரது கவிதைகளை கருத முடியும். ஓடி ஒளிந்து முகம் புதைக்கா கவிதைகள் இவை.

 

இவரது கவிதை உலகு அறிவார்ந்த தளத்தில இயங்குகிறது. பிரச்சனைகளின் வெளி தோற்றத்தை மட்டுமல்லாது அதன் மையத்தை, தோற்று வாயை தேடுகின்றன இவரது கவிதைகள். வேகமான, கறாரான, துணிச்சலான சொல் முறைமை நம்பிக்கையூட்டுகிறது. பர பர வெனப் பற்றிக் கொள்ளும் தீயில் கூட ஒரு லயம் இருப்பது போல் இக் கவிதைகள் தருகின்ற கவித்துவ அனுபவமும் அலாதியானது. அழகியலைப் புறக்கணித்த தட்டையான அரசியல் கவிதைகளாக இவை நின்று விடவில்லை, அவை ஏற்படுத்துகின்ற அதிர்வும்,  நுண் அனுபவமும் அர்த்தமுள்ள இணைப்பை அதன் பேசு பொருளோடு ஏற்படுத்துகிறது.

0000000

(1 மார்ச் 2015 இல் , தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தினால் – லண்டனில் நடைபெற்ற , ஆறு ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்புகள் மதிப்புரை நிகழ்வில்   கலந்து , தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட இக்கட்டுரையாளர்,  ஆறு ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்புகள் தொடர்பாக தனது  விரிவான பார்வையை பதியும் வகையில்  அவற்றினை எழுதி தருவதாக சொன்னார்.முதலில்  கற்பகம் யசோதரவின் . ‘நீத்தார் பாடல்  தொகுதி பற்றிய  தனது   கட்டுரையை எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் ஏனைய ஐந்து தொகுதிகள் பற்றிய மதிப்புரை பதியப்படும்  )ஆசிரியர்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment