Home » இதழ் 17 » * ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

 

* ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

 

 

feroos

 

 

 

 

 

 

 

 

 

 

 

கவிதைகளை மறந்த ஊர்
………………………………………………………………………………

நானும் இன்னும் சிலரும்
போவதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான்
அந்த கிராம மக்கள்
கவிதையை மறந்து போயிருந்தார்கள்.tumblr_nfi8wl5yV21s1vn29o8_1280
நாங்கள் எழுதும் போதெல்லாம்
அவர்கள் கோபமுற்றார்கள்
பயிர்களின் நடுவே முளைத்திருக்கும்
களையைப் போல எங்கள் கவிதைகளை
பிடுங்கி தூக்கி வீச முயன்றார்கள்.
அது முடியாததும்,
உங்கள் கவிதைகள்தான்
உங்களை பொய்யர்களாக்குகிறது
என்பதாக பரிவாய் சொல்லிப் பார்த்தார்கள்.
எதற்கும் காதசைக்காத எங்களைப் பார்த்து
மீண்டும் மீண்டும் கெஞ்சத் தொடங்கிவிட்டார்கள்.
கவிதையை விடாமல் அக்கிராமத்தை விட்டு
நாங்கள் வெளியேறும் போது
ஒன்றாக கூடி எம்மை
வழியனுப்பி வைத்துவிட்டு,
ஊர் எல்லையின் நுழைவாயிலில்
எச்சரிக்கைப் பலகையொன்றை இட்டார்கள்
இந்த கிராமத்துக்கு செல்லும் பகுதி
மிகவும் ஆபத்துக்குரியது.

 

0000000

 

எனது வானத்துப் பறவைகள்

———————————-

அகல விரிந்து தினந்தோறும் நீளுகிறது
எனது வானம்.
என் தலைக்கு மேலாக பறந்து கடக்கிறது
ஒரு பறவை போல காலம்.
இலையுதிர் காலத்துக்குப் பின்
பச்சையிலை துளிர்ப்பது போல்
ஆசைகள் முட்டி முளைக்கிறது
மழை காலத்து விளைச்சல் போல.
சில நேரங்களில்
எனது நிலப்பரப்புக்கு வந்து சேராத
மழைத் துளிகள் இடை இடையில்
ஏதோ மொழிந்து விட்டுச் செல்கிறது
சரியாக செவி சாய்க்க முடியாத சப்தத்தில்.
நான் மழைத்துளியின் வடிவத்தில்
அது உதிர்த்த வார்த்தைகள் புரியாமல்
எனது சிறகுகளுக்கு வளர்ச்சி வேண்டி
பிரார்த்தனைகளுக்குள் நனைந்து போகிறேன்.
ஒரு வண்ணத்துப்பூச்சியின் அளவு கடந்தும்
முடியாதபடி பூமிக்கு திரும்புகிறேன்.
எனது வானத்தில் பறக்கும் ஒரு
பறவையின் இறகு வேண்டி…

 

000000
மீன்கள் செத்த நதி
………………………………………………………..

2_2582sm (1)

 

 

 

 

 

விடியலை வீழ்த்துகின்ற காலைப்
பொழுதினில் சிதிலமடைந்து தெறிக்கின்றன
இருள்கள்.
பெரும் மணற் பரப்பின் மேலாக
வயிறு பெருத்தோடிய நதி
பிரசவிக்கிறது செத்த மீன்களை.
நதி முழுதுமாக துர்நாற்றம் பரவி
ஊரெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது.
பொறுக்க முடியாத நதி
தனது கைகளைக் கொண்டு,
மூக்கினை மூடிக் கொள்கிறது.
உபயோகிக்கப்பட்ட பின்னர்
கழற்றி விடப்பட்ட இரசாயன கலவையின்
மினு மினுப்பை பற்றி,
ஊர் கேட்கும் படியாக உரத்து சொல்கிறது நதி.
யாரோ ஒருவன் நதிக்கு,
பன்னீர் தெளித்துக் கொண்டிருக்கிறான்.

0000

 

அகந்தை

——————–

விரிந்த வனமொன்றில் தனித்து வளர்ந்த
நீண்டதொரு மரம்,
தனது கிளைகளை அகல விரித்து
பறவைகளின் கூடுகளுக்கு பட்டா போட்டது.
மரத்திற்கு வனத்தில்
தனித்தொரு நியமம் உயர்ந்தது.
அறவுணர்வு பெருப்பித்த சில பறவைகளின்
சிறுமை கொண்டயாசையால் அங்காங்கே
போடப்பட்ட கூடுகள் சிதிலமடைந்து போக,
இருப்பிடமற்ற சில பறவைகளின் அலச்சல்
வனத்தின் எல்லாப்பக்கமுமாக நீண்டும்,
உரித்துடைய இடமற்றது.
பிரம்மாண்ட களைப்புடனும்
மனத் தவறுடனும், கூனிக்குறுகிய பறவைகள்
மீண்டும் தனித்த மரத்தின் கிளைக்கூடுகளுக்கு
விண்ணப்பத்துடன் மண்டியிட்டது,
ஒரு பெரும் மழையிரவின் நடுவில் நின்று.
நரிகளின் ஊளைகளற்றதும்,
ஜாம சிறுத்தைகளின் ஆரவாரமுற்ற
நிசப்தமதில் பேதழித்துப் போய்,
தன் அகந்தையிலிருந்து தெளிவுற்றது
பறவைகள்.

 

00000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment