Home » இதழ் 17 » *ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி ! யார் பொறுப்பு ?- மீராபாரதி

 

*ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி ! யார் பொறுப்பு ?- மீராபாரதி

 

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு யார் காரணம்? புலி எதிர்ப்பாளர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணம் என்பார்கள். புலி ஆதரவாளர்கள் அரச ஆதரவு முன்னால் இயக்கங்களும் அதன் தலைவர்களும் காரணம் என்பார்கள். சிலர் இந்தியா என்பார்கள். இன்னும் சிலர் உலக நாடுகள் என்பார்கள். வேறு சிலர் சிறிலங்கா அரசும் அதன் தந்திரோபாயமும் என்பார்கள். இவை எல்லாம் ஈழ விடுதலைப் போராட்டம் தோற்பதற்கு ஏதோ ஒரு வகையில் பங்களித்திருக்கின்றன. ஆகவே இவ்வாறு மற்றவர்களை கை நீட்டிக் குற்றம்சாட்டுவது தவிர்க்க முடியாதது தான். அதேவேளை நமது போராட்டத்தின் தோல்வியில் நமது பங்கு என்ன? பொறுப்பு என்ன? எனவும் நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சிந்திக்காது விட்டால் நாம் நமது விடுதலைக்கான பாதையில் பயணிப்பது சாத்தியமே இல்லை. விடுதலை ,சுதந்திரம் என்பது கனவாகவே எப்பொழுதும் இருந்துவிடலாம். ஆகவே முதலில் நமது பார்வையை உள்நோக்கித் திருப்புவோம். எல்லாவிதமான மாற்றங்களையும் எங்களிலிருந்து ஆரம்பிப்போம்.

 

meera-2

 

இடதுசாரிகள்

ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் இன்றைய நிலைமைக்கு வருவதற்கு முதல் பொறுப்பு எடுக்க வேண்டியவர்கள் இடதுசாரிகள். நாம் வேறு எவரையும் முதன்மையானவர்களாக குற்றம் சாட்ட முடியாது. ஆனால் இவர்களைத் தாராளமாக குற்றம் சாட்டலாம். ஏனெனில் பிற அரசியல் கட்சிகள், சிந்தனையாளர்களை விட இவர்கள் சமூகத்தின் அடக்குமுறைகள், சுரண்டல்கள், ஒடுக்குமுறைகள், அரசு மற்றும் அரச இயந்திரங்களின் செயன்முறை தொடர்பாக ஆழமாகவும் விரிவாகவும் தெளிவாகவும் அறிந்தவர்கள். சமூகத்தின் இயங்கியலைப் புரிந்தவர்கள். இதனால்தான் அன்று தமிழர்கள் மீது இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கான அத்திவாரம் இட்டபோது கடுமையாக எதிர்த்தவர்கள் இவர்கள். ஒரு மொழி இரு நாடு என தீர்க்கதரிசனமாகக் கூறியவர்கள். ஆனால் இவர்களது சிந்தனை வர்க்க முரண்பாடு என்ற அடிப்படைக்குள் மட்டும் சிறைபட்டிருந்தது துர்ப்பாக்கியமானது. ஆகவேதான் இவர்களது எதிர்ப்பு படிப்படியாக குறைந்து இறுதியாக இவர்களே இன அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவாளர்கள் ஆனது மட்டுமல்ல பங்காளிகளுமானார்கள். கருத்து முரண்பாடுகளை உரையாடித் தீர்க்க முடியாது சக தமிழ் தோழர்களை சிங்களத் தோழர்கள் இனவாத அடிப்படையில் அடையாளப்படுத்துமளவிற்கு இடதுசாரிகளிடமும் இனவாதம் முளைவிட்டது தூர்ப்பாக்கியமானது. அல்லது இதுதான் உண்மையான யதார்த்தமாக இருந்திருக்க வேண்டும். இச் சந்தர்ப்பங்கள் அதை வெளிக் கொண்டுவந்திருக்கின்றன.
ந.சண்முகதாசன் போன்ற இடதுசாரிகள் கருத்தியடிலப்படையில் முதலில் ஈழ விடுதலைப் போராட்டத்தை இனவாதம் என எதிர்த்தனர். பின்பு ஒதுங்கியிருந்து இறுதியாக ஈழப் போராட்டத்தின் நியாயத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இது காலம் கடந்த iiiஞானம். ஏனெனில் ஏற்கனவே போராட்டம் தவறான கைகளில் அகப்பட்டுவிட்டது. இன்று ஈழ விடுலையை ஆதரிக்கின்ற தமிழ், சிங்கள இடதுசாரிகள் தவிர்க்க முடியாது தமிழர்களுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றார்கள். இதற்கு காரணம் சிறிலங்கா அரசை எதிர்ப்பதற்கான ஒரு சக்தியாக மட்டுமே தமிழர்களை இனங் காண்பதே காரணமாகும். மாறாக வர்க்க அடக்குமுறைபோல, சிங்கள பௌத்த பேரினவாதமானது ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறையானது தனித்துவமான ஒடுக்குமுறையை கொண்டது என்பதை ஏற்றுக் கொள்கின்றார்களா என்றால் அது சந்தேகமே. ஏனெனில் இவர்களது சிந்தனை இப்பொழுதும் கூட வர்க்க அடிப்படையிலான பார்வையிலிருந்து வெளியே வரவில்லை. மாறாக இதனுடாக மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இன்னும் பார்க்கின்றார்கள். இதனால்தான் ஒடுக்கப்படுகின்ற ஈழ மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை இன்றுவரை இவர்களால் வழங்க முடியாதிருக்கின்றது. இந்த அடிப்படைகளில் இன்றைய நிலைக்கு இவர்களே முதல் பொறுப்பு எடுக்க வேண்டியவர்கள். இதை இவர்கள் புரிந்து கொள்வார்களா?
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற இடதுசாரிகள் இருக்கின்றார்கள். இவர்கள் தமிழ் சிங்கள சமூகங்களில் தாக்கம் செலுத்துகின்ற சக்தியாக இல்லை என்பது தூர்ப்பாக்கியமானது.

 

ஈழத் தமிழ் கட்சிகள்

 

தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை அது தமிழ் காங்கிரசிலிருந்து தமிழரசு கட்சி ஊடாக தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை இவர்களது சிந்தனையின் அடித்தளம் ஒன்றுதான். இவர்களிடம் காணப்படுகின்ற வேறுபாடுகள் மேல் மட்டத்தில் மட்டுமே இருக்கின்றன. இவர்கள் ஒரு புறம் வழக்கறிஞர்கள். தாம் வாதாடி உரிமைகளைப் பெறலாம் என நம்புகின்றவர்கள். ஆனால் அதற்கும் உண்மையாக இருப்பவர்கள் அல்ல. மறுபுறம் இவர்களுக்கு அரசியல் என்பது பகுதி நேரவேலை. ஆகவே இவர்களிடம் ஈழத் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கான நீண்ட கால வேலைத் திட்டங்கள் எதுவுமில்லை. மாறாக அந்ததந்த நேரத்திற்கான தன்னியல்பான செயற்பாடுகள் மட்டுமே உள்ளன. இவர்களது அரசியல் கோசங்கள் வெறுமனே உணர்ச்சிகளை ஊட்டி வாக்கு வங்கிகளைப் பெறுக்கிக் கொள்வதற்கான வழியாகவே அன்றிலிருந்து இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. இவை பல்வேறு வழிகளில் ஒடுக்கப்படுகின்ற சுரண்டப்படுகின்ற மக்களின் உண்மையான விடுதலைக்காகப் பயன்படுத்தப்பட்டவையல்ல. இவர்கள் தமது பாராளுமன்றப் பாதையைக் கூட முழுமையாகவும் நேர்மையாகவும் பயன்படுத்தாதவர்கள். ஆகவே எப்பொழுதும் சமரசத்திற்கும் விட்டுக் கொடுப்பிற்கும் தயாரானவர்கள். இந்த சமரசங்கள் கூட தெளிவான நிலைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுபவை அல்ல.ஏனெனில் இவர்களிடம் ஈழத் தமிழர்களின் விடுதலை தொடர்பாக தெளிவான உறுதியான நிலைப்பாடும் வேலைத்திட்டமும் (இன்றுவரை) இல்லை.

 

தமிழ் இளைஞர்கள் இவர்கள் மீது நம்பிக்கை இழந்து சிறிலங்காவின் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தூக்கினார்கள். இளைஞர்கள் ஆயுதம் தூக்க காரணமாகவர்கள் தாம் என்பதை இன்று இவர்கள் மறந்துவிட்டார்கள். அல்லது மறந்தும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ஆனால் இயக்கங்களின் கடந்த கால வன்முறை பாதையை தயக்கமில்லாமல் குற்றம் சாட்டுகின்றார்கள். அதேநேரம் இந்த இளைஞர்களின் வன்முறை பாதையை தமது நலன்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப இத் தலைமைகள் பயன்படுத்தின என்பது வரலாறு. ஆகவே ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு தமது பொறுப்பற்ற அரசியல் செயற்பாடுகள் மட்டுமல்ல தாம் இளைஞர்களையும் அவர்களின் வன்முறைப் பாதையையும் தவறாகப் பயன்டுத்தியதும் காரணம் என்பதை இவர்கள் உணரவும் புரிந்துகொள்ளவும் வேண்டும். ஆனால் அதை செய்ய மறுக்கின்றார்கள். அல்லது புரியாததுபோல் நடிக்கின்றார்கள். ஆனால் இன்றைய நிலைக்கு இவர்கள் பொறுப்பெடுக்க வேண்டியவர்கள் என்பதை வரலாறு ஒரு நாள் உணர்த்தும். அப்பொழுது இவர்களால் ஒன்றும் செய்ய முடியாதவகையில் காலம் கடந்திருக்கும். அல்லது இவர்கள் இதை உணராமலே காலம் கடந்து செல்லும். இது ஈழத் தமிழர்களின் தூரதிர்ஸ்டமாகும்.

 

0000000000
தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள்

 

clash
தமிழ் இளைஞர்கள் உண்மையான அர்ப்பணிப்புடன்தான் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க இயக்கங்களை ஆரம்பித்தனர். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று இனிமேலும் சிறிலங்கா அரசின் கீழ் வாழ முடியாது என்று உணர்ந்ததன் விளைவு. இரண்டாவது ஈழத் தமிழ் பாராளுமன்ற தலைமைகளிடம் நம்பிக்கை இழந்தமை. ஆனால் இந்த இளைஞர்களிடம் வேகம் இருந்த அளவிற்கு விவேகம் இருக்கவில்லை. அவ்வாறு விவேகம் இருந்தாலும் அது இராணுவ செயற்பாட்டில் மட்டுமே இருந்தது எனலாம். ஆயுதம் மூலம் தமது விடுதலையை அடையலாம் என நம்பினார்கள். ஆகவே அரசியலைப் பற்றிப் பிடிக்கவில்லை. இதனால் இவர்களிடமும் எந்தவிதமான அரசியல் திட்டங்களும் நீண்ட கால நோக்கங்களும் இருக்கவில்லை. மாறாக தன்னியல்பான செயற்பாடுகளையே முன்னெடுத்தார்கள். தமது தெளிவின்மை, உறுதியின்மை என்பவற்றை கருத்தில் எடுக்காது தமது ஒவ்வொரு தோல்விக்கும் மற்றவர்களைக் காரணம் காட்டுவதையே செயற்பாடாகக் கொண்டார்கள். தாம் என்ன தவறு செய்கின்றோம் என எந்த ஒரு கணத்திலும் எந்த ஒரு இயக்கத் தலைமையும் அகம் நோக்கிப் பார்த்ததாக வரலாறு இல்லை. இதன் விளைவே இன்றைய நிலை என்றால் மிகையல்ல. ஆகவே இந்த இயக்கங்கள் அதன் தலைமைகள் ஒவ்வொருவரும் இன்றைய நிலைக்குப் பொறுப்பானவர்கள்.

 

 

ஈழத் தமிழ் விடுதலை இயக்கங்களில் தவறிழைத்தவர்களில் முதன்மையானவர்கள் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) என்றால் மிகையல்ல. 1985ம் ஆண்டுகளில் எல்லா இயக்கங்களையும் விட இவர்களிடம் தான் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட umaஉறுப்பினர்கள் இருந்தார்கள். வடக்கு கிழக்கில் பரந்தளவில் அமைப்பைக் கட்டியிருந்தார்கள். இது மட்டுமல்ல மலையகம் மற்றும் சிங்களப் பகுதிகளிலும் தொடர்புகளையும் கொண்டிருந்தார்கள். மேலும் இவர்களுக்குப் படித்த இளைஞர்கள் மற்றும் வெள்ளார்கள் என்ற அடையாளமும் இருந்தது. ஆனால் இவர்கள் படித்த படிப்பெல்லாம் ஏட்டுச் சுரக்காயாக மட்டுமே இருந்தது. அவை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லப் பயன்படவில்லை. வெள்ளார்கள் என்ற ஆதிக்க அடையளாமும் இவர்களுக்குப் பயன்படவில்லை.

