Home » இதழ் 17 » *படுவான்கரைக் குறிப்புகள் – (நீள்கவிதை)-கருணாகரன் (Remarks Of Paduvankarai)

 

*படுவான்கரைக் குறிப்புகள் – (நீள்கவிதை)-கருணாகரன் (Remarks Of Paduvankarai)

 

 கைவிடப்பட்ட போராளியின் குறிப்பு

 

karu

 

(01)
முள் குத்திய கால் சிந்திய ரத்தத்தில் படுவான்கரைப் புழுதி
சிந்திய ரத்தம் மட்டுமல்ல,
எழுந்த அழுகையொலியும் படுவான்கரையின் காய்ந்த குரல்தான்.
அங்கிருந்து நானூற்றுக்கு மேல் சின்னப்பெடியனுவள்
வடக்கு நோக்கி நடந்தம்.

அது விடுதலைப்பயணம் என்றார்கள்
எந்த நட்சத்திரமும் வழிகாட்டவில்லை
கூடிப் பழகியவரும் கூட்டிச் சென்றவரும் பிறத்தியாராகினர்

அறிந்திராத திசையில்
விரும்பிச் செல்லாத பயணத்திற்கு
வழிகாட்டிகள் உண்டென்றார்.

நிகழ்ந்த பயணத்தில்
வழிநடத்தும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த தலைகளின் கீழ்
இதயம் மறுத்துரைத்தது
அதுவல்லத் திசை
அதுவல்ல வழியென்று.

காலடியில் நாறிக்கிடந்தது திக்கற்ற விதி.

மழையில் நனைந்திருண்ட முன்னிரவில்
மெல்ல அசைந்த நெடுங்கோட்டில்
வளைந்தும் நெளிந்தும் நீளச் சென்றது
படையணி.

சப்பாத்துகளில்லாத படையணி
களப்புகளைக் கடந்து
வயற்பரப்புகளில் நடந்து காடடைந்தது
வீரமும் வெற்றியுமாகியிருந்த
காட்டில் துக்கம் நிரம்பத்தொடங்கிய தப்போது.

நான் வீட்டை நினைத்தேன்
காடு வழிமறித்தது என்னை.

யாரும் விடுதலைப் பாட்டைப் பாடவில்லை
எவரும் போர்க்களத்தை நினைத்திருக்கவில்லை
ஆனாலும் போர்ப்பயணம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
00
என்னுடைய நிலமேன் என்னைச் சிறையிட்டது?
என்னுடைய நிலத்தில் எவ்வாறு நான் அந்நியமாக்கப்பட்டேன்?
என்னையறிந்த வெளியே! என்னையறிந்த களப்புகளே!
என் வீட்டில் உண்டுறங்கியவர் என்னைக் கவர்ந்து செல்ல ஏன் வழிவிட்டீர்?
என்னை வளர்த்த வயலே, ஏன் என்னைத் தொலைத்தாய்?
என்னையறிந்த சனங்களே, ஏன் என்னைக் கைவிட்டீர்?

00

நெருப்பெரிந்த வெளி

சோளஞ்சேனையில் நெருப்பெரியத் தொடங்கியது. சோளகத்திலும் மூண்டது தீ. பனையும் புல்லும் நெல்லும் நிறைந்த வெளியில் கறுத்துக் காய்ந்த மனிதர்களிடம், ‘பகைவரைச் சாய்த்திட வேண்டும். புறமுதுகிட முடியாது. புறப்படு மகனே’ எனத் தன் சிறுபுதல்வனையும் போர்க்களமனுப்பிய தாயின் கதை வீரம் எனவும் அதுவே அறமென்றும் சொல்லப்பட்டது.

காடும் அதையே சொன்னது. வெளியும் அதையே பாடியது. தாந்தாமலையும் குடும்பிமலையும் அதையே எதிரொலித்தன. ‘போர்க்களம் புறப்பட்ட என் சிறுமைந்தன் போரிட்டுச் சாயும்வேளை, நெஞ்சிலே கணையேந்தினான். முதுகிலல்ல’ எனக் கண்டு இன்புற்றுப் பேருவகையடைந்த தாயின் புராணம் வீரம் என்று பாடியது
காடு.

நாடும் அதையே பாடியது.

துக்கம் கனத்த இதயத்தோடு தலைகவிழ்ந்தபடி நடந்த
சின்னப் பையன்களின் கதையை
வெளி மறந்தது.
காடு மறந்தது.
தெருக்கள் மறந்தன.
பனை மறந்தது.
களப்பும் கண்ணாப்பற்றையும் கொக்குகளும் கூட மறந்தன.

‘தேன்நாட்டின் மீன்கள்’ பாட மறுத்தன.

00

உறங்காத அன்னையரோடு பொழுதுகள் விடிந்து மடிந்தன.
இரவும் பகலும் தாயன்பின் ஊற்றுப்பெருகி உடைத்தோடி
ஆறாகி
களப்பாகி
கடலாகி
பெரிய சமுத்திரமாகியது.
அதில்
எந்த அலையும் ஓய்ந்ததில்லை.

எல்லாவற்றின் மீதும் மௌனம் கொண்ட காலம்
கள்ள மௌனத்தில் உறைந்தது.

00

வடக்கில் நடக்கும் போருக்கு
கிழக்கிருந்தே உயிர்ப்பண்டங்களைக் கொண்டு செல்ல முயன்றான் தளபதி.
அப்படித்தான் அவனிடம் கோரவும் பட்டது.

விசுவாசமும் நம்பிக்கையும் கேள்விகளை எழுப்புவதில்லை
கேள்விகளில்லாத உலகில் இருளே ஆட்சி
இருளின் வழியே நடந்தோம்.

குமுறிக்கொண்டிருந்தது கடல்
மோதிக்கொண்டிருந்தன அலைகள்.

00

karu1

 

 

 

நடை 01

————————————————

இருளுறைந்த வானத்தில் வெள்ளிகளும்
காட்டிலே பிள்ளைகளும் உறங்கவில்லை.

வீட்டிலே
பிள்ளைகளைத் தொலைத்த தாயரும்
தந்தையரும் உறங்கவில்லை

உறங்காத காடும் உருக்குலைந்த தேசமுமாய் போனது படுவான்கரை…

நரிகள் ஊழையிட்டு இரவும் வெளியும் நிரம்பின
ஆட்காட்டிகள் ஓலமிட்டலைய
சனங்கள் அந்தரித்தலைந்தனர்.

படுவான்கரையில் விளைச்சல் படுத்தது
பட்டிகள் கலைந்தன
கூத்துப்பாட்டில் ஒப்பாரியேறியது.

நடை சோர்ந்தது.
00

முதற்காலம் 01

—————————————————–

மூன்று வாரத்தின் முன்னொரு காலையில்
குயில் கூவி ஓயமுன் நரிகள் எழுந்து ஊழையிட்டன
கலவரமுற்றுக் கத்திப் பறந்தது ஆட்காட்டி.
வெம்மை தகித்த வெளி நிறைந்த கலவரத்தில்
தொலைந்தது குயிற்குரல்.
தேயும் பிறை தோன்றி மறையத்துடித்த காலைக் கருக்கலில்
நெல்லின் மணம் ஏறிய இளவெயில்
வெளியில் நிரம்பி
ஆற்றில் வழிய,
வெயிலில் பூத்து மினுங்கியது ஆறு.

எழுவான்கரையிலிருந் தெழுந்த கடற்காற்று
படுவான்கரையில் படர்ந்துலரத்
தாமரைக்குளத்தில் தூண்டிலோடிருந்த
சின்னவனைத் தேடி ஆறுபேர் வந்தனர்.

‘இந்தச் சிறுவனுக்காக ஆறு பேரா?’

‘ஆறு பேரென்ன, அறுபது பேரே வரக்கூடும்!
காலம் பழுதடைந்தால்
களப்பிலே தூண்டில் போடுவதும் குற்றம்
றோட்டிலே சைக்கிளோடுவதும் குற்றம்
தியாகசேகரன் மாடு மேய்த்ததும் குற்றம்
ஞானச்செல்வம் வயலுக்குப் போய்த்திரும்பியதும் குற்றம்
விசயலிங்கம் பாலெடுத்ததும் குற்றம்
குமரய்யா மீன் விற்றதும் குற்றம்
சோமன் கொள்ளியுடன் சைக்கிளில் சென்றதும் குற்றம்…’

வழியிலும் தெருவிலும் வயற்காட்டிலும்
வீட்டிலும் நின்றது குற்றமென்று கொண்டு செல்லப்பட்டனர்
நூறு நூறு சிறுவர்கள்.

கொண்டு செல்லப்பட்டவரின் கண்ணீர் மூடியது
குடும்பி மலையை.

அது பாசறையா? சிறைக்கோட்டமா?

பிடித்துச் செல்லப்பட்டவரெல்லாம் அழைத்துச் செல்லப்பட்டதாக
குறிப்பேட்டில் பதியப்பட்டபோது
காலம் பழுதாகி
எல்லாத் தலைகளிலும் விழுந்தது பாழாய்.
00

முதற்காலம் 02

————————————————-

எட்டாண்டுகளின் முன்னொரு மதியத்தில்
முனைக்காட்டில் ஏரம்பனைச் சுட்டது அரச சேனை.
நான்காண்டுகளின் முன்னே
கழுதாவளையில் தங்கராசாவை எரித்ததது.
இரண்டு மாதங்கள் முன்
கஞ்சிகுடிச்சாற்றில் மூத்தப்பாவையும் குலசேகரத்தையும்
குலகேசரத்தின் ஆறுவயதுப் பாலகனையும் கொன்றது.
‘வயலில் அறுவடை செய்வது பயங்கரவாதம்’ என்ற ‘அரச கட்டளை’யில்kk
குடிகளைக் கொல்வது
நீதியன்றி வேறென்ன?

விவசாயிகள் வயலில் எரிந்தழிய
வானெழுந்த தீயில் பொசுங்கியது கொக்கட்டிச்சோலை.

வயலில் மூண்ட தீயைக் கண்டு
கொக்கட்டிச் சோலையில் எரிந்த நெருப்பைக்கண்டு
கறுத்தப்பாலத்தடியில் விழுந்த தலையைக்கண்டு
களுவாஞ்சிக்குடிக்கடலில் முள்ளெழும்பி முளைத்ததைக் கண்டு
கொதித்தவரெல்லாம்
கொழுந்து விட்டெரியும் நெஞ்சோடு காடேகினர்.

காடு விடுதலைக் கோட்டையானது.

அக்காலம்
முக்காலம் என்றற்றுப் போனதேன் பின்னெல்லாம்?
00

முதற்காலம் 03

———————————————————–

நெல்லேற்றும் வண்டியில் படுவான்கரை வந்த
காஸிம் முகமதுவும் நாலு முஸ்லிம் பொடியன்களும்
தலையில்லாமல் கிடந்த காலையில்
ஏறாவூரிலும் நாலு தலை இல்லாத உடல்கள் தெருவில் கிடந்தன

தலைக்குப் பதில் தலை
பழிக்குப் பதில் பழி
ரத்தத்திற்குப் பதில் ரத்தம்

நாய்களும் காகங்களும் சனங்களும் அந்தரித்த காலையில்
ரத்தவாடை நாறியது.

வானை மூடியது புகை
மனதை மூடியது பகை

படைகளில்லாமல்
அரசுகளில்லாமல்
சனங்கள் மோதிச் செத்தனர்.
பாங்கொலியும் தேவாரமும் தேவசுலோகங்களும்
காயத்திலுறைந்து கண்ணீராகின.

சனங்களிடையே நெருப்பை மூட்டியது யார்?
நஞ்சை ஊற்றியது எவர்?

ஊரெங்கும் பகை முற்றி வெடித்துப் பஞ்சாய்ப்பறக்க
நெருப்பெரிந்தது அதில்.

நடை 02

——————————————————–

வயிற்றிலே கனத்த பசி
அதனிலும் கனத்த, தூக்கமில்லாத கண்கள்
தூக்கமில்லாத கண்களை விடக் கனத்துக்களைப்படைந்த
கேள்விகளாலும் துக்கத்தாலும் நிரம்பித் துயர்த்த மனம்.

‘எங்கே முடியுமிந்தப் பயணம்?
மீண்டு,
ஊர் மீளும் காலமொன்று வாய்க்குமா?…’
எனின்,
யாரெல்லாம் திரும்பக் கூடும்?

பதிலற்ற காட்டில் கேள்விகளைச் சுமந்திளைத்தது படை.
மனமுடைந்து கண்வழியோடியது.
கன்னன்குடா மயிலுப்போடியின் மாட்டுத் தொழுவத்தில்
அலுத்த வாழ்க்கை இனித்ததிந்தக் காட்டில்.

காடோ முள்ளாகியது
காலிலும் மனசிலும்.

வழிகாட்டி
முள்ளின்மேலே நடை காட்டினான்.

00

பயணம்

———–

k 1
வழி நீளக் காடு
காடு நெடுகவும் துயரம்
துயரத்தில் செழித்த காட்டில் மரணக்குழிகள் வழி நெடுக.
ஒவ்வொரு குழியிலும் விழுந்தெழும்பிய சிறுவரின் முதுகில்
கனத்த பொதி.
கையில் நெருப்புறங்கிய துவக்குகள்.

பதினாலு வயதில்
துப்பாக்கியின் நிழலில் உறங்கும்
நானொரு போராளி!
நானொரு வீரன்?
நானொரு சிறுவன்!
நானொரு வீரன்?
நானொரு கைதி!
நானொரு வீரன்?

முழுப்பொழுதுக்கும் ஓருணவு
வழிமறித்தோடும் ஆற்றின் நீர் தீர்த்தம்
பகலிரவில்லை,
தங்கி இளைப்பாற விதியில்லை

நாவறண்டு பசியேறத் தொலைவு நீண்டது
நடைக்களையும் பசிக்களையும் நீண்டது
காட்டு வழியும் துயரும் தனிமையும் நீண்டது
திரும்பிச் செல்ல வழியற்ற பயணம் நீண்டது
நடந்து முன்செல்ல மறுத்த மனமும் நீண்டது
வடக்கென்பது கிழக்கிருந்தும் நீண்டதே
படையணி தானெனினும்
நடை மனம் தனித்ததே.

வழி நீள முட்காட்டில் குழிகளாயிரம் கண்டேன்.

எதிர்ப்பட்ட கடலுக்கு
வழிப்பட்ட மரங்களுக்கு
முகம் தொட்ட பறவைகளுக்கு
கண்தொட்ட பூக்களுக்கு
காலடியில் குவிந்திருந்த மணலுக்கெல்லாம்
வணக்கம் சொன்னோம்.

00

களைப்பு

————-

அம்மாவை நினைக்க முடியாது இனி
மறத்தலும் இயலாது.
பட்டி மாடுகள் என்னவாயிருக்கும்? வெள்ளாமைக்காரன் என்செய்யக் கூடும்?
தயிர்ச்சட்டியைக் கொண்டு போவது யாரினி?
ஆத்திலே கட்டிய தோணி இன்னுமங்கே அலைமோதிக்கொண்டிருக்குமா?
அய்யா வந்து கரையேற்றியிருப்பாரோ
அண்ணா கடலோடினானோ
அம்மய்யா களப்பில் செத்து மடிந்ததேன் என்றறிய விதியில்லை.
மயிலுப்போடிக்கு இந்தப் போகமும் மண்ணென்றாரே….

கன்னங்குடாச் சித்தன் அண்ணாவியின் கூத்துப் பாட்டுக்குரல்
மனதிலே வந்து மோதி அலைத்தது.

00

கட்டளை

————–

‘காட்டு வழியில் எதிரி அபாயம்
மூச்சுக்காற்றை இழுத்துப் பிடி
ஓசை, ஒலியேதும் உன்னைக் கொல்லும்.
போரில்,
எதிரியைப்பற்றியே எண்ணிக் கொண்டிரு’

– கட்டளையிட்டான் தளபதி
‘எதிரி என்றால் எப்படி இருப்பான்?’

– சிந்தித்துக் கொண்டிருந்தான்
போராளிச் சிறுவன்.

அவனறியாப் பதிலை அருகிருந்தவனிடம் கேட்டான்
இரகசியக் குரலில்.

அந்தக் கேள்வி நடையணி முழுதும் தத்திச் சென்றது
கேள்வியே விளங்கவில்லைப் பலருக்கு.
என்றாலும்
அச்சத்தின் வழி நடக்கும் எச்சரிக்கை
ஆட்கொண்டிருந்த தக்காட்டில்.

எதிரியிடம் தெருக்களை இழந்தவர்க்குக் காடே வழி
காப்பரண்களின் நடுவே
எதிர்ப்படும் தெருவைக்கடப்பதொரு அபாய வித்தை.

காவலரணில் சிக்கியவனும்
நடக்க முடியாதவரும் காட்டில் கைவிடப்பட்ட பிணம்

காய்ச்சலிலும் கழிச்சலிலும் இருந்தவரைக் காவியலுத்தேன்.
நடந்து களைத்தவன் தங்கித் தரிக்க முடியாது தவித்தேன்.
00

காடு

——

நாலாவது நாள் சல்லியாற்றில் இளைப்பாறியபோது
குளத்து மீனை புளியில் ஊறவைத்து அவித்தேன்
நண்டுகளைச் சுட்டான் தணிகன்
காட்டுக்கோழி வேட்டை செம்பனுக்குக் கலை
சுட்ட இறைச்சி வத்தல் தின்றவர் வயிற்றில்
ஏழுநாள் பசி தணிந்த நெருப்பா?
மீண்டும் மூளும் காட்டுதீயா…?

அத்திமரக்காட்டோரம் களைப்பு நீங்கக் கண்ணயர்ந்தது
படையணி.
நள்ளிரவில் மீண்டும் தொடங்கிய பயணம்
நடுவெயிலில் காட்டின் மையம் தேடியது.

எதிரிகள் எங்கே? நண்பர்கள் எங்கே?
00

வன்னி 1999

—————–
காய்ந்து வரண்ட சனங்களைக் காற்று
எதிர்த்து முறித்தது.
இலையான்கள் பெருகி
மலக்குழிகளிலும் சோற்றுப் பானைகளிலும் மொய்த்தன.

வன்னிக்காட்டில்
எழுவானுமில்லைப் படுவானுமில்லை
சாவுதான் பூத்துக் காய்த்துக் கனிந்தது.

‘மரணம் பற்றி யாரும் பேசக்கூடாது’ என்றார்கள்
வீரத்தின் கதைகளையே காடும் சொன்னது

மரணத்தின் காலடியில் வீரமும்
வீரத்தின் காலடியில் மரணமும் தழுவிக் கிடந்தன.
மரணம் என்னைச் சுற்றி நின்றது
வீரம் என்னைத் தழுவிக்கிடந்தது.

நான் நரகத்திற்குரியவனா
சொர்க்கத்துக்குரியவனா…?

நானே என்னைக் காப்பதுவா? இந்தச் சேனையைக் காப்பதுவா…?
முன்னே விரிந்திருக்கும் இந்தக் காலத்தைக் காப்பதுவா?
கனவிலே வளர்த்துள்ள தேசத்தைக் காப்பதுவா?
இந்தச் சேனை என்னைக் காப்பதுவா?

கடந்து செல்ல முடியாத காலமோ புழுத்துக் காலடியில் நசிந்தது.

‘மரணத்தில்தான் எல்லாமே நிகழு’மென்றார்.

‘மரணத்திலேதான் எல்லாவிதியும் வளருமென்றால்
மிஞ்சுவதென்ன?’ என்று கேட்டேன்.

………………………….
…………………………..

00

போர்முனை (புளியங்குளம் – வன்னி)

———————————————

கோலியாத்தின் முன்னே
தாவீதுகள் சிறு கவண்களுடன்
பீரங்கிகளின் வாயில் படுவான்கரைச் சிறுவர்Minolta DSC

சிறுவரின் இலக்கில் சிதையும் பீரங்கிகள்
தலைக்கவசங்கள்
பின்வாங்கும் படைகள்
கொடியேறும் வெற்றிகள்

போருக்கஞ்சிய சிறுவனை வீரனாக்கியது களம்
போரில் காடு வெந்தது
வயலும் மயிலும் வெந்தன
ஆறுகள் வெந்தன
வாழ்வும் கனவும் வெந்தது

என்றபோதும் வெற்றிக் களிப்பும்
வேட்டைத்தாகமும் ரத்தத்தைச் சூடாக்கியது.

‘போர் என்றால் கொலைதான்
எதிரி – நண்பன் என்பதெல்லாம் அங்கில்லை’ என்றானபோது
‘செய் அல்லது செத்து மடி’ என்றபோது
தலைகள் விழுந்தன நூறாய்
ஆயிரமாய்…

நாங்கள் போரிட்டோம்
போர் எங்களைத் தின்றது.

ஓயாது போரிட்டோம்

போரிட்டுத்தான் போரை நடத்தலாம்
போரிட்டுத்தான் போரை முடிக்கலாம்
போரிட்டுத்தான் போரை வெல்லலாம்
போரிடாவிட்டாலும் கொலைதான் என்றபோது
போரிட்டும் சாவு
போரிடாவிட்டாலும் சாவுதான் என்ற ஊரில்
நாங்கள் பகலையும் இரவையும் தள்ள முடியாமல் தவித்தோம்….

…………………….
…………………….

நாங்கள் போரிட்டோம்
போர் எங்களைத் தின்றது

தலைகள் விழுந்தன நூறாய்
ஆயிரமாய்…
…………………….
…………………….

நான் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நடுவிலிருந்தேன்
கோழையா வீரனா என்றறிய முடியா
தத்தளிப்பின் வெடிப்பிலிருந்தேன்.
காயங்களுக்கும் வலிக்கும் இடையிலிருந்தேன்
நினைவுகளுக்கும் துக்கத்துக்குமிடையில் தத்தளித்தேன்

00

அப்படித்தான்
அந்தக் குறிப்புகளில் சொல்லப்பட்டிருந்தது
அது மரணதண்டனை பற்றியது.
நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம்
கண்ணீரைக் கண்டு துக்கப்படும் நாட்கள் போய் விட்டன
கருணையைப்பற்றி யாருக்கும் தெரியாது
அது கனவில் மூண்டிருந்த தீ.

நான் எரிந்து கொண்டிருக்கும் சுடலை
நான் எரிந்து கொண்டிருக்கும் பிணம்
நான் எரிந்து கொண்டிருக்கும் உயிர்

இப்படி நான் எழுதினேன்.
இப்படித்தான்
இன்னும் பல குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன

அது எரிகாலமா?

பாடைகள் இல்லாத சாவுகள்
துயரத்தின் சாம்பலை எங்கும் நிறைத்தன

00

பாலாணத்தையும் கட்டித்தயிரையும் ஒரு வீரன் நினைத்துக் கொண்டிருக்க முடியாது
களப்பையும் கண்ணாப்பற்றைகளையும் கணவாயையும் நினைந்துருக முடியாது
பட்டியையும் பசுக்களையும் எண்ணிக்கொண்டிருக்க வியலாது
வீட்டையும் சேனையையும் மனதெடுக்கலாகாது.

‘வீரனுக்கு நினைவும் உறவும் அவசியமற்றவை
நினைவும் உறவும் அவனைச் சிதைத்திடும்’ என்றது போர் விதி.

காய்ச்சலும் கழிச்சலும் சாவும் மூப்பும்
கபாலத்துள் நிறைய
நிலைகுலைந்தேன்.

00

நண்பர்கள் சடலமாகினர்
சடலங்கள் வழிபாட்டுப்பொருட்களாகின
வழிபாட்டுப்பொருட்களை மண்ணடியில் விதைப்பதாகச் சொன்னார்கள்
துயிலுமில்லங்களில் வரிசை கூடி எல்லை பெருக்க
தாய் நிலம் சிறுத்தது.
கண்ணீர்ப்பெருக்கோடி நிலமெங்கும் ரத்தவெள்ளமாகியது.

‘மரணத்திலேதான் எல்லாவிதியும் வளருமென்றால்
மிஞ்சுவதென்ன?’ என்று கேட்டேன்.

புறக்கணிக்கப்பட்ட கேள்விக்கும் இருந்தங்கே சவக்குழிகள்.

00
…………………..
…………………..

கறுத்து இருண்டிருந்தது பகல்
அந்தப் பகலில் இருந்துதான் அவ்வளவு இரத்தமும் பாய்ந்திருந்தது
ஆயிரம் போராளிகளை தீர்த்துக் கட்டிய சமரை முடித்த தளபதியொருவன்
தண்ணீர் குடித்தான்.

பெண்களைப் புணர்ந்து களைத்த படை சோர்ந்திருந்தது.
போரிட்டுச் சோராதவர்கள்
புணர்ந்து களைத்தனர்.

அன்று மாலைச் சூரியன் தவித்துக் கொண்டிருந்ததை
பழுப்பேறிய ஒரு பழைய வீட்டின் பின்னிருந்து பார்த்தேன்.

…………………………..
…………………………..

00

மூங்கில் நிறைந்த வெண்ணிறக் காடு
அங்கேதான் நெல் விளைந்தது
மீன்கள் வாழ்ந்ததும் அங்கேதான்
நாங்கள் உறங்கிய காலையில் சூரியன் உதித்ததும்
பச்சைக்கிளிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கியதும் அங்கிருந்துதான்.

பின்னொருநாளில்
அங்கிருந்துதான்
மூன்று கொலைஞர்கள் வரப்போகிறார்கள்
ஒரு சிறுவன்
அவர்களுக்கு நெருங்கிய நட்பாக இருக்கப்போகிறான்
என்பதை யாரும் நம்பவில்லை.

களப்பில் பிணங்கள் மிதக்கும்
வரலாற்றில் கறைகள் படியும்
நீரோடும் இடமெங்கும் ரத்தம் கலக்கும்
வெள்ளாமை எரிந்து பிணத்தைச் சாம்பலாக்கும்
என்றெல்லாம் யாரும் சொல்லவில்லை.

சொல்லாமலே எல்லாம் நடந்தன.
‘சொல்லாத சேதிகளாய்…’
சொல்லி மாளாத கதைகளாய் எல்லாம் ஆயின.

தீர்க்கதரிசிகளை வெள்ளம் அடித்துப் போய்
முட்புதிரில் வீசியது.
முட்புதர்கள் செழித்துப் பூத்தன.

00

‘படுவான்கரைப்பெடியனுவள் எதுவந்தாலும் விடான்கள்’
என்று சொன்னது எழுவான்கரை
வழிமொழிந்தது வன்னி
போற்றிப் புகழ்ந்தது யாழ்ப்பாணம்
‘எல்லாம் வெற்றிக்கே’ என மகிழ்ந்து பாடினர் ‘யாழ்பாடிகள்’.

வன்னியிலே சிந்திய ரத்தத்தின் வெடிலில்
படுவான்கரையின் வீச்சம் அறிந்தன
காயா மரங்கள்.
காடுறைந்த யுத்தத்தில் வெற்றிக்கொடிகளை வானம் ஏந்தியது.
அந்தக் கொடியின் கீழே
விசுவமடுவில் முளைத்ததோர் ‘துயிலுமில்லம்’
ஆயிரத்துச் சொச்சம் படுவான்கரைப்பிள்ளைகளின்
உடல்
நடுகல்லாய் விளைந்ததங்கே.

கண்ணீர் பெருக படுவான்கரைச் சனங்கள் வன்னிக்கேகினர்.
காடுடைய சுடலைப் பயணம் அது.
அங்கே
‘இன்னும் உம் மைந்தரைத் தா’
என்றழைத்தது துயிலுமில்லம்.

‘ஜெயசிக்குறு’வை முறியடித்த ‘ஓயாத அலை’களின் கொடியசைவில்
படுவான்கரையின் புதல்வரை மறந்தனர் எல்லோரும்
வெற்றியும் வீரமும் பொதுச் சொத்தானது
பொதுச்சொத்தை தனி வீரமாகக் கொண்டாடியது வரலாறு.

மண்ணின் அடியில் மட்கியது அவருதிரம்
மனசின் அடியில் மறைந்தது அவர் வீரம்
மனிசரெல்லாம் மறந்தனர் அவர் துயரம்.

00

 

 

 

k

 

 

முறிவு

————

போருமில்லாத சமாதானமுமில்லாத ஒரு நாள்
பகை முட்கள் முளைத்தன
தலைவனுக்கும் தளபதிக்குமிடையில்.
விசுவாசமும் நம்பிக்கையும் முறிந்து சிதற
இரவும் பகலும் உடைந்து சிதைந்தன
ஆற்று நீர் எதிர்த்தோட
கட்டளைகளும் ஒழுங்கும் தெறித்துப் பறந்தன.

அணிகள் பிரிந்தன

———————–
களமாடிகள் அங்கா இங்கா என்றறியாமல்
இருளில் கலங்கித் தம்முள்தாமே மோதினர்.
விசுவாசத்தின் பேராலும் விடுதலையின் பேராலும்
அவரவர் நியாயங்கள் அவரவர் தராசுகளில் வைக்கப்பட்டன
எந்தத் தராசும் நியாயத்தராசாகவில்லை.

சனங்களின் தலை கலங்கியது
விடுதலைப் பாதையும் பயணமும் கலங்கிச் சிதைந்தன.

யார் துரோகி யார் தியாகி?
யாருக்கும் தெரியவில்லை எதுவும்

நான் துரோகியா தியாகியா?
எனக்கும் தெரியவில்லை எதுவும்

களமும் காலமும் போரும் வீரமும்
நம்பிக்கையும் விசுவாசமும் தீர்க்கதரிசனங்களும்
கலங்கிச் சிதைய வழியின்றித் தவித்தேன்

இருள்மூடியதெங்கும்.

‘செல்லும் வழியிருட்டெ’ன்று கலங்கிய சனங்கள்
தங்கள் விதியை நொந்தழச் சிரித்தது கரிக்குருவி

வழியெல்லாம் முள்ளடுக்கும் காரியங்களைச்
செய்த வீரரைத் தடுக்கத் தவறிய வினையின்று
‘தன் வினை தனைச் சுடுமெ’ன்றானதா? என்றழுதார் பலர்.

ரத்தம் தெறித்துப் பறக்க
கொலைவெறி முற்றி
தெருவிலும் வெளியிலும் தோட்டத்திலும் களத்திலும் முன்போதுகளில்
கொன்று தீர்த்த ‘விடுதலையாளரை’யெல்லாம்
குலை நடுங்கப் பார்த்திருந்த விதியே
இன்று கயிறாகிச்
சுருக்கிட்டது எல்லோரின் கழுத்தையும்.

‘ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து
ஆளைக்கடித்த கதைகளை வரலாறு’ சொல்லிச் சிரித்தது.

தியாக முத்திரைகள் துரோகச் சின்னங்களாகின
துரோகச் சின்னங்கள் தியாக முத்திரைகளாகின
இறுதியில் எல்லாமே சிதைந்த எலும்புக் கூடுகளாகின.

00

‘வடக்கென்றொரு திசை இனியில்லை’
என்றான் தளபதி
‘கிழக்கே இனியொரு களமுமில்லைத் தளபதியுமில்லை’
என்றான் தலைவன்.

முற்றிய பகைக்கு திசைகளில்லை
நட்பில்லை, உறவில்லை, நன்றியில்லை, நீதியில்லை
என்றபோது
நாலாயிரம் மறவரும் மறச்சிகளும் வீடேக முனைந்தனர்.

காலம் பழித்தது வீரத்தை
வெற்றிக்கொடியை
களத்தில் வீழ்ந்த மறவரை
சிந்திய குருதியை
எழுதியும் கழுவியும் வைத்த வரலாற்றையெல்லாம்.

களப்புகளெங்கும் சேனைகளை நிறுத்திய தளபதி
வழிகளை அடைத்து நின்றான்.

வடக்கிருந்து
வெருகலாற்றிலும் ‘பாற்சேனை’யிலும் படைகளை இறக்கிய தலைவன்
தலைகளைக் கொய்தெறிந்தான்.

சகோதரர்கள் தம்முள் மோதிச் செத்து மடிந்தனர்.
பெண்ணலறலில் தலைகவிழ்ந்தது நம்பிக்கை.

கனவும் லட்சியமும் வீரமும் நம்பிக்கையும் துரோகமும் விசுவாசமும்
இரத்தத்தில் குளித்தன.

நான் மலத்தின் மீது வீழ்த்தப்பட்டேன்.

00

காற்றிலே எழுந்து வானிலே உயர்ந்த
வெற்றிக்கொடி
காலடியில் வீழ்ந்து ரத்தச் சேற்றிலே புதைந்தது?

00

பிற்காலம் (2014)

காட்சி – 01

———–

காற்றேறிப் புழுதி பறந்த வெளியில் கூந்தல் அலையத்
தனித்த பனையோடு நின்றாள்
ஒற்றைக்கால் மிஞ்சிய பெண்.

வாவியை ஊடறுத்த புதிய பாலத்தில் இல்லை
அவளுடைய வழி.

களப்பில் இல்லை
அவளுக்கான மீன்கள்

வயலில் இல்லை
அவளுடைய நெல்மணிகள்

பட்டிகளில்லை
அவளுடைய பசுக்கள்

மடியில் விளைந்த நான்கு பிள்ளைகளுக்காக
அவளிருந்தாள் இன்னும் மிச்சமாய்

நெருப்பில் எரிந்தபடி.

00

காட்சி – 02

————–
எரிந்து மிஞ்சிய உடலில்
மிஞ்சித் துடிப்பது உயிரென்றறிய முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறான்
கைவிடப்பட்ட போராளி.

கரையாத துக்கத்தைக் கட்டிச் சுமக்கும் கழுதை
அவனோடிருந்தது.

புற்களில்லாத வெளிகளில் அலையும் பசுக்கள்
அவனோடிருந்தன.

தூண்டிலிற் சிக்காத மீன்கள் வாவியிலும்
தூண்டிலில் சிக்கியவன் தெருவிலும்
என்றிருந்தான்.

சனங்கள் யாரும் அவனைத் தேடவில்லை
படைகளும்
வரலாறும் தேடவில்லை.

கைவிடப்பட்ட காகிதம்
காற்றிலே பறந்து ஆற்றிலே வீழ்ந்தது.

00

காட்சி – 03

————–

இன்னும் ஓயாத விசும்பலில் கலங்குகிறது காற்று
பள்ளி செல்லாத சிறுவர்கள் ஆற்றிலே நின்றனர்
எந்த மீனும் அவர் கையில் சிக்கவில்லை.

கதிர் பொறுக்க வயலுக்குச் சென்றவர்களின் கையில்
எந்தக் கதிரையும் விட்டு வைக்கவில்லை
‘வெட்டுமிசின்’ அங்கே.

தாமரைக் கிழங்குகளோடு
மாலையில் திரும்பியவரை
எப்படிக் கண்டறிந்து தீண்டியதந்தப் பாம்பு?

00

ஓயாதொலிக்கும் ஓலக்குரலை
ஆற்றாமனதின் விசும்பலைச் சுமந்தலையும் காற்றை
இன்னுமேன் வைத்திருக்கிறது என் நிலம்?
இன்னுமேன் வைத்திருக்கின்றன களப்புகள்?

அன்னையர் ஆழ்ந்துறங்கும் காலமொன்றை
யார் கொண்டு வருவீர் அங்கே?

அன்னக் கலயம் அளைந்து அமுதூட்டும் கைகளில்
பால் சிந்திப் பயிர் வளர்க்கும் நிலவையும்
பட்டி நிறைந்த பசுக்களையும்
பேய்வீட்டிலிருந்து மீட்டுத் தருவது யார்?

00000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment