Home » இதழ் 19 » *மருதூர்க் கொத்தனின் படைப்பு, எழுத்து உலகம் -ஏ.எச்.எம். நவாஷ்

 

*மருதூர்க் கொத்தனின் படைப்பு, எழுத்து உலகம் -ஏ.எச்.எம். நவாஷ்

 
 • maruthoorkottan
 • ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற கருத்தாக்கத்தினுள் முஸ்லிம் மக்களும் உள்ளடங்கியுள்ளனர். மொழி இவர்களைத் தமிழ்மக்களுடன் பிணைக்கின்றது. அதிலும் வடக்குக், கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்கள் வாழும் நிலத்தினாலும், பண்பாட்டம்சங்களாலும் மேலும் பிணைப்புற்றிருக்கின்றனர். இந்த அந்நியோன்யம் மிக நீண்ட காலமாகவே நிலவி வருகின்றது. கலை, இலக்கியங்கள் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கக் கூடிய சாதனங்களாகும். இலங்கை முஸ்லிம்கள் நீண்டகாலமாகவே தமிழ்க்கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியிருக்கின்றனர். சம காலத்திற்கூட முக்கிய இலக்கியப் பங்களிப்பை ஆற்றும் எம்.ஏ.நுஃமான், மருதூர்க்கொத்தன், எம்.எல்.எம்.மன்சூர், வேதாந்தி, பண்ணாமத்துக் கவிராயர் ஆகியோரையும், கணிப்பிற் கொள்ளத்தக்க இளைஞர்கள் பலரையும், அது தன்னுள் கொண்டுள்ளது. ஈழத்தின் நவீனத்தமிழ் இலக்கியத்தை மகிமைப்படுத்துபவர்களுள், நிச்சயமாய் மருதூர்க்கொத்தனும் ஒருவர் – என்று ‘அலை’ ஆசிரியர் அ.யேசுராசா எழுதுகின்றார் (அலை 26; ஐப்பசி – 1985: 838).வாப்புமரைக்கார் முஹம்மது இஸ்மாயில் (வி.எம்.இஸ்மாயில்), 1960 இல் தான் வாழுகின்ற ‘மருதமுனை’ ஊரையும், கலை, இலக்கியத்தைச் செதுக்குகின்ற சிற்பி என்னும் அர்த்தம் தரும் ‘கொத்தன்’ என்ற கிளவியையும் சேர்த்து ‘மருதூர்க் கொத்தன்’ ஆகி, எழுத்துலகில் உலாவந்தார். ‘சிறிய கிராமமாகவும் காட்சியளிக்காத கடலோர சிற்றூர் மருதமுனை. இந்த ஊரில் மருதூர் ஏ. மஜீத் – மருதூர்க்கனி – மருதூர் வாணன் என்ற பெயர்களில் எழுதியவர்களின் வரிசையில் முன்னோடியாக இருந்தவர் மருதூர்க்கொத்தன்’ என்கிறார் முருகபூபதி. மருதூர்க் கொத்தன், மருதூர்க் கனி, சண்முகம் சிவலிங்கம், புலோலியூர் சதாசிவம் போன்றோர் 60 களில் சிறுகதைத் துறையை வளப்படுத்தினர் என்று ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ (1979: 71) என்ற ஆய்வுநூல் கூறுகின்றது. மேலும் இந்நூல், ‘மருதூர்க் கொத்தன் இக்காலப்பகுதியில் தோன்றிய சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவராவார்’ (73) என்றும் குறிப்பிடுகின்றது. “மட்டக்களப்பின் சிறுகதைத் துறைக்குப் பெருமை சேர்த்தவர்களுள் பித்தன் ஷாவுக்குப் பிறகு மருதூர்க் கொத்தனே முக்கியமானவர்” என்பது எஸ்.பொன்னுதுரையின் கணிப்பாகும்.
 • வாப்பு மரைக்கார் (திருகோணமலை), சின்னமுத்து என அழைக்கப்பட்ட உம்மா (சம்மாந்துறை) தம்பதியினருக்கு மகனாக 1935, ஜுன் 6 இல், அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள ‘களாவி’ என்ற கிராமத்தில் இஸ்மாயில் (மருதூர்க் கொத்தன்) பிறந்தார். சிறுவயதில் தாயை இழந்து, திருகோணமலையில் மாமனார் வீட்டில் வளர்ந்தார். தந்தையின் மறுமணத்தின் பின்னர், 1941ஆம் ஆண்டு முதல் மருதமுனை அவரின் இருப்பிடமானது. தன்னுடைய ஆரம்பக்கல்வியை மருதமுனை அரசினர் தமிழ் ஆண்கள் பாடசாலையில் கற்றார். அங்கு புலவர்மணி ஆ.மு.ஷரீப்புத்தீன் அவர்களிடம் கற்கும் வாய்ப்பினைப் பெற்றார். அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று (1954 – 1955) 1956 இல் ஆசிரியரானார். 1984 இல் அதிபராகி 1995 இல் ஓய்வுபெற்றார். 

  சிறுவயதில் சித்திரம் வரையும் ஆற்றல் பெற்றிருந்தார். மருதமுனை அரசினர் ஆண்கள் பாடசாலையில் புலவர்மணி ஷரீப்புத்தீன் அவர்கள் உருவாக்கிய ‘குழந்தை’ என்னும் கையெழுத்துப் பத்திரிகையில் ஓவியம் வரைந்ததுடன், “வெண்ணிலாவே” என்ற கவிதையை அட்டையில் மருதூர்க் கொத்தன் பதிகை செய்திருந்தார். ‘வெண்ணிலாவே’ இவரது முதல் படைப்பாகும். அதனைத் தொடர்ந்து ‘குழந்தை’ பத்திரிகையில் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதினார். இவற்றினைப்படித்த புலவர்மணி ஷரீப்புத்தீன் அவர்கள் இவரை இவ்வாறு தட்டிக்கொடுத்து ஆர்வமூட்டியிருக்கிறார்:“உம்முடைய மொழிநடை வனப்பமானதாக இருக்கின்றது. பிற்காலத்தில் நீர் ஒரு எழுத்தாளனாகப் பரிணமிக்க இடம் இருக்கிறது.”

   

  KOTHANமருதூர்க் கொத்தனின் (கொத்தன்) கட்டுரை 1953இல் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் “நபியின் நற்குணங்கள்” என்ற மகுடத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து ஐந்து வருடங்களாக (1953 – 1958) இவருடைய கட்டுரைகள் சுதந்திரனில் களம் கண்டன. அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் கையெழுத்துச் சஞ்சிகையான ‘மருதம்’ என்ற இதழில், இவருடைய “சுந்தரி” என்ற முதல் சிறுகதை வெளிவந்தது. அதன் அடுத்த இதழில் இவருடைய “சலவைக்காரி” சிறுகதை இடம்பெற்றது. இக்கதைகளைப்படித்த கவிஞர் நீலாவணன் இவரை உற்சாகப்படுத்தினார். மருதூர்க் கொத்தன் போன்றவர்களை ஊக்கப்படுத்துகின்ற இலக்கிய ஊக்கியாக நீலாவணன் செயற்பட்டிருக்கிறார். இதனை எம்.ஏ.நுஃமானின் பின்வரும் கூற்று நிதர்ஷனமாக்குகின்றது.

   

  “நீலாவணனின் வீடே எங்கள் இலக்கியப் பயிற்சிக் களமாக மாறியது. உண்மையில் நீலாவணனின் தொடர்பின் மூலம் நான் ஒரு புதிய உலகுள் பிரவேசித்தேன். என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்த, அதுவரை நான் காணாத பரந்த இலக்கிய உலகத்தை அவரது உறவின் மூலம் நான் தரிசித்தேன். மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, மு.சடாட்சரன், பாண்டியூரான், ஜீவா ஜீவரத்தினம், கனக சூரியம் போன்ற எமது பிரதேசக் கவிஞர்கள் எனது நண்பர்கள் ஆனார்கள்” (“ஒத்திகை’; 2001: viii).
  ‘கிழக்கிலங்கையின் கவிதை வரலாற்றிலே நீலாவணன் என்ற முக்கிய ஆளுமை பல கவிஞர்களை உருவாக்க பெரும் பங்காற்றி இருக்கிறார். அதேபோன்று சிறுகதை வரலாற்றிலே மருதூர் கொத்தன் என்ற ஆளுமை பல சிறுகதை எழுத்தாளர்களை உருவாக்கி இருக்கிறார்’ (பேராசிரியர் செ.யோகராசா: இணையம்).

   

  அச்சில் பதியமான கொத்தனது முதல் சிறுகதை ‘இருள்’, 1961இல் ‘தினகரன்’ பத்திரிகையில் வெளியானது. மருதமுனை கிராமத்தைப் பிரதிபலிக்கின்ற இக்கதைப்பற்றி ‘இளங்கீரன்’ பின்வருமாறு கூறுகின்றார்: “’இருள்’ மருதமுனை என்ற கிராமத்தை என் மனக்கண்முன் நிறுத்திவிட்டது” (1985). ஒரு பரிசோதனை சிறுகதையாக “வேலி”, தினகரன் ‘பரிசோதனைக் களத்தில்’ (1982)வெளியாகி கவனிப்பையும் பாராட்டையும் பெற்றது. வ.அ.இராசரத்தினம், கவிஞர் அண்ணல் போன்றவர்கள் ‘வேலி’யை விமர்சித்து அக்காலப்பகுதியிலேயே தினகரனில் ‘இருவர் நோக்கு’ என்ற தலைப்பில் எழுதினர். பொதுச்சராசரி மொழிமுறைமையிலிருந்து விலகி, வேறுவகையான கலைத்துவ அழகியல் ஒளிரும் மொழிஅமைப்பில் “வேலி” சிறுகதையை கொத்தன் எழுதியிருந்தார். இப்பிரதியின் உரையாடல்களில் கூட, வேறுவகைமாதிரியான மொழி இழையோடி உள்ளமை ஒரு தனித்துவமாகும். இஸ்லாமிய அமைப்பில் கணவன் மரணமடைந்ததும் மனைவி அனுஷ்டிக்க வேண்டிய “இத்தா” கடமையை விமர்சன அணுகலுடன் பேசுகின்ற உரைப்படைப்பே ‘வேலி’. இத்தா (கணவனை இழந்த மனையாள் 4 மாதங்களும் 10 நாட்களும் துயர் அனுபவித்தல்) இன் கிராமிய நடைமுறைகளை “வேலி’ முற்போக்கு சிந்தனைகளுடன் வெளிப்படுத்துகின்றது. ‘வேலி’ கதையின் பேச்சு மொழி பற்றி விதந்து பேசப்படுகின்றது. மருதமுனையின் தனித்துவ பேச்சுவழக்கு பின்வரும் பகுதியில் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது:
  “’அந்த நாய வெரசுங்கா’ மூத்த மகள்ட கொரல். ‘இத்தா’ வளவுக்கு நாய் பூன வராமக் காவல் காட்ட இருக்கவேணும் பொழுது மொகத்தையும் பாக்கப்படாது. ராவலதான் தண்ணிவாக்க. ஆம்புளய ளெண்டு, மக்களும் ஒரு கொடல்ல கெடந்த அண்ணன் தம்பிமாரும் அவியட மக்களும் வரலாம். வாப்பாவும் வரலாம். ஏன்ற வாப்பாதான் இல்லைய. பொண் பொராசிகள் வரலாம். அவியுள்ளயும் புள்ளத்தாச்சிமார் வரப்படாது. வகுத்துல இருக்குறதுகள் ஆண் கிணாட்டைகளாக இருந்திற்றா? …………….”
  இதுபோன்ற பேச்சுமொழியின் ஒலியிழைகள் அவதானத்திற் குரியன. நவீன மொழியியலாளர்களுடன் பேசும் திராணியை அவை கொண்டுள்ளன என்பதில் ஐயமில்லை.

   

  சிறுகதை, கவிதை, நாட்டாரியல் கட்டுரை என்று தன்னுடைய சிருஷ்டிகளை தினகரன், வீரகேசரி, ஈழநாடு, நவமணி,போன்ற பத்திரிகைகளிலும், தாமரை, மல்லிகை, அஞ்சலி, கற்பகம், காலரதம், புதுமை இலக்கியம், களம் போன்ற இதழ்களிலும் எழுதினார். ஆயினும் கொத்தனது முழுஆற்றலும் சிறுகதையிலேயே பரிமளித்தது. 1985இல் வெளிவந்த “மருதூர்க் கொத்தன் கதைகள்”, 2007இல் வெளிவந்த “மருதூர்க் கொத்தன் கதைகள்” (40 கதைகள்; பதிப்புரிமை கொத்தனது மகள் ஹபீனா கலீல்) போன்ற தொகுப்புகளில் கொத்தனது அற்புதமான சிறுகதைகளை தரிசிக்கலாம். இதனை அ.யேசுராசாவின் பின்வரும் விமர்சனம் நிரூபிக்கின்றது:
  “நீண்டகாலமாக எழுதிவரும் மருதூர்க் கொத்தனின் சிறுகதைத்தொகுப்பு இந்த ஆண்டு (1985) வெளிவந்திருப்பது, முக்கிய நிகழ்வாய் அமைகின்றது. கல்முனைப்பிரதேச முஸ்லிம்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும், பேச்சு மொழியினையும் உயிர்ப்புடன் தன் எழுத்துக்களில் இவர் சிறைப்பிடிக்கிறார்; மறைந்து செல்லும் பண்பாட்டம்சங்களைக்கூட நுட்பமாய் பதிவு செய்கிறார். மதத்துடன் பிணைந்த வாழ்வு – அதில் ஊடுருவியுள்ள போலித்தனங்கள் – சென்றகால அல்லது தொலைத்தூரத்திலுள்ள இஸ்லாமிய நாகரிகப் பெருமைகளை வெட்டுமுகத் தோற்றத்தில் பார்த்தலினூடாய்க், குவிமையப்படுத்தும் இன்றையச் சீரழிந்த யதார்த்த வாழ்நிலை – வாழ்முறையுள் விரவிப் பரவியுள்ள சுரண்டல் என்பனவெல்லாம், இவரது படைப்புகளில் கலைத்துவத்துடன் வெளிப்பாடு காண்கின்றன. மொழிப்பிரயோகங்களும், வாழ்க்கைச் சித்தரிப்பும் ‘புத்தனுபவத்தை’ நிச்சய மாய் எமக்குத் தருகின்றன. மலையாள இலக்கிய மொழிப்பெயர்ப்புகளில் பெறும் ஒருவித ‘புத்தனுபவத்தை’ ஒத்ததென, இதனைச் சொல்லாம். மொழியின் இணைவினால் இவற்றுக்குத் தாமும் சொந்தக்காரர்கள் என்பதில், தமிழர்களும் பெருமைப்படலாம்” (1985: 838, 839).

   

   

  மருதமுனையே கொத்தன் கதைகளின் பகைப்புலனாகும். இஸ்லாமிய இருத்தலியம், இதிகாச புராணக்கருத்துக்கள், பெண்ணியம், வர்க்கமுரண்பாடு, சாதியப்பாகுபாடுகள், போர்ச்சூழல், மீனவ -விவசாய தொழிலாளர்களின் வாழ்நிலை அவலங்கள், வரலாற்று நிகழ்வுகள், ஆண், பெண் உறவுகள், மனிதநேயம் என்று கொத்தனது கதைகளின் பாடுபொருள்கள் அமைந்துள்ளன. மொழியழகும் கலையழகும் கருத்தின் கனதியும் இவரின் சிறுகதைகளை சிகரம் தொடவைத்துள்ளன. ‘சுதந்திரன் சிறுகதை தொகுதி’ (2002), இல் “குழி” சிறுகதை இடம் பெற்றுள்ளதுடன், ‘சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள்” (1998) தொகுதியில் “இருள்” சிறுகதையும் இடம் பெற்றுள்ளன.
  “போர்க்களத்துச் சஞ்சயன்போல் ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையைத் தெளிவாக அறிந்து நிர்த்தாட்சண்யமாச் சொல்லக் கூடிய ஒருவர் வெளிவந்துவிட்டார். அந்த ஒருவருக்கு நிச்சயமாக ஓர் இடம் இருக்கிறது. மலையாள இலக்கியத்தில் வைகம் முகம்மது பஷீருக்குள்ளதைப் போல என்பதில் எனக்குச் சந்தேகமில்லை” என்கின்றார் வ.அ.இராசரத்தினம்.

   

  சிறுகதைகளில் இவரது ஆளுமை மேலோங்கி வெளிப்படுகின்ற அதேவேளையில், கவிதை, கட்டுரை, நாடகம் போன்ற துறைகளிலும் பிரகாசித்துள்ளார். ‘அபூஹபீனா’ என்னும் பெயரில் கொத்தன் எழுதிய கவிதைகள் “காவியத்தலைவன்” என்னும் நாமத்தில் 1977இல் தொகுப்பாகியது. தினகரனில் (1998) “போர்ப்பத்து” பாடியிருக்கிறார். மெய்யியல் (தி.மு.க.வழி வந்த மெய்யியல் சிந்தனை), இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கொத்தனின் “பாவம் நரிகள்” எனும் சிறுவர் நாடகம் மிகப் பிரபலம் பெற்ற ஒன்றாகும். இசை வடிவங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், ஆற்றல் மிக்க எழுத்தாளர்களின் கலைத்துவ படைப்புகள் முதலானவற்றில் ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். மார்க்சிய மெய்யியல், புலமைச்சார் அரசியல் போன்றவற்றை பிரக்ஞைபூர்வமாக அறிந்திருந்தார்.

   

  பொதுவுடமைக் கருத்துக்களை .1960, 1970களில் கல்முனைப் பிரதேசத்தில் பலம் வாய்ந்ததாக தம்ப டைப்புக்கள் மூலம் வெளிப்படுத்தி வந்த கொத்தன் முற்போக்கு எழுத்தியக்கத்தின் ஒரு பிரதிநிதியாகவும் தென்பட்டார். 1950களின் இறுதியில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினராக இணைந்தார். “இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பானது சமூக அவலங்கள், எல்லாவகையான அடக்குமுறைகள், மட்டரகமான பொருளாதாரச் சுரண்டல்கள், இனவாதக் கூக்குரல்கள் ஆகியவற்றுக்கெதிராக இவரது எழுதுகோலை ஏந்தச் செய்தன” இவ்வாறு மன்சூர் ஏ. காதிர் சொல்கின்றார். ‘மருதூர்க்கொத்தனும் அவரது நெருங்கிய உறவினரான மருதூர்க்கனியும் (ஹனிபா) எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிழக்கிலங்கையின் தூண்களாக விளங்கியவர்கள்’ என்று முருகபூபதி எழுதுகின்றார் (இணையம்). இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் சிவலிங்கம், மருதூர்க்கனி போன்றவர்கள் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாததைப்போலவே, மருதூர்க் கொத்தனும் மார்க்சியத்தை ஏற்கவில்லை. கொத்தன் மார்க்சிய மெய்யியல் முறையியலையும், சமூக வாழ்நிலை சிந்தனைகளையும் ஏற்றிருந்தார். வர்க்க முரண்பாடுகளை தெளிவாக புரிந்திருந்தார் என்பதற்கு ‘கோடரிகள் கூராகின்றன’ என்ற கதை சான்றாகின்றது. புரட்சி என்ற வெறுமையான கோச பிரசாரத்தனங்களை கொத்தன் ஏற்றிருக்கவில்லை. அதனால்தான் அவர் தனது படைப்புக்கள் (குறிப்பாக சிறுகதை) மீது கொண்டிருந்த பிரக்ஞையை அடிப்படையாக வைத்து நிச்சயத்தன்மையோடு சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சார்ந்து இயங்கினாலும் கொத்தனது படைப்புக்களில் அவரது தனித்துவ முத்திரை பதிந்திருத்தலை காணலாம். அதனால்தான் அ.யேசுராசா பின்வருமாறு எழுதுகின்றார்:
  “முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்டவராயினும், ‘அந்தக் கூட்டத்து’ எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பரவலாய்த் தெரியும் ‘கலை வரட்சி’ இவரிடமில்லாதது, இவரைப் புறநடையான சிலருள் ஒருவராக்குகின்றது.”

   

  கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்க இணைச் செயலாளராகவும் (நீலாவணனுடன்) பின்னர், தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார். 44 வருடங்கள் பல்துறைச்சார்ந்த இலக்கிய செயற்பாடுகளில் இயங்கியிருக்கிறார். 2004 ஏப்ரல், 19ஆம் திகதி மருதமுனையில் மருதூர்க் கொத்தன் காலமானார். இறக்கும் வரையில் அவரது அக்கறை தான் சார்ந்த சமூகத்தை வெளிக்கொணரும் இலக்கியமாக இருந்திருக்கிறது.

   

  2
  ‘ஒளி’ சிறுகதை 1964இல் ‘முஸ்லிம் கதை மலர்’ இல் வெளிவந்தது. 1985இல் வெளிவந்த “மருதூர்க் கொத்தன் கதைகள்” நூலிலும், “ஒளி” இடம்பெற்றுள்ளது. இக்கதை திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாப் பிரதேச நெய்தல் நிலத்தை பகைப்புலமாகக் கொண்டுள்ளது. ஏழ்மையின் பிடியில்தடுமாறும் மீனவ குடும்பமொன்றின் வாழ்வியல் அவலங்கள் இப்பிரதியின் பொருண்மையாகியுள்ளன. அந்த குடும்பத்தின் ஆப்தகானம் “அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்” என்ற இறைநம்பிக்கையாகும். மகளின் திருமண தேவையை நிறைவேற்றுவதற்காக, தந்தையும், மகனும் மீன் பிடிக்கச் செல்கின்றனர்; தவறு என அறிந்தும், தேவையின் நிர்ப்பந்தம் காரணமாக ‘டைனமைட்’ வெடியை வீசுகின்றனர்; அது தந்தையின் கையில் வெடித்து விரல்கள் சிதைகின்றன; துணிவுடன் மறுகையினால் டைனமைட்டை வீசி பெருந்தொகை மீன்களைப் பிடிப்பதை இக்கதை சுட்டிநிற்கின்றது.

   

  வெளிச்சத்தை தேடும் ஒரு மீனவ தொழிலாளியின் இருப்பியலை சித்திரிப்பதால் இப்பிரதிக்கு “ஒளி” என்ற தலைப்பு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. அவனதும், குடும்பத்தினதும் துயரங்களும், நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும், விடாமுயற்சிகளும் இக்கதையில் மையங்கொண்டுள்ளன. குடும்ப இருத்தலுக்கு “ஒளி” பாய்சுவதற்காகவே அவன் (கரீம்) நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் கடலுடன் போராடி மீன்பிடிக்கச் செல்கின்றான்.
  “அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான். மலையிடை இழியும் அருவியின் வேகத்தில் மையிருட் கனதியைக் குடைந்து நடக்கிறான்” என்று கதையைத்தொடங்கி, “சாதகமான சாபல்ய ‘வேட்கையில் வரும் காரியம் வாயில் வரும் என்ற எண்ணச்சுழிப்பில் ‘அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்’ என்ற வாக்கியத்தை அசைபோடுவதில் தன்சிந்தனையை வயப்படுத்தி விட்டான்” என்றெழுதுவதன் மூலம் கொத்தன் கதையின் மையப்பாத்திரம் (கரீம்) இறைநம்பிக்கையில் “ஒளி”யை வேண்டிநிற்பதை புலப்படுத்துகின்றார். கதைமுழுவதுமே இறை நம்பிக்கையே “ஒளி”யாக விரவி நிற்பதை காணமுடிகின்றது. மாதிரிக்கு சில ஒளிஅலைகள்:

   

  (அ) அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்த்தால்…?
  வாழ்க்கையெனும் கொல்லன் கொப்பரையில் கொழுந்து தள்ளும் வறுமைத்தீயில் பசித்த நாக்குகளுக்கு இரையாகும் குடும்பத்தில் வசந்தம் சிரிக்கும் என்று நம்புபவன் கரீம். அந்த நம்பிக்கையின் நட்சத்திர பிரகாச சுகானுபவத்தில் வாழ்க்கையின் பெரும்பகுதியை கடத்தி விட்டான்.

   

  (ஆ) ‘அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்’
  மகளின் வாழ்வுப்பாதையிலே நந்தியாகக் குறுக்கிட்ட ஏழ்மைப் பகைவனைச் சிரகம்பம் செய்விக்க கரீமை யுத்த சன்னத்தனாய் வழியனுப்பி வைத்த போது அவன் மனைவி கூறிய நன்மாராயம்.

   

  (இ) ‘அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்’
  கரீமின் மனைவி நெட்டுயிர்ப்புடன் பிரசவித்த நம்பிக்கைப் பல்லவி. அவன் பெருமூச்சு கொளுந்து விட்டெரியும் குப்பி விளக்கின் ராட்சதச் சுடரோடு மோதித் தணிந்தது.

   

  (ஈ) ‘அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்’
  நெஞ்சமெலாம் நிறைந்து வழிந்து உடலின் அணுவறை தோறும் நிரவிவிட்ட அந்த வாக்கியம் அவனை அறியாமலேயே கரீமின் நாவில் உச்சாட்டம் பெறுகின்றது.

  “பாலை வெளியாக வெறிச்சோடிக்கிடந்த இல்லறச் சோலையில் வசந்தம் வருஷித்த ஒரே குத்துவிளக்கு ஒளி உமிழ வழியின்றி மூலையிலே முடங்கிக் கிடக்கிறது. திரிவிட்டு நெய்விட்டு தீபமேற்றும் காலத்தில் தானே குத்துவிளக்கு குல விளக்காக ஒளிரும்” கொத்தனின் இந்த வரிகள் “ஒளி” என்ற தலைப்பை வெளிச்சமாக்குகின்றன.
  “தூண்டாமாணி விளக்கென்றாலும் ஒரு தூண்டுகோல் வேண்டும்.
  விளக்கிற்கு தூண்டுகோல்
  பெண்ணிற்கு?KK
  மாப்பிள்ளை என்ன குப்பையில் கீரையா? கரீமைப் போன்றவர்கள் இலகுவிற் பெற்றுவிட? கலியாணச் சந்தையில் கரீம் பேரம் பேசிய மாப்பிள்ளையின் பெறுமானம் நானூற்றொரு ரூபாய்கள்” பெண்கள் எதிர்நோக்குகின்ற சமூக அநியாயத்தை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகின்றார் கொத்தன். மகளின் வாழ்க்கை பாதையில் குறுக்கீடு செய்த அநியாய இருட்டை விரட்டும், வீராப்போடு “ஒளி” ஆகிய வலையை வீசி கடலுடன் போராடும் கரீமின் கதையை சொல்வதால் இத்தலைப்பு தத்துரூபமாய் அமைந்துள்ளது.
  உரைப்படைப்பின் இறுதிச்சொல்லாடல் ஒரு அழகியல் மேவிய யதார்த்த சினிமாவின் துயர் மிக்க காட்சியை போல விரிந்து “ஒளி” ஆகின்றது. இதோ அந்த துயர் சிந்தும் “ஒளி” காட்சி:
  “மடியை அவிழ்த்து, வெடியொன்றையும் தீப்பெட்டியொன்றையும் எடுக்கிறான்.
  ‘சர்..!’
  ஊசிமல்லிகைப் பூவின் வாசிப்பில் நெருப்புக் குச்சியின் நுனியில் தீயின் நாக்கு பரதம் பயில்கிறது. ஆடல் அணங்கை ஆலிங்கனிக்கத் துடிக்கும் காதல் நாயகனே போல வெடியின் முகையிற் திரி, மகளின் சங்கு கழுத்தில் அவளின் மனங்கவர்ந்த ஆணழகன் தாலி கட்டுவதான வதுவைக்காட்சி கரீமின் மனத்திரையில் நிழலாடுகின்றது.
  தீயும் திரியும் புல்லுகின்றன.
  திரியில் சுடர்விடுந் தீ மகளுக்கும் மருமகனுக்கும் எடுக்க விருக்கும் மங்கள ஆராத்தியை நினைவூட்டுகிறதா? ………………………………
  வெடி கையை விட்டுப்பிரியும் நிலையில் வெடித்து விட்டதால்…. கரீமின் உள்ளங்கையையே அது வேட்டையாடி விட்டது…….
  ‘மகன் குச்சியைத் தட்டு’
  கரீம் வலக்கையால் மற்ற வெடியைப் பிடித்துக்கொள்ள மகன் தீப்பெட்டியிற் குச்சியை உரசிப் பற்ற வைக்கிறான்.”
  இவ்வாறு “ஒளி”யை தலைப்பாக்கி, அதையே கதை முழுக்க வெளிச்சமாக்கியுள்ளார் கொத்தன்.
  கதையையே இத்தனை நேர்த்தியாய் தலைப்பாக்கிய செய்நேர்த்திபற்றி என்ன சொல்வது? “என்னால் வர்ணிக்க முடியாது போ போ” என்று பாரதி சொன்னது போல் சொல்வதா?

 • 3
  “அவன், இலக்கியம் மக்களுக்காக, அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுதப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன்” (‘மருதூர்க்கொத்தன் கதைகள்’; 1985: முன்னுரை) என்ற கொத்தனின் விதிக்கமைவாக எழுதப்பட்ட சிறுகதையே ‘ஒளி’. கிண்ணியாப் பிரதேச மீனவர்களின் வாழ்வியல் அவலங்கள் இந்த உரைப்படைப்பில் உணர்வும் உணர்ச்சியும் கலந்த நிலையில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. கடற்றொழிலில் ஈடுபடுகின்ற ஒரு சாதாரண மனிதன் (கரீம்) குடும்ப வாழ்வில் எதிர்கொள்கின்ற இன்னல்கள் அத்தனையையும் கொத்தன் உயிரோட்டத்துடனும் பண்பாட்டம்சங்களுடனும் சொல்லியிருக்கிறார். அந்த குடும்பத்தின் உறைவிட ஏழ்மையை பண்பாட்டு விழுமியங்களுடன் யதார்த்தமாக எடுத்துக்காட்டி இருக்கிறார். உரைப்பகுதியின் பின்வரும் பகுதியைப் படிக்கின்றபோது, காட்சிகள் படிமங்களாய் மனத்திரைக்குள் விரிந்து அதிர்கின்றன:
  “எலி வளைகளாக இரு அறைகளைக் கொண்ட குடிசை. ஈயெறும்பு தானும் நுழையாதவாறு இறுகக்கட்டிய கிடுகுச் செத்தையையே சுவராகக் கொண்ட குடிசையின் கர்ப்பக் கிரகத்தினுள் பக்குவமடைந்த மகள். என்னதான் அவல வாழ்க்கை வாழ்ந்தாலும் பருவ பக்குவமடைந்த குமரைக் கட்டுக் காவலாகத்தனே வைத்திருக்க வேண்டும். மற்றைய அறையில் முன்பக்கம் முழுமையாகவும் மற்றிரு பக்கமும் மேல் அரையளவுக்குள்ள காலதர் வழியே, வெளியே வெண்பஞ்சாகக் துமிக்கும் பனித்திவலைகள் உள் நுழைந்து மயிரக் கால்களைத் துளைப்பதில் நின்றும் பாதுகாப்புப் பெறுவதற்காகச் சாரனெனுங் கருப்பபையுள் சிசுவாக முடங்கிக் கிடந்தனர்.”
  குடிசையின் அமைப்பு பற்றிய விவரணத்திற்குள், பக்குவமைந்த பெண்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டுமென்ற சமூகமனப்பான்மை சாசுவதமாகியுள்ளது. ஏழைகளாக இருந்தாலும், என்னதான் அவல வாழ்வுக்குள் சிக்கித் திணறினாலும், குமர்ப்பெண்களை ‘கட்டுக் காவலாக’ வைக்க வேண்டும் என்ற சமூக பண்பாடு, ஒருவகை எள்ளல் முரணுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.
  சில் என்ற பனிக்குளிர் தாக்காதவாறு தகப்பனும் மகனும் சாரனால் போர்த்திக்கொண்டு சுருண்டுப் படுத்திருந்தனர். இதை கருப்பையுள் சிசுவாக முடங்கிக் கிடந்தனர் என வர்ணிக்கின்றார் கொத்தன். வாழ்க்கை முழுக்க ‘கும்பகர்ணவரம்’ நல்கிவிட்டால் எவ்வளவு சௌகரியப்படும் என்பது போலிருந்தது அவர்களது தோற்றம். தந்தையும் மகனும் ஏழ்மையின் பசியை மறந்து நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதையே கொத்தன் கற்பனை அழகியலுடன் சித்திரித்திருக்கிறார். ‘கும்பகர்ணவரம்’ என்பது கும்பகருணனைப் போல் நீண்ட காலம் தூங்கும் வரம் என்ற பொருளைத் தருகின்றது.
 • “பசியின் அழுங்குப்படியில் வெறிமுற்றிவிட்ட புலியின் நகங்களாக மனதை வராண்டும் அவசரங்களையும் குசேலகாண்டப் பாராயணத்தையும் மறந்த நிம்மதியின் பேராட்சி அவர்களில்” என்னும் வரிகள் மூலம் வாழ்க்கையின் அவலங்களை மறந்த அவர்களின் ஆழ்ந்த நித்திரை காட்டப்பட்டுள்ளது. ‘குசேல காண்டப் பாராயணம்’ என்ற தொடர் வறுமையுற்ற குசேலரைப்போல் அந்த ஏழைகளும் வறுமைத் துயரில் இருப்பதைக் குறிக்கின்றது. ‘இந்து தொன்மவியலில்’ சுதாமா எனப் பெயர் கொண்ட குசேலர் கிருஷ்ணரின் இளமைக் கால நண்பர். உஜ்ஜையினில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இருவரும் குருகுலக் கல்வி பயின்றவர்கள். குசேலர் இன்பங்களில் பற்று அற்றவர். புலனடக்கம் மிகுந்தவர். குருகுலக் கல்வி முடிந்தவுடன் இருவரும் பிரிந்து தத்தமது இருப்பிடங்களுக்கு சென்றனர். வேதியர் குலத்தில் பிறந்த குசேலர் பரம ஏழை. குசேலர், தனது மனைவி மக்களுடன் பல நாட்கள் அன்னமின்றி பட்டினியாக வாழ்க்கை நடத்தினர். வீட்டின் பரிதாபமான நிலையை கணவருக்கு எடுத்துச் சொல்லி, துவாரகை நகரில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்று வேண்டிக் கொண்டாள். பொருட்ச்செல்வத்திற்காக தன் நண்பரான கிருஷ்ணரிடம் செல்ல முடியாது என்று குசேலர் மறுத்து விட்டார். ஆனால் குசேலரின் மனைவியோ, எனக்காக இல்லாவிட்டாலும், பசியால் வாடித் துடிக்கும் நமது குழந்தைகளின் பசிப்பிணியை நீக்குவதற்காகவாவது நீங்கள் அவசியம் கிருஷ்ணரை ஒரு முறையாவது பார்த்து விட்டு வாருங்கள் என்றாள். தயங்கிய குசேலர், இதைக் காரணமாகக் கொண்டு, கிருஷ்ணரின் பெறுதற்கரிய தரிசனம் கிடைக்குமே என்று துவாரகைக்குப் புறப்பட முடிவு செய்தார். வெறுங்கையுடன் எவ்வாறு கிருஷ்ணரை சந்திப்பது என்று கேட்டார் குசேலர். உடனே அவரது மனைவி பக்கத்து வீடுகளில் சென்று நான்கு பிடி அவல் பெற்றுக் கொண்டு வந்து அதை ஒரு கந்தல் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் என்று கூறிக்கொண்டே குசேலரிடம் கொடுத்து அனுப்பினாள். குசேலர் துவாரகை நகருக்கு நடைபயணமாக சென்றார். அங்கு கிருஷ்ணரின் மாளிகையின் வாசலில் வந்து சேர்ந்தார். அரண்மனை வாயிற்காப்பாளர்கள் குசேலர் அரண்மனை வாயிலில் காத்திருக்கும் செய்தியை கிருஷ்ணரிடம் கூறினார்கள். ’குசேலர்’ என்ற பெயரைக் கேட்டவுடன் தம்மை மறந்த நிலையில் கீரிடம், பட்டுப்பீதாம்பரம், காலணிகள் கூட அணிய மறந்து, ஓடோடிச் சென்று குசேலரைக் காண அரண்மனை வாசலுக்கே வந்து குசேலரை வரவேற்று அரண்மனைக்கு உள்ளே அழைத்து சென்றார். சிறப்பான விருந்து அளித்து, தாம்பூலம் வழங்கினார். அப்போது எல்லோருடைய உள்ளங்களில் உள்ள விசயங்களை அறியும் கிருஷ்ணர், குசேலர் தம்மிடம் வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டார். செல்வம் வேண்டி ஒரு நாளும் என்னை வழிபட்டவர் அல்ல. தன்னுடைய மனைவியின் தூண்டுதலின் பேரில் என்னிடம் வந்திருக்கிறார். ஆகவே, இவருக்கு அனைத்து செல்வங்களையும் தருவேன். முக்தியும் அளிப்பேன். தேவர்களுக்கும் கிட்டாத அருள்புரிவேன் என்று எண்ணினார் கிருஷ்ணர். சில நாட்கள் மிகவும் ஆனந்தத்துடன் கிருஷ்ணரின் அரண்மனையில் தங்கிய குசேலர், ஸ்ரீகிருஷ்ணரிடம் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு வெறுங்கையுடன் தன் ஊரை நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணரின் லீலையால் தனது குடிசை வீடு தங்க மாளிகையாக காட்சி அளித்தது. மனைவி மக்கள் நல்லாடைகளுடன், உயர்ந்த நகைகளுடன் காட்சி அளித்தனர். தம் மனைவி மக்கள் உயர்ந்த உணவுகளை உண்டு வாழ்ந்த காட்சியைக் கண்ட சுதாமன் என்ற குசேலர் எல்லாம் கிருஷ்ணரின் செயல் என்று உணர்ந்தார். தனக்கு கிருஷ்ணர் இந்த செல்வங்கள் தராமல் இருந்திருந்தால் நன்மையாக இருந்திருக்கும். செல்வம் ஒரு மனிதனுக்கு கர்வத்தை கொடுத்து வீழ்ச்சி அடையச் செய்யும் என்று உணர்ந்த குசேலர் பற்று அற்ற மனப்பாங்குடன் கிருஷ்ணரை வழிபடுவதிலே தம் காலம் முழுவதும் கழித்தார்.
 • வறுமைக்கு உதாரணமாய் அமைந்த இந்த குசேல தொன்மத்தை, கொத்தன் அவர்கள் ‘குசேல காண்டப் பாராயணம்’ என்ற தொடரின் மூலமாக சொல்லி, ‘ஒளி’ உரைப்படைப்பில் ஏழைகளின் பசியை உயிர்ப்பாக உணர்த்தியுள்ளார்.
  புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’ சிறுகதையில் இப்படி ஒரு காட்சி வருகின்றது: “சமையல் அறை வாசலில் ஒரே புகைமயம். “கமலம்!” என்று கம்மிய குரலில் கூப்பிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, “வீடோ லட்சணமோ! விறகைத்தான் பாத்துப் பாத்து வாங்கிக்கொண்டு வந்தியளே! ஒங்களுக்கிண்ணு தண்ணீரிலே முக்கிக் குடுத்தானா? எரியவே மாட்டுதில்லை?”
  “ஒட்டுத் திண்ணையில் ஈரவிறகுகளோடு நடத்திய மடைப்பள்ளிப்போரை நிறுத்தி விட்டு குப்பி விளக்குடன் நெருங்கி வந்தாள்” என்ற கொத்தனின் வார்த்தைகளைப் படித்தபோது, மேல்காட்டிய புதுமைப்பித்தனின் காட்சியே மனவெளிக்குள் வந்து நின்றது. புதுமைப்பித்தனும் கொத்தனும் ஈரவிறகுகளுடன் ஏழைப்பெண்கள் படுகின்ற அவஸ்தையையே படம் பிடித்துள்ளனர். ‘மடைப்பள்ளிப் போர்’ என்ற தொடர் சமயலறைப் போராட்டம், அதாவது அடுப்பில் ஈரவிறகுகளை எரிக்க முடியாமல் புகையில் திணறித் தவிக்கும் நிலையை விளக்குகின்றது. ‘குப்பி விளக்கு’ ஏழ்மையின் அவல அடையாளச் சின்னம்!
  கரீமின் குடும்பத்தினர் வெறும் ஊறலரிசி சோற்றையும் சூடாக்கிய மட்டிச்சதைப் பழங் கறியையுமே உட்கொள்கின்றனர். இது கதைக்கு களமாகிய இப்பிரதேச மக்கள் உண்ணும் முறையில் காணப்படுகின்ற வறுமை நிலையை வெளிச்சமாக்குகின்றது. கொத்தன் இதனை பின்வருமாறு காட்டுகின்றார்:
  “இலங்கை ஆலைகளின் உலக சாதனையாக ஊசல் மணக்கும் ஊசலரிசிப் பழஞ்சோறும், சூடு காட்டிய மட்டிச்சதைப் பழங்கறியும் நிசிக்குளிரில் கரும்பாக….. கடைந்தெடுத்த அமுதாக…. உணவு முடிந்ததும்”
 • இந்த நெய்தல் நிலத்தினரின் பண்பாட்டு அம்சங்கள் இப்பிரதியில் நிறைந்துள்ளன. குளிர்மையான கடல்பிரதேசமென்பதால் வெந்நீர் பயன்படுத்தி முகம் அலம்பும் பழக்கம் காணப்படுகின்றது. மற்றும் கரித்துணிக்கைகளை அசைபோட்டு பல் துலக்குகின்ற வழக்கத்தினை கொண்டிருந்தனர். மனைவிமார் கணவனுக்குரிய கடைமைகளை அச்சொட்டாக நிறைவேற்று கின்றவர்கள் என்பதை பின்வரும் சொற்கள் நிதர்ஷனமாக்குகின்றன: “மனித இயந்திரத்திற்கு புகைமூலம் சூடு காட்டுவதற்கான றேக்கைக்குத் தேவையான மூலவஸ்துக்களையும் எடுத்துக் கொடுத்தாள். அவளும் பக்தாவின் தேவைகள் அறிந்த பதிவிரதை”. தொழிலுக்கு புறப்படும்போது, மனைவியின் முகம்பார்த்தல் மரபாகும். இது இந்த வரிகளில் தெரிகின்றது: “தொழிலுக்கு வெளிக்கிடும் போதெல்லாம் முதலில் மனைவியை படலைக்கு அனுப்பி ஒழுங்கையில் ஆள்நடமாட்டம் இல்லையென்பதற்கு அறிகுறியாக ‘உங்களைத்தான்’ எனும் சங்கொலி பிறந்ததும் வெண்கலக் குமிழ் போன்ற அவள் வதனத்தில் முளிவிசகளம் பெறும் சம்பிரதாயம்.”
 • 4
  கொத்தன் தான் வாழுகின்ற மண்ணின் மாந்தர்களையே மண்வாசனையுடன் உரைப்படைப்புக்களில் உலவச்செய்திருக்கிறார். கதாபாத்திரங்களின் உணர்வு நிலையை கலைநேர்த்தியுடன் வெளிப்படுத்தியுள்ளார் என்பதற்கு ‘ஒளி’ கதையின் பாத்திரங்கள் (அப்துல் கரீம், ஹமீலா) உதாரணமாகின்றன. ‘ஒளி’ சிறுகதையின் மையப்பாத்திரம் கரீம். இந்த பாத்திரத்தை சுற்றியே கதை சுழல்கின்றது. கரீம் இறைபக்தி கொண்டவன். காரியங்களைத் தொடங்க முன் அவன் இறைவனை நினைப்பதை நியதியாக்கிக்கொண்டவன். கரீம் கடின உழைப்பாளி. சகுனம் பார்த்தல், புகைப்பிடித்தல், சம்பிரதாய பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் இத்தியாதி பண்புகள் அவனிடமிருந்தன. வாலிப காலத்தில் துடுக்குக்காரனாகவும் சண்டியனாகவும் இருந்திருக்கிறான். ‘கரீமின் சீனடியிற் சிக்கிவாதையுற்றோர் அதிகம் பேர். துணிந்து படகில் வந்து தன்னைப் பிடிக்க முயன்ற பரங்கிக்காரனைத் துடுப்பால் அடித்துக் கடலிற் சாய்த்த பரிதாபத்தோடு அந்த வெடி விவகாரத்தைக் கைகழுவி விட்டான்.’ டைனமைட் கொண்டு மீன் பிடிக்கும் நுட்பங்களை துல்லியமாக அறிந்திருந்தான். மகளின் கழுத்தில் தாலியேற்றிச் சுமங்கலியாகப் பார்க்க வேண்டும் என்ற அபிலாசையில், எத்தனையோ பேரிடம் கடன்கேட்டு ஏமாந்த நிலையில் மீண்டும் தவறு என அறிந்துக் கொண்டே டைனமைட் கொண்டு மீன் பிடிக்க முனைகின்றான். கைவிரல்களை இழந்த நிலையிலும் மனஉறுதியுடன் போராடி வெற்றி கொண்ட உழைப்பாளியாக கரீம் பாத்திரத்தை கொத்தன் படைத்திருக்கிறார். கதையின் உச்சம் கடைசிப்பகுதியில் கரீம் பாத்திரத்திற்குள் உணர்வும் உயிர்ப்பும் ததும்ப வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சிதைவின் வருத்தம் கலையாகும் அற்புதத்தினைப்பாருங்கள்:
  “மீன் ஓடுது ஒன்றையும் பாராமத் தோணிய வலி மகன்””
  ‘ஒரு கை போனா மத்தக் கையிருக்கு. அவன் நாடினத்த நம்ம தேடினாத்தான் தாத்தாவின் கழுத்தில் தாலி கட்டிப் பார்க்கலாம்’ ………….. “கரீம்” ரணவதையிலும் இலட்சிய சித்தியின் வேட்கையிலும் உந்தப்பட்டுச் சாம்புகிறான். வள்ளம் மீன் பாட்டத்தை அண்மித்துவிட்டது”.
  ஹமீலா ஒரு இயல்பான பாத்திரம். கரீமின் மனைவியான இவள், கணவனின் மனங்கோணாது நடப்பவள். வறுமையின் அவஸ்தையில் திணறினாலும் அழகியாக இருக்கிறாள். அவள் மெத்தென்ற இளமை நலம் இல்லாவிட்டாலும் மதாளிப்புக் குறையாத கஞ்சமலர். கணவனைத் தொழிலுக்கு அனுப்பும் போதெல்லாம் முழுவிசகளம் பார்த்து “உங்களைத்தான்” எனக்குரல் கொடுக்கின்றவளாகவும் இருக்கின்றாள். “அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்” என்ற நம்பிக்கை ஒளியை பாய்ச்சுகின்ற மனைவியாகவும் செயற்படுகின்றாள். கிராமிய பாரம்பரியத்தின் அச்சொட்டான உருவே ஹமீலா பாத்திரமாகியுள்ளது. வாழ்வின் யதார்த்தமான தளத்தில் அன்பின் நெகிழ்ச்சியை ஊட்டுகின்ற ஊக்கியாக ஹமீலாவை கொத்தன் உருவாக்கியுள்ளார். நிஜ வாழ்வோடு போராடுகின்ற நெய்தல் நிலத்து பாத்திரங்களாகவே கரீமும் ஹமீலாவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
 • mk
 • 5
  சிறுகதை என்பதே உரைநடைக் கவிதைதான். சுண்டக் காய்ச்சி வடித்தெடுத்த வீர்யமிக்க வார்த்தைகளில் வாழ்க்கை சமுத்திரத்தின் தனித்துளிகளை கச்சிதமாகக் காட்சிப்படுத்துவதுதான் சிறுகதை. சிறுகதைக்குரிய இந்த இலக்கணம் கொத்தனின் ‘ஒளி’ உரைப்படைப்புக்கு சாலவும் பொருந்துகின்றது. “கதைகளிலே கவிதையின் உருக்கத்தை பெய்விக்கவும் வித்தியாசமான முறையில் கதை சொல்லவும் விழைந்தான்” (1985) என்ற கொத்தனின் கருத்து அவதானத்திற்குரியது. கொத்தன் கவிதைக்குரிய உணர்வுமொழியை சிறுகதைகளில் நுண்மையாகவும் நுண்ணயத்தோடும் கையாள்வதில் வல்லவர் என்பதற்கு இக்கதை உரத்த உதாரணம். பின்வரும் வரிகளில் உரைநடை கவிதையான அதிசயத்தைப் பாருங்கள்:
  “சிறகாம் கைகளால் வயிலைக்கும் கடைச்சாமச் சேவல்களின் ஓங்கார நாதத்திற்கூட அதே வாக்கியத் தொடர் இழைந்தொலிப்பதான எண்ணம் அவனுக்கு. பட்சிசாரங்கள் சேவலின்தானைத் தலைமையேற்று இருளடிமைத் தளை அறுக்கும் சமரிற் குதித்து விட்டன.”
  இவ்வரிகளில் கொத்தன் “நளவெண்பா”வின் 293ஆம் வெண்பாவை பயன்படுத்தியிருக்கிறார். இதுதான் அந்த வெண்பா,
  “தையல் துயர்க்கு தரியாது தம் சிறகாம்
  கையால் வயிறு அலைத்து கார் இருள்-வாய் வெய்யோனை
  வாவு பரி தேர் ஏறி வா என்று அழைப்பன போல்
  கூவினவே கோழி குலம்”
  ‘ஒளி’ சிறுகதையில் பழந்தமிழ் பாடலின் பொருளை (நளவெண்பா) பயன்படுத்தியிருப்பது போல, கொத்தன் தொன்மங்களை குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார். குசேலகாண்டப் பாராயணம், கும்பகர்ண வரம், மார்க்கண்டேய வரம் போன்ற சொற்றொடர்கள் கதையின் அர்த்தளத்தை விரியச் செய்யும் குறியீடுகளாகும். இந்தக் குறியீடுகள் தொன்மப்பொருளை உணர்த்தி கதைப்பொருளை விசாலமடையச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘மார்க்கண்டேய வரம்’ என்ற குறியீட்டுச் சொல் உணர்த்துகின்ற தொன்மக்கதை பின்வருமாறு அமைந்துள்ளது.
  “மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர். மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்த்தபோது, மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான், பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான்.
  பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்த்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்.”
  ‘ஒளி’ கதையின் மூலப்பாத்திரமான கரீம் ‘சிரஞ்சீத்துவ வரம்’ பெற்றவன் என்பதை உயிர்ப்பித்துக் காட்டவே கொத்தன் ‘மார்க்கண்டேய வரம்’ என்ற சொற்றொடரை பயன்படுத்தி யிருக்கிறார். இந்த குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ள கதைப்பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது:
  “தந்தையையும் தனயனையும் இரு அந்தங்களிற் சுமந்து கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளை அனாயாசமாக உதறித் தள்ளிவிட்ட முதுமை இலட்சினைகள் கரீமின் சிட்டை யில் மறைவுண்டிருக்கும் பெருமிதத்தில் மார்க்கண்டேய வரம் பெற்ற மங்கையின் தருக்குடன் தோணி வழுக்கிச் செல்கிறது.”
  அழகும் அர்த்தமும் ஒளிரும் இந்த வரிகளை பிழையான நடைக்கு அல்லது செயற்கையான நடைக்கு உதாரணமாக காட்டியிருக்கிறார் மு. தளையசிங்கம். மு. தளையசிங்கம் தன்னுடைய ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ என்ற நூலில், “நற்போக்கும் முற்போக்கும்” என்ற மகுடத்தில் எஸ்.பொன்னுத்துரையை கடுமையாக விமர்சித்திருக்கிறார். மு.த.வின் விமர்சனத்தின் ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
  “பொன்னுத்துரையின் பிழையான நடையை இந்தளவுக்கு ஆராய்ந்ததற்கு இங்கு காரணம் இருக்கிறது. பொன்னுத்துரையின் இதே பிழையான எழுத்து நடையேதான் இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் பொதுவான நடையாக மாறிவிட்டிருக்கிறது என்பதுதான் அது. முக்கியமாக ‘முற்போக்கு’ இளம் எழுத்தாளர்கள் அத்தனை வேரும் அபிநயிக்கும் நடை இந்த நடையேதான். எனவே, திசை காட்டும் முகமாக, மாதிரிக்காகச் சில உதாரணங்களை இங்கு தர விரும்புகிறேன். ஆனால் இங்கு இவ்வளவு போதும். இவையெல்லாம் ஒரே மாதிரியாக இருப்பினும் இவற்றை எழுதியவர்கள் பலர். வேண்டுமென்றே பந்திகளோடு சேர்த்து அவற்றை எழுதியவர்களின் பெயர்களைப் போடாமல் விட்டுவிடுகிறேன். அவற்றுக்குரிய ஒற்றுமையை அப்படிக் காட்டலாம் என்பது என் எண்ணம். இவற்றை எழுதியவர்கள் பொன்னுத்துரை (‘தீ,’ மரபுபற்றிய ஒரு நோக்கு’), நீர்வைப் பொன்னையன் (‘நிறைவு’), யோ.பெனடிக்ற் பாலன் (‘குட்டி’) மருதூர் கொத்தன் (‘ஒளி’)…..”
 • எஸ்.பொ.வின் பிழையான எழுத்து நடையையே கொத்தனும் பின்பற்றுகின்றார் என்பது மு.த.வின் பிழையான கணிப்பாகும். கொத்தனின் நடை ‘நபிநயிக்கும் நடை’ அல்ல; அதிசயிக்கும் அழகு நடை. இதனை அ.யேசுராசாவின் பின்வரும் வார்த்தைகள் நிரூபிக்கின்றன:
  “வியக்கத்தக்க மொழி ஆளுகையை மருதூர்க் கொத்தன் கொண்டுள்ளார்” (1985: 839).
  “ஊசிமல்லிகைப் பூவின் வாசியில் நெருப்புக்குச்சியின் நுனியில் தீயின் நாக்கு பரதம் பயில்கிறது. ஆடல் அணங்கை ஆலிங்கனிக்கத் துடிக்கும் காதல்நாயகனே போல வெடியின் முகையிற் திரி…..” என்ற வரிகளையும் வெறும் அபிநயக்கும் நடை என்கிறார் மு.த. கவித்துவம் நிரம்பப்பெற்ற இந்தப்பகுதி ‘உணர்வுப்பூர்வமாய்’ அமைந்துள்ளது. இப்பகுதியைத் தொடர்ந்து வரும் வரிகளை படிக்கின்றபோது இது பிரக்ஞைப்பூர்வமாய் தெரிகிறது. இதுதான் அந்த வரிகள்: “… மகளின் சங்கு கழுத்தில் அவளின் மனங்கவர்ந்த ஆணழகன் தாலி கட்டுவதான வதுவைக்காட்சி கரீமின் மனத்திரையில் நிழலாடுகின்றது.”
  “அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்’” என்ற தொடர் ஒரு சினிமாவின் பல்லவி போல கதைமுழுவதும் திரும்பத் திரும்ப எதிரொலித்து, கதைக்கு உயிரூட்டுகின்றது. இன்பம், துன்பம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு முதலான எல்லாநிலைகளிலும், அந்தத் தொடர் கரீம் , ஹமீலா ஆகியவர்களின் ‘நெஞ்சமெலாம் நிறைந்து வழிந்து உடலின் அணுவறை தோறும் நிரவிவிட்டிருக்கிறது’.
  கொத்தனின் கற்பனைத்திறன் மொழியழகாகி ‘ஒளி’ கதையில் ஒளிர்கின்றது. “உவர்களப்பின் மேற்பரப்பில் தவம் ஈரப்பதனின் பளுவால் மெல்லென நீந்தும் சீதளக்காற்றுக்குக் கஞ்சற்சாரனால் வேலிகட்டும் எண்ணத்தில்…” என்றும், “கார் நீலக் கம்பளத்தில் முத்துப் பரல்கள் உருளுவது போல கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு நீர்ச்சுழிப் புப் பரவை நுங்கு நுரைக்கொந்தளிப்புடன் எழிற் தோற்றங்காட்டுகின்றது. பிரிந்த தாயின் வரவை தொலைவிலே கண்ட தலையாக ஆற்றலை ஒரு வழிப்படுத்த அந்தச் சுழிப்புப் படலத்தினூடே கட்புலனை நிலையோட விடுகிறான்” என்றும் எழுதுகையில் கொத்தனின் மொழி, கற்பனை வானத்தில் லாவகத்துடன் பறக்கும் நேர்த்தி நுண்மையானது.
 • மொழிநடையை அழகுபடுத்துகின்ற, அர்த்தப்படுத்துகின்ற அணிகளை (உவமைகள், உருவகங்கள் முதலியன) கொத்தன் ‘ஒளி’ கதையில் நுண்ணுர்வுடன் கையாண்டுள்ளார். உதாரணங்களை அவதானிப்போம்.
  (உ) உவமைகள்:
  க். வெண்கலக் குமிழ்போன்ற அவள் வதனத்தில்
  ச். முண்டக மொக்காக முருகு தள்ளும் மடந்தையின் நெஞ்சத்து நுங்கின்
  ட். வெண்பஞ்சாகத் துமிக்கும் பனித்திவலைகள்
  த். ஆடல் அணங்கை ஆலிங்கணிக்கத்துடிக்கும் காதல் நாயகன் போல
  ப். கொல்லன் பட்டரைப் பிடிச்சிராவியாக
  ற். நீலப்பாலில் மாணிக்க இழைகளை மறுத்துச் செய்த கம்பளத்தின்
  சுருக்கங்கள் போல
  (ஊ) உருவகங்கள்:
  ங். கடற்குமாரி
  ஞ். வறுமைத்தீ
  ண். எலிவலைகளாக இரு அறைகளைக் கொண்ட குடிசை
  ந். இல்லறச்சோலை
  ம். கலியாணச்சந்தை
  ன். நீர்த்தடாகத்தில் ஆடிக்காடையிற் சேறு கண்டுவிட்ட குட்டையை
  விரையும் கரடியை
  “அழுங்குப்பிடி” என்பது மரபுத்தொடராகும். கொத்தனின் கட்டிருக்கமான சொல் லாட்சி கதையை மெருகூட்டுகின்றது. பின்வரும் பகுதியை இதற்கு உதாரணமாக காட்டலாம்.
  “ஊதற்காற்றின் உந்துகை தங்களுக்காய்ப் பிறப்பிக்கப்படும் ஆக்ஞையேனும் மருட்சியிற்தனையுண்டு, வேலித்தலைகளும் தென்னங்கீற்றுகளும் பாழ்வளவுகளில் மண்டிக்கிடக்கும் செடிகளும் அசைந்தரற்றும் மெல்லோசையைச் சுருதியாகக் கொண்டு வெண்கருமக் குறுமணலில் மூழ்கி மீண்டும் ‘சரக்’ ‘சரக்’ இசைபாடும் அவர்கள் பாதங்களுக்குக் கூட அந்த நம்பிக்கை”.
  கொத்தனின் மொழி நடப்பியல் சார்ந்த புறஉலகை படமாக்குகின்றது என்பதற்கு ‘ஒளி’ சிறுகதை எடுத்துக்காட்டாகின்றது. தூய தமிழ்ச் சொற்கள், பேச்சு மொழி, வடமொழிச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் என மொழிவழக்கு விரிந்து சென்றாலும், ஆய்வு செய்யப்படவேண்டிய எழுத்துவகைமையை சார்ந்தது அவரது மொழி. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மொழி அடையாளங்களே இப்பிரதியில் பிரகாசம் கொண்டுள்ளன. ‘ஒளி’ கதையை நுண்ணாய்வு செய்யும் உணர்வுடன் படிக்கையில், கொத்தன் தமிழில் ‘ஒருவகைமாதிரியான’ மொழியை கையாண்டுள்ளாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
 • உரைப்படைப்பின் செய்நேர்த்தி, உணர்வும் உணர்ச்சியும் மிக்க பாத்திரங்கள், பொதுச்சராசரி எழுத்துமுறையல்லாத வேறுவகைமாதிரியான உரைமொழி, மண்வாசனை, கதைக்கூறும் பாங்கு, கதைப்பொருள், வியப்புறு முடிவு முதலியன ‘ஒளி’ படைப்பை கலைத்துவமும் பொருண்மையும் மிகுந்த கதையாகப் பரிமளிக்கச் செய்துள்ளன. நுட்பமாகவும், கூராகவும், மிகைப்படுத்தாமலும் நெய்தல் நிலத்தின் (கிண்ணியா கடற்கரைப் பிரதேசம்) அவலத்தை வெகுநன்றாக கொத்தன் கூறியுள்ளார். யதார்த்தத்தின் மீது அவர் கொண்டிருந்த வலுவான பிடிப்பு இக்கதையில் வெளிச்சமாகியுள்ளது. கொத்தனின் ‘வெட்டு முகம்’, ‘அழகிய இதயங்கள்’ போன்ற கதைகளின் பிரச்சாரத்தனம், கலையாக்க போதாமை, சிறுகதைக்குரிய பிரக்ஞை சிதைந்திருத்தல் ஆகிய குறைபாடுகள் ‘ஒளி’ கதையில் இல்லை என்பது இச்சிறுகதையின் கனதியை கூட்டிக் காட்டுகின்றது. “முண்டக மொக்காக முருகுதள்ளும் மடந்தையின் நெஞ்சத்து நுங்கின் பூரிப்புடன்” இக்கதை மனசுக்குள் நிறைந்து நிற்கின்றது.

000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment