Home » இதழ் 17 » *வேலுப்பிள்ளை என் மாமாவின் நண்பர்- சஞ்சயன் செல்வமாணிக்கம்

 

*வேலுப்பிள்ளை என் மாமாவின் நண்பர்- சஞ்சயன் செல்வமாணிக்கம்

 

டந்தவருடம் இளவேனிற் காலத்தின்போது லண்டனுக்கு ‌செல்லநேர்ந்தது. அங்கு நின்றிருந்தபோது அம்மா தொலைபேசியில் மாமாவின் பெயரைக் கூறி, அவர் அங்கு வந்திருக்கிறாராம் கட்டாயமாக நீ அவரைச்சந்திக்கவேண்டும் என்றார். சரி என்றேன். மாமாவின் இளையமகனுடன் தொடர்புகொண்டு எனது வருகையைப்பற்றி அறிவித்துக்கொண்டேன். லண்டன் நகரத்துக் தொலைவில் உள்ள ஒரு நகரத்தைநோக்கி நீண்ட நேர புகையிரதப்பயணம் ஆரம்பமானது.

sanjayanமாமா வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இந்தக்கதையின் முக்கிய கருவே வல்வெட்டித்துறை என்பது தான். மாமா என்று அழைப்போமே தவிர அவர் உறவினர் அல்லர், அவர். ஆனால் நாம், ஏறாவூரில் வாழ்ந்திருந்த காலங்களில் உறவினர்களைவிட மிக நெருக்கமாக பழகக்கிடைத்தது அவரது குடும்பத்துடன். மாமா, மெதுவாய் பேசத்தெரியாத, ஆனால் மிக மிக அன்பான, மென்மையான மனிதர். எப்போ‌தும் வெள்ளை வேட்டி வெள்ளை சேட் என்றிருப்பார். அவருக்கு கடவுள்பக்தியும் அளவுக்கு அதிகம். அவரின் வீட்டிலுள்ளவர்களை நான் நன்கு அறிந்திருந்தேன். அவர்களும் எங்கள் வீட்டவர்களை நன்கு அறிந்திருந்தார்கள். மாமாவும், ஆன்டியும் எனது தாயாருடன் வைத்தியசாலையில் வேலைசெய்தார்கள் அந்நாட்களில். மாமாவின் மூத்தமகனும் எனது தம்பியும் நெருங்கிய நண்பர்கள்.

84ம் ஆண்டு என்று நினைக்கிறேன், இயக்கங்கள் ஊருக்குள் வளர்ந்துகொண்டிருந்தகாலம். அவரின் இரண்டாவது மகன் இராணுவத்தினரால் செங்கலடி பாடசாலையில்வைத்து சுட்டுக்கொல்லப்படுகிறான். அப்போது மாமா ஊரில் இருக்கவில்லை. செய்திகேட்டு அவர் வந்திறங்கியபோது சிதைக்கு தீமூட்டத்தயாராக இருந்தார்கள். மதம்கொணட காட்டுயானைபோல் ஆறுதல்கூற முயன்ற அனைவரையும் தள்ளிவிழுத்தியபடியே ஓடிவந்து மகனின் உடலத்தினருகில் வந்து விழுந்து கதறியது நினைவிருக்கிறது. மகனின் மறைவு மனிதரை உடைத்துப்போட்டது. அதன் பின் மனிதர் முன்பிருந்த கம்பீரம் இழந்து சோர்ந்துபோனார். கண்களில் ஒருவித ஏக்கம் படர்ந்துகொண்டிருக்க, புத்திரசோகம் அவரை மெது மெதுவாக விழுங்கத்தொடங்கியது.

தொண்ணூறுகளில் ஏறாவூரில் நடந்த இனக்கலவரங்களின்போது எங்கள் வீட்டாரையும் தனது வாகனத்தில் காப்பாற்றி அழைத்துச்சென்றதும் அவரே. அதன் பின் மட்டக்களப்பில் வாழ்ந்திருந்தார் சில காலம். எனது குடும்பத்தார் கொழும்புக்கு இடம் பெயர்ந்தனர். மாமாவும் குடும்பத்தினரும் காலப்போக்கில் இந்தியா சென்று அங்கு குடியேறினார்கள். அதுவும் திருச்சியில். அங்குதான் மாமாவின் நெருங்கிய நண்பரான வேலுப்பிள்ளையும் வாழ்ந்திருந்தார்.

000000

புகையிரதம் மாமா தற்போது வாழும் நகரத்தினை வந்தடைந்ததும் இறங்கிக்கொண்டேன். அவரின் இளையமகனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது. ”அங்கேயே நில்லுங்கள் வந்து அழைத்துப்போகிறேன்” என்றான் அவன்.

மாமாவின் இளைய மகனை நான் மிக நன்கு அறிவேன். 1980களின் ஆரம்பத்தில் அவனுக்கு 9 -10 வயதாயிருந்த காலத்தில் அவன் ஊர்ப் பொதுக்கிணற்றடியில் ஒளிந்திருந்து தனது நண்பருடன் பேப்பர் சுருட்டுக் குடித்ததை நான் கண்டிருந்தேன். அதன் பின் நான் என்ன சொன்னாலும் மறுபேச்சின்றி செய்துவருகிறான். இன்றும் அப்படியே.

மாமாவின் மகன் வந்து என்னை ஏற்றிக்கொண்டான். மாமாவின் வீட்டருகில் இறங்கி, கதவைத்திறந்து உள்ளே சென்றேன். என்னை அடையாளம் காணமாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன். எனினும் என்னைக் கண்டதும் ஆன்டி அணைத்து முத்தமிட்டார். உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை பார்த்துச் சிரித்தபோது அவர் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பதை ஊகித்துக்கொண்டேன். அவரும் அதையே சொன்னார். அப்பாவைப்போல மொட்டை என்றார். இருவரும் சேர்ந்து சிரித்தோம்.

மாமா மேலே இருக்கிறார் போங்கோ என்றபடியே ஆன்டி குசினிக்குள் புகுந்துகொண்டார். மேலேறிப்போனபோது எத்தனை ஆண்டுகளின் பின் இவர்களை சந்திக்கிறேன் என்று மனது கணக்குப்பார்த்தது. 27 அல்லது 28 ஆக இருக்கும். வெள்ளை மேல்சட்டை, வெள்ளை வேட்டியுடன் மாமா கண்முன் நின்றார். அவருக்கு கடுங்குரல், உடனே உணர்ச்சிவசப்படும் தன்மை. கச்சா முச்சா என்று கத்துவது போன்ற அவரின் அடையாளங்கள் தோன்றி மறைந்தன. அவரின் மகன்களுடன் எப்போதும் சண்டைதான். இளையமகனில் அவருக்கு அளவுக்கு அதிகமான பாசம் இருந்தது. அவனும் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டான். தற்போதும் இளையமகனுடனேயே தங்கியிருக்கிறார்.

அறைக்குள் புகுந்தேன். கட்டிலில் உட்கார்ந்திருந்தபடியே நடுங்கும் இருகைகளையும் என்னை நோக்கி நீட்டிவைத்துக்கொண்டிருந்தார். சரவரம் செய்யாத முகத்தினுள் அன்பு கனிந்த சிரிப்பு தெரிந்தது. அணைத்தபடியே ”எத்தனை வருசமாச்சடா உன்னைக் கண்டு” என்றார். 28 வருடங்கள் அவரை முதுமையின் உலகினுள் இழுத்துப்போயிருந்தது. பெரிதாய் மூச்சுவிட்டபடியே பேசிக்கொண்டிருந்தார். சிங்கமொன்று கிழப்பருவம் எய்தியதுபோலிருந்தது அவரைப்பார்க்கும் பொழுது. அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. மேசையில் ஒரு காற்றாடி இயங்கிக்கொண்டிருக்க, அவரது அறைக்குள் முதுமையின் வாசனை வீசிக்கொண்டிருந்தது.

நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். 19வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார். அதன் பின் சில காலம் மீண்டும் இலங்கை. தற்போது ssதனது பிள்ளைகளுடன் லண்டனில். நாம் பேசிக்கொண்டிருக்கும் போது ஆன்டியும் எம்முடன் இணைந்துகொண்டார். ”பிள்ளைக்கு தேத்தண்ணி கொண்டு வா” என்று கட்டளையிட்டார். சற்றுநேரத்தில் அன்டி தேனீருடன் வந்தார். எமது பேச்சு இன்றைய வாழ்க்கை, ஊர் வாழ்க்கை, அவர்களது உடல்நலம், எனது தாயாரின் உடல்நலம் என்று அலைந்துகொண்டிருந்தது. மாமா ஓயாது பேசிக்கொண்டிருந்தார். நேரம்போய்விடுமோ? அதற்கிடையில் அனைத்தையும் பேசிமுடித்துவிட்டவேண்டும் என்று என்று பயந்துபடியே அவர் அவசர அவரசமாய் பேசுபோல் இருந்தது. இடையிடையே நிறுத்தி மூச்சுவாங்கினார். மீண்டும் அதே வேகத்துடன் தொடர்ந்தார். அவரிடம் பேசுவதற்கு பல விடயங்கள் இருந்தன.

மகன்! நீங்களாவது இவனுக்கு புத்திசொல்லுங்கோ என்றார் இளையமகனைப்பார்த்தபடியே. அவனோ ” தொடங்கீட்டார், சும்மா இருங்கோ அப்பா” என்றான் என்னைப்பார்த்து சிரித்தபடியே. ”தம்பி, இவன் வீட்ட சாப்பிடுறான் இல்ல. எப்ப பார்த்தாலும் கிறிக்கட் கிறிக்கட் என்று அலையுறான்” என்றார். அவனோ ”அப்பா இப்ப விளையாடாட்டி எப்ப விளையாடுறது? உங்கட வயசிலேயே” என்றான் வீம்பாக. ”பாருங்கோ இப்படித்தான் மரியாதையில்லாம கதைக்கிறான்” என்றார் கோபத்துடன் மாமா. இருவரும் மாறவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.

நாம் கிறிக்கட் விளையாடி காலங்களில் வழுக்கியோடும் காட்சட்டையை ஒருகையால் பிடித்தபடியே எங்கள் பந்துகளை பொறுக்கித்தந்தவன் அவன். எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்து அவன் கிறிக்கட் பைத்தியமாகவே இருக்கிறான். இன்னும் பைத்தியம் தெளிந்தாபாடில்லை. இனிமேலும் தெளியும் என்னும் நம்பிக்கை அவனது தந்தையிடமும் இல்லை என்னிடமும் இல்லை. எனவே, அவனை விட்டுப்பிடியுங்கோ மாமா என்றேன். மாமாவும் ஆன்டியும் ஒரேநேரத்தில் பெருமுச்சு விட்டார்கள் போலிருந்தது எனக்கு.

எனது அம்மாவைப் பற்றி விசாரித்தார். ”ஏன்டா, அம்மாவை நீ கூப்பிடலாமே” என்றார். ”அவவுக்கு குளிருக்குப் பயம்” என்றேன். அதை ஒத்துக்கொள்வதைப்போல தலை ஆட்டிக்கொண்டிருந்தார். இங்கயும் கடும் குளிர் என்று மாமா முன்மொழிய அதை ஆன்டியும் ஆமோதித்தார்.

அவர்களின் இளையமகன் மெதுவாய் விடைபெற்றுக்கொண்டார். ஆன்டி ”சாப்பிட்டுவிட்டு போ” என்றார். அவனோ மட்ச் முடிய வந்து சாப்பிடுகிறேன் என்றான். மாமா தலையிலடித்துக்கொண்டார்.

000000

நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். எமது பேச்சு சற்று திசைமாறியதும் எனது ”படுவான்கரை” புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். மெதுவாய் புறட்டிப் பார்த்தார். முன்னட்டையை பார்த்தபடியே மௌனமாகிப்போனார் சில நொடிகள். ”எல்லாம் முடிஞ்சு போச்சு ராசா” என்று இரண்டுமுறை முணுமுணுத்தார். பின்பு என்னை நிமிர்ந்து பார்த்தபடியே மிகவும் இரகசியமான குரலில் ”அவர் இருக்கிறாரோ?” என்றார். நான் எதுவும் பேசவில்லை. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். மாமா ”அவர்” இருக்கவேண்டும் என்று விரும்பினார், பலரையும் போன்று. நான் பதிலேதும் சொல்லவில்லை. மாமாவின் உள்மனதில் ”அவர்” இருக்கவேண்டும் என்ற அவா இருப்பதை அவரின் வார்த்தைகளின் ஒலியும், கண்களில் இருந்து இயலாமையும், அவரது உடல்மொழியும் காட்டின. இப்படியான கணங்கள் எப்போதும் மிகுந்த மனச்சலனத்தை தரக்கூடியவை. எனது கருத்தை முன்வைத்துப் பேசுவதா இல்லை அவரின் கருத்துடன் இணைந்துபோவதா என்று மனம் தத்தளிக்கும். இப்போதெல்லாம் எனது கருத்தைவிட மற்றயவரின் மனநிலையை மதிக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது. எனவே மாமாவின் கேள்விக்கு பதில்சொல்லி அந்த உரையாடலை தொடர விரும்பவில்லை நான். எனவே அமைதியாய் இருந்தேன்.

உனக்குத‌் தெரியுமா அவனுக்கு 11 -12 வயதிருக்கும்போது மட்டக்களப்புக்கு அழைத்து வந்திருக்கிறேன். என்ட கார்லதான் வந்தவன் என்றார்,மாமா. வல்வெட்டித்துறையில் 1960 – 1970 களில் மாமா கொடிகட்டிப்பறந்தவர் என்பதை முன்பே அறிந்திருந்தேன். இருப்பினும் இந்தக் கதை புதிதாக இருந்தது. மாமா கதைவிடுகிறாரோ என்றும் சிந்தனையோடியது. ஆனால் மாமாவின் கண்கள் ஒளிகொண்டிருக்க, மிகவும் உணர்வுபூர்வமாக கதை சொல்லிக்கொண்டிருந்தார், மாமா.

பழைய கதைகள் பலவற்றைக் கூறிக்கொண்டிருந்தார். அவரிடம் 3 கார்கள் இருந்ததாயும், அவற்றில் ஒன்று ”ஒஸ்டின்” வகை என்றும், அது கறுப்புநிறம் என்றும் கூறினார். அந்தக் காரில் தான் பிரபாகரன் 11 – 12 வயதாக இருந்தபோது மட்டக்களப்புக்கு அழைத்துவந்தாராம். அவர் வல்வெட்டித்துறையில் இருந்து காலத்தில் இருந்தே அவருக்கு பிரபாகரனின் தந்தையுடனும், ஏனைய உறவினர்களுடனும் தொடர்பிருந்திருக்கிறது. அவர்களுடன் மிகவும் அன்பாகப் பழகியிருக்கிறார். திருச்சியில் மிக நெருங்கிய குடும்ப நண்பர்களாக இருந்தார்களாம் பிரபாகரனின் தந்தையும், மாமாவும். ”எல்லாம் முடிஞ்சுது ராசா! அதைப் பற்றிக் கதைத்துப் பிரயோசனம் இல்லை என்றார்” நாம் உட்கார்ந்திருந்த அறை மௌனித்துப்போயிந்தது சில நொடிகள்.

 

ss2

 

எனது திருமணப்பேச்சுக்களில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு. எனவே அது பற்றியும், நான் தற்பொது தனியே வாழ்வது பற்றியும் பேசிக்கொண்டோம். ”என்னடா இது, வெளிநாட்டில எல்லா இடமும் குடும்பப் பிரச்சனைகள், ஒருத்தரும் சந்தோசமா இல்லை, கடமைக்கு வாழ்கிறார்கள்” பார்க்க பெரிய கஸ்டமா இருக்கு என்றார்”. என்னால் எதையும் கூறமுடியவில்லை. தலையைக்குனிந்திருந்தேன். அவர்களின் வயதோ 80 நெருங்குகிறது. எதை எவ்வாறு விளக்கினாலும் அவர்களால் ஜீரணிக்கமுடியாத விடயங்களில் இதுவும் ஒன்று. எனவே அவரே பேசட்டும் என்று ‌தலையாட்டியபடியே இருந்தேன். அவருக்கும் எனக்கும் அறிமுகமான பலரின் வாழ்வில் புயலடித்துக்கொண்டிருந்தது அல்லது புயலடித்து ஓய்ந்திருந்தது. இலங்கையில் திருமணவாழ்க்கை இப்படியில்லை என்றும், வெளிநாடும் காசும் ஆட்களை மாற்றிவிடுகிறது என்றார் மாமா. அன்டி அதை ஆமோதித்தார்.

மறுநாள் காலை 10 மணியிருக்கும். நான் புறப்படும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. பயணத்தின்போது உண்பதற்கான உணவினைக் கட்டிக்கொண்டிருந்தார் ஆன்டி. மாமா குளிசைகளை எண்ணி எண்ணி விழுங்கிக்கொண்டிருந்தார். மாமாவின் மகன் அப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழும்பியிருந்தான்.

மாமாவின் கையில் எனது புத்தகம் இருந்தது. இரவு சில பதிவுகளை படித்ததாகக் கூறினார். போராட்டத்தில் இழந்த தனது மகனை நினைவுகூர்ந்தார். அவர் கண்கள் கலங்கின. அழுதார். தனது மகனை அழைத்து ஒரு போராளியின் குடும்பத்துக்கு உதவக் கட்டளையிட்டார்.

கதிரையில் சாய்ந்திருந்தவர் நிமிர்ந்து, கத‌ிரையின் நுனிக்கு வந்து என்னை நோக்கி குனிந்து ”அவர் பற்றி ஏதும் தெரிந்தால் அறிவி” என்றார். எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. மாமாவின் கண்களை ஊடுருவிப்பார்த்தேன். மாமாவின் கண்களும் என்னை ஊடுருவின. இருவருக்கும் பரஸ்பரம் ஏதோ புரிந்துபோலிருந்தது எனக்கு.

மாமாவைப் போல் பலர் எம்மிடையே இருக்கிறார்கள். முன்பெல்லாம் புலிகளின் அராஜகங்கள், சகோதர இயக்கங்களை அழித்தமை, இறுதியுத்தத்தின்போது எம்மக்களுக்கு எதிராகத்திரும்பிய புலிகளின் ஆயுதங்கள், புலம்பெயர் மக்கள்மீதான அபத்தமான அதீதப்பிரச்சாரம் என்று சூடாகியிருப்பேன். ஆனால் இப்போது அது முடியாததாய் இருக்கிறது. முக்கியமாய் அப்பாவியான விசுவாசிகளிடம். மாமாவும் அப்பாவியான விசுவாசியே.

தற்போது இந்த அப்பாவி விசுவாசிகளின் மனநிலையை புரிந்துகொள்ளவது அவசியமாய்ப்படுகிறது எனக்கு. அவர்களின் மன அழுத்தங்களை, தோல்வியின் வலிகளை, ஏமாற்றங்களை நாம் மதித்து அதற்கேற்றமுறையில் அவர்களுடன் உரையாடுவதே அவசியம் என உணருகிறேன். பேசாப்பொருளை மனதுக்திற்குள் வைத்துப் பூட்டியபடியே குமைந்துகொண்டிருக்கிறார்கள் பலர். இவர்களுடன் அவர்களின் மனதறிந்து பேசிப் பேசியே இவர்களின் மனதுக்கு களிம்பாகலாம் நாம். இவர்களின் அப்பாவித்தனத்தை சாதமாக்கிக்கொள்பவர்களுக்கும் குறைவில்லை. அதேபோல் இவர்களை எள்ளல் பண்ணுபவர்களுக்கும், வார்த்தைகளினால் கொல்பவர்களுக்கும் குறைவில்லை.

”அவர்” இருக்கிறார் அல்லது இல்லை என்பதற்கப்பால், மாமா ”அவர்” இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதில் அவர் மகிழ்வுறுகிறார், நம்பிக்கையடைகிறார். முதுமையில் நோயாளியாளியாக தனது இறுதிக்காலத்தை கடந்துகொண்டிருப்பவரிடம் யதார்த்தம் என எனது கருத்துக்களை திணிப்பதானது அவரது யதார்த்தத்தை நான் புரிந்துகொள்ளவில்லை போலாகிவிடும். சகமனிதனின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் மதிப்புக்கொடுப்பது அவசியம். அது எம்மால் புரியமுடியாததாய் இருப்பினும் கூட.

மாமா எழுந்து வாசல்வரை வந்து வழியனுப்பினார். வாகனத்தில் ஏறியபின் அவரைப்பார்த்து கையசைத்தேன். பதிலுக்கு அவரும் கையசைத்தார். அவரது கையில் நான் எழுதிய ”படுவான்கரை, போரின் பின்பான வாழ்வும் துயரமும்” புத்தகம் இருந்தது.

000000000

 

26 Comments

  1. ஒரு இயல்பான சந்திப்பை வழக்கதிற்கு மாறான இயல்பில் வழங்கியிருக்கும் இப்பதிவாளர் எம்முடைய மிகுதியான போற்றுதல்களுக்கும் மட்டுமின்றி பல புரிதல்களுக்கும் உரியவர். வாழ்வின் ஆழமான தருணங்களில் அமைதியாக வாழ வழி வகுக்கும் சிறந்த கட்டுரை

Post a Comment