Home » இதழ் 19 » *மன, மண முறிவுகள் – சஞ்சயன் செல்வமாணிக்கம்

 

*மன, மண முறிவுகள் – சஞ்சயன் செல்வமாணிக்கம்

 
  • து மிகவும் ஒரு வலிமிகுந்த காலம். நான் போலியாகவும் என்னை நானே ஏமாற்றிக்கொண்டும்,  வாழ்க்கையை ஏனோ தானோ என்று s1கடந்துகொண்டிருந்தேன். இற்றைக்கு 8 – 10 ஆண்டுகளுக்கு முன்னான காலவெளி அது.அந் நாட்களுக்கும் எனக்குமான இடைவெளி தினமும் அதிகரித்துப்போவதாலோ என்னவோ இப்போது அக்காலங்களை மெதுவாய் வெளியில் இருந்து உள்நோக்கிப் பார்க்க முடிகிறது அல்லது ஒரு பறவையைப்போல் மேலிருந்து கீழாக பார்க்க முடிகிறது.

   

  • எத்தனை போலியாய் வாழ்ந்து தொலைத்திருக்கிறேன், அருமையான ஒரு வாழ்க்கையின் மீளக்கிடைக்காத காலங்களை. என்னை என்னாலேயே மன்னிக்கமுடியவில்லை. அத்தனை முட்டாள்தனமான வாழ்க்கை அது.சுற்றத்துக்கும், ஊருக்கும், உலகத்திற்கும், உறவினர்களுக்கும், பயந்து தீயை உண்டு செரிக்க முயன்று வாழ்ந்திருந்த காலம் அது.

   

  இறுதியில் உடலும் மனமும் வெந்து, இனியும் முடியாது என்ற நிலையில் திருமண உறவில் இருந்து விடுபட்டபோது அனைத்தும் manamurivuமுடிந்துபோயிருந்தது,  நான் உட்பட…….. அதன்பின்னாக காலமும் கொடியது, மிகக் கொடியது……..இன்று ஒரு நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவரும், எனது அன்றைய காலவெளியினைப்போன்றதொரு எனது காலங்களைக் கடந்துகொண்டிருக்கிறார்.

   

  ஏன் காதலில் உருகித் திளைத்த இரு மனிதர்களுக்கிடையில் இந்தளவு வெறுப்பு வருகிறது? அதன் காரணம் என்ன என்று உரையாடிக்கொண்டிருந்தோம்.இக் கேள்வியை நானே என்னிடம் கடந்த 8 வருடங்களாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். காலம் செல்லச் செல்ல, என்னை எனக்கு புரியும்போது மேற்கூறிய கேள்விக்கான பதில்கள் மெது மெதுவாய் புலப்படதொடங்குவது போலிருக்கிறது.

   

  நானும் காதலித்துத் திருமணம் முடித்தவன்தான். ஆனால் காதலிக்கும் காலமும், திருமணத்திற்கு பின்னான காலமும்  ஒரே மாதிரியானவையல்ல.இரு மனிதர்கள் ஒருவரின் மனதை மற்றவர் புரிந்து வாழும் காலமாக திருமணத்திற்கு பின்னான காலம் அமைகிறது. காதலிக்கும் காலமானது ஏகாந்த மனநிலையில் எதையும் தாங்கவும், கடந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் கூடிய மனநிலையில் அமைவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் கண்களுக்கு புலப்படுவதில்லை.

   

  ஒருவரின் தனிப்பட்ட ‘Breathing space’ எனப்படும் தனிப்பட்ட எல்லையை மற்றையவர் ‘Breathing space’ஆக்கிரமிக்காதிருப்பதானது இரு மனிதர்கள் சேர்ந்து ஒற்றுமையாயும் மகிழ்ச்சியாயும் வாழ்வதற்கு அவசியமாகிறது. கடந்த கால நினைவுகளினுள் மீண்டும் நான் சஞ்சரித்து அலைந்தபோது மேற்கூறியது எனக்கு புலப்படத்தொடங்கியது.எனது நண்பரும் அதை உறுதிப்படுத்தினார். அவர் தனது ஆக்கிரமிக்கப்படுவதாக உணர்கிறார். ஒருவிதத்தில் அவர் தான் இன்னொருவரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கருதுகிறார். அவரது சுதந்திரத்தில் மற்றையவர் தலையிடுவதாக உணரும் நிலை ஏற்படுவதால் தனது சுதந்திரத்தை நிறுவ முயற்சிக்கிறார். ஒரு ஒத்துழையாமைப் போராட்டம் இருவருக்கும் புரியாமல் மெதுவாக அங்கு குடிவந்துவிடுகிறது. இது மறுபகுதியினரால் “ஈகோ” என்று கருதப்படத் தொடங்குகிறது. ஒரு உறவின் முடிவுக்காலமாக…….அவரது கூற்றுக்கள் உண்மையானவை என என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஏன் எனில் நானும் அப்படியானதொரு காலத்தைக் கடந்துவந்தவன்.

   

  நான் அந்தக் காலத்தில் ஆகக் குறைந்தது பல விதமான Personalities  உடன் வாழ்ந்திருந்திருந்தேன் என்பதை மணமுறிவின் பின்னான காலத்தில் நான் உணர்ந்துகொண்டேன்.முதலாவது ஒரு பேரன்பான தந்தை. இது குழந்தைகளுக்கு மட்டும் காண்பிக்கப்பட்ட எனது உருவம். உருகி உருகி குழந்தைகளுடன் அவர்களின் உலகத்தில் வாழ்திருந்த வாழ்க்கை அது. அது நான் மிக விரும்பிய வாழ்க்கை. இங்கு ஒரு வித போலித்தனமும் இல்லை. ஆனால் அங்கு குழந்தைகளைத் தவிர வேறு எவருக்கும்அங்கு இடமில்லை.

   

  இரண்டாவது, குழந்தைகளின் தாயாருக்கு நான் காட்டிய எனது முகம். அங்கு அன்போ, கனிவோ, இரக்கமோ இல்லை. கண்களில் வெறுப்பு தீயாய் உமிழ்ந்துகொண்டிருக்கும். அவரின் வலி எனக்கு மகிழ்ச்சியைத்தரும். அவரின் தோல்வியை நான் கொண்டாடுவேன். இது எனது குரூரத்தின் முகம்.

   

  மூன்றாவது பிள்ளைகள், துணைவிக்கு  அப்பாலான மனிதர்களுக்கான எனது முகம். இதுவும் போலியானதே. இங்கு நான்  மகிழ்ச்சியான கணவனாகவும், தந்தையாகவும், பெரும் உத்தியோகத்துடன் சமூகத்தில் உயரிய அந்தஸ்து உடையவனகாவும் ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில் ஊர் ஏமாற்றப்படவில்லை,  நான்தான் என்னை ஏமாற்றிக்கொண்ருந்தேன் என்பதே உண்மை.
  இதைவிடவும் எனது தாயார் மற்றும் சகோதரங்களுக்கு ஒரு முகம். பல வேடங்களை சுமந்த என்னை ஏமாற்றிக்கொண்டிருந்த காலம் அது.
  என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த நண்பரும் இப்போது இதே மனநிலையில், அதே போலியான முகங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரால் ஒரு தீர்க்கமான முடிவினை எட்ட முடியாதிருக்கிறது, அதற்கான முக்கிய காரணமாக குழந்தைகள், உறவினர்கள், சுற்றம், சமூகம் என்று பல உள்ளன.

   

  நானும் சமூகத்திற்கு பயந்து மணமுறிவினை பல ஆண்டுகள் ஒத்திப்போட்டவன். அதனால் ஏற்படும் உளவியற் பாதிப்புக்களை அணு அணுவாக அனுபவித்து கடந்து வந்தவன். இன்றும் நான் அவற்றை முழுமையாகக் கடந்துவிட்டேன் என்று கூறமுடியாது. மன உளைச்சல், மன அயர்ச்சி, மனச்சோர்வு ………………… என்பனவுடன் இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறேன்.

  s2

  நான் குடும்ப வாழ்வில் இருந்து விலகிக்கொள்வதற்கு பல ஆண்டுகள் எடுத்தன. ஏறத்தாள 10 வருடங்களாக  நான் தடுமாறியபடியே வாழ்ந்துகொண்டிருந்தேன். அந்த 10 ஆண்டுகளிலேயே முதன் முதலாக மனஅழுத்தம் ஏற்பட்டது, தூக்கமின்மை, வாழ்வில் பிடிப்பற்றநிலை என்று உளவியற்தாக்கங்கள் என்னை அணுக ஆரம்பித்தன. மாத்திரைகள் இன்றி தூக்கமில்லை என்றாகியது. அப்படித்தூங்கினாலும் உலகத்தின் இயக்கத்தினை உணரக்கூடிய ஒருவித போலித்தூக்கமே கிடைத்தது.

   

  ஆரம்பகால  சிறு சிறு வேற்றுமைகளும், பிளவுகளும், ஆணவமும் காலம் செல்லச் செல்ல மெது மெதுவாய் வளர்ந்த வேற்றுமைகள் வேர்கள் நிலத்தினை இறுகப்பற்றிக் கொள்வதுபோன்று மனதினைப் முழுமையாகப் பற்றிக்கொண்டபோது எனது தவறுகளை திருத்திக்கொள்ளவோ, அவற்றை ஏற்றுக்கொண்டு சமரசமான வாழ்க்கையினை தொடரவோ என்னால் முடியாத தூரத்திற்கு நான் தள்ளப்பட்டிருந்தேன். கண்முன்ளே தெரிந்ததெல்லம் வெறுப்பு…. வெறுப்பு…. வெறுப்பின்றி வேறெதுவுமில்லை.

   

  காமம் கண்ணையும் அறிவையும் மறைக்கும்  என்பார்கள். ஆனால் வெறுப்பின் உச்சம் காமத்தையும் வெல்லும் என்று அனுபவித்து அறிந்துகொண்டதும் அக்காலத்தில்தான். அத்தனை வெறுப்பை நான் காதலித்த பெண்ணிடமும் எனது குழந்தைகளின் தாயிடமும் காட்டினேன். வினை விதைத்தால் தினையா அறுக்கமுடியும்? விதைத்தன் பயனை அனுபவித்தேன். அது வினையாகவே இருந்தது. தொடர்ந்தது……எனது நண்பரும் அப்படியான காலத்தைக் கடந்துகொண்டிருந்தார்.. அதுபற்றி அவரிடம் அதிகம் பேசுவது அநாகரீகம் என்பதால் நிறுத்திக்கொண்டேன். எந்த உரையாடலுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?

   

  எனது வாழ்க்கையில் மணமுறிவுதான் எனக்குள்ள ஒரே வழி என நான் தீர்மானிப்பதற்கு முன்பு ,நான் குடும்ப நீதிமன்றங்களிலும், குடும்ப உறவினர்களிடமும், நோர்வே அரச குடும்பநல ஆலோசகர்களிடமும், மன நல ஆலோசகர்களிடமும் மற்றும் பல இடங்களிலும் உதவிகளைப் பெற்றிருந்தேன். இருப்பினும் பிளவுபட்ட மனங்களையும், உறவுகளையும் மீளவும் ஒன்றிணைக்க முடியவில்லை.
  இரு மனிதர்களுக்கிடையிலான மனப்பிளவுளை செப்பனிடுவது என்பது இலகுவான காரியமா?…….. அது இலகுவானதல்ல.  மனங்களும், உறவுகளும் செப்பனிடப்படவேண்டுமாயின் அவற்றுடன் சம்பந்தப்பட்ட இரு மனிதர்களும் செப்பனிடுதலை முழுமனதுடன் விரும்ப வேண்டும். ஒருவர் விரும்பாவிட்டாலோ அல்லது தனது முழுக் கவனத்தையும் அதில் செலுத்தாதவிடத்திலோ அந்த உறவு செப்பனிடப்படமாட்டாது என்பதே எனது அனுபவம். மிக மிக மிகச் சில மனிதர்களே இந்த சவாலினை வெற்றிகொள்கிறார்கள்.

   

  இதிலுள்ள மிகப்பெரிய வேதனை என்னவெனில், இப்படியான வாழ்க்கைச் சூழலில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் அல்லது சுற்றத்திடம் ஆலோசனைகேட்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் ஆலோசனைகள் மீதியிருக்கும் அவர்களது உயிரையும் வாங்கிவிடும். நான் இந்த சூழ்நிலையை இவ்வாறு கூறுவதுண்டு. “நான் சுவாசிப்பதற்கு சிரமப்படுகிறேன் என்று எனது குடும்பத்தவருக்கும் சுற்றத்திற்கும் கூறும்போது அவர்களோ, சற்றுக் குறைவாக சுவாசிக்கப்பழகிக்கொள் “என்று கூறுவதுபோலுள்ளது என்றே நான் உணர்ந்தேன்.

   

  மனதளவில் பிளவடைந்த மனிதர்கள் தொடர்ந்தும் சேர்ந்து வாழவேண்டுமா? …………

  இல்லை என்பதே எனது இன்றைய பதில். இந்த நிலைக்கு நான் வருவதற்கு ஆகக் குறைந்தது 16 வருடங்கள் எடுத்திருக்கின்றன. முதன் முதலான நான் வீட்டைவிட்டு வெளியேறியபோது திருமணமாகி 6 ஆண்டுகளும், மூத்த மகளுக்கு 2 வயதாகவும் இருந்தது. அன்று குழந்தையின் பிரிவினால் மூன்று நாட்களைக்கூட என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதற்குப்பின்னான 10 வருடங்களில் “இல்லை… மணமுறிவு ஒன்றே இதற்குத் தகுந்த தீர்வு” எனறு தீர்மானிக்கும் சக்தியை வெறுப்பும், வலியும், ஏமாற்றங்களும் தொடர்ந்தும் இப்படியே வாழவேண்டுமா என்ற சிந்தனையுடன் என்னை அந்த முடிவிற்குள் உந்தித் தள்ளின.

   

  s 3ஆனால் அந்த இடைப்பட்டகாலத்திலேயே எனது குழந்தைகளுக்கு தினம் தினம் வலிமிகுந்த வாழ்க்கையினைக் கொடுத்திருந்தேன். காலை விடிந்த பொழுதில் இருந்து மாலை இருண்ட பின்பும் பெற்றோரின் இடைவிடாத போர்ச் சூழ்நிலையில் குழந்தைகள் வாழ்ந்தார்கள். எப்போது யாரிடம் செல்லலாம் என்று தடுமாறினார்கள். அம்மா கோபமாய் இருந்தால் அப்பாவிடம் “அமைதியாய் இரு…. சண்டைபிடிக்காதே” என்று அறிவுறுத்தினார்கள். அப்பா கோபமாய் இருந்தால் அம்மாவை அறிவுறுத்தினார்கள். பல சமயங்களில் சமாதானத் தூதுவர்களாய் தூது சென்றார்கள் அந்த பாலகர்கள். எனது ஆணவம் அதையெல்லம் அந்த நாட்களில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் எவருமின்றி தனியே வாழும் நேரங்கள் என்னை பல கேள்விகள் கேட்கின்றன. அவை தந்தையாய் தோல்வியுற்ற மனநிலையையும், பெரும் குற்றவுணர்ச்சியையும் தந்து போகின்றன. எத்தனையோ சாமப் பொழுதுகளில் விழித்தெழும்பி அழுது ஓய்ந்திருக்கிறேன். எனினும் தோல்வியுற்ற தந்தை என்ற குற்றவுணர்ச்சியை  இன்னும் இன்றும் கழுவிக்கொள்ளமுடியவில்லை. அதனுடன் வாழ்ந்தே அதன் கணதியை தீர்ககவேண்டும் என்பது புரிந்திருக்கிறது.

   

  மூத்த மகள் வளர்ந்துவிட்டாள். அவளுக்கு 18 வயதான காலத்தில் எனது பதிவு ஒன்றினை வாசித்தபின் “அப்பா, நீ தந்தையாக தோல்வியுறவில்லை” என்று நீண்டதொரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தாள். அதில் இனியாவது உன் வாழ்க்கைனை வாழ்ந்துகொள் என்றும் எழுதியிருந்தாள். மீட்டுக்கொள்வதற்கான வாழ்க்கை என்று இனி என்ன இருக்கிறது?.  அவளுக்கு எப்படி  என் அனுபவத்தினை, பாடுகளைப் புரியவைப்பேன்? எத்தனை கனவுகளுடன் தந்தையாய் முதன் முதலில் அவளைக் கையிலேந்தியிருப்பேன்?  கனவு கண்டிருப்பேன். அவை ஏதும் நிறைவேறாது சென்றது எனது தோல்வியல்லவா?  அவளது மின்னஞ்சலை அன்று வாசித்துமுடித்தபோது அவளது மடியில் விழுந்து அழவேண்டும்போலிருந்தது.

   

  இந்த தோல்வியை ஜீரணத்துக்கொள்வதே எனக்கிருக்கும் சவால். இன்றுவரை என்னால் இதளை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இனியும் அது சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

   

  எனது நண்பருக்கு நான் கூறக்கூடியது என்னவென்று சிந்திக்கிறேன். எனது தோல்வியில்  இருந்து அவர் கற்றுக்கொள்ளக்கூடியது என்ன?
  அவராலும், அவரது துணைவியாலும் எனது அனுபவங்களை புரிந்துகொள்ள முடிகிறதா? அதன் பின்பும் அவர்களினால் தங்களது ஆணவங்களை முழுமையாக ஒதுக்கிவிட்டு தடம்புரண்டோடும் அவர்களது உறவினை சீர்படுத்து ம் ஆவல் இருக்கிறதா? அந்த ஆவல் அவர்கள் இருவருக்கும் உளமார்ந்தரீதியாக இருக்கிறதா? மீண்டும் அவர்களிடம் உங்களிருவருக்குமான உறவினை உளமாற சீர்ப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்பேன்.ஆம், எனில் அவர்களை வாழ்த்துகிறேன். அவர்கள் மீண்டுவிட்டார்கள்.
  இல்லை எனில், போலியாய் வாழ்ந்து உங்களையும், உங்கள் குழந்தைகளையும் மேலும் மேலும் வலிமிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளிவிடாதீர்கள். போலியாய் வாழ்வதெப்படி என்று உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்காதீர்கள். இருவரும் நோயாளிகளாகாதீர்கள்.

  உங்கள் காலம் முடிவுறவில்லை.
  நண்பர்களாய் பிரிந்துவிடுங்கள்.
  ஏன் ஏனில்..
  நண்பர்களாய் பிரியாததன் வலியையும் நான் மிக மிக  நன்கு அறிவேன்.
  அது நீங்கள் இதுவரை கடந்ததைவிட பல மடங்கு வலிமிகுந்தது.

  வாழ்க்கை வாழ்ந்திருக்கவே.

  00000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment