Home » இதழ் 17 » *நந்தினி சேவியரின் படைப்புகள் , ஒடுக்கப்பட்டவர்களின் குரல்-மீராபாரதி

 

*நந்தினி சேவியரின் படைப்புகள் , ஒடுக்கப்பட்டவர்களின் குரல்-மீராபாரதி

 

விடியல் பதிப்பகம் தொகுத்து வெளியிட்ட நந்தினி சேவியரின் படைப்புகள் என்ற நூல் 2015 மே மாதம் ரொரன்டோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வை தேடகம் ஒழுங்கு செய்ய சிவா அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். நந்தினி சேவியருடனான சிறுவயது305450_505602849462428_1369240161_n முதலான தனது அறிமுகம் மற்றும் தாம் இலக்கியங்களை வாசிக்க அவர் ஊக்குவித்ததையும் பல நூல்களையும் படைப்பாளர்களையும் தமக்கு அறிமுகம் செய்ததையும் சிவா அவர்கள் குறிப்பிட்டார். மேலும் அவருடனான தனது கடந்த கால இளமைக்கால அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

தர்சன் அவர்கள் மிகச் சிறிய உரை ஒன்றை ஆற்றினார். (அண்மைய நிகழ்வுகளில் ஆற்றிய மிகச் சிறிய உரைகளுக்கான போட்டி நடாத்தினால் நிச்சயமாக அப் பரிசை இவர் பெற்றுக் கொள்வார்.) இவர் தனதுரையில் தாம் பாடசாலைகளில் கற்ற காலங்களில் இலக்கியம் என்ற பெயரில் எங்களுக்கு அந்நியமான மகாபாரத சுருக்கமும் கம்பராமாயாணமும்தான் கற்பிக்கப்பட்டன. மேலும் நாம் இந்திய படைப்பாளர்களைப் பற்றியே அதிகம் அறிந்திருந்தோம். ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றி பாடசாலைப் புத்தகங்களில் அறிந்தது மிகக் குறைவு. சமயப் பாடங்களைத் தவிர மற்றும்படி இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இப்பொழுது ஈழத்து இலக்கியப் படைப்பாளர்களின் படைப்புகள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அந்தவகையில் நந்தினி சேவியர் அவர்களின் படைப்புகளும் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இவரது வேட்டை சிறுகதை 1969ம் ஆண்டு ஈழ நாட்டில் வெளியாகியுள்ளது. இச் சிறுகதையை உதயன் பத்திரிகை மீண்டும் 2009ம் ஆண்டு மீளப் பிரசுரம் செய்துள்ளது. இது இவரது படைப்புகள், காலம் கடந்தும் வாழ்வதுடன் இன்றும் பொருத்தமானதாக இருக்கின்றது என்பதை நிருபிக்கின்றது. மேலும் இவரது இலக்கிய படைப்பின் ஆற்றலையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றது எனலாம் என்றார்.

முன்னால் சரிநிகர் ஆசிரியர் விக்னேஸ்வரன் அவர்கள் நந்தினி சேவியரை முதன் முதலாக அறிந்த அனுபவத்தைக் கூறினார். புலோலியிலுள்ள ஒரு கடைக்கு வழமையாக செல்வதுண்டு. இக் கடையின் உரிமையாளர் குலசிங்கம் அவர்கள் பத்பநாப ஐயரைப் போன்று எந்தவிதமான பலனையும் எதிர்பாராது இலக்கியங்களை நண்பர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகம் செய்பவர். இவரது கடையில் ஒரு நாள் அந்த நேரம் வெளிவந்த சுதந்திரன் பத்திரிகையை இவர் பார்த்துள்ளார். அதில் வெளிவந்த ஒரு கவிதை இவரைக் கவர்ந்துள்ளது. இக் கவிதை மூலமே நந்தினியை முதன் முதலில் அறிந்ததாக குறிப்பிட்டார். அன்றிலிருந்து நந்தினியை சந்திக்க ஆவல் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரை ஒரு பெண் படைப்பாளர் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் ஆண் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். வாழ்க்கையில் மூன்று தடவைகள் தான் நாம் சந்தித்திருக்கின்றோம். அந்த சந்திப்புகள் பல வருட இடைவெளிகளைக் கொண்டவையாக இருப்பினும் மிகவும் முக்கியமானவை. மீண்டும் சந்திக்க விரும்புகின்ற மனிதரில் ஒருவர் இவர். மிகவும் ஏழ்மையில் வாழ்வதுடன் எளிமையானவர். தான் கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பவர். இவ்வாறு பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். முற்போக்கு இடதுசாரி சார்பு கொண்டவர்களில் கலையழகுடன் படைப்பாக்கம் செய்யக்கூடிய இவர் சிறந்த பேச்சாளருமாவர் எனக் குறிப்பிட்டார்.இவர்களைத் தொடர்ந்து பார்வதி கந்தசாமி, தர்மகுலசிங்கம் மற்றும் மார்க் அவர்களும் அவருடனான தமது அரசியல் மற்றும் கலையிலக்கியப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

*****

nanthini

எனது நண்பர்கள் மட்டுமல்ல இத் தொகுப்பிலுள்ள எழுத்தாளர்கள் பலரும் நந்தினி சேவியர் நல்ல மனிதர் எனப் போற்றுகின்றனர். இவருடன் உரையாடுவது ஆரோக்கியமானது எனக் கூறுகின்றனர். இவரும் உரையாடலை விமர்சனங்களை வரவேற்பதாக தனது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றார். ஆனால் ஒருமுறை இவர், “பிற்போக்குவாதிகளின் கருத்துக்களை ஏற்க ஏலாது. அவை தடை செய்யப்பட வேண்டும்” என்ற தொனிப்பட எழுதியிருந்தார். பிற்போக்குவாதிகளின் கருத்துக்களை ஏற்கமுடியாது என்பதில் எனக்கும் உடன்பாடே. அதில் முரண்பாடு இல்லை. ஆனால் எந்த ஒரு கருத்தையும் எக் காரணம் கொண்டும் நாம் தடுக்கவோ தடைசெய்யவோ கூடாது. அது தவறு மட்டுமல்ல ஜனநாயகத்தை மறுத்து அதிகாரத்துவத்தை நிலைநாட்டும் எனக் குறிப்பிட்டேன். எனது உரையாடல் விமர்சனம் அவருக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை. எனது கருத்துடனான உடன்பாடின்மையையும் குறிப்பிட்டு தனது உடல் மன நலம் காரணமாக உரையாடலை நிறுத்துகின்றேன் எனக் கூறியிருந்தால் வரவேற்றிருப்பேன். புரிந்து கொண்டிருப்பேன். ஆனால் நான் ஓசோவை வாசிப்பதால் எனக்கு ஒரு முத்துரை குத்தியதுடன் என்னுடனான நட்பையும் துண்டித்துக் கொண்டார். இப்படித்தான் பலர் உரையாடல்களை ஆரம்பிப்பதும் இடையில் பல காரணங்களால் முறிந்துக் கொண்டு போவதுமாக இருக்கின்றனர். இது இவரது எழுத்துக்கும் நடைமுறைக்குமான முரண்பாடாகவே நான் பார்க்கின்றேன். அவர் எந்தளவிற்கு தனது கருத்தில் உறுதியாக இருக்கின்றாரோ அதேபோல் நான் எனது புரிதலில் உறுதியாக இருக்கின்றேன். அதில் தவறில்லை என்றே உணர்கின்றேன். அதேநேரம் மற்றவர்களின் கருத்துக்களை கேட்பதற்கும் தயாராக உள்ளேன். இந்தடிப்படைகளில்தான் உரையாடல்கள் தொடரலாம்.

0000000
பொதுவாக ஒரு படைப்பு அல்லது நூல் தொடர்பான கருத்துக்கள் விமர்சனங்கள் என்பன படைத்தவர் நண்பரா இல்லையா என்பதன் அடிப்படையிலையே பெரும்பாலும் முன்வைக்கப்படுகின்றன. அதாவது நண்பர்கள் எனின் மாறி மாறி புகழ்வது அதாவது “முதுகு சொறிவது”. எதிர் கருத்துள்ளவர்கள் அல்லது நட்பற்றவர்கள் எனின் தூற்றுவது,அல்லது மாட்டைப்பற்றி கதைக்க சொன்னால் மாட்டை மரத்தில் கட்டிவிட்டு மரத்தைப் பற்றிப் பேசுவார்கள். இவ்வாறான அதிகப் புகழ்ச்சிகளும் அல்லது காழ்ப்புணர்வான விமர்சன அணுகுமுறைகள்தான் நமது சமூக, அரசியல், தேசிய விடுதலைப் போராட்டாங்கள் தோற்றுப்போனதற்கான ஒரு காரணம் எனத் தோன்றுகின்றது.
எனது நிலை இதுவல்ல. உண்மையில் நட்பை மதிக்கும் ஒருவர் தனது நண்பரின் படைப்பு தொடர்பான நேர்மையான விமர்சனத்தை முன்வைக்க வேண்டும். நல்லதைப் புகழும் அதேநேரம் தனக்குத் தவறுகள் ,முரண்பாடுகள் என உணர்ந்தவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதிர் தரப்பிலுள்ளவர் அல்லது நட்பில்லாதவராக இருப்பினும் அவர் உண்மையில் நன்றாக ஒன்றைப் படைத்திருந்தால் அதை காழ்ப்புணர்வின்றிப் போற்ற வேண்டும். இதுதான் விமர்சனம் செய்பவரின் நேர்மையாக இருக்க முடியும். அப்பொழுதுதான் நாம் ஆரோக்கியமான விமர்னப் பண்பாட்டைக் கட்டியெழுப்புவதுடன் நல்ல விடயங்களையும் பரஸ்பரம் அறிந்துகொண்டு அனைவரும் முன்னேறுவதற்கு வழிசெய்யலாம்.

ஆனால் நடைமுறையில் நான் முன்வைக்கும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னுடனான நட்பை முறிக்கின்றார்கள். கண்டும் காணாதவர்கள் போல செல்கின்றார்கள். எதிரிகள்போல பார்க்கின்றார்கள். அல்லது எனது சிறு சிறு தவறுகளை தேடிக் கண்டுபிடித்து பெரும் தவறுகளாக பெருப்பித்துக் காட்டி ஆரோக்கியமற்ற எதிர்வினையான எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அல்லது நான் எப்பொழுதோ முன்வைத்த விமர்சனங்களுக்குப் பழிவாங்கும் வகையில் முட்டையில் மயிர் புடுங்கும் வகையிலான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இவ்வகையான காழ்ப்புணர்வின் அடிப்படையில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஆரோக்கியமான உரையாடலைச் சாத்தியமற்றதாக்கும். இவை எதிர்மறையான விமர்சனப்பண்புகளாகும். ஆகவே நாம் விமர்சனப் பண்பு ஒன்றை நாம் உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். அல்லது போனால் நமது எழுதுக்களால் எந்தப் பயனும் இல்லை.

நான் ஒரு சிறந்த எழுத்தாளன் இல்லை. இலக்கியவாதி இல்லை. படைப்பாற்றலுள்ள கலைஞன் இல்லை. ஆழமான விரிவான விமர்சகனுமில்லை. ஆனால் சமூகத்திலிருக்கின்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் போராடவும் வேண்டும் என்ற அக்கறையும் உணர்வும் மட்டுமே கொண்டவன். இதன் விளைவுகள் தான் எனது எழுத்துக்களும் செற்பாடுகளும். இவ்வாறான பங்களிப்புகள் கூட எனது புரிதல்களை மேலும் வளர்ப்பதற்கான ஒரு வழியாகவே காண்கின்றேன். ஏனெனில் எனது விமர்சனங்கள் என்பது எனது நிலைப்பாடு தொடர்பான வெளிப்படுத்தல் மட்டுமல்ல ஒருவகையில் எனது அறியாமையிலிருந்து எழுகின்ற கேள்விகள். இக் கேள்விகளுக்கான பதில்களும் ஆரோக்கியமான பரஸ்பர உரையாடல்களும் என்னை மட்டுமல்ல பரஸ்பரம் அனைவரையும் வளர்த்துச் செல்லும் என நம்புகின்றேன்.
000000

1949ம் ஆண்டு பிறந்த நந்தினி சேவியர் ,நான் பிறந்த 1967ம் ஆண்டு எழுத ஆரம்பித்தவர். இன்றும் சளைக்காது எழுதிக் கொண்டிருக்கின்றார். எனக்கு இவரை அப்பாவின் தோழராக அல்லது அப்பா செயற்பட்ட கட்சியின் அங்கத்தவராக முகநூலினுடாகத்தான் அறிமுகம் கிடைத்தது. அயல்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்ற நூலை முன்பு பார்த்த ஞாபகம் ஆனால் வாசித்த ஞாபகமில்லை. இன்று இலக்கிய நண்பர்கள் இவரைப் பற்றி புகழ்வதும் மதிப்பதும் இவரை வாசிக்க வேண்டும் என்ற ஊந்துதலையும் ஆர்வத்தையும் தந்தது. அதன் விளைவே இக் குறிப்பு.
லெனின் மதிவானம் அவர்கள் இத் தொகுப்பிலுள்ள நந்தினி சேவியர் தொடர்பான தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “நந்தினி சேவியரின் படைப்புகள் தெளிவான பார்வையுடன் இன்னும் சரியாக மதிப்பிடப்படவில்லை என்றே தோன்றுகின்றது. அதற்கு அன்னாரின் எழுத்துக்கள் யாவும் முழுமையாக தொகுக்கப்படாமையும் ஒரு காரணமாகும்”. இதை உணர்ந்தே நந்தினி சேவியரின் படைப்புகளைத் தொகுத்து விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது எனலாம். சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், முன்னுரைகள் எனப் பல விடயங்கள் இத் தொகுப்பில் இருக்கின்றன.

முதலாவது பகுதியில் இரண்டு பக்கங்களில் நந்தினி சேவியர் தொடர்பான அறிமுகம் உள்ளது. இதில் அவரது பிறப்பு, பெற்றோர், இவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் மற்றும் இவரது படைப்புகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், அங்கம் வகித்த அரசியல், இலக்கிய அமைப்புகள், பெற்ற விருதுகள் எனப் பல தகவல்கள் இருக்கின்றன. இரண்டாவது பகுதியில் எட்டாம் பக்கத்திலிருந்து 136ம் பக்கம் வரை இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்புகளான அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நெல்லிமரப் பள்ளிக்கூடம் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியில் இவர் மாலைமுரசு பத்திரிகையில் நாடோடியின் பாடல் , தொடர்பறுந்த தொடர் என்ற தலைப்பில் 2012ம் ஆண்டுகளில் எழுதிய பத்திகள் அல்லது கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் வ.தேவசகாயம் மற்றும் தாவீது கிறிஸ்ரோ என்ற பெயர்களில் எழுதிய பத்தி எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது பகுதி முன்னுரை ,பின்னுரை. இதில் பல்வேறு நூல்கள் எழுத்தாளர்கள் தொடர்பாக இவர் எழுதியவையும் பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்த இவரது நேர்காணல்களும் மற்றும் இவர் எழுதிய அஞ்சலிகளும், கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. ஆறாவது பகுதி பின்னினைப்பாக இவரது படைப்புகள் தொடர்பாக பிற படைப்பாளர்கள் இலக்கியத் திறனாய்வாளர்கள் எழுதிய முன்னுரைகளும் விமர்சனங்களும் அடங்குகின்றன. இவரது இப் படைப்புகள் வீரகேசரி, சுட்டும்விழி, கலைஓசை, தினக்குரல், தினகரன், தாயகம், மல்லிகை, தொழிலாளி, சுதந்திரன், புதுசு, அலை போன்றவற்றில் வெளிவந்துள்ளன.

10926389_875789989110377_990455876287777206_n

நந்தினி சேவியரது சிறுகதைகள் சமூகத்தில் எல்லா வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வைப் பற்றியனவாக இருக்கின்றன. இக் கதைகளை வாசிக்கும் பொழுது ஒடுக்கப்பட்ட மனிதர்களின் ஏழ்மை, வறுமை, வாழ்வில் எதிர்நோக்கும் கஸ்டங்கள், பிரச்சனைகள் என்பவற்றைப் புரிந்து கொள்ளலாம். வேட்டை, தொலைந்து போனவர்கள் எழுதப்பட்ட காலம் கடந்தும் இன்றும் பொருத்தமானதாக இருப்பது நந்தினி சேவியர் அவர்களின் படைப்பாற்றலின் வெற்றி. இவ்வாறு பல கதைகள் மீளப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது இவரது படைப்பின் முக்கியத்துவதைப் புலப்படுத்துகின்றது.

சில கதைகள் படைப்பாளரின் நினைவுகளாக இருக்கின்றன. உதாரணமாக நெல்லிமரப் பள்ளிக்கூடம் என்ற கதையில் தனது பாடசாலை அனுபவங்களையும், விருட்சம் என்ற கதை பல்வேறு ஊர்களிலுள்ள மரங்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. எனக்கு நெல்லியடி சந்தி என்பது சிறிய எல்லாப் பக்கமும் திறந்த கட்டிடத்தைக் கொண்ட பஸ் தரிப்பு நிலையமே நினைவுக்கு வரும். 1976ம் ஆண்டிலிருந்து இறுதியாக 2012ம் ஆண்டு சென்று பார்த்தவரை அது இருந்தது. ஆனால் இப்பொழுது புதிய ஒரு கட்டிடம் அந்த இடத்தில் வந்துவிட்டது. ஆனால் நெல்லியடி என்ற பெயர் நாம் அறியாக்காலத்தில் அந்த சந்தியிலிருந்த நெல்லி மரத்தையே இப்பொழுதும் நினைவுப்படுத்துகின்றது என்பதை இக் கதையை வாசித்ததனால் அறிந்து கொண்டேன். அல்லது நெல்லியடி என்பது வெறும் பெயராக மட்டுமே எ(ன்)ம் மனதில் பதிந்திருக்கும். அரசடி ,மாவடி போல நெல்லியடி என்பது மரத்தைக் குறிப்பதாக ஏனோ இதை வாசிக்கும்வரை நான் உணரவில்லை. மேலும் யாழ் நகர் பஸ் நிலையம் நாம் அறியாக் காலத்தில் ஒரு மரத்தடியில் இருந்தது தொடர்பாகவும் குறிப்பிடுகின்றார். இப் படைப்புகள் இந்த இடங்கள் தொடர்பான கடந்த காலம் பற்றிய அழகிய கற்பனையை எமக்குள் உருவாக்குகின்றன.

00000

இவரது கட்டுரைகள் இந்திய தமிழக குறிப்பாக ஈழத்து (மார்க்சிய) இலக்கியம் தொடர்பானவையாக உள்ளன. இதில் இலக்கியத்தின் போக்குகள் அதன் முக்கியத்துவங்கள் தொடர்பாக உரையாடுகின்றார். நாடோடியின் பாடல் என்ற தொடர்பறுந்த தொடரில் டானியல் அன்ரனி, வ.அ.இராசரத்தினம், சசி.கிருஸ்ணமூர்த்தி, சி.பற்குணம், ஈழவாணன், சண்முகம் சிவலிங்கம் போன்றவர்களுடனான தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இத்துடன் சிவம் அண்ணர் எனக் கனடாவில் அறியப்பட்ட கம்யூனிஸ்ட் சிவம் தொடர்பான நினைவுக் கட்டுரை ஒன்றுமுள்ளது. மேலும் கரவை கந்தசாமி (எனது அப்பா) தொடர்பான சில வரலாற்றுக் குறிப்புகளும் விமர்சனங்களும் உள்ளன. மற்றும் தான் இவ்வாறு ஒருவராக உருவாதற்கு தன்னைப் புறக்கணித்து ஒடுக்கிய ஆதிக்க சாதி ஆசிரியர்களுக்கு நன்றி கூறியும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மேலும் நந்தினி என்ற பெயர் எவ்வாறு உருப்பெற்றது என்பது தொடர்பாகவும் இக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். யதீந்திரா, இன்பராஜன், ரவிக்குமார் ஆகியோர் இவரிடம் எடுத்த நேர்காணல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இவரது வாழ்க்கை, அரசியல், இலக்கியம், விமர்சனங்கள் என அனைத்தும் அடங்கியிருக்கின்றன. மேலும் நண்பர் இரமணிதரனின் (சித்தார்த்த சேகுவேரா) ஆரம்பகால சிறுகதை (ரிசிப்பிரப்ஞன்) தொடர்பாகவும் சிலாகித்து கூறுகின்றார். மற்றும் நண்பர்கள் ஜெயமுருகன், பௌசர் ஆகியோருடன் நட்பாக இருந்த குறிப்புகளை வாசித்தமை மனதிற்கு மகிழ்ச்சியாகவும் நெருக்கமாகவும் இருந்தது.

நந்தினி சேவியரின் அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நூலுக்கு இ.முருகையன் அவர்களால் எழுதப்பட்ட முன்னுரையும் உள்ளது. அதில் “சேவியரின் கதைகளில் வரும் உலகம் வெறும் கற்பனையில் உதித்த பொய்மை அன்று. இட்டுக்கட்டப்பட்ட புனைவுகள் அங்கு இல்லை. அத்துடன் அவருடைய கதைக் களங்களில் ஒருவித பன்முகத்தன்மையும் நாம் பார்க்கின்றோம்…. காலோட்டத்தில் மனிதர்களுக்கு நிகழும் ,மாற்றங்களையும் எதிர்பாராத திருப்பங்களையும், அவர் அவதானிப்பது மிகவும் சுவையான வகையில் பதிவாகி உள்ளது…” எனக் குறிப்பிடுகின்றார்.

எ.டபிள்யூ முஹ்சீன் அவர்கள் இவரது படைப்புகள் தொடர்பான விரிவான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “1969ம் ஆண்டு தொடக்கம் 1986ம் ஆண்டுவரை எழுதப்பட்ட இக் கதைகள்…. 20 வருடங்கள் என்பது ஒரு சமூகத்தின் ஒரு தலைமுறை மாற்றத்தைக் குறிக்கின்றது.” என்கின்றார். மேலும் இக் கட்டுரையில் “இப் பிரதிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விளிம்புநிலை எழுத்து, அரசியல் சார்பு, மற்றும் வெளிப்படுத்துகின்ற ஆணாதிக்கப் பண்புகள்” தொடர்பாக விரிவாக எழுதுகின்றார். “இத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் விளிம்புநிலை மக்கள் பற்றியே பேசுகின்றன. சமூகக் கட்டமைப்பில் ஒரப்படுத்தப்பட்டவர்களாகவும் அடக்கப்பட்டவர்களாகவும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றவர்களாகவும் குரலற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ள பிரிவினர்களே இக் கதைகளின் மாந்தர்களாக விளங்குகின்றனர்….” அதேவேளை, “இம் மக்களின் வாழ்வியல், கருத்தியல் மற்றும் உளவியல் எதார்த்தங்கள் அவற்றின் முழு ஆழத்துடனும் பல்பரிமாண தளங்களிலும் பதிவு செய்யப்பட முடியாத நிலை ஏற்படுகின்றது. இம் மக்களின் பன்முக அனுபவங்களை பிரதிகளாக்குவதினுடாக அவர்கள் பற்றிய அரசியல் ரீதியான அக்கறையையும் கேள்விகளையும் எழுப்புவதற்குப் பதிலாக கதைசொல்லி தான் வலித்துக் கொண்ட அரசியல் கொள்கைகளை நிறுவுவதற்கான ஒரு பகைப்புலமாக இம் மக்களின் அனுபவங்கள் பிரதிகளாக்கப்பட்டுள்ளன. இதன்விளைவாக இப்பிரதிகளின் இலக்கியத் தன்மை குறைந்து, அரசியல் தன்மை முதன்மை பெற்றுள்ளது….. சமூகத்தை மாற்றியமைப்பதற்காக பிரக்ஞைபூர்வமாக செயற்படுகின்ற இடதுசாரி நிறுவனங்களிலும் கூட, ஆணாதிக்கத்தின் வெவ்வேறு வடிவங்கள் நிலவுவது துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும் ஆணாதிக்கப் பண்புகள் இழையோடியிருப்பதை வெளிப்படுத்த முடியும். உதாரணமாக “மத்தியானத்திற்குச் சற்றுப் பின்பாக” மற்றும் “ஆண்டவருடைய சித்தம்” என்பவற்றைக் குறிப்பிடுகின்றார் முஹ்சீன்.
காத்தநகர் முகைதீன்சாலி, “நந்தினி சேவியர் வாழ்க்கையைச் சிறுகதையாக்கும் ஒரு வித்தகர். இவரின் எழுத்துக்களை வாசிப்பதன் ஊடாக இளம் தலைமுறையினர் தம்மை புடம்போட முடியும். இவரின் எழுத்துக்கள் மட்டுமல்ல அவரும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்தான். ஏனெனில் அவருடன் உரையாடும் பொழுதெல்லாம் ஒர் உயர்ரக இலக்கிய புத்தகத்தை வாசித்த சுகானுபவத்தை உணரமுடியும்.” என்கின்றார்.
இவரது சிறுகதைகள் பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஒரு கதை எந்த வெளியீட்டில் வந்தது என்பதை வைத்து அதன் தரத்தை இலக்கிய தரத்தை குறிப்பிடலாமா என்பது கேள்வி. குறிப்பாக ஈழநாடு, அலை போன்ற பத்திரிகைளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தவை இலக்கிய தரமும் கலையழகு கொண்டவையாகவும் இருக்கின்றன. மேலும் இவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நீண்ட கால இடைவெளிகளில் பிரசுரிக்கப்பட்டுமுள்ளன.பேச்சுக்கும், எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் இடையே வித்தியாசமில்லாதவர் நந்தினி சேவியர் என செ.யோகராசா அவர்கள தனது கட்டுரையில் குறிப்பிடுவது நந்தினி சேவியர் தொடர்பான ஒரு அறிமுகத்தை அனைவருக்கும் தரும் என நினைக்கின்றேன்.

 

உதாரணமாக மேய்ப்பன், பயணத்தின் முடிவில், வேட்டை, தொலைந்து போனவர்கள். அதேரம் தாயகம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தவை வேறு ஒரு தரம் கொண்டவையாக இருக்கின்றன. அதாவது படைப்பாளரின் அரசியல் சார்ந்த கருத்துக்களை (வலிந்து புகுத்திய?) கொண்ட படைப்புகளாக இருக்கின்றன. குறிப்பான இப் பகுதிகளை நீக்கியோ அல்லது மாற்றியோ எழுதியிருந்தால் அக் கதைகளும் வேறு தரம் கொண்டவைகளாக இருந்திருக்குமா என்பது விவாதத்திற்குரியது. ஏனெனில் அவை வாசிக்கும் பொழுது தடங்களை ஏற்படுத்தின. இது தொடர்பாக ஒரு நாள் இலக்கிய நண்பர்களுடன் உரையாடும் பொழுது எது பிரச்சாரப் படைப்பு எது இலக்கியப் படைப்பு என்பதை யார் தீர்மானிப்பது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த சிந்தனையை நமக்குள் ஊட்டியது யார் என்பது தொடர்பாக நாம் கேள்வி எழுப்ப வேண்டியவர்களாக உள்ளோம் என்றனர். ஆகவே அதை உரையாடலுக்கு விட்டுவிடுகின்றேன். நமது நிலைப்பாடுகள் காலத்திற்கு காலம் மாற்றங் கண்டு வந்துள்ளன. ஆகவே கருத்துக்களை விமர்சனபூர்வமாக அணுகும் அதேவேளை மனித உறவுகளை ஆரோக்கியமாக பேணுவோம். விமர்சனங்களே அதற்குத்தானே.

0000

தொடர்புகளுக்கு meerabharathy@gmail.com

.

 

31 Comments

  1. S.K.Vickneaswaran says:

    நந்தினி சேவியரின் நூல் பற்றிய பாரதியின் கட்டுரையில் எனது உரை தொடர்பாக வந்த குறிப்பில் ஒரு திருத்தம். அவரது கவிதை வெளிவந்திருந்தது சுதந்திரனில் அல்ல.அலை பத்திரிகையில்.குலசிங்கம் அண்ணரது கடை இருந்தது புலோலியில் அல்ல பருத்தித் துறையில்.எனது குறிப்பில் நான் இவற்றைத் தெளிவாகவே சொன்னேன். பாரதி இதை திருத்திக் கொள்ளவும். நன்றி!

Post a Comment