Home » -அனோஜன் பாலகிருஷ்ணன் » *அசங்கா (சிறுகதை ) அனோஜன்

 

*அசங்கா (சிறுகதை ) அனோஜன்

 

மிக உக்கிரமாக மழை பெய்யத்தொடங்கியிருந்தது. கார் கண்ணாடியூடாக வெளியே பார்த்தேன். மழைத்துளிகள் ஈயக்குமிழ்கள்போல் காரின்மேல் பட்டுச்சிதறின. காருக்குள் ஓரளவு சூட்டுடன் இருந்தாலும், குளிர் உடம்பின் தசைகளுக்குள் முட்டிமோதி நுழைவதினை உணரத்தொடங்கியிருந்தேன். தலைமுடிகளை கோதிக்கொண்டு காரின் வேகத்தினை குறைத்துக்கொண்டு முன்செல்லும் வாகனத்தின் நகர்தலுக்காகக் காத்திருந்தேன். மெல்லமெல்ல முன்னால் இருக்கும் நீண்ட தொடர்வாகனங்கள் புகையிரதப்பெட்டிகள்போல் பிரமாண்டமாக ஒத்திசைவாக இயங்கிக்கொண்டு மெல்ல அசைந்துகொண்டிருந்தன. மெதுவாக நகரும் நீண்ட ராட்சத அட்டையைப்போல் கற்பனைசெய்துபார்த்தேன். கார் இருக்கையில் சுதந்திரமாக சாய்ந்து விழிகளை இடப்புற கார் கண்ணாடியூடாகப் பரவவிட்டேன். ரப்பர் தோட்டங்கள் நீண்டு விசாலமாக இருந்தன. மழையின் சாரலுடன் கலந்த காற்று உக்கிரமாக ரப்பர் மரங்களை அடித்துத் தோய்த்துக்கொண்டிருந்தது. அசராமல் தான்தோன்றித்தனமாகக் கரைகளில் வளர்ந்திருந்த சீமைப்புல்லின் பச்சை நிறம் கண்களைக் குளிர்மையாக்கி உள்ளீர்த்துக்கொண்டிருந்தது. பின்னால் ஹோர்ன் சத்தங்கள் ஒலிக்க கவனத்தினை திசைதிருப்பி காரின் வேகத்தினை கூட்டிச்சென்றேன். தினமும் தொழிற்சாலையில் இருந்து வேலைமுடிந்து பிரதானசாலையை எட்டும்வரை இதுபோல மெதுவாகச்செல்ல வேண்டியிருந்தது. இந்த இயந்திரத்தனம் அவிசாவளைக்கு வந்தபின் எனக்குப் பழக்கமாகியிருந்தது. சீதாவக்கை கைத்தொழில் ஏற்றுமதி வலயத்தில் ஏறக்குறைய நாற்பது தொழிற்சாலைகள் இருந்தன. பெரும்பாலும் ஆடைநெய்தல் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள். அதில் ஒன்றில் வேலைக்கு இருந்தேன்.

asangaஅவிசாவளையில் எப்போதும் மழை துமித்துக்கொண்டே இருக்கும். குளிர்ந்த காற்று வீச கறுத்த தடிமனான மேகக்கூட்டங்கள் மலைக்குன்றுகளின் மேல் நகர்ந்துகொண்டிருக்கும். ரப்பர் தோடங்களும், இரத்தம் சுவைக்க ஏங்கும் மெல்லிய மலை அட்டைகளும் செறிவாகவிருக்கும். கைத்தொழில் வலயத்திற்குள் நுழையும்போது அகண்ட சாலைகளில் சீரான வேகத்தில் பயணிக்கும் உயர்தர கனரக வாகனங்களும் மினுக்கப்பட்ட தரைகளும் வேறோர் நாட்டில் இருப்பதுபோல் மூளைநரம்புகளை சிலிர்க்கவைத்து திகைக்கவைக்கும். முதன்முதல் வேலைகிடைத்து வந்தபோது பரந்த தரைகளையும் குளிர்ந்த சுற்றுச்சூழலையும் நம்பமுடியாத பிரமிப்புடன் விழிகள் குளிரப்பார்த்தேன். ஆடியசையும் சீமைபுற்களின்மேல் உள்ள பனித்திவலைகள் உதிர்ந்து உருகும்வரை வேலையில் இருந்து என் குடியிருப்புக்கு வருவேன். ரப்பர் மரங்கள் சூழ்ந்த நிலம் புட்டியாக இருக்கும். அதன் அடியாழத்தில் ஆறு தெளிந்த நீராக சீராக தன்னை விரித்து வெண்திரைபோல் படர்ந்துசெல்லும். ஆற்றின் கரையில் இருந்து கொஞ்சம் தள்ளியிருந்த மேட்டுநிலப்பரப்பில் குரோட்டன்கள் புடைசூழ நான் குடியிருக்கும் வீடு இருந்தது. தனிமையான குடியிருப்பு. உணவு சமைத்துப்போடவும் வீட்டுவேலைகள் பார்க்கவும் மகதன் என்ற சுருட்டைமுடிகொண்ட நடுத்தரவயது நபர்.
என்குடியிருப்பு வீட்டைத் தள்ளி அசங்காவின் வீடு இருந்தது. அவளின் ஆறுவயது மகள் நிமினி நீண்டு வளர்ந்திருந்த தலைமுடியை பின்னி சிவப்பு ரிப்பனால் இரட்டைச்சடைகட்டி தினமும் முதுகுப்பை வலிக்க பாடசாலைக்குச்செல்வாள். தரம் ஒன்றில் அரசாங்கப்பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தாள்.
பொறுமையாக பிரதான சாலைவரை வந்துசேர்ந்தேன். காருக்கு ஆர்முடுக்கி வேகம்கொடுத்து பிரதான சாலையை எட்டிப்பிடித்து நகரத்தொடங்கினேன். மழையின் கனதியில் இருண்மை பரவியிருந்தது. கடந்துசெல்லும் வாகனங்கள் ஹெட்லைட்டை ஒளிர்ப்பித்துக்கொண்டிருந்தன. எனது குடியிருப்புக்கு விரைந்தேன். ஆற்றைப் பாலத்தால் கடக்கும்போது எட்டிப்பார்க்க நீரோட்டம் மிகக்கொந்தளிப்பாகத் தெரிந்தது.

சாய்வாக வீசிய காற்றினால் போர்டிக்கோவின் உள்ளேயும் தண்ணீர் சிதறியிருந்தது. போர்ட்டிக்கோவில் காரை நிறுத்திவிட்டு எஞ்சினை அணைத்தேன். கதவைத் திறந்து உள்ளே தேக்கு மரத்தால் செய்த அகண்ட நிலைகளைக்கடந்து நுழைந்தேன். இருக்கையில் இருந்து நிதானமாக சப்பாத்தினையும் சொக்சையும் கழற்றி மாபிள்தரையில் காலைவைக்க நிலம் குளிர்ந்து பாதம் சில்லிட்டது. அறையிற் சென்று உடைகளை நிதானமாக மாற்றி ரப்பர் பாட்டா செருப்பை அணிந்துகொண்டு ஹாலுக்கு வந்தேன்.
மகதன் வந்துகேட்டான் “சேர் டீபோடவா?”
“ஓம்…இஞ்சிபோட்டு பிளேன்டி கொண்டுவா” என்றேன்.
கால்களை நீட்டி குஷன் செட்டியில் அமர அது என்னை மென்மையாகக் கவ்விப்பிடித்தது. மழை விடத்தொடங்கியிருந்தது. காற்றின் உக்கிரமும் குறையத்தொடக்கியிருந்தது. பின்னால் உள்ள யன்னலால் எட்டிப்பார்த்தேன். செம்மண் கரைந்து புற்களைக்கடந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. தென்னோலைகளின் நுனியில் இருந்து நீர் சீராக வடிந்து துளித்துளியாக வீழ்ந்துகொண்டிருந்தது. மகதன் பிளேன்டீயை கண்ணாடி மேசையில்வைத்தான். கோப்பையின் அடிப்புறத்தில் உள்ள நீர் மேசையில் ஒட்டிக்கொண்டது. ஆவிபறக்க தேநீரை ஊதி ஊதிக் குடிக்கத்தொடங்கினேன். குளிர் தந்த பரவசத்துக்கு அதன் இளஞ்சூடு இன்னும் பரவசத்தைக்கொடுத்தது.

அசங்காவின் நினைவு வந்தது. இங்கிருந்து பார்த்தால் அவளின் வீடு கொஞ்சம் தள்ளி வெள்ளைச் சுவர்களுடன் தெரியும். தென்னைமரங்கள் அதிகம் வளர்ந்து அவளின் வீட்டு புகைபோக்கியை மறைக்கும். அவளின் கணவர் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்கின்றார். அவளின் வீட்டில் அவளும் மகளும் தனித்திருந்தனர். மிகத்துடிப்பான அவளின் மகள் நிமினி வீட்டைச்சுற்றி குறுக்கும் நெடுக்குமாக வண்ணத்துப்பூச்சிகளை விரட்டி விளையாடிக் கொண்டிருப்பதைத் தினமும் பார்ப்பேன். நிமினியின் மாநிறத்தோலும், மென்மையான குட்டி விரல்களும், கருமையான முழிகளைக்கொண்ட கண்களும் அசங்காவினை நினைவுபடுத்தும்.

அசங்காவினை நினைக்கும்போது அவளின் கண்களே முதலில் நினைவுக்குவரும். தெளிந்த நீரோடைகளில் செதில்கள் ஜொலிக்க துள்ளிக்குதிக்கும் ஒடுங்கிய மீன்கள்போல் அவள் கண்கள் மயக்கத்தினையும் கிறக்கத்தினையும் திகட்டாமல்தரும். மெல்லமாகத் தட்டிவிட்டாலே உதிர்ந்து விடுவதுபோல் கேசத்தைச்சுற்றி கொண்டை போட்டிருப்பாள். உரோமங்கள் நீங்கப்பட்ட வளவளப்பான கைகளும், கால்களும் அவளை இன்னும் இன்னும் தனிமையில் ஒளிந்துகொண்ட அழகியாக எனக்கு காட்டிக்கொண்டிருந்தது.

காலையில் பின்வளவில் நிற்கும் ஈரப்பலாக்காய் மரத்தில் இருந்து மகதன் வெட்டிய இரண்டு ஈரப்பலாக்காய்கள் குசினிதட்டில் இருந்தன. சண்டேலீடர் பத்திரிகையின் நடு ஒற்றையை எடுத்து ஈரப்பலாக்காய் ஒன்றை வைத்துச்சுற்றி சணல்கயிறினால் கட்டினேன். எனது நீண்ட குடையினை எடுத்துக்கொண்டு வாசல்வரை சென்றேன். காற்றின் உக்கிரமும் மழையும் பூரணமாகத் தனிந்திருந்தது. வெளியேவந்து கையை நீட்டிப்பார்த்தேன். மெலிதான நீர்த்துளி கையில்பட்டு குளிர்மையின் இன்பத்தை ஜனிக்கவைத்தது. மழையின் தூறல் இன்னும் நிற்கவில்லை. குடையினை விரித்துக்கொண்டு மகதனை கூப்பிட்டேன்.
“சேர்..” என்றான்.
“பனியப் போய்ட்டுவாறன்..”
“எத்தனை மணிக்கு இங்கிட்டு வருவீங்க… ராவுக்கு என்ன செய்ய? ரொட்டி குழைக்கவா?”
“ரொட்டி செஞ்சிடுங்க.. இருட்டிறதுக்கு முதல்வந்திடுவன்..”
“அஹ சரி…”
மகதனின் முகத்தில் இருந்து எந்த உணர்ச்சியையும் புரிந்துகொள்ளமுடியாது. நுவரெலியாவில் இருந்து இங்கே வேலைதேடி சிறுவயதில் வந்தவன். சொன்னதை மௌனமாக மறுப்பில்லாமல் செய்வான்.

படிகளால் இறங்கி கேட்டைத் திறந்து ஈரப்பிலாக்காயை காவிக்கொண்டு நகர்ந்தேன். நீர் ஓடிய செம்மண்ணில் கால்வைக்க செருப்போடு அழுத்தி ஒட்டியது. பாதம் புதைந்து செருப்பின் அடையாளம் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. வளைந்துநெளிந்த பாதையில் நடந்து அசங்கா வீட்டுக்கேட்டினை அடைந்தேன். வெண்நிறக்கேட்டில் நீர்த்துளிகள் நிறைந்திருந்தது. உள்ளேசென்று வாசற்படியில் நின்று அழைப்புமணியினை அழுத்த ஆழமான மௌனத்தை கலைத்து உள்ளே ஒலி ஒலித்தது. குடையினை மடித்து வாசலில் வைத்துவிட்டு பொறுமையாகக் விபரிக்க முடியாத உணர்வுகள் உற்பத்தியாக காத்திருக்லானேன். திரும்பவும் அழைப்பு மணியினை அழுத்தினேன். உள்ளேயிருந்து நிமினி இரட்டைசடை தடுமாற ஓடிவந்தாள்.
“அங்கிள் அத்துள்ளே எண்ட, ஒயாட்ட எகக் தென்னண்டஓனே…” (அங்கிள் உள்ளே வாங்க உங்களுக்கு ஒன்று காட்டவேண்டும்) என்று சிங்களத்தில் சொல்லிக்கொண்டு என் சின்னிவிரலைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே வேகமாக நுழைந்தாள்.
“வாங்க..வாங்க கெதில” அவசரப்படுத்தினாள்.
“அம்மா எங்கே?”
“உள்ள இருக்குறாங்க, நீங்க வாங்க” தரதரவென்று என்னை இழுத்துக்கொண்டு உள்ளே ஓடினாள். படுக்கை அறைக்குள் நுழைந்தாள். தூய்மையான வெண்நிற போர்வைகள் மடிப்புக்கள் இன்றி சீராக படுக்கைமேல் விரிக்கப்பட்டிருந்தன. கட்டிலின் தலைமாட்டின்கீழ் சுட்டிக்காட்டினாள். பிளாஸ்டிக் வாளி ஒன்றுக்குள் மென்மையான துணிகள் வைக்கப்பட்டு அதன் மத்தியில் பூனைகுட்டி ஒன்று சுருண்டு படுத்திருந்தது. சாம்பல் நிறமும் கருப்பு நிறமும் கலந்து மயிர்கள் சிலிர்த்து பாதிக்கண்கள் மூடியும் மூடாமலும் அந்த ஜந்து என்னைப்பார்த்தது. கையில் இருந்த ஈரப்பிலாக்காயை நழுவாமல் பிடித்துக்கொண்டு பார்த்தேன்.
“எப்படி இருகின்றது..?”
“சோ கியூட்.. புதுசா வேண்டினதா?”
“இல்லே புடிச்சம்” என்று கன்னங்களில் வற்றாத பரவசங்கள் மிளிரக் கூறினாள்.
“புடிச்சதா எங்கே..”
“மழைக்கு வெளிய கத்திக்கேட்டிச்சு, நிமினி புடிச்சுக்கொண்டுவந்திட்டாள்” என்றவாறு கையில் சிறிய வெள்ளிக் குடுவையில் பால் கரைத்துக்கொண்டு அசங்கா வந்தாள். நிமினி அதனை ஏறக்குறைய பறித்து நிலத்தில் வைத்து இரண்டுகையாலும் பூனையைப்பிடித்து அதன் உரோமங்கள் சிலிர்க்கத் தூக்கினாள். கொஞ்சம் மிரட்சியோடு அவளின் கைகளில் ஒட்டிக்கொண்டு பால் கிண்ணத்தினை முகர்ந்து ஒருவித தாவலுடன் வாலைச்சுருட்டி செவிகளை சாய்த்து தன்னைமறந்த நிலையில் குடிக்கத்தொடங்கியது. நிமினி உற்சாகமாக தரையில் முழங்காலில் அமர்ந்து பூனை பால்குடிப்பதினை பார்த்தாள்.
“வீட்ல காச்சது இந்தாங்க” கொண்டுவந்த ஈரப்பிலாக்காயினை அசங்காவிடம் கொடுத்தேன். மறுப்பில்லாமல் வேண்டிக்கொண்டு உள்ளே சென்றாள். நானும் அவளைப் பின்தொடர்ந்தேன். குசினித்தட்டில் ஈரப்பிலாக்காயினை மென்மையாக வைத்தாள். குசினி வாசலால் எட்டிப்பார்த்தேன். நிமினி சலனம் இல்லாமல் இன்னும் பூனைக்குட்டியோடு இருகின்றாள். அசங்காவின் பின்னால் நின்றேன். அவளின் இடுப்பை வாரி அணைத்துக் கட்டிப்பிடித்து கழுத்தில் உதட்டை புதைத்தேன். சுதாகரித்துக்கொண்டு “ நிமினி பாத்திடப்போறாள்” என்றாள்.
“அவள் பூனையோடு இருக்கிறாள்..” அணைப்பை விடுவித்து தட்டியில் இருந்த கரட் ஒன்றினை எடுத்து வாயில் வைத்துக் கடித்தேன்.
“கழுவிட்டு வாயில் வையுங்க..” பக்கத்தில் இருந்த கரண்டியால் அடித்தாள்.
“எப்ப உங்க அவர் வராறாம்?”
“இப்போதைக்கு இல்ல..”
திரும்பவும் அவளை கரட்டை மென்றுகொண்டு பின்னால் கட்டியனைத்தேன்.
“இரவு இங்க சாப்பிடுறீங்களா?”
“இல்ல வீட்ல சமைக்க சொல்லிட்டன்…மகதன் நெடுவலும் உன்வீட்ட வந்து ராவுச்சாப்பாடு தின்னுட்டுபோக ஒருமாதிரி பாக்குறான்…”
“அம்மா பூஸ் முழுப் பாலையும் குடிச்சுட்டு..” நிமினி கத்திக்கொண்டு ஓடிவந்தாள். அசங்காவினை விடுவித்துக்கொண்டு சட்டெண்டு விலகிவந்தேன். சமையலறைக்குள் வந்த நிமினியை தோள்வரை தூக்கிக்கொண்டு வெளியேவந்தேன். மழை பூரணமாகவிட்டிருந்தது.
“எங்கே போச்சு பூஸ்?”
“அங்கதான் படுத்திருக்கு..”
அறைக்குச்சென்றோம். அவளை இறக்கிவிட்டேன். பூனையைச் சுற்றிக்காட்டினாள். அதன் கண்களைப் பார்த்தேன். ஒளிர்ந்து பிரகாசித்தது. ஒரு கணம் தடுமாறினேன். “மியாவ்..” என்று ஈனமான குரலில் கத்தியது.
அசங்கா ஹாலுக்கு சூடான பால்கோப்பியை அகண்ட கோப்பையில் வார்த்துக்கொண்டு வந்தாள். நிமினி “எனக்கு என்றாள்?”
“உள்ளேயிருக்கு பால், போய் எடு..”

நிமினி உள்ளே ஓட நாங்கள் ஹாலுக்கு வந்தோம். அசங்காவின் பால்கோப்பி அவளின் அழகைப்போல் திகட்டாமல் இருந்தது. நுனிநாக்கு இனித்தது. பிரம்பு நாற்காலியில் அமர்ந்தோம். வாசலில் இருந்து வந்த குளிர் காற்று முதுகைத்தீண்டி என் சட்டைக்குள் புகுந்தது கொலரை குலுக்கியது.
“ஊரில அம்மா பொம்பிளை பார்த்து முடிச்சுட்டாங்களா?” என்றாள்.
“ஹ்ம்ம்.. அம்மா ஏதோ பார்த்திட்டு இருக்குறாங்க..”
“இன்னுமா சரிவரல?”
“ஹ்ம்ம்…சீதனம் பெரிசா எதிர்பாக்குறாங்க.. ஒவ்வொண்டும் தட்டிக்கழிந்துகொண்டு போகுது.. எனக்கு வயசு போய்ட்டு இருக்குறது மட்டும் மனிசின்ட கண்ணுக்கு தெரியுதில்லை…”
நிமினி தன்னுடைய பால் கோப்பையுடன் ஓடிவந்து திரும்பவும் படுக்கையறைக்குச் சென்றாள். பூனைக்கு அருகில் சப்பாணிகட்டி அமர்ந்துகொண்டு பூனையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அருகில் சென்று அவளைப்பார்த்தேன். என்னைக் கவனிக்காமல் பூனையையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அதன் உரோமங்களை நீவிக்கொடுத்தாள். செல்லமாக இமைகளை பாதிமூடி முனகியது. குளிருக்கு வைத்த மென்மையான துணியில் கலாதியாக சுருண்டு படுத்திருந்தது.
நடந்து வீடு வரும்போது நீர் முழுவதும் வடிந்திருந்தது. பாதைகள் அனைத்தும் அலசி கழுவிவிட்டதுபோல் ஜொலித்துக்கொண்டிருந்தது. மகதன் பசலி சேர்த்து ரொட்டி சுட்டிருந்தான். உணவருந்திவிட்டு தொலைக்காட்சியில் இருக்க குளிருக்கு வழமையைவிட முன்னமே நித்திரை என்னை ஆட்கொண்டது. போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு நித்திரையின் அடியாழத்துகக்குள் செல்ல முயன்றுகொண்டிருந்தேன்.
நிமினியின் பூனை என்னை முறைத்துப்பார்த்தது. தொட்டுத்தடவ என் கையை சீறிக்கொண்டு பாய்ந்து கடித்துக் குதறியது. அதன் ஆழமான கொடுவாய்ப்பல் தசைகளில் நுழைந்து கிழித்தது. சிவப்பு ரத்தம் பீறிட அதனை வாலைச் சுருட்டிக்கொண்டு நக்கத்தொடக்கியது. திடுக்கிட்டு எழுந்து கையை உதறிக்கொண்டு பார்த்தேன். தலைமாட்டில் இருந்த கடிகாரம் ஒன்று பத்தைக் காட்டியது.
தினமும் அசங்காவின் வீட்டிற்குப் பின்நேரங்களில் செல்வேன். வீட்டு முற்றத்தில் எப்போதும் நிமினியோடு பூனை நிற்கும். தினமும் பால் குடித்து செழிப்பாக உற்சாகமாக நின்றது. மெல்ல மெல்ல அது வளர்வதினை மிக அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். சீமைப்புற்களுக்குள் நுழைந்து சென்று விளையாடுவதும் நிமினியோடு தும்பிகள் பிடிப்பதுமாக எப்போதும் நிமினியை சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும். காரணம் இன்றி அந்தப் பூனையை தயக்கம் கலந்த பயத்துடன் பார்த்தேன்.

0000000000000

செருப்பை வெளியே கழற்றிவிட்டுப் உள்ளே போவமா என்று வாசலில் நின்று பார்த்தேன். அசங்கா உள்ளே சமையலில் இருந்தாள். நிமினியின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன். கையில் பூனையுடன் ஓடிவந்தாள்.
“என்ன அங்கிள்?”
“ஆத்துக்கு குளிக்கப்போறன் வாறியா?”
“ஆத்துக்கா….? அம்மா அங்கிள் ஆத்துக்கு போறாராம் நானும்போறேன்..” வீட்டுக்குள்ளே சொல்லிக்கொண்டு ஓடினாள். அசங்கா கூடத்தைத் தாண்டி வெளியே வந்தாள். என்னைப்பார்த்து புன்னகை ஒன்றைப்படரவிட்டாள்.
“துவாய எடுத்திட்டுப்போ…” நிமினியைப்பார்த்து அதட்டலுடன் சொன்னாள்.
நிமினி காற்சட்டை ஒன்றை போட்டுக்கொண்டு கையில் துவாயுடனும் ராணி சோப்புடனும் ஓடிவந்தாள். அது அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்று. சனிக்கிழமை தினமும் ஆற்றுக்கு குளிக்கச்செல்லும்போது நிமினியையும் கூட்டிச்செல்வேன். முதன் முதலாக நிமினியையும் அசங்காவையும் சந்தித்ததே ஆற்றில்தான்.
என் முழங்கால்வரை உள்ள நீர்மட்டத்தில் நிமினி இறங்கி பரவசத்துடன் கைகளால் நீரினை ஏற்றி குதூகலித்துக்கொண்டிருந்தாள். அசங்கா ஆற்றங்கரையில் மௌனமாக அவளைப்பார்த்துக்கொண்டு முகத்தில் தனிமையின் ஏக்கத்துடன் கையில் புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தாள். மேட்டுமண் சரிவில் இறங்கி ஆற்றில் நீராடுவதற்காக அப்போது துவாயுடன் வந்துகொண்டிருந்தேன். தொலைவில் இருந்து அவர்களை நோக்கி நடந்துகொண்டு அசங்காவினையும் அவளுக்கு முன் குதூகலத்துடன் நீரில் விளையாடிய நிமினியையும் பார்க்கும்போது ஒரு தேர்ந்த ஓவியனால் தீட்டப்பட்ட ஓவியம்போல் அதன் காட்சி இருந்தது. அசங்காவின் முதுகை ஒட்டி நீண்டு வளர்ந்திருந்த ரப்பர் மரங்கள் உறைந்ததுபோல் அசையாமல் சலனம் இன்றி இருந்தன. அந்த முதற்சந்திப்பு இன்று நினைத்தாலும் வாழைச்சேனை கரும்புபோல இனிக்கும்.

ஆற்றுக்கரைக்கு வந்துசேர்ந்தோம். நிமினியின் பூனையும் அவளுடன் துள்ளிக்குதித்து வந்துசேர்ந்திருந்தது. நிமினியின் காலை உரசிக்கொண்டு மியாவ் மியாவ் என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டு வட்டம் அடித்து அவளின் காலில் இடறுப்பட்டுக்கொண்டிருந்தது. கடந்த வாரங்களில் பெய்த மழையில் ஆற்றின் நீரோட்டம் வழமையைவிட அதிகமாகவே இருந்தது. கரையில் இருந்த சீமைப்புல்லுக்கு மேல் துவாயையும், சோப்பையும் வைத்துவிட்டு ஆற்றில் நீராட தயாரானோம். நீரைத் தொட்டுப்பார்க்க கைகள் சில்லிட்டது. மிகுந்த தெளிந்த நீராக அது தன்னைப் பிரகடனப்படுத்தியது. கால்களைத் தயக்கத்துடன் நீரினுள் விட குளிர்ந்துகொண்டு காலின் உரோமங்கள் குத்திட்டன. ஒருநொடியில் உடல்முழுவதும் பரவசமாகி குதூகலிக்க மெல்லமெல்ல என்னை நீரினுள் ஒப்படைத்தேன். தாயின் கதகதப்பான அரவணைப்பில் சிக்கிச்சுழலும் குழந்தையை வாரியணைப்பதுபோல் தூய்மையான குளிர்ந்த நீர் என்னை ஆட்கொண்டது. முழங்கால்வரை இருந்த நீரில் இருந்து முன்னேறி நகர்ந்தேன். கைகளால் நீரைக்கோதும்போது பெண்மையைத் தீண்டும் ஸ்பரிசத்தை உணர்ந்துகொண்டு சென்றேன். அந்த உணர்வு காமம்போல இன்னும் இன்னும் என்று வேண்டிநிற்க வெவ்வேறு உணர்வுகள் தடுமாற்றங்களைச் செயற்கையாக உருவாக்கியடங்கியது. ஆற்றின் மையத்தில் நின்றும் ஆழம் போதாமலிருந்தது. உடம்பு முழுவதும் குளிர்ந்து காற்றின் ஒவ்வொரு உலுக்களுக்கும் முதுகுத்தண்டு சில்லிடவைத்தது. பொறுமையாக நின்றேன். நாசி கூசியது. நிமினியை கரையிலேறி நிற்கச் சொல்லிவிட்டு நீருக்குள் முகிழ்ந்து எழும்பினேன். முதுகுத் தண்டம் சில்லிட்டு பிடறி குளிர்ந்து மண்டை விறைத்தது. நிமினியின் கையினைப்பிடித்து நீருக்குள் மெதுவாகக்கொண்டுவந்தேன். அவளின் பூனை கரையில் நின்றி பார்த்துக்கொண்டிருந்தது. அவளுக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினேன். குதூகலமாக நீரில் சுதந்நிரமாக இயங்கத்தொடங்கினாள்.

தென்னோலைகளும் சருகுகளும் ஆற்றில் மிதந்து படர்ந்து வந்துகொண்டிருந்தது. அதை விலத்தி நீராடிக்கொண்டிருந்தோம். நேரம் கரைந்துகொண்டிருந்தது. நீரில் மல்லாக்காக மிதந்துகொண்டு பார்க்க ரப்பர்தோட்டத்து மேட்டுச்சரிவில் அசங்கா எங்களைப் பார்த்துக்கொண்டு தூரத்தில் வந்துகொண்டிருந்தாள். முழங்கால் வரை அவள் அணியும் சட்டையின் விளிம்பு தும்புதும்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கையில் பிளாஸ்டிக் வாளியும் சில உடைகளையும் காவிக்கொண்டு நெற்றியில் புரளும் கேசத்தின் நுனிகளை கோதி விலத்தித் தள்ளிக்கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டு நடந்துவந்தாள்.
நிமினி நன்றாகவே நீரில் மிதந்து உடல் குளிரில் மெலிதாக நடுங்க குறுக்காக கையைக்கட்டிக்கொண்டு நின்றாள். வாயின் நுனியின் கீழுதட்டில் நீர் வழிய கண்கள் சிவந்திருக்க தேவதைபோல் மினுங்கினாள்.
அசங்கா உடைகளுடன் கீழிறங்கி கட்டுக்குவந்தாள். அந்தக் கட்டில் உடைகள் துவைக்கும் வகையில் கருமையான கருங்கல்லினால் கட்டப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் வாளியினை கீழே வைத்துவிட்டு எங்களைப்பார்த்து புன்னகைத்தாள். நீரில் ஒருமுறை முகிழ்ந்து எழுந்தேன். முதுகில் தீண்டிய காற்று இன்பமூட்டியது. நிமினியின் பூனை சம்பந்தமேயில்லாமல் “மியாவ்..” என்று அடியில் இருந்து விசித்திரமாகக் கத்தியது. ஒருமுறை அந்த ஒலியின் வீச்சு எனக்குள் திடுக்கிடத் தூண்டியது.

நிமினி சிறிய கைகளை விசிறியடித்து நீரினுள் அலைந்து திரிந்துவிட்டு எழுந்தாள். அவளின் பற்கள் ஒன்றோடு ஒன்று இன்னும் வேகமாக அடித்துக்கொண்டன. குளிரில் அவள் கைகள் விறைத்திருந்தன. கண்களின் அடி இளம் சிவப்புநிறத்தில் வெளிறியிருந்தது. குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு நாடியில் இருந்து நீர் சொட்டச்சொட்ட கரைக்குப்போனாள்.
“எனக்கு குளிருது.. நான் வீட்ட போகப்போறன்”
“சரி.. கவனம் கரைல வழுக்கும் மெல்லமாப்போ..” என்றேன்.
“அம்மா நான் வீட்டபோறன்….துறப்பு?” துவாயினை குறுக்காக முதுகின்மேல் போட்டுக்கொண்டு அசங்காவிடம் கேட்டாள்.
“குரோட்டன் பாத்திக்குள்ள தாண்டி…”
துள்ளிக்குதித்து நீர் சொட்டச்சொட்ட முயற்குட்டிபோல் ஓடினாள். “மெல்லமாய் போ அங்கிட்டு பாசியிரிக்கீ..” அசங்கா அதட்டினாள்.
அசங்கா பொறுமையாக உடைகளை எடுத்து நீரில் அலம்பி வாளிக்குள் உடைகளை அமிழ்த்தி பொறுமையாக ஆடைகளை சேஃப் எக்ஸல் போட்டு சுத்தம் செய்யத்தொடங்கினாள். கன்னங்களில் இருந்து மெலிதான வியர்வைக்கோடு வழிந்துகொண்டு காதுமடல்களைத் தாண்டி கீழே இறங்கியது. நான் நீரில் தலைகுப்புற மிதந்து நீச்சல் அடிக்கத்தொடங்கினேன். இரண்டு கைகளும் உளைவதுபோல் கடுமையாக வலிக்கத்தொடங்கியது. நிறுத்திவிட்டு கரைக்கு நகர்ந்தேன். அசங்கா குனிந்து நின்று ஆடைகளை நீரில் துவைத்துக் கொண்டிருந்தாள். பின்னால் சென்று இடுப்பை வாரி சட்டென்று அணைத்தேன். அவளின் பெண்மை உடம்பில் ஊடுருவ அவள் திடுக்கிட்டு திரும்ப சமநிலைகுலைந்து நீரில் மெத்தென்று விழுந்தோம். நீர் தெறித்து குமிழ்களாகப் பறக்க நீரினடியிலுள்ள கூழாங்கற்கள் மென்மையாக முதுகில் குத்தியது. அசங்காவினை புரட்டினேன். கேசம் நீரில் நனைந்து ஈரமாகி அவளின் பற்களுக்குள் நுழைந்து கவர்ச்சிகரமாக இருந்தது. காதுமடலுக்கிடையில் என் உதட்டைப்பொருத்தினேன். அவசரமாக என் கைகளை அவள் மார்புச்சட்டைக்குள் நுழைத்து வலதுமார்பை வெளியே எடுத்தேன். நீரினுள் ஊறி வெண்மையாகக் குளிர்ந்து மெதுமெதுப்பாகவிருந்தது. கருமையான முலைக்காம்பை அழுத்திக்கொண்டு இறுக்கிப்பிசைய முயன்றேன். என் கைகளின் ஊடுருவல்களை தடுக்கமுயன்றாள். அவள் ஆடைகளை ஒளிபட்டு வெண்மை மறையாத தொடைகள் தெரியும்வரை உயர்த்தத்தொடங்கினேன். அவள் திமிறி முழுப்பலனையும் திரட்டி என்னைத் தள்ளிவிட்டாள். “மியாவ்..” என்ற சத்தம் பலகீனம் கலந்து விசித்திரமாக ஒலிக்க நீரில் தடுமாறி புரண்டேன். நிமினியின் பூனை சீமைபுற்களுக்குள் இருந்து என்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அவள் அவசரமாக வெளித்தள்ளியிருந்த மார்பினை மேலாடைகளுக்குள் நுழைத்துவிட்டு தொடைவரை மேலுயர்த்தப்பட்டிருந்த நனைந்து ஆடைகளை அவசரஅவசரமாகச் சரிசெய்யத் தொடங்கினாள்.

2
ஆற்றுக்கரையிலுள்ள ரப்பர் தோட்டத்தில் மகதனுடன் ஆற்றின் நீரோட்டத்தினை பார்த்துக்கொண்டிருந்தேன். கடும் அமைதியில் ரப்பர்காடு உறங்கிக்கொண்டிருந்தது. விட்டுவிட்டு பறவைகளின் இறக்கை ஒலி “படப்..படப்” என்று அடித்துக் கேட்டுக்கொண்டிருந்தது. கையில் இருந்த ப்ளாக்லேபிலினை கிளாசில் வார்த்தேன். அதன் பொன்நிறம் தங்கச்சுவாலைபோன்று கிளாசினுள் தெரிந்தது. தொண்டைக்குள் வார்க்க எரிந்துகொண்டு இரைப்பையை நோக்கி உள்ளே சென்றது. மகதன் அருகிலுள்ள கல்லில் குந்தியிருந்து தடித்த புகையிலைச்சுருட்டை வாயில் வைத்து ஆழமாக உள்ளேயிழுத்து நிதானமாகப் புகைத்துக்கொண்டிருந்தான்.
கொண்டுவந்த மாட்டு இறைச்சிப் பொரியலை இருவரும் மென்றுகொண்டு அமைதியாகவே நீண்ட நேரம் இருந்தோம். என் உடல் மெலிதாகக் வீசும் காற்றில்மோதி குளிர்ந்துகொண்டிருந்தது. மழைபெய்த ஈரத்தில் மண் சேறாகக் குழைந்து வைக்கும் பாதத்தின் செருப்பை அழுத்திப்பிடித்து வைத்திருந்தது. மதகனின் கிளாசில் வெறும் மதுவை அரைவாசிக்கு வார்த்துக்கொடுத்தேன். பவ்யமாக வேண்டி கையில் வைத்திருந்தான். அவன் மதுவை எதிலும் கலக்காமல் வெறுமே குடிப்பதினை பழக்கமாகக் கொண்டிருந்தான்.
“என்ன சேர் சரியாக யோசிக்கிறீங்கபோல இருக்கீது?” இடக்கையால் நெற்றி வடுவைக் தடவியபடி கேட்டான்.
“ஹ்ம்ம்…ஒண்டும் இல்லை மகதன்…”
“அப்ப என்ன சேரு.. அசங்காவோட ஏதும் பிரசனை ஆகிச்சோ..”
“ஹ்ம்ம்ம்…..”
“…………………..” அவன் மௌனமாகப் விழிகளை உருட்டி என்னை ஒருமுறை உற்றுப்பார்த்துவிட்டு நிதானமாக மதுவினை உறுஞ்சிக்குடிக்கத் தொடங்கினான்.
“என்னவோ தெரியலை மகதன் அசங்காமீது நான் போய்கிட்டு இருக்கிற விதம் சரியாப்படலை..”
“மோகம் கூடிக்கிட்டுப்போகிதுபோல..” அவன் குரலில் ஏளனம் இருக்கவில்லை.
“ஏதோவொரு விஷயம் திரும்பத்திரும்ப அவகிட்ட இழுத்திட்டே இருக்கு, அவண்ட மகளைப் பார்க்கத்தான் பயமாய் இருக்கு..”
“ஏன் சேரு… அதில என்ன பயம்?”
“அசங்கா நிமினியோட அம்மா.. அசங்காவோட நான் பிழையாப் பழகிறது அவளுக்கு தெரிஞ்சிடுமோ என்று பயப்படுறன்…”
அவன் சுருட்டை முழுவதும் புகைத்து முடித்திருந்தான். என் தலை சாதுவாக இடிக்கத் தொடங்கியிருந்தது.
“அவாவும் உங்கக்கிட்ட நெருங்கி வாறாதானே..”
“ம்ம்ம்..”
“நீங்களேன் சேரு மறுபடி மறுபடி அவங்க வீட்ட போறீங்க.”
“தனிமை மதகன்… ஹ்ம்ம் அசங்கால ……….ச்ச்…..சொல்லத்தெரியல மதகன்..”
“எல்லாமே காமம்தான் சேரு… அவங்க மனுஷன் வெளிநாட்டில… உங்களுக்கு இன்னும் கலியாணம் ஆகல… இப்படியே போய்கிட்டு இருந்தா அவங்க மனுஷனுக்கு தெரியவரும்… பிரச்சனையாகும்… உங்க கௌரவம் போயிடும் சேரு… விட்டு விலகிடுங்க”
நானும் மகதனும் போத்தல் முழுமையாகத் தீரும்வரை குடித்து முடித்தோம். நீண்ட நேரம் அலட்டிகொண்டேயிருந்தோம். என்ன கதைத்தோம் என்று நினைவின் அடியில் கொஞ்சம்கூட தேங்கியிருக்கவில்லை. ஆனால் மகதனிடம் நான் அடிக்கடி “I want to lay her” என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

வீடு வந்துசேரும்போது தலை கடுமையாக வலித்துக் கொண்டேயிருந்தது. படுக்கையில் மல்லாக்க வீழ்ந்து படுத்திருந்தேன். அசங்காவின் வெளிறிய தொடைகளும் முலையும் கனவில் விரிந்துபடர்ந்தது. கருமையான முலைக்காம்பை நோக்கிச்செல்ல அதன் மையம் நிமினியின் பூனையின் கருமையான கண்கள்போல் ஒளிர்ந்துகொண்டிருக்க நிமினி ரப்பர் தோட்டதில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு முன் அவளின் குட்டிப்பூனை நீண்ட வாலினை தூக்கிக்கொண்டு முன்னங்களை விரிந்து பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. விடாப்பிடியாக அவள் பிடிக்க விரட்டிக்கொண்டிருந்தாள். நீண்ட தூரம் அவர்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். நான் தூங்கவேயில்லை என்று நினைகின்றேன், ஆனால் அந்தக் காட்சி என் மனத்திரையில் வந்துகொண்டேயிருந்தது.
நான் விழித்துப்பார்க்க தலைமெதுவாக வலித்தது. குளிர்ச்சாதனப்பெட்டியில் குளிர்ந்த நீரைப் பருகினேன். மகதனைக் காணவில்லை. வெளியேவந்து காரில் ஏறியமர்ந்து செம்மண் பாதையால் புறப்பட்டு வளைந்து இறங்கி அசங்காவின் வீட்டு கேட்டைத்தாண்டி உள்ளே நுழைந்தேன். காரினை நிறுத்திவிட்டு உள்ளே பார்த்தேன். வீடு திறந்திருந்தது. படிகளால் தாவியேறி நுழைந்தேன். மிக அமைதியாக வீடு இருட்டில் மங்கியிருந்தது. சமையலறையில் மின்குமிழ் ஒளிர்ந்துகொண்டிருக்க அசங்கா சமையலில் இருந்தாள். மெதுவாக உள்ளே நுழைந்து அவளைப் பார்த்துக்கொண்டு வாசலில் நின்றேன். தலைமுடியை சுற்றிக் கொண்டைபோட்டு சீப்பை தலையில் செருவியிருந்தாள். என்னைக் கவனிக்காமல் தொடர்ந்தும் சமையல் வேலையினை செய்துகொண்டிருந்தாள்.
“வீட்ட ஏன் திறந்துவச்சிருக்கிறியள்? என்றேன். நிதானமாகத் திரும்பி என்னைப்பார்த்தாள்.
“உங்களைத்தவிர யார் இங்கே வரப்போறாங்க..” என்றாள் அசுவாரசியமாக.
“நிமினி எங்கே..?”
“அவளுக்கு காய்ச்சல் மெல்லமாய்காயுது.. பனடோல் போட்டுட்டு படுத்திருக்கிறாள்..”
“காலைல நடந்துகொண்டதுக்கு சொறி…” என்றேன். அவள் அதனைக் கவனிக்காததுபோல் மௌனமாகவிருந்தாள்.
“உங்களுக்கு தேத்தண்ணி வேணுமோ.. போட்டுத்தரவா?”
“ஓம்.. தலை இலேசாக இடிக்குது” என்றேன்.
மின் கேத்தலில் நீரைக் கொதிக்கவைத்தாள். நீண்ட முதுகைக் கவ்விப்பிடித்த தடித்த உடை அவளை இன்னும் சின்னப்பெண்ணாக காட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அவளை பின்புறமாகப் பார்க்கும்போதும் கிளர்ந்தெழும் மோகத்தின் உச்சம் மீண்டும் வந்தது. நெருங்கி நிதானமாக இடையில் கைகளைச் செருகி காதுமடல்களை உதட்டால் உரசி கன்னத்தில் இதழ் பதித்தேன். கேசத்தில் செருகப்பட்டிருந்த சீப்பை இழுத்துக்கழட்டி அவளின் கேசத்ததை கழுத்தை மறைக்கும்வரை விட்டுவிட்டு அவளை அணைத்தபடி திரும்ப வாசலில் நிமினி கையில் பூனைக்குட்டியுடன் நின்றுகொண்டிருந்தாள். என் உடம்பு முழுவதும் குளிர்ந்தது. காதுமடல்கள் விறைப்படைந்தது. அசங்காவினை அணைத்த என் கைகள் தானாகவே விலகின. பிரமை பிடித்தபடி நிமினியின் கண்களை நேருக்குநேராகப் பார்த்தேன். எந்தவித மாறுதல்களும் இல்லை. மிக அமைதியாக இருந்தது. என் உடல் நடுங்குவதை உணர்ந்தேன். அவளின் பூனை என்னை வெறித்துப்பார்த்தது. நேருக்குநேராக அப்பூனையின் கண்களைப்பார்க்க அஞ்சினேன்.

 

asanka p

 

நிமினியின் கைகளில் இருந்து தரையில் குதித்து வெளியே மெல்லமாக ஓடியது. ஏதும் நடக்காததுபோல அவள் அலட்சியமாக வெளியே சென்றாள். அசங்காவினை பார்க்காமல் வெளியேவந்தேன். நிமினி படுக்கை அறைக்குள் நுழைந்தாள். விரைவாக வாசல்படிக்குத்தாவினேன். நிமினி பின்னால் “அங்கிள்..” என்று கூப்பிட்டால். அவளின் குரல் பலகீனமாக இருந்தது. திரும்பிப்பார்க்காமல் விரைவாக வெளியே பாய்ந்தேன்.
“ஏன் அங்கிள் போறீங்க?” அவளின் மெலிந்த குரல் கூரிய வாளின் வெட்டுப்போல் முதுகில் பலமாக விழுந்தது.
காரினை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே பாய்ந்தேன். கேட்டைத் தாண்டி வெளியே வரும்போது காரின் சில்லுக்குள் சடக்கென்று ஏதோ தட்டுப்பட்டது. கதவின் கண்ணாடியால் எட்டிப்பார்த்தேன். நிமினியின் பூனை. உடம்பு முழுமையாக உறைய, காரை நிறுத்திவிட்டு கதவினை அடித்துத் திறந்து வெளியே ஓடிவந்து பார்த்தேன். பூனையின் நாக்கு வெளியே தள்ளப்பட்டு முகம் ஒருபக்கமாகச் சிதைந்து அதன் உடல் துடித்து அடங்குவதினை கண்களால் பார்த்தேன். காரின் சில்லுக்குள் அதன் முகம் தடுப்பட்டுவிட்டது. இப்ப எதற்கு அவள் வீட்டே காரில் சென்றேன். நடந்தே போய் இருக்கலாமே. ச்சா…. வீட்டில் நுழைந்து குளியல் அறைக்குள் சென்று ஷவரினைத் திறந்துவிட்டு நீரின் துமியலின்கீழ் அமர்திருந்தேன். மனம் எதையும் யோசிக்க விரும்பவில்லை. அசங்காவினை கட்டியணைத்துக்கொண்டு திரும்ப நிமினி எங்களைப்பார்க்க, திரும்பத்திரும்ப பூனை சிக்கிச் சிதைந்து இரத்தம் சிதறி இறந்தது என் கண்முன்னே விரிந்தது.
என் படுக்கையில் புரண்டு படுத்திருந்தேன். பசி மிதமிஞ்சிப்போக தூக்கம் கலைந்து எழும்போது மணி பதினொன்றைக் காட்டியது. அடிவயிறு கவ்விப்பிடித்து பசித்தது. சமையல் அறையிலுள்ள குளிர்ச்சாதனப்பெட்டியை நோக்கிச்சென்றேன். மகதன் இன்னும் விழித்திருந்தான். போட்டுவைத்த சாப்பாட்டினை அவனே எடுத்துத்தந்துவிட்டு சொன்னான். “அசங்கா உங்களைத்தேடி வந்திட்டுப்போனாங்க…”
“ஏன்.. என்னவாம்?” என் குரலின் பலவீனத்தினை மறைத்தேன்.
“நிமினிக்கு ஒரே காச்சலாம், சத்தியாம்…”
“ஓ..”
“அவங்க வளக்கிற பூனை செத்திட்டாம்.. நிமினி ஒரே அழுகையாம்.. உங்கள ஒருக்கா வரட்டாம்..”
“இந்த நேரத்திலயா?”
“ம்ம்.. இப்ப கொஞ்சம் முதலும் இங்கிட்டு வந்திட்டுப்போனாங்க நீங்க நித்திரைல இருக்கிறதா சொன்னேன்..” என்றான்.
புட்டை சாப்பாட்டு மேசையில் வைத்து பிசைந்து சாப்பிட்டேன். நிமினியின் வஞ்சனையற்ற கண்களை என்னால் ஒருபோதும் நேருக்குநேர் பார்க்க முடியாது. எது நடக்கக்கூடாது என்று நினைத்தனோ அது மிக எளிமையாக நிகழந்துவிட்டது. இனிமேல் என்னால் அங்கு போகவே முடியாது. சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் தொலைக்காட்சிப்பெட்டியினை பார்க்க முயன்றேன். அமைதியிழந்து மீண்டும் படுத்தேன். தூக்கம் வரவேயில்லை. வெளியே மழை பெய்வதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

மறுநாள் வேலைக்குச்செல்ல அவசரமாக ஆயத்தமானபோது வீட்டு வாசலில் அசங்கா நின்றுகொண்டிருந்தாள். சொக்சை அணிந்துகொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்துபார்த்தேன். அவள் முகம் வாடிவதங்கியிருந்தது.
“நிமினி ஒரே அழுகை; நேற்று ராத்திரி முழுக்க தூங்கவில்லை..” என்றாள்.
“என்னவாச்சு? வார்த்தைகளை கடினப்பட்டு வெளிவிட்டேன்.
“பூனை செத்திட்டு… வாகனம் ஏதோ அடிச்சுப்போட்டுது..”
“எ..எ.. எப்ப?”
“நேற்று, அவளுக்கு ஒரே காச்சல்…. நிறைய சத்திவேற.. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போகலாம் என்றாள் வாறாளில்லை”
“ஏன் வாராவில்லை?”
“பூனை செத்த கவலை, நீக்க ஒருக்கா வாங்கோவன்..”
“நானா.. நா?”
“தயவுசெய்து ஒருக்கா வாங்கோ”
அவளோடு புறப்பட்டேன். என் உடல் மெலிதாக நடுங்கியது. வெண்ணிறப்படுக்கையில் அவள் முகம் முழுவதும் வெளிறிப் படுத்திருந்தாள். நிதானமாக அருகில் சென்றேன். மூடியிருந்த அவளது கண்கள் திறந்தன. பரிசுத்தமான தேவதையைக் கண்டதுபோல் என் உடல் விறைத்து சில்லிட்டது. எந்தவிதக் கலக்கமும் இல்லாமல் நிதானமாகக் கண்களைத் திறந்து என்னைப்பார்த்தாள்.
“அங்கிள்.. என் பூனை செத்துப்போச்சு..” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் கண்களிலிருந்து கண்ணீர்வடிந்து தலையனையில் வடிந்தது. வாய்வரை வடிந்த கண்ணீர் அவளுக்கு உப்புச்சுவையினை கொடுத்திருக்கக்கூடும். அவளின் மிருதுவான மெலிய கைகளைப்படித்து தடவினேன். அவளது உடல் கொதித்தது.

“இன்னுமொரு பூனை வேண்டலாம் நிமினி, உனக்கு இப்ப சரியான காய்ச்சல் டொக்டர்ட்ட போகவேணும்.. என்னோட வா..”
“எனக்கு அந்தப் பூனைதான் வேணும்.. நான் எங்கையும் வரல.” கண்களை மூடிக்கொண்டு அழுதாள். என்னுள்ளே பிரமாண்டமான நீர்ச்சுழல்போல் தர்மசங்கடமான நிலை சூழ்ந்தது . நான்தான் பூனையினை தவறுதலாகக் கொன்றேன் என்பதினை எப்படிச் சொல்ல முடியும்? அவளினை அள்ளித் தூக்கி காருக்குள் கொண்டுசென்றேன். கால்களை உதறி வீரிட்டுக்கத்தத் தொடங்கினாள். என் கை மணிக்கட்டை பற்களால் கடிக்க முயன்றாள். அசங்கா காருக்குள் பின்னால் ஏறி அவளை அழுத்திப் பிடித்துக்கொண்டிருக்க நான் விரைவாக அவிசாவளை போதானா வைத்தியசாலையை நோக்கி காரைச் செலுத்தினேன்.
வேலைத்தளத்திலிருந்து வீடுவரும்போது நிமினியின் நினைவாகவேயிருந்தது. காய்ச்சலுக்கு மருந்தெடுத்து அனுப்பியாகிவிட்டது. இனிமேல் பிரச்னை இருக்காது. மகதன் தந்த தேனீரோடு பிரம்பு நாட்காலியில் அமர்ந்துகொண்டு காற்றில் ஆடும் மூங்கில் இலைகளின் அசைவுகளைப்பார்த்துக் கொண்டிருந்தேன். நிமினி ஏன் அசங்காவோடு நெருக்கமாக இருந்ததைனைப்பார்த்து அதிர்ச்சியடையவில்லை என்பது மட்டும் எனக்குப்புரியவேயில்லை. அவளுக்கு முன்னமே தெரிந்திருக்குமோ?
அசங்கா கேட்டைத் தாண்டி என்னைநோக்கி வந்தாள்.
“நிமினி உங்களை வரட்டாம்? ஒருக்கா வரேலுமோ?”
“என்னத்துக்கு?”
“அந்தப் பூனையைக் கண்டாளாம்… அது கத்திக்கேக்குறத கேட்டாளாம்.. பிதற்றிட்டு இருக்காள்..”
“காய்ச்சல் எப்படி இருக்கு?”
“கொஞ்சம் குறைஞ்சமாதியிருக்கு ஆனா சத்தியெடுத்தாள்..”
“ஏதும் கேட்டாளா?”
“எதை?” புரியாதமாதிரி நெற்றியை சுருக்கிப்பார்த்தாள். பின் சுதாகரித்து “இல்லை” ஒன்றும் கேட்கவில்லை” என்றாள் நிலத்தைப் பார்த்துகொண்டு…..
நிமினியைப் பார்க்க கொஞ்சம் தேறியதுபோல் தோன்றியது. சாதுவான நித்திரையில் இருந்தாள். கண்ணிமைகள் மெலிதாகத் துடித்துக்கொண்டிருந்தன. என் பின்னால் நின்ற அசங்காவினைத் திரும்பிப்பார்த்தேன். குறுக்காகக் கையக்கட்டிக்கொண்டு கதவில்சாய்ந்து நின்றாள். இறுக்கமான பெருமூச்சை அமைதியாகவிட்டாள். நிமினியின் கழுத்தைத் தொட்டுப்பார்த்தேன். இன்னும் காய்ச்சல் குறைந்ததுபோல் தெரியவில்லை. என் கையின் தொடுதலை உணர்ந்து நிமினி மெலிதாகக் கண்களைத்திறந்து பார்த்தாள். கண்கள் பிரகாசம் குன்றி கலைந்த நீரோடைபோல் இருந்தது. என் விரல்களைப்பிடித்தாள்.
“அங்கிள் பூனை சாகலை… அது கத்திச்சு சத்தம் கேட்டன்” என்றாள். தலையசைப்பில் தலையாணி நெளிந்தது.
“வேற பூனையாக இருக்கும் நிமினி., உனக்குச் சரியா காச்சல் காயுது.. மருந்தை ஒழுங்க குடிச்சாக் காச்சல் போயிடும். பிறகு அங்கிள் உனக்குப் பெரிய பூனை ஒன்று வேண்டித்தாறன் சரியா?”
“இல்லை அங்கிள்.. எங்கட பூஸ் கத்திக் கேட்டன், யன்னல் கரைலதான் நிண்டிச்சுபோல ஒருக்கா பின்னுக்குப்பாருங்க நிக்கும் பிடிச்சுட்டு வாங்க..”
“சரி நான்போய் தேடுறன்.. மருந்தை ஒழுங்காக் குடிக்கணும் சரியா..”
அறையைவிட்டு வெளியேவந்தேன். அசங்காவும் என்பின்னே வந்தாள்.
“அவள் காய்ச்சல் வலியில் ஏலாம இருக்கிறாள்.. பூனை செத்தது அவளை ரொம்பவே பாதிச்சுட்டுபோல… காய்ச்சல் மாறினவுடன ஒரு புதுப்பூனை வேண்டிதாரன்.. கிட்டத்தட்ட அதே மாதிரி”
“ம்ம்..” என்றாள்.

000000000

எனது அறையில் படுத்திருக்கும்போது அந்தக்குரல் மிக மெலிதாக எனக்குக்கேட்டது. சந்தேகமேயில்லை “மியாவ்..” என்றுதான் அந்தக் குரல் ஒலித்தது. முதலில் புரியாவிட்டாலும் திடுக்கிட்டு எழுந்துபார்த்தேன். மீண்டும் அதே சத்தம். யன்னலை திறந்து மின்குமிழ்களை உயிர்ப்பித்துவிட்டுப் பார்த்தேன். பூரண நிசப்தமாக இருந்தது. வெளியே வந்து சுற்றிப்பார்த்தேன். பனி பொலிந்துகொண்டிருந்தது. காற்றின் அசைவுக்கு மரங்களின் சருகுகள் உதிர்ந்துகொண்டிருந்தன.
“மியாவ்..” அந்த ஒலி மீண்டும் காதுமடல்களை உரசிக்கொண்டு சென்றது. பழக்கப்பட்ட பூனையின் குரல்தான். நிமினியின் பூனையின் குரலைப்போலவே ஒத்திருந்தது. அதேபோல் வேறொரு பூனையாக இருக்குமோ. ஒருவேளை அதன் தாய்ப்பூனை அல்லது சகோதரம் எதாவது?
மீண்டும் தூங்கிப்போனேன். அதிகாலையில் பனிக்குளிரில் எழும்பும்போது பக்கத்தில் மகதன் நின்றான்.
“சேரு அசங்காவீட்ல ஒரே பிரச்சினைபோல இருக்கீ.. அவங்க உங்கள எழும்பினவுடன வரச்சொனாங்க..” என்றான்.
என்ன கர்மம்டா சலித்துக்கொண்டே ரப்பர் சிலிப்பரைக் கொளுவிக்கொண்டு படிகளால் இறங்கினேன். அசங்காவின் முகம் தீப்பற்றி எரிந்த சருகுபோல் சிதைந்திருந்தது.
“என்னவாச்சு?”
“நிமினி…”அவள் சுட்டிய கையின் திசையில் நிமினி தரையில் இருந்தாள். முகம் பொலிவிழந்து தலைமயிர் கலைந்து முகமுழுவதும் படர்ந்திருக்க அவள் பார்வை நிலைக்குத்த வெறித்தபடி மௌனமாக இருந்தாள். கால்களிலும் முழங்கை விளிம்புகளிலும் செம்மண் ஒட்டியிருந்தது. நெருங்கி அவளருகே சென்று கைவிரலைத் தொட்டேன். உடல் கொதித்தபடி இருந்தது. கண்களில் இருந்து கட்டுக்கடங்காமல் கண்ணீர் பெருகி உதிரத்தொடங்கியது.
“என் பூனையை பிடிச்சுட்டிங்களா?”
“இல்ல நிமினி, நாங்க இதவிட நல்ல பூனை வேண்டுவம்”
“ஏன், என் பூனை சாகலை… நேற்று இரவுமுழுக்க கத்திக்கேட்டது… எனக்கும் வடிவாய் கேட்டிச்சு..”
“எனக்கும் சத்தம் கேட்டிச்சு நிமினி, ஆனா அதுவேற பூனை”
“இல்ல அது.. அது… அதேகுரல், அது எண்ட பூஸ்தான்”
அவள் குரல் சக்தியிழந்து பலவீனமாக ஒலித்தது.
“இந்தக் காய்ச்சலோட வளவு முழுவதும் தேடி அலைந்திருக்கின்றாள்” அசங்கா நிம்மதியிழந்த குரலில் சொன்னாள். நிமினியின் கண்கள் வெளிறியிருந்ததைக் கவனித்தேன்.
“மருந்தை ஒழுங்கா போடுறாளா?”
000000

நிமினியின் தோளின் நிறம் ஒவ்வொருநாளும் குன்றி விநோதமாக வெளிறிப் போய்கொண்டிருப்பதை அவதானித்தேன். ஒருமுறை மருத்துவரை வீட்டுக்கு அழைத்துவந்து காட்டினேன். முதல் பார்வையிலே மருத்துவரின் முகம் மாறியது. வைத்தியசாலையில் உடனே நிமினியை அனுமதிக்கச்சொன்னார். மறுபேச்சில்லாமல் நிமினியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றோம்.
காரினுள் என்னருகே இருக்கும்போது அவளின் கையினைக் கவனித்தேன். மூன்று நகக்கீறல்கள் மெலிதான கோடாகக் சுண்டிப்போய் இருந்தன. அதனை மற்றக் கையால் வருடிக்கொண்டிருந்தாள். இது எப்படி வந்தது என்று குனிந்து அவள் காதருகே கேட்டேன். என் காதருகே பூனையை நேற்று இரவு கண்டேன் பிடிக்கப்போகும்போது விறாண்டி விட்டது என்றாள்.
“எந்தப் பூனை?” மறுபடியும் கேட்டேன்.
“என்ட பூஸ்..”
“அது செத்திட்டு நிமினி”
“இல்ல நேற்று கண்டன் பிடிக்கப்போகக்க விறாண்டிட்டு ஓடிட்டு..”
“அது வேற பூனையா இருக்கும்.. இல்லாட்டி ஏன் உன்னை விறாண்டனும்..அது உன் பூனை ஆச்சே…”
“அதான் எனக்கும் தெரியல..” அவள் அதனைச் சொல்லும்போது கண்கள் கலங்கி கடும் வெறுப்புடன் ஒருகணம் எரிந்ததுபோல் எனக்குத் தோன்றியது.
மருத்துவமனையில் அவளைச் சேர்த்தபின் நிமினியை பற்றிச் சிந்திப்பதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளத் தொடங்கினேன். அவளின் நினைவு என்னை நிம்மதியிழக்கச் செய்துகொண்டிருந்தது. முடிந்தவரை அசங்காவின் நினைவையும் நிமினியின் உருவத்தையும் மறக்க முயன்றுகொண்டிருந்தேன். வேலைத்தளத்தில் அவளுடையை நினைவுகள் வினோத வாசத்தை நுகர்ந்த பூனையின் அலைக்கழிப்புப்போல என்னை கொஞ்சம் கொஞ்சமாத் தின்ன, என்னை மேலும்மேலும் வருத்தி அதிலிருந்து மீண்டுவர வீட்டுக்கு நேரம் பிந்திச் செல்ல ஆரம்பித்தேன். இரண்டு வாரங்களில் ஒருவாறு முற்றிலுமாக அவர்களின் நினைவினை கடந்துகொண்டிருந்தேன். அசங்கா பலதடவை வீட்ட வந்ததாகவும் எனக்காக பலமணிநேரம் காத்திருந்ததாகவும் மகதன் சொன்னான். நிமினியைப் பார்க்க பயமாக இருப்பதாகவும் அவளின் தோல் முற்றிலும் வெளிறிவிட்டதாகவும் சொன்னாளாம்.

இருவாரங்கள் கழிந்து உறக்கத்தில் இருக்கும்போது பூனை ஒன்றின் சத்தம் தினமும் எனக்குக் கேட்டத்தொடங்கியது. மிகவும் பழக்கப்பட்ட அதேகுரல். நிமினியின் பூனையின் குரலை ஒத்த அதேகுரல். மீண்டும்மீண்டும் பின்வளவு, முற்றம் முழுவதும் தேடிப்பார்த்தேன். எந்தப்பூனையையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. மிக அருகில் ஒரு பூனை கத்திக்கொண்டிருப்பதை செவிமடுத்துக்கொண்டிருந்தேன். பூனையின் ஒவ்வொரு ஒலிப்பும் எனக்கு அசங்காவினையும் நிமினியையும் நினைவுபடுத்தத் தொடங்கியது. மெல்ல மெல்ல நிம்மதியிழந்து அசங்காவின் வீட்டிற்குச் சென்றேன். வீடுமுழுவதும் அமைதியில் மூழ்கி வெறுமையாக இருந்தது.
வாசலில் அந்த அந்நியத்தன்மையை உணர அவள் கணவரைக்கண்டேன். அவர் அருகே அசங்காவைக் காண அவள் கண்கள் என் கண்களில் மோதி திகைப்படைந்தது. ஒருகணம் திகைத்துவிட்டு தடுமாறி உள்ளே சென்றேன். என்னை கணவருக்கு பக்கத்தில் குடியிருப்பதாக அறிமுகப்படுத்தினாள். மெலிதாக என்னைப்பார்த்து புன்னகைக்க முயன்றார். ஆழ்ந்த வெறுப்பில் நானும் புன்னகைத்தேன்.
நிமினியின் நிலைமை மிகவும்மோசமாக இருபதாகச்சொன்னார்.
வைத்தியசாலைக்கு அவருடன் நானும் அலைந்துதிரிந்தேன். அவருடன் இருக்கும்போது மட்டும் அசங்காவினை பார்க்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பி வைத்திருந்தேன்.

000000

அன்றும் மழை துமிக்கவில்லை. மூங்கில் மரங்களின் இலைகள் அசையும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. வெள்ளை நிறவிரிப்பில் பிரேதப்பெட்டியுள் நிமினி படுத்திருந்தாள். ஆழ்ந்த அமைதியில் ஒருவகையான நிம்மதியிழப்பு ,உயிரற்ற அவள் முகத்தில் தூய்மையாகத் தெரிந்தது. அசங்கா அழுததை அன்று முதல் முறையாகப்பார்த்தேன்.
உறவினர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். சடங்குகளுடன் அவள் உடல் சிதையூட்டப்பட்டது.
மூன்று நாட்கள் கழித்து மீண்டும் பூனை கத்திக்கேட்டது. வெளியே பார்க்காமல் படுத்தபடியே இருந்தேன். நீண்ட நேரம் அதே சத்தம் கேட்டுக்கொண்டிருக்க யாரோ அதைத்துரத்தி விரட்டும் சத்தம் கேட்டது. மிகத்தெளிவாக பாதங்களின் சத்தம் அதிர்ந்துகேட்டது. வெளியே சென்று பார்த்தேன், யாரும் இல்லை. திரும்பி வரும்போது செம்மண் நிலத்தில் ஒரு சிறிய பூனையின் கால் அடையாளத்தைக் கண்டேன். அருகில் ஒரு சிறுமியின் ஆழமான பாதங்களின் சுவடு. அதனை குனிந்து தொட்டுப்பார்த்தேன். மெலிதாகக் குளிர்ந்தது.
0000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment