Home » இதழ் 19 » * பயணம் -சந்துஷ்

 

* பயணம் -சந்துஷ்

 

payanam

 

ஆயிரமாயிரம் யுகங்களின்
நினைவால் உருவான நீ
பதினேழு வசந்தங்களை எனக்கு வரமீந்து
முப்பது இலையுதிர் காலங்களில் அதை நான்
தொலைத்த கதை
யாருக்குமினி உதவாது …

 

போன இலைகள் மீண்டும் வருமெனப்
பனிப்புகாரில் காத்திருக்கும் முதிய மரங்களின்
நம்பிக்கையைக் குலைக்காது விலகிப் போகிறேன் …

 

தேவதைகளை முறைத்துப் பார்க்கும் ஒருத்தியின்
பார்வையின் நிழல் தேடி
நெடுந்தூரம் அலைகிறதென் பயணம்…

 

ஒரு பூ திறந்து மூடுவதற்குள் ,
ஒரு வெடிச் சத்ததிற்கும் இன்னொரு வெடிச் சத்ததிற்கும் இடையில்,
ஒரு இருட்டினிலிருந்து இன்னுமொரு இருட்டுக்குக்
குழந்தைகள் பயணிக்கின்றனர் …

 

கருப்பையில் இருந்தபடியே பயணிக்கும்
குழந்தைகளின் கனவில்
சூரியனும் சந்திரனும்
வாளேந்தி நிற்கின்றனர் …

 

வேட்டுக்கள் கேட்கும் நிலங்களில் payanam
உதடுகள் குவித்தபடி பிறக்கும்
குழந்தைகளிற்கான முத்தங்களை
குளிர் கண்டத்தின் கடற்கரை மணலில்
மரண தேவதை ஒளித்து வைக்கிறாள் …

 

நான் கடந்த கரைகளை
நான் கடந்த ஆறுகளை
நான் கடந்த கடல்களை
கடக்கு முன்பே
குழந்தைகள் இறந்து விடும் போது
முடிந்ததென்றிருந்த என் பயணம்
மீண்டும் தொடர்கிறது
மரணத்திலிருந்து கனவுகளை நோக்கி …

 

இனி நீளும் இரவுகளில்
தொலைதூர நட்சத்திரங்களும்
உன்மீது வீசுவது ஒளியை அல்ல
தூரங்களை என்று
ஒரு அகதிக் குழந்தைக்குச் சொல்ல
என் பயண இடை வழியில்
இருளில் நான் காத்திருக்கிறேன் …

 

000

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment