Home » இதழ் 17 » *தெறிவினைக் குறிப்புகள்: – எஸ்.கே. விக்னேஸ்வரன்

 

*தெறிவினைக் குறிப்புகள்: – எஸ்.கே. விக்னேஸ்வரன்

 

Picture1
கேள்விக்கென்ன பதில்?

———————————
இந்த முதலாவது குறிப்பை எழுதத் தொடங்கும் போது என்முன்னே வந்து இதை எழுது எழுது என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கும் விடயம் இப்போது வலிகாமத்திலுள்ள சுன்னாகத்தைச் சுற்றிய பிரதேசங்களில் எழுந்துள்ள கிணறுகளில் ஏற்பட்டிருக்கும் எண்ணெய்க்கசிவு சம்பந்தமான பிரச்சினை.

இந்த அவசர உலகத்திலே அவ்வப்போது நமது கண்களில் பட்டும் காதுகளால் கேட்டும் மனதில் வலியை ஏற்படுத்துகின்ற பல விடயங்கள் ஒருசில மணி நேரத்திலோ, ஒருசில நாட்களிலோ அல்லது ஒருசில காலத்திலோ மறந்துபோக, கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் சில விடயங்களை எம்மால் மறக்கமுடிவதில்லை. ஆனால் அதற்காக எதையும் தனிநபராகச் செய்யவும் முடிவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் இவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதும் உரையாடுவதும் அவசியமான தேவையாகிவிடுகிறது. இத்தகைய பகிர்தல்கள் உரையாடல்களாக விரிந்து கருத்து வடிவங்களாக வளர்ந்து பிரச்சினைகள் பற்றிய புரிதல் பரவலடைவது ஒருவகையில் ‘ஏதாவது செய்யத்’ துடிக்கும் மனதின் பயனுள்ள செயற்பாடுகளில் ஒன்று தான் என்பது எனது நம்பிக்கை. இந்தக் குறிப்புக்களை எழுதத் தூண்டிய விடயம் இதுதான். இப்படித்தான் எழுத நினைத்ததும் முதலில் இந்தவிடயம் என்முன் வந்து நின்றதும் நடந்தது.

00

எண்ணெய்க் கசிவு படிந்து காணப்படும் கிணறுகளிலுள்ள இந்த நீர் மக்களின் குடி பாவனைக்குகந்த நீரல்ல என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒரு விடயம். ஆயினும் இது தொடர்பாக அரச நிர்வாகத்தரப்பில் போதியளவு அக்கறை காட்டப்படாததால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணசபையால் 03993478ad31892262f91a9c4f03dfc6உருவாக்கப்பட்ட ‘தூய நீருக்கான செயலணி’ நீரில் கலந்துள்ள மாசுக்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவென்று நிபுணர் குழு ஒன்றை நியமித்திருந்தது. ஆனால் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரும் விதத்தில் அந்த நீரில் நச்சுப் பதார்த்தங்கள் ஏதும் இல்லை என்று மார்ச் 23ம் திகதியன்று இந்த நிபுணர்குழு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்தக் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக மாகாண அரசுக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே, அதன் முடிவுகள் பத்திரிகைகளிலும் ஏனைய ஊடகங்களிலும் பரவலாகப் பிரசித்தப்படுத்தப்பட்டன.

ஏற்கனவே சுகாதார அமைச்சினாலும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஆய்வு கூடத்தினாலும் தேசிய வடிகாலமைப்புச் சபையினாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதற்கு நேரெதிரான விதத்தில் அவற்றுள் ஆபத்தான நச்சுத் தன்மை வாய்ந்த கழிவுப் பதார்த்தங்கள் இருப்பதாகவும் சில கிணறுகளில் ஈயம் போன்ற பாரஉலோகக் கழிவுகள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தன. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாண வைத்தியர் சங்கத் தலைவரும் சமூகநல வைத்திய நிபுணருமான முரளி வல்லிபுரநாதன் அவர்கள் முதலமைச்சருக்கு அவசர கவனிப்புக்கும் உடன் நடவடிகைக்குமான ஆறு அம்சங்களை விபரித்து ஒரு கடிதமும் அனுப்பியிருந்தார். ஆயினும் அது தொடர்பான எத்தகைய நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், புதிதாக வெளியிடப்பட்ட நிபுணர்குழுவின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. அவர்களது ஆய்வை நம்பகத்தன்மை அற்ற ஒன்று என்று நிராகரிக்கும்; வைத்தியர் முரளி வல்லிபுரநாதன், அவர்கள் ஆய்வுக்குப் பயன்படுத்திய கருவியான FROG4000, அரச பகுப்பாய்வாளர் திணைக்கள ஆய்வுகூட உபகரணங்களுடன் ஒப்பிடு கையில் ஒரு தரம்குறைந்த, இத்தைகைய ஆய்வுக்கு உகந்ததல்லாத உபகரணம் என்று தெரிவித்துள்ளார்.

மேற்படி நிபுணர் குழுவின் அறிக்கையைப் பிரச்சாரம் செய்வதில் மாகாண அரசால் நியமிக்கப்பட்ட செயலணியும் ஈடுபட்டிருந்ததால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இப்பிரதேச மக்களின் சார்பாக இந்த நீரை நாம் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் விவசாயத்திற்கும் பாவிக்க முடியுமா? என்று தமக்குத் தெரிவிக்குமாறு கோரும் கடிதம் ஒன்று முதலமைச்சரின் பதிலை எதிர்பார்த்துச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நிபுணர்குழு நச்சுக் கழிவுகள் இல்லை என்று தெரிவிக்கிறது என்பதைப் பிரச்சாரப்படுத்தியது, அது குடிபாவனைக்கு உகந்ததா இல்லையா என்ற முக்கியமான விடயத்தை தெரிவிப்பதைவிடவும் முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்திருந்தது.

thellipalai_student_003

இந்த கசிவுக்குக் காரணமாக இருப்பது சுன்னாகம் மின்நிலையத்தின் எண்ணெய்க் கழிவுகள் நிலத்தினுள் ஊற்றப்படுவதே என்ற சந்தேகமும் குற்றச்சாட்டும் பலராலும் முன் வைக்கப்பட்டபோதும் இதுவரை அவற்றைச் சோதித்துப் பரிசீலனை செய்வதற்கான எந்தவொரு திருப்திகரமான சட்டபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்தச் சந்தேகம் இயல்பாகவே யாருக்கும் எழக் கூடிய சந்தேகம்தான். இதனால் மாகாண அரசு குற்றம்சாட்டப்பட்டுள்ள மின்சார நிலையத்தை நடத்தும் ‘நொதேர்ண் பவர்’ நிறுவனத்தின் நலன்களைப் பாதுகாக்கும் விதத்தில் செயற்படுகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இந்த நிலையில் இந்தக கடிதம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முதலமைச்சர் தங்களை இந்த நீரைக் குடிக்கும்படி சொல்கிறாரா என்று பார்ப்பதற்காகவே இக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது என்பது கடிதத்தைப் படிக்கும் போது தெளிவாகவே புரிகிறது.மாகாண அரசும் அதிகாரமும் யாருடையவை என்ற கேள்வியை எழுப்புகின்ற நிகழ்வுகள் அங்கு நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதனை உறுதிப்படுத்திக்கொள்ளக் கேட்ட கேள்வியாக அவரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது அந்தக் கடிதம்.24 மணி நேர அவகாசத்தில் பதில் தருமாறு கேட்டுள்ள அந்தக் கடிதத்திற்கு முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார் என்பதை இந்தக் குறிப்பு எழுதும் வரை தெரிந்து கொள்ள முடியவில்லை.

00000

உண்மையும் அவமானமும்:

————————————

‘யதார்த்தம் ,அவமானம் தருவதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்’ ‘இன்டியாஸ் டோட்டர்’ (India’s daughter) விவரணத் திரைப்படம் இந்தியாவை அவமானத்துக்கு உள்ளாக்குகிறது என்ற கருத்தைத் காவித் திரிபவர்களை நோக்கி புகழ்பெற்ற நடிகையும், நெறியாளருமான நந்திதா தாஸ் அண்மையில் இந்த கருத்தைத் தெரிவித்திருந்தார். பி.பி.சி யினால் தயாரிக்கப்பட்ட லெஸ்லி உட்வினால் நெறியாள்கை செய்யப்பட்ட இந்த விவரணப்படம் வெளியிடப்பட்டு ஒரு சில நாட்களுக்குள்ளேயே முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துவிட்டிருந்தது. டெல்லி மருத்துவக் கல்லூரியொன்றின் மாணவியான ஜோதி சிங் கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அதன் பின்னணிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் இந்த விவரணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை உலகஅரங்கில் அவமானப்படுத்தும் வெள்ளைக்காரரின் சதிநோக்கத்துக்காகவே இந்தப்படம் தயாரிக்கப்பட்டது என்று கூறி அது இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இந்தப்படத்தில் வரும் வழக்கின் பிரதான சந்தேகநபரான, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் முக்கேசும், இவ்வழக்கில் எதிரிகளுக்காக வாதாடிய சட்டத்தரணிகளும் தெரிவித்த கருத்துகள், பெண்கள் தொடர்பான இந்தியப் பொதுப் புத்தி மனோபாவத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது என்பதுதான் இந்திய அரசின் பிரச்சினை.

பெண்களின் நடவடிக்கைகள் தான் இத்தகைய வல்லுறவு நிகழ்வுகள் நடப்பதற்குக் காரணம் என்று தாம் நம்பும் ஒரு கருத்தை அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்கள். இதில் அதிர்ச்சி அடைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால் இந்தக் கருத்து ஏற்கெனவே இந்திய பண்பாட்டில் நிலவிவருகின்ற ஒன்று தான். இது இந்திய அரசுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் அவர்கள் அதை மாற்ற விரும்பவில்லை. மாறாக அதை மறைக்கவே விரும்புகிறார்கள். இந்திய அரசாங்கமும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இத்தகைய வெளிப்படையான ஒரு விமர்சனத்தை எதிர்ப்பதும் மறைப்பதும் ஆச்சரியமல்ல. ஆனால், அவமானத்தை மறைப்பதால் அதை இல்லாமல் செய்துவிட முடியாது. மாறாக அதை எதிர்கொள்வதால்தான் அது தொடராமல் தவிர்க்கமுடியும்

இதுதான் நந்திதாவின் மேற்சொன்ன கருத்தின் பின்னணி!அது சரி… இந்தக் குறிப்பை நான் இப்போது இங்கே ஏன் எழுத வேண்டும்? இதை நான் எழுத நினைத்ததுக்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று ,இந்தப் படத்தை இந்தியா மீதான ஒரு அவதூறாகப் பார்ப்பது. அதுவும் தமிழ் இலக்கியப்பரப்பில் முக்கிய புள்ளியாக தன்னைக் கருதும்download ஜெயமோகன் இந்த விடயத்தைப்பற்றி எழுதியிருப்பவை. அவர் சொல்கிறார் ‘ஏன் இந்தியாமீதான இந்த தொடர் அவதூறு நிலைநிறுத்தப்படுகிறது? முதற் காரணம், இது இந்தியாவை வெள்ளையர் ஆண்டபோது உருவாக்கப்பட்ட கருத்துநிலை. இந்தியர்களுக்கு தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் அறிவுத்திறனும் அறவல்லமையும் இல்லை என்று அவர்கள் ஊட்டிய எண்ணமே இங்கே கொலனியா திக்கத்தை நிலைநாட்டியது. இன்றும் காலனியாதிக்கமனநிலையை தக்க வைத்துக்கொள்ளவே மேலைநாட்டு ஊடகங்களில் ஒருசாரார் விழைகிறார்கள். பிபிஸி எப்போதுமே அந்த எண்ணம் மேலோங்கிய ஊடகம்…’ ‘… இச்சூழலில் வந்திருக்கிறது இந்த ஆவணப்படம். இதில் உண்மை இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் இது எவரால் எவருக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையே பார்க்கவேண்டும். எந்த மனநிலையை இது உருவாக்குகிறது என்றே பார்க்கவேண்டும். இதைச் சொல்பவர்கள் எதையெல்லாம் மறைக்கிறார்கள் எதையெல்லாம் மிகைப்படுத்துகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.’

இந்தியாவைப் பாதுகாப்பது என்ற பேரால் அரசாங்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் நியாயப்படுத்தும் ஜெயமோகனின் இந்த விவாதம் படத்தைத் தடைசெய்திருக்க வேண்டியதில்லை என்று பேச்சுக்குச் சொல்லுகின்ற போதும் உண்மையைவிட அதை யார் சொல்கிறார்கள் என்பதே முக்கியமானதென்பதை வலியுறுத்துகிறது. இலங்கையில் இந்திய சமாதானப்படை செய்த எண்ணற்ற பாலியல்வல்லுறவுச் சம்பவங்களை அங்கு கடமையாற்றிய இராணுவ அதிகாரிகளே ஒப்புக்கொண்டிருந்த போதும் இந்திய ராணுவம் அப்படிச் செய்திருக்காது என்று நியாயப்படுத்தியவர் இவர். இவர்களது இந்தச் சிந்தனைப் போக்குக்குச் செருப்படி தருவது போல அமைந்திருந்ததால் தான் நந்திதாவின் இந்த மேற்கோள் முக்கியத்துவத்தைக் காட்ட இங்கே பதிவிட்டேன்.

இரண்டாவது ,இத்தகைய சிந்தனையின் அரசியல் எமது ஈழத்து அரசியல் இலக்கிய சூழலிலும் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பது. கடந்தகால அரசியலின் ஆயுதப்போராட்ட காலத்தில் நிலவிய தவறான பக்கங்களை குறிப்பாக இனவாதம், ஜனநாயக மறுப்பு, அரசியற் படுகொலை போன்றவற்றை விமர்சனம் செய்யும் எழுத்துக்கள் அவை தெரிவிக்கும் உண்மைகளின் முக்கியத்துவம் புறந்தள்ளப்பட்டு அவற்றைச் சொல்பவர்கள் யார் என்பதற்காகவே மோசமான எதிர்த்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அவை அவமானகரமானவை என்பதால் அவற்றை மூடிமறைத்துவிட வேண்டும் அல்லது அவை பற்றிப் பேசாதிருக்க வேண்டும் என்ற கருத்து வலுவாக எமது சூழலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. அண்மையில் வெளிவந்த போர்க்காலப் படைப்புக்களான ‘ஊளிக்காலம்’, கொலம்பசின் வரைபடங்கள்’, ‘நஞ்சுண்ட காடு’, ‘ஆயுதஎழுத்து’ போன்றவற்றின் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் இவை அனைத்தும் ஒரே தரத்தவை அல்லனவாயினும் – இந்தப் போக்கே மேலோங்கி நிற்கிறது. உண்மை எந்தளவு அவமானகரமானதாக இருந்தாலும் அது உண்மை. அதை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் ஒருபோதும் இந்த அவமானத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவோ விடுவிப்பதற்கான வழிகளைக் கண்டடைவதற்காக முயல்வதோ சாத்தியமில்லை.

இன்று புதிதாக இலங்கையில் ஆட்சிக்கு வந்திருக்கும் இன்றைய அரசாங்கத்தினதும் அவர்களை ஆதரிக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களின் பிரதிநிதிகளதும் மனதில் ஆழமாக வேரூன்றியிருப்பதும் இந்தச் சிந்தனை தான். நடைபெற்றது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அதை தனிநபர்களின் தவறான செயற்பாட்டால் நடந்த போர்க்குற்றத் தவறுகளாக இருக்கலாம் என்று அமைதி காணவே விரும்புகிறார்கள். இந்தப் போக்கு அரசியலிலிருந்து இனவாதத்தைப் பிரித்தெடுக்கின்ற வாய்ப்பை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை!

000000

தேசிய கீதத்துக்கு வந்த மவுசு!

————————————–

இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாடலாம் என்று  அறிவித்ததைத் தொடர்ந்து அங்கே தொடர்ந்து நடந்துவரும் சர்ச்சைகள் சில பழைய நினைவுகளை ஞாபகத்துக்குக் கொண்டுவந்தன. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முந்தியிருந்த நிலையின் நினைவுகள்.

அப்போதெல்லாம் தேசியகீதத்தை எதிர்க்கும் அவர்கள்தான் எங்கள் ஹீரோக்கள். சுதந்திர நாள் என்றால் கறுப்புப்பட்டி அணிந்து பாடசாலைக்குப் போகவேண்டும். பாடசாலையில் தேசியகீதம் பாடும் சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்க மறுக்;க வேண்டும் என்று சொல்லித்தருபவர்கள் அவர்கள். சொல்கிற மேல்வகுப்பு மாணவர்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் இப்படிச் செய்ததற்காகவும் சொன்னதற்காகவும் ஆசிரியர்களிடம் அடிவாங்கினார்கள். ஆனாலும் அவர்கள் இதைத் தொடர்ந்து செய்தார்கள். எங்கள் மனங்களில் உரிமைக்காக குரலெழுப்பும் வீரர்களாகத் தெரிந்தார்கள். இலங்கை அரசாங்கத்தின் 1972ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் இலங்கையை சுதந்திரக் குடியரசாக மாற்றியதைத் தொடர்ந்து வந்த நிலைமை இது. இதன் பின்னான காலங்களில் எல்லாம் சுததந்திர தினமும் குடியரசு தினமும் துக்கதினங்களாக அனுஸ்டிக்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியான ஒரு அரசியல் நிலைப்பாடாக இருந்து வந்தது.

தமிழ் மொழியில் பாடப்படும் தேசியகீதம் உண்மையில் கேட்பதற்கு இனிமையான கீதமாக இருந்தபோதும் அதற்கு மரியாதை செலுத்தக்கூடாது என்ற கருத்து எமது பரம்பரை மாணவர்களிடம் மிகவும் தீவிரமாக இருந்து வந்தது. முதலில் தேசியகீதத்தைப் பாடுவதற்கு மாணவர்களிடமிருந்து வந்த எதிர்ப்புகளை ஆசிரியர்கள் தண்டனை வழங்குவது மூலம் சமாளித்து வந்தாலும் பின்னாளில் அவர்களும் அதை விட்டுவிட்டார்கள். குறிப்பாக எழுபத்தி ஏழு கலவரத்தின் பின் 1980 வரை தேசியகீதம் பொது வைபவங்களில் பாடப்படுவதை நான் காணவில்லை. எண்பதுகளில் தேசியகீதம் எந்தப் பாடசாலைகளிலும் பாடப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. கொழும்பில் எல்பின்ஸரன் திரையரங்கில் படம் தொடங்க முதல் தேசிய கீதம் போடப்பட்டபோது எல்லோரும் எழுந்து நிற்க நான் மட்டும் என்னை மறந்து உட்கார்ந்திருந்த சம்பவம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. இலங்கைத் தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தும் ஒரு நாட்டின் தேசியகீதத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும் என்ற சிந்தனை சின்ன வயதில் ஏற்படுத்திய பதிவு மனதில் உறைந்து போய் விட்டிருந்தது.

உண்மையில் இதில் ஒரு நியாயமுமிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. தேசியகீதம் எந்த ஒரு விதத்திலும் முக்கியத்துவம் கொடுத்துக் கணக்கிலெடுக்கப்படாத ஒன்றாகவே மாறிப்போய் விட்டிருந்தது. ஆனால் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தேசியகீதத்தைத் தமிழில் பாடக்கூடாது என்றும் ,அப்படிப் பாடுவது ஒரு கேலிக்கூத்து என்றும் பேசப்பட்டு அதை ஒரு அமைச்சரவைத் தீர்மானமாகக் கொண்டு sri-lankan-national-anthem-2-b-512x250வந்தபோது அது திரும்பவும் ஒரு முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறிவிட்டது. அதை எதிர்த்துப் பல குரல்கள் ஒலித்தன. தமிழில்தான் பாடுவோம் என்று எதிர்த்து நின்றவர்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டனர் யாழ். மாவட்டக் கல்வி அதிகாரி ஒருவர் அதற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார். எனக்கும் அது அவ்வாறுதான் தோன்றியது. அந்த முடிவு வடிகட்டிய இனமேலாதிக்கம் என்று தோன்றியது. ஆயினும் எந்தவித அக்கறையுமற்று விடப்பட்டிருந்த ஒரு விடயத்தின் மீது ஏன் இப்படி எனது மனம் ஈர்ப்புக் கொள்கின்றது என்பதை ஆச்சரியத்துடன் சிந்தித்துப் பார்த்தேன். அது உண்மையில் தேசியகீதம் தொடர்பான அக்கறையிலிருந்து வரவில்லை. மாறாக, அது தமிழில் பாடத் தடைசெய்யப்படுவதாலும் சிங்களத்தில் பாட வற்புறுத்தப்படுவதாலும் வந்த எதிர்ப்புணர்வு. இப்போது பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தீவிர விவாதப் பொருளாகியிருக்கும் இந்தத் தேசியகீதம் பற்றிய சர்ச்சை இந்தத் தளத்திலிருந்தே நடைபெறுகிறது.

இப்போது அரசாங்கம் தேசியகீதத்தைத் தமிழில் பாட அனுமதித்ததை பல சிங்கள இனவாத அரசியலாளர்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். அவர்களது எதிர்ப்பும்கூட தேசியகீதம் பற்றிய அக்கறையிலிருந்து எழவில்லை. மாறாக தமிழருக்கு எதிராக ஏதாவது செய்வதன் மூலமே தம்மை சிங்கள இனத்தினதும் நாட்டினதும் காவலர்களாகத் தேசபக்த சக்திகளாக நிறுவமுடியும் என்ப தற்காகவே செய்யப்படுகின்றன!

ஆம். எந்த விடயங்களும் அவை எந்தளவுதான் முக்கியமான விடயங்களாக இருந்தாலும் அதிகாரத்தால் அவற்றைச் செய்யவைக்க முடியாது.இதுதான் தேசியகீதத்துக்கு மவுசு வந்த கதை.

0000000

 

2 Comments

 1. villa anandaram says:

  இது எனது முகப்பு புத்தகத்தில் மார்ச் 25திகதி எழுதியதின் சில பகுதி;

  ஒரு ஆவணப்படத்தில் சொல்லப்பட்டவை உண்மையா இல்லையா என்பதே முக்கியம் தவிர அதன் நோக்கம் என்ன, சரிவிகித பார்வையில் சொல்லப்பட்டதா என்று விவாதிப்பது உண்மையை மறைக்க முயலுவதே. இது ஏற்பட்ட சேதத்தை மட்டுப்படுத்தும் (damage control) முயற்சியே. ஜெயமோகன் ஒரு இந்துத்துவத்திற்க்கு வக்காலத்து வாங்குபவர் (Hindu apologist) என்பது இங்கு தெளிவாக தெரிகிறது.

  அவர் பாலியல் வல்லுறவு பற்றி கூறும் மூன்று கட்ட விவாதத்தில் ஆண் எப்படி நடக்கின்றான் என்பது பற்றியே விபரிக்கும் அதே வேளை அது விலங்குகளிலும், நில உடமை சமூகத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்ற நிலப்பாட்டை எடுக்கிறார். இதில் பாதிக்கப்படும் பெண்ணின் உணர்வு, நிலை என்ன? அது பற்றி அவர் பேசாதது அவரது வாதமும் உள்நோக்கம் கொண்டது என்று கொள்ளலாமா? ஒரு செயல் இயற்கையானதாக இருப்பினும் ஒரு நாகரீகமடைந்த சமூகத்தில் அச்செயல் யாரையும் பாதிக்குமாயின் அச்செயல் தண்டிக்கப் படவேண்டியது மட்டுமல்ல அதற்கான காரணங்களும் ஒழிக்கப்பட வேண்டியவையே.
  ஜெயமோகன் சொல்லுகிறார் “சுதந்திரமான பாலுறவு உருவாகும்தோறும் உண்மையில் அனைவருக்கும் பாலுறவுக்கான வாய்ப்புகள் கூடுவதில்லை. ‘தகுதியான’ ஆண்களுக்கே அந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதுவே உயிரியல் விதி. தெருநாய்களில் பெரும்பாலானவை வாழ்க்கையில் ஒருமுறைகூட உடலுறவுகொள்வதில்லை என்று தெரியுமா?” யாருக்காக கவலைப்படுகிறார் தெரிகிறதா? தெருநாய் போன்ற சில ஆண்களுக்காக.
  நில உடமை சமூகத்தில் இது இயல்பானதானால் இந்திய நில உடமை சாமூகத்தின் தூண்களான‌ இந்துமத நம்பிக்கைகள், சடங்குகள், புராணங்கள், சித்தாந்தங்கள் யாவும் ஒழிக்கப்பட அல்லது முற்றாக சீரமைக்கப்பட வேண்டியவையே. இந்தியவில் மட்டும் தான்(இந்திய‌ உபகண்டத்தில்)போர்காலங்கள் தவிர்த்தும் கூட்டு வன்புணர்வு ஒரு ஸ்போர்ட்ஸ் போல‌ நடை பெறுகிற‌து. இதற்க்கு சாதியமைப்பு முறையும் ஒரு காரணம்.

  வெறும் கதை சொல்லி ஜெயமோகனுக்கும் உண்மையான சமூக சிந்தனை உள்ள நந்திதா தாஸ் போன்ற கலைஞருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். சிலர் கதை சொல்வதால் தமக்குண்டான சமூக அந்தஸ்தை வைத்து உளுத்துப்போன மத கலாச்சார வாழ்வியலுக்கு வக்காலத்து வாங்க உபயோகிக்கிறார்கள். அல்லது இவற்றிக்கு வக்காலத்து வாங்குவது மூலம் தம்மை இலக்கிய உலகிலும் விளம்பரப்படுத்திக் கொள்கிரார்கள். ஜெயமோகனை வாசித்து தான் தமிழரில் ஆழ்ந்த வாசிப்புள்ள சமூகம் உருவாகுமென்றால் அந்த சமூகத்தின் அறிவுசார் வாசிப்பை என்னவென்பது. இன்னும் மரபுநிலைவாதத்தில் மூழ்கியபடியே சமூக விமர்சனமும் அந்த பழமை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு தீர்வும் சொலிக்கொண்டிருப்பவரை அடுத்த தலைமுறையில் உண்மையான தீவிரமாக வாசிப்பாளர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.

Post a Comment