 

ஈழ விடுதலைப் போராட்டத்தை அழிவுக்கு கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர்கள் கழகத் தலைமையே எனத் தயங்காது கூறலாம். ஏனெனில் இவர்களே திட்டமிட்ட முறையில் போராட்டத்தில் இணைத்த இளைஞர்களை படுகொலை செய்ய ஆரம்பித்தார்கள். இணைந்து கூட்டாகச் செயற்பட முடியாதவாறு சக தோழர்களிடம் சந்தேகம் என்ற விதையை விதைத்தார்கள். தமது தவறுகளால் புலிகளின் தலைமைக்குப் பயந்து ஈழத்தில் செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டார்கள். பின் எந்தவிதமான தெளிவுமில்லாது ,நோக்கமுமில்லாது இயக்கத்தையும் அதன் அங்கத்தவர்களையும் காப்பாற்ற வேண்டும் எனக் காரணம் கூறி சிறிலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து மக்களுக்கு விரோதமாக செயற்பட்டார்கள்.

 

இவ்வளவு செய்த பின்பும் இப்பொழுதும் தமது தலைவர் உமாமகேஸ்வரனைப் போற்றிப் புகழ்கின்றவர்கள் இருக்கின்றார்கள். அவர் தனிப்பட நல்ல மனிதராக இருக்கலாம். ஆனால் அவருக்குத் தெரிந்து இயக்கத்திற்குள்ளும் சக இயக்க அங்கத்தவர்களுக்கும் நடந்த சித்திரவதைகளுக்கும் படுகொலைகளுக்கும் என்ன விளக்கம் கூறப் போகின்றார்கள்? மாலைத்தீவில் புளொட்டின் அங்கத்தவர்களை பலி கொடுத்ததற்கு என்ன பதில் சொல்வார்கள்? புலியை எதிர்க்கின்றோம் என சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஈழத் தமிழ் மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தற்கு என்ன காரணம் கூறுவார்கள். ஆனால் தமது தோல்விக்கு இயலாமைக்கு தயக்கமில்லாமல் புலிகளின் தலைமையை இப்பொழுதும் சுட்டிக் காட்டுவார்கள். உண்மையில் இயக்கங்கள் தவறான பாதையில் செல்வதற்கான வழியைக் காட்டியதற்கு முதல் பொறுப்பை எடுக்க வேண்டியவர்கள் புளொட்டின் தலைமைத்துவத்தில் இருந்தவர்களே என்றால் மிகையல்ல. இதுவே ஈழ விடுதலைப் போராட்டம் தோற்பதற்கான பயணத்தின் முதல் காலடியுமாகும். அந்தவகையில் அதற்கான பொறுப்பையும் இவர்கள் எடுப்பது தவிர்க்க முடியாதது.

 

புளொட்டிற்கு அடுத்ததாக பெரியளவில் இயக்கத்தை வடக்கு கிழக்கில் 1985ம் ஆண்டுகளில் கட்டமைத்தவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்). ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளம் இருந்தபோதும், nafaஇவர்களிடமும் புளொட்டிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையான தோழர்கள் பலரைக் கொண்டிருந்தார்கள். சொந்தமாக மோட்டார் தயாரித்து நம்பிக்கையளித்தவர்கள். இடதுசாரி சித்தாந்தம் அதிகம் பேசியவர்கள். எல்லா இயக்கங்களையும் விட பண்பாகவும் மக்களை மதித்தும் செயற்பட்டவர்கள். பத்மநாபா என்ற மனிதர் மீது பாரிய நம்பிக்கை வைத்தவர்கள். அவரின் மனிதத்தன்மையை இன்றுவரை புகழ்கின்றவர்கள் இருக்கின்றார்கள். இது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவரின் நல்ல மனிதர் அடையாளம் ஈழ மக்களை மட்டுமல்ல தனது இயக்கத்தையே காப்பாற்றவில்லை. புலிகளால் தடை செய்யப்படும் வரை செயற்பட்டதற்கு மாறாக 1988ம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் இவர்கள் வடக்கு கிழக்கில் மேற்கொண்ட மக்கள் விரோத செயற்பாடுகள் கொஞ்சமல்ல.

 

புலிகளைப் பலி வாங்குகின்றோம் என மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள். பல படுகொலைகளைச் செய்தவர்கள். இவர்கள் முதன் முதலாக ஈழத்தில் முத்திரையை மட்டும் வெளியிடவில்லை ஈழத் தமிழர்களின் பிள்ளைகளையும் பிடித்தவர்கள். இவர்களே கட்டாய இராணுவம் என்ற பெயரில் பிள்ளைகளைப் பிடித்து தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கியவர்கள். இறுதியாக இச் சிறுவர்களை நடுத்தெரிவில் விட்டு விட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்கள். இதற்கு மாறாக அந்த இரண்டு வருடங்களும் மிகப் பொறுப்புடன் புலிகளைப் பலிவாங்காது மக்களின் விடுதலையிலும் உரிமையிலும் அக்கறை செலுத்தி ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அதன் பின் வந்த மோசமான நாட்களை மட்டுமல்ல இறுதியாக நடந்த இனப் படுகொலையையே சிலநேரம் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் பத்பநாபாவின் அர்ப்பணிப்பையும் நல்ல மனிதர் தன்மையும் மட்டும் புகழ்வது பயனற்றதே. மாறாக சார்பற்ற நேர்மையான (சுய)விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். அதேவேளை இக் காலங்களில் இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இப்பொழுதும் இருக்கின்றார்கள். இவர்கள் இந்த நாட்களில் நடைபெற்ற மக்கள் மற்றும் ஈழ விடுதலைக்கு எதிரான செயல்களுக்குப் பொறுப்புக் கூறி இனியாவது சுயவிமர்சனம் செய்வார்களா? அந்த நம்பிக்கை எனக்கில்லை. ஏனெனில் இப்பொழுதும் தமது தவறுகளை நியாயப்படுத்துகின்றவர்களாகவே இவர்கள் இருக்கின்றார்கள்.

 

மேற்குறிப்பிட்ட இரண்டு இயக்கங்களுக்கும் அடுத்ததாக 1985ம் ஆண்டுகளில் பலமாக இயங்கியவர்கள் தமிழீழ விடுதலை sri lastஇயக்கம் (டெலோ). இவர்களிடம் அரசியல் கண்ணோட்டம் அதிகம் இல்லை என்றே பெரும்பாலும் பரவலாக கருதப்பட்டது. வெறுமனே ஆயுத செயற்பாடுகளையே அதிகமாக முன்னெடுத்தனர். இவர்களும் மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்ததில் முதன்மையானவர்கள். குறிப்பாக வைத்தியசாலைகளுக்குள் ஆயுதத்துடன் செல்வதற்கு தடையிருந்தபோதும் அதைப் பயன்படுத்தி சக தோழர்களை நயவஞ்சகமாச் சுட்டுக் கொலை செய்தார்கள். இந்த செயற்பாட்டை எதிர்த்து விமர்சித்து ஊர்வலம் வந்த மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலங்களில் அவர்களுடன் இணைந்து புலிகளைப் பழிவாங்குவதற்காக மக்களை துன்புறுத்தினார்கள். இவர்கள் இப்படி செய்வதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இவர்கள் வெறுமனே வாலிப வயதின் துடிப்புடன் மட்டும் செயற்பட்டவர்கள். அதாவது “லும்பன்கள்” என்ற கருத்தும் நிலவியது. இக் கருத்தை மறுக்கின்ற இதன் அங்கத்தவர்களும் உள்ளார்கள். இந்த மறுப்புக்கு அப்பாலும் டெலோவின் தலைமைகளும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைமைகளுக்கு பொறுப்பு எடுக்க வேண்டியவர்களே.

 

 

இறுதியாக இயக்கங்களில் முக்கியமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்ரீரீஈ). 1985ம் ஆண்டளவில் இவர்களின் அங்கத்தவர்கள் பெரும்பாலும் ஊருக்கு ஒருவராகவோ இருவராவோ மட்டுமே இருந்தனர். அப்பொழுது புலிகளின் மொத்த எண்ணிக்கையுமே ஐநூறைத் தாண்டது எனக் கருதப்பட்டது. இவ்வாறு சிறிய இயக்கமாக இருந்தபோதும் பலமானவர்களாகவும் திட்டமிட்டும் காரியங்களைச் சாதிப்பதில் ஆளுமையும் ஆற்றல்மிக்கவர்களாகவும் இருந்தார்கள். கடுகு சிறிதாயினும் காரம் பெரிதாகவே இருந்தது. இதனுடாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தார்கள். இந்திய ஆக்கிரமிப்பில் பல அக புறக் காரணங்களால் அழியாது தப்பிப்பிழைத்தார்கள். அதேநேரம் இவர்களது அரசியல் நிலைப்பாடுகள், இராஜதந்திரமின்மை, இறுக்கமான பிடிவாத முடிவுகள், தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டே இருக்கின்றன. தலைமைத்துவ விசுவாசம், இனவாதக் கண்ணோட்டம், அனுராதபுர படுகொலைகள், தமிழ் தலைவர்களை கொலை செய்தமை. சக இயக்கங்களை தடைசெய்தமையும் படுகொலை செய்தமையும் என தொடர்ந்தது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மற்ற இயக்கங்களுக்கும் பொருந்தும். ஆனால் இவர்கள் அதிகமாக செய்தமையால் இவர்கள் மீதே கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த விமர்சனங்களையெல்லாம் இவர்கள் கருத்தில் எடுக்கவில்லை. இவ்வாறான செயற்பாடுகளின் விளைவுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்வியும் இந்த இயக்கத்தின் அழிவுக்கும் காரணமாகும். மேலும் 2009 ஆண்டின் முதல் ஐந்து மாதங்களும் நடைபெற்ற சம்பவங்களுக்கும் இதுவே காரணங்களாகும்.

 

 

இறுதியாக நடைபெற்ற இனப் படுகொலைகளை, பெண்கள் மீதான வன்புணர்வுகளை, பாலியல் சித்திரவதைகளை நிறுத்துவதற்கான சாத்தியங்களை விடுதலைப் புலிகளின் தலைமை கொண்டிருந்தார்கள் என்றால் மிகையல்ல. முக்கியமாக கிளிநொச்சி பிடிபட்ட பின்பாவது இவர்கள் தமது நிலைப்பாடுகள் தொடர்பாக மீள் பார்வை செய்திருக்க வேண்டும். தமது தலைமையை நம்பி வந்த குறிப்பாக இளம் பெண்களினதும் சிறுவர்களினதும் நிலையை உணர்ந்திருக்க வேprabaண்டும். போரின் இறுதியல் பிடிபட்ட இளம் போராளிகளின் கண்களைப் பார்க்கும் பொழுது அதிலிருக்கும் ஏக்கம், ஏமாற்றம், கவலை யாரையும் மன்னிக்க முடியாத மனநிலையையே தோற்றுவிக்கின்றது. ஆனால் புலிகளின் தலைமையானது இவர்களைப் பற்றி அக்கறை கொண்டார்களா என்பது கேள்விக்குறியே. ஆகவேதான் மற்றத் தலைவர்களைப் போலவே பிரபாரகன் மீதும் எந்த விமர்சனமும் இல்லாமல் பாதுகாக்கின்ற மதிப்பு வைத்திருக்கின்ற பலர் மீது விமர்சனங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. இவரது அர்ப்பணிப்பு, உறுதி நல்ல மனது என்பவற்றுக்கு அப்பால் மக்கள் நலனில் இருந்து சிந்தித்தாரா என்றால் அது கேள்விக்குறியே.

 

ஒருபுறம் பிரபாகரன் அவர்கள் தன்னையும் தனது குழந்தைகளையும் பலி கொடுத்தபோதும் இவரே நடந்த அனைத்துக்கும் பொறுப்பு எடுக்க வேண்டும் என முள்ளிவாய்க்கால் வரை சென்று மீண்ட தமிழ் தேசிய வாதிகள் சிலர் கூறுகின்றனர். புலிகளின் குறிப்பாக பிரபாகரனின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இக் கூற்று நியாயமானதாகவே தோன்றும். மறுபுறம் போர் முடிந்தபின் அந்தப் போர்ச் சூழலுக்குள் அகப்பட்ட பலர் தமது அனுபவங்களை படைப்புகளாக வெளியிட்டுள்ளனர். வன்னியுத்தம், ஊழிக்காலம், போன்ற படைப்புகளில் எல்லாம் மே 18ம் திகதிவரை போராட்டத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு குறிப்பிட்ட சிலரை அல்லது வர்க்க குழுவையே காரணம் காட்டுகின்றார்கள். தலைவருக்குத் தெரியாமல் இது நடைபெறுகின்றதாகவும் அவருக்குத் தெரிந்தால் இவ்வாறு நடைபெறவிட மாட்டார் என்ற தொனியும் தொங்குநிற்கின்றது. இவ்வாறு நடைபெற்றவற்றுக்கான தவறுகளை தலைவரின் பொறுப்பிலிருந்து இப் படைப்புகளில் விடுவித்தனர். ஆகவே இக் கூற்றுக்களில் எதை ஏற்பது என்பதில் கேள்வி உள்ளது. தனிநபர்களின் குறிப்பான பாத்திரங்களை மறுக்கவில்லை. ஏனெனில் புலிகளின் இயக்கத்தைப் பொறுத்தவரை அது தனிநபர் விசுவாசத்தில் கட்டமைக்கப்பட்டதே. இவ்வாறான ஒரு இயக்கத்திலுள்ள அங்கத்தவர்களும் அவ்வாறு தான் செயற்படுவார்கள். ஆகவே அங்கத்தவர்கள் மீது குற்றம் சுமத்திவிட்டு தலைவர்களை காப்பாற்ற நினைப்பது தவறான பார்வையாகும். அந்தவகையில் பிரபாகரன் அவர்கள் மீது குறிப்பிட்டளவு பொறுப்பு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.அதேவேளை வெறுமனே தனிமனிதர்களில் நாம் பொறுப்பை சுமத்திவிட்டு சும்மா இருக்க முடியாது. ஆகவே இதுவரை நடந்தவற்றுக்கு நாம் கூட்டுப் பொறுப்பை எடுப்பதே சரியான நிலைப்பாடாகும்.

 

0000000000
புலத்தில் வாழும் மக்கள்

dias poraபுலத்தில் ஈழத்தில் வாழ்கின்ற மக்கள் அனைத்து இயக்கங்களையும் ஆதரித்து பாதுகாத்து வளர்த்தவர்கள். இராணுவக் கெடுபிடி காலங்களிலும் பயமின்றி துணிவாக தம் விடுதலைக்காக வீதிகளில் இறங்கிப் போராடியவர்கள். ஆனால் இவர்களும் ஈழத்தில் இருந்த அரசியல் வாதிகளும் செயற்பாட்டாளர்களும் முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை நடக்கும்பொழுது ஏன் அமைதியாக இருந்தார்கள் என்பது பெரும் கேள்வி. ஈழ விடுதலை போராட்டத்தின் தோல்வியில் இந்த மக்களுக்குப் பங்கு இல்லையா? இவர்களின் பொறுப்பு என்ன? இவர்கள் வெறுமனே பார்வையாளர்கள் மட்டும்தானா? இது இவர்களின் வர்க்க குணாம்சமா? அல்லது அரசியல் அடிப்படையில் இவர்கள் வளரவில்லையா? ஒருவரும் வளர்த்துவிடவில்லையா? அல்லது மக்கள் இப்படித்தானா? என்ற கேள்விகள் மக்களின் பொறுப்பு தொடர்பாக தொக்குநிற்கின்றன. இவை ஆய்வுக்கு உரிய விடயமாகும்.
புலம் பெயர்ந்த மக்கள்

 

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் 2000ம் ஆண்டுக்குப் பின்பு ஈழ விடுதலைப் போராட்டத்தில் குறிப்பான பங்கை வகித்துள்ளனர். முதலில் நிதியாகவும் பின்பு இதன் நீட்சியாக கருத்தியல் ரீதியாகவும் ஆதிக்கம் செய்துள்ளதாகவே போரின் பின்னான தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாப்பதற்காக இறுதிப் போருக்கு எதிரான போராட்டத்தை புலம் பெயர்ந்த தேசங்களில் காலம் தாழ்த்தியே முன்னெடுத்தனர். கனடாவைப் பொறுத்தவரை ஒரே ஒருமுறை 2009ம் ஆண்டு தை மாதம் புலிக்கொடிகள் இல்லாமல் போரை நிறுத்து என்ற கோசத்தை மட்டும் முன்வைத்து கொட்டும் பனியிலும் கடும் குளிரிலும் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் அதன்பின் நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் புலிக் கொடிகள் மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை போரை நிறுத்துகின்ற கோசத்திற்குப் பதிலாக மக்களை பாதுகாக்கின்ற கோசத்திற்குப் பதிலாக இயக்கத்தை குறிப்பாக இயக்கத்தின் தலைமையை காப்பாற்றும் நோக்கமே பிரதானமாக இருந்தது. புலம் பெயர் தமிழர்களின் அவர்களை வழிநடாத்திய தலைமைகளின் மிகப் பெரும் தவறு இதுவாக இருந்தது. இத் தவறு இறுதியாக சிறிலங்கா அரசு ஒரு இனப் படுகொலையை நாடாத்தி முடிப்பதற்கே காரணமாகியது.

 

 

உண்மையில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் போர் ஊக்கிரமான கால கட்டத்தை நெருங்குவதற்கு முன்பாகவே போராட்டத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். மேலும் இரு பகுதிகளையும் போரை நிறுத்தச் சொல்கின்ற கோசத்தை முன்வைத்து வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை புலம் பெயர்ந்த சமூகம் செய்யத் தவறியது மாபெரும் தவறாகும். அந்தவகையில் போராட்டத்தின் தோல்விக்கு இவர்கள் கூட்டுப் பொறுப்பை எடுக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர்.

 

00000000

 

நான்

 

எவ்வாறு கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வியில் பங்கு உள்ளதோ அதேபோல் தனி நபர்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. ஆகவே எனக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது. அரசியலிலிருந்து விலகியிருந்த எனக்கு ஈழத்தில் நடப்பவைகளை கண்டும் காணாமலும் இருக்க முடியவில்லை. ஆகவே இறுதிப் போர் தொடர்பாக புலம் பெயர்ந்த சமூகம் விழிப்பதற்கு முதலே போரை நிறுத்துவது தொடர்பாக எதாவது செய்ய வேண்டும் என்ற அக்கறை கொண்டிருந்தேன். ஆகவே இரண்டு பகுதியையும் போரை நிறுத்தும்படியும் விடுதலைப் புலிகளின் தலைமையை ஆயுதப் போராட்டத்தை நிறுத்தும்படியும் சிறிலங்கா அரசாங்கத்தை அரசியல் தீர்வை முன்வைக்கும்படியும் கோரிக்கைகளை முன்வைத்து 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் ரொரன்டோவில் இருக்கின்ற சிறிலங்கா தூதுவராலயத்தின் முன் தனி மனிதராக முழு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தேன். காலை எட்டு மணிக்கு தனித்து ஆரம்பித்த போராட்டத்தை மாலை ஆறு மணி வரை தொடர்ந்தேன். இவ்வாறு விடுதலைப் புலிகளினது பினாமி அமைப்பான உலகத் தமிழர் இயக்கம் போன்ற இடங்களிலும் சில மணித்தியாலங்கள் அடையாள எதிர்ப்பைக் காட்டினேன்.

 

பொது ஆதரவற்ற நிலையிலும் புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் இன்னும் போருக்கு எதிரான விழிப்பு நிலை உருவாகாத நிலையிலும் தனி மனிதராக என்னால் தொடர முடியாத நிலையிலும் ஒரு நாளுடன் நிறுத்திக் கொண்டேன். ஆனால் அன்று ஆறு மணியுடன் முடிக்காது ஒரு முடிவைக் காணும்வரை நான் தொடர்ந்திருக்க வேண்டும் என்று இப்பொழுது உணர்கின்றேன். இது ஒரு குற்றவுணர்வாகவே எனக்குள் இருக்கின்றது. அன்று நான் எடுத்த நிலைப்பாடு சரியானது என நம்புகின்றேன். இவ்வாறு அக்கறையுள்ள ஒவ்வொரு தனிமனிதர்களும் அன்று ஒன்றுபட்டு இறுதிக் காலம் வரை காத்திராமல் செயற்பட்டிருந்தால் நாம் மக்களை மட்டுமல்ல பல போராளிகளையும் காப்பாற்றியிருக்கலாம். இறுதியில் நடந்த இனவழிப்பையும் படுகொலைகளையும் பாலியல் சித்திரவதைகளையும் வன்புணர்வுகளையும் கொடுமைகளையும் நிறுத்தியிருக்கலாம். ஆனால் எனது உறுதியின்மையும் தொடர்ச்சியின்மையும் தெளிவின்மையும் இதற்கெல்லாம் வழிவிட்டது என்றே நம்புகின்றேன். அந்தவகையில் தனிநபராக நமது போராட்டத்தின் தோல்விக்கு நானும் பொறுப்பாகின்றேன்.

 

 

இறுதியாக இப்பொழுதும் காலம் கடந்துவிட்டது. இருப்பினும் அக்கறையுள்ள தனிநபர்களாக அரசியல் அடிப்படையில் ஈழத்தில் பங்களிப்பதற்கு நிறைய தேவைகள் உள்ளன. இறுதிப் போரின் போது செயற்பட்டதுபோல இறுதிவரைக் காத்திராமல் இப்பொழுதே நீண்ட கால நோக்கில் சிந்தித்து செயற்பட ஆரம்பிப்போமாயின் காலம் கனிந்து வரும் பொழுது சிறப்பான ஆரோக்கியமான பங்களிப்பை செய்யலாம் என நம்புகின்றேன். ஆனால் எங்களிடம் முன்நோக்கி சிந்தித்து செயற்படும் பண்பாடு இல்லை. எப்பொழுதும் நடப்பவற்றுக்கு உடன் எதிர்வினை செய்தே பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இனியும் அப்படித்தான இருக்கப் போகின்றோமாயின் (ஈழத்) தமிழர்களின் விடுதலை என்பது கனவாகவே இருக்கும் என்ற கசப்பான உண்மையை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

 

000000000

தொடர்புகளுக்கு meerabharathy@gmail.com

 

0000000000

 

*இப்பதிவு தொடர்பாக உங்கள்  கருத்துக்களை எழுதுங்கள்,  கட்டுரையாளர் நண்பர் மீராபாரதி தமது கருத்துக்களை எழுதுவார்..(ஆசிரியர்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment