Home » இதழ் 17 » *விம்பம் 8th International Tamil Short Film Festival 2015, மற்றும் பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம்-யமுனா ராஜேந்திரன்

 

*விம்பம் 8th International Tamil Short Film Festival 2015, மற்றும் பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம்-யமுனா ராஜேந்திரன்

 

vim-2

vim

ஒரு தசாப்தத்திற்கு மேலாகத் தொடரும் பணி!
————————————————————–—————-

நமது தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படங்களில் உருவாக்கமும் அதன் தேடலும் பேசு பொருளும் நமக்கான காத்திரமான சினிமாவை நோக்கிய எதிர்பார்ப்பில் ஓரளவு நம்பிக்கையான மாற்றங்களை, வெளிச்சங்களை கோடிட்டு காட்டி வருகின்றது. ஆளுமைமிகு படைப்பாளிகளாக, சினிமா கலைஞர்களாக வளரவேண்டிய ஒரு புதிய தலைமுறை குறுந் திரைப்பட உருவாக்கத்தின் ஊடாக செழுமைப்படுத்தப்பட்டு, நல்ல சினிமாபற்றிய அறிவுடனும் புரிதலுடனும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவுடனும் களத்திற்கு வருகிறார்கள்.

தமிழில் குறுந் திரைப்பட வடிவமே, நமது வாழ்வையும், கலையையும் மெய்ப்பிக்க முனையும் கலைஞர்கள் படைப்பாளிகளுக்கான மாற்று வடிவமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. தமிழில் நல்ல சினிமாவுக்கான அடித்தளமாகவும் இதனைக் கருதலாம். சினிமா என்கிற பரந்துபட்ட தாக்கம் செலுத்தும் கலை வடிவம், தமிழ் வணிக சினிமாவின் மேலாதிக்கத்தாலும் சீரழிவாலும் அதன் உன்னத பெறுமானத்ததை எட்டுவதில் பல நெருக்கடிகளை கண்டே வருகிறது. காதலும் மிகைப்படுத்தப்பட்ட வண்முறையும் பகட்டும் தமிழ்ச் சினிமாவை பெரிதும் ஆக்கிரமித்து இருக்கின்றது.

வணிக மயப்பட்ட தமிழ்ச் சினிமாவின் போக்கிலிருந்து தமிழ்ச் சினிமா, காத்திரமான தளத்தை நோக்கி பயணிப்பதற்கு சினிமாத் துறையில் பணியாற்றும், பணியாற்ற வருகின்ற கலைஞர்கள் மற்றுமல்ல, நல்ல சினிமா மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்களும் கூட்டாக செயற்பட வேண்டிய தேவை உள்ளது. காத்திரமான சினிமா நோக்கிய உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் நாமும் உந்துதலாகவும் கைகொடுப்பவர்களாகவும் இருத்தல் முக்கியமானது.

sorஇந்த வகையில் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் நிகழ்வுகள் வருடம் தோரும் நிகழ்ந்து வருகின்றன. இலண்டனில் இந்த முயற்சியினை “விம்பம்” அமைப்பு 2004ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்து வருகிறது. ஈழம், தமிழகம், புலம்பெயர்நாடுகளை இணைத்து விருது வழங்கும் விம்பத்தின் முதலாவது சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில் தமிழக முன்னணி இயக்குநர் தங்கர் பச்சன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். 2010ம் ஆண்டு விழாவில் அம்ஷன் குமார் அவர்களும் 2012ம் ஆண்டு  விழாவில் பிரதம விருந்தினராக பாலாஜி சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இம்முறை (2015 ஜுலை 18 இல் ) ஆவணப்பட இயக்குனரும் , திரைப்படத்துறை வரலாற்று ஆசிரியரும் ,மிக்சிகன் பல்கலைகழக திரைப்படத்துறை பேராசிரியருமான சொர்ணவேல் ஈஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். இவரது வழிப்படுத்தலில் குறுந்திரைப்பட பயிற்சிப் பட்டறை ஒன்றை விம்பம் ,2015 ஜுலை 11 இல் லண்டனில் நடாத்துகிறது.

 8வது சர்வதேச குறுந் திரைப்பட விழாவினை இலண்டனில் நடாத்த முயற்சிகளை முன்னெடுத்துவரும் “விம்பம்” அமைப்பின் இணைப்பாளரான கே .கே ராஜாவுடன் உரையாடிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள்.

“குறுந் திரைப்பட முயற்சிகள் நமது சூழலில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. புதிய படைப்பாளிகளும் கலைஞர்களும் குறுந் திரைப்பட வெளிக்குள் வந்திருக்கிறார்கள். நானும் ஒரு சில நண்பர்களும் சினிமாத்துறையில் கொண்ட ஆர்வத்தினதும் ஈடுபாட்டின் காரணமாக இந்த முயற்சியில் கடந்த பனிரெண்டு வருடங்களாக ஈடுபட்டுவருகிறோம். இந்த  பனிரெண்டு வருட செயற்பாட்டில் தவிர்க்க முடியாத காரணங்களினால் 2007, 2011,2013,2014ம் ஆண்டுகளில் மட்டும் இந்த நிகழ்வினை நடாத்த முடியாது போய்விட்டது. 2015 விம்பத்தின் 8வது சர்வதேச குறுந் திரைப்பட விழாவுக்கு   உலகெல்லாம் பரந்து வாழும் குறுந் திரைப்பட உருவாக்குனர்கள், தமது படைப்புக்களை எமக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் .இலங்கை, இந்தியா,பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பெருமளவில் குறுந்திரைப்படங்கள்  போட்டிக்கு வந்துள்ளன.  ”

“நாம் இந்த முயற்சியை தொடங்கியதன் நோக்கமே சினிமாவில் ஆர்வமுள்ள, திறமைமிகு ஆற்றல்களை அடையாளம் கண்டு kk-216x300கௌரவிப்பதன் மூலம் அவர்களையும் நமது சினிமாவையும் படைப்பு ஆழமிக்க திறன் மிகு சினிமா வெளிக்குள் நம்பிக்கையுடன் பயணிக்க வைப்பதேயாகும். இது ஒரு சிறு கைகொடுப்பும் தட்டிக் கொடுப்பும்தான். குறுந் திரைப்படத் துறையில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் நமது கலைஞர்கள், படைப்பாளிகள் நல்ல சினிமாவுக்கான அடித்தளத்தினை நமது தேடல்களின் ஊடே வெளிப்படுத்தி வருகின்றனர். புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் குறுந் திரைப்பட முயற்சியில் கடந்த பல வருடங்களாக பலரும் பெரிதும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்”.

“ஒவ்வொரு வருடமும் எமக்கு தேர்வுக்கு வருகின்ற குறுந் திரைப்படங்களில் மிகச் சிறந்த உள்ளடக்கமும் கலைத்திறன் மிகு படைப்புகள் வருவது நம்பிக்கையை தருகிறது. எமது இந்த முயற்சிக்கு இந்தியா, இலங்கை, ஐரோப்பிய நாடுகள், கனடாவிலிருந்து கிடைக்கும் ஆதரவும் பங்களிப்பும், இந்தப் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபடுவதற்கான உந்துதலை எமக்கு தருகிறது.” என்கிறார் விம்பம் அமைப்பின் இணைப்பாளர் கே .கே ராஜா.

இதுவரை நடைபெற்ற விம்பத்தின் ஏழு குறுந் திரைப்பட விருது வழங்கல் நிகழ்வினைப் பார்த்தால், கனடா, டென்மார்க், பிரான்ஸ், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வெளியான குறுந் திரைப்படங்களுக்கும் மேற்படி நாடுகளில் உள்ள கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

• புலம் பெயர்ந்த நாடுகளில் தயாரிக்கப்படும் சிறந்த குறுந்திரைப்படம் –
• சிறந்த ஈழத்து குறுந் திரைப்படம் –
• சிறந்த இந்திய குறுந் திரைப்படம் –
• சிறந்த நடிகர்
• சிறந்த நடிகை
• சிறந்த நெறியாளர்
• சிறந்த ஒளிப்பதிவாளர்
• சிறந்த படத்தொகுப்பாளர்
• சிறந்த திரைப் பிரதி

என ஒன்பது விருதுகள் விம்பம் குறுந் திரைப்பட அமைப்பினரால் வழங்கப்படுகிறது. இத்துடன் விருதுவழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களில் இருந்து, பார்வையாளர் தேர்வு – சிறந்தகுறுந் திரைப்படமும் – தேர்வு செய்யப்பட்டு நிகழ்வில் விருது வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.நமக்கான நல்ல சினிமாவை நோக்கிய தேடலிலும் உழைப்பிலும் ஈடுபடுகின்ற கலைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள். விம்பம் அமைப்பினர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

 (ஆசிரியர் )

 ———————————————————————————————————————————————————————–

 

பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம்-யமுனா ராஜேந்திரன்

 

குறும்படத்தைப் புரிந்துகொள்வதில் தமிழ்ச் சூழலில் இரு சிந்தனைப்பள்ளிகள் இருந்தன. முழுநீளப் படத்திற்கான நுழைவுச்சீட்டாக குறும்படத்தைப் பார்க்கும் பார்வை ஒன்று. தமிழகத்தில் புதிதாக உருவாகிய தகவல் தொழில்நுட்ப ஊடகவியல் கல்லூரிகளும் ‘நாளைய yamuna-01இயக்குனர்கள்’ போன்ற குறும்படப் போட்டித் தொடர்களை நடத்திய தமிழக பகாசுரத் தொலைக்காட்சிகளும் இந்தச் சிந்தனையை ஊட்டி வளர்த்தன. பிறிதொரு பார்வை அதுவரையிலும் திரைப்படத்தினை கையகப்படுத்த முடியாதிருந்த விளிம்பு நிலையாளர்களின் ‘எதிர்ப்புக் கலை வடிவமாக’க் குறும்படத்தைப் புரிந்துகொண்டிருந்த தமிழகப் பார்வை. ஈழத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி உருவாக்கிய குறும்படங்களும், பிரித்தானியாவின் ஸ்கிரிப்ட் நெட் அமைப்பின் அணுசரணையில் நண்பர்கள் உருவாக்கிய ஆரம்பகாலக் குறும்படங்களும், ஈழத் தமிழர்கள் உருவாக்கிய புகலிடப் படங்களும் இரண்டாவது சிந்தனைப் பள்ளி சார்ந்தே எழுந்தது.

பாரிஸைத் தமிழ்க் குறும்பட மறுமலர்ச்சியின் தாயகம் எனத் தயக்கமின்றிச் சொல்லவேண்டும். அந்த நகரின் தமிழ்க் குறும்படக் கலைஞர்கள் திட்டமிட்டதொரு ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து குறும்படங்களைக் கொண்டுவரும் ஒரு பட்டறைபோல இயங்கத் துவங்கியிருக்கிறார்கள். திறன் வாய்ந்த நடிகர்களாலும் தொழில்நுட்பக் கலைஞர்களாலும் அவர்களது கூட்டிழைப்பின் விளைச்சலாக குறும்படங்கள் உருவாகி இருக்கின்றன. ஈழக் குறும்பட வளர்ச்சிக்காக பாரிஸ் நண்பர்கள் தோற்றுவித்த லிப்ட் எனும் நிறுவன அமைப்பின் நடைமுறை விளைச்சலே இந்தக் கூட்டுழைப்பின் அறுவடையான குறும்படங்கள் என்று சொல்ல வேண்டும். இது ஈழக் குறும்பட வளர்ச்சியில் இன்னுமொரு பாய்ச்சல்.

2009 இக்கு முன்பாக வடகிழக்கிலிருந்து இருவிதமான குணம் கொண்ட படைப்புக்கள் வெளியாகின. விடுதலைப் புலிகள் நிதர்சனம் தொலக்காட்சியினாடே படங்களை உருவாக்கினார்கள். பிரித்தானிய ஸ்கிரிப்ட் நெட் ஆதரவில் நியூஸ் ரீல் அமைப்பு படங்களை உருவாக்கியது. போராட்டத்தின் அரசியலை நிதர்சனம் படங்கள் சொல்ல, அதனது விளவுகளை நியூஸ் ரீல் படங்கள் சொல்லின. குறிப்பாக குழந்தைகளின் உளவியலிலும் உடலிலும் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களை நியூஸ் ரீல் படங்கள் சொல்லின. 2009 மே 18 இக்குப் பிற்பாடான காலம் முதல் 2012 டிசம்பர் வரையிலான காலத்தில் வடகிழக்கில் என்னவிதமான படங்கள் வந்திருக்கின்றன? விடுதலைப்புலிகள் அமைப்பின் அழிவுடன் நிதர்சனமும் முடிவுக்கு வந்தது. நியூஸ் ரீல் இப்போது வடகிழக்குப் பிரச்சினைகளில் இருந்து நகர்ந்து கொழும்பையும் தென்னிலங்கையையும் களமாகக் கொண்டு படங்களை உருவாக்கின.

இக்கால கட்டத்தில் மேலே குறிப்பிட்ட இரு அமைப்புக்களும் அல்லாது சுயாதீனமான இயக்குனர்களால் எடுக்கப்பட்ட மூன்று வடகிழக்குத் திரைப்படங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. பேரழிவின் பின்பான காலத்தில் வெளியான பள்ளிக் கூடம் (கே.சிறிகந்தவேல் வன்னி) அடிவானம் (வை.சுஜீதன்-திருகோணமலை) எழுத்துப் பிழை (கே.சுதர்சன் – யாழ்ப்பாணம்) போன்றன இந்தத் திரைப்படங்கள். இந்த மூன்று படங்களுமே குழந்தைகள் பற்றியவை. அவர்கள் வாழ நேர்ந்த வறுமையான சூழல்கள் பற்றியவை. சாக்லெட் துண்டம் ஒன்றுக்காகப் பிச்சைக்கார முதியவரிடம் காசுவாங்கி சாக்லெட் வாங்கப்போக, விலை இன்னும் அதிகம் என குழந்தைக்குச் சாக்லெட்டை மறத்துவிடுகிறார் கடைக்காரர். வறுமையும் வறுமையின் கோரமும், பிச்சைக்கார முதியவரின் மனிதமும், விடாப்பிடியாகச் சாக்லெட்டைச் சுவைத்துவிடும் சிறுவனின் வேட்கையும் அசலான வாழ்வுப் பின்னணியில் படமாக்கப்பட்டு இருக்கிறது. சிறுவன் நுட்பமாக நடித்திருக்கிறான். திருகோணமலையில் இருந்து வந்த படம் இது. எழுத்துப்பிழை சதா குடித்துத் திரியும் தகப்பனும், அவனது குடிக்காக பாலியல் தொழிலாளியாகும் தாயும், அவர்களது பெண் குழந்தையும் குறித்த படம். தனது தாய்க்கு உடல் சுகவீனமான நிலமையிலும் வாடிக்கையாளரிடம் போக அவளை வலியுறுத்துகிறான் தந்தை. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் குழந்தை தாய்க்குப் பதிலாகத் தான் போகிறேன் எனத் தந்தையிடம் சொல்கிறது. இப்படம் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது. பள்ளிக்கூடம் திரைப்படம் கல்வித்துறை என்பது ஆங்கிலமயமாகியும் கார்ப்பரேட் வகைமாதிரியாக ஆகியும் வருவதைச் சித்தரிக்கிறது. காலில் சப்பாத்து இல்லாமல் ஸ்லிப்பருடன் பள்ளிக்கூடம் போகும் குழந்தையை பிற வகுப்புக் குழந்தைகள் அவமானப்படுத்துகின்றனர். திருட்டுப்பட்டம் கட்டுகின்றனர். மனத்தளவில் பாதிக்கப்படும் அவள் மருத்துவரிடம் எடுத்துச் செல்லப்படுகிறாள். பிரச்சினையின் தீர்வாக, நன்றாகப் படித்து மருத்துவப் பட்டமும் பெறுகிறாள் அவள். மருத்துவப் பட்டம் பெற்ற மகளுக்கு அதே தகுதியுடன் மாப்பிள்ள பார்க்க வேண்டிய தந்தையின் கவலையுடன் படம் முடிகிறது. வறுமையை வைத்து குழந்தைகளை அவமானப்படுத்த வேண்டாம் எனும் போதனையுடன் படம் முடிகிறது. கல்வித்துறை சார்ந்த வியாபார நோக்குக்கு எதிராகத் துவங்கும் படம், அவமானத்துக்கு உள்ளாகும் குழந்தைகளிடமிருந்து மருத்துவர்களும் தோன்றலாம் எனும் சுபச்செய்தியுடன் முடிகிறது.

வடகிழக்கின் இந்த மூன்று படங்களையும் இணைக்கும் பொதுக்கருத்தாக குழந்தைகள் வாழ நேர்ந்திருக்கும் வறுமையான சூழுலை நாம் குறிப்பிடலாம். இந்த மூன்று திரைப்படங்களிலும் குழந்தைகள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடிவானம் திரைப்படம் தொழில்நுட்பக் கச்சிதத்தைக் கொண்டிருக்கிறது.

முன்பாக வடகிழக்கைக் கதைக்களமாகக் கொண்டு குறும்படங்களைத் தந்துகொண்டிருந்த ஸ்கிரிப்ட் நெட், 2009-2012 காலகட்டத்தில் கொழும்பையும் தென்னிலங்கையையும் கதைகூறும் களமாகக் கொண்டு, த மேஜிகல் ஹோல் (செவ்வந்தி), முதல்நாள் (ஜே.சைலஜன்), த 1-20 (1)நூன் (முஜீன்), 100 பர்சன்ட் டிஸ்கவுண்ட் (நிலானி பாஸ்கரன்), த நைவ்ஸ்((ஜே.பி.ஜே.அனந்தராமன்) என ஐந்து படங்களையும், காமன்வெல்த் மீடியா டெவலப்மென்ட பன்ட் அனுசரணயுடன் பாடி(பிரனீத் ஜீவந்த்தா) எனும் குறும்படத்தையும் தந்திருக்கிறது. இப்படங்களில் த மேஜிகல் ஹோல், முதல்நாள் மற்றம் த நூன் என மூன்று குறும்படங்களும் குழந்தைகள் குறித்தவை. புதிதாகக் குடியேறும் இடத்தில் இரு குடியிருப்புக்கும் இடையிலுள்ள சுவற்றில் இருக்கும் துளைவழியாக ஒரு சிறுமியைக் காணும் சிறுவன், ஆங்கில தேவதைக்கதைக் கார்ட்டூன் பாத்திரமான சின்ரல்லாவாகச் சிறுமியைக் கற்பனை செய்து கொள்வதைப் பற்றியது த மேஜிக் ஹோல் படம். சிகரெட் குடிப்பதிலுள்ள குறுகுறுப்பான முதல் அனுபவத்தை பதின்வயதுச் சிறுவனின் அவஸ்தையுடன் சொல்கிறது முதல்நாள். பசியால் வாடும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு முதலில் பிஸ்கெட்டும், பிற்பாடு மிளகாய்ப் பொட்டணமும் தரும் அன்பான சிறுமியொருத்தியைப் பற்றியது த நூன் படம். கைபேசியில் வரும் ஆண்குரலின் பரவசத்தில் தான் செய்ய நேர்ந்திருக்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் காசியர் தொழிலில் கோட்டைவிடும் பெண் பற்றியதும், அவளை ஏமாற்றம் வாலிபனும் யுவதியும் பற்றியதுமான கதை 100 பர்சன்ட் டிஸ்கவுன்ட்.

மொழியற்ற திரைப்படம் எனும் முன்னறிவிப்புடன் துவங்கும் த நைவ்ஸ் மூவின மக்களுக்கிடையிலான வன்முறையின் இடையிலும் உயிர்த்திருக்கும் மனிதம் பற்றிப் பேசுகிறது. நெற்றியில் பொட்டு வைத்த தமிழ்க் குழந்தையொன்றுக்கு முடிவெட்டிக் கொண்டிருக்கிறார் ஒரு தகப்பன். முடிதிருத்துபவர் ஒரு இஸ்லாமியர். கலவரம் துவங்கிவிட அனைவரும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஓடுகிறார்கள். துரத்தும் கும்பலால் ஒருவர் வெட்டிக் கொல்லப்படுகிறார். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கென கடத்தப்படுகின்றனர். இறைச்சி வெட்டிக் கொண்டிருக்கும் இஸ்லாமியர், தோட்ட வேலை செய்யும் சிங்கள விவசாயி என இருவரும் பெண் குழந்தையையும் தகப்பனையும் பாதுகாக்கிறார்கள். திரைப்படம் காட்சியால் உணர்த்தப்படுவது என்பதற்கு எடுத்துக்காட்டான படம் த நைவ்ஸ். கலவரக்காரர்கள், இறைச்சி வெட்டும் இஸ்லாமியர், தோட்ட வேலை செய்யும் விவசாயி எனும் மூவரிடமும் கத்திகள் இருக்கின்றன. இருவர் அதனைத் தொழிலுக்கு எனப் பாவிக்கின்றனர். கலவரக்காரர்கள் அதனை அழிவுக்கு எனப் பாவிக்கின்றனர். காட்சிரூப ஊடகம் எனும் அளவில் மனிதர்களின் வித்தியாசமான உடல்களாலும் கலாச்சாரச் சின்னங்களாலும் குறியீடுகளாலும் அர்த்தம் பெறும் கச்சிதமான குறும்படம் இது.

பெண்ணுடல் உயிருடனும் உயிரற்றும் ஆண்மனத்தினால் எவ்வாறு பாவனைக்கு உள்ளாகிறது என்பதைப் பேசுகிறது த பாடி திரைப்படம். பேருந்தில் ஆண்களின் உரசலுக்கு உள்ளாகும் பெண்ணுடல், தங்கும் விடுதிகளில் பாலுறவுப் பாவனைக்கு அழைக்கப்படும் பெண்ணுடல், குண்டுவெடித்துச் சிதறும் ஆண் பெண் உடல்கள், மரணமுற்று மருத்துவமனைச் சவக்கிடங்குக்கு வந்தபின்னாலும் மருத்துவமனைச் சிப்பந்தியால் வல்லுறவுக்கு உட்படும் பெண்ணுடல் என உடலுக்கு நேரும் அவமானங்களைப் படம் காட்சிப்படுத்துகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் இளம்பெண்ணின் உடல் உயிர்பெற்று பிணக்கிடங்கிலிருந்து தப்பி இருளில் ஓடி மறைகிறது. சமூக விசாரணயாகத் துவங்கும் படம் அபத்தத் தத்துவ விசாரமாக அல்லது திரில்லர் படம் போல் முடிகிறது.

வடகிழக்கு கொழும்பு எனத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் 2009-2012 காலகட்டத்தில் வெளியாகின இந்தப் படங்களைப் பார்க்கும்போது பெரும்பாலுமான படங்கள் குழந்தைகளைப் பற்றியதாக இருப்பதனை அறிந்து கொள்ள முடிகிறது. இன்னும் வடகிழக்குப் படங்கள் குழந்தைகள் வாழநேர்ந்த வறுமையான சூழலைப் பற்றிப்பேசுகிறபோது, கொழும்பு சார்ந்த குழந்தைப் படங்கள் அவர்களது குழந்தமைக் கனவுகளின் அலங்காரங்களைப் பேசுகிறது. ஸ்கிரிப்நெட்டினால் உருவாக்கப்பட்ட ஆறு திரைப்படங்களில் முதல்நாள் எனும் படம் தவிர பிற அனைத்தும் ஆங்கிலத் தலைப்புக்களையே கொண்டிருக்கின்றன. இது படைப்பாளர்களுக்கிடையில் எதேச்சையாக நேர்கிறதா, மேட்டிமைத்தனத்துடன் தொடர்புபட்டிருக்கிறதா அல்லது கொழும்புவாழ் தமிழர் வர்க்க இயல்பினால் நேர்கிறதா அல்லது பிரித்தானிய நிறுவன அணுசரணயுடனும் காமன்வெல்த் அமைப்பு போன்ற அமைப்புகளின் நிதியுதவியுடனும் வரநேர்வதால் இவ்வாறு இருக்கிறதா என்பது உண்மையில் ஆய்வுக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் புகலிட யதார்த்தம் குறித்த கணிசமான படங்கள் ஈழம் குறித்த நினைவு மீட்புகள் என்பதுடன் புதிதாக வாழநேர்ந்த சமூகத்தில் மரபான ஈழத் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் கலாச்சார அதிர்வுகளையும் அரசியல் சாரா அனுபவங்களையும் பேசுகிறது.

1-16தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைத் தழுவி அலாரம் அடித்தவுடன் அவனோடு பல்துலக்கத் துவங்கி, அவனைப் பள்ளிக்குக் கொண்டுவிட்டு, பள்ளிக் கூடத்திலிருந்து வீடுவரும் வழியில் பூங்காவுக்குப் போய் விளையாடிவிட்டு, வீடுவந்து அவனுக்குச் சமைத்து உணவருந்தவிட்டு, கதைசொல்லித் தூங்கப்பண்ணுகிறாள் ஒரு இளம்பெண். அவள் காலையில் படிக்கத் துவங்கிய புத்தகம் அநேகமாக இரவில் அவள் இருந்தபடி தூங்கத் துவங்கும்போது இறுதிப் பக்கங்கள் வரை வந்துவிடுகிறது. தாய்மையின் உன்னதம் குறித்து நாம் யோசிக்கத்துவங்கும் அந்நேரம் பின்னிரவு. வீட்டின் முன் வாகனம் வந்து நிற்கிறது. வீட்டிற்குள் வரும் பெண்ணின் கரம் இளம் பெண்ணைத் தொடுகிறது. இதுவரை நாம் பார்த்த அவள் குழந்தை வளர்ப்புத் தாதிப் பெண் என நமக்குத் தெரிகிறது. அந்த வாரத்திற்கான அவளது சம்பளம் வெறும் ஐம்பது யூரோக்கள்தான். அடுத்த நாள் காலையிலும் முன்னாள் போல் வருமாறு அவள் பணிக்கப்படுகிறாள்.

தெருக்களின் ஆழ்ந்த அமைதி. வீட்டின் முன் நிற்கும் பெண் தனது கைப்புத்தகத்தின் இடையில் இருந்து காசோலையை எடுத்துச் சரிபார்த்துக் கொள்கிறாள். இன்னும் சில பக்கங்கள் பிரித்து அச்சிறுவன் அன்னையர் தினத்துக்காகத் தனது தாய்க்கு என வரைந்த சித்திரத்தின் நகல் பிரதியை எடுத்து பார்த்துக் கொண்டு புன்னகைக்கிறாள். புத்தகத்தை மூடிவிட்டு, ஒரு கணம் வீட்டை நிலைத்துப் பார்த்துவிட்டு நடக்கத் துவங்குகிறாள்.

சிறுவன் வரைந்த சித்திரத்தின் அசல் அவனது அன்னை பார்க்கப்பட இருந்து கொண்டிருக்கிறது. நகல் அன்னை யார்? நகர வாழ்வின் உறவுகளின் இயற்திரத்தனமும், அதனது மறுபக்கமாகப் பூத்துஉதிரும் தாய்மையின் உன்னத தருணங்களும் குறித்த குறும்படம் நகல். பெருநகர வாழ்வில் மறைந்திருக்கும் அற்புதமானதொரு தருணத்தை பொன்.சுதா திரையில் படைத்திருக்கிறார். படைப்பு எனும் அளவில் தொழில்நுட்ப மேதைமையுடன் தேர்ந்த நடிப்பு, இயக்கம், இசை, படத்தொகுப்பு எனக் கச்சிதமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு சந்தேகம் இருக்கிறது. பெரும்பாலுமான ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை வகுப்பறைகளில் பெற்றோர்கள் அல்லது பெற்றோர்களால் அங்கீகாரம் தரப்பட்டவர்கள் அல்லாது எவருடனும் குழந்தைகளை வகுப்பறையிலிருந்து அனுப்பமாட்டார்கள். அதுவும் அனைத்துக் குழந்தைகளும் சென்றபின்பு வாகனங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சாலையருகில், குறுபூங்காவில் காத்திருக்கும் தனித்த குழந்தை எனும் காட்சி என்பது சாத்தியமேயில்லை. ஓரு வகையில் அப்படி நேர்ந்தால் குழந்தையின் பெற்றோரும், பள்ளி ஆசிரியரும் தண்டிக்கப்படுவார்கள். பிரான்சில் நிலைமைகள் வேறா என்பது குறித்த பிரச்சினை ஒருபுறமிருக்க, குழந்தை வளர்ப்பில் இது மிகமோசமான அணுகுமுறை என்பதனையும் என்னால் சுட்டாமல் இருக்கமுடியவில்லை.

பெற்றோர்களையும் சமூகத்தையும் பார்த்து கண்களைத் திறவுங்கள் என்கிறார் இயக்குனர் பாஸ்கர். வாழ்வில் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைவது எனும் இலட்சியம் கொண்ட குடும்பத்தலைவன். அவனது மனைவியும் அவனது நோக்குக்கு உடன்படுகிறாள். இப்போது கண்பார்வை மங்கிய நிலையில் இருக்கும் மகனுக்கு வரப்போகிற மனைவிக்கு எழுபது புவனில் தாலி செய்கிறாள். தகப்பன் இப்போது செல்வம் கொழிக்கிற கோவில் ஒன்றின் சொந்தக்காரன். கண்பார்வை இழந்துவரும் மகனுக்குப் கெண்கொடுப்பார் யாருமில்லை. பணம் பணம் என அலைந்த குடும்பத்தினர் சிறுவயதாக இருக்கும்போதே மருத்துவரால் சுட்டிக்காட்டப்பட்ட சிறுவனது மங்கிவரும் கண்பார்வை குறித்து அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. வீட்டிலிருந்து வெளியேற விரும்பும் கண்கள் மங்கிய இளைஞன் தானறிந்த தோழியொருத்தியைத் தன்னை மணந்து கொள்ளுமாறு கோருகிறான். அது நடக்காதபோது தனியனாகிறான்.

புகலிடம் தோற்றுவித்த முதல்தரமான நடிகன் பாஸ்கர். எந்தப் படத்தில், எந்த வேடம் ஏற்றாலும் அந்தப் பாத்திரமாகி இயல்பாக ஆகிவிடும் வித்தை தெரிந்த கலைஞன். பாஸ்கர் இயக்குனராக இதுவரையிலும் ஆரோக்கியமான மெலோ டிராமா படங்களைத்தான் உருவாக்கி வந்திருக்கிறார். பாசமலர், பாகப்பிரிவினை போன்ற படங்களின் சொல்நெறிதான் பாஸ்கர் உருவாக்க விரும்புகிற படங்களின் சொல்நெறியும். இந்தப் பாணியும் உலக சினிமாவின், தமிழ் சினிமாவின் சொல்நெறிகளில் ஒன்றுதான். கருத்தேர்வினாலும், தொழில்நுட்ப மேன்மையாலும் மட்டுமே இத்தகைய படங்களை யதார்த்தமான படங்களாக உருவாக்க முடியும். பாஸ்கர், அனுஜனா மற்றும் தந்தையாக நடித்தவரின் தேர்ந்த நடிப்பைக் கொண்ட இப்படத்தில் இசை முற்றிலும் இசைவற்றுப் பாவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பாஸ்கரின் திருமணம் தொடர்பாக, பாஸ்கர் அடுத்த அறையில் தங்கியிருக்க, கல்யாணத்தரகரின் முன் கணவன் மனைவி உக்கிரமாகத் தர்க்கிக்கும் காட்சியின் இசை அக்காட்சிக்கு முற்றிலும் பொறுத்தமற்றது. மனித உணரச்சிகள் மோதிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் அந்த இடத்திற்கு இசை அவசியமேயில்லை.

1-29இயந்திரமயமான புகலிட வாழ்வில் கைவிடப்பட்ட பெற்றோர்களின், முதியவர்களின் இருண்ட வாழ்வைப் பேசும் சருகு(வி.அனுஜனா), உறவுகளின் பிரிவினாலும், வன்முறை வாழ்வினாலும், புகலிடக் கலாச்சாரச் சூழலை எதிர்கொள்ளும் பதட்டத்தினாலும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள விழையும் இளைஞனது அனுபவங்களைச் சொல்லும் அம்மாவுக்கு ஒரு கடிதம்(எஸ்.வி.ஜெயராஜ் : பிரித்தானியா), மரபுரீதியான பேசிவைத்த திருமணங்கள் உடைவதால் அல்லது புதிய கலாச்சாரம் தோற்றுவித்த சுதந்திரத்தினால் ஏற்படும் மனமுறிவினால் திருமணம் மீறிய உறவு மேற்கொள்ளும் ஈழப் பெண்களைத் தேடித்தேடிக் கொலை செய்யும் மனம்பிறழ்ந்த ஒரு கணவன் பற்றிப் பேசும் கலாச்சாரம் (பி.கேதாரன்), கைவிடப்பட்ட, ஊனனமுற்ற பெற்றோர்களின் துயரைப் பகிர்ந்து கொள்ளும், தனித்து வாழும் மனிதர்களின் மானுடநேயம் பற்றிச் சொல்லும் ஆசவாசம்(கே.பிரேம்), வேலையற்ற இளைஞர்கள், கணவர்களால் சந்தேகிக்கப்பட்டு நள்ளிரவில் வீட்டை விட்டுத்துரத்தப்படும் பெண்கள், அவர்களுக்கு அடைக்கலம் ‘நள்ளிரவு’ இளஞர்கள் என பாரிஸ் நகரத்தின் ஈழமனிதர்களின் இரவு வாழ்வை அலசும் தீரா இருள்(சதா பிரணவன்), சமப்பாலுறவுத் தோழிக்காக முறைப்படி செய்யப்பட்ட திருமண பந்தத்தை உதறிக் கணவனை முதலிரவு அறையிலிருந்து வெளியேற்றும் பெண் குறித்த இனி அவள்(ஐ.வி.ரமணன்), மத நம்பிக்கையும் கலைசார்ந்த உன்மத்த மனநிலையும் பொதுச் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தும் ஓவியக் கலைஞனொருவனின் மனோநிலை குறித்துப் பேசும் அம்மணம்(ஐ.வி.ஜனா), திருமணத்திற்கு முந்திய உறவில் நேரும் கரப்பத்தை, காதலன் விபத்தில் இறந்தபின்னாலும் காப்பாற்ற முடிவெடுக்கும் பெண்ணின் தாய் குறித்த நன்றி, அம்மா (வி.அனுஜனா) என புகலிட வாழ்வின் வேறுபட்ட நிறங்களைப் பேசும் குறும்படங்களும் புகலிடத்தில் உருவாகி வந்திருக்கின்றன. புகலிட அனுபவங்கள் குறித்த அரசியல்சாரா ஈழப்படங்களின் பொதுவான பண்புகள் என கைப்பு, துயரம், கையறுநிலை, மரபழிவு, வன்முறை, தற்கொலையுணர்வு போன்றவற்றை நாம் குறிப்பிட முடியும். உண்மையில் ஆழ்மனதில் புகலிட ஈழத்தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் இந்த இருண்ட சித்திரம், அவர்தம் கடந்த மற்றும் நிகழ்கால அனுபவங்களையும் மரபான உறவுச்சிதறல்களையும் வைத்துப் பார்க்கிறபோது எவருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கமுடியாது.

மிகுந்த அரசியல் பிரக்ஞையுடன் குறும்படங்களை உருவாக்குபவர்கள் பிரான்சைச் சேர்ந்த சதா பிரணவன், ஐ.வி.ஜனா மற்றும் ஐ.வி.ரமணன் போன்றோர். ஐ.வி.ஜெனாவின் வாக்குமூலம் குறும்படம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத்துணைச் செயலாளர் தோழர்.சி.மகேந்திரன் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வந்த வீழ்வோனென்று நினைத்தாயோ? தொடரின் அத்தியாயமொன்றினை அடிப்படையாகக் கொண்டது. ஐ.வி.ஜெனாவின் வாக்குமூலம் முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டு கண்காணாத மறைவிடத்தில் வைக்கப்பட்டு இன்றும் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழ்ப் போராளிகள், அதனோடு போராளிகள் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெகுமக்கள் என இருதரப்பினரதும் வலிகளையும் பாடுகளையும் சொல்கிறது. தம்மோடு தொர்பு கொண்ட தமது சக போராளிகளைக் காட்டிக் கொடுக்கச் சொல்லிச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருண்ட கருங்கல் அறைகளின் சுவர்களுடன் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட போராளிகளின் உடலின் மீது மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் சாவின் ஓலத்துடன் தொடர்கிறது. கைவிரல் நகங்கள் குறடுகள் கொண்டு பிடுங்கப்படுகின்றன. திருகாணி போன்றதொரு இரும்புக்கருவி முதுகிலும் வயிற்றிலும் இறங்குகிறது. இரத்தவிளாறாய் கத்தியின் கீறல்களில் இருந்து உடலெங்கும் குருதி கசிகிறது. சித்திரவதையின் பின் வாக்குமூலம் வாங்கும் படலம் தொடர்கிறது. யார் உன்னுடன் தொடர்பு கொண்டவர்கள்? உண்மையைச் சொல்லிவிடு. உன்மத்த மனநிலையில் இறுகிய முகத்துடனும் தெளிவுடனும் போராளி உண்மையைச் சொல்கிறான். மகிந்த ராஜபக்ச@ கோத்தபாய ராஜபக்ச@ பசில் ராஜபக்ச நாமல் ராஜபக்ச கருணா என்பவன், கொஞ்சம் இடைவெளிவிட்டு பக்ச என நக்கலுடன் போராளி முடிக்கிறான்.

வாக்குமூலம் போராளியின் பின்புறம் வெள்ளைத்துணியால் நிறைக்கப்பட்டு வீடீயோ காமெராவினால் படம் பிடிக்கப்படுகிறது. இருள். படம் முழுக்கவும் இருள். பகல் விடிகிறபோது அடர்ந்த காடுகளுக்குள் இட்டுச் செல்லப்படும் போராளிகளுக்கு இன்னொரு வேலை காத்திருக்கிறது. இதனை இலங்கைப் படையினர் சித்திரவதையின் வடிவமாகக் கையாள, போராளிகள் அதனைத் தமது சக போராளிகளுக்கான தமது இறுதி அஞ்சலியாகச் செய்து முடிக்கின்றனர். சித்திரவதையின் பின் கொல்லப்பட்ட, தம்மால் யாரென அடையாளம் காணமுடியாத, இரத்தம் கசியும் வெறும் மூட்டைகளாக எஞ்சிப் போன போராளிகளின் பிணங்களை இந்தப் போராளிகள் எரித்து முடிக்க வேண்டும். சொந்தங்களைத் தமது கைகளால் எரிப்பது புனித மரபு. அடுத்து இந்த மூட்டைகளில் வரப்போவது தம்மில் எவராகிலும் இருக்கலாம், யாரென அறியாமலே அந்த உடலை எரிப்பவர்களில் ஒருவராக மிஞ்சியிருப்பவர்களில் எவரும் இருக்கலாம். உடல்கள் எரிகின்றன. எரிவதைப் பார்த்து நிற்கும் போராளியின் உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் பாயும் உடலிலிருந்து தெறிக்கும் இரத்தம், நாம் பார்த்திருக்கக் காமெராவில் சிதறி முழுவதுமாகத் திரையில் படிந்து திரை கறுமையாகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதி நாட்களில் பிடிபட்ட போராளிகளின் எண்ணிக்கை பதினோராயிரம் என்கிறது இலங்கை அரசு. கொல்லப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை இருபத்தியிரண்டாயிரம் என்கிறது அதே இலங்கை அரசு. கொல்லப்பட்ட, சந்தேகத்தில் பிடிபட்ட வெகுமக்களுக்கு எந்தக் கணக்கும் இல்லை. என்ன ஆனார்கள்? கைது செய்யப்பட்ட போராளிகளின் கதி என்ன? ரகசியமான சித்திரவதை முகாம்கள் இலங்கையில் செயல்படுகின்றன என்கின்றன மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கை. இந்தக் கண்காணாத இடத்தில் சித்திரவதை செய்யப்படும், கொல்லப்படும், எரிக்கப்படும் போராளிகளை, வெகுமக்களை அவர்களது இருண்மையான காணாமல் போதலை ஆவணப்படுத்துகிறது வாககுமூலம் ஆவணப்படம். இவர்களில் பாலகுமாரன் மற்றும் அவரது புதல்வர், புதுவை இரத்தினதுரை போன்றவர்களும் இருந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது இருந்திருக்க வேண்டும். ஐ.வி.ஜெனா திரைப்படம் இலங்கையின் அரசியல் வாழ்வின் இந்த இருண்ட அத்தியாயத்தை இருண்மையான ஒளிப்பதிவுடன் இருண்மையான இசையுடன் நமக்கமுன் கொண்டுவந்திருக்கிறார். படத்தின் 5 நிமிடங்களில் கடைசி 3 நிமிடங்கள் தவிர குறுகிய இருண்ட அறையில் வியர்வையும் இரத்தமும் நனைந்த உடல்களின் அருகாமைக் காட்சியுடன் சகிக்க முடியாத வன்முறையைச் சகிக்கவொணாது நாம் முகம் திருப்பிக் கொள்ளும் குரூரத்துடன் காட்சிகள் விரிகிறது. கச்சிதமான திட்டவட்டமான படத்தொகுப்பு. கதைத்தேர்வு – தொழில்நுட்பம் – அதனது இயங்கியல் ஒருமை என அனைத்தையும் சாதித்திருக்கும் குறும்படம் ஐ.வி.ஜெனாவின் வாக்குமூலம்.

ஐ.வி ஜனாவின் விட்டில் அப்போதுதான் பிரான்ஸ் விசா பெற்ற குடும்பஸ்தர் தமது நண்பர்களுக்கு மதுவிருந்து தரும் நிகழ்வுடன் துவங்குகிறது. அவர் தனது மனைவி குழந்தைகளை பிரான்ஸ் அழைக்கத் திட்டமிடுகிறார். அவரது 18 வயது மகளை அழைப்பதில் இருக்கிற சட்டச் சிக்கல் அவருக்குப் பிரச்சினையாக இருக்கிறது. அன்றைய மதுவிருந்தில் அவரது அறைச் சகாவும் பிற இரு நண்பரகளும் கலந்து கொள்கிறார்கள். தனது திருமணம் என்பதனையே தனக்கான பிரச்சினையாகக் கருதும் அறைச் சகா அவரது மகளைத் தான் மணந்து கொள்வதாகச் சொல்கிறார். அது மிகப்பெரும் தர்க்கமாகி வந்த இரு நண்பர்கள் இடைநடுவில் விலகிச் செல்கிறார்கள். விசா பெற்றவர் மனக்கொந்தளிப்புடன் காற்றாடப் போய்விட்டுவர வெளியில் கிளம்பும்போது, அறைச் சகா அவரைப் பின் தொடர்கிறார். அவரைத் தவிர்த்துவிட்டு கதவைத் திறந்து வெளியேறி, கதவைச் சாத்துகிறபோது உள்கதவோடு ஒட்டிநிற்கும் அறைச்சகா தடுமாறிவிழுந்து தலையில் அடிபட்டு மரணமடைகிறார். வெளியில் சென்றவர் வீடு திரும்பும் வேளையிலேயே நடந்த மரணத்தை அறிகிறார். அவர் சரணடைந்தாலும், மூன்று நாட்களின் பின் அவர் தகவல் தெரிவித்ததால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனையும் தண்டப் பணமும் விதித்துத் தீர்ப்பு வருகிறது.

இப்படத்தின் உள்ளார்ந்த செய்தி என நான் காண்பது இதுதான். அவரவரது மனஉலைச்சலுடன் வாழும் அறை நண்பர்களின் அன்றாட உறவுகள் முரண்களுக்கு இடையிலும் அவர்களுக்கு இடையில் அடிப்படையான பாசமும் நேசமும் அன்பும் கொண்ட நெகிழ்வான கணங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட மரணத்தின் முன்பு நடக்கும் தரக்கத்தைடுத்து வெளியேறும் நண்பர்கள் விசா பெற்றவர் தமது அறைச் சகாவைக் கொன்றுவிட்டார் எனக் கருது எல்லா நியாயங்களும் உண்டு. அது அப்படியாக நிகழவில்லை. பிணத்தை அறையில் வைத்துக் கொண்டு குழம்பும் அவர் தமது சகாவுடன் அன்பு பாராட்டிய தருணமொன்றினை நினைத்து அழவும் செய்கிறார். மறைந்த சகாவினது தலையை வாஞ்சையுடன் தடவவும் செய்கிறார். விட்டில்கள் என்பது புகலிடம் வந்துவீழும் உளவியல் நெருக்கடி கொண்ட மனிதர்கள்தான். ஓரு சம்பவமாக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கும் இக்குறும்படம் எந்த இடத்தில் முழுமையான திரைஅனுபவமாக அல்லது கலை அனுபவமாக ஆகிறது என்பதனை என்னால் திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை.

ஐ.வி.ஜனாவின் கிழக்கு-மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி, சரக்கு வாகனமொன்றில் பிரான்ஸ் வந்துசேரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான ஈழ அகதி மக்களின் அனுபவங்களைச் சொல்கிறது. எல்லை கடக்கையில் அகதிகளிளொருவரின் கால்கள் தடுக்கும் மரணமுற்ற பெண்ணின் கொலுசுக் கால்கள் அவலத்தின் உக்கிரத்தைத் தெரிவிக்கும் படிமம். கறாராகக் காசு கறந்து கொண்டு இவர்களைக் கடத்தும் ஏஜென்டுகள் குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வுகளைக் கூட இவர்களிடம் காண்பிப்பதில்லை. கைவிடப்பட்ட இடிந்த கட்டிடங்களில் பட்டிணியுடன் இவர்கள் உறங்கச் செய்யப்படுகிறார்கள். வன்முறைக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். நோயில் வீழ்ந்து மரணத்தின் விளிம்புக்கும் சென்று மீள்கிறார்கள். நெடும்பயணத்தில் இவர்களுக்கிடையில் பரஸ்பரம் சகோதர உணர்வும் வளர்கிறது.

பெரும் சரக்கு வாகனத்திலிருந்து ஒரு காரின் டிக்கியினுள் இடம்மாற்றப்பட்டு பதின்ம வயதுச் சிறுவன் பிரான்சில் அவனுக்காகக் காத்திருக்கும் தனது சகோதரனிடம் வந்து சேர்கிறான். காத்திருக்கும் சகோதரன் ஏஜென்டுகளுக்குத் தரும் பணம் அவர்களுக்குப் போதுமானது 1-30இல்லை என்கிறார்கள். தனது அனைத்து வங்கிக்கடன் அட்டைகளில் இருந்தும் பணம் எடுத்துக் கொடுத்துத் தம்பியை மீட்கும் சகோதரன், அவனை அழைத்துக் கொண்டு சுரங்க இரயிலுக்குள் இறங்குகிறான். சட்டைப் பையினுள், பர்சினுள் துளாவித் துளாவிப் பார்க்கிறான். பதின்மவயதுச் சகோதரனுக்கு சுரங்க இரயில் நுழைவுச்சீட்டு வாங்க அவனிடம் காசு மிஞ்சியிருக்கவில்லை. இரும்புத் தடுப்பில் குனிந்து இரயில் நிலையத்தினுள் நுழைந்து நடக்கையில் நுழைவுச்சீட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக்கொள்ள, அவர்கள் காவல்துறையினரை அழைக்க, காவல் துறையினர் அவர்களிடம் குடியேற்றச் சான்றுகளை காட்டச்சொல்லிக் கேட்கிறார்கள். பிரான்சுக்குள் அன்றுதான் நுழைந்த புதின்மவயதுச் சிறுவனிடம் எந்தவிதமான குடியேற்றச் சான்றுகளும் இல்லை. காவல்துறையினர் அவனை இழுத்துச் செல்ல, அவனுக்காகத் தன்னையே இழந்த கையறுநிலைச் சகோதரன் கதறியபடியிருக்க படம் முடிகிறது. அரசியல் ஒடுக்குமுறை மற்றும் இனக்கநைக் காரணங்களால் இவ்வாறு ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் குடிபெயர்ந்த அகதிகளைப் பற்றிய ஆப்ரிக்க இலத்தீனமெரிக்கப்படங்கள் தொகையாக இருக்கின்றன. ஈழத் தமிழர் பாடுகளை மிக நுட்பமாகவும் உக்கிரத்துடனும் சொன்ன படமாக ஐ.வி.ஜனாவின் 3 இரவு 4 பகல் குறும்படம் இருக்கிறது

ஈழப் போராளிகள் குறித்து ஈழத்தில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலுமான படங்கள் போர்ச் சாகசம் குறித்த படங்களாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரச்சாரப் படங்களாகவுமே இருந்தன. அப்பா வருவார், செம்பருத்தி, காற்றுவெளி போன்ற வெகுசில குறும்படங்களே விதிவிலக்காக போராளிகள் வாழ்வின் மானுடப்பக்கத்தைச் சொல்லியனவாக இருந்தன. இந்தப் பிறிதொரு வகையினத்தில் வைத்துப் பார்க்கத் தக்க குறும்படம்தான் ரமணனின் களம். போர்க்காலம் என்பதும் போர்க்களம் என்பதும் வேறுவேறு பரிமாணங்களும் பன்முகப்பட்ட அனுபவங்களும் கொண்டது. கறும்புகையும் மரணமும்தான் போரக்களம் என்று இல்லை. பாலஸ்தீனக் கவிஞன் மஹ்முத் தர்வீஸ் தனது லில்லிப் பூக்களைக் கனவு காணுமொரு போர்வீரன் கவிதையில் சொல்கிறபடி மரணித்த போர்வீரனின் மூடிய கைகளில் இருக்கும் குழந்தையின் புகபைபடம் எழுப்பும் ஆற்றமுடியாத துயர்களையும் கொண்டதுதான் போர்க்களம். அப்படியானதொரு காட்சியை ஈழப்போர்க்களமொன்றின் பின்னணியில் படைத்துக் காட்டுகிறார் ரமணன்.

போரக்களத்தில் உக்கிரமாகச் சமராடும் வீரனொருவன் குண்டுபட்டு வீழ்கிறான். மரணம் அவனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொடும் வலியிலிருந்து மீள்வதற்காக அவன் சயனைடு வில்லையைக் கடிக்க வேண்டும் என்கிறான். சக போராளிகள் அதனை மறுத்துவிடுகிறார்கள். போராளியாக இருக்கும் தனது அக்காவைக் பார்க்க வேண்டும் என்கிறான் அவன். அவனது அக்கா வரவழைக்கப்படுகிறாள். போரக்களத்தில் இறுதிவரை நின்று போரிடுமாறு தனது அக்காவைத் தம்பி கேட்டுக்கொள்கிறான். அன்பான தருணங்களில் தனது அன்னை தனது நெற்றியில் முத்தமிடுவது போல அக்காவைத் தனது நெற்றியில் முத்தமிடுமாறு வேண்டுகிறான் மரணத்தின் விளிம்பில் இருக்கும் தம்பி. சகோதரி குனிந்து அவனது நெற்றியில் முத்தமிடுகிறாள். நிமிரும் அவளது கண்கள் மிரட்சியுடன் நிலைகுத்தி தம்பியைப் பார்க்கிறது. அவளது சயனைடுக் குப்பியைக் கடித்துத் தம்பி உயிர்விட்டிருக்கிறான். அவளுக்கு வேறு சயனைடு குப்பி தரப்படுகிறது. அவள் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் சமரில் தொடர்ந்து போரிட போர்முனைக்குத் திரும்புகிறாள்.

போர்க்களத்தின் உணர்ச்சிவசமான துயர்தோய்ந்த இன்னொரு முகம் இது. எடுத்துக் கொண்ட போர்க்களக்காட்சி, சுமந்து செல்லப்படும் போராளியின் காயம்பட்ட உடல், சகோதரியின் வருகை, அவள் திரும்பிச் செல்லும் காட்சி என கத்திமுனைப் பயணம்போல படத்தொகுப்பு கூர்மையாக இருக்கிறது. இசையின் அதிறல் அதிக வசனங்கள் அற்ற போர்முனைக்கும் மனதின் ஆர்ப்பரிப்புக்கும் உகந்த இசை. ரமணனது முன்னைய குறும்படங்களின் வலிமையான அம்சம் அவர் காட்சியமைப்பை உள்வாங்கும்விதமும் காட்சிக்காகத் தேர்ந்துகொள்ளும் இடங்களும். இந்த வலிமையான அம்சங்களுடன் கச்சிதமான கதைமுடிச்சும் அதற்கியைந்த படச்சொல்நெறியும் கொண்டு நிமிர்ந்திருக்கறது களம் குறும்படம்.

ரமணனின் பிறிதொரு படமான செம்மலையான் படம் ஒரு குறிப்பிட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது, விடுதலைப்புலிப் போராளிகளின் குழுவொன்று சிங்கள ராணுவத்துடன் போராடி வெல்வதைச் சொல்கிறது. சிங்கள ராணுவத்தினர் ஓவ்வொருவராகத் திட்டமிட்டபடி கொல்லப்படுகிறார்கள். ஓருவன் மிஞ்சுகிறான். விடுதலைப்புலிப் போராளிகளால் கொல்லப்படாமல் அவனாகவே அவன் மரணமுறுகிறான் அல்லது கொல்லப்படுகிறான். இது எவ்வாறு நேர்ந்தது? அடர்ந்த வனத்தினுள் ஊரந்து சென்ற செம்மலையான் எனும் பாம்பு தீண்டி இறந்தானா அல்லது வேறு ஏதேனும் வகையில் அவன் இறந்தானா? செம்மலையான் தான் அவனைக் கொன்றது. செம்மலையான் எனும் விஷம்பாம்பு அல்ல, செம்மலையான் எனும் பெயர் கொண்ட ஒரு மரணமுற்ற போராளியின் புதைக்கப்பட்ட உடலில் இருந்த சயனைடுக்குப்பி உடைந்து அது கீறிய காயத்தில் விஷம்பரவி இறந்திருக்கிறான் சிங்கள ராணுவத்தினன். செம்மலையான் எனப் பெயர் எழுதப்பட்ட மரத்துண்டு, விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் இலக்கத்தகடு என அனைத்தையும் மீளவும் போராளியின் எலும்புக் கூட்டுடன் புதைத்துவிட்டு, அவனுக்கான இறுதி அஞ்சலியும் செலுத்திவிட்டு மீள்கிறது போராளிகளின் குழு. இறுக்கமான மனவுணர்வுகளுக்கு இயைந்த இறுக்கமான மிடுக்கான இசை, கத்திமுனை போன்ற படத்தொகுப்பு, இயற்கையான ஒளிப்பதிவு என்பன ரமணின் பட ஆக்கத்திலுள்ள வலிமையான அம்சங்களாக இருக்கின்றன.

சதா பிரணவனின் போராளிக்கு ’இட்ட’ பெயர் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் நடந்தே தீரவேண்டிய ஒரு அரசியல் மறுபரிசீலனையை, எவரும் ஏற்றே தீர வேண்டிய ஒரு புதிய அரசியல் பிரக்ஞையைப் பற்றிப் பேசுகிறது. அரசியலையும் கருத்தியலையம் சுயவிமர்சனமற்றுப் பற்றிப் பிடித்திருக்கும் அரசியல் சார்ந்தவர்களால் செய்ய முடியாததை விடுதலை அறம் குறித்து ஆழ்ந்த பிரக்ஞை கொண்ட கலைஞர்களே வரலாறு நெடுகிலும் செய்து முடித்திருக்கிறார்கள். அந்த அறத்தினது மறக்குரலே சதா பிரணவனின் குறும்படத்தில் வெளியாகியிருக்கிறது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விடுதலை இயக்கங்கள் சார்ந்தவர்களும் தமது கடந்த காலச் செயல்களை மறுவிசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. ஈழத்தின் அனைத்து பிரதான விடுதலை இயக்கங்களிலும் உட்பகைகளைத் தீரத்துக் கொள்வதில், இயக்கங்களுக்கு இடையிலான முரண்களைத் தீர்த்துக் கொள்வதில் படுகொலைகளும் சித்திரவதைகளும் அவர்களது செயல்களின் பகுதியாக இருந்தது என்பது இன்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய அரசியல் பகுதியாக அது நியாயானது என்று நிலைநாட்டுகிற அரசியல் தர்க்கங்கள் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. முள்ளிவாய்க்காலின் பின் அது அனைத்தும் கடந்த காலமாகிப் போனது.

காலம் கடந்தாலும் சித்திரவதையின் வலிகளும் விளைவுகளும் உடலுக்கு நேர்ந்த ஊனங்களும் அவயவ அழிவுகளும் மறந்துவிடாது. அது உடல் இருக்கும் தோறும் வாழும். பழிவாங்கும் உணர்வு என்பதும் உடலில் நிரந்தரமாக உறைந்து கிடக்கும். இன்றும் இயக்கங்களுக்கு இடையிலான, அது சார்ந்த மனிதர்களின் பரஸ்பர வெறுப்புக்கான காரணத்தில் பிரதானமானது இந்த உணர்வு. இன்னும் இயக்க அரசியலில் இருந்து வெளியேறாத அரசியல் சார்ந்தவர்கள் பேசத் தயங்குகிற, பல்வேறு காரணங்களால் உரையாடத் தயங்குகிற ஒரு வெளியில் கலைஞனுக்கே உரிய விடுதலை அறத்தின் துணைகொண்டு மட்டுமே நுழைந்திருக்கிறார் சதா பிரணவன்.

தமது அரசியல் மேலாண்மையை நிலைநாட்ட சக இயக்கங்களைச் சாரந்தவர்களை சித்திரவதைக்கு, படுகொலைகளுக்கு உட்படுத்தியது விடுதலைப் புலிகள் இயக்கம். இலங்கைக்கு வந்த இந்தியப் படையினருடன் சேர்ந்து விடுதலைப் புலிப் போராளிகளை, அதனோடு புலிப்போராளிகள் எனச் சந்தேகம் கொண்ட இளைஞர்களை மாணவர்களை சித்திரவதைக்கும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கியது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இந்த இரு தரப்பிலுமான சித்திரவதைகளுக்கு அரசியல் சூழலின் பகுதியாக இன்றும் தர்க்க நியாயங்கள் சொல்கின்றவர்களுக்கு அப்பால், விடுதலைப் புலிகளுக்கு அப்பாலான, விடுதலையின் பெயரிலும் தமிழ் மக்களின் பெயரிலும் போராட வந்த, துரோகி எனப் ‘பெயரிடப்பட்ட’ அந்தப் போராளிகளுக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் இடையிலான, இருதரப்பு சித்திரவதைகளையும் முன்வைத்த ஒரு இணக்க உரையாடலை சதா பிரணவனின் படம் திறந்து வைத்திருக்கிறது. பின்-முள்ளிவாய்கால் காலத்தில் இலங்கைப் பேரினவாத அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் தேவையின் பொருட்டு நடந்தே தீர வேண்டிய உரையாடல் இது.

சதா பிரணவனின் படத்தின் கதை இவ்வாறு இருக்கிறது : பாரிஸின் லாச்சப்பல் வீதியில் யதேச்சையாகச் சந்தித்துக் கொள்ளும் இருவர். மத்தியதர வயதிலுள்ள ஒருவர் ஒரு இளைஞரைத் தொடர்கிறார். கலவரமடையும் இளைஞர் அவரிடமிருந்து ஓடித்தப்பி அவரைத் தாக்கவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறார். இருவரையும் இணைக்கும் கடந்த காலம் ஒன்று இருக்கிறது. இந்தியப் படையினருடன் இணைந்த போராளிக் குழுவைச் சேர்ந்த ஒருவர் பள்ளிக்கூடம் விட்டுத்திரும்பும் ஒரு மாணவனைக் கடத்தி இந்திய அமைதிப்படை முகாமில் வைத்து புலிப்போராளியான அவனது சகோதரனின் இருப்பிடம் கேட்டுச் சித்திரவதை செய்கிறார். தனக்கு ஏதும் தெரியாது என அரற்றும் அந்த பள்ளி மாணவனின் குரல் அவர்களை எந்தவகையிலும் அசைப்பதில்லை. இரும்புக் கம்பியினால் வளைசெய்து மாணவனின் குறிவிரைகளை மிருகத்தனமாக அழுத்தி அவனைச் சின்னஞ்சிறு வயதில் ஆண்மையற்ற ஜடமாக ஆக்கிவிடுகிறான் சித்திரவதையாளன்.

இப்போது 2001 ஆம் ஆண்டு. கதை நடக்கும் காலமும் அதுதான். முடிதிருத்தகம் ஒன்றில் முடிவெட்டிக் கொண்டிருக்கும் அன்றைய மாணவன் பின்னால் நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான் அன்றைய சித்திரவதையாளன். சித்திரவதைக்கு உட்பட்டவன் ஹாலந்து செல்லவிருக்கும் தமது நண்பர்களுடன் சென்று கள்ளமாகத் துப்பாக்கியொன்றினை வாங்கி வந்து சித்திரவதையாளனைச் சுட்டுக் கொன்றுவிடத் திட்டமிடுகிறான். அப்படியான மனநிலையில் அச்சம்பவத்தை மனதில் கச்சிதமாகத் திட்டமிடுகிறான். அது பேதலித்த மனநிலை. தன்னைத் தொடர்பவனிடம் தப்பிக்க ஓடிச்செல்லும் சித்தரவதைக்கு உட்பட்டவன் தன்னைத் தொடர்பவனின் நோக்கம் பற்றிய பதட்டத்தில் பழிவாங்கும் உணர்வில் தான் துப்பாக்கியைப் பதுக்கி வைத்த இடத்தில் தேடுகிறான். துப்பாக்கி அவனது பிரமை. அது அங்கு இல்லை. கிடக்கும் ஒரு கண்ணாடிச் சட்டகத்தை எடுத்துக் கொண்டு ஓங்கியபடி கதவு மறைவில் நிற்கிறான். சித்திரவதையான் அவனை நெருங்கும்பொது அவனைக் கண்ணாடிச் சட்டடகத்தால் அடிக்க அவன் எதிர்திசையில் வீழ்கிறான்.

நகரத்தின் ஓதுக்குப்புறமான உடைந்த கட்டிடப் பாகங்கள் கொண்ட நீள் தெரு போன்ற வாகனத் தரிப்பிடம் அது. கட்டிப் புரண்டு பின் ஓய்ந்து எதிரெதிரில் சுவர்களில் சாய்ந்து கால்களை நீட்டியபடி மூச்சு வாங்க ஒருவரையொருவர் வெறித்தபடி வீழ்ந்திருக்கிறார்கள். இயக்க அரசியலுக்குத் தொடர்பில்லாத தன்னை ஒரு மாணவனான என்னை ஏன் அப்படி சித்திரவதை செய்தாய்? என்கிறான் சித்திரவதைக்கு உள்ளானவன். நான் செய்தவைகளுக்கு உன்னிடம் மன்னிப்புக் கோரவே வந்தேன். நான் அச்சூழலில் அரசியலால் வழிநடத்தப்பட்ட வேறு வழிகள் விட்டவைக்கப்படாத நிலையில் அவ்வாறு இயங்க நேர்ந்தது என்கிறான் சித்திரவதையாளன். அல்லவெனில் நான் கொல்லப்படுவேன் என நான் அஞ்சினேன் என்கிறான் அவன்.

உரையாடல் இவ்வாறு தொடர்கிறது : உனக்கு மணமாகிவிட்டதா? குழந்தைகள் இருக்கிறதா? இல்லை. எனக்கு மணமாதலே முடியாது, என் ஆண்மையையே நீ சாகடித்துவிட்டாய் தெரியுமா? காலம் நகர்ந்துவிட்டது. இவர்கள் இருவருமே தோல்வியுற்றவர்கள். வாழ்வைப் பறிகொடுத்தவர்கள். அரசியல் சூழலுக்குப் பலியானவர்கள். மன்னிப்புக் கேட்கவும் மன்னிக்கப்படவும் ஆகி நிற்பவர்கள். இந்தப் பிரச்சினையை, உரையாடலை விடுதலைப் புலிகளின் பார்வையில் நின்று சதா பிரணவன் இப்படத்தில் பேசுகிறார். இதற்கு இன்னொரு புறமும் உண்டு. தமது தரப்பில் நின்று விடுதலைப் புலிகள் அல்லாதவர்களும் பேசுவதுதான் அந்தப் பக்கம். இச்சூழலில் போராளிக்கு ‘இட்ட’ பெயர் படத்தின் மிகப் பெரும் வலிமை என்று நான் காண்பது இரு தரப்பு நியாங்களையும் அவரவர்கள் இயங்க நேர்ந்த அரசியல் சூழல்களையும் இருவரதும் உரையாடலில் இப்படத்தில் சதா பிரணவன் ஒரு கலைஞனாக வெளிப்படுத்தியிருக்கும் அந்த அறவுணர்வுதான். இது அரசியல் தாண்டிய தமிழ் மக்களின் விடுதலைத் தேட்டம் நோக்கி நடந்தே தீர வேண்டிய உரையாடல் எனும் அறவுணர்வு.

பதட்டம், பழிவாங்கும் உணர்வு, கோபம், கையறுநிலை, மனப் பேதலிப்பு, கருணை எனத் தனது பாத்திரப்படைப்பில் உயிர் வாழ்ந்திருக்கிறார் சித்திரவதைக்குள்ளானவராக நடித்த சதா பிரணவன். சித்திரவதையாளனாக நடித்தவர் தனது கடந்த காலம் குறித்த குற்றவுணர்வு, இன்றைய வாழ்வின் மீதான சலிப்பு மற்றும் சோர்வு, நிச்சயமின்மை போன்ற உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்குத் தேவையான விரைவும் திகிலூட்டுவதுமான படத்தொகுப்பும் இசைக்கோர்ப்பும் இயைந்து வந்திருக்கிறது. தன்னை மணந்து கொள்ளச் சொல்வதை மறுத்து தாயுடனான சித்திரவதைக்குட்பட்டவனின் விளக்கமுடியாத கையறுநிலை உரையாடல் அவனது மன அமைவை ரகசியமாக நமக்குச் சொல்கிறது.

சதா பிரணவன் புகலிடம் உருவாக்கிய தனித்திறன் கொண்ட அரசியல் சினிமா இயக்குனர் எனலாம். இவரது தினப்பபயணம் எனும் படம் 2009 மே முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பான புகலிட அரசியல் யதார்த்தங்ளை விமர்சனத்துடன் பதிவு செய்கிறது. இந்தக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது புகலிடத்தில் பலகூறுகளாக உடைகிறது. மாவீரர் நாள் என்பதனைப் பல குழுக்கள் நடத்துகின்றன. அரசியல் கூட்டங்களும் பலவாக நடக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கீழிருந்த கட்டுறுதி என்பது குலைந்து இயக்கம் பலவேறாக ஆகிப்போகிறது. இந்த யதார்தத்தினை சதா பிரணவன் தினப்பயணம் மற்றும் இன்றிருபத்தியேழு எனும் இரண்டு குறும்படங்களில் பதிவு செய்கிறார்.

என்றும்போல அன்றும் நண்பர்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறார்கள். இப்போது அவர்கள் இருவிதமான யதார்த்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இயக்கம் இரண்டாக உடைந்திருப்பது எனும் அரசியல் யதார்த்தம் ஒன்று@ இதனால் இரு குழுக்களும் பகமை கொண்டிருக்கின்றன@ அதனால் வன்முறைச் சூழல் நிலவுகிறது. புறப்படுவதற்கு முன்னாள் நண்பர்களின் தாய் ஒருவர், பத்திரமாகப் போய்வாருங்கள் என இதனை நினவூட்டவும் செய்கிறார். பிறிதொறு யதார்த்தம் நண்பர்கள் கூட்டாக எதிர்கொள்ளும் தனிமனித யதார்த்தம். ஓரு திரைப்படமெடுக்க வட்டிக்குக் கடன்வாங்கி அதனைத் திருப்பச் செலுத்த முடியாமல் தேடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். கடன் கொடுத்தவனால் செலுத்தப்படும் கையாட்களால் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தாக்கப்படலாம். அவ்வாறு இரயிலுக்குள் அவர்கள் செமையாகத் தாக்கப்படவும் செய்கிறார்கள். அவர்கள் தாக்கப்படுவதைப் பார்த்தும் அவர்களைக் காப்பாற்ற முனைவதில்லை அவர்களது வேறு இரு நண்பர்கள். ஓருவர் தான் வேலைக்குச் செல்வதற்கு நேரமாகிவிட்டது எனச் சொல்லிவிட்டுப் போகிறார். பிறிதொருவர், இப்போது இயக்கம் பிளவுற்று இருக்கிற நிலையில் தான் அவர்களுக்கு உதவினால் எதிர்த்தரப்பிலுள்ளவர்களால் தனக்குப் பிரச்சினை வரும் என்று சொல்லிவிட்டுப் போகிறார். அன்று நடந்ததை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டாம் என அடிபட்ட ஒரு நண்பர் பிறிதொரு நண்பரிடம் சத்தியம் வாங்கிக் கொள்வதுடன் தினப்பயணம் படம் முடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதி என்பதனை விடுதலைப் புலிகள் இயக்கம் மாவீரர் நாளாக, கொல்லப்பட்ட விடுதலைப் புலிப்போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அனுஷ்டித்து வருகிறது. இந்த மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் என்பது 2009 மே பேரழிவின் பின்பு புகலிட நாடுகளில் இரு வேறு தரப்பினரால் கொண்டாடப்படுகிறது. இந்தப் பிளவுகள் வன்முறையாகவும் வடிவமெடுத்திருக்கிறது. சதா பிரணவனின் குறும்படமான இன்றிருபத்தியேழு இந்தப் பிளவைப்பற்றிப் பேசுகிறது. தனது மூன்று மகன்களை போராளிகளாக இயக்கத்திற்குத் தந்த தாய் ஒவ்வொரு மாவீரர் நாளிலும் மரணமுற்ற தனது மகவுகளுக்கு அஞ்சலி செலுத்துவது வழமை. மூன்று மாவீரர்கள், இரண்டு தனித் தனி நிகழ்வுகள். நோயுற்று நலிவுற்ற தாய் எங்கு செல்வாள்? எனது குழந்தைகளைக் கூறுபோடுகிறார்களே எனக் கவலையுறும் தாய், அவளை அழைத்துச் செல்ல வந்த வாகனத்தில் மயக்கமுற, அவள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறாள். எங்கு செல்வது என்பது குறித்து வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்த, அந்தத் தாயை அழைத்துச்செல்ல வந்தவர்கள் இப்போது தாயின் நிலை கண்டு கலங்க, படம் முடிகிறது. தேசுபனின் கச்சதமான படத்தொகுப்பில் இன்றிருபத்தியேழு எனும் செய்தியைப் படம் சொல்கிறது.

இன்று பிரான்சில் வாழும் ஈழத்தமிழர்களான ஐ.வி.ஜெனாவும், சதா பிரணவனும், ஐ.வி.ரமணனும் தேர்ந்த குறும்படக் கலைஞர்களாக உருவாகி வந்திருக்கிறார்கள். தமக்கான திரைமொழியை, திரைப்படக் கட்டமைப்பை அவர்கள் தொடர்ச்சியாக உருவாக்கி வந்தவர்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பது ஈழத்தமிழரின் அரசியல் வாழ்வில் மட்டுமல்ல அவர்தம் கலை வாழ்விலும் ஒன்றின் முடிவு பிறிதொன்றின் துவக்கம். புதிய பிரக்ஞைக்கான தேவைகள் இன்று நிறைந்து கிடக்கின்றன. புதிய கருத்தியல், புதிய உரையாடல், புதிய சொல்முறை இன்று அவசியம். அந்தத் தேவையான புதிய பாதையில் வாக்குமூலம்- போராளிக்கு’இட்ட’பெயர், களம் எனும் குறும்படங்களுடன் புகலிடத்தின் திரைக்கலைஞர்கள் பிரவேசித்திருக்கிறார்கள். 2009 பேரழிவின் பின்பு, இலங்கையில் நிவிவரும் எந்தவிதமான கருத்துச் சுதந்திரத்திற்கும் இடமற்ற ஒடுக்குமுறைச் சூழலில், படைப்பாளர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளச் சுதந்திரமற்ற வடகிழக்கிலும் கொழும்பிலும் பேசமுடியாத ஈழஅரசியலை இவர்கள் தமது குறும்படங்களில் பேசுகிறார்கள். இது புகலிட சினமாவினது மட்டுமல்ல முழு ஈழத்தமிழ் சினிமாவினதும் எதிர்கால வளர்ச்சிக்கான நல்லதொரு சமிக்ஞையாக இருக்கிறது.

0000000000

2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான தமது மூன்றாண்டுகாலத் திரைப்படக் களஞ்சியத்தை – குறுந்தகடுகள் மற்றும் குறும்பட ஸ்டில்கள் – இந்தக் கட்டுரை எழுதுவதற்காகத் தந்துதவிய இலண்டன் விம்பம் திரைப்பட விழாவின் அமைப்பாளரும் எனது அன்பு நண்பருமான ஓவியர் கே.கிருஷ்ணராஜாவுக்கு எனது மனமார்ந்த நன்றி உரியது. வடகிழக்கு மற்றும் கொழும்பு சார்ந்த கிடைத்தற்கரிய திரைப்படங்களை அவர் எனக்குக் கொடுக்காமலிருந்திருந்தால் வடகிழக்கு – கொழும்பு – புகலிடம் என பின்-முள்ளிவாய்க்கால் காலகட்டத்தின் முழு ஈழத் தமிழ்க் குறும்படங்கள் குறித்த ஒரு ஒப்பாய்வுக்கான வாய்ப்பு எனக்கு நிச்சயம் இல்லாது போயிருக்கும். நண்பனே, நன்றி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment