Home » இதழ் 19 » *பூலோகம் திரைப்படமும் அது சொல்லும் சேதிகளும் – எஸ்.கிருஸ்ணமூர்த்தி

 

*பூலோகம் திரைப்படமும் அது சொல்லும் சேதிகளும் – எஸ்.கிருஸ்ணமூர்த்தி

 

puulokam

ராஜா, ராணி, வின்சர், லிடோ, வெலிங்டன், ஸ்ரீதர், மனோகரா, சாந்தி, ஹரன், றீகல், றியோ (றியோ தற்காலிகக் கொட்டகை) இப்படிப் பதினொரு சினிமாக் கொட்டகைகள் ஒரு காலத்தில் யாழ் நகரில் மாத்திரம் இருந்தன. கோயில் திருவிழாக்கள், கிராமத்து மேடைகளில் நடத்தப்படும் அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி போன்ற கூத்துகள், கண்ணன் கோஷ்டி, ரங்கன் கோஷ்டி, அருணா கோஷ்டி ஆகியவற்றின் இசைக்கச்சேரிகள், தட்சணாமூர்த்தி, சின்னராசா, பஞ்சாபிகேசன், பழனி போன்ற புகழ் பூத்தவர்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரிகள் போன்றவை யாழ்ப்பாண மக்களின் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சங்களாக அப்போது இருந்தன. இவற்றுடன் தமிழ்த்திரைப்படங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்த்திரைப்படங்களைத் தவிர, ஏனையவை கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமற் போய்விட்டன.

 

பதினொரு சினிமாக் கொட்கைகளில் மூன்று நான்கு கொட்டகைகள் மாத்திரம் இப்போது எஞ்சியுள்ளன. ஆனால் காற்றிலே செய்யும் வியாபாரங்கள்தான் அதிகரித்துள்ளது. ஆம், தொலைக்காட்சிகள், வானொலிகள் எத்தனை உள்ளது என்ற கணக்கு எனக்குத் தெரியாவிடினும் சூழல் மாசடைவதுபோல காற்றையும் இவை ஆக்கிரமித்துள்ளன. இப்படியாக காற்றிலே செய்யும் வியாபாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் பூலோகம்.

 

இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரின் பொழுது போக்கிற்காக மேற்கு நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது குத்துச்சண்டை. இதில் இரும்பு மனிதர் பரம்பரை, நாட்டு வைத்தியர் பரம்பரை என இரு குத்துச்சண்டை பரம்பரை உருவாகிறது. குத்துச் சண்டைப்போட்டியால் இரண்டு குத்துச் சண்டைப்பரம்பரைகளுக்கும் இடையில் பெரும்பகை உருவாகிறது. இதில் இரும்பு மனிதர் பரம்பரையே குத்துச்சண்டைகளில் தொடர்ந்து வெற்றிபெறுகிறது. இதை எதிர்கொள்ள நாட்டு வைத்தியர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் (ஜெயம் ரவியின் அப்பா) கடும் பயிற்சியும் நல்ல உணவும் கொடுத்து வளர்க்கப்படுகிறார். “இந்தமுறை நாட்டு வைத்தியர் பரம்பரைதான் குத்துச் சண்டையில் வெல்லும்“ என்ற நம்பிக்கையை ஏற்படுகிறது. ஆனால், இந்தமுறையும் அவர்களால் எதிர்பார்த்தபடி வெல்ல முடியவில்லை. இந்த அவமானத்தைத் தாங்கமுடியாத அந்தக் குத்துச் சண்டை வீரர் தற்கொலை செய்கிறார். இதனால், இரு பரம்பரைகளுக்குமிடையில் பெரும் சண்டை மூள்கிறது. தொடர்ந்து குத்துச்சண்டைகளால் வெட்டுக்குத்துக்களும் அடிதடிகளும் இடம்பெறுகின்றன. இதனால் நீதிமன்றம் இதில் தலையிட்டு தமிழ்நாட்டில் குத்துச் சண்டையைத் தடைசெய்கிறது. என்றாலும் இரண்டு பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்குமிடையில் பகை நீறுபுத்த நெருப்பாக இருந்துகொண்டேயிருக்கிறது.

 

இந்த நிலையில் தொழிலபதிரான பிரகாஷ்ராஜ் ஒரு தொலைக்காட்சிச் சனலை வைத்திருக்கிறார். அந்தச் சனல் நம்பர் 01 ஆக வரவேண்டும் என்று துடிக்கிறார். தன்னுடைய ஆலோசகர்களை அழைத்து இதைப்பற்றி விவாதிக்கிறார். அதில் பிரகாஷ்ராஜ் சொன்ன ஆலோசனைதான் குத்துச்சண்டையை பிரபலமாக்கி, அதைப்பெரும்போட்டியாக்கி, அதன்மூலம் தனது தொலைக்காட்சிச் சனலைப் பிரபலப்படுத்திப் பணம் சம்பாதிக்கலாம் என்பது. இதை அவருடைய ஆலோசகர்கள் எதிர்க்கிறார்கள். “சினிமா, கிரிக்கெற் போன்று குத்துச்சண்டை இங்கே மக்களைக் கவரவில்லை“ என விவாதிக்கிறார்கள். ஆனால் பிரகாஷ்ராஜோ, “நான் காற்றிலே வியாபாரம் செய்கிறவன். எனக்கு எப்பிடி இந்த விளையாட்டை வைத்துப் பணம் சம்பாதிக்க முடியும் என்று தெரியும்“ எனச் சொல்கிறார்.

“ஒரு வருடத்தில் நூறு கார்கள் விற்பதை விட ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் கீரை விற்று அதிமாகச் சம்பாதிக்கலாம். அதனால்தான் காப்பிரேட் நிறுவனங்கள் எல்லாம் கிழவிகளின் கைகளில் இருந்த கீரை வியாபாரத்தைப் பிடுங்கித் தாம் நடத்துகின்றன“ என்ற விளக்கத்தின் மூலம் பல்தேசியக் கொம்பனிகளையும் அவற்றின் தந்திரங்களையும் மிக எளிதாக விளக்குகிறார் பிரகாஷ்ராஜ்.

இதன் விளைவாக எங்கேயோ ஒரு மூலையில் இரும்பு மனிதர் பரபம்பரை வாரிசையும் நாட்டு மருந்து பரம்பரையினரையும் தூசுதட்டி அவர்களை வெளியே கொண்டு வருகிறார்கள். அத்துடன் பழைய பகையை எண்ணெய் விட்டுப்பெரு நெருப்பாக மாற்றுகிறார் பிரகாஷ்ராஜ். இரண்டு பரம்பரையையும் மோதவைத்து, அதனைப் படம்பிடித்துத் தொலைக்காட்சியில் போட்டு பிரபலப்படுத்தி அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்.புற்றீசல்கள் போல அதிகரிக்கும் இப்போதைய தொலைக்காட்சி ஊடங்கள் மீது இத்திரைப்படம் சரியான, மிகக் கடுமையான விமர்சனத்தை வைக்கிறது.

boologam-tamil-movie-free-download

புதிய இயக்குநர் கல்யாணகிருஷ்ணாவின் துணிச்சல் பிரமிக்க வைக்கிறது. படத்திற்குரிய வசனத்தை தனது மாணவனுக்காக இயக்குநரான எஸ்.பி.ஜெனநாதன் எழுதியிருக்கிறார். அவரின் வசனங்கள் விரிந்த பார்வையுடையதாக இருக்கின்றன. உதாரணத்திற்கு “உங்கள் தெருக்களில் நடக்கும் சண்டைகள் தொடக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் யுத்தம் வரை வெளிநாட்டுச் சக்திகளின் மறைமுகக் கரங்கள் உள்ளது“ போன்ற கருத்துகள் அடங்கிய வசனங்களின் மூலம் உலகமயமாக்கலின் பாதிப்புகள் உங்கள் வாசல்வரை வந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இதிலுள்ள முரண்நகை என்னவெனில் இப்படியான உலகமயமாதலில் பிறந்த காப்பிரேட் நிறுவனமாகிய கார்க்கில் யாழ்ப்பாணத்தில் கால் பதித்துள்ளது. அதை விமர்சிக்கும் திரைப்படமும் அதே வளாகத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்தை விமர்சிக்கும் நானும் அதே சங்கிலி அமைப்பான திரையரங்கில்தான் பார்க்க வேண்டியுள்ளது.நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்த உலகமயமாதலில் நாங்களும் உள்வாங்கப்படுகிறோம்.

இந்தத் திரைப்படம் வர்த்த ரீதியில் வெற்றிபெறக்கூடிய எல்லாவகையான பொழுது போக்கு அம்சங்களையும் கொண்டிருக்கிறது. அதேவேளையில், இதில் சில முற்போக்கான – யதார்த்தமான கருத்துகளும் உண்டு. ஆனால், இதன் முடிவோ வழமையான சராசரி தமிழ்ச் சினிமாக்களின் முடிவுகளைப்போல, இறுதியில் கதாநாயகனின் வெற்றியில் நிறைவுறுகிறது. குத்துச் சண்டை என்ற காண்பியத்தின் மீது பிரமாண்டமாகக் கட்டியெழுப்பப்பட்ட தொலைக்காட்சிச் சனல், அதன் வியாபாரத்தந்திரங்களால் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க, நீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்டு, மூடப்படுகிறது. அதன் உரிமையாளரும் தண்டிக்கப்படுகிறார். ஆனால், இவையெல்லாம் எந்த அளவுக்கு யதார்த்தமானவை? இந்த முடிவே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

00

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment